|
Wednesday, March 05, 2008 |
கவிதையன்று |
சக்கர முட்கள் ஏந்தி சுழலும் காலம் திக்குகள் எட்டுத் தாங்கி வாழுது ஞாலம் மேலிருந்து கீழாக வந்து விடும் போதும் இருள்கள் ஒளியாக விழித்து விட்ட நாளும் மாறாது மறையாது கவியுது கிரகணமொன்று தாங்காது தவிப்பில்இருளைப்பேசும் குரலிது கவிதையன்று
அசோகர் நட்டு மரங்கள் வெறும் பாடங்களாச்சு நாலு வழிச் சாலையில் வேர்கள் குப்புற விழுந்தாச்சு மின்னல் கீற்று மொழியாய் வாழ்வது வேகமாச்சு கன்னல் மொழி வாழ்வு மட்டும் இருள் நிழலிலென்றும் கரையலாச்சு
குன்றாயிருந்த உயரங்கள் தூளாகிக் குறுகி சாலைக்கான ஜல்லியாச்சு குவாரியில் கசியும் ஊற்றின் ஈரங்கள் அலுமினிய உருக்கலில் மண்ணின் தாய்ப்பாலை அடைக்கும் புற்றாச்சு தாயாண்மை சமுதாயங்கள் தடங்கள் மாறலாச்சு பெண் ஊற்றின் ஈரங்கள் ஆதிக்க அடைசலில் சோற்றுக்குள் தவமாச்சு கால் சுடுகின்ற நெருப்பு தவக் காலங்களில் பெண்ணுக்கு எப்பவும் பூக்குழியாச்சு
பெரியவளான நாள் தொட்டு சிறுபிள்ளையாகவே முடக்கப் பட்டோம் "சிநேகிதிகளை" விற்பதற்கு வடிவிலும் அழகிலும் பெரியவளாக்கப் பட்டோம்
நீயும் வளர நானும் வளர பச்சை ஓலைகளுக்குள் சிறை வைக்க நான் மட்டுமென்ன உயிரற்ற உடலா
கட்டுவிரியனே கடிக்கையிலும் லோகிதாசனை தூக்கியபடி சுடுகாடு தேடிச் சந்திரமதிகள் திரிய அரிச்சந்திர பரம்பரைகள் பெருமை சூடிப் போக
வரம் வாங்கி வந்த எட்டு குத்து தாலியை எடுத்தெறிகின்றோம் வேலை பார்த்த மயானத்தில் விறகோடு எரிக்க
மறந்த படி வாழ எந்த காலம் தொட்டு பழக்கப் படுத்தப் பட்டோம்
அடிவயிற்று நெருப்புள்ளாகவே இருந்து இருந்து சூட்டின் சுவையை சுவைக்கப் பழகி விட்டோம்
சுடுவதைச் சொல்ல குளிர்விக்கப் பட வேண்டும்
காடு வெட்டி களம் சேர்த்து சுடுகின்ற சூரியனுக்கும் பொங்கல் வைத்த இனமே
எரிகின்ற சூரியனை பொட்டுக்காக சிறை வைத்த கொண்டை மீசை சுமந்த இனமே
உனக்காக சிறை வை கால் சுடும் நெருப்புதனை
தினமொரு சீதை விழுங்காதிருக்க சந்தேக இராமன் முளைக்காதிருக்க
காண முடியா காற்றாய் வெற்றிடமாய் ஆக்க முடியா வளியாய் நிரம்பித் ததும்பு
பிடிக்க முடியா தென்றலாய் குடித்து விட முடியா அமிர்தமாய் கடைதலில் கிளம்பு
அடைக்க முடியா ஒளியாய் கண்ணன் சுவைக்க முடியா அமுத சுரபி ஒற்றைப் பருக்கையாய் மணிமேகலையாய் மாறு
பார்க்குமிடமெல்லாம் நிறைவது கன்ணனல்ல கோபியர்களின் காதல்களென கோலடித்து ஆடு
தராசுகளில் நிறுக்க முடியா ருக்மணி பாமா காதல்களைச் சொன்ன பாரிஜாதங்களாய் திசையெங்கும் திரிந்து விடு
வானமே இல்லை சூரியன் உதிப்பதில்லை மறைவதுமில்லை நிலவுகள் தேய்வதில்லை சூரிய காந்திகள் சூரியனுக்காய் திரும்புவதில்லை
நீ கை வண்ணம் காட்ட அசுரமாவதில்லை கால் வண்ணம் காட்ட பாறையாகப் போவதுமில்லை
சாதிகள் இரண்டுமில்லை மனிதம் ஒன்றேதான்
எனப் புதிய சட்டங்கள் வரையும் சிகண்டி அவதாரமெடு தேவவிரதன்கள் அம்பைகளை விட வீரன்களில்லையென நிறுவ
முச்சந்தி விளம்பரங்கள் மூடி வைத்த நடுப்பக்க புத்தகங்கள்
தீவிர இலக்கியப் பெயரில் பெண்ணுடலை எழுதி விற்றுத் தீர்க்கும் காலச்சுவடுகள்
சிதைக்கப் பட்ட உணர்வுகளை உணரவிடாது உடல்களை முன்னிறுத்தி நகன்ற ஆதிக்க மனோபாவங்கள்
உணர மறுத்து உடல்களுக்குள் முடங்கி நடுங்கும் அடிமை மனோ பாவங்கள்
கண்ணகி எரித்த மதுரையில் மாதவிகளை மீட்டெடுக்கும் வெள்ளித் திரைகள்
முப்பத்து மூன்று சந்தவீதம் கேட்டபடியெ காலங்கள் செத்துப் போக சிலுவை அறையும் அரசியல்கள்
உயிர்த்தெழ முடியாதிருக்க உள் ஒதுக்கீடு கேட்டு கள்ளா பாலா புரியாது குழப்பும் சாணக்கிய குடுமிகள்
எத்தனை நெருப்புகள் காலடியில் தாமரைகளாக பழக்கத்தில்
ஆதிக்க அடிமை மனோபாவங்கள் பெரு வெடிப்பில் தூளாக
உடலை மையமிட்ட அரசியல்கள் உணர்வுகளின் வலியை அர்த்தமாக்கத் துவங்கும் பால் வெளிக்கு பயணப்படுத்தும் காற்று
நாளை பிறக்கின்ற பொழுதொன்றில் கால்சுடும் நெருப்பு வேர் விடும் பொறுப்பாகும் வான நெற்றியின் சூரியத் திலகமுமாகும் |
posted by mathibama.blogspot.com @ 3/05/2008 09:20:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment