சூரியாள்

Monday, April 28, 2014
நாடகம் என்ன செய்யும்?-திலகபாமா
                      நாடகம் என்ன செய்யும்
.முருகபூபதியின் குகைமரவாசிகள் நாடகம் நடந்து முடிந்து விட்டது. அருமையாக, மிகச் சரியாக நடந்த ஏற்பாட்டினால். அரங்கு நிறைந்த பார்வையாளர்கள், நாடகம் மிக முக்கிய அசைவை செய்து விட்டது என்று எண்ண வைத்து விட்டார்கள்.   மிகச் சிறந்த ஏற்பாட்டாளராக அறியப்படுவதன் மூலம் படைப்பாளியாக இருந்த ஒரு பக்கம்  மறுதலிக்கப்படுவதாக உணர்ந்த என் பார்வையிலிருந்து நாடகம் என்ன செய்யும் அல்லது செய்தது என்று யோசித்துப் பார்க்கின்றேன்.
எனக்கான  நவீன நாடக அறிமுகம்நடுக்கடலில்என்ற ராஜ்குமாரின் நாடக நிகழ்வின் மூலம் தொடங்கியது. அப்பொழுது இப்படியான நாடகத்தை சிவகாசிக்கு அறிமுகம் செய்துவிட வேண்டுமென்று உருவாகிய தீராத ஆசை முருகபூபதியின் சூர்ப்பணங்குபார்த்த பிறகு பேராசையாக உலவத் தொடங்கியது. பார்த்த நபர்களிடமெல்லாம் நாடகம் குறித்து பேசத் தொடங்கினேன். என் வார்த்தைகள் என் நாடக அனுபவத்தை யாருக்கும் கடத்தவில்லை என்பதை ஒவ்வொரு உரையாடலின் போதும் புரிந்து கொண்டேன். சந்தர்ப்பம் வாய்க்கவில்லையென்றால் எல்லாமே புரிதலுக்கு அப்பாற்பட்டது தான் என்பது தொடர்ந்து உணர்ந்து வருகின்ற விசயமாக இருக்க, நினைப்பு சந்தர்ப்பத்திற்கான விதையாகும் என்று காத்திருந்தேன்.
காளீஸ்வரி கல்லூரி தாளாளரை சந்தித்து பல  இலக்கிய நிகழ்வுகளை தடையின்றி  சுதந்திரமாக நடத்த அனுமதித்த அவரிடம் இந்நாடகம் மாணவர்களுக்கு தரப்பட வேண்டிய அனுபவம் என்று சொன்னேன்.
படித்து பொறுப்பான பதவியில் அமராமல் நாடக கலைஞர்களாக நாடோடியாக அலைவதை வெறுத்த அவர் மவுனமாக நிராகரித்தார்.
கலைகளை அனுபவிக்கும் படி உத்தரவு போட முடியாது விலகிக் கொண்டேன்.
 நான் தலைவராக பொறுப்பேற்காத சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் , சிவகாசி நகர்மன்றத் தலைவர் என்று பலரையும் பார்த்து கேட்டுவிட்டேன். செலவு அதிகமாகும் என்று எல்லாரும் அமைதியானார்கள்.
இதற்கிடையில் சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் தலைவராக பொறுப்பேற்றேன். குழந்தைகளுக்கிடையேயான போட்டிகளாக கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர வேறு நடத்த முடியவில்லை. இத்தகைய நிகழ்ச்சிக்கு மட்டுமே தற்சமயம் பழகிய ஆர்ட்ஸ் கிளப்பிற்கான மனோநிலையை ஒரே நாளில் மாற்றிவிட முடியவில்லை.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலத்தில் உறைந்து போய் விட்ட நாடக ஆசையை உயிர்ப்பிக்க  காலம் தன்னை தகவமைத்துக் கொண்டது. இன்னும் சந்திப்பு தொடங்கியது. முருகபூபதியும் நானும் குற்றாலம் சார் கண்களுக்குள் இருந்த நாடக ஆசையை வாசித்து விட்டோம்.
அன்றைய நாடகத்திற்கும், இன்றைய நாடகத்துக்குமான இடைவெளியில் இறுகிப் போயிருந்தது திறப்பிடம்.
அவராகவே ஒருநாள் திறந்தார். ”முருகபூபதியை பயன்படுத்திடனும்யா. ஆனா வெட்டவெளில நாடகம் போடனும்னா மழை இல்லாம இருக்கனும்.”
ஜனவரில போடலாமா?
என்னைப் பொறுத்தவரை இந்த ஆண்டு என் பையன் படிப்பு செலவு காரணமாக இலக்கிய கலை சார்ந்து செலவழிக்க முடியாது என்று முடிவெடுத்திருந்த போதும், நாடகம் போடலாம் என்ற குற்றாலம் ஆர்டிஸ்டின் எண்ணம் இன்னொரு முறை கிடைக்குமோ என்ற எண்ணத்தில் சரி சரி என்று சொல்லி வைத்தேன்.
எல்லாம் சரியாக நடந்து ஜனவரி 24ம் தேதி நாடகம் என தீர்மானமாகியது. சிறப்பு விருந்தினராக திரைத்துறையைச் சேர்ந்த ஒரு நபரை அழைக்க வேண்டும் என்ற முடிவு செய்தவுடன் பலருடன் பேசி இறுதியில் சுமதி( தமிழச்சி) ரோகிணியிடம்  பேசி வருவதற்கு சம்மதம் தெரிவித்தார்.
விளம்பரங்களை லட்சுமிகாந்தன் பொறுப்பெடுத்துக் கொண்டார். நாடகம் நிகழ்ந்து  நிகழ்த்திய விடயங்களுக்கு இனி வரலாம்.
நாடக காட்சியின் படங்கள் போட்ட விளம்பர பேனர்கள் பலரை ஈர்த்திருந்தன.
காலையில் நாடகத்திற்கான நிலம் தயாராக இருந்திருக்கும் என நம்பி வந்த நாடக குழுவினருக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.
குற்றாலம் அண்ணாச்சி ஆர்ட்ஸ் நிலத்தை ஒதுங்க வைக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார் ஆனால் அவரது வீட்டில் நிகழ்ந்த துக்க சம்பவத்தாலும், அரங்கில் நாடக அமைத்துப் பழகிய அவருக்கு இந்த நிலத்தின் முக்கியத்துவம் புரிபடாததாலும் நிலத்தை சீரமைப்பதில் நாடக கலைஞர்கள் நினைத்த படி நடைபெறவில்லை. நாடக கதாபாத்திரங்களே தங்களுக்கான நிலத்தை சமன் செய்தனர். புதர்களுக்கிடை இருந்த மயில் முட்டைகள் அரங்க அமைப்பை மாற்றி திட்டமிடவைத்தது. முட்டைகளுக்குள்ளிலிருந்த குஞ்சுகள் நாடக உணர்வுகளை உறிஞ்சிக் கொண்டிருக்க பத்திரப்படுத்தப்பட்டன. எங்களது காலடிகளை மயில் கூட்டிலிருந்து தூர வைத்துக் கொண்டோம்.
நிலத்தை தயாராக்கும் முன்னர் ஒரு வாரத்திற்கு முன் கல்லூரி மாணவ மாணவிகளை சந்தித்து நாடகம் குறித்த அறிமுகத்தையும் ஆவலையும் தந்து விட வேண்டும் என விரும்பினேன். முருகபூபதியும் இரு சிவகாசி கல்லூரிகளும் ஒத்துழைத்தன.
முதலில்போன கல்லூரியில் நாடகத் துறை இருந்தது. நாடக குழுவினர் கல்லூரிக்கென்றே தனியாக உருவாக்கப்பட்டிருந்தனர் அவர்களிடம் தன் நாடகம் குறித்தும் நாடக முயற்சி குறித்தும் பேசுவது அவ்வளவு சிரமமானதாக இல்லை. சவால் இல்லாத இடங்களில் நம் திறமையும் குறைவாகவே வெளிப்படுகின்றது. மிக நல்ல உரை ஒன்றை தந்தார் முருகபூபதி. மாணவ மாணவிகள் வருகையை உறுதி செய்து கலைந்து சென்றனர்.
அடுத்து போன கல்லூரி வாசல் கதவுகளையும் ஜன்னல்களையும் பாதுகாப்பு காரணம் சொல்லி இறுக மூடிக் கொண்டு வலைகளின் வழியே சுவாசிக்கும் கல்லூரி.
இங்கு பாடம் தவிர கலை குறித்தான அனுபவமும், வாசிப்பும் குறைவு என்பதால் முருகபூபதியின் பேச்சில் முழுத்திறனும் வெளிப்பட்டு நாடகமென்றால் என்னவென்றே அறிந்திராத பெண்கள் உரையாடலில் கலந்து கொண்டனர்.
ஆனால் நாடக அனுபவத்திற்கு ஆசிரியைகளும், மாணவிகளும் தாங்களாகவே ஜன்னல்களை திறந்து கொண்டு வருவதற்கு எத்தனிக்கவில்லை என்பது வருத்தம்தான்.
 இந்த நாடக நிலம் நாடகத்திற்கும் இதுவரை இலக்கிய, கலை அனுபவமில்லாத, வங்கி மேலாளர்களையும், வேறு வேறு துறை சார்ந்த சாராத மாணவ மாணவிகள் எல்லரையும் ஈர்த்திருந்தது.
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லாரும் உறைந்து போயிருந்தனர். நாடகத்தின் புழுதி நெடி நாளெல்லாம் படிந்த முகங்கள் வெளிச்சங்களை வெறித்துப்பார்த்தபடி இருந்தனர். சொற்கள் சொல்வதற்கில்லை.
உணர்த்துவதற்கு என்பதை உணர்த்திக் கொண்டிருந்தன நாடக மொழிகள். சாலையில் நாடகத்திற்கான விளக்குகளை தயார் செய்து கொண்டிருந்த போது கட்டியிருந்த மூங்கில் இரண்டாய் உடைந்து போனது. அவசரத்திற்கு பக்கத்திலிருந்த மரக்கடையில் போய் காசு கொடுத்து வாங்கிக் கட்டினர்.
நாடகம் முடிந்து எல்லா விளக்குகளும் எரியத் தொடங்கிய போது ஆண்களை துளைத்தபடி ஒருவர் வந்தார். நான் உங்ககிட்ட காசு வாங்கியிருக்கக்கூடாது என்று சொன்னபடி மூங்கில் கம்புக்கு வாங்கிய காசைத் திருப்பித் தந்து விட்டுப் போனார்.
நாடகம் முடிய எதிர்பார்த்ததை விட 1 மணி நேரம் கூடுதலாக ஆகிவிட்டிருந்தது. கூட்டம் கலைந்து விடுமோ என்ற அச்சம் அதனூடாக முளைத்துக் கொண்டே இருக்க நன்றி அறிவித்ததுக்குப் பிறகும் இன்னும் நாடகம் குறித்து இன்னமும் ஏதேனும் பேசிவிட மாட்டார்களா என தரையில் இருந்து ஏக்கமோடு அண்ணாந்து பார்த்தபடி இருந்தனர் பார்வையாளர்கள்.
நிகழ்ச்சி முடிந்து அந்த அனுபவங்களோடு இரவின் குளிரையும் ஒவ்வொருவரும் குடித்துச் சென்றனர்.
அடுத்த நாள் இரவு அமிர்தம் சூர்யாவை இரயில் நிலையத்திற்கு வழியனுப்பச் சென்றிருந்தேன்.
இருவரும் பேசிக் கொண்டிருந்த போது இடை குறுக்கிட்டார் ஒருவர்.
என் பெயர் …… நான் ஒரு வங்கியில் மேலாளராக பணி செய்கின்றேன். நேற்று நாடகத்திற்கு நானும் வந்திருந்தேன்.
 அப்படியா, உங்களுக்கு எப்படி தகவல் தெரிந்தது. நீங்கள் வைத்திருந்த விளம்பர பலகை வித்தியாசமாக இருந்தது. எனவே நானும் என்னுடன் பணிபுரியும் சிலருமாக சேர்ந்து வந்திருந்தோம்.
நாடகம் ரொம்பப் பிடித்திருந்தது. நாடகம் என்றால் இப்படியெல்லாம் இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எல்லோருடைய நடிப்பும் பிரமாதம்.
ஒரு சில காட்சிகள் புரியவில்லை என்றாலும் எங்களை ஈர்த்தது. நினைவில் ஊறிக் கிடக்கின்றது. ஆனால் சில காட்சிகள் ஏன் புரியவில்லை என்று யோசிக்கின்றோம். இயக்குநரை சந்திக்க முடியுமா என்று பேசிக் கொண்டே இருந்தார். முருகபூபதியின் தொடர்பு எண்ணைக் கொடுத்து, அவசியம் சந்தியுங்கள் பார்வையாளர்களின் அனுபவம் இயக்குநருக்கு மிக முக்கியமானது என்றோம்.
மறுநாளே இயக்குநரை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து பேசியிருக்கின்றார்.
நான் பத்திரிக்கை வைக்காத நபர் ஒருவர் இலக்கியம், கலை வாசிப்பு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு தொழிலும் நெருக்கடியுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நபர் தற்செயலாக விளம்பர பலகை பார்த்துவிட்டு, ”என்னதான் நடக்கிறதுஎன்று வந்தேன். வந்த என்னை நாடகம் கட்டிப்போட்டி விட்டது.” நாடகத்தை முழுக்க தனது I phone இல் பதிவு செய்து வைத்துவிட்டு தான் எங்கெல்லாம் காத்திருக்க வேண்டி வருகின்றதோ அங்கெல்லாம் எடுத்து பார்த்துக் கொண்டிருப்பதாக நேரில் வந்து பாராட்டிச் சொல்லி விட்டுப் போனார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடுத்து என்ன காட்சி இருக்கும் என்ற தவிப்பிலும் நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். இரண்டு வாரம் கழித்து பார்த்தால் கூட பழைய கதை புரிந்து விடும் என்ற படியே பார்த்து பழகிய ஜனம் கண்ணைச் சிமிட்டினால் கூட காட்சி பார்க்க முடியாமல் போய்விடும் என்றபடி உறைந்து போய் கண்ணைச் சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தது நல்ல அனுபவம்.
நாடகம் முடிந்து பதினைந்து நாள் கழித்து இரவில் போன் வந்தது. பேராசிரியை ஒருவர் பேசினார்நாடகம் இப்படியான உணர்வுபூர்வான விசயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார். இசை இந்நாடகத்தின் உயிராயிருந்ததை எங்களிடம் சொன்னார்.
தான் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த நபர் இன்னொரு நபருக்கு தொலைபேசியிருக்கின்றார்.
டேய் இங்க ஒரு அற்புதமான நாடகம் நடக்குது இது  மாதிரி இன்னொன்று பார்க்க முடியாது. வித்தியாசமான நாடகம் என்று சொல்ல எதிர்த்திருந்தவர் வரமுடியாமையின் வருத்தத்தைச் சொல்லியிருக்க வேண்டும். தொடர்ந்து தொலைபேசி நிறுத்தப்படாமல் அவர் கையிலேயே வைத்திருக்க தொலைபேசியின் அடுத்த முனையில் இருந்தவர் ஒலிவடிவமாகவே நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்தாராம் என்று நாடகத்தை வெவ்வேறு தினுசில் ரசித்தார்கள் பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டு, நாடகம் முடிந்ததும் நாடகக் கலைஞர்களுக்கு நான் என்னுடைய பங்களிப்பாக மேடையில் ஏதாவது பணம் தரவேண்டுமென விரும்பினேன். அந்த நேரம் கையில் காசு இல்லை. எப்பொழுது எப்படி தரலாம் என்று தெரியவில்லை என்றார்.
ஒன்றும் பிரச்சனையில்லை, என்னிடம் கொடுங்கள் முருகபூபதியிடம் கொடுத்துவிட்டு தங்களையும் பேசச் சொல்கின்றேன் என்றேன்.
 15 ஆண்டுகளுக்கு பிறகு சிவகாசி ஆர்ட்ஸ்கிளப் ஏற்பாடு செய்த மணல்மகுடி நாடக நிலம் வழங்கிய  குகைமரவாசிகள் நாடகம் சிவகாசி நாடக ரசிகர்களிடையே இனியும் நாடகம் வருமா என்ற ஏக்கத்தையும் இதுவரை நாடகம் பார்த்திராதவர்க்கு ஒரு புது நாடக அனுபவத்தையும் தந்து போயிருக்கின்றது என்பதே உண்மை.
posted by Thilagabama M @ 4/28/2014 01:24:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates