என் வீட்டு காளி தமிழ் கொஞ்சிடும் மொழியோடு அழகு துஞ்சிடும் விழியோடு பயம் அஞ்சிடும் நிலையோடு வீட்டில் காளியொருத்தி இருந்தாள் கணிணித் தமிழ் கையிலெடுத்து இணையத்தில் மடல் விடுத்து இலக்கியத்தின் சுவை எடுத்து வாசல் துளசிக்கு நீரூற்றினாள் அவள் பந்தாடினாள், புவி சுழன்றது அவள் விழி இமைத்தாள் சூரியன் உதித்தது கடைக்கண்ணசைவில் அமாவாசை நிலவு வளர்ந்தேகியது முத்தமிட்ட எச்சிலில் புவி பசுமை பூத்தது. அடுத்த வீட்டாரும் தெரியாமல் என்னுடன் வாழ்ந்தாள் காளி எதிர்த்த சனமும் பாராது என்னில் உலாவந்தாள் காளி அவர்களின் மனப்பிம்ப காளி இவளுருவில் இல்லாததால் அன்றைய செய்தித்தாள் அவர்கள் மனப் பிம்ப காளியாய் அவளை மாற்றிற்று. பாலியல் வழக்குகள் உடலை பொருளாக்கி வாங்கியவன் மறைந்து போக எச்சில்படிந்த பண்டங்களின் வரிசையாய் பெண்கள் குற்றவாளிக் கூண்டுகளில் மாதவி பின்னால் சென்றவனின் இரத்தத்தில் குளித்த மண்ணில் நின்று காளி இன்று என்னுருவில் மார் தட்டுகிறாள் காதலைக் கொன்றவர்களின் கழுத்தைச் சீவி மாலையாயிட்டு சொன்னாள் காளி அதைக் கவிதையில் சொல்கின்றேன் நான் ஆதிக்ககாரன் கை ஆயுதமாய் பெண்ணும் அவளூடான காதலும் அன்றும் இன்றும் என்றும் ஒரே வாசிப்பில் காதல் எழுதி எழுதி தேய்த்த வார்த்தை வாழ்ந்து வாழ்ந்து துளிர்த்த வார்த்தை இறப்பின் நிமிடமே உயிர்த்திடும் வார்த்தை பாடியும் ஆடியும் திரையில் வெளுத்த வார்த்தை கருவிலேயே திருவான பத்ம வியூக வார்த்தை பருவத்திற்கானதென்று பலரும் உருவத்திற்கானதென்று சிலரும் ஆணும் பெண்ணுக்குமானதென்று காதலர்களும் அண்டசராசரங்களுக்குமானதென்று மொத்தமும் எத்தனை வரை விலக்கனங்கள் அத்தனையும் வாழ்ந்து விட முடியா ஈசலாய் மானுட வாழ்வு பேரண்டமாய் காதலின் இருப்பு ஒரு இதயம் ஒரு காதலென்றாய் இறப்பில் இதயம் சாம்பலானபின்னும் பீனிக்ஸ் பறவையாய் காதல் பாலியல் சனநாயக சுதந்திரக் காதலென்றாய் பாவங்கள் கழுவி நீரை கறையாக்கியபின்னும் கங்கைக் கரை நீராய் காதல் குருடன் தடவலில் யானை சொல்லிய வார்த்தையில் காதல் சொல்லாத மௌனங்களின் சுவையில் இல்லாமல் இருக்கும் காதல் எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரிந்த மானுடம் உணர்தலில் கூட்டிவாசிக்க முடியாது இன்னுமும் பாலபாடத்தில் எல்லாவற்றும் பொருள் சொல்லும் அகராதி இன்றும் காதலுக்கு பொருள் சொல்லாது மௌனத்தில் விளக்கிக் கொண்டிருக்குது * சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் காதல் பக்திக்குள் ஒளிந்திருக்குது எண்ணத்தில் நினைக்க கைவந்த மாங்கனிக் காதல் பேயாகி தலைகீழாய் நடந்தது வானத்திலொருவன் பயணிக்க ஓடிய நதியில் தெரிந்த காதல் தனயன் கைவெட்டுப் பட்ட தலையானது கண்ணகிக் காதல் நெருப்பானது சீதைக் காதல் நெருப்பில் நீரானது பாஞ்சாலிக் காதல் மாம்பழக் காம்பில் பசையானது பெண்களின் காதலெல்லாம் காதலாக வாசிக்க முடியா மீசைக் கூட்டங்கள் நீருக்குள்ளிருந்து நீரின் காற்று திருடும் மீன் கூட்டமாய் வாழ்ந்து விட காளி கண் திறக்கிறாள் உடல் பண்டமானதன் காரணம் தேடித் தாண்டவமாடுகின்றாள் விழிதான் எழுத்து விழிதான் சொல் விழி வழி மொழிதான் காதல் நிமிர்ந்து பார்த்தவர் வாசிப்பர் புரிந்து நேசிப்பவர் தரிசிப்பர் விழியசைவோடு நடக்கின்றாள் ஜதியின் மிதியில் சிந்தனை தெறிக்க கால் தூக்கி தோடு மாட்ட முடியாது சிவனும் தோற்கிறான் பத்து மாதம் கருவாகி இரத்தமொடு உருவாகி எல்லோரும் போல மண்ணில் பிறந்தோம் நிலம் கீறி விதை விதைத்து நீர் விட்டு பயிர் வளர்த்து நெருப்பிட்டு உணவாக்கி மீண்டும் வயிற்றுக்குத் தந்தோம் என்னில் வளர்ந்தனர் குழந்தைகள் என்னில் வாழ்ந்தது கலாசாரம் என்னில் மகிழ்ந்தனர் மக்கள் என்னில் வரலாறாகினர் சமூகம் பூதங்கள் நானாக வேதங்கள் நீயாக என்று இரண்டாகப் பிளந்தோம் ஆள்பவன் நீயாக சாமரங்கள் நானாக படிநிலைக்கு மாறப் பழகினோம் தருமங்கள் நானாக சூதுகள் நீயாக என்று மறுபடியும் வெல்வோம் ஐவிரல்கள் பாதமாக இருகால்கள் மனிதனாக தனியே நடப்பதில்லை எதுவும் காதல் இருவருக்குமாக சுகங்கள் உனக்கு மட்டுமாக எப்போதிருந்து உணரப் பழகினோம் நீ என்பது உழைப்பாக நான் என்பது உடலாக வீட்டுக்குள் பழகினோம் வீடென்பது நாடாக நாடென்பது நாமாக நாமென்பது நான் நீயாக சுழலுது சக்கரங்கள் செக்கு மாடாக சக்கர சுழற்சியை வெட்டுகிறாள் என் காளி காதலைக் கொன்ற மூளைகள் மாலையாக அவள் கழுத்தில் என் விருப்பு உன் விருப்பு சொன்ன அடக்குமுறைச் சிவன் அவள் காலடியில் நெற்றிக்கண் நெருப்பால் பெண் எரித்த கூட்டம் அவள் சூலாயுதத்து கூர்மையில் குத்தப் படாமல் இருக்குது இன்னமும் காளி புவனேஸ்வரிகளின் நாவில் சூல் கொண்டு எழுதிடு காந்தி தலை தரித்த காகிதத்திற்கு உடல் விலை பேசிய புள்ளிகளை சந்தியில் நிறுத்திட பெரும் புள்ளிகளுக்கு கரும்புள்ளி இரத்தச்சொட்டில் வைக்க எல்லாவார்த்தையையும் உரத்துச் சொல்லிய சமூகம் காதலை மட்டும் காதோடு சொல்லிப் போகுது அடுத்தவர் காதுக்கு கேட்காத தைரியத்தில் சிலர் நாலைந்து காதோடு சொல்லிப் போய் விடுகின்றனர் வெட்கமின்றி தைரியமாய்உரத்துச் சொல்லப் படவேண்டிய உணர்வு காதல் ஏன் முக்காடிட்டு கொல்லைப் புற கதவு வழியாக இன்னமும் காதல் உணர்வு பூர்வமானது மனதோடு சம்பந்தப் பட்டது உடலோடு முடிச்சிட்ட கூட்டம் காளியென் கழுத்தில் மாலையாகிக் கிடக்கின்றனர் விழி பிதுங்கி ஊசிகள் நுழைய இடம் கொடுத்தால் கிழியலைத் தைக்காது விழியிமை தைத்து கண்கள் குருடாக்கி போடும் கூட்டம் ஊசிகளின் துளைகளையும் கூர்மையையும் தண்டித்து விடக் கோரும் கூர்மையில்லாவிட்டால் வெறும் குச்சி துளையிருந்தால் தான் ஊசி காதலிருப்பதுதான் பெண் அவள் உணர்வோடு தருவதை உடலோடு வாசிப்பவன் ஆண் காதலோடிருப்பவள் தான் பெண் அவள் காதலில் குழந்தைகள் வளர்வார்கள் காதலில் ஆண்கள் இதுவரை ஆண்டார்கள் இனியாவது வாழட்டும் காதலில் வாழ்க்கை மகிழ்வாகும் காதலில் புவி வெக்கை காணாமல் ஆவியாகி காண முடிந்த மேகமாகி துளித் துளியாய் நீராகி பிரபஞ்சம் நனைக்கும் அதில் புதுப் பூமி துளிர்க்கும் காதலைக் கொன்றவர்களின் கழுத்தைச் சீவிச் சொன்னாள் காளி காதலில் வாழ்பவர்களை என்மனதிலிட்டு கவிதையில் சொன்னேன் இதுவரை நான் |
நவீன மயமாதல், பெண்ணியம், புராணம் எல்லாம் கலந்த கவிதையாக எங்க வீட்டு காளி நல்லா எழுதி இருக்கீங்க திலகா