|
Tuesday, October 21, 2008 |
கவிதை-முல்லை |
முல்லை திலகபாமா
பட்டி வீரன் பட்டி செம்மண்ணில் சேறாடி பழனி மலைத் தொடரில் சருகுகளோடு தொலைந்து சிவகாசி கந்தக பூமியின் கரிசல் காட்டில் கருவேலங்காடுகளை தொலைக்க எழும்பும் சீமைக் கருவேலங்களுக்கிடையில் பூத்துச் சிரிக்கும் கடலைப் பூவொன்றின் வணக்கங்கள்
கவியரங்கம் கவிதையின் பொருள் மாறிப் போன இன்னாளில் இது வெறும் சொற்சிலம்பம் எதுகை மோனையில் அலங்கரிக்கப் பட்ட என்குழந்தையின் மரப்பாச்சி பொம்மை வரவேற்பறை கலைப் பொருட்கள் தூசுகலடையலாம், சமயம் கிடைக்கையில் நாம் துடைத்தும் வைக்கலாம் கொல்லை துளசிச் செடியாய் இன்று கவிதை தினமொரு அரும்பு விடும் துடைக்கத் தேவையில்லாது புதிதாய் இலை துளிர்க்கும் ஆன்மீகத்திற்கு படையலாகும் அவசரத்திற்கு அரும் மருந்துமாகும்
கலையும் செடியும் சேர்த்து வளர்த்துபார்க்க எடுத்த முயற்சியில் என் கவி அரங்கத்தில் சிலம்பமாடும்
முல்லை
இலைகள் துளைத்து நிலத்தில் கோலமிட வெளிச்சப் புள்ளிகள் வைத்துப் பார்க்கும் பகலவன்
காடுகளின் தோலைத் துளைத்து விழுதுகளின் வழி இறங்கி விதையாக புதையுண்ட பொழுதினில்
வேர்கள் நீர்தனை நிறமாற்றி அடிகள் கடந்து தன் தலைமேலேற்றி வெளிச்சப் பகலிலும் தொலையா ஆயிரம் நிலவுக் குளிர்ச்சிகள் இருளிரவுக்கு போட்டியாக தாங்களானதை தேன் நிரப்பி திசைகள் பரப்பும் மணம் தூவி அதிராது மௌனப் பறை கொட்ட
தொடை தட்டல் இல்லாதும் தாளசுதி பிசகாது காற்றெங்கும் அரூபமாய் சுயம்புவாய் நிரம்பியும் அழிந்தும் வேட்கை, பசி, தேடல் ஒலியாளேயே நிரத்திப் போகும் பறவையினங்களும் பூச்சியினங்களும் எழுப்பும் ஒலி மொழிகளும் திசை எழுப்ப
பாம்புக்கு மண்ணில் புற்றாகி எலிகளுக்கும் புழுக்களுக்கும் வளையாகி பறவைகளுக்கு மரத்தில் கூடாகி விலங்குகளுக்கு பாறையில் குகையாகி நீந்துபவைக்கெல்லாம் நீரில் விரிப்பாகி பாதியில் குடிசைக்கு இடம்பெயரா ஆதியின் சமத்துவபுரமாய் அரசியலின் சாயம் தொடாத சாதியற்ற சமத்துவபுரமாய் இருந்த காடே இருந்திருந்த காடே
செங்கதிரோன் உள்நுழையா வீடு கதிரின் ஒளி வந்தாலும் இலையின் விசிறலில் குளிர்வித்துத் தந்திருந்த ஆரண்யம் ஊற்று , ஓடையாகி ஓடை நதியாகி நதி அருவியாகி மேடு பள்ளம் பார்க்காது பூமியெல்லாம் நனைத்து சிவப்பின் வர்ணம் வீசாதும் பொதுவுடமை நிகழ்வாய் இருந்த காடே இருந்திருந்த காடே
குறவஞ்சி பலாச்சுவையில் தமிழ்சுவையின் பந்தாட்டத்தில் சிங்கன் சிங்கி தேடலில் காதலில், ஊடலில் கூடலில் வாசிக்கையில் தேனூற இருந்த காடே இருந்திருந்த காடே
சுவாசக் காற்றை காட்டின் மொழியாக்கி மூங்கில் துளை வழி ஏகவிட்டு இசையாக்கி வண்ணத்துப் பூச்சியின்சிறகின் வழி ஓவியமாக்கி
உதிரும் இலை சருகாக்கி சருகின் மக்குதலில் மண்ணாகி மண்ணின் ஈரத்தில் வேராகி வேரின் உறிஞ்சலில் பச்சையமாகி பச்சை சுவாசிக்க வண்ணபூவாகி ஒட்டு மொத்த கதையோட்டத்தில் காட்டின் நாடகமாகி கலைகள் அறுபத்தி நான்கும் உயிர்த்தெழுந்த மனிதகுலத்தின் தொப்புள் கொடியாகி இருந்த காடே இருந்திருந்த காடே
வல்லினம் மெல்லினம் இடையினமெல்லாம் தன்னினமாய் இயற்கையின் இயல்பாய் இருந்த காடே இருந்திருந்த காடே
நீர்முள்ளி நரி கண்டல்,வெண்கண்டல் கருங் கண்டல் பன்றி குச்சி சிறு கண்டல் தில்லை திப்பரத்தை ,சுரபுன்னை கருஞ்சீலை வெள்ளைச் சீலை நெல்ரை தேக்கு பலா கமுகு சந்தனம் ஆயிரமாயிரம் பிரிவிருந்தும் அடித்துக் கொள்ளாத சாதியினங்களாக இருந்த காடே இருந்திருந்த காடே
அன்றொரு நாள் நீயிருந்தாய் ஐவகை நிலங்களில் ஒன்றாக
உம்மிடம் எம் ஆதித்தாய் கற்றாள் ஆதிக்க மனோபாவமின்றி பல்லுயிர் பகுத்துண்ணும் கலை ஒரு நெல்லை நூறாக்கும் நிலை
சுற்றம் சேர்த்து சுகம் சேர்க்க அவளாகும் திறன் கண்டு சுயநல ஆடவனொருவன் அவளுக்கு விரித்தான் வலை பாசவலைப் போர்வையில் ஒரு மோசவலை முதல் முதலில் மனிதத்திற்கெதிராக விரிக்கப் பட்ட ஆதிக்க வலை
பாவமவன் தேவதையைக் கண்டு விட்ட பிறகும் உழைக்கும் கோடாலிகளையும் விட்டு விட்டு தங்கக் கோடாலிகளையே வேண்டித் திரியும் முதல் ஆதி மனிதன்
தேவதைகளை விரயமாக்கி விட்டு பெண்ணையும், உழைப்பையும், மண்ணையும் உணர்வுகளையும் தின்னத் தொடங்கி பொருளாக்கி கொட்டை போட்ட முதல் ஆதி மனிதன் முதலாளி மனிதன் முதலாளித்துவ மனிதன்
நிலம் அவனுடமைப் பொருளாக நிலம் பார்த்த பெண்ணும் பொருளாக மாறத் துவங்கிய தருணம் மனிதன் சமத்துவ சந்தோசங்களுக்கு கல்லறை கட்டிய தினம்
உலக அதிசயமாய் கல்லறைகளையே கொண்டாடும் இந்நூற்றாண்டில் மனித உணர்வுகள் பொருளாகி ஊரெங்கும் உணர்வுக் கல்லறைகள் எல்லையெங்கும் இறக்க வழியில்லா சுமைதாங்கிகள்
இன்றோ குந்தித் தின்றாலும் குறையாது மலை என்பதால் குறைவுபடாது குறிஞ்சி
சேற்றில் கால் வைக்க நாம்மறந்தாலும் சோற்றில் கை வைக்க மறக்க முடியாததால் ரூபாய்க்கு ஒன்றென்று தருவதாய் சொல்வதாலும் வழித்து கவிழ்த்துவிடாத அட்சயமாய் துளிர்த்துக் கொண்டேயிருக்கும் மருதம்
இல்லாத நிழலினால் மனிதம் வெயிலுக்கும் ஒதுங்காததால் மறையாது ஒளிரும் பாலை
இருப்பவரெல்லாம் குடித்தாலும் எல்லாரையும் குடித்தழிக்கும் ஆழமாய் அலை வீசும் அழியா நெய்தல்
ஐம்புல மனிதன் , ஐம்பூத சாட்சியாய் ஐந்நிலன் ஆள ஐந்தறிவு விட்டு ஆறாம் அறிவு சேர்க்க
முல்லை படர கொம்பற்று தேர் நல்க பாரியும் அற்று தேய்ந்து சுருங்கிப் போனது இலக்கண முல்லையாக இல்லாது இன்றைய நவீன முல்லையாக
மனுசன் போயி மரங்களைத்தான் சாதி பிரிச்சான் ரம்பமிட்டு கால வளையம் அறுத்து முடிச்சான் பெண்ணின் நிலவுடமை பறித்து எடுத்தான் வேலி கட்டி தாலி கட்டி ஆளப் பழகினான் அவனுக்கான நிலமென்று கல்லை ஊன்றினான் பெண் வாழ்வெல்லாம் தன்னாலென்று சொல்லி மூடினான் உரிமைகளின் கண்ணை மூடினான்
சமத்துவத்தின் கழுத்தில் நின்று தாண்டவமாடினான் சாதியெனும் பேயோடு சேர்ந்து பிச்சாந்தேகி பாடினான் சலுகைகளை சாதிக்கென்று கேட்டு வாங்கினான் சிந்தனையினை பிரிவினைகள் வாட்ட விடுகின்றான் இடஒதுக்கீடு உள் ஒதுக்கீடு வார்த்தை போடுறான் சாதியை கடப்பதுவை முடியாமல் தவிக்கின்றான். கடமைகளை திரையிட்டு மறைக்கின்றான்
காங்கிரீட்டும் கணிணியும் சார்ந்த இடமே இன்று முல்லையாக சாதியும் பெண்ணடிமையுமே அதன் அதிக பட்ச எல்லையாக வளர்ச்சியின் பாதையை தொடர் செப்பனிட முடியா தொல்லையாக இன்று ஆகிப் போனதேனென்று சிந்திக்காது விட்டான் வசதியாக
நாலு வழிச் சாலையெல்லாம் கண்டு மகிழ்ந்தோம் அசோக வழி மரங்களெல்லாம் சிதைவதை மறந்தோம் குடிசைகள் அடுக்கு மாடிகளானதை கண்டு மகிழ்ந்தோம் மனிதன் இடம்பெயரமுடியாமல் போனதை மறந்தே போனோம்
உணர்வுகள் அலைகளாய் கடந்ததை கேட்டு மகிழ்ந்தோம் அண்மையில் குண்டே வெடித்தாலும் காதை மறந்தே போனோம் திருநாட்களெல்லாம் தள்ளுபடியாய் மாற்றி மகிழ்ந்தோம் உணர்வெல்லாம் சேர்ந்து விற்றதை காணாது வாங்கி வந்தோம்
மனிதம் என்ற ஒன்றை ஆணும் பெண்ணும் என இரண்டாக்கினோம் பின்னும் ஆயிரம் பேதம் சொல்லி சாதியாக்கினோம் இரண்டாக்கி நாலாக்கி கூறு கூறுகளாக்கி எதுவுமில்லாது ஆக்கினோம் எப்போ மீண்டும் எல்லாம் நல்லாயிருக்கும் வனமாவோம் முல்லை எங்கள் எல்லையில் வளர நீருமாவோம்
இதோ இதோ காடுகளிலிருந்த கொல்லிப் பாவை கணிணியோடு வலம் வருகின்றாள் அழைப்புக்கு செல்லிடப் பேசி ஆதரவுக்கு எம் பி 3 ஓடும் அவசரத்திற்கான ஓட்டும் அத்தியாவசியத்திற்கான உடை
இருந்தும் காங்கிரீட் காடுகளிடை அன்பின் விதையை ஊன்றுவாள்
எலி அதன் வளையிலும் சிங்கம் அதன்குகையிலும் சுயம் தொலைக்காது வாழ்ந்து விட இடமளித்த காடுகளை முளைக்கச் செய்வாள்
காதலர் தினங்களும் அன்னையர் தினங்களும் அட்டைகளுக்குள் உறிஞ்சப் படும் அவலம் தவிர்ப்பாள்
புனிதம் போற்றுவாள் போலி அகற்றுவாள் அணைகளின் அதிகார சுவருகள் களைவாள் போத்தல்கள் தண்ணீரை கொண்டு செல்லவே அன்றி விற்பனைக்கல்ல என்று நிறுவுவாள்
ஆயிரம் கைகள் இருகைகளுக்குள் அடக்கி வைத்தே அகிலம் செழிக்க என் ஆதித் தாயின் புதிய விதையை எங்கும் நடுவாள்
அவளுக்கும் அவனுக்குமான சந்திரமதி தாலி வரத்தை எல்லாருக்கும் தந்து காதலதை உடலோடு அல்ல நெஞ்சோடு தைத்துப் போவாள்
நனையட்டும் விதைகள் முளைக்கட்டும் காடுகள் சுயமும் பொதுமையும் சேர்ந்தே பிழைக்கLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 10/21/2008 04:30:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment