சூரியாள்

Thursday, June 25, 2009
இரு சமன்கள்
வீழ்த்துவதற்காகவே
பயிற்றுவிக்கப் பட்ட
அடிமைத் தனங்களை
நேசத்தின் காரணமிட்டுக் கூட
உலாவர விடாத
வானமொன்றிருக்க
வெட்ட வெளியின்று
உணர்ந்திருந்த இடத்தில்
நீர் மேகமென உருமாறிக் கிடக்கு
நிரம்பியிருப்பதை உன் மனம்
நிராகரிக்கும் படிக்கு

நான்கு விரற்கடை
குட்டையானவளிடமே
வாழ்ந்து பழக்கப் படுத்தப் பட்ட
கூண்டுப் புலியாய் நீ

இரு சமன்கள்
சுகமான பயணமென

வாசிக்க முடியா
புது மொழி என்னிடமிருக்க
பழகிய மொழிதலூடாகவே
அர்த்தப் படுத்திக் கொள்கின்றாய்
“ காணவில்லை காதலென்று”

நன்றி:www.thadagam.com
posted by Thilagabama M @ 6/25/2009 10:26:00 pm   0 comments
Tuesday, June 23, 2009
திசைகளின் தரிசனம்திசைகளின் தரிசனம்

பயணக் கட்டுரை
திலகபாமா
காவ்யா வெளியீடு
16, இரண்டாம் குறுக்குத் தெரு
டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம்
சென்னை-600 024.
போன்: 044-23726882
விலை ரூ.90/-


இலக்கியத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருப்பவர் திலகபாமா. கவிதை, சிறுகதை, கட்டுரை என்னும் நிலைகளைக் கடந்து இயங்கி வருபவர். தற்போது தன் பயணங்களை வைத்து கட்டுரையாக்கித் தந்துள்ள தொகுப்பு 'திசைகளின் தரிசனம்'.

இலங்கை, இலண்டன், டார்ஜிலிங், துருக்கி, பாலித்தீவு ஆகிய வெளிநாடுகளில் கவிஞர் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை உள்ளார்ந்த உணர்வுடன் கூறியுள்ளார். 2005ல் முதல் முறையும் 2007ல் இரண்டாம் முறையும் இலங்கை சென்றுள்ளார். இராவணன் பற்றிய விவரங்களுக்காக மீண்டும் இலங்கை வர வேண்டும் என்னும் ஆர்வம் எழுந்தாலும் "இப்பொழுது இருக்கிற கலவரச் சூழலில் இன்னொரு முறை இலங்கை வருவது சாத்தியமா?'' என்னும் கட்டுரையாளரின் அச்சம் குறிப்பிடத்தக்கது. இரண்டு முறையும் இலக்கியம் சார்ந்தே பயணித்துள்ளார். பல இடங்களில், பல தலைப்புகளில் பேசியுள்ளார். வரவேற்பையும் பெற்றுள்ளார். விவாதங்களையும் எதிர்கொண்டுள்ளார்.

இலண்டன் பயணம் பற்றியது இரண்டாம் கட்டுரை. இந்தக் கட்டுரைகள் வடக்கு வாசல் இதழில் தொடராக வெளிவந்தவை. பெண் தன்னைக் கண்டறிய இவ்வாறான பயணங்கள் அவசியம் என்று ஒரு போராட்டத்துக்குப் பின்னே வெற்றி பெற்றேபயணத்தைத் தொடங்கியுள்ளார். இக்கட்டுரை முழுக்க பெண்ணியமே பேசியுள்ளார். பெண் முன்னேறும் போது ஆணே காரணம் என்பவர்கள் ஆண் முன்னேறும் போது அதற்குக் காரணமாயிருந்தாலும் அது அப்பெண்ணின் கடமை என்போரைச் சாடியுள்ளார். பெண் பாலியல் தொழிலைக் கட்டுரையாளர் ஏற்கவில்லை. முத்துலட்சுமி ரெட்டியை நினைவுகூர்ந்து அவர் வழியில் செல்பபவராக தன்னை நிறுத்திக் காட்டியுள்ளார். இலண்டன் பயணத்தைப் போல இக்கட்டுரையும் நீண்டதாக உள்ளது.

மூன்றாவதாக கட்டுரையாளர் பயணித்த இடம் 'டார்ஜிலிங்'. இது இலக்கியம் சார்ந்ததாக அல்ல. இன்பச் சுற்றுலாவாக உள்ளது. டார்ஜிலிங் பயணத்தில் தான் கண்டு களித்ததை கட்டுரையாகப் படம் பிடித்து விருந்தாக்கித் தந்துள்ளார். இடையிடையே கவிதையாகவும் வடித்து ரசிக்கச் செய்துள்ளார்.

தீண்டித் தழுவி
அணைத்துக் கொள்ளப்
பார்க்கும் குளிர்
மறுத்தோடும் உடல்
வெளித் தள்ளிப் போகிறது
வெக்கையின் வேட்கையை
இமயத்தின் கம்பீரமெடுத்து
ஓடுகின்றநதி
பாறை தகர்த்து
கரை உடைத்து
எக்காளச் சிரிப்பிட்டு
புவி புரட்டி வருகின்றது
போல உள்ளது கவிதையோட்டம்.

மருத்துவக் கருத்தரங்கம் ஒன்றிற்காக 'துருக்கி'ச் சென்றவர் அவ்வனுபவத்தையும் கட்டுரையாக்கித் தந்துள்ளார். தென்னிந்திய மொழிகள் பேசும் நான்கு தோழியரோடு நட்பு ஏற்படுவதைப் பெருமையுடன் கூறுகிறார். "வேறுபாடுகளை மீறி மகிழ்ந்திருத்தல் எல்லாருக்கும் ஒன்று தானே?'' என மொழியைக் கடந்து மனம் நேசிப்பதை மகிழ்ச்சியுடன் வியக்கிறார்.

"என்னுடைய தேர்வாக இல்லாது தவிர்க்க முடியாது நான் போக நேர்ந்த பயணமாகவே அமைந்திருந்தது'' என 'பாலித்தீவு' பயணம் குறித்துத் தொடங்கியுள்ளார். ஆயினும் வாய்ப்புகளை நழுவ விடுவதில்லை என்கிறார். துருக்கியருக்குக் கண் போல் பாலித்தீவினருக்கு பூனை தெய்வம் என்கிறார். பாலித்தீவில் உள்ள வீடுகளில் கிராமத்து படம் போல் விக்கிரகம் இன்றி கோவில்கள் உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். மற்றப் பயணங்களைப் போல பாலித்தீவின் பயண முடிவு சுபமாக இல்லை. ஒரு கலகத்துடனே முடிவுற்றதை அச்சத்துடன் விவரித்துள்ளார். வானிலை மோசமாக இருந்ததால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது என்றும் "சாவை பக்கத்து இருக்கையில் பாத்திருக்க வைத்த கடைசி 20 நிமிட பயணம் வாழ்வில் மறக்க முடியாதது'' என்னும் வரிகள் அதன் பயங்கரத்தை உணர்த்துகின்றது.

கவிஞரின் பயணங்கள் ஒவ்வொன்றுமே மறக்க முடியாதவையாகத் தான் உள்ளன. எல்லா பயணங்களையும் திட்டமிட்டே தொடங்கியுள்ளார். நாள், நேரம் குறிப்பிட்டு ஒவ்வொரு நிகழ்வையும் எழுதியிருப்பது அவரின் திட்டமிடலுக்குச் சான்று. ஒவ்வொரு பயணத்தையும் கட்டுரையாக்க வேண்டும் என்னும் முன்முடிவுகளைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. பயணம் தொடங்குவதற்கான முன் தயாரிப்புகளுடனே ஒவ்வொரு கட்டுரையையும் தொடங்கியுள்ளார். பயணம் மேற்கொண்ட நாடுகளில் கண்டதையும் மக்களுடன் பழகியதையும் அவரின் பழக்க வழக்கங்களையும் கூறியுள்ளார். பயணக் கட்டுரைகள் என்னும் போதிலும் பெண்ணிய நிலையிலிருந்து சிறிதும் விலகாமல் எழுதியுள்ளார். கட்டுரையாளர் ஓர் அசைவப் பிரியர் என்பதையும் அறியச் செய்கிறது. கட்டுரையினூடாக சி.கனகசபாபதியின் மனைவி லட்சுமி அம்மாள் உள்பட பலருடனான தன் நட்பையும் உறவையும் கூறியுள்ளார். "நட்பின் அடித்தளமுமே இலக்கியம் சார்ந்ததுதானே'' என்னும் வரியே சான்றாக உள்ளது. இடையிடையே சில கவிதைகளையும் மேற்கோளாக்கித் தன் கவியார்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கட்டுரைகளின் மூலம் வாசிப்பவர்களையும் திசைகளைத் தரிசிக்கச் செய்கிறார்.

நதியைப் படமெடுக்க வந்தவர் தன்னைப் படமெடுத்ததைத் தான் சுவைத்த தருணங்கள் என்கிறார். பயணக் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் நேர்காணலும் ஓர் இலக்கியக் கட்டுரையும் தனித்துக் காணப்படுகின்றன. நேர்காணல் 'தீபம்' தொலைக்காட்சியில் வந்ததாகும். பெண்ணிய போக்கில் தீவிரவாதம், மிதவாதம் என்னும் இருவகை இருந்தாலும் "வாழ்க்கை என்ன சொல்லிச் செல்கின்றதோ அந்த இடத்தில் இருந்துதான் எங்களுடைய பாதையை தொடங்கணும் என்பதில்தான் நான் இருந்து கொண்டு இருக்கிறேன்'' என ஒரு வினாவிற்கு பதில் அளித்துள்ளார். சி.கனகசபாவதி மீதான தன் மதிப்பீட்டையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பெண் தன்னை நிலைநிறுத்துவதான முயற்சிகள் தொடர்பாகக் கொழும்புவில் நடைபெற்ற கருத்தரங்கின் மீதான தன் பார்வையைக் கட்டுரையாக்கித் தந்துள்ளார். இது விவாதமாக உள்ளது. 'பெண்ணிய நாடகத்தின் ஆக்கம்' என்னும் நாடகத்தை முன் வைத்து ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளார். ஒரு சோறு பதம் என்பதை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை ஒர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார். இமையத்தின் 'செடல்' நாவலை முன் வைத்து பேசியதில் நம்நாட்டு மதிப்புகள் வெளிநாட்டில் இழக்கச் செய்யக்கூடாது என்று கருத்துரைக்கிறார். தமிழீழத் தேசியமும் தமிழர் அடையாள மறுப்பும் தலித் அரசியலூடாக இலங்கையில் பேசுவது பிழையாகப் போகுமென்று கருதுவது குறிப்பிடலுக்குரியது. தன் கட்டுரை மீது எழுந்த விமரிசனங்களையும் நேர்மையாக ஒப்புக் கொண்டுள்ளார். இத்தொகுப்பில் இக்கட்டுரை அந்நியமாயிருந்தாலும் அவசியமாக உள்ளதை மறுப்பதிற்கில்லை.

பயணக் கட்டுரை எழுதுவது எளிதானதல்ல. பயணித்தினூடே கட்டுரைக்கான தரவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். கவிஞர் திலகபாமா பயணத்திலும் வெற்றிப் பெற்றுள்ளார். பயணக் கட்டுரையிலும் வெற்றிப் பெற்றுள்ளார். ஒரு தேர்ந்த மொழியையும் அழகாகக் கையாண்டுள்ளார். பயணக் கட்டுரைக்கும் ஓர் இலக்கியத் தகுதியைப் பெற்றுத் தர முயற்சித்துள்ளார். இலக்கியத்தில் தன் அடுத்த கட்ட பயணத்தைத் தொடர்ந்துள்ளார். "பயணம்'' தொடர வாழ்த்துக்கள்.
பொன்.குமார்

நன்றி:வடக்கு வாசல், பொன் குமார்

Labels:

posted by Thilagabama M @ 6/23/2009 10:52:00 pm   1 comments
Tuesday, June 16, 2009
கவிதை
பெயரிலி நதி
திலகபாமா

காலம் காலமாய்
கமண்டலத்தில் அடக்கியவர்களும்
விரித்து விட்ட காக்கைகளுமே
வரலாறாக
ஓடிக் கொண்டிருந்த நதி
பெயரிலியாக தன்னை
மாற்றிக் கொள்கின்றது.

சிக்குவதற்கும் விரிப்பதற்கும்
அடங்காத ஒன்றாக நான் மாற
உன் பேசப் படு பொருள்களிலிருந்து
தொலைந்து விடுகின்றேன்

தொலைந்து விடுதல்
உன்னைப் பொறுத்தவரை
வரலாறாவதில்லை
எனக்கோ வாழ்வாகின்றது.
********************************************

சிம்ம வாகினி


அரங்கத்தில் மையத்தில்
பதினாறு திசையும்
காதலிக்கவும் காதலிக்கப் படவும்
கூடிய கலையாய் நானிருந்தேன்

சிம்மாசனச் சிலைப் பதுமையாய்
சிலரும்
என்னில் கலை உறிஞ்சும்
கட்டில் பதுமையாய்
கட்டி விட பலரும் பார்க்கையில்

ஒளி இருந்தும் இல்லாமலிருக்கும்
கருவறைக்குள்
எனை இருத்திக் கொண்டேன்
நான் விரும்பிய காதலை
நீ தேடிக் கொண்டிருக்க
அது என் முன்
சிம்ம வாகனமாய்
உருமாறி அமர்ந்திருந்தது.

நன்றி : வடக்கு வாசல்

Labels:

posted by Thilagabama M @ 6/16/2009 09:36:00 pm   0 comments
Saturday, June 06, 2009
இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்
இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்

உரையாடல்கள் , தனிப்பட்ட உரையாடல்கள் பொதுமையில் பேசுவது சரியல்ல என்ற விழுமியங்களுக்கு அப்பால் எனக்குக் கிடைக்கின்ற ஒரே ஒரு தடயங்களாய் அவை இருக்கும் பட்சத்தில் அவையன்றி உண்மையை சொல்லவும் முடியாதிருப்பதால் இன்னும் சில உரையாடல்களை முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.
உரையாடல்களை சொன்ன நபர்களும் தருணங்களும் முக்கியமில்லை ஏனென்றால் இது தனிநபர்களைக் கூண்டிலேற்றும் முயற்சியல்ல. சமூகத்தின் ஒட்டு மொத்த சாயம் மனித முகத்தில் அழிக்க முடியாது கறையாக கவிழ்ந்திருப்பதை சுட்டிக் காண்பித்து புரிய வைக்கும் முயற்சியே.

விருது நகரில் ஒரு இலக்கிய அமைப்பு நடத்திய ஆண்டு விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தேன். எனக்கு முன்னால் பட்டி மன்ற நிகழ்வு நடத்தப் பட்டுக் கொண்டிருந்தது. சிரிப்பு வரவழைக்கின்றேன் பேர்வழி என்று வீட்டுப் பெண்களை கோமாளிகளாக்கி , குறை சொல்லிச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர். பேச வந்த தலைப்போ புத்திலக்கியமா? சங்க இலக்கியமா? கருத்தாழத்தில் விஞ்சி நிற்பது. பேச்சின் மூலம் புத்திலக்கியத்தின் சுவாரசியத்தையும் , பழைய இலக்கியத்தின் தொன்மைகளையும் பெருமையையும் சொல்லி வாசிக்கும் ஆர்வத்தை தூண்டி விட வேண்டியது பேச்சாளர்களது கடமை. ஆனால், பேச்சு சுவாரசியமும், ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கு கூட கருத்தாழம் என விசயத்தில் காட்டவில்லை. அதையும் தாண்டி பொதுப்புத்தியின் கருத்துக்களையே மேலும் மேலும் அழுத்தமாகும் வண்ணம் பேசிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்.பேச்சுக் கிடையில் பெண் மேல் தெரியாமல் கைபட்டால் கூட கற்பு போய் விடும் என்கின்ற ரீதியில் பேச்சுக்கள் போக, மாற்றுச் சிந்தனைகளை முன் வைக்க வேண்டிய தேவையிலிருந்து என் உரை நகன்றது.

ஐரோப்பிய பயணங்களை முன்னிட்டு அதிலிருந்து இன்னும் அதிகமாக நான் விரிவாக்கிக் கொண்ட பெண் நிலைச் சிந்தனைகள் என பேச்சு போக , கூட்டம் இறுகலான அமைதியோடு அமர்ந்திருந்தது. அதுவரை இருந்து கொண்டிருந்த சலசலப்பு வெளியேறியிருக்க உறைந்து போயிருந்தது கூட்டம்

கூட்டம் முடித்து வந்து விட்டு நண்பரோடு அதைப் பற்றி தொலைபேசிக் கொண்டிருந்தேன். என் பேச்சு எப்படி இருந்தது என்ற அவரது கேள்விக்கு நானே எப்படி சொல்வது என்ற கேள்விக்குப் பின்னர் தொடர்ந்தேன். கூட்டம் ஆழ்ந்த சிந்தனையோடு இறுக்கமாக இருந்தது என்றேன்.
எதிர் முனையிலிருந்து கேள்வி “ அப்போ உங்க மொழி புரிஞ்சிருக்காது”
புரியாமல் போறதுக்கு என்ன இருக்கு தமிழில் தானே பேசுறேன். அதுவும் சம்பவங்களின் சாட்சியங்களோட .
அப்போ ஜனரஞ்சகமா பேசினீங்களா? இந்த கேள்வி அடுத்த அபத்தமாய் தோணித்து. ஏனென்றால் , திரை சின்னத் திரை என்று எல்லா ஊடகங்களும் “சனங்கள் கேட்கிறார்கள். தருகின்றோம்” என்று அவர்கள் வியாபாரப் புத்திக்கு சாதகமாக சனங்களின் ரசனையை மறைமுகமாக குறைத்து சொன்னபடி இருப்பதன் வெட்கக் கேடு என் முன்னாடியும் கேள்வியாக நிற்கிறதோ எனும் பயம்.
அப்படிச் சொல்ல முடியாது என்று சொல்லி வைக்க அவரின் அடுத்த கேள்வி
இரண்டும் கெட்டானா பேசினீங்களா?

அதிர்ந்து போனேன். இதுவரை நண்பரிடமிருந்து என் பேச்சின் திறமை பற்றி முன் வைக்கப் பட்ட மூன்று வாக்கியங்களும் திறமையற்றிருப்பதாய் கட்டி விட நினைக்கும் வாக்கியங்கள்

1 உங்க மொழி புரிஞ்சிருக்காது
2 ஜனரஞ்சகமான பேச்சா
3இரண்டும் கெட்டானா பேசினீர்களா?

அப்போ எனக்கு முன்னால் உங்களால் வைக்கப் படுகின்ற தெரிவுகள் “ நான் நல்ல விதமாகத்தான் கேட்டேன், நீங்க தப்பா புரிஞ்சுக்கிறீங்க “என்று ரொம்பத் தெளிவாய்த் தப்பித்துக் கொள்ளக் கூடிய தெரிவுகள் அதே நேரம் மூன்று தெரிவும் அதைத் தாண்டி வேறொன்றை அதாவது திறமையாக பேசினேன் என்று ஒத்துக் கொள்ள மறுக்கும் மனத்திலிருந்து எடுக்கப் பட்ட தெரிவுகள். இத்தெரிவுகள் என்னை விட்டே என் பேச்சு திறமையற்றிருந்தது எனத் தெரிவு செய்து விட நிர்ப்பந்திக்கின்றன.

ஒரு முறை காலச்சுவடு பல எழுத்தாளர்களுக்கு பட்டப் பெயர் இட்டிருந்தது( அதில் என் பெயரும் அடக்கம்) அதில் ஒரு கவிஞருக்கு “புன்னகை அரசி” என்று பெயரிட்டிருந்தது உண்மையில் அக்கவிஞர் சிரித்த முகத்தோடு இருப்பவர் என்ற உண்மை இருந்த போதும் அப்படியான நல்ல அர்த்தத்தில் அப்பத்திரிக்கை அவ்வார்த்தையை வெளியிடவில்லை எனும் தொனி வாசிப்பவருக்கு புரியக் கூடியதாகத்தானிருந்தது.அதன் ஒட்டு மொத்த தொனியில் அவ்வார்த்தை அக்கவிஞரை ” இளிச்சவாய்” என்ற பொருளில் சொல்லும் வஞ்சப் புகழ்ச்சி அணியே என்று எல்லாருக்கும் தெரிந்தாலும் தட்டிக் கேட்க முடியா தொனியில் அவ்வார்த்தை பிரயோகம் இருந்தது. யாரும் எதுவும் கேட்காமலேயே , அல்லது பேசிப் பெரிசு படுத்தாமலேயே எல்லா படைப்பாளிகளும் அந்த விசயத்தை கைவிட்டனர்

என்னிடம் பேசப் பட்ட தொலைபேசி உரையாடலுக்கும் இவ்வார்த்தை பிரயோகத்தை பயன் படுத்திக் கொண்டு பட்டப் பெயரிட்ட பத்திரிக்கை உணர்வுக்கும் பெரிய வித்தியாசமில்லை
இன்னது செய்கிறோமென்பதை அறியாமல் செய்யவில்லை. அறிந்து செய்வதை அறியாமல் செய்வது போல் பாவனை செய்கின்றார்கள்
“ பிதாவே இவர்களது பாவங்களை உணரச் செய்யும்

நன்றி

Labels:

posted by Thilagabama M @ 6/06/2009 07:58:00 pm   0 comments
Friday, June 05, 2009
கவிதை
நினைவலையில் காற்றாலை

நம்மோடு இருந்த நாள்
இன்று இல்லாமல் போனது

பிரிய முடியாது பிரிந்த கணங்கள்
தேடியும் கிட்டிய பாடில்லை
நீண்ட இணைந்த பயணம்
இருவரும் தீர்மானித்து
முடிவுக்கு வந்து விட்ட போதும்
எதிர் எதிர் திசையில்

விடிந்து விட்ட பகலின் வானம்
நேற்றைய நிலவின் தடத்தையும்
இருளோடு பதுக்கிக் கொள்ள
மிச்சமிருக்கின்ற நினைவலைகள்
காற்றாலைகளாய்

எங்கும் நிறைந்திருந்த காற்றை
இங்கு மட்டும் சக்தியாக்க
போகின்ற வழித் தடத்தில்
நிகழ்ந்து விட்ட
சுகந்தங்களில் வேரூண்றி
நின்று போகின்றேன்

Labels:

posted by Thilagabama M @ 6/05/2009 08:48:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates