|
Thursday, January 03, 2008 |
நிலாச்சாரல் நேர்காணல் |
நிலாச் சாரல் இணையத்தில் வெளி வந்த நேர்காணல் நன்றி: நிலாச்சாரல் பேட்டி எடுத்தவர் நவீன்
தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குள் ஒரு தீப்பந்தம். இத்தீப்பந்தம் தன் எழுத்துக்களால் பெண்ணடிமையைப் பொசுக்கியிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறது. அதிகார வர்க்கத்தின் ஆட்சிப் பீடத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. எழுத்தாளர் திருமதி.திலகபாமா ஒரு புரட்சிப் போர்வாள். இவரைத் தெரியாத இணையத் தோழர்கள் இருக்கமுடியாது. இவரது படைப்புக்கள் ஒவ்வொன்றும் வாழக்கற்றுத் தரும். பட்டிவீரன்பட்டியில் தொடங்கி, சிவகாசியில் முழங்கி அமெரிக்கக் கண்டம் வரை தனது எழுத்துக்களால் சிகரம் தொட்டிருக்கிறார் இவர். இவரது நூல்கள் சூரியனுக்கும் கிழக்கே (2001), சூரியாள், (2002), சிறகுகளோடு அக்கினிப் பூக்களாய் (2002), எட்டாவது பிறவி (2003), கூர் பச்சையங்கள் (2004), நனைந்த நதி (2004:சிறுகதை தொகுப்பு), கண்ணாடிப் பாதரட்சைகள் (2006), புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை (2006:கட்டுரைத் தொகுப்பு), கூந்தல் நதிக் கதைகள் (2007) ஆகியன. ஏர்வாடி ராதா கிருஷ்ணன் வழங்கிய "கவிதை விருது" - எட்டாவது பிறவி தொகுப்பிற்கு, "சிற்பி இலக்கிய விருது" - கூர் பச்சையங்கள் தொகுப்பிற்கு, திருப்பூர் அரிமா சங்க "சக்தி விருது" - கண்ணாடி பாதரட்சைகள் தொகுப்பிற்கு என இவரது நூல்கள் பல விருதுகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன.
சிவகாசி பாரதி இலக்கியச் சங்கத்தின் செயலாளராக, ஒவ்வொரு வருடமும் திரு.மாலன் அவர்களின் திசைகள் இயக்கத்துடன் இணைந்து கானல்காடு என்ற மலைப்பகுதியில் தமிழ்பால், இலக்கியத்தின்பால் ஆர்வமுள்ளவர்களை ஒன்று திரட்டி, தமிழ் இலக்கிய விவாதங்கள், உரையாடல்கள் போன்றவற்றை நடத்தி இலக்கியச் சேவையையும் செய்துவருகிறார். "இலக்கிய வரலாறு" பட்டம் பெற்ற திருமதி.லட்சுமி அம்மாள் பற்றிய ஒரு குறும்படம் (“வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு”) எடுத்திருக்கிறார் திலகபாமா. பல துறைகளில் ஆர்வமும் தனித்துவமும் பெற்று விளங்கும் இவர், தனக்குச் சொந்தமான ஒரு மருத்துவ மனையின் நிர்வாகத்தையும் நடத்தி, மருத்துவரான தன் கணவரோடு சேர்ந்து ஏழை எளியவர்களுக்குச் சேவையும் செய்து வருகிறார். எத்தனை புகழ் இருந்தும் மிகவும் எளிமையாகவும, நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். இவர் மனிதர்களுக்குள் மனிதத்தை மட்டுமே பார்க்கக் கூடியவர். எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது கண் அவசியம் என்பது இவருடைய எழுத்துக்களிலிருந்தே புலப்படும். அவருடைய எழுத்துக்களுக்கும் அவருடைய குரலுக்கும் அச்சுப்பிசகாத ஒற்றுமை - சிங்கத்தின் கர்ஜனை.
இனி திலகபாமா உங்களோடு:
பாரதி இலக்கியச் சங்கத்தின் நோக்கம் மற்றும் பணி என்ன?
இலக்கிய உரையாடலை சாத்தியமாக்கும் சந்தர்ப்பங்களைத் தருவது பாரதி இலக்கிய சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. வேகமான இயந்திர உலகில் இலக்கிய விவாதங்களுக்கும், தளங்களுக்கும் இடமில்லாததை கவனத்திலெடுத்தே பாரதி இலக்கிய சங்கம் துவக்கப்பட்டது . ஆரம்பத்தில் மாதம் தோறும் ஒரு இலக்கிய சந்திப்பு, சிவகாசி மற்றும் அருகாமை ஊரைச் சார்ந்த நபர்கள் தங்களது படைப்புகளோடு வந்து விவாதம் நடத்திப் போகுமிடமாக இருந்தது. தற்போது ஆழ்ந்த தர்க்கங்களோடு கூடிய கருத்தரங்குகள் அதன் முக்கிய செயல் பாடாக இருக்கின்றது . வருடந்தோறும் கவிதைகளுக்காக சி.கனகசபாபதி நினைவுப் பரிசும், சிறுகதைகளுக்கு சி.சு.செல்லப்ப்பா நினைவுப் பரிசும் வழங்கி வருகின்றது.
லட்சுமி அம்மாள் மற்றும் அவரது கணவர் சி.க. பற்றி அதிகம் பேசுகிறீர்கள். எங்களோடும் பகிர்ந்துகொள்ளுங்களேன்
ஒன்பதாவது படிக்கையிலிருந்து எழுதிக்கொண்டிருந்த என்னை இணையம்தான் முதன் முதலாக இலக்கியத்திற்குள் இழுத்துப் போட்டது. லட்சுமி அம்மாள் அறிமுகம் எனது குழந்தைகள் படித்த பள்ளியின் முதல்வர் வழியாக தொடர்பேற்பட்டது. லட்சுமி அம்மாளின் மகளான அவர், என் இலக்கிய ஆர்வத்தை கண்டு தனது தாயை அறிமுகம் செய்து வைத்தார். அம்மா என் கவிதைகளின் போக்கை ரசித்ததால் என்னையும் என் படைப்புகளையும் பல்வேறு இலக்கிய தளங்களுக்கும் எடுத்துச் சென்றார். அவரிடமிருந்த புத்தகங்கள், அவரது இலக்கிய அனுபவங்கள் எனக்கு முன்னால் பாதையாகியிருந்தன. அவரோடு இருந்த நாட்களில் சி.கனகசபாபதியின் எழுத்தும் விமரிசனமும் எனக்கு அறிமுகமாகியிருந்தது. இன்றைக்கு இலக்கிய போக்குகளில் அது மீண்டும் பேசப் படவேண்டும் என எதிர் பார்த்தேன் . எனவே அது தொகுப்பாக பதிப்பாளர் காவ்யாவின் பேருதவியுடன் நடந்தேறியது
நமது இந்தியாவில் பெண் எழுத்தாளர்கள் குறைவு என்ற கருத்து சரியா?
எல்லா இடமுமே பெண் எழுத்தாளர்கள் குறைவு என்பதுவே சரி
புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் சொல்லுமளவுக்குச் சாதித்திருக்கிறார்களா?
அவர்களின் போர் சூழலில், இக்கட்டான வாழ்க்கைக்கு இடையில், கலாசார அதிர்வுகளை ஐரோப்பிய நாடுகளில் வேறு வழியின்றி சந்தித்த பொழுதில் அவர்களது சிறு அசைவுகள் கூட சாதனைகளாக பார்த்து விட வேண்டிய கட்டாயத்தில் வாசகன் இருக்கின்றான்
இன்றைய சூழலில் எழுத்தாளர்கள் தமக்கென்று ஒரு பாணியைக் கடைப்பிடிக்க இயலும் என்று நினைக்கிறீர்களா?
அவரவர்க்கென்று தனித் தனித் பாணிகள் நிகழ வேண்டும். ஒருவரை போல் மற்றவர் இன்றைய வாழ்க்கை சூழலில் சாத்தியமில்லை
இணையதளம் என்ற ஒன்று இல்லாவிட்டால் சத்தியபாமாவின் எழுத்துப்பயணம் எப்படி இருந்திருக்கும்?
என்னுடைய எழுத்து என்னோடு மட்டும் உரையாடியபடி இருந்திருக்கும். உங்களுக்கு கிடைத்திருக்காது எனது அறிமுகம்
தங்களின் பிற சேவைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
வலது கை செய்வதை இடது கை அறியாமல் செய்தால் தானுங்க சேவை. ஆகையினால் சொல்லிக் கொள்ள எதுவுமில்லை.
உங்களுக்குத் தகுந்த களம் சிறுகதையா? கவிதையா?
கவிதை
தொலைக்காட்சித் தொடர்களில் லயிக்கும் பெண்களுக்கு நீங்கள் கூறுவது?
இத்தனை தொடர்கள் இத்தனை இயக்குநர்கள் , எத்தனை பெண் இயக்குநர்கள் ஏன் ஒருவர் கூட மாற்று சிந்தனையோடு வர மறுக்கின்றார்கள் என்பது ஆச்சரியமும், கவலையும்
கால் சென்டர், இணையம், தொலைக்காட்சி மற்றும் சினிமாவால் நமது கலாசாரம் சீரழிந்து வருகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
அறிவியல் முன்னேற்றங்களை நிராகரிக்க முடியாது, சீரழிக்கின்றதாய் சொல்லுகின்ற இணையம்தான் என்னை இலக்கிய உலகிற்குத் தந்திருக்கின்றது. அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கபூர்வமாக சிந்தனைகளின் வழி நடைமுறைப் படுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வு இருந்தால், கலாசாரம் மாறுபடும் போதும் கெட்டு விட்டதாய் தோன்றாத தளத்தில் இருந்து கொண்டிருக்கும்.
தங்களின் குறும்பட அனுபவம் பற்றிக் கூறுங்கள்
லட்சுமி அம்மாவிடம் உரையாடும் போது 40 ஆண்டு கால இலக்கிய வரலாற்றுத் தகவல்கள் ஆளுமையோடு வெளிப்பட்டது என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைப் பதிவு செய்து விடும் நோக்கமுடன் அவரைப் பேசச் சொல்லி எல்லாவற்றையும்ம் பதிவு செய்தேன். பதிவில் அம்மா பேசிய தகவல்களில் ஆணின் வெற்றிக்குப்பின் மறைக்கப்பட்ட ஒரு பெண்தான் எனக்குத் தெரிந்தார்கள். அந்த பெண்ணீய சிந்தனைக்கு அம்மாவின் வாழ்க்கையை சாட்சியாக்கி 'வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு' எனும் குறும் படம் எடுக்கப் பட்டது. பெரிய தொழில் நுட்பங்கள் எதுவும் கிடையாது. என்னிடமிருந்த புகைப் படக்கருவி, கணிணி இதோடு நானே செய்து வெளியிட்ட படமது. இன்னும் அம்மாவைப் பற்றிய முழுமையான ஆவணப் படமொன்று தரவும் விருப்பம்
தங்களின் படைப்புக்களில் ஆண்வர்க்கத்தைக் கடுமையாகச் சாடுவதாக ஒரு கருத்து நிலவுவது உண்மையா?
அப்படியெல்லாம் இல்லை. ஆனால் இதுவரை இருந்து வந்து கொண்டிருக்கின்ற ஆணாதிக்கப் பார்வைகளுக்கு மாற்று சிந்தனைகளை முன் வைப்பது ஆணாதிக்க சிந்தனைகளுக்குள் இருப்பவர்களுக்கு கலவரத்தை உண்டு பண்ணுகின்றது
திலகபாமாவின் பேச்சிலிருந்த வீரியம் நம்மையும் தொற்றிக் கொள்கிறதல்லவா? அவரது நீண்ட நெடும் பயணத்துக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்
*******Labels: நேர்காணல் |
posted by mathibama.blogspot.com @ 1/03/2008 12:20:00 am |
|
1 Comments: |
-
இதை நான் நிலாச்சாரலில் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்களின் தமிழிலக்கியப் பணி தொடர எனது நல் வாழ்த்துக்கள்.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
இதை நான் நிலாச்சாரலில் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்களின் தமிழிலக்கியப் பணி தொடர எனது நல் வாழ்த்துக்கள்.