சூரியாள்

Wednesday, March 12, 2008
மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்
மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்
திலகபாமா


பெண் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெங்கும் இரண்டாவது பிரஜையாக, இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப் படுவதும், வாய்ப்புகள் மறுக்கப் படுவதும் உடைமைப் பொருளாக ஆக்கப் படுவதும் அவளது உடல் நுகர்வுப் பொருளாக உருமாறியிருப்பதும் கண்கூடு. இத்தன்மை ஒட்டு மொத்த சமூகத்தின் நாளைய எதிர்கால வளர்ச்சிக்கு எதிரான ஒன்றாகும். எந்த ஒரு மனிதனும் இன,பால் அடையாளங்களினாலோ அல்லது சாதிய , வர்க்க , மத வேறு பாடுகளினாலோ குறைவாக மதிப்பிடப் படுதல் , ஆதிக்க மனோ நிலைக்கு வித்திடுமொன்றாகிப் போகின்றது. ஆதிக்க மனோ நிலை அடிமைத் தனம் உருவாவதற்கு காரணமுமாகின்றது


அதுவும் நமது கலாசாரத்திற்குள் இருந்தும் நமது வாழ்வியலில் இருந்தும் பெண் எந்தெந்த இடத்தில் எல்லாம் வேதனைக் குள்ளாக்கப்படுகின்றாள் என்பதை இக்கட்டுரை பேசுகின்றது. காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் என்று பாரதி சொன்னதற்கிணங்க நமக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணங்களை உணராததையே இயல்பாக மாற்றிக் கொண்டிருப்பதையும் யோசிக்க வேண்டியிருக்கின்றது. சம்பவங்களின் இடமும் சாட்சியங்களின் நிகழ்வும் பிரதேச அரசியலை பேசினாலும் அதன் உணர்வுகள் பிரதேச இன எல்லைகளை கடந்து ஒடுக்கப் படுபவர்களின் அடிமைத் துயரங்களை சொல்லி ஆதிக்க மனோ நிலைக்கெதிரான குரலாக, பொதுமையடையக் கூடும்

சுயமிழத்தல்
மனிதன் எனும் ஒட்டு மொத்தத்திற்குள் பெண் தன்னை காலம் காலமாக இரண்டறக் கலந்தபடியும் பெண் தன் சுயத்தை இழந்து ஆணுக்கானவளாக வடிவமைக்கப் பட்ட படியும் இருந்திருக்கின்றாள். அவளுக்கான மனித இருப்பு சமூகம் கலாசாரம் , பண்பாடு என்னும் பெயரால் மறுக்கப் பட்ட படியே இருக்கின்றது.
காலம் காலமாக முன்னோர்களால் சமூக நல்வாழ்விற்காக வடிவமைக்கப் பட்ட கலாச்சாரங்களும் , பண்பாடும் மாறுகின்ற காலங்களின் போது அதன் மாறுதல்களை மறந்து மறுத்து காலாவதியாகி வெறும் சடங்குகளாக பலநேரங்களில் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றது. வெற்றுச் சடங்குகள் சிந்தனையின் திசை மாற்றி மேலும் மேலும் பெண்ணை புதிய மாற்றங்களோடு ஒத்திசைந்து போக முடியாதவளாக உறைய வைத்து விடுகின்றது ஆயிரம் அறிவியல் தொழில் நுட்பங்களின் பின்னரும் சுயாதீனமாக செயல் பட முடியாதவளாக பெண்ணை முடக்கி விடுகின்றது.
பொருளாதாரம் , கல்வி மதம் என பெண்கள் அடிமைப் பட்டதற்கு காரணமாகவும் அதிலிருந்து விடுபட மாற்று வழியில் செல்ல வேண்டியிருப்பதாகவும் பலர் சொல்லிச் செல்கின்றனர்.கல்வி பெற்று விட்டால், பொருளாதார வல்லமை பெற்று விட்டால் பெண் விடுதலை பெற்று விடுவாள் என்று
இன்றோ கல்வியறிவு பெற்று பேராசிரியராக வேலை செய்ய நேர்ந்தும் இரட்டைச் சுமையோடு தனக்கென கூட சுய முடிவுகள் எடுக்க முடியாதவர்களாக இருப்பதையும் ஆயிரக் கணக்கில் சம்பாதித்தும் தன் வாழ்க்கை ஆணைச் சார்ந்திருப்பதாய் நம்பி அவனது நேர்மையற்ற வழிமுறைகளை சகித்தும் வாழ்கின்றாள் பெண்.அவளது சுயமும், அவளது வாழ்வும் எது என அவள் உணரவிட முடியாத படிக்கு தொட்டிக்குள் வளரும் போன்சாய் செடியாய் வளர்க்கப் பட்டு விட்டு , விருட்சமாய் வளர முடியாத வர்கள் என அறிவிக்கப் படும் போக்கு இன்னமும் நம் சமூகத்தினரிடையே பொதுப் புத்தியில் நிலவி வருகின்றது.

உணர்வுச் சிதைவுகள்

பெண் எப்பவும் இருபக்கம் அடி வாங்கும் மத்தளமாக ஆகி விடுவதால் தனக்கு நேர்கின்ற உணர்வுச் சிதைவுகளை சாட்சியங்களோடு வைக்க முடியாது போய் விடுகின்றது.உணர்வுச் சிதைவுகளை அவளே உணர்ந்து விட முடியா படிக்கு வாழ்வியலோடு நமக்கு இச்சமூகம் தந்திருக்கின்றது.
பெண்ணின் குடும்ப வேலைகள் தனிமனித வேலையாக நிறுவப் பட்டு மதிப்பிழக்கப் படுவதும் இதனால் தான். அவளது குடும்பப் பணியையும் இச்சமூகப் பொதுப் பணிக்கான பின் அரங்க வேலையினில் ஒன்று தான் என்பதை அறிவு ஜீவிகளாலும் ஆண்களாக இருப்பவர்களாலும், ஆண் வழிச் சிந்தனையில் ஊறிப் போயிருக்கும் பெண்களாலும் அடையாளம் காணப் பட முடியாமல் போவது ஆச்சரியப் படத்தக்க விசயமில்லை

பண்டமாக்கப் படல்

இன்றைய வாழ்வில் இதுவரை இருந்து வந்த சமூக அமைப்புகளின் பார்வைகள் உலக மயமாக்களில் , சந்தைக் கலாசாரத்தில் நுகர்வுக் காலத்தில் எல்லாமே பண்டமாக்கப் பட்டு வருகின்றது. காதல் பெண் , தாய்மை , தந்தைமை என எல்லா உணர்வுகளும் கூட இன்று பண்டமாக்கப் பட்டு விட்டது, திடப் பொருள்கள் மட்டும் சந்தைக்கு வருதல் என்றில்லாது , அரூப உணர்வுகளும் தினங்களாக மாற்றப் பட்டு பண்டமாக்கப் பட்டு விற்பனைக்கு வந்து விட்டன. அதிலும் பெண் உடல் வெற்று பண்டமாக்கப் பட்டு சந்தையில் விற்பனைப் பொருளாவதும், குடும்பச் சூழலில் , காதலில் உடமைப் பொருளாய் மாறிப் போவதும் இன்று நிகழ்ந்திருக்கின்றது. இது தொடருமானால் பெண் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப் படுவாள்

நவீனம் என்ற பெயரில் புனிதங்களை உடைத்தல்

ஒரு சமூகம் காலம் காலமாக தொடர்ச்சியான தன் தேடலில் வாழ்வுக்கான வழிமுறையை கண்டறிந்து அதை பண்பாடாக தொடர்ந்து வாழ்ந்து வருகின்றது. அதில் மனிதன் மனிதம் குறையாமல் வாழ்வதற்கான புனிதங்கள் புதைந்து கிடந்தும் , அதை உணராது பழமை எனத் தள்ளியும் நவீனம் என்ற பெயரில் மேலைத் தேய வாழ்வியலை , கருத்தியலை முகமூடிகளாக பூட்டிக் கொள்வதும் சமூகத்திற்கே எதிரானது என்றாலும் பெண்ணுக்கு பெருந்தீங்கு செய்வதுவும் உணரப் படவேண்டிய ஒன்றாகும்

உடல் சார்ந்த அடையாளங்கள்

உடல் வெறும் பௌதீக வேறுபாடே.உணர்வு என்பது உடலைச் சார்ந்து கட்டமைக்கப் படுதல் இங்கு காலம் காலமாய் நிர்பந்திக்கப் படுகின்றது . வெட்கம்,மென்மை , நளினம் போன்ற உணர்வுகள் பெண் உடல் சார்ந்து நிறுவப் பட்டு விடுகின்றது.
எந்த வேலைக்கு சூழலுக்கு பழக்கப் படுகின்றதோ அதுக்கான உணர்வுகளையும் பிரதி பலிப்பதுவே உடல். உடல் ரீதியான வேறு பாடுகள் உணர்வுகளை தீர்மானிப்பதில்லை.
கல்லுடைக்கும் வேலைக்கு பழக்கப் படும் நபர் உறுதியான , முரட்டுத் தனமானவராகவும், கணிணி வேலைக்கு பழக்கப் படுபவர் மிகவும் மென்மையாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது. பெண் காலம் காலமாக ஒரே மாதிரியான சூழலுக்குள் அவள் பெண் , அவளது உடல் பாதுகாக்கப் பட வேண்டியது என்றும், அவள் கருவறையைக் காரணமிட்டே முடக்கப் படுகின்றது. கற்பு என்ற உணர்வும் அவள் உடல் சார்ந்தே அவளிடம் திணிக்கப் பட்டு இருந்தது
எனவே உடல் சார்ந்த ஆடையாளங்களை நிராகரித்து அதுவும் ஆண்கள் பார்வையாலேயே காலம் காலமாக வருணிக்கப் பட்ட பெண் உடல் சார்ந்த அடையாளங்களை மறுதலிப்பதுவும் உடல் மட்டுமல்ல பெண் என நிறுவுவதுவும் பெண் மாற்றியமைக்க வேண்டிய முக்கிய பார்வையாகும்

வாழ்வெது வெற்றியெது

இதுவரையிலும் பெண் வாழ்வில் ,ஆணோடு இணைந்து இல்லாத பெண் வாழ்வில் தோற்று விட்டவளாகவும், அவளது வெற்றிகள் ஆண் வாழ்வோடு ஒப்பீட்டு ரீதியில் மதிப்பீடுகள் உருவாக்கப் படுவதும் நம்மிடையே இருக்கின்றது.இருவர் உலகமும் வேறு வேறாக இருக்க ஒப்பீட்டு அடிப்படடையிலான மதிப்பீடுகள் பிழையாகப் போய் விடுகின்றன.
இந்த ஒப்பீடுகள் புதுமை விரும்பும் பெண்களையும் ஆணைப் போல இருக்கவே நிர்பந்திக்கின்றன. அவளது இயல்பை உணரச் செய்வதில்லை. அந்த போலச் செய்தலில் போலிகளும் பிழைகளும் நிகழ்ந்து விடுவதுண்டு.பெண் தன் வாழ்வியல் தேவைகளை முன்னிட்டு புதியதாய் திறமையோடு செயல்படத் துவங்கினாலே முன்னிறுத்தப் படுபவளாய் மாறி விடுவாள்.


மாற்றுப் பார்வை

இந்த இடர்ப்பாடுகளின் பின் தான் நமக்கு கேள்வி எழும்புகின்றது பெண் எந்தப் புள்ளியிலிருந்து தன் பயணத்தை தொடங்கி பாதை உண்டாக்கிப் போக வேண்டும் காடு திருத்தி பாதை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் பெண்ணுக்கு இன்று இருக்கின்றது

இதுவரை இருந்து வந்த சமூக அமைப்புகளின் பார்வைகள் உலக மயமாக்களில் மாற்றுப் பார்வைக்கு நிர்பந்திக்கின்றன. இன்றைய வாழ்வின் மனிதன் புலம் பெயர்ந்து கொண்டிருக்கின்றான்
வாழ்வை விட்டு தொழிலை விட்டு , தனது மொழி தனது கலாச்சாராம் என்பதை விட்டு பல் மொழி பல் கலாச்சாரம் எனபனவற்றை யோசிக்க தேவை உருவாகியிருக்கின்றது இதுவரை இருந்த கலாசாரங்களை விட்டும் தவிர்க்க முடியாது உலக மயமாக்களை எதிர் கொள்கின்ற நமக்கு இதுவரை இருந்த பொதுப் புத்தியிலிருந்து மாற்றுப் பார்வையை எதிர் கொள்ள வேண்டியிருக்கின்றது
.நேற்றைய வாழ்க்கையை படியெடுக்கும் மனநிலை அறவே கடந்து போயிருக்கின்றது

இதுவரை இருந்த குடும்பச் சூழலிலிருந்து வெளி வந்திருக்கின்ற பெண் தன் சுயத்தை முழுதும் உணர்ந்திருக்கின்றாளா?
பெண் என்றால் உடல் மட்டும் தான் என்று காலம் காலமாய் நிறுவி வந்ததிலிருந்து பெண் தன்னை தான் உடல் மட்டுமல்ல உணர்வுமானவள் என்று உணரவும் உணர்த்தவும் வேண்டிய தேவை இன்று வந்திருக்கின்றது . பெண் உடல் சிதைவுகளை கண்டு விடுகின்ற நமக்கு உணர்வுச் சிதைவுகள் அடையாளம் கண்டு கொள்ளப் பட முடியா இரகசிய சாட்சியங்களாகின்றன
பெண் எந்த வித உணருதலுமின்றி புகுந்து விட்ட மாறுதலுக்கேற்ப அப்படியே தளம் மாற்றம் மட்டுமே செய்யப் படுகின்றாள். அது ஏற்கனவே இருந்த ஒடுக்குமுறைக்கான கூறுகளையும் உள்ளடக்கியதாய் இருந்து விடுகின்றது. இதுவரை இருந்த கூட்டை விடுவித்துக் கொண்டு வெளி வருகின்ற பெண் தான் போய் விழுகின்ற இடத்தில் என்ன கட்டமைக்கப் போகின்றோம் என்ற தெளிவில்லா விட்டால் , ஏற்கனவே நமை அடிமைத்தனத்திற்குள் தள்ளி விட்ட மனோ பாவங்கள் புதிய இடத்திலும் ஆக்கிரமித்து விடக் கூடும். அதையும் அவளே விரும்பி செய்வதற்கான நிர்பந்தம் சமூகச் சடங்குகளின் மூலமாகவும் ஆதிக்க வழிச் சிந்தனை வழியாகவும் நிகழ்த்தப் படுகின்றது

உணர்வுச் சிதைவுகளை உணர்ந்து விட முடியா படிக்கு வடிவமைக்கப் பட்ட தளைகளிலிருந்து அவள் விடுவிக்கப் பட வேண்டும்

50 களில் இருந்ததைவிட 90 களில் முன்னேறியிருக்கின்றோம் என்ற போதும் , முனை அடிக்கப் பட்டு கட்டப் பட்ட கயிறுகளின் நீளம்தான் கூடியிருக்கிறதே ஒழிய முளைகள் பிடுங்கப் படவில்லை.
எத்தனையோ நாட்டு விடுதலை சாத்தியமான பின்னும் அதோடு பெண் விடுதலை ஏன் சாத்தியமாகவில்லை எனும் கேள்வி மிக முக்கிய மான ஒன்றாகும்.

சமூகத்தின் பொதுப் புத்தியிலிருந்து விடுபட்டு பெண்ணின் மனித இருப்பை உணரச் செய்து விடுவது தான் சமூகத்தின் அனைவரும் மகிழ்ச்சியோடிருக்க உதவுவதாகும்.

பெண் விடுதலை சிந்தனை சாத்தியமாகி விட்டால் பெண் இடம் மட்டுமல்ல, அது ஒட்டு மொத்த சமூகத்திற்கே நீண்ட காலத்தில் தொடர்ச்சியான மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்றாகும்

இம்மாற்றுப் பார்வைகள் பெண்ணைத் தனிமைப் படுத்தும் முயற்சியாக இல்லாது, பெண்ணின் சுயம் உணர்ந்து அதை யாரும் சிதைத்து விட முடியா தளத்தில் நிறுவி பின் பொதுமையோடு அதன் உண்மைகள் மறுக்கப் படா இடத்தில் நிறுவ வேண்டும். அந்த தருணத்தில் பெண்ணியச் சிந்தனைகள் மனித வளச் சிந்தனைகளாக பார்க்கப் படும்.
மனிதன் எனும் ஒட்டு மொத்தத்தில் இருந்து பெண் அடையாளமற்றுப் போய்க் கொண்டிருக்கின்றதில் தன்னை நிலை நிறுத்த அவளே தன்னைப் பிரதானமாக உணர்ந்து கொள்ள வேண்டிய தேவையும், உணர்ந்த பிறகு தன் முழுமையை ஒட்டு மொத்தத்தில் சரியான இடத்தில் இனி ஒரு காலும் பிழையாக குறைத்து உணர்ந்து விட முடியாத படிக்கு பொருத்தி அதே சமூகத்திற்கு மீளத் தர சிந்தனைத் தளத்திலும் செயல் தளத்திலும் பெண் செயல்பட வேண்டியிருக்கின்றது.

பெண்ணியம் மனிதத்தின் முதல் படி.


நீ நிறுவப் பார்த்த
உன் உலகத்திற்கு
நான் இடுகின்ற நடுகல்
நாளை அதிசயமாகும்
உனதும் எனதுமற்ற
பொது உலகில்
posted by mathibama.blogspot.com @ 3/12/2008 01:42:00 pm  
2 Comments:
  • At Tuesday, April 01, 2008 7:49:00 pm, Blogger சிவக்குமார் said…

    தந்தை வழிச் சமுதாயம் துவங்கிய காலத்திலிருந்தே பெண் பண்டமாக்கப்பட்டதும், ஆணின் தனிச் சொத்தாகப் பாவிக்கப்பட்டதும் தொடர்ந்து வந்தபடியே தான் இருக்கிறது. 'கற்பு' என்பது கூட, தன் உடைமையைப் பாதுகாகும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட கற்பிதம்.

    இவ்வாறாக நீங்கள் சொல்லும் கருத்துக்களுடன் நீங்களே முரண்படும் விசயம் என்னவென்றால்,

    வழிவழியாகத் தொடரும் இந்த ஒடுக்கும் வழிமுறையை நிராகரிக்கக் கூடாதெனவும், அதிலிருக்கும் புனிதத்தைக் கண்டு கொள்ள வேண்டும் எனவும் சொல்கிறீர்கள்.

    இந்தப் பாரம்பரியத்தில் என்ன புனிதம் இருக்க வாய்ப்பிருக்கிறது?

    அதிகாரம் இல்லாமல் எந்த ஒரு அமைப்பும் நீடிக்க வாய்ப்பில்லை என்று நினைக்கின்றேன்.
    பாலின சமத்துவத்தின் வாயிலாகக் குடும்பம் என்கிற அமைப்பு உடைபடுவதான கற்பனையைத் தவிர்க்க முடியவில்லை.

    இல்லாவிடில் பழைய தாய் வழிச் சமூகம் நிறுவப்பட்டு ஆண்கள் அடிமைகளாக்கப்பட வேண்டும்.

     
  • At Wednesday, July 23, 2008 7:36:00 pm, Blogger புகழன் said…

    உங்க பதிவில் நிறைய இடங்களில் தமிழ் ஆங்கிலமாக உருமாறியுள்ளதே!
    இது நீங்கள் டைப் செய்ததில் தவறா? இல்லை என் கம்யூட்டரில் டிஸ்பிளேயில் தவறா?

    தமிழ் டைப் செய்ய என்ன மென்பொருளை பயன்படுத்துகிறீர்கள்?

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates