சூரியாள்

Saturday, April 28, 2012
காரைக்கால் அம்மையார்களும் கல்பனா சாவ்லாக்களும்-6

யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. எந்த அடையாளம்  பெண்ணை ஆணுக்கானவளாக  அடையாளப் படுத்தியதோ அதே அடையாளத்தை ஒரு எதிர்ப்பு சக்தியாக பயன்படுத்தியிருக்கின்றது ஒரு சுயமரியாதை சக்தி என்பதை நினைக்கும் போது வியப்பாகவே இருக்கின்றது. ஆரம்பத்தில் தாலி பற்றிய பெரிய சிந்தனைகள் அற்றவளாகவே இருந்தேன். எனது முதல் கவிதை தொகுப்பு வெளி வந்த போது பொன்னீலன்  தாலி குறித்து இப்படி எழுதிச் செல்வார் தனது முன்னுரையில்.
“தாலிக்கு பஞ்சாபியில்  பொருள் சிறிய பூட்டு, இன்னும் சில வட இந்திய மொழிகளிலுமே அது பூட்டு எனும் பொருளிலேயே பயன்படுத்தப் படுகின்றது. ஒரு பெண்ணை ஆணுடன் பூட்டி விடும் அடையாளம் என்பதால் தாலி என்று பெயர் பெற்றது திலகபாமாவின் கவிதை உலகிலும் தாலி பெண்ணுக்கிடும் பூட்டாகவே உருக் கொண்டிருக்கின்றது” என்றார்.
 அவரின் இந்த விளக்கங்கள் என்னுள்    கேள்விகளை எழுப்பிய போது தான் காலம் தோறும் நான் எனது தாயாரின் அல்லது பட்டி வீரன் பட்டி உறவினர்களின் பெண்களின் கழுத்தில் இருந்திருந்த தாலி பற்றிய சிந்தனை ஈர்க்கின்றது. வெறுமனே கணவன் மனைவி இருவரது பெயரும் எழுதப் பட்டு  திருமண நாள் என தேதி குறிப்பிடப் பட்டிருந்த தாலிகளின் அடிப்படை குறித்த கேள்வி எழும்பியது. திருமண அடையாளமே  பிராமண அடையாளங்களையும் சமய அடையாளங்களையும் கைக்கொண்டிருந்த போது  அதிலிருந்து மீள்கின்ற ஒன்றாக மத அடையாளங்களை நிராகரிக்கின்ற  ஆணும் பெண்ணுக்குமான உறவின் பாலமாக அந்த தாலி அடையாளம் மாறியிருந்தது கூட ஒரு எதிர்ப்புணர்வுதான் என எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் இன்று பட்டி வீரன் பட்டியில் பல பெண்களின் தாலிகள் ஏதோ மெடல் போல இருப்பதின் காரணம் எதுவும் அறியாமல்  புது பாஷனுக்கு மாறுவதைப் போல  வேறு வடிவ அல்லது மீண்டும்  சமய அடையாளங்களை சுமந்தபடியும்  அய்யரை வைத்து திருமணம் செய்வித்தல் எனவும் மாறிக் கொண்டிருக்கின்றது. ஒரு சுயமரியாதை இயக்கத்தின் அழுத்தமான செயலூக்கங்கள் வெறும் சடங்காகி காலாவதியானதின் வெளிப்பாடு  எனது தாயரின் தாலி போல பெயர்கள் தாங்கி இல்லாது என் தாலி சிவலிங்க வடிவிலும் எனது தம்பி மனைவியின் தாலி  பெயர்கள் தாங்கியபடியும் ஒரு குடும்ப தாலி என்ற வகையில் மட்டும்  இருப்பது
வெறும் உணர்வுகளற்ற அடையாளமாக தாலி மாறிவிட்டது குறித்து எண்ணம் வந்தபோது  எனது தாலியை கழற்றி விட்டு உறவுக்கான உணர்வுகளை மட்டும் பத்திரப் படுத்திக் கொண்டேன்.சிலேட்டில் நேர் கோடு போட்டு எழுதச் சொல்லித் தருவது நேர் வரிசையில் எழுதப் பழகத்தான். பழகிய பின் கோடுகள் அநாவசியமாகின்றன. அடையாளங்கள் அநாவசியமானபின் தாலி தொலைதல் அதிர்வாக இருக்கவில்லை.ஆனால் இது  புரியாது எனச் சுற்றி இருந்த சமூகம்  கேள்வி கேட்டது.
 கட்டிட வேலைக்காக அடமானம் வைச்சிட்டியா எனும் கேள்வி தொடங்கி ”என்ன புரட்சியா?” எனும் நக்கல் வரைக்கும், எவனாவது நாளைக்கு உன்னைப் பார்த்து சின்னப் பொண்ணுன்னு நினைச்சு கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டா என்ன செய்வே?”  எனும் கேள்விகளும் சுழன்று வந்தது.
இவ்வளவு கேள்வி கேட்கின்ற இச்சமூகம்  அந்த அடையாளத்திற்கான புனிதத்தை உணர்வை சரியாக வைத்திருக்கின்றதா? எனும் கேள்வியை நான் கேட்டு விட்டால்  எனைக் கொத்தி தின்று விடக் கூடும்
மார்ச் 15 முதல் 22ம் தேதி வரை முக்தி நாத் செல்லும் ஒரு குழுவோடு பயணம் சென்றிருந்தேன். ஏறக்குறைய 47 பேரில் பெரும்பான்மை 50 வயது கடந்த பெண்கள் நானும் இன்னுமொரு பெண்ணும் மட்டுமே அங்கிருந்தவர்களில் இளையவர்கள். வந்திருந்த எல்லா பெண்களுமே  நான் கழுத்து நிறைய போட்டுட்டு முன்னாடி நடந்தா தான் என் கணவரோட மதிப்பு கூடும் என்றும் என்னுடன் வாக்குவாதம் செய்பவர்கள். 10 சவரனுக்கு குறையாது எப்பவும் தங்கத் தாலி அணிந்திருப்பவர்கள் சிவகாசியோடு இருந்தவரைக்கும் தாலியை எக்காரணம் கொண்டும் கழற்றியறியாத அவர்கள் இந்த பயணத்தில் வெறும் பாசிமணிகளோடு பயணமாயினர் . போகின்ற நேபாள நாடு வறுமை மிகுந்த நாடு அந்த நாட்டிற்கு   அதிக நகையோடு போவது ஆபத்து எனச் சொன்ன வழிகாட்டியின் பயமுறுத்தலுக்கு பயந்து ஒட்டுமொத்தமாக அனைவரும்  தாலியை கழட்டி வைத்து விட்டு வந்திருந்தனர். முன்பெல்லாம் அப்படி கழற்றி வைத்து விட்டு போகும் போதும் மஞ்சக் கயிற்றை அவசியமாக கட்டிக் கொண்டு செல்வார்கள்.  அதுவும் அவசியமற்றுத் தான் இந்த பயணம் அமைந்திருந்தது
இதைப் பார்த்த போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது எனக்கு தெரிந்த  ஒரு அம்மா வயது 55 இருக்கும்  திடீரென ஒரு நாள் தனது நீள முடியை காதுவரை குட்டையாக்கி வெட்டி வந்திருந்தார்கள். எப்படி என்னாயிற்று அழகாயிருக்கே உங்களுக்கு என்றேன்
 ஒரு சின்ன வெட்கமுடன் அழகுக்காக இல்லை. கோவிலுக்கு நேர்ந்து கிட்டு பூ முடி குடுத்தேன் என்றார். பூமுடி என்றால் கொஞ்சூண்டு முடி வெட்டியதோடு நிறுத்தியிறுக்கலாம். ஆனால் அவருக்கு தன் முடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை தனது ஆசையாக வெளிப்படுத்த இருந்த தயக்கம் கடவுள் பேரில் நிகழ்ந்திருக்கின்றது எனபது  தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இவ்வளவு காலம் பிள்ளைகளுக்காக வாழ்ந்து விட்ட வாழ்வை தனக்காக வாழ்ந்து விட நினைக்கும் போதும் அதை ஒளித்துக் கொள்ள வேண்டி வருகின்றதே  என்று நினைக்கும் போது இதழ்களில் சிரிப்பும் உள்ளுக்குள் வலியும் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
ஒட்டு மொத்தமாக இந்த பயணத்தில்  வந்திருந்த அனைத்து பெண்களுக்கும் கழுத்தில் விதவிதமாக  தொலைக்காட்சியில் வர்ணனையாளர்கள் போட்டு வருவது போல் பெரிசு பெரிசாக கடைகளில் வாங்கினார்கள் உடனே உடனே போட்டும் கொண்டார்கள். இதெல்லாம் ஊரிலெல்லாம் போய் போட முடியாதுன்னு  சொல்லிட வேறு செய்தார்கள்.கழட்டி வைக்க முடியாத தாலி என்பதிலிருந்து விட்டு விடுதலையாகி நிற்கின்ற ஆர்வம்  களவு போய் விடும் எனும் காரணத்திற்காகக் காத்திருந்திருக்கின்றது
ஊர் வந்து சேர்ந்தது அடுத்த சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் சிலர் மீண்டும் எழுப்பக் கூடும்  என்னிடம் தாலி எங்கே எனும் கேள்விதனை
இன்னும் இதுபோல எத்தனை உணர்வுதனை பத்திரப்படுத்திக் கொன்டே இருக்கின்றது இப்பெண்கள் உலகம்
இந்த பயணத்தில் எங்களோடு பயணித்திருந்த  பெண்களில் ஒருவர்  தனியாக வந்திருந்தார்.  உற்சாகமாக இளமை மனோபாவமோடு எல்லா இடமும் பயணம் செய்தார் முக்திநாத் கோவிலுக்கு மலை அடியிலிருந்து ஒரு 100 மீட்டர் நடந்து போகவேண்டும் அல்லது நடக்கத் தயங்குபவர்கள் அங்கே பைக் ஓட்டிச் செல்லும் ஆட்களோடு மேலே போய் வரலாம். உண்மையில் தூரம் சிறிதே என்றாலும் கடல்மட்டத்திலிருந்து 12000 அடிஉயரத்திலிருந்த இடத்தின் குளிரும்  ஆக்சிஜன் குறைவால் வருகின்ற மூச்சு வாங்குதலும் நடப்பதற்கு பெருந் தடையாக இருந்தன.
பைக்கில் ஏறி அமர்ந்து உற்சாகமாக அந்த ஓட்டுபவரை கட்டிப் பிடித்துக் கொண்டார்.  கரடு முரடான மலை ஏற்றத்தில் அப்படி போவது தேவையாக இருந்தது. பயண ஏழு நாளும் முடிந்த பிறகு தற்செயலாக தனிமையில் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது அவர் பைக்கில் போனதை நான் படம் பிடித்திருந்ததை எடுத்துக் காண்பித்தேன்.
ஒரு நிமிடம் சலனமற்று அமர்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் துளிர்ப்பதை மெல்ல துடைத்து திலகபாமா என்னுடைய நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறி இருந்திருக்கின்றது என்பதை இந்த படம்தான் உணர்த்துகின்றது அன்று கூட அந்த நிமிடத்தை கடந்து விட வேண்டும் என்பது தான் முந்தி இருந்தது . எத்தனையோ சின்னப் பொண்ணுங்க ஜீன்ஸ் போட்டுக்கிட்டு பைக்கில கட்டிப் பிடிச்சுக்கிட்டு போகும் போது ஆசையா இருக்கும். உனக்குத் தெரியாது என் கணவன் எனது 36 வது வயதில் இறந்து போனார். இந்த போட்டோவைப் பார்த்தா நல்லா  சந்தோசமா இருக்கு. நம்ப கூட டூர்  கைடா வந்த அந்த சின்னப் பையனும் பார்க்க அழகா இருந்தான். நான் தனியா இருந்து ரசிச்சுகிட்டே இருந்தேன். பேச ஆசை ஆனா தயக்கம் அழகா எப்பவும் கையைக் கட்டிகிட்டே இருந்தான் அந்தப் பையன்
இப்படி அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த போது இடைவெட்டாது அந்த கண்களில் வழியும் ஆசையையும் , நிராசையாகிப் போன வலியும் பார்க்கக் கிடைக்க எதுவும் பேசாது கேட்ட படி இருந்தேன்.
பேசாமல் இருப்பதை விட சில விடயங்கள் பேசி முடிக்கும் போது தீர்ந்து விடும். அந்த அம்மாள் பேசித் தீர்த்துக் கொள்ளக் காத்திருந்தேன்
 வாழ்க்கை என்பதை வாழ முடியாமல் போவதை உணர்ந்து விடக் கூட முடியாத சூழலை எப்பவும் தன்னைச் சுற்றி தகவமைத்துக் கொண்டே இருக்கின்றாள் பெண் என்பதை  அந்த அம்மாவின் வார்த்தைகளும் உணர்வுகளும் சொல்லிப் போனது
எனது நண்பர்  வயதான பெண்களுக்கு ஸ்பரிச சுகத்திற்கு ஏங்குகின்ற ஒரு மனது ஆழ்நிலையில் இருக்கும். ஒரு கால கட்டமோடு  அவர்கள் அந்த மனநிலையிலிருந்து நிர்பந்தமாக காலத்தின் சூழ்நிலையில் விலக்கி வைக்கப் படுகின்றார்கள் ஆகவே பாட்டியம்மாக்களை கண்டால் தொட்டுத் தழுவியும் பேசுவது , அன்பை இன்னும் அதிகமாய் வெளிப் படுத்தும் , அவர்களை சந்தோசப் படுத்த இதைக் கூடச் செய்யவில்லையென்றால் எப்படி என்று சொல்லிப் போனது நினைவுக்கு வந்து போனது  அந்த அம்மாவிடம் விடை பெறுகின்ற போது  கை பற்றி  அணைத்துக் கொண்டு  விலகினேன் .
கொஞ்சம்  எனது மனவலி குறைந்தது போல இருந்தது.
அதே போல என்னுடன் வந்திருந்த இன்னுமொரு பெண்மணி சொன்னார் பொதுவாக நீள கம்மல்கள் போடுவதில்லை ஊரில்( சிவகாசியில்) ஆனால் என் பெண் அவளுடைய கம்மல்களைப் பூராவும் கொடுத்து விட்டிருக்கின்றாள்  அதை போட்டுக் கொள்ளச் சொல்லி அதை நான் போட்டிருப்பதை அவள் பார்க்க முடியாதென்பதால் புகைப்படம் எடுத்து வரச் சொல்லியிருக்கின்றாள் என்றார். அவருடைய புகைப்படக் கருவியில் மின்சார இருப்பு தீர்ந்து போயிருந்த போது என்னுடைய புகைப்படக் கருவிலேயே அவரை பல்வேறு கோணங்களில் எடுத்தேன் அவர் போட்டிருந்த நகைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவும். பயணம் முடியும் வரை சந்தோசமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு கிளம்பும் போது  கொஞ்சம் கவலை வந்து விட்டது  என் புகைப்படக் கருவியில் எடுத்த படங்களை அனைவரும் மொத்தமாக சி.டி போட்டு வேண்டும் என்று சொன்னபோது.
திலகபாமா நீங்கள் யாருக்கும் படங்கள் சி. டி கொடுக்கும் போது என்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் அதில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
இன்னும் தனை ஆமையென சுருக்கிக் கொள்ளும் மனோநிலை போகவில்லையே என்று வருத்த மோடு , உங்கள் விருப்பப் படி செய்வேன் கவலைப் படவேண்டாம் என்று சொல்லி விட்டு சிரித்தபடி நகன்றேன். விமானம் எங்களை மதுரையில் தரைஇறக்கி விட்டு விட்டது . முக்திநாத் குளிர் என்னோடு பேசிய விடயங்களை அசை போட்ட படியே உடன்பாடில்லா இந்த பெண்களின் தளத்தில் தரையிறங்க முடியாது தவித்த படியே இருக்கின்றேன் .

posted by Thilagabama m @ 4/28/2012 10:32:00 am   0 comments
Saturday, April 07, 2012


திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்

வெங்கட் சாமிநாதன்

திலக பாமா ஒரு கவிஞர். இதோடு நான் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமீபகாலமாக இது சாத்தியமில்லாது போய்க்கொண்டு இருக்கிறது. நான் கவிஞர் என்று சொல்வதோடு நிறுத்திக்கொண்டாலும், பெயரைப் பார்த்து பெண் கவிஞர் என்றும் சேர்த்துப் படித்துக்கொண்டு, அதற்கான இன்றைய தமிழ்ச் சூழலின் அர்த்தங்களையும் தானே தந்து படித்துக்கொள்ளும் இன்றைய தமிழ் வாசக மனம். பெண் கவிஞர் என்றால் பெண்ணீயக் கவிஞர் என்று படிக்கப் படும். பெண்ணீயக் கவிஞர் என்றால் அதற்கான குண வரையரைகள் தரப்பட்டு தயாராக உள்ளன. அதற்கான பெண்ணிய மொழியும் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது, அந்த பெண்ணிய மொழியின் அகராதியை நான் இங்கு சொல்ல முடியாது. தெரிந்தவர் தெரிந்து கொள்வார்கள்.  இதெல்லாம் போக, பெண்ணிய கவிதைகளுக்கு இலக்கணம் வகுக்கும் ஒரு வழிகாட்டியாக தன்னை வரித்துக்கொண்டுள்ள ஒரு பத்திரிகாசிரியர்,  ”உங்க கவிதையிலே கொஞ்சம் பெண்ணிய மொழியும் தூவிக்கொண்டாங்க போட்டிரலாம்” என்று தன் பங்குக்கு உதவுவதாகவும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் ”சம்மதம் இல்லை என் கவிதையில் என் மொழியும் என் பார்வைகளும் அனுபவங்களும் தான் இருக்கும்”, என்றால், பெண்ணியம் பேசாத பெண் கவிஞர் கவிஞராகவே அங்கீகரிக்கப்படமாட்டார். சங்கப் பலகையில் இடம் கிடைக்காது தான்.

அப்படித் தனித்து விடப்பட்டதால் தனித்துக் காண்பவர் திலக பாமா. எனக்குத் தெரிந்து பத்து வருடங்களுக்கும் மேலாக எழுதிவருகிறார். இது காறும் இவரது கவிதைகள் எட்டு தொகுப்புக்களில் வெளிவந்துள்ளன. சமீப வருடங்களில் அவர் உரைநடையிலும் நாவல், பிரயாண இலக்கியம் என்றும் ஒரு சில எழுதியிருக்கிறார்.  இருப்பினும் அவரது பிரதான ஈடுபாடு கவிதைகளில் தான். இவரைக் கவிஞராக அங்கீகரிக்காத சக பெண்ணிய கவிஞர்களின் பிரக்ஞையிலும் இவர் கவிஞர் தான். அவர்கள் சொல்லும் எழுத்தும் தான் அதை மறுக்கும்.

பார்க்கப் போனால் இவர்கள் வரையரை செய்துள்ள பெண்ணிய மொழியும் பெண்ணிய மொழியல்ல.அது சாதாரண பேச்சு வழக்கில் இல்லாத வடமொழிச் சொற்கள். தமிழிலே உள்ள அந்தக் கொச்சை மொழிக்கு தாக்கு வலு அதிகம். ஆனால்,  தமிழிலே சொல்வதற்கு அவர்களுக்கே கூச்சமாக இருப்பதால் சமஸ்க்ருத வார்த்தைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். எப்போதோ படித்தது. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆண்டாள் திருப்பாவைக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார்,. அவை அன்றைய சுதேச மித்திரன் வாரப் பத்திரிகையில் வெளி வந்து கொண்டிருந்தன. அவற்றில் சில பாடல்களை விட்டு விடுவார். ஏன் என்று கேட்டதற்கு, ”அதிலே என்னென்னமோ வார்த்தைகள் எல்லாம் வந்திருக்கு. அதை எப்படி சபையிலே பாடமுடியும்?” என்றாராம். “ஏன் அஷ்டபதியெல்லாம் நீங்க பாடுவேள் தானே? அதைப் பாடறபோது ஆண்டாளைப் பாடறதிலே என்ன கஷ்டம்? என்று கேட்டார்களாம். அதற்கு அரியக்குடி சொன்ன பதில்.”அஷ்டபதி சமஸ்கிருதத்திலே இருக்கு ஸ்வாமி, பாடிடலாம். ரொம்பப் பேருக்கு புரியாது. ஆண்டாள் தமிழ்லேன்னா பாடியிருக்கா, அதான் கஷ்டம்,” என்றாராம். 1940 அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கும் 2000-தில் வாழும் இன்றைய இளம் பெண்ணிய கவிஞர்களுக்கும் சிந்தனை அலைவரிசை வெட்க அலை வரிசை இரண்டும் ஒன்றாக இருப்பது வேடிக்கை தான். . . .

பார்க்கப் போனால் பெண்கள் வதை படுவது இன்று நேற்று  விவகாரமல்ல. ஆண்டவன் கூட மாதொரு பாகன், சரி, உமையொரு பாகன் என்று தான் சொல்லப் படுகிறானே தவிர ஆணொரு பாகி என்று தேவியாக வனங்கப்படுவதில்லை. சக்தியை ஒரு பாகமாகக் கொண்ட சிவன் அவன்.  ஜடாமுடியும் முறுக்கிய  மீசையும் புலித்தோலை அரைக்கிசைத்த சிவன். அவன். சிவனை ஒரு பாகமாகக் கொண்ட சக்தி அல்லள். கதை அங்கேயே ஆரம்பித்தாயிற்று. ஆட ஆரம்பித்தாலோ ஒரு காலை மேலே தூக்க, சக்தியோ வெட்கித் தலைகுனிந்து தன் தோல்வியை ஒப்புக்கொள்ள வைத்து வெற்றி கொண்டதாக  மந்தஹாஸம்  புரியும் அழுகுணி ஆட்டமும் அப்போதே தொடங்கியாயிற்று. தெய்வமே கூட ஆண்டவனாகத் தான் கற்பிக்கப் பட்டுள்ளான். தனிமை வாட்டப் போகிறதே என்று அவனுக்கு ஒரு தேவியை உபரியாகத் தான் கற்பித்துக்கொண்டிருக்கிறது மனித ஜன்மம். என்னதான் வாதித்தாலும் தேவி உபரி தான். உபரிகள் ஒன்றிரண்டு கூடலாம் சில ஆண்டவர்களுக்கு.

ஆக, அற வாழ்க்கை என்னவென இலக்கணம் வகுக்க வந்த வள்ளுவனும் இதற்கு விதி விலக்கல்லன்.

தொண்டை ஈரம் உலர
வடக்கயிறு
விட்டு வருகின்ற வாழ்க்கை
இரண்டடி தந்த
வள்ளுவன் காலம் தொட்டு

அன்றீலிருந்து இன்று வரை
எப்போழுதும் தாகமொடு
நானிருக்க………..

என்று நீள்கிறது திலகபாமாவின் கவிதை. ஒன்று.

அந்த வள்ளுவன்,

தெய்வம் தொழாள், கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

என்று சொல்லாமல் வேறென்ன சொல்லுவான்? வாசுகிக்கே அந்த கதிதான். கூப்பிட்ட குரலுக்கு கிணற்று வடக் கயிற்றை பாதி iஇழுத்ததை  “அம்போ” என்று  தொங்க விட்டு ஓடி வரவேண்டும். சிவனும் சரி, வள்ளுவனும் சரி. ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் தாம். வள்ளுவர்க்கு சிலை எழுப்பிய நாம் இன்று வேறு எப்படி இருக்க முடியும்?

பெண்ணிய மொழியின் தேவையே இல்லை. பழகி வரும் மொழியே அதையெல்லாம் சொல்லி விடுகிறது.

நான் உணர்ந்ததும் உன் பெருமையாக
நீ உணராதது என் தோல்வியாக

இப்படி முளைச் ச்லவை செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒரு மரபு பேணப்பட்டுவருகிறது. அப்படி மரபு பேணுதலில் தான் “பெய் என்றால் மழை பெய்யும்.” அது தொழுநன் தொழுதெழுபவளுக்குத் தான் அந்த சக்தி உண்டு என்று பூச்சூட்டப்பட்டுள்ளது. இதைச் சொன்ன வள்ளுவனோ தொழுநனோ பெய் என்றால் மழை பெய்யாது. அப்பா! கூடை நிறைய மல்லிப்பூ சூட்டியாயிற்று.


நீ விரும்புவதை நான் உணர்ந்து கொள்வது நீ பெருமை பாராட்டிக்கொள்ளும் காரணமாகிறது. என்னை நீ உணராததோ, உனக்கு உணரவைக்காத என் தோல்வி யாக புரிந்து கொள்ளப் படுகிறது.

ஆக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் புரிய வைப்பதில் உள்ள மொழிப் பிரசினையாக வெளிப்பாட்டுப் பிரசினையாக இது முன் வைக்கப்படுகிறது. இதிலும் ஒரு சாமர்த்தியமும் விளையாடுகிறது.

ஆண்கள் எல்லாருக்குமே
பெண்களிடம் ஒளிக்க விஷயமிருக்கிறது.

அவளுக்குப் புரியாது
அவள் சாதாரண குடும்பப் பெண்
அவ்ள் அலுவலகம் தவிர
உலகம் தெரியாதவள்
அவள் என்னை விட்டுக் கொடுக்கமாட்டாள்
அவள் என்னைச் சிறை வைப்பவள்
அவளே ஆண்
அவளோடு
இன்னொரு ஆண் இருத்தலியலாது.
………………
…………..
உனது தவறுகளாயில்லாது
எனது பிழைகளாய்
மொழிபெயர்க்கும்
உன் முன்னால்
…………..
புரிந்து கொள்ள முடியாதவள்
என்ற உன் வாசிப்புக்கு
அப்பாலும்

என்று நீள்கிறது விலகிக் கொள்ளும் நட்பு என்று ஒரு கவிதை

சொல்லாமலே புரிந்துகொள்வது பென்ணுக்கு அழகாகக் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. சொல்லப்படாமல் புரிந்து கொள்ள வேண்டிய ஆணின் விருப்பங்கள் காலத்துக்குக் காலம் வேறுபட்டும் விரிவுபட்டும் வரும் நிலையில் புரிதல் என்பது ஒரு பிரசினையாகிப் போகிறது.

புரிதலின் வலிமை என்று ஒரு கவிதை அதன் வரிகள் சில:

எனக்கப்புறமாக
வாசிக்கப்படவேண்டிய
புரிதல்கள்
எழுத்தாகவில்லை
எழுத்தானாலும் அது
உன் வாசிப்புக்கான
கவிதையாவதில்லை

புருவ நெறிப்பின்
வரிகளுக்குள்ளே
புதைந்து கிடக்கின்றன

இதை எப்படி எப்படியெல்லாம்  தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது? எவ்வளவு தடவை தான் சொன்னாலும்….

உன்னிடமிருக்கும்
“ஆம்” என்பதன் பொருள்
என்னிடமிருப்பதில்லை.

உனக்கான ”ஆம்-”-ஐ
நீ உச்சரித்த போது
எனக்கான “இல்லை” யாக
மாறிப் போனதை
உன் பக்கமிருந்து
எப்பவும் நீ தெரிந்து கொள்ள
நியாயமில்லை.

இது ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ளும் பிரசினையுமில்லை. காரணம் காலம் காலமாக ஒருவர் சொல்லாமல் இருப்பதே சொன்னதாகக் கொள்ளப்படும். மற்றவர் சொல்லாததை சொன்னதாகப் புரிந்து கொள்ளவேண்டும் என  மரபும் தர்மமும் மூளைச் சலவை செய்துள்ளன

பேசிக்கொண்டிருந்த பொழுதுகளில்
ஒன்றுமில்லையெனச் சொல்லிவிட்டு
துண்டித்த தொடர்புகளின் பின்னால்
எப்பவும் தொடருகின்றன பேச்சுக்கள்

வெடிப்பு விழுந்து போன
செம்மண்
பதித்துக்கொள்ள மறுக்கிறது
புதிய பாதச் சுவடுகளை.  

(அழைப்பு நெருக்கடிகள்)

இப;டி நிறையவே சொல்லிக்கொண்டு போக வேண்டியிருக்கிறது. இது அன்றாட நிகழ்வுகள், மௌன உத்தரவுகள் மௌன புரிதல்கள். பேசித் தீர்க்க உள் உறைந்த ஆதிக்க உணர்வுகள் இடம் கொடுப்பதில்லை. வீட்டுக்குள்ளேயே மௌன யுத்தம்.

நீ
மொன்னையாக்கிப் போட்ட
வார்த்தைகள்
கிடக்கின்றன
கூட்டித் தள்ளி விட முடியாதபடிக்கு
அதன் உடைவின் கூர்மைகள்
அடிக்கடி பதம் பார்த்து விட
பார்த்து நடக்கவும்
சரி வரக் கூட்டவும்
உத்தரவிடும் உன் அதிகாரத்தில்
மறைகிறது
அவற்றை
உடைசலாக்கியது
நீ எனும் நிஜம்.

இதை விட வலிமையாக மனித வரலாறு முழுதும் நீடித்துவரும் ஒரு உறவின் கொடுமையைச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.

இவையெல்லாம் என்னை அதிகம் சிரமப் படுத்தாது காணும் திலக பாமா. இது ஒரு பகுதி. இன்னொரு கணிசமான பகுதியில் திலகபாமாவின். கவிதை மொழி உருவகங்களாலும் குறியீடுகளாலும் ஆனது. பூடக மானது. அனேகம் புரிவனதான். ஆனால் சில , என் வாசிப்புக்கு அவை  புரிவது போலும் இருக்கும். முழுதும் புரியாதது போலும் இருக்கும் மொழி கொண்டது. அவரது கவிதைகள் தாம் என்றில்லை நாவலும் அப்படித்தான். கதைகளும் அப்படித்தான்.

எல்லாருக்கும் எல்லாம் புரிந்து விடவேண்டும் என்று அவசியம் ஏதுமில்லை. சில கொஞ்சம் யோசித்தால் புரியும். தான்.  சில அப்படி யோசித்தாலும் புரிய மறுக்கும். ஆனால் அவை நம்மைப் படிக்க நிர்ப்பந்திக்கும். அவை இப்போது புரியாவிட்டாலும் உயிர்ப்புள்ளவை என்பதற்கு அது தான் அடையாளம். கவிஞரைக் கேட்டுப் பயனில்லை. எழுதி வெளியுலகில் உலவ விட்ட பிறகு, அவற்றுக்கும் வாசகனுக்குமான உறவு தனி. அதில் எழுதியவர் தலையிட முடியாது. அவரவர் கொள்ளும் அர்த்தம் தான் அதன் அர்த்தம்.

ராபர்ட் ப்ரௌனிங் சொன்னதாக ஒரு புகழ் பெற்ற வாசகம் உண்டு. ராபர்ட் ப்ரௌனிங்கிடம் ஒருவர் அவர் கவிதை ஒன்றிற்கு என்ன பொருள்? என்று கேட்டதற்கு, அவர் சொன்னது “இக்கவிதையை எழுதிய போது இதன் பொருள் என்னவென்று உலகில் இருவர்க்குத் தான் தெரிந்திருந்தது. அந்த இருவரில் நான் ஒருவன். மற்றவர் கடவுள். இப்போது கடவுள் ஒருவருக்குத் தான் இதன் பொருள் தெரியும். என்னைக் கேட்டுப் பயனில்லை”.


சரி திலகபாமாவுக்கு வருவோம் விதைகள், மண், ஈரம், பூக்கள், வேர் என உருவகங்கள் கொண்டது அவர் கவிதை மொழி

உன் மொட்டை மாடியில்
தொட்டிச் செடியாவதற்கென்று
அந்தி மந்தாரை விதைகளை
அனுப்பி வைக்கின்றேன்.

நாளெல்லாம் நீரூற்றியும்
முளைக்காத விதை
ஒரு நாள் அவன்
வீடில்லா போழ்தினில்
விழுந்த மழைச் சாரலில்
நனைந்த மறுநாள்
அரும்பு விட்டதாம்

இன்னொன்று:

மலையும்
பள்ளத்துக்குமிடையில்
வீழுகின்ற அருவியாய்
எனக்கும்
உனக்குமிடையில்
வாழ்க்கை
வீழ்ந்தபடியே வாழ்கின்றது.

இவையெல்லாம், கரையாத உப்புப் பெண் என்னும் எட்டாம் தொகுப்பிலிருந்து. முதல் தொகுப்பைப் பார்க்கலாமா? எந்த கவிதையையும் அதன் முழுமையில் நான் தரவேண்டியதில்லை.
ஒரு சில மாதிரிக்கென்று. பூடகமானவை தான். புரியாமலா இருக்கும்?

ஊரெங்கும் நெருப்புக் கோழிகள்
மண்ணுள் புதைந்து புதைந்து
கழுத்து நீண்டு போகும்
நெருப்புக் கோழிகள்.

பாரங்களின் சுகம் என்ற கவிதையிலிருந்து,

கனத்துக் கிடந்த தனிமை
நீ பேசிய நிமிடங்களை விட
அளவுக்கதிகமான நினைவுகளோடு
தொணதொணக்கும்.
…………
…….

தலைக்கடியில் தானென்றாலும்,
பாரமாகும் தலையணைகள்
நெருடல்களாவது தவிர்க்க
கட்டாந்தரையில் கால்கள்
பதிக்கும் தலைகள்.

(இதில் அளவுக்கதிகமான என்ற சொல் கொஞ்சம் அதிகமே நீட்டப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. “அதிக” என்றாலே போதும் என்று தோன்றுகிறது.

இன்னும் ஒன்றே ஒன்று.  நிஜங்களின் நிழல்கள்- லிருந்து

விதை ஓடு தெறிக்க,
வெளிவந்த நாற்று
மண்ணுக்குள் வேராகத் தனைத்
திணிக்க மனமில்லாது
விடுத்த இலையைச் சிறகாக்கி,
நட்சத்திரக் கனவு காண
நினைவை மண்ணிட்டு
பின் மண்ணோடு பெயர்த்தெடுத்து
இடம் மாற்றி திசை மாற்றி இன்று மண்ணும் நானும்
இரண்டாக்க முடியாததாய் ……

என்று தொடங்கும் இந்நீண்ட கவிதை இப்படி முடிகிறது.

பறக்க ஆசைப்பட்ட மரம்
பூக்களின் கனிகளின் பாரங்களோடு
மண்ணோடு வாழும்
வாழ்வெது எனும் கேள்வி தாங்கி.

இனி எனக்குப் புரியாத உருவகத்தை உதாரணிக்க வேண்டாமா?”

அது இத்தொகுப்பின் தலைப்புக் கவிதை தான். கரையாத உப்புப் பெண்

கரையாள் என நம்பிய
உப்புப் பெண்ணாய்
அவள் உன்னருகில் வந்த போதும்
படித்திருந்த கிளியின்
இன்னுமொரு ரூபமென அறியாய்.

எட்டுத்தொகுதிகள். இவையெல்லாம் பெண்ணின் சுதந்திர இருப்பைத் தன் தனித்த குரலாய் பதிவு செய்பவை. கூட்டுக் குரல் அல்ல. கோஷங்கள் அல்ல. தனித்து ஒலிக்கும் குரலானாலும் பெண் இனம் அனைத்துக்குமான குரல். தன் பெண்மையை அதன் நளினத்தை, அழகை பென்ணியம் என்று சொல்லி மறுத்துக்கொள்ளாத குரல். பரந்து விரிந்து கிடக்கும் இயறகை அனைத்திலும், பூக்களில் விதைகளில், மரங்களில், இலைகளில், மண்ணில், காற்றில் தன்னைக் காணும் குரல்.


கரையாத உப்புப் பெண்: (கவிதைத் தொகுப்பு) திலக பாமா
வெளியீடு: காவ்யா, 16 இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம்  சென்னை -24  ப். 156 ரூ 120
posted by Thilagabama m @ 4/07/2012 10:18:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates