|
Sunday, May 04, 2008 |
விதைக்குள் உறக்கம் |
உன் கர்ப்பப் பை கத கதப்புகள் தேவையாயிருக்கின்றன
பருவம் முளைத்த காலம் தொட்டு தொடுவதைத் தவிர்த்தாள் அம்மா
மூணாம் பேருக்குத் தெரியாமல் பெரியவளானதை முற்போக்காய் கடந்தவள் எப்பவும் நெருப்பு அடிவயிற்றில் சுமக்க வெம்மை தாங்காது எனைத் தூர வைத்து விட்டாள்
திருமண இரைச்சலின் பின் எனக்கென்று உரிமைகள் தொலைத்தும் அம்மாவினதா மருமகளினதா உடைமைப் போராட்டத்தில் என்னை அந்நியமாக்கி துப்பிய அம்மா வீடு
கணவன் பிள்ளைகள் சுற்றம் நட்புகள் எல்லாம் என் மடி நிழலில் உறங்கிப் போக
உறக்கம் மறந்த விழிப்பு நிலையில் எப்பவும் இரவுகள் தொடை துளைத்த வண்டோடு
இறங்கப் போகின்ற சந்திப்புதனை தவற விட்டு விடாதிருக்க விழிகள் தண்டவாளம் மீதிறங்கி தற்கொலை செய்து கொண்டன தூக்கத்தை
பாதரசப் பிரதிபலிப்பு அற்று பிறந்த நாளை நினைவு கொண்டு வாழ்த்தும் தாயின் மடி உறக்கம் தூங்காமலேயே பெரும் கனவாகிப் போனது
குளிரும் இரவுகளில் தலையணை நனைக்கும் கண்ணீர்த் துளிகள் கனவை அழித்த படியே ஏக்கத்தை முளைக்க வைக்கின்றது
நூற்றாண்டுகளாய் விழித்திருக்கும் விருட்சங்களை பார்க்கையிலெல்லாம் கேட்டு வைக்கின்றேன் மீண்டும் விதைக்குள் உறங்க ஆசை துளிர்த்ததுண்டா வெனLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/04/2008 06:20:00 pm |
|
1 Comments: |
-
கருப்பையின் கதகதப்பில் மீண்டும் குடிபுகுந்து இந்தப் பிரபஞ்ச வெளிகளைத் தரிசிக்காமல் இதமான சுகத்திற்குள் உறங்கச் சொல்லி மனம் அவாவுறுகிறது. இன்றைய சிந்தனையை நேற்று அம்மாவும் கடந்துள்ளாளே, அவளுக்கு வெளியே எடுத்துச் சொல்ல மொழி இல்லாது போய்விட்டது...
சூரியாள் உங்கள் படைப்பு யதார்த்தத்தையும் உள்ளத்து உணர்வுகளையும் அழகாக சொல்கிறது.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
கருப்பையின் கதகதப்பில் மீண்டும் குடிபுகுந்து இந்தப் பிரபஞ்ச வெளிகளைத் தரிசிக்காமல் இதமான சுகத்திற்குள் உறங்கச் சொல்லி மனம் அவாவுறுகிறது. இன்றைய சிந்தனையை நேற்று அம்மாவும் கடந்துள்ளாளே, அவளுக்கு வெளியே எடுத்துச் சொல்ல மொழி இல்லாது போய்விட்டது...
சூரியாள் உங்கள் படைப்பு யதார்த்தத்தையும் உள்ளத்து உணர்வுகளையும் அழகாக சொல்கிறது.