சூரியாள்

Friday, November 29, 2013
குவாலியர் பயணம் தொடர்கின்றது
கட்வார்
       குந்தி பிறந்த ஊர் என்றார்கள் ஒரு நதியும் நதியின் கரையில் ஒரு கோவிலும். உள்ளே நுழைந்ததும் கால் வரை நீண்டிருந்த ஜடாமுடியை அவிழ்த்து விட்ட சாமியார்  என் கவனத்தை ஈர்த்தார். அதில் இருந்த நீரை உதறத் தொடங்கி முடிந்தார். கோவிலுக்குள் சென்று வழிபடுங்கள் என்றார்கள். உள்ளே போனால் மண்டபம் ஒன்றும் அதனுள் உருண்டைக் கல்லாலான சிவ லிங்கமும் இருந்தது. குந்தி பூஜை செய்த இடமென்றார்கள். சுற்றி முடித்து வர ஜடாமுடியை தலையைவிட பெரிசாய் சுத்தி முடித்திருந்தார். போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை, கேட்க பயம. திரை மறைவிலிருந்த குந்தி சிலையை காண்பிக்கின்றார்கள். வெள்ளை மார்பில் சிலை பார்த்து விட்டு வெளியே வர துளசிச் செடிகளுக்கிடை கிடக்கிறது  ஒரு சிலையின் உடல் மட்டும், விதவிதமான பறவைகளின் சப்தம் எம்மை சூழ்ந்து கொள்ளுகின்றது. தனிமையில் ஒரு மேடான பகுதியில் சுற்றி இருக்கின்ற பிரதேசங்களை நதியை பார்க்கக்கூடிய இடத்தில் நிற்கிறேன். டிரைவர் உடன் வரச்சொல்லி அழைக்கின்றார். நதியை நோக்கி வேகமாக ஓடுகின்றார். பின்னாடியே ஓடுகின்றேன். பறவைகளின் குரல்கள் நெருக்கடியாய் சுழன்று வருகின்றன.  நதி ஓடுகின்ற சப்தமும் கேட்கிறது. அதிக நீரில்லை என்றாலும் கரைகளின் பாறைகள் கோவில்கள், வீடுகள் போலவே அடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒன்று புரிபடுகின்றது மனிதன் தன் வாழுகின்ற முறைமையை இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்கின்றான். அறைகள் இயற்கையாகவே கற்களால் அடுக்கப்பட்டு மதில் சுவர்கள் போல் காட்சி தருகின்றன.

     பாறைகளின் மேல் நடந்து போகின்றோம். வானில் சூரியன் தகிக்கின்றான் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் அருகில் வருகின்றார். சூரியனின் காலடித் தடமென்றும், குதிரைகளின் குளம்படித் தடமென்றும் பாறைகளில் சிலவற்றைக் காண்பித்துப் போகின்றார். பார்க்க அப்படியாகவே இருக்கின்றன. சம்பல் பள்ளத்தாக்குகளைத் தாண்டிப் போகின்றோம். மலைக் கோடுகள் காட்சி தருகின்றன.
posted by Thilagabama m @ 11/29/2013 09:01:00 pm   0 comments
Tuesday, November 26, 2013
குவாலியர் பயணம்
அடுத்த பயணத்திற்கு தயாராகின்றேன். மொரீனாவிலிருந்து சிஹோன்யா போக வேண்டும் என்று கிளம்புகின்றேன். நீண்ட நேர தேடலுக்குப் பின் கிராமங்களூடாக நெடுக பயணித்தபின், ஓட்டுநர் சரியான பாதையில் தான் போகிறாறே என்ற கேள்விகளுக்கும் அப்பால் “ககன்மட்” என்ற கோவிலுக்கு வந்து சேருகின்றேன். சிஹோன்யாவிற்கு முன்னாடியே வந்து விடுகின்றது. புராதான காலக் கோவில். மூடிக்கிடந்த கோட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகின்றேன் மிகப்பெரிய உடும்பு  2 அடி நீளத்திற்கு என்னை கடந்து போகின்றது.        
ககன்மட்
      எந்த வித தகவல்களும் அந்த அந்த சிவன் கோவில் அடுக்கப்பட்ட கற்கலினால் எடுக்கப்பட்ட கோவில், கற்களின் கோவில். கச்சுவாகா அரசாட்சியின் எச்சம் 1015 -1035 காலக்கட்டத்திற்குரியது சிமெண்டோ, சுண்ணாம்போ இல்லாமல் கட்டப்பட்ட கோவில் ராணி சுகன்வதியின் நினைவாக ராஜா கீர்திராஜ் கஜீராஹோ பானியில் கட்டப்பட்ட கோவில் 175 அடி உயரமுடையது.
   யாருமற்ற அந்த கோவிலை சுற்றி நிறைய கோவிலின் உதிரிப் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன. அவையெல்லாம் சேர்த்தால் இன்னுமொரு கோவிலே கட்டலாம் போல. நுழைந்தவுடன் இருந்த சிவன் கோவிலும் இடிந்த சுவரும் ஈர்க்கின்றது. அதையும் தாண்டி உள்ளே போக கோவிலுக்கு நேராக ஒரு அலங்கார வளைவு தெற்கு வடக்காக  பொருத்தமில்லாது இருக்கின்றது. கோவிலுக்குள் போக அடுக்கப்பட்டிருந்த கற்கள் தலையில் விழுமோ என்ற அச்சம் வருகின்றது.
   படிக்கடியில் ஒளிக்கப்பட்டிருக்கு அரைவட்ட வடிவகல். பெரிய தூண்கள், சில தூண்களின் பாதியைக் காணோம். சுற்றுச் சுவர்களில் வருண, வாயு, அக்னி, சூரிய, சந்திர பகவான்களின் சிலைகளும் பெண்களின் சிலை, யாழியில் அமர்ந்திருக்கும் குட்டிப்பெண் சிலைகளும் அழகாயிருக்கின்றன. கருவரை நுழைவாயிலுல் இருந்த யாழி கொஞ்சம் வித்தியாசமாய் செவ்வர்ணம் பூசி தொடையில் குறியேந்றி காணப்படுகின்றது.
       அதைத்தாண்டி சிகோன்யா என்ற கிராமத்தை அடைகின்றோம். எருமைகள் அவர்களின் செல்லங்களாய் வளம் கொழிக்கின்றன. பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லை. மின்சார வயர்கள் அறுந்து வயல்வெளி தண்ணீரில் மிதக்கின்றன. வீடுகளின் வாசல்கள் எருமைச் சானியால் மொழுகப்பட்டு கட்டில்கள் வெளியே கிடக்கின்றன.
      ஜெயின் கோவிலுக்கு பிரசித்தியான சிகோன்யா கோவில் எங்கே என்று கேட்கவும் ஒருவர் கோவிலின் பொறுப்பாளர் என்று சொல்லி எனை ஏற்றிக் கொண்டு போங்கள் என்றார்.
  அவரோடு பயணமானோம். கோவில் வாசலில் இறங்கியவுடன் கூடவே அழைத்துக் கொண்டு போனார். மூடிக் கிடந்த கோவிலைத் திறந்து உள்ளே இருந்த மூன்று திகம்பர மூர்த்திகளின் சிலையைக் காண்பித்தார். அது சுயம்புவாக வந்தது என்று சொன்னார். கடவுள்கள் வேறு வேறானும் ஒரே கதைகள் தான். ஒரே மனிதர்கள்  தான். பாஷை வேறானாலும் முகமும் மொழியின் தொனியும் சொல்லியவற்றை புரிய வைத்து விட்டு விடுகின்றன.
          சாப்பாடு சாப்பிட்டு விட்டு போகச் சொல்லி வற்புறுத்துகின்றார். அறை அறையாக திறந்து காண்பிக்கின்றார். ஒரு அறையில் பல மகாவீரரின் சிலைகள் சம்மணமிட்டு  அமர்ந்த நிலையில். ஒவ்வொரு ஒவ்வொரு நிறக் கல்லில் ஒவ்வொன்றின் அடியிலும் ஏதாவது ஒரு குறியீடு பறவை, விலங்கு, செடி இப்படி பொறிக்கப்பட்டுள்ளது ஒன்று போல மற்றொன்று இல்லை.


 
posted by Thilagabama m @ 11/26/2013 10:21:00 pm   0 comments
Monday, November 11, 2013
பேச மறந்த குறிப்புகள்
               பேச மறந்த குறிப்புகள்
         அமெரிக்கன் கல்லூரியில் 4.9.13 அன்று தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் “ பெண் கவிதை வெளி” என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தனர். வேறு யார் பேசுகிறார்கள் என்ற போது ந. முருகேச பாண்டியன் பேசுகிறார் என்றார்கள். நல்லவிசயம் தான் மாற்று கருத்துக்கள் இரு பக்கமும் பதிவு செய்வது அவசியம், மாணவர்கள் தங்களது காலத்திற்கும் தேவைக்குமான விசயத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று சொன்னேன்.
         மாணவர்களும், கொஞ்சமாக மாணவிகளும் அமர்ந்திருந்தனர். முதலில் எனை உரை ஆற்ற  அழைத்தார் தலைமைப் பொறுப்பிலிருந்த பேராசிரியர்.
   பெண் கவிஞர்கள் இன்று என்ற தலைப்பில் என் உரை, சில உண்மைச் சம்பவங்களின் சாட்சியங்களோடு முன்வைக்கப்பட்டது. இன்றைய கவிஞர்களின் கவிதைகளின் வாசிப்பில் அடிப்படையில் அதன் இயங்குதளம் எப்படி இருக்கின்றது. அதில் புதிய மொழிகளோடு வலம் வருபவர்களின் கவிதைகளின் பாதை எது என்பதாக என் உரை இருந்தது. நான் ரசித்த கவிதைகள் அதன் இயங்கு தளம்,பேசப் படாத கவிஞர்களின்  கவிதைகள் எனவும்,புகழ் அடைந்ததினாலேயே ஒரு படைப்பு சிறப்பானதொன்றாக அமைந்து விடுவதில்லை எனவும் பெண் உடல் மொழி குறித்த போக்குகளையும் சொல்லி எனக்கு அதில் உடன்பாடில்லை என்பதற்கான காரணங்களோடு முடிந்தது உரை. நேரம் ஆகிவிட்டது என்பதை பேராசிரியர்கள் குறிப்புணர்த்த அத்துடன் நிறைவு செய்து கொண்டேன் உரையை.
      அடுத்து பேசவந்த முருகேச பாண்டியன் பெண் கவிதைகளின் தொடக்கத்தை ஒளவை, ஆண்டாளிலிருந்து தொடங்கினார். இன்றைய பெண் கவிஞர்களின் உடல்மொழி அந்த மரபின் தொடர்ச்சியே என்றும் வெள்ளிவீதியார் எழுதியதைத்தான் இவர்களும் எழுதுகிறார்கள். உடன்போக்கு, திருமணத்திற்குப் முன்னும் பின்னுமான உறவு இதை களமாக வைத்துக் கொண்டிருந்த தமிழ்ச்சமூகம் இப்பொழுது காதலைக் கூட அனுமதிக்கவில்லை எனவும் வருத்தப்பட்டார்.
   கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா எனப் பாடல் எழுதிய சினேகன் பெண் கவிஞர்களை எரிக்கப் போவதாக பேட்டி கொடுத்ததை நையாண்டி செய்தார். உலக இலக்கியத்தை கொஞ்சம் படித்திருப்பதால் இந்த இலக்கிய போக்கின் நியாயத்தை புரிந்து கொள்ள முடிந்ததாய் பேசினார். பெண்ணை தீட்டாக நினைப்பதற்கு மாற்றாக தூமை பற்றி கவிதை எழுதிய புரட்சி கவிஞர்களைப் பாராட்டிய போதும், சிறந்த கவிதைகளாக வாசிக்க தேர்ந்தெடுத்த 3 கவிதைகளிலும் புரட்சி வார்த்தைகள் இல்லாத கவிதையாய் தேர்ந்தெடுத்து வாசித்தார்.
  ஒட்டு மொத்தமாக பெண் உடல் மொழிக் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பது மட்டுமே ஒரே போக்கு என்பதாய் அதற்கு மாற்று கருத்துக்களோடு கவிதை எழுதுபவர்களை நிராகரித்து பேசி முடித்தார்.
( அங்கிருந்த மாணவ மாணவிகளுக்கு உடல்மொழி குறித்த விசயங்கள் இதுவரை போய் சேரவேயில்லை)
       அவ்வளவும் ஆணாதிக்கத்தால் நிரம்பி வழிகின்றது உலகம் என்பதாயும் பெண்கள் உடலை எழுதுவதாலேயே அதை அழித்து நிலை நிறுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லிப் போனார்.
        பாடலாசிரியர் சினேகன் எங்கள் கண்ணுக்குத் தெரிந்த ஆபத்து என்றால் முருகேச பாண்டியன் போன்ற விமரிசகர்கள் கண்களுக்கு புலனாகாத ஆபத்துகள். இவர் பட்டியலில் உடல் மொழி எழுதாத கவிதைகளில் தப்பித்தது தமிழிச்சி  தங்கப்பாண்டியன் மட்டுமே அது தமிழிச்சியின் கவிதை தந்த கம்பீரம். வாழ்த்துக்கள். சினேகன் உடல் மொழி பெண் கவிஞர்களை எரிப்பேன் என்றார்
 முருகேச பாண்டியன் போன்ற விமரிசகர்கள் ஏனைய மற்ற பெண் கவிஞர்களின் எல்லா தடங்களையும் எரிக்காமலேயே மறைத்து  விடுகிறார்களே அது நியாயமா.
         தலித் பெண் எழுத்துக்கள் உடல் மொழிக் கவிதைகளை அதிக   காத்திரமாக எழுதுவதாகச் சொன்னார்.
 குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத்தில் 2 நாள் நடந்த திராவிடக் கவிஞர்கள் கூட்டத்தில் தெலுங்கு மொழிக் கவிஞரான சுபத்ரா அவர்களுடன் உரையாடிய போது மேல் தட்டுவர்க்கப் பெண்கள் தான்  எங்கள் பகுதியில் உடல் மொழிக் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கின்றனர். தலித் பெண்களான எங்களுக்கு அதைவிட அதிகமான கவனத்தில் கொள்ள வேண்டிய முதலில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இருக்கின்றன என்றார்.
       உலக இலக்கியங்களை வாசிக்கும் விமரிசகர் முருகேச பாண்டியன் கொஞ்சம் அக்கம் பக்கம் பிரதேச எழுத்தாளர்கள் பேசுவதையும் கேட்கட்டும். கோட்பாடு இசங்களின் பின்னால் எழுத்தும் எழுத்தாளர்களும் பயணிப்பதை விட்டு, கொஞ்சம் மனிதர்களின் உணர்வுகளையும் , பிரச்சனைகளையும் கவனிக்கட்டும்.
         யோனி, முலை, தூமை இந்த மூன்றில் எதாவதோரு வார்த்தை இருந்தால் மட்டுமே உடல் மொழி கவிதைகள், என்ற சூத்திரத்தை ஜெபித்துக் கொண்டு, விமரிசிக்கத் தொடங்குவது தான் இங்கே நிகழ்கின்ற அபத்தம். பாலியல் விசயங்கள், வேட்கைக் குறித்துப் பேசக் கூடாதென்பதல்ல, அதை எப்படி, எந்த இடத்தில் பேசவேண்டும் என்பதிலேயே அதன் வெற்றியும் தோல்வியும் இருக்கின்றது. என்னுடைய வரையறைக்கு பதில் சொல்ல வேண்டாம். வாழ்வியலின் வரையறைக்கு பதில் சொல்லட்டும் இந்த வார்த்தைகள் இல்லாமல் பாலியல் சிக்கல்களை வாழ்வியலோடு பேசுகின்ற  படைப்புகளை  அது நிஜமாகவே காத்திரமாக இருப்பதால் கண்டு கொள்ளாமல் போகும் விமரிசகர்கள், பொய் கடி கடிக்கும்,  ”தீவிரவாதப் பெண்ணியம்” என  லேபிள் குத்திய படைப்புகளை மட்டுமே பெண்ணியக் கவிதைகளாக பிரகடனம் செய்து வருகின்றார்கள்.

             முருகேச பாண்டியன் பேச்சை முடித்து அமரும் போது அடுத்தது மாணவர்களின் கேள்விக்கான நேரம் என பேராசிரியர்கள் சொன்னதும் நான் எனக்கு 2 நிமிடம் வழங்குமாறு கேட்டேன். முருகேச பாண்டியன் இல்லை இது மாணவர்களுக்கான நேரம் உங்களுக்கு தர முடியாது என மறுத்தார். அதை நிராகரித்து சில மாற்று கருத்துக்களை பதிவு செய்வது அவசியம் என்று சொன்னேன்.
என் உரையில் இரண்டு நாளைக்கு முந்தைய தினமலரில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானவர்களின் 78% பேர் நண்பர்களும், காதலர்களும் என்று ஆய்வு சொல்கிறது என வெளியானது
         வேண்டாதவர்களை விட எங்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களிடம்தான் ரொம்ப கவனமாக இருக்க வேண்டியிருக்கின்றது.அன்பின் பேரால் நடக்கின்ற ஒடுக்குமுறையைத்தான் அடையாளம் காண முடியாமலேயே அனுமதிக்கின்ற ஆபத்தை செய்கின்றோம்.
       பாலியல் சுதந்திரம் பற்றி பேசுகின்ற இலக்கிய வாதிகள்தான் பெண் கவிஞர்களிடம் அவர்களது பாலியல் தெரிவு பற்றிய சுதந்திரத்தை கேலி செய்து, தோளில் கை போடுபவர்களாக இருக்கின்றார்கள்.
      தன் தவற்றை எல்லாரும் குறை சொல்லாமல் இருக்க வேண்டுமானால் எல்லாறையும் அத்தவற்றை செய்ய வைத்துவிடு என்ற தாரக மந்திரத்தை கடைப்பிடிப்பவர்களாக சிற்றிலக்கியவாதிகள் பெண்களை பயன்படுத்திக் கொள்வதற்கு சுதந்திரம் என்ற கட்டுப்பாடற்ற வாழ்வை போதிக்கிறவர்களாக இருக்கின்றார்கள்.
 உடல் மொழி கவிஞர்கள் வெள்ளிவீதியார், ஆண்டாள் போன்று மரபு வழியில் எழுதுகின்ற கவிஞர்கள் என்கின்றார் முருகேச பாண்டியன்.
மரபுகளை உடைக்கின்ற  நவீனப் படைப்பாளிகளாய் பிரகனடப் படுத்திக் கொள்ளும் உடல் மொழிக் கவிஞர்கள் இதை அறிந்தால் சண்டைக்கு வர மாட்டார்களா? அவ்வளவு பழமையான சிந்தனையோடவா இன்றைய கவிஞர்கள் இருக்கின்றார்கள்.  

        உடல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுகின்ற போது கூட ஒரு ஆளை நோக்கி குற்றம் காட்டிவிட முடிகிறது. அதே நேரம் இந்த ஆணாதிக்க சமூகத்தால் உணர்வு ரீதியாக சிதைக்கப்படுவதன் பாதிப்பு அதிகம்  பேசப்படாமல் இருக்கத்தான். உடல் உடல் என்று பேச வைத்துக் கொண்டிருக்கிறது பெண் எழுத்தை வியாபார பொருளாக்கி இருக்கின்ற இலக்கிய உலகு.
  சாலையில் என் மேல் இடித்து விட்டு போகிறவனை நான் கை நீட்டி குற்றஞ் காட்டிவிட முடியும், அதே நேரம் எனைச் சீண்டி வேஷ்டியை அவிழ்த்துக் கட்டும் ஆணின் மேல் எந்த வித குற்றச்சாட்டும் வைக்கமுடியாமல் உணர்வு சிதைவுறுவதை பார்த்து மகிழும் சமூகமாகவே இருக்கிறது என்பதை சொல்ல விடாமல் இருக்கவே முருகேச பாண்டியன் போன்ற ஆட்கள் உடல் மொழி எழுத்துக்களை ஆதரித்த வண்ணம் இருக்கின்றனர்.
     இப்படியாக என் குற்றச்சாட்டை நான் சொல்லவும் உணர்ச்சிவசப்பட்டு முருகேச பாண்டியன் அப்பொழுதுதான் தனது முத்தான வாதத்தை உதிர்த்தார். இப்படி ஆபாசமாகவும், அருவருப்பாகவும் திலகபாமா பேசுவதை கண்டிக்கிறேன் என்றவர்,
     முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் உருவாவதற்கு எத்தனையோ ஆண்களின் உதவிதான் காரணம் என்றாரே பார்க்கலாம். உதவிய ஆண்கள் இல்லையென்றால் முத்துலட்சுமி ரெட்டி வந்திருக்கவே முடியாதாம்
“ அப்ப இத்தனை ஆண்களும் சேர்ந்து ஆளுக்கொரு முத்துலட்சுமி ரெட்டியை கொண்டு வந்திருக்கலாமே. வகுப்பில் திரைக்கு மறைவில் உட்கார்ந்து படிக்கச் சொல்லியிருக்கத் தேவையில்லையே”
வீட்டில் தன்னோடு இருக்கின்ற பெண்கள் அறிவாளியா இருந்தா ஆண்களுக்கும் உதவிதானே. அந்த சுயநலத்திற்காகவாவது எங்கள் பெண்களை அறிவாளிகளாக வைத்திருக்கவே செய்கிறோம் என்ற தன்னிலை விளக்கம் வேறு.
       ஆமாமா வீட்டுப் பெண் பிள்ளைக்கு பாடல் சொல்லிக் கொடுக்க, தனது வங்கிக் கணக்குகளை சரிபார்க்க, தான் எழுதிக் கொடுப்பதை சரி பார்க்க என நீங்கள் “அறிவாளியா” வைத்திருப்பதுதான் தெரியுமே.
       என்னிடமே நிறைய இலக்கியவாதிகள் சொன்னதுண்டு நல்லவேளை நீங்க தோழியா போய்ட்டீங்க மனைவியா இருந்தா நாங்க தாங்கமாட்டோம் என்று. ஆம் வீட்டில், பெண்டாட்டி சொல் பேச்சு கேட்பவளாகவும், தோழி சுதந்திரமானவளாகவும், இருந்தால் “எல்லாவற்றுக்கும்” வசதி. என்று கணக்கிடும் ஆண்களிடமிருந்து நகன்ற வண்ணமே இருக்க வேண்டியிருக்கின்றது.
  விமரிசகர்களோ படைப்பாளிகளோ  கோட்பாடுகளை தங்கள் செயல்பாடுகளுக்கு பலம் சேர்க்க பயன்படுத்திக் கொள்ளலாமே அல்லாது , அதுவே செயல்பாடாக மாற்றிக் கொள்வது  செக்கு மாடு சுத்துச்சுன்னு வண்டி மாடும் சுத்துன்ன கதையா போகும், வாழ்க்கையை வாசியுங்கள் அதன் குரலை உ
ற்றுக் கவனியுங்கள் புதிய கோட்பாடுகள் உங்களிடமிருந்தும் உங்கள் படைப்புகளிலிருந்தும் பிறக்கலாம்posted by Thilagabama m @ 11/11/2013 02:52:00 pm   0 comments
Wednesday, November 06, 2013
குவாலியர் கோட்டை

அங்கிருந்து கிளம்பி குவாலியர் கோட்டையைப் பார்க்கப் போகின்றோம். மான்சிங் அரண்மனை இது. தோமர் அரசர் மான்சிங் தோமர் என்பவரால் 1508ல் கட்டப்பட்டது. மொத்தம் நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த அரண்மனை 2 பாதாள அடுக்குகளைக் கொண்டது.

      ஜீலாகா கேசர் குண்டா, பான்சிகர் இவையெல்லாம் அங்கிருக்கும் அறைகள் பெயர்கள், தரையிலிருந்து 300 அடி உயரத்திற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மொகலாயர்கள் இதை கைப்பற்றிய பிறகு இது சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பலவித வர்ணங்களில் மின்னும் டைல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்பது ஆங்காங்கே மின்னிக் கொண்டிருப்பதை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.
posted by Thilagabama m @ 11/06/2013 01:01:00 pm   0 comments
Monday, November 04, 2013
மாதவராவ் சிந்தியா அரண்மனை
மாதவராவ் சிந்தியா அரண்மனையில் அமைந்திருக்கும் அருங்காட்சியத்திற்கும் போகின்றோம். மாதவராவ் சிந்தியா குடும்ப அருங்காட்சியம் அது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் புகைப்படங்கள், அவரது லோக்சபா உரைகள், அவர்களது மிகப்பெரிய உணவுக் கூடத்தில், மேசையில் ரயில்வே ட்ராக் ஒன்று வைக்கப்பட்டு scindiaஎன்ற பேரைச் சுமந்த ரயில் இயக்கப்பட்டது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆடம்பரமான வாழ்க்கையின்  ஆவணம் அது. வெள்ளை நிறமாளிகை இதில் ஒரு வேலைப்பாடுகள் கொண்ட ஒரு மேசையைப் பார்க்க அதில் முருகன் சிலை தெரிகிறதே எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கையில் இது மகாபலிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்டது என்றார் வழிகாட்டி
 . மாதவராவ் சிந்தியாவின் தனிப்பட்ட வீடு இன்றும் அலங்காரமாய். அது சரி ராஜ பரம்பரை அல்லவா.

        சௌந்தர பாண்டியனாருக்கும் இப்படி ஒரு சிறிய அளவிலாவது மியூசியம் வைத்தால் என்ன?
posted by Thilagabama m @ 11/04/2013 09:31:00 pm   0 comments
Sunday, November 03, 2013
தான்சேன் சமாது
தான்சேன் சமாதி
        தமிழ்நாட்டில் திருவையாறு போல தான்சேன் சமாதியில் டிசம்பர் களை கட்டும் இந்துவாக இருந்து முஸ்ஸீமாக மாறிய பெரும் இசைக் கலைஞன்.
          இன்றும் பலர் அமைதி தேடி இங்கு எல்லா இடமெங்கினும் அமர்ந்திருக்கின்றார்கள். முதியவர்கள், மாணவர்கள்  புத்தகங்களோடு இங்கு ஓரமாய் ஆங்காங்கே அமர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றனர். அமைதியை வழங்கி ஆற்றலைப் பெருக்கும் இடமாகவே அந்த இடத்தை உணர்ந்தேன்.  தான்சேனின் குருவின் முகம்மது காஸ் சமாதி உள்ளே இருக்கின்றது அதற்கு தலையில் முக்காடோடு போய் அஞ்சலி செலுத்தி விட்டு அருகிலேயே அவரது குடும்பத்தார்களின் சமாதியும் இருப்பதை பார்த்துவிட்டு வருகின்றோம்.
       கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் சமாதிகள் தான், தான்சேனின் சீடர்கள் சமாதி, தான்சேனின் சமாதி தனியே இருக்கின்றது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  தான்சேன் 9 ரத்தினங்கள் அலங்கரித்த அக்பரின் அரசவையில் ஒரு ரத்தினம். அங்கே ஒரு புளியமரம் சமாதியினருகே இருக்கின்றது. நல்ல குரல் வளம் வேண்டுமென நினைப்போர் அதை பிரசாதமாக சுவைத்துச் செல்கின்றனர்.
        அந்த அமைதியை  அனுபவிக்க நாங்கள் கொஞ்சநேரம் அமர்ந்திருந்து விட்டு அடுத்த இடம் நோக்கி பயணிக்கின்றோம்
 
posted by Thilagabama m @ 11/03/2013 09:10:00 pm   0 comments
சூரியக் கோவில் ,குவாலியர்
சூரியக் கோவில்

          இது தற்போதைய கோவில். அங்கு அழகான மார்பில் சிலையில் சூரிய தேவன் கையில் சூலாயுதத்தோடு அமர்ந்திருந்தார். சிலையச் சுற்றி அழகான அமைதியான தோட்டம் பார்த்துவிட்டு வெளியேறுகின்றோம்.
posted by Thilagabama m @ 11/03/2013 10:05:00 am   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates