|
Tuesday, August 05, 2008 |
ஐம்பூதங்களாகி |
நிலமெனத் தாங்கினோம் வேர் ஊன்றிய போதும் இருப்பதை மறந்து தோண்டிய பள்ளத்திலும் ஏறி நின்ற மேட்டிலும் மிதித்தே போனாய்
காற்றென உடல் வழி ஓடி உயிர் வழியாகியிருக்க கூடவே யிருந்ததை உணராது இட்டு நிரப்பத் தேடித் திரிந்து விலகியே வாழ்ந்தாய்
துளியாய் வீழ்ந்து மண் உறிஞ்சித் தீர்த்த பின்னும் ஊற்றாய் பெருகி நதியாய் ஓடி அருவியாய் வீழ கடலோடு கலப்பதற்கான என் பயணமென பாதை மாற்றிச் சொல்லித் தீர்த்தாய் கடலும் நானே என்றறியாது.
இறுகிய கல்லும் பச்சை மூங்கிலும் உரசப் பற்றும் நெருப்பாய் நானிருக்க வேகும் வரை எரிய விட்டு முடிந்த பின் தீர்த்துப் போனாய்
தீராது எரிந்து மதுரை நான் உண்ட பின்னும் பேசித் தீர்த்து சாம்பராக்க சாணக்கிய குடுமி முடிகின்றாய்
விரிகின்ற வானாய் தொட்டு விடவும் கற்பனை படியேற முடியாத கம்பளமாயும் மாறிப் போனேன்
தோன்றி மறையும் என்னில் சில சந்திரன்களும் சூரியன்களும் விண்மீன்களும்
வந்து போவதாய் காட்சி தரும் இருளும் ஒளியும் நாலும் அடக்கிய ஐந்தாய் நாலிலும் அடங்காத ஒன்றாய் தோற்றப் பாடுகள் காட்டி தொடங்கித் தோன்றுவேன் நான்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 8/05/2008 02:27:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment