கலகக் குரல்களா? கலவரக் குரல்களா?
திலகபாமா
இருநாள் கருத்தரங்கம் .பாரதிக்குப் பிறகு பெண்ணும் கவிதையும் என்ற தலைப்பில் இருநாள் கருத்தரங்கம் காந்தி கிராமியப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
ஒட்டு மொத்த நிகழ்வில் , அங்கு பேசப் பட்டுக் கொண்டிருந்த விசயங்களில் இருந்து சில புரிதல்களை முன் வைக்க வேண்டியிருக்கின்றது.
மீண்டும் மீண்டும் ஒடுக்கப் பட்ட ஒரு இனமோ பெண்ணோ யாராக இருப்பினும் ஒரு பொதுத்தளத்தில் தங்கள் கலைவெளிச் செயல்பாட்டை முன்னிறுத்த தங்கlளை அறிவுத் தளத்திலிருந்தும் திறமைத் தளத்திலிருந்தும் வளர்த்துக் கொள்வதிலும் அதைச் சரியாக முன்னிறுத்துவதிலும் , அதைத் தொடர்ச்சியாக அதே தளத்தில் அதன் தேவை முற்றுப் பெறும் வரை பணியாற்றுவதிலும் , முற்றுப் பெறும் போதும் அதைப் பேண தொடர்ந்து அடுத்த தளத்தை பணியாற்ற கண்டு கொள்வதிலும், ஏற்கனவே வளர்வதற்கு ஏதுவாக பின் புலம் உள்ள சமூகம் அல்லது இனம் அல்லது பாலினம் உடையவர்களைக் காட்டிலும் இருமடங்கும் , பல் உழைப்பும் நல்குவது அவசியமாகின்றது. என்பது மறக்க முடியாத உண்மையாக இருக்கின்றது. ஆனால் அப்படி உழைப்பதற்கு அஞ்சவும் அல்லது காலங்கள் நகர்வதற்கு காத்திருக்கவும், திராணியற்ற நபர்கள் தங்களை குறுக்கு வழியில் நிலைநிறுத்திக் கொள்ள சில அசட்டு வழிகளைப் பின் பற்றி விட்டுப் போகின்றார்கள்.அப்படி பின் பற்றுவதற்கு காரணமாக ஒடுக்கப் பட்டிருந்ததை முன் வைத்துக் கொள்கின்றார்கள் கேடயமாக
வீட்டில் புது விருந்தினர்கள் நிறையும் போது சில குழந்தைகள் தங்களை எளிதாய் வெளிப்படுத்தி இயல்பாய் பெயர் வாங்கி விடும் ஆனால் சில குழந்தைகள் இயல்பாய் கவனிப்பு பெற்று விடுவது சிரமமாயிருக்க அழுதும் அடம்பிடித்தும் கத்தியும் குழறியும் எல்லாரும் பார்க்க வைக்கப் பார்க்கும், சில நேரம் தான் தவறுதலாயொரு பொருளைத் தன் திறமைக்கு மேலே கையாள நினைத்து கைதவறிப் போனால் அதை ஒத்துக் கொள்ளாது தான் செய்தது சரியெனச் சொல்ல ஏதாவதையும் அல்லது அதற்கு முன்னால் பலரும் இதையே செய்திருக்கின்றனர் எனவும் சொல்லிப் பார்க்கும். நிஜமாகவே அதில் குழந்தைமையும் இருக்கும், அது பின்னாளில் முதிர்ந்து விடுகின்ற போது மறைந்து விடும் என நாம் நம்பி விடவும் வாய்ப்பிருக்க
வளர்ந்தவர்கள் அறிவு தளத்தில் தன்னை நிலைநிறுத்திப் பார்க்க விரும்புவர்களும் கொஞ்சமும் தன் திறமை(?) மேல் நம்பிக்கை வைக்காது களமிறங்குவது தாங்கள் பார்க்கப் படாமல் போய் விடுவோமோ என்று தன் கலவரத்தை, கலகக் குரல்களாக முன் வைப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இங்கும் நிகழ்ந்தது . இதற்கு அவர்கள் சமூகம் அல்லது பாலினம் படும் துன்பங்களைப் பட்டியலிட்டுக் கொண்டு அந்த பீடத்தில் மேல் தங்களை நிறுத்திக் கொள்ளப் பார்க்கின்றார்கள். ஒரு ஒடுக்கப் பட்ட இனமோ சமூகமோ பாலினமோ படும் துயரங்களையும் பீடமாக்க முயலுபவர்கள் அத்துயரங்கள் தொலைய முயன்றாலும் தங்கள் பீடம் தொலைந்து போகுமோ எனவும் அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இன்னொரு புறம் பாலியல் சனநாயகம், பாலியல் தெரிவுக்கான சுதந்திரம் என்ற வார்த்தைகளை ஆணும் பெண்ணும் உச்சரிக்கும் போதும் நிஜமான அதன் அர்த்தங்களை சிலர் தங்கள் அத்துமீறல்களுக்கு போர்வையாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் இந்த இருநாள் நிகழ்விலும் கூட பார்க்கவும் அதற்கெதிராய் சிலர் இருந்த போதும் சகதிகளில் கல்லெறிய மனமின்றி , மூக்கு பொத்தி நகன்றதையும் பார்க்கவே முடிந்தது.
திறமையற்றவர்கள் , திறமை வளர்த்துக் கொள்ள இயலாதவர்கள் என்பது , ஒடுக்கப் பட்ட இனத்திற்குள் பாலினதிற்குள் மட்டும் இல்லை
அவர்களுக்காவது அப்படியான சூழலுக்கான வாய்ப்புகள் குறைவு என்று விட்டு விடலாம் ஆனால் வாய்ப்பு குறைவான சூழலுக்குள்ளும் பிறவித் திறமைகளும் இருந்து கொண்டே இருக்கின்றது என்பதனை மேற்சொன்ன வரிகளால் கூட மறைத்து விடவோ மறுத்து விடவோ முடியாது
மீண்டும் முந்தைய பாராவின் முதல் வரிக்கு வருவோம்.
திறமையற்றவர்கள் , திறமை வளர்த்துக் கொள்ள இயலாதவர்கள் என்பது , ஒடுக்கப் பட்ட இனத்திற்குள் பாலினதிற்குள் மட்டும் இல்லை. ஏற்கனவே வளர்ந்து பட்ட சமூகங்களிலும் இனத்திலும் பாலினத்திலும் அப்படியான திறமைக் குறைவான நபர்களும் இப்படியான போலிக் கலகக் குரல்களை கடைப்பிடிப்பவர்களாக இருந்து கொண்டே தானிக்கின்றார்கள்
இந்த நிகழ்வின் கலவரக் குரல்களாக ஒலித்த சில கவிஞர்களின் குரல் ஏற்கனவே எப்பவும் இலக்கிய உலகிலும் கலை உலகிலும் மன வக்கிரங்களை, சுயநலங்களை பொது நலப் போர்வையில் பேசித்திரியும் சில சுயநலமிகளின் தொடர்ச்சியே , இவை எதுவுமே என்றைக்குமே புதிதில்லை. இதை ஆதரிப்பவர்களுக்கு “ பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் மனோ நிலையும் எதிர்ப்பவர்களூக்கு இதைச் சாக்கிட்டு ஒட்டு மொத்தங்களூக்குள் விளிம்பு நிலைகள் பார்க்கப் படாது செய்யக் கூடிய மனோ நிலையும் இரண்டுமே இன்றைய வளர்ச்சிக்கும் நாளைய வாழ்வுக்குமே நல்லதல்ல என்பதுவும் இக்கருத்தரங்கில் மொத்த கைசேரலாக நமக்குக் கிடைத்தவை.
தலித்தியம் பேசியவர்களோ தலித் அரசியல் , ஒடுக்கப் பட்டவர்களின் துயரங்களைப் பட்டியலிட்டார்களே அன்றி அவை எழுத்துக் கலைவெளியில் அவற்றின் இடமும் , பங்கும் பற்றி பகிரவே இல்லை
முதல் நாள் நிகழ்வின் குட்டி ரேவதியின் தலைமையில் அமர்வு இருந்தது. குட்டி ரேவதியின் சமீபத்தைய பேச்சில் ஒரு அழுத்தமும் தேடலும் காணக் கிடைக்கின்றது. ஆனால் அவர் பேசுகின்ற அரசியல் எழுத்துக் கலைவெளியில் இழையோடும் தொடர்ச்சி கூட இல்லாமலேயே இருக்கின்றது. அரங்க மல்லிகாவும், ஏ. இராஜலெட்சுமியும் பெண்கவிதைகள் தேக்கமடைந்து விட்டன என சுட்டிக் காட்டினர். உடல்மொழி பேசிய கவிதைகள் தானே தேக்கமடைந்து விட்டன ஏனைய தளங்கள் எப்பவும் போல் சப்தமெழுப்பாத ஓடைபோல தொடர்ச்சியாக தனது பாதையை வழிநடத்திய படி நகர்ந்து கொண்டே தானிருக்கின்றன.அவை அமைதியாய் நகர்வதாலேயே, அதிர்வுகளால் திசை திருப்பப் பட்டிருக்கின்ற நாம் மௌன அங்கீகாரத்தில் அவர்களை சாகடித்து விடுகின்றோம்.
பின் நவீனத்துவ சிந்தனையில் எல்லாவற்றையும் கூறு கூறுகளாக்கி ஒவ்வொன்றுக்கும் மதிப்பேற்றுவதற்குப் பதிலாக மதிப்பிறக்கம் செய்து கொண்டிருக்கின்றோம் . இந்த பின்னமாக்குதலில் மனிதனை அவன் மனிதத்தை, கலையை என எல்லாவற்றையும் ஒன்றுமில்லாததாக்கி போட்டு விடுகின்றது. கலையும் இலக்கியமும் எதுவுமில்லாததைக் கூட பெருமதிப்புள்ளதாக்கித் தர வேண்டும். வாசகனுக்கு கலவரக் குரல்களை அடையாளம் கண்டு நிராகரிக்கவும், படைப்பாளி கலவரக் குரலை, நிஜக் கலகக் குரலாக மாற்றி வெற்றுப் பொருள் மயமாவதை எதிர்ப்பதும் இன்றைய கால கட்டத்தின் நிர்ப்பந்தம்
( பின் குறிப்பு) நிகழ்ச்சி இடைவேளையில் குட்டி ரேவதியை கடந்து வந்து கொண்டிருந்தேன். “ திலகபாமா மேடையில் இருக்கும் போது படம் எடுத்தீர்கள் என் அனுமதியில்லாது , என்னிடம் கேட்காது எதிலும் பிரசுரிக்க வேண்டாமென்று.” குட்டி ரேவதி சொல்ல ஒரு கணம் திகைத்து நின்றேன். எனக்கு மறுநாள் பேங்களூரில் நடக்க இருந்த சாகித்ய அகாதமி கூட்டத்திற்கு போவதற்கு கிளம்பும் அவசரம்” சரி” என்ற வார்த்தையோடு நிறுத்தி விட்டு நகன்று விட்டென்.
மேடை நிகழ்வுகளை படமெடுத்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு நபரிடமும் கேட்டுக் கொண்டா பிரசுரிக்க முடியும். நானொன்றும் இவர் வீட்டிற்குள் வந்து படமெடுக்கலையே, பொது நிகழ்ச்சியில் நானோ வெகு சில படமே எடுத்தேன் . யார் யாரோ ஒவ்வொரு கவிஞர்களையும் தனித் தனியாகவும் மேடையிலும் நிறைய படமெடுத்தார்கள். எடுக்கக் கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?. )
Post a Comment