சூரியாள்

Wednesday, April 15, 2015
போலிக் கவலைக்கு பொய்க்கணக்கு
இவர்கள் இன்ன செய்கிறோமென்று அறியாதவர்கள்
போலிக் கவலைக்கு பொய்க்கணக்கு
திலகபாமா
10ம் தேதி ஏப்ரல் மாதம் பொன்னம்மாள் அவர்களை அழகம் பட்டியில் அவரது இல்லத்தில்  கக்கன் பற்றிய ஆவணப் படத்திற்காக சந்தித்துவிட்டு வந்த பிறகு அவர்கள் சட்டமன்றத்தில் என்னவெல்லாம் கேள்விகள் கேட்டு மக்களுக்கான விசயங்களை செய்து முடித்தார்கள் என்று சொல்லியதை நினைக்கையில் என் தொகுதி எம்.எல்.ஏ என்னவாக இருக்கின்றார். இதுவரை சட்டசபையில் என்ன என்ன தொகுதிக்காக கேட்டு வாங்கியிருக்கின்றார் என்ற கேள்விகள் முளைத்தன. இன்று அவர் வகிக்கும் பொறுப்பு செய்தி மற்றும் விளம்பரத்துறை. மக்களுக்காக வேலை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் செய்தி மற்றும் விளம்பரம் செய்வதற்காக பொறுப்பேற்று என்ன செய்தியை சொல்லிவிடப் போகின்றார். அல்லது அரசின் செய்தி மற்றும் விளம்பரத்திற்கான வேலைகளைச் செய்யவா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைச் செய்ய ஏதாவதொரு அதிகாரிகளை அரசு நியமித்துக் கொண்டால் போதாதா. தொகுதிக்கான பணிகளைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அமைச்சர் பொறுப்பு ஏற்கும் போதும் அரசு நிர்வாகம் மக்களுக்காக பயன்படும் பாலமாக இருப்பாரா அல்லது அரசின் விளம்பரத்துறை நிர்வாக வேலைகளைக் கவனிக்கவா.
யாரும் கேள்வி கேட்கக் கூடத் தோன்றாமல் புதிது புதிதாய் துறைகளை அறிமுகப்படுத்தி பதவிகள் வழங்கி கட்சியாளர்களை சந்தோசப்படுத்த நினைக்கின்ற அரசியல் கட்சிகள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தொடர்ந்து மக்களுக்கு தேவையான பணிகளுக்கு துறை அமைப்பதை விடுத்து ஏதாவது ஒரு துறை அமைத்தால் போதும் என முடிவுக்கு வந்து விட்டனரோ.
காமராசரிடம் ஒரு முறை சிலர் போய் கேட்டிருக்கின்றார் அரசு இதுவரை செய்த திட்டங்களை  மக்களுக்கு சொல்லனும் அதற்கு ஒரு படம் எடுக்கலாம் என்று
எவ்வளவு செலவாகும் என்று கேட்ட காமராசர் அவர்கள் செலவுத் தொகையைச் சொன்னதும் சொன்னாராம் இவ்வளவு தொகை இருந்தால் இன்னும் பல பள்ளிக் கூடங்களை கட்டி விடுவேன் அரசு என்ன செய்தது என்பது மக்களுக்குத் தெரியும் என்றாராம்.
ஆனால் இன்றோ மந்திரிகள் மண்சோறு சாப்பிடுவதை எப்படி வழிகாட்டும் மக்களின் முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்வது என்றே கவலைப்பட்ட படியும், தீர்ப்பு வருவதற்குள் இன்னும் புதிது புதிதாய் எத்தனை வேண்டுதல்களை செய்ய வேண்டி வருமோ என்று கலங்கியபடியும் இருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி நிர்வாகிகள், மந்திரிகள், சாதாரண தொண்டன் என்று எந்த வேறுபாடும் இன்றி போலிக் கவலைக்கு பொய்க்கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படி நடந்தவற்றில் ஒரு நல்ல விசயம் என்ன தெரியுமா? முன்பெல்லாம் கடைசி தொண்டன் மொட்டைபோடுவான், அலகு குத்துவான். இன்று வேறுபாடில்லாமல் மந்திரிகள் 1008 தேங்காய் உடைக்கிறார்கள், மண்சோறு சாப்பிடுவதாய் படம் பிடித்துக் கொள்கிறார்கள்.
இனி வருகின்ற பங்குனி, சித்திரை, வைகாசி திருவிழாக்கலெல்லாம் வழிகாட்டு மக்களின் முதல்வருக்கான வேண்டுதலாய் மாறி தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும்.
நாமும் சிப்ஸ் கொறித்தபடி பார்த்து சிரித்துக் கொள்வோம்.
மக்களும் நாம் எதற்கு இவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினோம் என்பதை மறந்து எங்களது சட்டமன்ற உறுப்பினர் மந்திரியானதற்கு மகிழ்ந்து ஏதாவது எச்சில் கையை உதரிவிட மாட்டார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அரசு அதிகாரிகளாய் மக்கள் தேர்ந்தெடுத்த மந்திரிகள் மாறிப்போனதை கேள்வி கேட்க மறந்தும் போய் விட்டோம் 
பாவம் மக்கள் முதல்  மந்திரிகள் வரை  இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்.


posted by Thilagabama M @ 4/15/2015 11:35:00 pm   0 comments
Thursday, October 30, 2014
ஆசிரியர்கள் 1
                      ஆசிரியர்கள் 
ஞானாம்பாள்: 
இன்னமும், கட்டையால் சூழ்ந்த கல் சிலேட்டையும் அதன் கடுமையான முனையால் வாங்கிய அடியையும்  தலையால் மறக்க முடியாது. வலிக்கவே செய்கின்றது. அந்த வீட்டின் முன் 6அடிநீளமுள்ள  வராண்டா அதில் எப்பவும் கிடக்கின்ற மரப் பெஞ்ச் இருள் சூழ்ந்து இருக்கக் கூடிய சமையல் கட்டும் ஒரு மச்சும், கொள்ளை வாசலைக் கொண்டிருந்த நடு ஹால் பழைய வாசம் வீசக் கூடிய சூழல், வராண்டாவில் இருந்த பெஞ்சில் உடையாத வெள்ளை, மற்றும் பல வர்ண சாக்பீஸ்கள், கரும் புள்ளிகளையுடைய பிரம்புக் குச்சி, தென்னை ஓலைகளாலானா விசிறி,  இவற்றோடு காலையில் ஞானம்மாள் அவர்களோடு தனிமையில் இருந்த அறை மாலையானால் மாணவ மாணவிகளின் குரல்களால் நிரம்பி விடும். 
      இலேசான கூனுடன் மூக்கில் நழுவிய கண்ணாடியின் வழியாக உற்றுப்பார்க்கும் கண்கள், குட்டையான உருவம், மெலிசான வெந்நிற தேகம், தேகம் தாண்டி வலிமை உணரவைக்கும் குரல், தென்னை விசிறியின் காம்பைப்பிடித்து விசிறாது மேலே பிடித்து விசிறும் பாங்கு.  70 வயது இருக்கும். வயதை யோசிக்காத பருவம் எனது அப்பொழுது,
    குறிப்பிடப்பட்ட சிலரின் பிள்ளைகள் மட்டுமே இவரது வகுப்புகளில் பங்கு எடுக்க முடியும். என் பிள்ளையை யாரும் அடிக்கக் கூடாது என்பவர்கள் இந்த  டியூசனுக்கு வர முடியாது.  பள்ளிக்கூடத்தில்  எனது  சிலேட்டை  பார்த்தவுடன்  யார் வேண்டுமானாலும்  சொல்லி விடுவார்கள் இது  ஞானாம்மாள்  டீச்சரிடம்  படிக்கின்ற  பிள்ளையோடது என்று.
       ஏனோதானோ என்று இல்லாது முரட்டுக்கட்டை விளிம்புகளுடன் கூடிய எடை கூட இருக்கக் கூடிய சிலேட்டை மட்டுமே அனுமதிப்பார். ஒரு பக்கத்தில் முழுக்க படுக்கைவசத்தில் கோடு போட்டிருக்க வேண்டும். அந்த கோடுகளுக்கு இடையேயான இடைவெளி இவ்வளவு என்பது கூட கறாராக இருப்பார். பின் பக்கத்தில் எண்களை எழுதுவதற்காக நெட்டு வசத்தில் கோடுகள் இருக்க வேண்டும். கல் சிலேட்டில் ஆணி வைத்து கோடு போட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளிலும் வீட்டிலிருந்தே சிலேட்டை கழுவி துடைத்து எடுத்துப் போயிருக்க வேண்டும். முந்தின நாள் எழுதிப் பார்த்த பாடங்கள் அறிந்தும் அறியாமலும் சிலேட்டில் இருக்குமானால் அன்று நான் போட்டுப் போயிருந்த நல்ல சட்டை பாழாகிப் போய் விடும். 
   என்னைக் கோபத்தோடு பார்க்கின்ற போது, பக்கத்தில் இழுத்து வயிற்றுப் பகுதியில் கை வைத்து கிள்ளுவார். அவரிடம் படித்துக் கொண்டிருந்த காலங்களில் அடி வயிறு முழுக்க பிறை பிறையாக காயங்கள் இருந்து கொண்டே இருந்தன. இன்றைக்கும் ஞாபகம் வருகின்றது தொப்புளைச் சுற்றி பிறை வடிவத்தில் நிறைய தழும்புகள், அவ்வளவும் விரல் நகங்களின் பதிதல்கள். நினைத்துப் பார்க்கவே அச்சமூட்டும். ஆனால் இதற்கும் அப்பால் ஒரு அன்பும், கரிசனமும் அந்த ஆசிரியையின் பேரில் இருக்கவே செய்தது. 
சிலேட்டில் எழுதிய பாடங்களுக்கு கலர் சாக்பீஸில் அவர் வழங்குகின்ற கௌரவம் இன்னுமும் இனிக்கிறது. அச்சடித்தாற்போல் கையெழுத்து, அன்றைக்கு பாடங்களை அன்றைக்கே  படித்து எழுதிப் பார்க்க வைத்து விடுவது, கேள்வி பதில்களை மட்டுமல்லாது  பாடப் புத்தகங்களை  வாசிக்க வைப்பது இவையெல்லாம் ஞானாம்பாள் ஆசிரியையின் சிறப்பம்சங்கள். அதற்கு நாங்கள் கொடுக்கின்ற விலை பிரம்படி, விசிறிக் காம்பால் அடி, இப்படி பலதாக இருந்தது.
  அந்த ஊர் பெரிய மனிதர்களின் convent  குழந்தைகள் விடுமுறையில் தமிழ் படிக்க அவரிடம் வந்து சேர்வார்கள். வாயிலும் மனதிலும் வராத தமிழ் அவர்கள் எழுத்தில் தறிக்கெட்டு தாண்டவமாட கால்களுக்குள் இட்டு வெளியேறமுடியாமல் அடைத்துக் கொண்டு அவர்விடுகின்ற அடி பார்ப்பவரை கண்கலங்க வைக்கும். இன்றைக்கெல்லாம் அப்படி நடந்தால் கேஸை போட்டு விடுவார்கள். பெற்றவர்கள் அவ்வளவு அடிக்கப்புறமும் ஊர் பெரிய மனிதர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது டியூசனுக்குச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கெஞ்சினார்கள் என்றால் இன்று யாரும் நம்பமாட்டார்கள்.

என் கையெழுத்து அவர் பெயரை பலரை உச்சரிக்க வைக்கும். பள்ளிக்கூட ஆசிரியர்கள் அனைவரும் அவருடைய மாணவி என்றால் ஒரு மரியாதை காண்பிக்கத் தொடங்கி விடுவார்கள்.
கருங்கல் குச்சி இல்லாமலவர் வேறு குச்சியை வைத்து எழுத அனுமதிக்கவே மாட்டார். தென்னை ஓலை விசிறி எப்பவும் அவர் கைகளில் இருக்கும். சில நேரம் விசிற சில நேரம் அடிக்க, விசிறிக் காம்பில் அடிபட்டு சிவப்பு வரித்தடங்களோடு வீடு வந்திருக்கிறேன் பலநேரம்.
       ஞானாம்மாள்  டீச்சருக்கும்  தண்ணிகாட்ட ஒருவன் வந்தான். என் தம்பி, வந்தவுடன் டீச்சருக்கு கண்டிசன் போடுவான். என்ன என்ன பாடம் படிக்கனும் எழுதனும்னு சொல்லுங்க என்று.
     அவரும் கணக்கு, தமிழ், ஆங்கிலம், அறிவியல், புவியியல், வரலாறு என்று எல்லா பாடத்திலும் அன்றைக்கு நடத்தினதை எடுத்து படித்து எழுதிக் காட்ட வேண்டும் என்று சொல்லி முடிக்கும் முன்னரே தயாராகிவிடுவான். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமையே எழுதி முடித்து விட, இன்னும் இரண்டு கணக்கு செய்து காண்பிக்கலாமே என்று டீச்சர் கேட்க இல்லை , நீங்கள் சொன்னதை நான் செய்திட்டேன் அவ்வளவுதான் என்று கறாராக சொல்லிவிடுவான்.


ஞானம்மாள் டீச்சர் அவருடைய உறவுகள் நட்புகள் என்று யாரையுமே பார்த்ததில்லை. அடிக்கடி அவர் வாயில் நழுவி வந்து கொண்டே இருக்கும் பெயர் சாந்தாக்கா. அவர் நம்பும் ஒரே நபர் அவர்தான். சாதமா, புளிக்காத தயிரா, ஊறுகாயா எது வேண்டுமானாலும் எங்கள் கால்கள் நடக்கும் சாந்தாக்கா வீட்டிற்கு. 
பக்கத்து வீட்டார்களுடன் ஒன்ற முடியாது . டீச்சர் எப்பவும் அவர்கள் வெறுப்போடு தன்னைப் பார்ப்பதாய் சொல்லிக் கொண்டே இருப்பார், சூனியம், செய்வினை வைப்பது போன்றவற்றில் நிறைய நம்பிக்கை  அவருக்கு இருந்தது.
     சுவரெல்லாம் கருப்பு மை எப்பவும் தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அதைத் தெளித்தவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றும் கூறுவார். அப்படித் தெளித்திருப்பதால்  தன் வாய் முழுக்க  புண்ணாகி விட்டதாகவும், சாப்பிட முடியவில்லை எனவும் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய இருண்ட மச்சு என்னை எப்பவும் பயமுறுத்தும் ஒன்றாகவே இருந்தது. தனிமைக்கு வாசனை என்று ஒன்று இருந்தால் அது இப்படியானதாகத்தான் இருக்க வேண்டும்
   ஐந்தாம் வகுப்போடு அவர்களிடம் படிப்பது நின்று போனது. நான் கல்லூரி படித்த காலத்தில் எப்பவாவது  விரும்பிப் போய் அவரைப் பார்த்து வருவதாகவே எங்கள் சந்திப்பு மாறிப் போனது. நான் கல்லூரி படித்த காலத்தில் எனக்கு அம்மா, அப்பா அனுப்பிய கடிதமொன்று அந்த ஆசிரியை இறந்து போன தகவலோடும் வந்தது. 

    காலம் எங்களிடமிருந்து அவர்களை அடித்துக் கொண்டு போனது. தொலைந்து போன கல்சிலேட்டும் கூர் தீட்டிய கல்குச்சியும் நினைவுக்கு வருகின்ற போதெல்லாம் அந்த வயதான ஆசிரியையின் அன்றைய மனநிலை இன்றைக்குத்தான் கொஞ்சம் புரிகின்ற மாதிரித் தெரிகின்றது.  தாயும் தந்தையுமற்ற தம்பி தங்கைகளுக்காக  திருமணத்தைத் தள்ளிப் போட்டு போட்டு பிறகு அது வாய்க்காமல் போன காலம் அவரது. தந்தையின் சொத்துக்களை உறவினர்கள் எடுத்துக் கொண்டதால் எழுந்த பொருளாதாரத் தனிமை, மனிதர்களின் மேல் விழுந்த அவ நம்பிக்கை, உடன் பிறப்புகளுக்காக வாழ்ந்திருந்த போதும், என்றுமே நான் அவரோடு இருந்திருந்த காலங்களில் யாருமே அவரை வந்து பார்த்ததில்லை எவ்வளவு தவித்திருக்கும் அந்த முதுமையின் தனிமை அதிலும் பெண்மையின் தனிமை, எல்லோரின் பெயரிலும் ஒரு அவ நம்பிக்கை வைத்துக் கொண்டு நம்பிகையற்ற மனநிலையில் பகிர்ந்து கொள்ள யாரும் அற்ற தனிமையில் ஒரு பெண்னின் வாழ்வு என்பது எத்தகைய வன்முறை என்பது இப்பொழுது வலியோடு புரிகிறது.

posted by Thilagabama M @ 10/30/2014 07:35:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates