சூரியாள்

Friday, January 16, 2009
நடனங்களில் மிதிபடும் சுயமரியாதை
நடனங்களில் மிதிபடும் சுயமரியாதை


தமிழ் நாட்டின் இன்றைய அரசியலில் மிகப் பெரிய பலமாய் இருந்து கொண்டிருப்பதுவும் அஸ்திவாரமாய் மண்ணுக்குள் புதையுண்டு நமக்கு காணக் கிடைக்காததுவாய் இருந்து கொண்டிருப்பதுவும் சுயமரியாதையே அவற்றில் அடிப்படையில் தான் அரிச்சுவடி எழுதப் பழகிய அரசியல் காட்சிகள் இன்று ஒவ்வொரு தமிழ்குடிமகனும் அறிந்தும் அறியாமலும், எதிர் மறையாகவோ நேர் மறையாகவோ தாக்கம் தந்து , கொடியேற்றி கோட்டைக்குப் போய் பொற்காலம் என்று பொய்யுரைத்து ஊடகங்களில் மூழ்கிக் கிடக்கின்றன.
அப்படி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருந்த அந்த மந்திரச் சொல்லின் ஒளி நாமே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமையெல்லாம் தீண்டித் தழுவி புனிதப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டாமா? எப்போவிருந்து அதன் நிழலின் இருளை நாம் மனிதனின் மேல் அவன் உழைப்பின் மேல் விழ விடத் தயாரானோம்.
நடனங்கள் உடல் உழைப்பில் களைத்துச் சோரும் மனிதன் அதே உடல் அசைவின் மூலம் மனித உற்சாகத்தை மீட்டெடுக்கும் ஒரு கலை.
மூளையின் உழைப்பில் சோர்வுறும் மனிதன் விரும்பி தன்னை மீட்டெடுக்க கண்டெடுத்த கலை வடிவ உடல் உழைப்பு நடனம்.

அந்நடனம் எங்கெங்கும் இந்த இரண்டாண்டுகளில் ஊடகங்களில் விற்பனைப் பிரதானப் பொருளாகிப் போக அதில் அடிக்கடி மிதிபடுவது மனிதனின், மனிதத்தின் சுயமரியாதையே

சமீபத்தில் ஒரு நிகழ்வில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து 4 வருடங்களாக அந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து கொண்டிருக்கின்றேன். கால மாறுதல்களை அதனால் அவதானிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. முதல் இரண்டு வருடம் வரை நடந்த போட்டிகளில் வெற்றி தோல்விகள் வெகு இயல்பாய் ஏற்றுக் கொள்ளப் பட்டு மாணவ மாணவிகள் ஆட்டங்களை கொண்டாட்ட மனோநிலையோடு முடித்து விட்டுச் சென்றார்கள்.போன வருடம் முதல் அதிலும் இந்த வருடம் இன்னும் அதிகமாக போட்டியில் சில விசயங்கள் எனக்கு நெருடலாய் படத் துவங்கின. முதலில் அப்போட்டிகளில் உற்சாகமான நல்ல விசயங்கள் .
நடனம் என்பதன் மேலிருந்த தயக்கம் , மனத்தடை எல்லாம் கழன்று விட்டன. அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களுக்கு நிகரான உடலசைவுகளை தங்களாலும் முடியுமெனச் செய்வதற்கும் , அதற்கு வீட்டிலுள்ளோரின் குறிப்பாக பெற்றோரின் ஆதரவும் கிடைத்து வருவதும் மிகப் பெரிய விசயம்(உணர்ச்சி வசப் பட்டு திரைபடத்தை மிஞ்சும் உடலசைவுகளை போலச் செய்வது துரதிர்ஷ்டவசமே)
80 களில் நடன நிகழ்ச்சிக்கு பெயர் கொடுத்தேன் என்பதற்காக வீட்டில் நான் அடி வாங்கிய காலங்கள் நினைவுக்கு வருகின்றன.பொது இடங்களில் பெண் உடலசைவு இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படி இருக்கக்கூடாது எனும் காலங்கள் தகர்ந்து விட்டன. நாட்டிய நிகழ்வு முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில் மாணவர்களால் கேலி செய்யப் பட்டதாலேயே அடுத்த வாரமே படிப்பு நிறுத்தி திருமண பந்தத்துக்குள் ஆட்படுத்தப் பட்ட எம் பள்ளித் தோழியின் நினைவும் இன்னும் மறையவில்லை எனக்குள்.
ஆனால் இவையெல்லாம் மாறியிருக்கின்றது . போட்டி போட்டுக் கொண்டு போட்டிகளுக்கு தயார் செய்கின்றனர். அந்த சந்தோசத்தோடு முடிந்து விடுகின்றதா? அதுதான் இல்லை
சமீபத்திய தொலைக்காட்சி நடனக் காட்சிகளின் பாதிப்பில் எல்லாரும் திறமை சாலிகளாக அல்லது திறமை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் ஒரு பொதுமைக்கு வந்து விட எல்லாரும் ஒரே போல் சிறப்பாக வெளிப்படுத்தினர்.தேர்வுக் குழுவிற்கு மதிப்பெண் போடுவதில் சிக்கல் வருமளவிற்கு உண்மையிலேயே 27 நடனக் குழுவினரிடையே 10 குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருக்க ஒப்பீட்டு ரீதியிலும் , ரசனை ரீதியிலும் முதல் மூன்று குழுக்களை மூவர் அடங்கிய குழு தேர்ந்தெடுத்து அறிவித்து முடிக்க, ஆங்காங்கே சோகமே உருவாக பரிசு பெறாத மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர். என்னேரமும் அழுது விடத் தயாராயிருந்த மனோநிலையில். தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தொடர்களில் அழுது கொண்டிருந்தது காணாதென்று நடனப் போட்டிகளில் தோல்வியடைந்தவர்களின் அழுகையை நெருக்கத்தில் தொடர்ந்து காண்பித்து கண்ணீரில் உணர்வுகளின் வெளிப்பாட்டில் காசு பார்க்கும் அயோக்கியத் தனம். அது மட்டுமல்லாது அதே அழுகின்ற மனோ நிலையை பக்க விளைவாகவும் தந்து போயிருப்பதை நினைக்க எவ்வளவு மோசமான உணர்வுச் சிதறல்களுக்கு இடம் கொடுத்து விடுகிறோம் நாமே அறியாமல் என்ற கவலை வருகின்றது.
இது தெற்கில் ஒரு ஊரில் என்றால் இன்னொரு எதிர்திசை மனோபாவமும் இருக்கின்றது. அது சென்னை போன்ற இடங்களிலிருந்து கிளம்புவது
சென்னையில் இதே போல் ஒரு கல்லூரிக் கிடையே நடந்த நடனப் போட்டிக்கு எனது நண்பர் ஒருவர் நடுவராக போயிருந்த அனுபவத்தைச் சொல்லிய போது எதிர் திசை மனோபாவத்தை உணர்ந்தேன். நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகளும் சிறப்பாக செய்திருக்கின்றனர். எல்லாருக்குள்ளும் வென்று விட வேண்டும் என்ற முனைப்புக்கும் மேலாக “எப்படியாவது” வென்று விடுதல் எனும் மனோபாவம் வெறியாகவே இருப்பதை உணர முடிந்தது. அதை இப்படியும் சொல்லலாம். தோல்விகளை இயல்பாக எடுத்துக் கொள்வதை தொலைத்துக் கொண்டே இருக்கின்றோம்.

அந்த நடுவர் இடைவேளையின் போது செல்லிடைப் பேசியில் பேசுவதற்காக தனிமை நோக்கிச் செல்ல அங்கு வந்த மாணவி தன் நடனத் திறமை எப்படி இருந்தது என கேள்வி எழுப்பியிருக்கின்றார். நடுவரோ நன்றாக இருந்தது எனச் சொல்ல அடுத்து வருவபர்கள் இன்னும் நன்றாகவே ஆடுவார்கள் அதனால் நீங்கள் எங்களுக்கு இன்னும் கூடுதல்மதிப்பெண் போடுங்கள் நாங்கள் வெற்றி பெற என்று கேட்டிருக்கின்றார். அவர் அதிர்ந்து போய் நிற்க “ மதிப்பெண் கூடப் போட்டால் உங்களுக்கு ஒரு முத்தம் தருவேன் என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியில் உறைய வைக்க , எங்கே எதற்கும் தயாராயிருக்கும் அம்மாணவி ஏதாவது ஏடாகூடாமாக நிகழ்த்தி விடுவாளோ எனப் பயந்து மீண்டும் கூட்டம் இருக்கின்ற இடத்திற்கே திருப்பி வந்து விட்டார்.காதல் குறித்து அங்கு பேசப் பட்ட பகிரப் பட்ட கருத்துக்களும் சொல்லப் பட்ட பதில்களும் வாழ்வின் புனிதங்களைப் பற்றிய எல்லாவற்றையும் உடைத்துப் போடுவதாய் இருக்கின்றது. வெற்றி பெற்றோம் என்ற பெருமையைத் தவிர வேறு எதையுமே தந்திடாத ஒரு கல்லூரிகளுக்கிடையேயான நடனப் போட்டியில் தோல்விக்காக அழுவதும், தோல்விகளைத் தவிர்க்க எந்த விலையும் தரத் தயாராயிருப்பதையும் , சுயமரியாதை பற்றிய சிந்தனை அறவே இல்லாமல் போய் விட்டிருப்பதன் அடையாளமே இது . இது மோசமான அடையாளம்
தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் அசைவே “சுயமரியாதை” என்ற புள்ளியிலிருந்து தொடங்கி நிற்க தெரிந்தோ தெரியாமலோ அனிச்சைச் செயலாகவே கூடவோ சுயமரியாதை உணர்வு ஒவ்வொரு செயல்பாட்டிலும் இதுதானென்று பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்திருக்க வேண்டாமா?
சுயமரியாதையைக் கைவிட்டு கண்ணீர் சிந்துவதும் , வெற்றிக்காக குறுக்கு வழிகளும் நியாயமே எனும் இரு துருவ செயல்பாடுகளும் நிராகரிக்கப் படவேண்டியவை. ஊடகங்கள் நிராகரிக்கப் படவேண்டிய எதிர்மறைகளை அவர்களின் சுயநலங்களுக்காக நன்றாகவே விதைத்து விடுகின்றன.
திறமையும் வெற்றியும் “சுயமரியாதை” எனும் அஸ்திவாரத்தின் மேலே எழுப்பப் பட வேண்டிய கட்டிடங்கள்
நன்றி: அதிகாலை.காம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9694&Itemid=163

Labels:

posted by mathibama.blogspot.com @ 1/16/2009 09:52:00 am  
1 Comments:
  • At Friday, January 16, 2009 11:49:00 am, Blogger Robin said…

    //வெற்றி பெற்றோம் என்ற பெருமையைத் தவிர வேறு எதையுமே தந்திடாத ஒரு கல்லூரிகளுக்கிடையேயான நடனப் போட்டியில் தோல்விக்காக அழுவதும், தோல்விகளைத் தவிர்க்க எந்த விலையும் தரத் தயாராயிருப்பதையும் , சுயமரியாதை பற்றிய சிந்தனை அறவே இல்லாமல் போய் விட்டிருப்பதன் அடையாளமே இது . இது மோசமான அடையாளம்// 100% உண்மை. சமுதாயம் எந்த அளவுக்கு சீரழிந்து வருகிறது என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் இது. இதை போன்ற பல சம்பவங்களை அன்றாடம் சாலைகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் காண முடியும். பல அறிவு ஜீவிகளும் கலைஞர்களும் தங்கள் வயிற்று பிழைப்புக்காக இந்த சீரழிவுகளை ஊக்குவிக்கிறார்கள்.

    தங்களுடைய எழுத்து நடை நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates