|
Saturday, June 06, 2009 |
இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் |
இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்
உரையாடல்கள் , தனிப்பட்ட உரையாடல்கள் பொதுமையில் பேசுவது சரியல்ல என்ற விழுமியங்களுக்கு அப்பால் எனக்குக் கிடைக்கின்ற ஒரே ஒரு தடயங்களாய் அவை இருக்கும் பட்சத்தில் அவையன்றி உண்மையை சொல்லவும் முடியாதிருப்பதால் இன்னும் சில உரையாடல்களை முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. உரையாடல்களை சொன்ன நபர்களும் தருணங்களும் முக்கியமில்லை ஏனென்றால் இது தனிநபர்களைக் கூண்டிலேற்றும் முயற்சியல்ல. சமூகத்தின் ஒட்டு மொத்த சாயம் மனித முகத்தில் அழிக்க முடியாது கறையாக கவிழ்ந்திருப்பதை சுட்டிக் காண்பித்து புரிய வைக்கும் முயற்சியே.
விருது நகரில் ஒரு இலக்கிய அமைப்பு நடத்திய ஆண்டு விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தேன். எனக்கு முன்னால் பட்டி மன்ற நிகழ்வு நடத்தப் பட்டுக் கொண்டிருந்தது. சிரிப்பு வரவழைக்கின்றேன் பேர்வழி என்று வீட்டுப் பெண்களை கோமாளிகளாக்கி , குறை சொல்லிச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர். பேச வந்த தலைப்போ புத்திலக்கியமா? சங்க இலக்கியமா? கருத்தாழத்தில் விஞ்சி நிற்பது. பேச்சின் மூலம் புத்திலக்கியத்தின் சுவாரசியத்தையும் , பழைய இலக்கியத்தின் தொன்மைகளையும் பெருமையையும் சொல்லி வாசிக்கும் ஆர்வத்தை தூண்டி விட வேண்டியது பேச்சாளர்களது கடமை. ஆனால், பேச்சு சுவாரசியமும், ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கு கூட கருத்தாழம் என விசயத்தில் காட்டவில்லை. அதையும் தாண்டி பொதுப்புத்தியின் கருத்துக்களையே மேலும் மேலும் அழுத்தமாகும் வண்ணம் பேசிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்.பேச்சுக் கிடையில் பெண் மேல் தெரியாமல் கைபட்டால் கூட கற்பு போய் விடும் என்கின்ற ரீதியில் பேச்சுக்கள் போக, மாற்றுச் சிந்தனைகளை முன் வைக்க வேண்டிய தேவையிலிருந்து என் உரை நகன்றது.
ஐரோப்பிய பயணங்களை முன்னிட்டு அதிலிருந்து இன்னும் அதிகமாக நான் விரிவாக்கிக் கொண்ட பெண் நிலைச் சிந்தனைகள் என பேச்சு போக , கூட்டம் இறுகலான அமைதியோடு அமர்ந்திருந்தது. அதுவரை இருந்து கொண்டிருந்த சலசலப்பு வெளியேறியிருக்க உறைந்து போயிருந்தது கூட்டம்
கூட்டம் முடித்து வந்து விட்டு நண்பரோடு அதைப் பற்றி தொலைபேசிக் கொண்டிருந்தேன். என் பேச்சு எப்படி இருந்தது என்ற அவரது கேள்விக்கு நானே எப்படி சொல்வது என்ற கேள்விக்குப் பின்னர் தொடர்ந்தேன். கூட்டம் ஆழ்ந்த சிந்தனையோடு இறுக்கமாக இருந்தது என்றேன். எதிர் முனையிலிருந்து கேள்வி “ அப்போ உங்க மொழி புரிஞ்சிருக்காது” புரியாமல் போறதுக்கு என்ன இருக்கு தமிழில் தானே பேசுறேன். அதுவும் சம்பவங்களின் சாட்சியங்களோட . அப்போ ஜனரஞ்சகமா பேசினீங்களா? இந்த கேள்வி அடுத்த அபத்தமாய் தோணித்து. ஏனென்றால் , திரை சின்னத் திரை என்று எல்லா ஊடகங்களும் “சனங்கள் கேட்கிறார்கள். தருகின்றோம்” என்று அவர்கள் வியாபாரப் புத்திக்கு சாதகமாக சனங்களின் ரசனையை மறைமுகமாக குறைத்து சொன்னபடி இருப்பதன் வெட்கக் கேடு என் முன்னாடியும் கேள்வியாக நிற்கிறதோ எனும் பயம். அப்படிச் சொல்ல முடியாது என்று சொல்லி வைக்க அவரின் அடுத்த கேள்வி இரண்டும் கெட்டானா பேசினீங்களா?
அதிர்ந்து போனேன். இதுவரை நண்பரிடமிருந்து என் பேச்சின் திறமை பற்றி முன் வைக்கப் பட்ட மூன்று வாக்கியங்களும் திறமையற்றிருப்பதாய் கட்டி விட நினைக்கும் வாக்கியங்கள்
1 உங்க மொழி புரிஞ்சிருக்காது 2 ஜனரஞ்சகமான பேச்சா 3இரண்டும் கெட்டானா பேசினீர்களா?
அப்போ எனக்கு முன்னால் உங்களால் வைக்கப் படுகின்ற தெரிவுகள் “ நான் நல்ல விதமாகத்தான் கேட்டேன், நீங்க தப்பா புரிஞ்சுக்கிறீங்க “என்று ரொம்பத் தெளிவாய்த் தப்பித்துக் கொள்ளக் கூடிய தெரிவுகள் அதே நேரம் மூன்று தெரிவும் அதைத் தாண்டி வேறொன்றை அதாவது திறமையாக பேசினேன் என்று ஒத்துக் கொள்ள மறுக்கும் மனத்திலிருந்து எடுக்கப் பட்ட தெரிவுகள். இத்தெரிவுகள் என்னை விட்டே என் பேச்சு திறமையற்றிருந்தது எனத் தெரிவு செய்து விட நிர்ப்பந்திக்கின்றன.
ஒரு முறை காலச்சுவடு பல எழுத்தாளர்களுக்கு பட்டப் பெயர் இட்டிருந்தது( அதில் என் பெயரும் அடக்கம்) அதில் ஒரு கவிஞருக்கு “புன்னகை அரசி” என்று பெயரிட்டிருந்தது உண்மையில் அக்கவிஞர் சிரித்த முகத்தோடு இருப்பவர் என்ற உண்மை இருந்த போதும் அப்படியான நல்ல அர்த்தத்தில் அப்பத்திரிக்கை அவ்வார்த்தையை வெளியிடவில்லை எனும் தொனி வாசிப்பவருக்கு புரியக் கூடியதாகத்தானிருந்தது.அதன் ஒட்டு மொத்த தொனியில் அவ்வார்த்தை அக்கவிஞரை ” இளிச்சவாய்” என்ற பொருளில் சொல்லும் வஞ்சப் புகழ்ச்சி அணியே என்று எல்லாருக்கும் தெரிந்தாலும் தட்டிக் கேட்க முடியா தொனியில் அவ்வார்த்தை பிரயோகம் இருந்தது. யாரும் எதுவும் கேட்காமலேயே , அல்லது பேசிப் பெரிசு படுத்தாமலேயே எல்லா படைப்பாளிகளும் அந்த விசயத்தை கைவிட்டனர்
என்னிடம் பேசப் பட்ட தொலைபேசி உரையாடலுக்கும் இவ்வார்த்தை பிரயோகத்தை பயன் படுத்திக் கொண்டு பட்டப் பெயரிட்ட பத்திரிக்கை உணர்வுக்கும் பெரிய வித்தியாசமில்லை இன்னது செய்கிறோமென்பதை அறியாமல் செய்யவில்லை. அறிந்து செய்வதை அறியாமல் செய்வது போல் பாவனை செய்கின்றார்கள் “ பிதாவே இவர்களது பாவங்களை உணரச் செய்யும்
நன்றி
Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 6/06/2009 07:58:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment