சூரியாள்

Monday, June 09, 2008
2007 டிசம்பர் மாத இலங்கை பயணம்
இலங்கை 29.11.07-10.12.07

28ம் தேதி காலை வைகை எக்ஸ்பிரஸில் துவங்குதென் பயணம் எப்பொழுதும் போல் தன்னந்தனியாகவே . ஆனால் அதுவே எனது விருப்பமானதாக ஆகி விட்டது . இரண்டு மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இரயில் 3 மணிக்கே வந்து சேருகின்றது . சென்னையில் மாலை 5 மணிக்கு fஒல்க் லொரெ சிறுகதைகள் பற்றி அமெரிக்கா விலிருந்து வந்திருக்கும் பேராசிரியப் பெண்மணி உரை நிகழ்த்துவதாக மெயிலில் வந்த அழைப்பிதலை கண்டதால் அங்கு செல்கின்றேன் அவரது பெரும்பாண்மை உரை இராமாயணத்தைச் சுற்றியே இருந்தது . புதுமைப் பித்தன் குமுதினி தாண்டி வரவே இல்லை. அங்கு அதிகாலை இணைய தளத்தை சார்ந்த அசோக் பாலு இருவரைச் சந்திக்கின்றேன் பல்வேறு விவாதங்களுடன் இரவுச் சாப்பாடு பொழுது போகின்றது.காலையில் கிளம்பும் நினைப்புடன் தூங்கிப் போகின்றேன். வெங்கடேஷ் பொறாமையாக இருக்கின்றது என்பதை பெருமையுடன் சொல்லிப் போகின்றார். 8000 ரூபாய் 200 டாலராக மாற்றியிருக்கின்றேன்.
29.11.07

காலை 7.30 மணிக்கு விமான நிலையம் போகின்றேன். பாதுகாப்பு சோதனைகள் முடித்து குட்டிரேவதியை சந்திக்கின்றேன். ஆனந்தி, ஏற்கனவே வந்து காத்துக் கொண்டிருந்தவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன்.2002இல் பாண்டிச் சேரியில் பெண்கள் சந்திப்பில் சந்தித்தது . அதற்கப்புறம் இங்குதான் சந்திக்கிறேன் குட்டி ரேவதியை . காலை பசிக்கு சாண்ட்விட்ச் , காப்பியும் சாப்பிட்டு விட்டு விமானத்திற்காக காத்திருக்கின்றேன் ஆனந்தி 2ம் தேதி திரும்புவதாக சொல்கின்றார். குட்டி ரேவதி தீர்மானிக்க வில்லை என்கின்றார் விமானத்தில் மூவருக்கும் வேறு வேறு இருக்கைகள். இலங்கையில் இறங்கும் போது சேர்ந்து கொள்கின்றோம். 100 டாலரை இலங்கை ரூபாய்மதிப்பு 109 மதிப்பில் மாற்றிக் கொள்கின்றேன். போன முறை வந்திருந்த போது நேரத்தை அரை மணி கூடுதலாக சரி செய்ய வேண்டி இருந்தது. இந்த முறை அந்த மாற்றம் அவசியப் படவில்லை. எங்களுக்காக காத்திருந்த வாகனஓட்டி எங்களை ஏற்றிக் கொண்டு செல்கின்றார்.நான் பத்மா வீட்டில் இறங்கிக் கொள்வதாக சொல்கின்றேன். 3 வருடத்திற்கு முன்னால் வந்தது. இடம் கண்டு பிடித்து விடுவேனா? ஆம் எளிதில் கண்டு பிடித்து விட்டேன். நேரில் பார்க்க பார்க்க தன்னையறியாமலே பாதை குழப்பமின்றி தெரிந்தது
சாப்பிட்டு விட்டு கிளம்பி பட்டு வீட்டிற்கு போகின்றேன் . வாசல் கதவை எத்தனையோ முறை தட்டியும் திறக்கவில்லை. திறந்தே இருக்கின்ற கதவை பூட்டியிருக்கிறதென்று தட்டிக் கொண்டு இருந்திருக்கின்றேன். தள்ளிக் கொண்டு உள்ளே போனால் வீட்டிற்குள் ஆள் இருப்பதற்கான அரவம் இல்லாது இருக்கின்றது. தொலைக்காட்சியின் ஒளி தெரிய, வீட்டினூள் பகலிலேயே வெளிச்சம் விரும்பாது தொலைக்காட்சி முன்னால் வேறு வழியின்றி பெண்கள் உறைந்து கிடக்கின்றனர்.என் மனதுக்குள் பிசையத் துவங்கும் காட்சி அது.
நிரந்தரமற்ற வாழ்க்கை தந்த அதிருப்தி செயலற்றவர்களாக்கி விடுவதை அவர்களோடிருந்த 2மணி நேரமும் சிரிப்புக்கும் பேச்சுக்கும் இடையில் உணர முடிந்தது. பட்டு நான் போயிருந்த நேரம் குழந்தைகளை பள்ளியிலிருந்து கூட்டி வரச் சென்றிருந்தார். நலவிசாரிப்புக்குப் பின்னர் அன்றைய நிலவரம் பேசிக் கொண்டிருந்தோம்.அரசியல் தவிர்க்க முடியாத அன்றாட பிரச்சனையாகி விட்டது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட . நான் ஆட்டோவில் வரும் வழியில் எதிர் திசையில் நகருக்குள் நுழைபவர்களை விசாரிக்க காவலர்களும், அதற்கான காத்திருப்பு மற்றும் பதட்டங்களோடு நெடும் வரிசை இருந்தது.இன்றைக்கு வருகின்ற வழியில் எத்தனை பேரை பிடித்து விட்டு போய் விட்டார்கள் என்றும், தமிழர் எனும் அடையாளமோடு வெளியில் நடமாட முடியாத சிக்கல்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பேச்சில் தொடர்ச்சியாக வந்த பூஸா எனும் வார்த்தையும், அதை உச்சரிக்கையிலேயே அவர்கள் வார்தையில் தெரியும் பதட்டமும் எனக்குள்ளும் தொற்றிக் கொள்கின்றது. தனியாக கடைக்குப் போயிருந்த போது , சந்தேகத்தின் பேரில் தன்னையும் பிடித்து வைத்து விசாரித்த துயரத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.பொதுவாக காவலர்கள் குழந்தைகளை உடன் கூட்டி வந்தால் சந்தேகப் படுவதில்லை என்பதால் எங்கு போனாலும் அன்றிலிருந்து குழந்தைகளோடு போகின்றார்கள்.தாங்கள் போகின்ற போதே எங்கு குண்டு வெடிக்குமோ என்ற அபாயத்தோடு வெளிச் செல்ல யாருக்குத்தான் எந்த தாய்க்குத்தான் மனம் வரும் ஆபத்திற்கு வழிய குழந்தையோடு போய் சரணடைய.இன்னும் குழந்தைகள் இல்லாது தனியாக வாழும் பெண்கள் ஆண்கள் தனியாக வெளியே எப்படி தைரியமாக போவதாம்.இன்னும் சில வீடு வீடாகச் சென்று விற்பனை செய்யும் பிரதி நிதிகள் சந்தேகப் படும் காவலர்களிடமிருந்து தப்பிக்க பக்கத்து வீட்டு குழந்தைகளைக் கூட உடன் வாங்கிச் செல்லுகின்றார்கள்.வயிறும் வாழும் போராட்டமும் என்னவெல்லாம் செய்யத் தூண்டுகின்றது.பூஸா எனும் வார்த்தை பெரும் பூதமாகவே அச்சமூட்டுகின்றது. இன்றைக்கு பிடிபட்ட 2000 தமிழர்களையும் பூஸாவுக்கு கொண்டு போகக் கூடாது என்று ஜனாதிபதி அரண்மனை முன்பு நின்று போராட்டம் நடத்திய மக்களை திருப்பி அனுப்பி விட்டார்கள். பூஸாவுக்குள் போன பிறகு மீண்டு வருவார்கள் எனும் நம்பிக்கை அற்ற நிலையில் நடமாட எப்படி தைரியம் வரும்..கணவனை கண்டு வருடங்கள் பல ஆன மனைவி தொலைபேசி உரையாடல்களில் சாயமிழக்கத் துவங்கியிருந்த காதல் , கற்பனையில் தகப்பனை அம்மா கதை இளவரசனாய் கண்டு ரசித்த குழந்தைகள் பழைய வாழ்க்கையை அசை போட்டபடி எதற்காக வாழ்கிறோம் என்ற குறிக்கோள்கள் அற்று உறைந்த வயோதிகங்கள் , குடும்பம் என்பது தலைவன் தலைவி குழந்தைகள் என்றில்லாதது, சிதறி விழுந்தவர்கள் ஒன்று சேர்ந்து வாழும் ,பெரும் பாலும் ஆண்களற்று வாழும் குடும்பங்கள் , பகலின் வெளிச்சத்தைப் போலவே துயராகவே எனக்கு வாசிக்கக் கிடைத்த மனிதர்கள்.மதிய உணவு அவர்களோடு எல்லாம் தாண்டிய புன்னகையோடு பரிமாறளோடும். மார்கெட்டுக்குப் போய் வந்த பட்டு, தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே தாங்கள் இழப்புகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வின் கதையையும் பூஸாவையும் பற்றிச் சொன்ன சொற்களாலேயே நிரம்புகின்றது எங்களது உரையாடல். பட்டுவின் இரண்டு குழந்தைகளும் தங்கள் தந்தையை இரண்டொரு நாளில் இந்தியாவில் வைத்து 6 வருடத்திற்கு பின்னால் சந்திக்கப் போகும் மகிழ்வில் தாய்க்கு உத்தரவிடுகின்றார்கள். தந்தையிடம் இங்கு நடக்கின்ற குண்டு வெடிப்பு கதைகளை பேசி விடாதே அம்மா, பிறகு எனக்கு பேச நேரம் கிடைக்காது என்று. பையனோ பிய்ந்தசெருப்புக்கு மாற்றாக புதுச் செருப்பு வாங்கலாம் என்றாலோ அப்பா வாங்கித் தருவார், என எல்லாவற்றுக்கும் அப்பா வாங்கித் தருவார் அம்மா ஒண்டும் இனி வாங்கித் தர வேண்டாம் எல்லாமே அப்பாவிடம் வாங்கிக் கொள்வேன் என்றும். சிரித்தபடி எல்லா பேச்சின் ஊடாகவும் இருந்த சோகத்தை அனைவரும் கண்டும் காணாது விழுங்கிக் கொள்கின்றோம்.

பத்மா –மகன்கள் எல்லாரும் கனடாவில் .சோமகாந்தன் இறப்பின் பின் சொந்த வீடு விட்டு மகளோடு போய் இருக்க வெண்டிய நிர்பந்தம்( மகள் வீடு என்பதே அன்னியப் பட்ட இடமாய் உணர்வில் தங்கியிருப்பதே பெருந்துயரம்தான்)
சிங்களப் பையனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாள். மகளை போலீஸில் ஒரு நாள் பிடித்துக் கொண்டு போன போது லலித் எனும் சிங்களப் பையன் தான் மீட்டுக் கொண்டு வன் இருக்கின்றார். தொடர்ந்து 6 மாத காலம் காவல் நிலையம் சென்று வர எப்பவும் துணை இருந்திருக்கின்றார். இருவரும் திருமணம் செய்து கொண்டது தீவிர தமிழ் ஆர்வலரான பத்மாவிற்குக் கவலை. இன்றோ சோமகாந்தனுக்கு பிறகு மகளோடு ஒரு சிங்களக்குடும்பத்தோடு தவிர்க்க முடியாது தங்க வேண்டிய சூழல் பேரனோடு தமிழில் பேசமுடியா வருத்தம்

கம்பவாரிதி ஜெயராஜ் கோவிலுக்குப் போகின்றோம். வள்ளுவரையும் கம்பரையும் கடவுளாக்கி விட்டனர். மிகப் பெரிய மகாலட்சுமி சிலை அழகிய அலங்காரத்துடன் . ஆனால் என்னவோ எனை ஈர்க்கவே இல்லை.
ஐரோப்பிய பெண்ணிய வாதத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். கந்தர் அனுபூதியிருந்து அவர் சொன்ன குறியைக் குறியாக….. பாடலின் பொருள் விளக்கம் கடவுளை அணுகுவதற்கு மட்டுமன்று. எல்லா வரையரைகளுக்கும் பொருந்தும் பத்மா 3,4,5 ஹட்டன் போகனும் என்று சொல்கிறார்கள் நான் 8,9 இல் நிகழ்ச்சிகள் இல்லாவிட்டால் 8ம் தேதியே திரும்பிப் போகலாம் என்று யோசிக்கின்றேன் . இன்றைய அரசியல் சூழலும் , சிக்கலும் எங்கும் பயணப்படுவதற்குரிய உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமல்லாது எப்பவும் அச்ச உணர்வோடு இருக்கவும் பத்மாவை செய்திருப்பதை என்னால் உணர முடிகின்றது.இந்த முறை பயணத்தில் சீக்கிரியா அவசியம் பார்க்க வேண்டுமென்று விரும்புகின்றேன். ஆனால் பத்மாவோ பயணப் படுதலின் சிக்கலை சொல்லிக் கொண்டே இருகின்றார். மௌனகுருவிடம் பேசிய போது அவர் தான் ஒரு பேராசிரியராக இருப்பதால் பயணப் படுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று சொன்ன போதிலும் பத்மா அவரையும் பயப் படுத்தி விடுகின்றார்.( அவரது பயத்திலும் அவருக்கான நியாயங்கள் இருக்கவே செய்கின்றது.)
தேவகௌரி எனப் பார்க்க வந்திருக்க, அவரோடு வெளிக் கிளம்பி போகின்றேன். .டக்ளஸ் தேவராஜ் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடித்த இடத்தை தாண்டிப் போகின்றோம். துப்பாக்கி ஏந்திய போலிஸார்( கொஞ்ச வயசுப் பயன்கள்) சாலையின் இருமங்கும் இருக்க, அவர்களின் அகட்டிய கால்களுக்கிடையில் சிக்கித் தான் போகிறோம். ஒரு வித பயம் மனதைக் கவ்வுகின்றது.இயல்பான பேச்சும் நடையும் தடுமார, நம் தடுமாற்றம் வேறு விதமாக யோசிக்கப் பட்டு விடுமோ பயத்தில் இயல்பு இல்லாது போக , தினம் தோறும் இச்சந்தர்ப்பத்துக் கிடையில் மனிதன் உயிரோடு நடமாடலாம். வாழ்ந்து விடத்தான் முடியுமா?
எங்களது கொஞ்ச தூர நடையிலும் தினம் தோறும் காணாமல் போகும் இளைஞர்கள் பற்றிய துயரங்கள் கூடவே வருகின்றன. கடையில் பாலப்பம் சாப்பிட்டு விட்டு தேவ கௌரியின் நண்பருக்காக காத்திருக்கின்றோம்.
நண்பர் வந்து சேர அவர் ஊரை சுத்திக் காண்பிக்கின்றார். வழியெங்கும் பாதுகாப்பு வளையங்கள் கெடுபிடிகள். எப்பவும் ஒரு வித பயமோடவே நகர வைக்கும் பாதுகாப்பு வளையங்கள். அதில் மாட்டாமல் யாரும் பயணப் பட முடியாது. நகரத்தின் முக்கிய பாதுகாப்பு வளையங்கள் 5 அந்த ஐந்துக்குள் ஏதாவதொன்றுக்குள் மாட்டாமல் யாரும் பயணப் பட முடியாது. அந்த பாதுகாப்பு வளையங்களில் இருந்த காவலதிகாரிகள் நிறுத்தச் சொல்லி கை காண்பித்ததை கவனிக்காது விலகிச் சென்றோமானால் சந்தேகத்தின் பேரில் எந்த முடிவும் அவர்கள் எடுக்கக் கூடும் எனும் அச்சம் எல்லாருக்குள்ளும் இருக்கின்றது.
ஒரு சோதனைச் சாவடியில் நிறுத்தப் படுகின்றோம். நண்பர் தனது அடையாள அட்டையைக் காண்பிக்க அனுப்பப் படுகின்றோம். ஊரின் எல்லாப் பகுதியையும் சுற்றி முடித்து விட்டு வீட்டுக்கு வர பத்மா எங்களது தாமதம் பற்றிய பதட்டத்திலேயே இருக்கின்றார்.
மௌனகுரு பத்மா நான் மூவருமாக ஹட்டன் 6ம் தேதி மட்டும் பயணப் படுவது என்று முடிவாயிற்று.சீக்கிரியா போவதை பத்மா தவிர்க்கப் பார்ப்பது புரிகின்றது. அவரிடம் சிங்கள வெறுப்பு ஓங்கி நிற்பதை புரிய முடிகின்றது.
மறுநாள் காலை டொமினிக் ஜீவாவை போய் பார்க்கப் போகின்றேன். ஒரு ஒண்டுக் குடித்தன இடத்திற்குள் நுழைந்து மாடிக்குப் போனால் அங்குபுத்தகக் குவியல்களுக்கு இடையில் அக்குவியல்களை விடப் பழசாய் அசைவதினாலேயே அவரிருப்பைச் சொல்லும் வித்தத்தில் ஜீவா அமர்ந்திருக்கின்றார். உடனிருந்த மேமன் கவி. டொமினிக் ஜீவாவின் அதிக பட்ச புலம்பலாக , இந்தியாவிலிருந்து எல்லா குப்பைகளும் கூட இங்கே வந்து சேர்ந்து விடுகின்றது . ஆனால் இங்கு நடப்பது வெளி உலகத்திற்கு போய் சேருவேனா என்கிறதே என்று.
7.12
காலை 6 மணிக்கு ஹட்டன் கிளம்புகின்றோம்.வழி நெடுக மௌனகுருவுடனான உரையாடல் மிகவும் பயனுள்ள உரையாடல். குமாரி ஜெயவர்த்தனா என்பவரது nobody to somebody புத்தகம் வாசிக்க வேண்டும் என்று சொல்கின்றார்.தமிழகத்து இலக்கிய சூழலும், இலங்கையில் இலக்கியச் சூழலும் என பகிர்ந்து கொண்ட விசயத்தை பதிவு செய்யும் வசதி கை வசம் இல்லாமல் போச்செ என்று வருத்தப் பட்டேன் ஹட்டன் வந்தது சாரல் நாடன் வந்திருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மிதமான குளிர் சுற்றிலும் தேயிலத் தோட்டங்கள் பசுமை சிந்திக் கிடந்த பூமி, நீலத்தில் குளித்தெழுந்த வான் தேயிலைத் தோட்டங்களுக்கிடையில் உயர உயர வளர்ந்து நின்ற மரங்கள்.
சாரல் நாடன் வீட்டில் நல்ல மதிய உணவோடு இலக்கிய விடயங்களும் பேசிய படி இருக்கின்றோம்.
பேச்சில் இராவண சமாதி பற்றிய உரையாடல் நிகழுகின்றது. சுவாரசியமான தகவல்கள் . அதுவும் இந்தியாவிலிருந்து நிறைய பேர் வந்து இத்தகவல்களைத் தேடித் திரிவதாகவும்.
அமுத களி எனு மிடத்தில் இராமர் பிடித்த லிங்கம் இருப்பதாகவும் அனுமார் , எரிந்த தன் வாலை நீரில் தோய்த்த இடம் இருப்பதாகவும் சொல்கின்றனர். வலப் பனையில் இராவண சமாதி உள்ளதாகவும் பெரிய குகைக்குள் அட்டைகள் பாம்புகள் நிரம்பிய சுரங்கப் பாதைக்குள் அந்த சமாதி இருப்பதாகவும், புதையல் இருப்பதாகவும் அதைத் தேடிப் பலர் வருகின்றனர் என்றும் சொன்னார்.கருடன் கல் என்றொரு கல் இருக்கின்றதாகவும் அது பச்சை நிறத்தில் வளர்கின்றதொன்றாகவும்
பதுலை என்ற இடத்தில் இராவண அரண்மணை உள்ளது என்றும் சொல்லச் சொல்ல இராவண விடயங்களைத் தேடி இன்னொரு முறை இலங்கை பயணிக்கும் ஆர்வமும் கூடவே வருகின்றது. இப்பொழுது இருக்கின்ற கலவரச் சூழலில் இன்னொரு முறை இலங்கை வருவது சாத்தியமா?

சாரல் நாடன் வீட்டுத் தோட்டத்தில் கடுக்காய் பூ பூத்திருக்கின்றது அதன் வாசம் நம்மை செயலிழக்கச் செய்வதாய் இருக்கின்றது.
பின் 2 மணிக்கு சி.பி ஐ.அலுவலகம் பேசுவதற்கு போகின்றோம். அங்கே நானும் என் கவிதையும் எனும் தலைப்பில் பேசத் துவங்குகின்றேன்.
பேராதனைப் பல்கழைக் கழகத்திலிருந்து வந்திருந்த மாணவர் குட்டி ரேவதி கவிதைகளை எங்களது சிவரமணி கவிதைகளோடு ஒப்பிட்டு விடாதீர்கள் என்று சொல்லிப் போகின்றார்.மௌனகுருவின் பேச்சில் பின் நவீனத்துவம் 3 விசயங்கலை காலி செய்கின்றது. நவீனம் பாலினம் யதார்த்தம் . அப்படி காலிசெய்வது முதலாளித்துவத்திற்கு அடிகோலுகின்றது என்று சொன்னார். அது மிகச் சரியானதாக எனக்குப் பட்டது.

கூட்டம் திருப்தியாக முடிந்து இரவு நீண்ட உரையாடலோடு மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்கின்றோம்.

மறுநாள் தமிழ்சங்கத்தில் மாலை “வரை படங்கள் தாண்டி கிளை பரப்பும் வசந்தங்கள் “ எனும் தலைப்பில் நான் பேசும் கூட்டம் இருக்கின்றது. நான் நிறைவாகச் செய்த உரை அது. ரூபவாஹினியில் ஒரு நிகழ்ச்சிக்கு காலை வரச் சொல்லியிருந்தார்கள். ஆனால் காலை ப்ஹொனெ செய்து நிகழ்ச்சி ரத்தாகி விட்டது trade center சென்று டிக்கெட் உறுதி செய்யப் போனேன்.இடம் நிறைய மாறியிருந்தது. பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு நிறைய பாதுகாப்பு சோதனைகள் சந்தேகப் பார்வைகளை விட பாதுகாப்பு அதிகாரிகளாக நிற்கின்ற சின்னப் பையன்களிடமிருந்து சந்தோசப் பார்வைகள் … சிரித்து விட்டு நகலுகின்றேன்.வழியில் தேவகௌரியுடன் பேச மறுநாள் சீக்கிரியா போக திட்டமிடுகின்றோம். பத்மாவிடம் என்ன சொல்வது பொய் சொல்வது இருவருக்கும் விருப்பமில்லை. உண்மை சொன்னால் பத்மா பாதுகாப்பை காரணம் சொல்லி நிறுத்தி விடக் கூடும்
மாலையில் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு போகின்றேன். பேராசிரியர் ஜெபராசா” அநாதி சொரூபக் கவிதை” எனும் வார்த்தை அங்கீகரிக்கப் பட்டு விட்டது என்று சொல்கின்றார்.
மறுநாள் நான் தேவகௌரி துஷ்யந்தி ,கணேஷ் நால்வர் சீக்கிரியா போக திட்டமிடுகின்றோம்.சீக்கிரியா மிக முக்கிய மான வரலாற்றுச் சிறப்புடைய இடம் நல்ல வேளையாக இந்த பயணத்தில் அதை பார்க்கும் வாய்ப்பை பெற்று விட்டேன். 300 அடி உயரமான அந்த கல் குண்றின் எத்தனை பிரயத்தனங்களோடு கட்டிடம் எதற்காக கட்டப் பட்டதோ? எதற்காக அழிக்கப் பட்டதோ?. இன்று வெறும் சுவடுகளைத் தாங்கியபடி துயரங்களோடும் கம்பீரமாக நிற்கின்றது மனிதன் தன் மீது ஏற்படுத்தியிருந்ததை உதிர்த்த படி
பயணத்திற்குத் தேவையான ஷூவைக் கூட எடுத்து வைக்காமல் என்ன செய்தீர்கள் என்ற நண்பரின் கேள்விக்கு எங்களது திட்டமிடுதலையும் நேரத்தையும் பத்மாவின் மனது கோணாமல் சரிக் கட்டுவதற்கென்றே செலவிட வேண்டியிருந்ததை தாண்டி பயணத்திற்கென எதையுமே யோசிக்க முடியாதவர்களாக முடக்கப் பட்டிருந்ததை என்னவென்று சொல்ல

காலை சாப்பாடு போகின்ற வழியில் முடித்து விட்டு , வழியில் சிங்களப் பிள்ளையாரை பார்த்தபடி, வழிநெடுக மரங்கள் கையசைக்க கடக்கின்ரோம். கணேஷ்க்கு தொலைபேசி. முந்தின நாள் கடைவீதியில் பிடிக்கப் பட்ட தனது மகன் பூஸாவுக்கு கொண்டு போகப் படாமல் விடுவிக்கப் பட்டு விடுவானா என்ற ஆதங்கத்தோடு வினவும் தகப்பன், நிஜங்களின் வலியோடு பதில் பேச முடியாது யதார்த்தத்தை விலக்க முற்படும் நண்பர். சீக்கிரியா ஏற நினைக்கும் போது மழை வந்து விட்டது. நல்ல நண்பர்கள் குழு வாழ்க்கையை ஒவ்வொருவரும் வேறு வேறு யதார்த்தங்களோடு சந்தித்த படி இருக்க பகிர்ந்து கொள்ள ஆண் பெண் வேறுபாடின்றி நண்பர்களாக அவர்கள் கடக்கின்ற விதம் எனக்கு பிடித்தமானதாய் இருந்தது.

300 அடி உயர மலையிலிருந்து நீண்ட அரண்மனையின் எச்சங்கள் தரையோடு கிடக்கின்றன. அரண்மனை முழுக்க குளிர்ச்சி நிலவவென்று தரைக்கடியில் தண்ணீர் ஓட விட்டிருந்த தடயங்களை எங்கெங்கும் பார்க்க நேருகின்றது.
இத்தனை வரலாற்று பேரழிவுக்குப் பின்னரும் அழியாதிருந்த பிரம்மாண்ட சிங்க பாதங்கள் அஜந்தா படங்களை நினைவூட்டும் பழைய சித்திரங்கள் சுவரெங்கும் கண்ணாடி வழுவழுப்பேற்றி அதில் மேலே வரைந்திருந்த படத்தை பிரதிபலிக்கச் செய்திருந்த தொழில்நுட்பத்தின் தேர்ச்சி. .அதில் கீற்றுப் பாடல்கள் எழுதி வைத்திருந்த புலமைகள், வாழ்விடத்தை உயர்வான தொழில் நுட்பத்தோடு வடிவமைத்திருந்த வல்லமைகள் இருந்திருந்தால் இது எவ்வளவு பிரம்மாண்டமான கட்டிடமாக இருந்திருக்கும் என வியக்க வைக்கும் தரை மட்டத்தோடு மட்டும் நின்று நமக்குணர்த்துகின்ற எச்சங்கள் ஏறும் போது உயரத்தின் கிறுகிறுப்பையும், 300 அடி உயர பாறைக்கு மேலே ஈரம் ஊற்றெடுத்து பெருகி நிற்கும் குளத்தின் ஈரம் சுமந்த சில்லிப்பு காற்றும் சீக்கிரியாவின் திகட்டாத நினைவுகள்
சீக்ரியா அரண்மனைக்கு எதிராக புதிதாக எழுப்பப் பட்டிருக்கின்ற புத்தர் நின்ற படி இருக்கின்றார். அவர் இவ்விடத்தை பாதுகாக்க நிற்கிறாராம். எல்லாம் இடிந்த பின் இனி எதைப் பாதுகாக்க போகிறாராம் புத்தர். தனை நிற்க வைத்தவர்களையும் பார்த்தபடி மோனச் சிரிப்பில் தூரப் பார்வையோடு நிற்கின்றார்.

மீண்டு திரும்புகின்றோம். சீக்ரியா அரண்மணை சுவடுகளின் எச்சங்கலை விட்டு கீழிறங்க கலையை வயிற்றுப் பாட்டுக்கு விற்கும் யதார்த்தம் வாய்பிளந்து நிற்கின்றது. அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய பெட்டி சாதாரணமாய் பார்க்க யானை அரைவட்டம் செவ்வக வடிவங்களோடு இரகசிய அறைகளை உடைய , எளிதில் திறந்துவிட முடியாத பெட்டி கைகளில் ஏந்தி விற்றபடி இருக்கின்றார் ஒருவர். இதே வேலைப் பாடுகளுட்ன கூடிய இரகசிய பெட்டிகள் கொச்சியில் நான் பார்த்ததுண்டு.
கேரளாவிலிருந்து நிறைய பழக்க வழக்கங்கள் சாப்பாடு வாழ்வியல் என இலங்கையில் ஊடுருவி இருப்பதைக் காணும் போதும், தமிழருடைய பழக்க வழக்கங்களிலிருந்து பெருமளவு மாறுபட்டிருப்பதைக் உணரும் போதும் , தமிழ் பேசுவதால் மட்டுமே தமிழராக அடையாளம் காணுகிறோமோ என்று எனக்குள் எழும் கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

மாலை 5 மணி ஆகி விட்டது நாங்கள் நிதானமாக மலை இறங்கி வர . பத்மாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு எப்பொழுது வருவீர்கள் என , நான்
சொல்லுகின்றேன் நாங்கள் காலை வந்து சேரலாமென்று
நல்ல பயணம் தந்த அனுபவத்தோடு இரவு உணவு உண்டு தேவகௌரி வீடு வந்து தூங்க முயற்சிக்கின்றோம். இன்றைய இலக்கியத்தின் பெண் கவிஞர்களின் போக்கு என் வாழ்வு தேவகௌரியின் எதிர்காலம் எல்லாம் பேசிக் களைத்து மலை ஏறி இறங்கியதை விட களைப்பு தரும் உரையாடல்களோடு அதன் அழுத்தங்களோடு தூங்கிப் போகின்றோம்.
காலையில் பத்மா சோமகாந்தன் வீட்டுக்கு வந்து சேருகின்றேன். ஏற்கனவே அவர் கேட்டிருந்த படி முடித்துக் கொடுத்திருந்த நேர்காணலை மீண்டும் ஒரு முறை சரி பார்த்து அன்றைய பொழுதை அவரோடு மகிழ்வோடு செலவளித்தேன். பத்மா நானுடனிருந்த பொழுதுகளில் வயதை மறந்து ஆடி மகிழ்ந்த விதம் பயண நிறைவக இருந்தது.
அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் வாசல் தோறும் தனிமையோடு அமர்ந்திருக்கும் வயது போனவர்களில் துயரங்கள் மனதில் கவிய விமான நிலையம் கிளம்புகின்றேன். விமான நிலையத்தில் துப்பாக்கிகள் சுமந்த இளமைகள் அகட்டிய கால்களோடு உயிரற்று நமை வழியனுப்புகின்றன.
posted by Thilagabama m @ 6/09/2008 12:09:00 am  
1 Comments:
  • At Wednesday, July 23, 2008 7:40:00 pm, Blogger புகழன் said…

    நீங்க தாமரை டிவியில் வேலை செய்திருக்கின்றீர்களா?
    அங்கு பார்த்ததுபோல் ஞாபகம்

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates