|
Saturday, April 04, 2009 |
படித்ததில் பிடித்தது |
துயருறும் எழுத்து : ஷோபாசக்தி[2-Apr-2009]
29 மார்ச் 2009 அன்று லண்டனில் நடைபெற்ற ‘எதுவரை’ சஞ்சிகை அறிமுக அரங்கில் நிகழ்த்திய உரை: நிகழ்வுக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் ராகவன் அண்ணன் அவர்களே, ‘எதுவரை’ பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் பெளஸர் அவர்களே, வந்திருக்கும் தோழியர்களே, தோழர்களே பணிவுடன் வணங்குகின்றேன். நீண்ட நாட்களிற்குப் பிறகு ஈழம், புகலிடம், தமிழகம் என மூன்றுநிலத் தமிழ் எழுத்துகளை இணைத்து ஒரு காத்திரமான சிறுபத்திரிகை புகலிடத்தில் தோன்றியிருக்கும் உற்சாகமான தருணத்தில் நாமிருக்கிறோம். இந்தத் தருணத்தை பெளஸர் தனது அயராத முயற்சியால் சாத்தியப்படுத்தியிருக்கிறார். சரியாகத் திட்டமிடும்போது புகலிடச் சிறுபத்திரிகைகளுக்கு நிதி ஒரு பிரச்சினையாக இருக்க வாய்ப்பேயில்லை. குழுவாதத்தால் சிறுபத்திரிகைகள் நின்றுபோய்விடுகின்றன என்பதும் குழந்தைப்பிள்ளைக் கதை. சமூகத்தில் நான்கு வர்க்கமும் நானூறு சாதிகளும் மூன்று பாலினமும் முப்பத்தேழு இயக்கங்களும் பலபத்துவிதமான அரசியல் போக்குகளும் இருக்கும்போது நீங்கள் எழுத்தாளர்களிடம் மட்டும் ஒரேயொரு இறுக்கமான குழுவை எதிர்பார்க்க முடியாது. குழுக்கள் இல்லாமல் சிறுபத்திரிகை இயக்கம் கிடையாது. தமிழில் ஆழமான தடங்களைப் பதித்த எல்லா சிறுபத்திரிகைகளுக்குப் பின்னும் தனித்துவமான அரசியல் - இலக்கிய நோக்குகளைக் கொண்ட குழுக்களே இருந்துவந்திருக்கின்றன. எழுதுவதற்கு ஆட்களில்லாமல் அல்லது எழுத்தாளர்களை ஒருங்கிணைக்க முடியாமல்தான் புகலித்திடத்தில் சிறுபத்திரிகைகள் அநேகமாக நின்று போகின்றன. எழுதுகின்ற ஒரு விடயத்தில் நாம் பெளஸருக்குக் கைகொடுத்தால் அவரால் இந்தப் பத்திரிகையைத் தொடர்ச்சியாகக் கொண்டுவர முடியும். மற்ற விசயங்களில் அவரை யாராலும் மடக்கவோ முடக்கவோ முடியாது. அவரோடு இணைந்து ஒரு வேலையைச் செய்வது பேயோடு தோட்டம் செய்வதைப் போன்றது என்பது எனது அனுபவம். மக்கள் துயருறும் சூழலில் ஒரு எழுத்தாளரின் பணி எதுவாயிருக்க வேண்டும் என்பதைக் குறித்துப் பேசுமாறு என்னைப் பெளஸர் பணித்திருக்கிறார். நம்மைத் துயரம் இன்று நேற்றா சூழ்ந்தது? வாழ்க்கையே துயரமானது என்பது போதிசத்துவனின் வாக்கு. சாதிய அடிமைத்தளை, வர்க்க அடிமைத்தளை, இனரீதியான அடிமைத்தளை, பாலின அடிமைத்தளை, பண்பாட்டு அடிமைத்தளை என்று பெரும்பான்மை மக்கள் வரலாறு முழுவதும் தளைகளாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். போததற்கு நம்மிடம் கடந்த முப்பது வருடங்களாய் போரின் துயரும் வடுவும் சேர்ந்திருக்கின்றன. இந்தப் பிளாஷ் பேக்குகளை ஓட்டுவதற்கு இப்பொழுது இங்கே நேரமில்லை. இந்தக் கணத்தில் நமது தேசத்தில் நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகள் குறித்து எனது கருத்தை, எனது துயரை, எனது ஆற்றாமையையே நான் இப்போது இங்கே சொல்ல விரும்புகிறேன். நான் இப்போது ஏதாவது ஒரு இயக்கம் சார்ந்தவனோ, கட்சி சார்ந்தவனோ கிடையாது. இன்று இலங்கையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எந்தவொரு அரசியல்சக்திக்கும் வாயளவிற் கூட நான் ஆதரவு தெரிவிக்கத் தயாரில்லை. அதேபோல என்னைப் போன்ற எளியவர்களின் கருத்துகள் அவர்களிற்கு ஒரு பொருட்டேயல்ல என்பதும் எனக்குத் தெரியும். என்போன்றவர்களின் கருத்துகள் வெகுசனங்களைச் சென்றடைவதில்லை என்றும் எனக்குத் தெரியும். அதற்காக நான் கருத்துகளே இல்லாமல் இருக்க முடியுமா? இந்த யுத்தத்தில் நானுமொரு முன்னைய பங்காளி என்ற வகையிலும் இந்த யுத்தத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையிலிருந்தும் என் கருத்துகளையும் என் யுத்த எதிர்ப்புக்குரலையும் நான் ஒலித்துக்கொண்டுதானிருப்பேன். கேட்கக் காதுள்ளவர் கேட்கட்டும். தோழர்களே! நந்திக் கடலிலே நமது மக்களின் பிணங்கள் மிதந்துகொண்டிருக்கின்றன. யுத்தமுனையில் எவ்வளவு மக்கள் சிக்கியிருக்கிறார்கள் என்ற சரியான தகவல் கூட நம்மிடமில்லை. புலிகள் மூன்று இலட்சம் என்கிறார்கள், அரசு எழுபதாயிரம் என்கிறது. இடையில் UNO இரண்டு லட்சம் என்கிறது. இந்த எண்ணிக்கை விளையாட்டுக் கூட எப்போதும் ஒரேமாதிரிச் சொல்லப்படுவதில்லை. வாய்க்கு வந்த மாதிரிப் பொய்ப் புள்ளிவிபரங்கள் ஏறுக்குமாறாக வந்துகொண்டிருக்கின்றன. புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் குண்டுவிழாத துண்டுநிலமும் கிடையாது. சாவுவிழாத வீடும் கிடையாது. மோதல் தவிர்ப்புப் பகுதி என அறிவித்துவிட்டு அந்தப் பகுதியையே, பொதுமக்கள் வாழும் பகுதிகளையே இலங்கையின் முப்படைகளும் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கின்றன. இன்று இலங்கை இராணுவம் அதிநவீனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. புலிகளின் தளங்களையும் பொதுமக்கள் வாழும் பகுதிகளையும் துல்லியமாக வேறுபடுத்திக் கண்டுபிடிக்கும் ராடர்கள் அவர்கள் வசமிருக்கின்றன. முன்னேறி வரும்போது எவ்வளவு தூரத்தில் மனித நடமாட்டமிருக்கிறது என நுகர்ந்து கண்டுபிடிக்கும் அதிநவீன உணர்கருவிகள் அவர்களிடமுண்டு. பொதுமக்கள் எனத் தெளிவாக இனங்கண்ட பின்பும் மக்களை இரக்கமேயில்லாமல் எறிகணைகளை வீசியும் விமானத் தாக்குதல்களை நடத்தியும் கொன்றொழிக்கிறார்கள். மருத்துவமனைகள் கூட தாக்கியழிக்கப்படுகின்றன. இதை இனப்படுகொலை எனச் சொல்லாமல் வேறெப்படி அழைப்பது? அப்படியானால் கொழும்பிலும் அரசகட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் இப்போது தமிழ்மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றொரு கேள்வியை நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இனப்படுகொலை என்பது பல்வேறு நுட்பமான வழிகளிலும் பொருத்தமான தருணங்களையும் களங்களையும் தேரர்ந்தெடுத்துத்தான் செயற்படுத்தப்படும். அய்ரோப்பாவில் நாஸிகள் யூதர்களை இனப்படுகொலை செய்தபோதும் இந்த தந்திரமான உத்திகளைத்தான் நடைமுறைப்படுத்தினார்கள். மறுபுறத்தில் இந்தப் படுகொலைகளுக்குத் துணைபோன ஒருபகுதி யூதர்களை நாஸிகள் பாதுகாக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு. யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் கொழும்பிலும் இன்றும் அரச படையினராலும் அரசின் நிழலில் நிற்கும் தமிழ் இயக்கங்களாலும் சிறுகச் சிறுகத் தமிழர்கள் கடத்தப்பட்டும் கொலைசெய்யப்பட்டுக்கொண்டும் தானிருக்கிறார்கள். கொழும்பு போன்ற நகரங்களில் வாழக்கூடிய செல்வந்தத் தமிழ் வியாபாரிகளுக்கோ, பெரும் பதவிகளிலிருப்பவர்களுக்கோ, கொழும்பு செவன் தமிழ் மேட்டுக்குடியினருக்கோ உடனடிச் சிக்கல்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால் அங்கே வாழும் சாதாரண ஈழத்தமிழ் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் கைது தப்பினால் மரணம் என்ற அபாயத்துக்குள்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலோ கிழக்கிலோ இலங்கை இராணுவம் இன்னொரு இனப்படுகொலை அத்தியாயத்தை தொடக்கி வைக்காது என்று யாரும் ஆருடம் சொல்லலாம். ஆனால் தருக்கபூர்வமாக ஆதாரம் காண்பிக்கமுடியாது. கடந்த முப்பது வருடங்களாக நாட்டின் பலபகுதிகளிலும் தொகுதி தொகுதியாக கட்டங்கட்டமாக அரசபடையினர் இத்தகைய இனப்படுகொலைகளை நடத்திவருகிறார்கள். நாட்டின் முன்னைய அதிபர்களை விட இன்றைய அதிபர் ராஜபக்ச யுத்தத்தில் தீவிரமாயிருப்பதற்கும் முன் எந்தக் காலங்களிலும் இல்லாதவாறு இராணுவத்தினருக்கு அதிகாரங்கள் குவிந்திருப்பதற்கும் இராணுவத் தளபதிகள் அரசியல் அறிக்கைகள் வெளியிடுவதற்கும் இந்த இனவாத அரசை எதிர்த்துக் குரலெழுப்பும் சனநாயகவாதிகளும் ஊடகவியலாளர்களும் நாடு முழுதும் கொல்லப்படுவதற்கும் நாம் சாட்சிகளாயிருக்கிறோம். நாடு முழுவதும் நீதித்துறையும் மனிதவுரிமைகளும் செத்துக் கிடக்கின்றன. அய்.நா.அவையின் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டதுபோல சிறிலங்காவின் காவற்துறை எதிர்க் கிளர்ச்சிப் படையின் பாத்திரத்தையே இப்போது வகித்துக்கொண்டிருக்கிறது. இந்த அவலச் சூழலுக்குள்தான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் சிக்கியிருக்கிறார்கள். அதிகம் விவரிக்க வேண்டியதில்லைத் தோழர்களே! கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசபீடத்தில் பேரினவாதிகள் மட்டுமே வீற்றிருக்கிறார்கள் என்பதும் குறிப்பாக இன்றைய மகிந்த அரசு மனிதவுரிமைகளுக்கு எள்ளளவும் இடமளிப்பதில்லை என்பதும் கடந்த காலங்களில் இலங்கைத்தீவில் உழைக்கும் மக்கள் போராடிப்பெற்ற சமூகநலச் சலுகைகளை இந்த அரசு சிறுகச் சிறுகச் சிதைத்து முழு நாட்டையும் மறுகாலனியமயப்படுத்தியிருக்கிறது என்பதும் நாமறிந்தவையே. இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசு. ஆனால் இப்போது நந்திக் கடலில் மிதந்துகொண்டிருக்கும் பிணங்களுக்கு இலங்கை அரசபடைகள் மட்டுமே காரணமில்லை. அரசபடையின் கொலை இலக்குகளுக்கு நேராக விடுதலைப் புலிகள் நமது மக்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். உயிருள்ள தடுப்புச் சுவர்களாக, மனிதத் தடுப்பரண்களாக மக்களைத் துப்பாக்கிமுனையில் புலிகள் தம்மோடு தடுத்து வைத்திருக்கிறார்கள். புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பிவரும் மக்களைப் புலிகள் சுட்டு வீழ்த்துகிறார்கள் என வன்னியிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எந்த மக்களைக் காப்பாற்றுகிறோம் என ஆயுதங்களை ஏந்தினோமோ, எந்த மக்களின் பணத்திலும் பவுணிலும் ஆயுதங்களை வாங்கினோமோ, எந்த மக்கள் செய்த அளப்பெரிய தியாகங்களால் நாம் நெருக்கடியான சூழல்களில் எமது உயிர்களைக் காப்பாற்றினோமோ, எந்த மக்கள் வழங்கிய துணியில் எம் நிர்வாணத்தை மறைத்தோமோ, எந்த மக்கள் போட்ட பிச்சைச் சோற்றில் இந்தத் தேகங்களை வளர்த்தோமோ அந்த மக்களையே புலிகள் இப்போது சுட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். போர் நடக்கும் நிலப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறவிடாமல் புலிகள் தடுத்து வைத்திருக்கிறார்கள். மக்களின் இரத்தத்தால் நந்திக் கடல் இப்போது நிறைந்திருக்கிறது. புலிகளும், புலிகளின் ஆதரவு அணிகளும், புலிகள் ஆதரவு ஊடகங்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இந்த இரத்தப் பழியை எந்தக் கடலில் கழுவப்போகிறார்கள்? இந்தச் செய்தியொன்றும் ‘ஒட்டுக் குழுக்கள்’ உருவாக்கி உலாவவிட்ட வதந்தியல்ல. அய்.நா.அவையும் சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்புகளும் சொல்லும் செய்தியிது. புலிகள் ஆதரவு எழுத்தாளர்களே! விடுதலை, இலங்கை அரசின் இன அழிப்பு, தமிழர்களின் ஒற்றுமை, யுத்ததந்திரம், அண்ணனின் வழிகாட்டல், உள்ளுக்கு வரவிட்டு அடிப்பது என்ற பல்வேறு காரணிகளைச் சொல்லி விடுதலைப் புலிகளைச் சகித்துக்கொள்ளுமாறு எங்களுக்குச் அறிவுரை சொன்னீர்களே. இனியுமா நாம் விடுதலைப் புலிகளைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள்! இப்போது கூட யுத்தத்துக்குத் தப்பியோடும் அப்பாவிச் சனங்களைத் தடுக்காதீர்கள், கொல்லாதீர்கள் என்று புலிகளுக்குச் சொல்ல உங்களுக்கு வாய் வரவில்லையென்றால் நீங்கள் எழுத்தாளர்கள் அல்ல கொலைகாரர்கள். நீங்கள் ஊடகவியலாளர்களல்ல மாபியாக்கள். மக்கள் விருப்பத்துடன்தான் புலிகளோடு இருக்கிறார்கள் என நீங்கள் சொல்வதில் மயிரளவாவது உண்மையுண்டா? புலிகள் அந்தப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்திருந்தும் ஒவ்வொருநாளும் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தப்பித்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருவதை நீங்கள் அறியமாட்டீர்களா? இந்தத் துரோகம் புலிகளிற்குப் புதிதல்ல. 1990ல் தீவுப்பகுதியை இராணுவம் கைப்பற்றும் போதும் புலிகள் மக்களைத் தப்பிச்செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் மக்களைத் தங்களுக்கு உயிருள்ள தடுப்புச் சுவர்களாக நிறுத்தினார்கள். அந்தத் துரோகத்தால் ஒரே நாளில் தீவுப்பகுதியல் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்திடம் பலியிடப்பட்டார்கள். என் சொந்தக் கிராமத்தில் மட்டும் முப்பத்தைந்து இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். 1995ல் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றும்போது மக்களைக் கட்டாயப்படுத்தி நடமாடும் தடுப்புச் சுவர்களாக மக்களைத் தம்முடன் புலிகள் வன்னிக்கு ஓட்டிச் சென்றார்கள். வரமறுத்தவர்களை துரோகிகள் என முத்திரை குத்தினார்கள். இந்த மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம் எனச் சொல்பவர்கள் எதற்காகப் ‘பாஸ் சிஸ்டம்’ என்ற ஒன்றை அன்றிலிருந்து இன்றுவரை நடைமுறையில் வைத்திருக்க வேண்டும்? ஒரு தமிழனுக்கோ தமிழச்சிக்கோ நாட்டின் எந்தப் பகுதிக்கோ அல்லது இன்னொரு நாட்டுக்கோ சுதந்திரமாகச் சென்றுவரக் கூடிய உரிமையை மறுக்க இவர்கள் யார்? இந்தக் கொடிய யுத்தச் சூழலில் கூட லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு அல்லது வீடு வாசலை எழுதி வாங்கிக்கொண்டுதான் ஒருசில மக்களை யுத்தப் பகுதியிலிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்கிறார்கள் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்பது? பணமோ எழுதிக்கொடுக்க வீடுவாசல்களோ இல்லாத மக்கள்தான் இப்போது அங்கே சிறைப்பட்டிருக்கிறார்கள். ஒரு சில எழுத்தாளர்கள் இப்போது விமர்சனங்களோடு விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அநேகமாக நமது ஈழத்து எழுத்தாளர்கள் இப்படி வழுவழுத்துப் பேசுவதில்லை. நாம் புலிகளை விமர்சித்தால் அவர்கள் ‘துரோகி’ என்ற ஒரு முத்திரையை நமக்கு ஓங்கிக் குத்திவிட்டுச் சத்தமில்லாமல் போய்க்கொண்டேயிருப்பார்கள். இதற்குமேல் விவாதிக்கவோ பதிலளிக்கவோ அவர்களது குற்றவுணர்வு அவர்களை அனுமதிப்பதில்லை. அல்லது பிரச்சினைகள் குறித்துக் கள்ள மவுனம் காப்பார்கள். தமிழகத்து எழுத்தாளர்கள்தான் நம்மைப் பாடாய்ப்படுத்துகிறார்கள். தமிழ்த் தேசிய உணர்வென்பது அவர்களுக்குப் பார்ப்பனிய எதிர்ப்புடன் தொடர்புடையது. மைய அரசின் மீதிருக்கும் அவர்களின் எதிர்ப்புணர்வு தமிழ்த் தேசியம் என்ற புள்ளியை வந்தடைகிறது. ஆயுதப் போராட்டம் மீது அவர்களில் பலருக்கு இருக்கும் ஒருவித ஈர்ப்பை ஒருகாலத்தில் நானும் அந்த ஈர்ப்பில் சிக்கயிருந்தவன் என்ற நிலையிலிருந்து என்னால் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அவர்கள் ஒருகாலை இந்தத் தமிழ்த் தேசியத்தில் வைத்திருந்தாலும் அவர்கள் மறுகாலை அவர்கள் இவ்வளவு காலமும் வாயளவில் கற்றுத்தேர்ந்த இடதுசாரித் தத்துவத்திலும் தலித்தியம், பின்நவீனத்துவம் போன்ற நுண்அரசியற்தளங்களிலும் வைத்திருக்கிறார்கள். அதாவது ஆற்றிலே ஒருகால் சேற்றிலே ஒருகால். ஆகவேதான் அவர்கள் விமர்சனத்தோடு புலிகளுக்கு ஆதரவு என முனகுகிறார்கள். தமிழகத்துப் படைப்பாளிகள் ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் தமிழினப் படுகொலைக்கு எதிராகச் சென்னையில் கண்டனக் கவிதைப் போராட்டம் நடத்தினார்கள். டெல்லிவரை திரண்டு சென்று ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார்கள். நாம் அவர்களுக்கு என்றும் நன்றிகளோடிருப்போம். இந்திய நடுவண் அரசு இலங்கைக்கு ஆயுதங்களையும் நிதியையும் வழங்குவதை எதிர்த்து அவர்கள் எழுப்பிய குரல் மிகச் சரியானது. இவர்களில் ஒருசாரார் விடுதலைப் புலிகள்தான் ஈழத்தமிழர்களின் காவல் தெய்வங்கள் என்றும் கருதுகிறார்கள். இருக்கட்டும்! அது அவர்களின் அரசியல் கருத்துரிமை. ஆனால் புலிகளுக்கு மாற்றுக் கருத்துக்கொண்டிருப்பவர்களை, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தில் கருத்துச் சுதந்திரத்தையும் சனநாயகத்தையும் வலியுறுத்திப் புலிகளின் ஒவ்வொரு பாஸிசச் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்திப் போராடிவரும் மறுத்தோடிகளை, ஈழத்தமிழ்க் குறுந்தேசியவாதத்தின் விட்டுக்கொடுக்காத எதிரிகளைப் பார்த்து நீங்களும் எங்களைப்போலவே கண்களையும் காதுகளையும் இறுகமுடிக்கொண்டு சவமாயிருங்கள், பாஸிஸ்டுகளை பகுதியளவு ஆதரியுங்கள் என்று அறிவுரை சொல்வதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நாகார்ஜுனனின் வலைப்பதிவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த விவாதம் ஒன்றில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்தும் இந்தத் தருணத்தில் பேசிவிடலாம். நோம் சோம்ஸ்கியில்தான் விவாதம் ஆரம்பித்தது. விவாதத்தின் தொடர்ச்சியில் இன்றைய நிலையில் புலிகளை விமர்சனத்தோடு ஆதரித்தேயாக வேண்டும் என்றும் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் ஏன் புலிகளை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் அங்கே சொல்லப்படவில்லை. புலிகள் என்ன கொடுமைகள் செய்தாலும் அவர்களால்தான் தமிழ் மக்களைக் காப்பற்ற முடியும் என்றொரு கதை இவ்வளவு காலமாகச் சொல்லப்பட்டு வந்தது. இப்போது அந்தக் கதையும் பொய்த்துப் போயிற்று. நமது மக்கள் அய்ரோப்பியத் தெருக்களில் ‘பராக் ஒபாமாவே ஈழமக்களைக் காப்பாற்று, நிக்கலோ சார்க்கோஸியே காப்பாற்று’ என ஒபாமாவின், சார்க்கோஸியின் படங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு பேரணியிற் செல்கிறார்கள். புலிகளின் எந்தப் பண்புகளுக்காக நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும்? அவர்களுடைய தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்ளைகளுக்காகவா? அவர்களின் அசைக்கமுடியாத இடதுசாரி நிலைப்பாட்டுக்காகவா? அவர்கள் முஸ்லீம் மக்கள் மீது கொண்டிருக்கும் ஆழமான அன்புக்காகவா? அவர்கள் சிங்கள உழைக்கும் மக்களைத் தமது வர்க்க சகோதரர்களாய் வரித்து வாழ்வதற்காகவா? புலிகள் கருத்துச் சுதந்திரம்மீது கொண்டிருக்கும் காதலுக்காகவா? தமிழீழம் அமைவதுதான் இந்தியாவுக்குப் பாதுகாப்பு அல்லது பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவை விழுங்கிவடும் என இந்திய அரசுக்கு அவர்கள் கொடுக்கும் துப்புக்காகவா? பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அது ஈழத் தமிழர்களுக்கு நன்மையளிப்பதாயிருக்கும் என்று அவர்கள் கசிந்துவிடும் வதந்திகளுக்காகவா? தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கொடுமைகளை அவர்கள் வெட்டி வீசிய வேகத்திற்காகவா? இல்லை நமது மக்களை இன்று சுட்டு நந்திக் கடலில் வீசும் வீரத்திற்காகவா? இவற்றில் எந்தக் காரணத்துக்காக நாம் புலிகளை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்லுங்கள். தயவு செய்து ஒரேயொரு காரணம் சொல்லுங்கள் ஆதரித்துவிட்டுப் போகிறோம். அதைச் சொல்வதை விட்டுவிட்டுப் புலிகளை விமர்சிப்பவர்களை சிறிலங்கா அரசின் ஆதரவாளர்கள் என போகிறபோக்கில் முத்திரை குத்துவது யோக்கியமான செயலா? உசுப்பேற்றி உசுப்பேற்றிவிட்டு முத்துக்குமாரன் முதல் பத்து உயிர்களைத் தீக்குத் தின்னக்கொடுத்துவிட்டுக் காங்கிரஸ் கூட்டணியில் சரணடைந்திருக்கும் திருமாவளவனையோ அம்மாவின் கையில் கூட்டணி வைத்திருக்கும் தா.பாண்டியனையோ சட்டையில் பிடித்து நியாயம் கேட்கத் துப்பில்லை, அந்த வரலாற்றுத் துரோகத்தை எதிர்த்து ஒரேயொரு கல்லைவீச வக்கில்லை, நமக்கு நாட்டாமை பண்ண வந்துவிட்டார்கள். தனியாக ஒரு சிங்கள இயக்குனர் வந்து மாட்டிக்கொண்டபோது கொழுந்துவிட்டெரிந்த அந்தத் தர்மஅடித் தமிழ் வீரம் இப்போது எங்கே போனது? ஒருபுறம் பாஸிசப் புலிகள் மறுபுறம் இனவெறி அரசு என்ற நிலையில் இரண்டில் ஏதாவது ஒரு நிலையெடுப்பது அதிகார விருப்புடைய அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் சரியாயிருக்கிலாம். ஆனால் அது மக்களுக்குச் சரிப்படாது. இன்று மக்கள் விரும்புவது யுத்தத்தையல்ல. அவர்கள் அமைதியையே விரும்புகிறார்கள். உயிரைக் கொடுத்தாவது தாயகத்தை மீட்போம் என்ற நமது முன்னைய முழக்கத்திற்கு இப்போது அர்த்தம் ஏதுமில்லை. ஒரு உயிருக்கு முன்னால் தாயகம் ஒரு பொருட்டேயல்ல என்று கதறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். வன்னியிலுள்ளவனைக் கொல்லக்கொடுத்துவிட்டு லண்டனிலும் பாரிஸிலும் டொரோண்டோவிலும் உள்ளவனுக்கு என்ன தமிழீழம் வேண்டிக்கிடக்கிறது? சமூகத்தின் மனச்சாட்சி எனச் சொல்லப்படும் கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு தார்மீகக் கடமையிருக்கிறது. இந்த இடத்தில் புரட்சியாளர் ப்ரான்ஸ் பனொனின் கூற்றொன்றைச் சுட்டிக்காட்ட நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். “வரலாற்றை உருவாக்குபவன் ஒடுக்குமுறையாளன்தான். அவன் எழுதகின்ற வரலாறு அவனால் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவனது சொந்த வரலாறே. இதற்கு மாறாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகின்றது. ஆனால் அந்த வரலாற்றை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும்தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல” என்பார் ப்ரான்ஸ் பனொன். பனொனின் கூற்று நமது சூழலுக்கு எவ்வளவு பொருந்துகிறது என்பதை விடுத்து பனொன் எழுத்தாளர்களுக்கு வழங்கும் தனித்துவமான வரலாற்றுப் பாத்திரத்தை நீங்கள் கவனியுங்கள். புகலித்திடத்தில் இருக்கக்கூடிய சில எழுத்தாளர்களும் சில இணையத்தளங்களும் இன்றைய யுத்தத்தை நியாயப்படுத்திப் பேசிவருவது ஒன்றும் இரகசியமானதல்ல. அவர்களைப் போலவே நமக்கும் புலிகளின் அரசியல்மீது மீது ஆழமான வெறுப்புண்டு. ஆனால் இந்த யுத்தத்தில் பொதுமக்களின் ஒரு துளி இரத்தம் சிந்துவதைக்கூட நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல் யுத்தமுனையில் தமது இளைய உயிர்களைக் பலிகொடுக்கும் புலிகளின் அடிமட்டப் போராளிகளையும் இலங்கை இராணுவத்தின் சிப்பாய்களையும் நினைத்து நான் துயருறுகிறேன். தலைமையிலிருப்பவர்களின் அதிகார வெறிக்காக அதிகாரத்தில் எந்தக் காலத்திலும் எந்தப் பங்குமில்லாத இவர்கள் உயிர்துறக்கிறார்கள். இன்று புலிகளின் அணிகளில் நின்று போரிடுபவர்களில் கணிசமானோர் புலிகளால் கட்டாயமாப் பிடித்துச் செல்லப்பட்டு அரைகுறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட அப்பாவிகளே என்பதையும் யுத்த முனையின் முன்னரங்கத்தில் தள்ளிவிடப்பட்டிருக்கும் இலங்கை இராணுவவீரன் இராணுவச் சீருடை போர்த்த ஏழை விவாசாயியே என்பதையும் நாம் மறந்துவிட இயலாது. நாங்கள் இலங்கை அரசாலும் புலிகளாலும் இந்திய அமைதிப்படையினராலும் துரத்தப்பட்டு அகதிகளாக ஓடிவந்தோம். நாம் இங்கு வந்தபோது ஜெர்மனியில் பாணும் சலாட்டும் பொக்கட் மணியும் தந்து முகாமிலே வைத்தார்கள். முகாம் வாழ்வு ஒரு வாழ்வா என்று பிரான்ஸுக்கு எஸ்கேப் ஆனோம். குடியுரிமை கிடைத்ததும் பிரஞ்சுக்காரன் ஆங்கிலம் பேசத் தெரியாத முட்டாளாயிருக்கிறானே என்று பீல் பண்ணி லண்டனுக்கு வந்தோம். ஒருபகுதி கிளம்பி கனடாவுக்கும் போனோம். ஓடினோம் ஓடினோம் உலகின் எல்லைக்கே ஓடினோம். இனி ஓட இடமில்லாததால் அப்படியே வீடும் காருமாய் மெல்லச் செட்டிலாகிவிட்டோம். இதில் தவறொன்றுமில்லை. ஒரு சுதந்திர உயிரியாக இருக்க விருப்புறுவதும் இவ்வுலக இன்பங்களைத் துரத்திச் செல்வதும் மானிட இயல்பு. ஆனால் இங்கிருந்துகொண்டு அங்கே வவுனியா முகாமிலே மக்களை இராணுவம் அடைத்துவைத்திருப்பது சரிதான் எனச் சொல்லுபவனைச் செருப்பால் அடிக்கவேண்டாமா? அவை அகதிகள் முகாம் கிடையாது. அவை தடுப்புமுகாம்கள். அல்ஜீரியாப் போராட்டத்தின் போது பிரான்ஸ் அல்ஜீரியப் பாலைவனங்களில் அமைத்த தடுப்புமுகாம்களை ஒத்தவை அவை. மக்களுடன் புலிகளும் கலந்து வந்துவிட்டதால்தான் இந்த ஏற்பாடு என்பது ஒருதரப்பு அறிவுஜீவுகளுடையவாதம். இது முஸ்லீம் மக்களில் சிலர் காட்டிக்கொடுத்ததால் ஓட்டுமொத்த முஸ்லீம் மக்களையும் வெளியேற்ற வேண்டியதாகப் போய்விட்டது எனப் புலிகள் வைக்கும் அயோக்கியத்தனமான வாதத்திற்குச் சற்றும் குறைவில்லாத அயோக்கியத்தனம். தோழர்களே தயவு செய்து உண்மையைப் பேசுங்கள், கோத்தபாய ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போலப் பேசாதீர்கள். இந்தத் தடுப்பு முகாம்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கு இயங்கப்போகின்றன எனத் தெரியவில்லை. யுத்தப் பகுதிகளிலிருந்து தப்பிவரும் மக்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பதும் அரசின் கடமை. ஏனெனில் இவை ராஜபக்சவின் சொந்தப்பணத்திலிருந்து பெறப்படுபவையல்ல. இவை இலங்கையின் உழைக்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுபவை. ஆனால் அகதியாய் வந்த மக்களை மட்டுமல்லாமல் தாம் கைப்பற்றிய பிரதேசங்களிலிருந்த மக்களையும் அவர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து மந்தைகளைப் போல ஓட்டிவந்து தடுப்புமுகாம்களில் அரசாங்கம் அடைத்து வைத்திருப்பது போர்க்குற்றம் அல்லாமல் வேறென்ன? “சர்வாதிகாரம் ,ஒடுக்குமுறை, வன்முறை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் எந்தவொரு வடிவத்தாலும் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும் விதிவிலக்கேதுமின்றி அவையனைத்திற்கும் பதிலடி கொடுப்பதும் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதும் பாட்டாளி வர்க்கத்தின் கம்யூனிஸ்டுகளின் கடமை” என்பார் லெனின். இது வேறெந்த வர்க்கமுமல்ல நமது சொந்த வர்க்கம் அங்கே ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு எழுத்தாளரின் கடமை பகிரங்கமாக உண்மையைப் பேசுவதும் எழுதுவமாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன். அரசியல் சாணக்கியத்தனங்களும் சதுரங்கக் காய்நகர்த்தல்களும் திரைமறைவுப் பேச்சுகளும் இரண்டகமும் நம்முடைய வேலையல்ல. அது நமக்குச் சேரவும் சேராது. நமது சூழலில் இலக்கியமும் தீவிர நேரடி அரசியலும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பகுத்துப் பார்க்க முடியதவாறு ஒன்றில் ஒன்று கலந்திருக்கின்றன. அதிகார சக்திகளின் எந்தவொரு மக்கள் விரோத செயலுக்கும் நாம் உடனுக்குடன் எதிர்வினைகள் செய்ய வேண்டும். அதிகார சக்திகளின் நிழலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நின்று நாம் எழுதுவதைவிட எழுதாமல் சும்மாயிருந்து மதுவருந்தி மாய்வதே மேலானது என்பது எனது உறுதியான கருத்து. ஒரு புனைவு எழுத்தாளர் அரசியல் எழுத்தில் ஈடுபடும்போது அவனுடைய படைப்பாற்றல் திசைதிருப்பப்படுகிறது என்றொரு கருத்தும் இலக்கிய எழுத்துலகில் காலம்காலமாய் ஒருசாராரால் பரப்பப்பட்டுவருகிறது. நமது சகமனிதர் கொல்லப்படும்போது, சமூக இழிவில் வாழும்போது, அடிமைத்தனத்தில் சிக்கியிருக்கும்போது அதைக் குறித்துப் பேசாமல் படைப்பாவது மயிராவது. நம் ஒவ்வாரு எழுத்தும் நமது சகமனிதருக்காகத் துயருறுவதே இன்றைக்கான புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக இருக்க வேண்டும். கொண்டாட்டத்தையும் காதலையும் நம் அடுத்த தலைமுறை எழுதட்டும். அதற்கான முன்பந்தனையாக நாம் உண்மையை எழுதவேண்டும். அதாவது துயரை எழுதவேண்டும். ஏனென்றால் நம் காலத்தில் உண்மை என்பது துயராய் இருக்கிறது. இங்கே புகலிடத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் தாம் நடத்தும் பிரமாண்டமான பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் சாவிலும் வாழ்வோம் என்ற கோஷத்தை முன்வைக்கிறார்கள். அதாவது ஈழத்தில் மக்கள் செத்தால் இவர்கள் இங்கே வாழ்வார்கள் என்பதுதான் இதன் உட்கருத்து. தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஊடகங்கள், கோயில்கள், தொண்டுநிறுவனங்கள் நடத்தி நாங்கள் வாழ்வோம். அந்த மக்களைச் சுரண்டித் தின்ற பாவத்திற்காகப் போகாத ஊருக்கு ‘வணங்காமண்’ கப்பல் விட்டுக் குற்ற உணர்வைத் தவிர்த்துக்கொள்வோம் என்பது இதன் வெளிக்கருத்து. பிள்ளையார் பால் குடித்ததற்குப் பிறகு அய்ரோப்பாவில் உருவாக்கிவிடப்பட்டிருக்கும் ஆகப்பெரிய முட்டாள்தனமும் ஏமாற்றும் இந்த ‘வணங்காமண்’ பயணம்தான். எங்களுக்குப் பேரணிகள் நடத்தச் சக்தியில்லாமலிக்கலாம். ஆனாலும் நாங்கள் எதிர்முழக்கமாய் ‘மரணத்திலிருந்து வாழ்வுக்கு’ என்று சொல்லுவோம். அதுதான் இந்த ‘எதுவரை’ சிறுபத்திரிகையின் முழக்கமாயும் இருக்கிறது. தோழர்களே! ஒரு கருத்துத் தன்காலத்தில் எவ்வளவு தூரத்திற்கு செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பதைவிட அந்தக் கருத்தில் பொதிந்திருக்கும் அறத்தின், தார்மீகத்தின் அளவை வைத்தே அந்தக் கருத்து எதிர்காலத்தில் மதிப்பீடு செய்யப்படும். நாம் அறத்தைப் பேசுகிறோம். அதையே எழுதுவோம். வாய்ப்பளித்த தோழர்களுக்கு நன்றி, வணக்கம்.
நன்றி - சத்தியக்கடதாசி நன்றி புகலி.காம்Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 4/04/2009 10:59:00 am |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment