சூரியாள்
|
| Monday, November 14, 2011 |
| காரைக்கால் அம்மையார்களும், கல்பனா சாவ்லாக்களும் 1 |
காரைக்கால் அம்மையார்களும் , கல்பனா சாவ்லாக்களும்
நன்றி பாவையர் மலர்
இது கா னாவிற்கு, க வன்னா போட்டு எழுதும் எதுகை சாதுர்யம் அல்ல.
திலகபாமா
பெண்ணியமும் பெண் குறித்த உரையாடல்களும் பேசிப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கின்ற இன்னேரத்தில் நான் சந்தித்த நாடு கடந்த பெண்களுக்கிடையேயும் நம்மூர் கமலாவும் கருப்பாயியையும் துருக்கி இளவரசியின் கதைகளில் காண நேர்ந்த அனுபவத்தை பேசுகின்ற தொடரிது
உற்று வாசியுங்கள் இதற்குள் நீங்களும் நான் வைத்த பெண்ணின் பெயரில் உலாவரலாம் , சம்பவங்களில் பெண் இருப்பு தொலைவதை காட்சிகளாக்கி பேசுகின்ற தொடரிது.
வாசிப்பில் மறைக்கின்ற வெளிச்சங்கள்
லட்சுமிஅம்மாள் ஒரு பெண் போராளி என்று நான் சொன்னால் யார் நம்பக் கூடும். ஆயுதம் ஏந்தினாரா? கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடத்தினாரா? அவரின் போராட்டங்கள் எதில் பதிவாகியிருக்கின்றது என்கின்ற கேள்வி உங்களது முன்னால் எழும்பக் கூடும்.
இது எங்கள் பொது புத்தியிலிருந்து எழும்பி வருகின்ற கேள்வி
ஆண் தீர்மானித்த வரையரைகளுக்குள் சிக்காமல்தான் எப்பவும் பெண்ணின் வெளி இயக்கிக் கொண்டிருக்கின்றது. அதனாலேயே அவள் சாதாரணமானவளாக எவ்வளவு பிரம்மாண்டங்களோடு இருந்தாலும் பார்க்கப் பட்டு விடுகின்றாள் அதற்கான சின்ன வலுவான உதாரணம் லட்சுமி அம்மாள்
யார் அந்த லட்சுமி அம்மாள் ?
பலருக்கு அவர் சி. கனசபாபதியின் மனைவி
இடது சாரி சிந்தனையாளர்களுக்கு அவர் ஒரு முற்போக்கு வாதி
அவ்வளவுதான். இன்று எத்தைனையோ இலக்கியவாதிகளின் மனதில் இருந்தாலும் வெடித்து முடிந்த அமைதியான எரிமலையின் சாட்சியங்களற்ற தடம் மட்டுமே
ஆனால் அம்மாவின் விஸ்வரூபம் குறுக்கப் பட்ட இடம் ஒன்றுண்டு எனறாள் அது சமூகப் பார்வையில் குடும்பப் பெண்ணுக்கான இடம்
ஏன்?
ஒரு சம்பவம், அதற்கு முன்னால் அம்மாவைப் பற்றி சில வரிகள்
புதுக் கவிதை விமரிசகராண சி . கனசபாபதியின் மனைவியாவதற்கு முன்பிருந்தே இடது சாரிக் கொள்கைகளில் தீவிரப் பற்றுடையவராய் இருந்த இவர் ராஜபாளையத்துக் காரர்.படிப்பாளி, சீன இலக்கியங்களை மொழி பெயர்க்கும் ஆற்றலுடையவர். இடது சாரிச் சிந்தனையாளேயே ஜீவாவுடன் கூட நெருங்கிய தொடர்பிலிருந்தவர்.இலக்கிய அழகியலையும் ரசிக்கக் கூடியவராக இருந்ததால், பாரதி தாசன் தொடங்கி புதுமைப் பித்தன், செல்லப் பா, லா சாரா என பல்வேறு படைப்பாளிகளோடும் நேரடித் தொடர்பிலிருந்த ஆளுமையான பெண். சி கனகசபாபதியை கரம் பிடித்தது கூட ஒரு மிகப் பெரிய புரட்சிதான். இரண்டாம் தாரமாக தனது அக்காள் கணவருக்கே வாழ்க்கைப் பட குடும்பம் நிர்பந்தித்த போது துணிந்து நின்று அதை எதிர்த்து மார்க்ஸிய பார்வையாளர் என்ற ஒரே காரணத்துக்காகவே சி. க வின் கரம் பிடித்தவர். கரம் பிடித்தவர் வாழ்வில் சிறப்பாக வரவேண்டும், அது தன் வெற்றியாகப் பார்க்கப் படும் என்று உணர்வு வந்தபோது அவரை முன்னிறுத்தி தான் பின்னாடி நின்று சமையல் கட்டோடு கரைந்து போகாமல் அவரோடு இணையாக நடந்ததே பெரிய புரட்சியும் போராளித் தனமும்தான். ஆனால் நாமெல்லாம் அதை போராளித் தனமாக வாசிக்க மாட்டோமே. யாரோ சிலரின் உணர்வு பேச்சுக்களுக்கு இரையாகி அவர்களஹ்டு வெற்றிக்கான படிக்கட்டாக தன்னை தன் உயிரை பலியாக்குவதை மட்டுமே போராளித் தனங்களாக பார்த்துக் கொண்டிருக்கின்ற நமக்கு குடும்ப அமைப்பில் உறுத்தாமல் வ் என்று வந்த லட்சுமி அம்மாள் போராளியாக தெரியாமல் போவது பொதுப்புத்தி வாசிப்பு அல்லாது வேறென்ன
அவரோடு இருந்த நாற்பது ஆண்டு கால இலக்கிய வாதிகளைப் பற்றி பதிவு செய்ய முயன்ற போது தான் அவரது ஆளுமை புரிந்தது 60 களில் ஒரு ராஜபாளையத்தைச் சேர்ந்த பெண் இயக்க ஆளுமையான ஜீவாவோடும், இலக்கிய ஆர்வலரான லா.சாரா வோடும் நெருங்கிய தொடர்பிலும், ரஷ்ய மொழி இலக்கியங்களை மொழிபெயர்த்துதரச் சொல்லிக் கேட்கும் திறமையோடும், முதல் விமரிசனம் என் கதைகளுக்கு நீதான் என்று சொல்லும் படியான வாசிப்பனுபவமோடும் இருந்திருந்தார் என்று அறிய வந்த போது ஆச்சரியமாக இருந்தது ஆனால் எந்த இடத்திலும் தன்னை ஈர்த்த பெண்ணை பற்றி உச்சரித்து விடாது அத்தலைவர்களும் இருந்திருக்கிறார்கள் என்று யோசித்த போது, இன்னுமொரு சம்பவமும் நினை வுக்கு வருவதை சொல்லாமல் இருக்க முடியவில்லை ஒரு முறை என்னோடு மதுரையிலிருந்து சென்னை வரை இரயிலில் பயணம் செய்த நண்பர் சென்னை வந்திறங்கியதும் நான் என் வழக்கமான தங்குமிடத்திற்கும் அவர் தனதான தங்குமிடத்திற்கும் சென்று விட்டோம். இருவர் வேலைகளும் தனித் தனியானவை . முடித்து விட்டு புத்தக கண்காட்சிக்கு நான் சென்றபோது, தன் நண்பர்கள் குழாமோடு இருந்த அந்த நபர்
ஓ திலகபாமா வா எப்போ வந்தீங்க என்று கேட்டாரே பார்க்கலாம்
நான் சிரிப்பை அடக்க முடியாது அந்த இடத்தை விட்டு நகன்று விட்டேன்.
அதே நிகழ்வை இருபது வருடம் கழித்து இளமையெல்லாம் தொலைந்து தள்ளாமையில் இருவரும் சந்தித்து கொண்டபோது அதன் சாட்சியமாய் நானிருந்தேன். அம்ம அவரது எழுத்தாளுமைகளை பற்ரி சொல்ல சொல்ல, அவரோ ஒரு வார்த்தை கூட அம்மாவின் வாசிப்பு விமரிசனம் பற்றி யெல்லாம் கூட பேசாது நீ நல்ல சமைப்பையேடியம்மா என்றேரே பார்க்கலாம்
எனக்கு அன்று சிரிப்பு வரவில்லை, கோபம் வந்தது.அவரின் தள்ளாமையில் கோபத்தை காண்பிக்க முடியாத புரிதலோடு மௌனமாக வெளி வந்து விட்டேன்.
இவர்களோடு என்ன புரிதலோடு நட்பு வைத்துக் கொள்ள முடியும் என்று சலிப்பாக வந்தது. அன்று இருந்திருந்த லட்சுமி அம்மாளின் விஸ்வரூபத்தை எவ்வளவு சின்னதாக்கி வாசித்து விட்டு விடுகின்றீர்கள் என்று தெரியவந்தபோது,
பெண்ணின் வெற்றியை வாசிப்பில் மறைக்கின்ற வெற்றிகளாகவும் , மறைக்கப் பட்டு விடுகின்றபோது அது தொல்விகளாக கரைந்து போய் விடுவதையும் உணரமுடிகின்றது.
சரி குடும்பத்திற்குள் இருந்தவளைத்தான் நாங்கள் ஒத்துக் கொள்வதில்லை அவளது வாழ்வு எவ்வளவு போராட்டத்துடன் வாழப் பட்டதாயினும் அது போராட்டமென்றோ அல்லது அவள் போராளி என்றோ இச்சமூகம் வடிவமைத்த மனிதர்களாய் வாழும் நாம் யாரும் ஒத்துக் கொள்வதாயில்லை. அது தனி மனிதத்துவம் சார்ந்த வாழ்வியலாகவே பார்க்கப் பட்டு விடுகின்றது
Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 11/14/2011 09:28:00 pm   |
|
|
|
| Tuesday, November 24, 2009 |
| நீடிக்குமா மகிழ்வு தொடர் வாழ்வில் |
நீடிக்குமா மகிழ்வு தொடர் வாழ்வில்
பொதுப் புத்தி என்று ஒன்றை அடையாளம் சொல்ல முடியுமா? கடைந்து விட்ட தயிரில் மிதக்கும் வெண்ணெய் பொதுப் புத்தியா பிரிந்து கலந்து நிற்கின்ற மோர் பொதுப் புத்தியா ? இக்கேள்வியின் குழப்பத்துகிடையேயும் இச்சூழலில் இக்காலகட்டத்தில் “இது” பொதுப் புத்தியாக இருந்திருக்கின்றது என்று அடையாளமிட முடியும் ஒரு சில உதாரணங்களோடு. சரியான நுண்ணரசியலோடு உற்று நோக்க சில விசயங்கள் பொதுப் புத்தியாக உருவாகி ஓடுகின்ற ஆற்றுக்குள் உணரப் படாத ஊற்றுக்களாய் மனித அடிப்படை தளங்களையே அசைத்துப் போவதைப் பார்க்க முடியும் இந்த பொதுப் புத்திகள் அறிவாளிகள் தளத்திலிருந்து ஆரம்பத்தில் இதுவரை பார்க்கப் படாத விசயமாக அடையாளம் காணப் பட்டு ஒரு தர்க்கமென உருவெடுத்து அவர்களிடமிருந்து விரும்பியோ விரும்பாமலோ மக்களிடமும் சமூகத்திடமும் ஒரு போர்வையாய் வீழ்ந்து அதை மூடி மறைத்து வாழ்வின் வேர் வரை ஊடுருவி சில சமயம் உரமாகவும் சில சமயம் தேவையற்ற இறுக்கமாகவும் மாறித் தொலைய பின்னாளின் அவை மலினப் பட்டு அறிவாளி என்ன காரணத்திற்காக சொன்னானோ அதற்கு எதிரான மாற்றுக் காரணங்களுக்காகவும் பயன் பட்டு தொட்ட நோக்கங்களையும் சிதைத்தும் போய் விடுகின்றன. அறிவாளிகளால் புதிய அல்லது இதுவரை இல்லாததுவாய் சிலாகிக்கப் பட்டு தொடர் பயன்பாட்டின் நன்மை தீமை தெரியும் முன்னரே பெயர் ஈட்டித் தந்து விட்டு , அந்த புகழினாலேயே பரவி வியாபித்து விற்பனைத் தந்திரங்களூடாக வளர்ந்து விடுகின்ற விசயங்களும் உண்டு இன்றைய பின் நவீனத்துவம், உடல்மொழி போல சமீபத்தில் உன்னைப் போல் ஒருவன் படத்தை எப்பவும் போல் பிள்ளைகளுடன் பொழுதைக் கழிக்கும் விதமகவே சென்று வந்தேன்.
இன்று மதமும் சாதியமும் மனிதர்களுக்கிடையில் ஒன்று இரண்டாகி இரண்டு நாலாகி பெருகி நிரம்பி வழிந்தபடி எழுப்பும் கேள்விகளுக்கும் அப்பால், எப்பவும் பெண்களைப் பயன்படுத்தியே பழகிய திரையுலக அபத்தங்களுக்கு அப்பால்( நல்ல வேளையாக கதாநாயகி பாத்திரமும் குத்தாட்ட நடன சிகாமணிகளும் தவிர்க்கப் பட்டதால் அத்தைகைய குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பித்து விட்டது படம்) முதல்வரின் ( படத்தில் வரும்) , காவல் துறைக் கண்காளிப்பாளரின் அழுத்தங்களையெல்லாம் சுமப்பதற்கு ஒரு பெண் பாத்திரம் என்ற இன்னும் இன்னுமான அபத்தங்களுக்கெல்லாம் அப்பால் பார்க்கப் படாமல் ஒளிந்து கிடக்கும் இன்னொமொரு விசயமாக என்னுள் நிறைய சிந்தனைகளை கேள்விகளை எழுப்பி விட்ட வகையில் அந்தப் படம் என்னளவில் ஒரு முக்கிய அடையாளம் அல்லது துவக்க இடமாகவே காட்சி தந்தது. எழுபதுகளில் எதிர்மறை வழிபாட்டியல் நம்மிடையே மெல்ல காலூன்றி இன்று வரை பரவி புரையோடிப் போய் அதன் உச்சகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. அன்றெல்லாம் நாயக வழிபாடு என்பது கதாநாயகன் மிக சாதாரண மனிதன் செய்து விட முடியாத அரிய செயல்களைச் செய்கிறவனாகவும் , ஏழை பங்காளன், நலம் விரும்பி ,உண்மையே பேசுபவன் , தான் துயரப் பட்டும் நல்லதையே செய்பவன் கனவிலும் தான் விரும்பிய பெண்ணைக் கூட ஆடை அவிழ்த்துப் பார்க்காதவன் இன்னும் இன்னுமாக இருந்த காலங்கள் போய், திருடியாவது நல்லதைச் செய்பவன், கடைத் தேங்காயை எடுப்பதும் தர்மம் செய்யவென்றால் நல்லது என்கின்ற பாவனையும், நல்லதை செய்ய பெண்ணை அல்லது அடிமையை பயன்படுத்திக் கொள்ளுதல் சரியெனவுமாக கொஞ்ச காலமும், கொலைகாரனின் வரலாறு, தாசியின் வரலாறு , ஒன்று மில்லாதவனின் வரலாறு என்று சொல்லப் படாத பக்கங்களைத் தேடிச் சலித்தவர்கள் இயலாமையின் பக்கங்களிலும், உழைப்பின்மையின் இடமும், குடிவெறியனும், பெண் போகமாக நினைத்தவனும் நாயக அந்தஸ்துக்கு உயரத் தொடங்கினார்கள். மொத்தத்தில் விதி விலக்குகள் பற்றி பேசுவது நடைமுறையாகிப் போனது சிகரெட் குடிப்பது தவறு என்றிருந்த காலம் போய் , சிகரெட்டை தூக்கிப் போட்டும் பிடிப்பதை சவாலாக நிறுவியதும், சிகரெட்டை ஒளித்தால் காதல் மனதில் வந்து விட்டது என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் சுவையை சிகரெட் வழி ஏத்தியதுமான பொதுப் புத்தியை நாமே அறியாமல் எதிர்மறை வழிபாட்டு மரபியல் நம்முள் திணித்தது .எல்லாமே “சரிதானா “என்ற சந்தேகத்தை முதலில் தந்து “ஏன் சரியாக இருக்கக் கூடாது” என கேட்க வைத்து பின்னர் எல்லாமே “அவரவர்கள் பார்வையில் சரிதானே” என்று பதிய வைத்து , பதிய வைத்ததை வாழ்வாகவே மாற்றி வைத்தது . அப்படி திசை திரும்பிப் பயணிக்க வைக்கின்ற ஒரு சிந்தனை தளமாக உருவாவது பின்னாளில் மலினப் பட்டு காலாவதியாகிய பின்னும் உணரப் படாமலேயே பயன் படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது பொதுப் புத்தியாக இன்னுமொன்று
பெரிய சாதனையைச் செய்தாலும் தன்னடக்கமாய் இருந்திருந்த காலத்தில் கால வெள்ளத்தால் செய்தவை மறக்கப் பட்டு விட்டதை அடையாளமிட்டு இன்று எதைச் செய்தாலும் பெயரை நிறுவி கொள்ளுவது என்று தொடங்கி யதை ஒன்றுமே செய்யாதவர்களும் கடைப்பிடித்து, செய்ததாக பெருமை பேசுவதும் அதையே நிறுவுவதற்காக மலின அரசியலையும் செய்து விடுவதுமாக பொதுப் புத்தி நிறுவிக் கொண்டிருக்கின்ற இந்த கால கட்டத்தில் உன்னைப் போல் ஒருவன் ஒரு மாற்று முனை, தொடர்ந்து இந்த இருபது ஆண்டுகளில் அதிலும் கடைசி ஐந்து ஆண்டுகளில் இலக்கிய உலகில் நாம் வாசிக்க நேர்ந்த பின் நவீனத்துவம் தொட்டு , சமூகச் செயல்பாடு வரைக்கும் ஒன்றுமில்லாதவையாக நம்பப் வைக்கப் பட்டிருப்பவை மையப் பார்வைக்கு வரவேண்டும் என்ற அழுத்தக் கோட்பாடு முன் வைக்கப் பட்டது அதாவது விளிம்புகள் மையங்களுக்கு வரவேண்டுமென்ற அறிவாளிகள் தளத்திலிருந்து நகன்ற கோட்பாடு மெல்ல மெல்ல விளிம்புகளைத் தேடிப் பிடித்து தரமேற்றுதல் பீடத்துக்கானதாய் என்றிருக்க வேண்டியது மாறி சின்னத் தனங்கள் எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துப் இதுவரை பார்க்கப் படாதவையாக அடையாளப் படுத்தப் பட்டு அரியணையேற்றி விளிம்பு நிலைகள் என்பதே மலினப் பார்வைக்குட்பட்டு பொதுப் புத்தியாக மாறிப் போனதன் விளைவுதான் திரைப்படங்களில் மோசமான குண நலன்கள் எல்லாம் “ இதுவும் முக்கியத்துவம்” என ஆகிப் போனது . நிஜமாகவே முக்கியப் படுத்தப் படவேண்டியவைகள் புறக்கணிக்கப் பட்ட காலமாகவும் மாறிப் போயிருக்கின்றது . மையங்கள் எப்படி மையங்களாக உருவெடுக்கின்றன. ஏதோ ஒரு வகையில் அந்தந்த காலகட்டத்தில் அவற்றின் பணி அல்லது சிந்தனையின் தேவை செய்யப் படுகின்ற பணி/ சிந்தையின் தரம், பணி/ சிந்தை சரியாக சமூகத்திற்கு அர்ப்பணிக்கப் பட்ட விதம் இவையெல்லாம் சேர்ந்து மனித திட்டமிடுதலைத் தாண்டி மையமாக உருமாறியிருக்கும் . இந்த மையங்களை நாம் வரவேற்றே ஆகவேண்டும் , விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவைகள் ஓங்கி வளர வேண்டும் என்பதுக்கும் அப்பால் தேவையில்லாது ஒதுக்கப் பட்ட விளிம்புகள் மையத்துக்கு வலிந்து கொண்டு வரப் படுதல் போலித்தனத் தேவைகளை உருவாக்கி மனிதச் சிந்தனைகளையும் பணிகளையும் திசை மாற்றி விடுகின்றன. அதிலிருந்து விடுபட எத்தனிக்கும் முக்கிய வெளிப்பாடாகத்தான் இப்படத்தை அடையாளப் படுத்த வேண்டி இருக்கின்றது
ஒன்றுமில்லாதது எல்லாம் ஆர்ப்பாட்டம் மேள தாள முழங்க அரியணை ஏற முக்கிய நிகழ்வுகள் தங்களை மேடை யேற்றாது ஒன்றுமில்லாததாய் கரைத்துக் கொள்வது தவிர்க்க முடியாததாகிப் போகின்றது. அப்படிபட்ட கரைதலை வலியுறுத்தும் முக்கிய மாற்று முனையாக இப்படத்தின் காமன் மேன் எனும் வசனம் , அக்கதாபாத்திரம் எல்லாம் செய்து விட்டு கரைந்து போவதன் மூலம் நிகழ்த்துக் காட்டியிருக்கிறது. அப்படியானால் வன்முறைக்கு எதிராக வன்முறை என்ற படத்தின் இன்னுமொரு கருத்தாக்கத்தை ஆதரிக்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பி விடாதீர்கள் ஏனென்றால் ஒரு கேள்விக்கு, பலநேரம் பதில் இல்லாதவர்கள் அல்லது பதில் தன்னை காட்டிக் கொடுத்து விடும் என நம்புபவர்கள் செய்கின்ற விசயம் தான் அடுத்த கேள்வியை தொடுத்து வைப்பது. அப்படியான கேள்விகளுக்கும் எதிரும் புதிருமான பதில்கள் இருக்கவே செய்கின்றன. முதலிலேயே சொல்லி விட்டேன் படத்தில் எனக்கு எதிரான விசயங்களூம் இருக்கவே செய்கின்றன . நாம் முக்கியப் படுத்த வேண்டிய விசயமாக அல்லது கவனிக்க மறந்த விசயமாக “ பெரிய விசயத்தை செய்தாலும் கரைத்து கொள்வது” என்பதை குவி மையப் படுத்தப் படவேண்டி இருக்கின்றது. எப்பவும் பீடமேறுதலையே கவனத்திலெடுத்து செய்யப் படுகின்ற விசயங்கள் எல்லாம் அது விளிம்போ மையமோ சிறியதோ பெரியதோ வழிதவறியோ போகின்றன. செய்கின்ற வேளையில் ஆத்மார்த்தமாக பொது நலமோடு உண்மையாக செயல்படுகின்ரவர்கள் கானாமல் போவது ஒன்றுமில்லாததாய் மறைந்து போவது செய்த விசயம் அதே விசயமாக வாசிக்கப் படுவதற்கு உதவும் என எத்தனைபேர் உணர்ந்திருக்கின்றோம். பொய் சொல்கின்ற குழந்தை அல்லது முதன் முதலாய் திருடுகின்ற குழந்தை அதை சரியான நேரத்தில் திருத்தி விடும் வகையில் அணுகத் தெரிந்தவர்கள் அக்குழந்தையை திருத்தியதாக எப்படி பெருமை அடித்துக் கொள்ள முடியாதோ அப்படி கரைந்து போய் விட வேண்டும் .தன்னிடம் பாலியல் சிந்தனையோடு நெருங்கும் ஆணின் சிந்தனையை திசை திருப்பி வென்று விடுகின்ற பெண் அப்படி அவன் நெருங்கியதாக எப்படி குற்றச் சாட்டை வைக்க முடியாதோ அப்படி கரைந்து விட வேண்டும். உன்னைப் போல் ஒருவனின் ஒன்றுமில்லாததாகிப் போகும் காமன் மேன் ஆக மாறிப் போவதை இன்னும் நல்ல விசயத்தை செய்கிறவனாக வன்முறைக்கு எதிர் வன்முறை என்றில்லாது காட்டிப் போயிருந்தால் இன்னும் அதன் வாசிப்புத் தளத்தின் தரம் உயர்ந்திருக்கும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது உபாயம் மட்டுமே. நல்ல நட்பாக எப்படி இருக்க முடியாதோ அது போல வன்முறைக்கு எதிர் வன்முறை அல்ல ஆனால் ஆண்களின் வீரம் என்பது வன்முறைதான் பெண்களின் பலம் என்பது அன்புதான் எனவே பெண்களை படத்திலிருந்து அப்புறப் படுத்தி விடுகின்றார்கள் சின்னதன விசயங்களையெல்லாம் பெரிசுபடுத்திக் கொண்டிருக்கின்ற தளத்திலிருந்து 70 களிலிருந்து எதிர்மறை வழிபாட்டு மரபியில் புழக்கத்துக் கொண்டு வந்ததை நேர்மறை வழிபாட்டு மரபுக்கு மாத்தக் கூடிய தருணமாக இப்படத்தின் சில விசயங்களை அடையாளம் கொள்ளலாம் எனும் ஆவல் வருகின்றது. அந்த ஆவலை தந்து போன வரைக்கும் மகிழ்வே நீடிக்குமா மகிழ்வு தொடர் வாழ்வில்
நன்றி : அதிகாலை.காம்Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 11/24/2009 10:15:00 pm   |
|
|
|
| Friday, September 11, 2009 |
| பாரதியின் விடுதலை தேடலில் பெண் |
பாரதியின் விடுதலை தேடலில் பெண் திலகபாமா
பாரதி சுதந்திர வேட்கை தொண்டையை வரளவைத்த காலகட்டத்தில் , வேட்கை த்ணிக்க விடுதலை நீரை தேடித் திரிந்த நெருப்புப் பறவை . வான வெளிகளின் எல்லைகளை சிறகசைப்பில் அழித்தபடி பறந்த அந்தப் பறவையை பெண்ணிய சோதனைக்குள் இட்டு வெல்லுமா எனச் சட்டம் கட்டிப் பார்ப்பது கூட எனக்கு உடன் பாடில்லை. இன்றும் தேசிய விடுதலையோடு பெண் விடுதலையையும், சக மனிதத்தின் விடுதலையையும் சேர்த்து நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டுகள் கழித்தும் எண்ணிப் பார்க்க முடியாதவர்களாக இருக்கின்றவர்களின் மத்தியில் இருளைச் சுமந்தபடி பொழுதைக் கழித்த மானிடர்க்கிடையில் , விடியலின் விண்மீனை விதைத்தவன் பாரதி. தேச விடுதலையோடு ,பெண் விடுதலையை மனதளவிலாக எந்த விதத்திலும் குறைவாக சிந்திக்காதவன் . இன்று நியான் விளக்குகளின் வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு விண்மீனை வாசிக்கத் தருவது நமது கடமையாகின்றது விடுதலை என்ற உணர்வு காணுமிடமெல்லாம் நிரம்பி வழிய வேண்டுமென்பதை வேட்கையாக தாங்கித் திரிந்த பாரதி நாட்டு விடுதலையை உயர்த்திப் பிடித்த போதும் , காடனும் மாடனும் உணர்வு பெறுவதையும் , பெண்கள் பெரும் சக்தியாக உணரப் படுவதின் மூலம் விடுதலை உணர்வு பெறுவதையும் கவிதைகளில் கொட்டித் தந்தவன் பாரதி. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வோர் விசயங்கள் அன்றைய யதார்த்தத்தை முன்னிட்டு முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் பாரதியின் சிந்தனையில் முதன்மைப் படுத்தப் பட்டிருப்பது அன்றைய அடிமை மனோபாவ எதிர்ப்பும் அதிகார வர்க்கத்திடமிருந்து விட்டு விடுதலையாவதுவும் அந்த அடிமை மனோபாவ எதிர்ப்பில் இருந்து கிளம்பியதுதான் பெண்ணின் அன்றைய இருப்பு கிளப்பிய சிந்தனைகளும் அதில் விளைந்த எதிர் மனோ நிலைகளும் பாரதியின் கவிதைகளில் பெண் பற்றிய அன்றைய இருப்பின் மாற்றுக் குரலாக ஒலித்தது. பெண் வீட்டை விட்டு வெளியேற முடியா கல்வி கற்ற இயலா அடிமை வாழ்வுக்கெதிரான குரலாகவே "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"
என்பதுவுமான கும்மிப் பாடல்கள் முழுக்க எதிரொலித்தது.அவருக்கு பிறகு பாடிய பாரதி தாசன் கூட பெண்ணை ஒரு குடும்பத்துக்கானவளாக குறுக்கி விட்ட போதும் அவருக்கு முந்தைய காலகட்டத்திருந்து கொண்டு
"பெண் விடுதலை யென்றிங்கோர் நீதி பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றிகேளீர் மண்ணுக்குள் ளெவ்வுயிருந் தெய்வமென்றால் மனையாளுந் தெய்வமன்றோ? மதி கேட்டீரே! விண்ணுக்கு பறப்பதுபோற் கதைகள் சொல்வீர் விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர் பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை என்றும் ஐம்பூதக்களும் சிவனுக்கானதாய் பாடியதிலிருந்து விடுபட்டு "பூதமனைத்தும் ஆனாய் காளி" என்று , பெண்ணை ஐம்பூதத்துக்குமானவளாய் பாடியதிலிருந்தும் தாய் மாண்பு எனும் கவிதையில் பெண்ணாட்டி தனையடிமை படுத்த வேண்டிப் பெண் குலத்தை முழ்தடிமை படுத்தலாமா? ......................................................................... பெண்ணடிமையுற்றால் மக்களில்லாமடிமையுறல் வியப் பொன்றாமோ? வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டாம் வீட்டினிலே தனக்கடிமை பிறராமென்பான் நாட்டினிலே........... எனக் கேள்வி எழுப்பி பெண்ணடிமைத்தனம், நாட்டு அடிமைத்தனத்துக்கும் ஆன வித்தாய் மாரிவிடும் என எச்சரிக்கும் பாரதியின் கவிதை வரிகள் அவரது விடுதலைத் தேடலில் பெண்ணையும் கொண்டு வந்து வைத்து விடுகின்றது. காலம் காலமாய் கொடுப்பவளாய் சாந்த சொரூபியாய் , மகாலட்சுமி என சொல்லப் பட்ட பெண்ணிணத்தை ஆண்மை வழங்குவதும் அவளே என்றும், உக்ர வடிவாய் சொல்லப் பட்டு நிராகரிக்கப் பட்ட அல்லது அச்சம் தரும் வடிவை "அன்பளித்து விட்டாய் காளி ஆண்மை தந்து விட்டாய் " என்றும்
"மானம் வீரிய மாண்மை நன்னேர்மை வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்"
"ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி என்றும் காளியை நேசத்துக் குரியவளாய் தூக்கிப் பிடித்தது மறுப்புக்குரல் தானே. ,மேலும் பெண்ணுக்கான படிமத்தை பிரட்டிப் போட்ட வித்தையை " கட்டுடைப்பு , பின்னவீனத்துவம் எனும் சொல்லாடல்கள் வாராத காலத்திலிருந்தே செய்தவன் பாரதி
"மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண்ணெனக் கொண்டு மயக்க முற்றிருந்தாரே"
மண் பொன், பெண் விலக்க வேண்டியதாய் சொல்லிய விழுமியங்களுக்கிடையிருந்து பெண்ணையும் பொன்னையும் மண்ணெனக் கொண்டு உடமை யாக்கத் துடிக்கும் ஆதிக்க நிலையிருப்பதை அப்பாடல் நம் கவனத்திற்கு எடுத்து வருகின்றது . நிலவுடமை கால கட்டத்திற்கு பிறகு தான் பெண்ணும் உடைமைப் பொருளாய் பார்க்கப் பட்டு ஆணுக்குள் அடைபடத் துவங்குகின்றாள்.அவள் உடமைப் பொருளா எனக் கேள்வி வாசிப்பவனை கேட்க வைக்கும் கவிதை வரிகள் இவை மிக இயல்பாக கேள்வி பதில் தொனியில் அமைந்திருக்கும் அழகுத் தெய்வம் என்ற கவிதையில் வழமையாக நமை ஆசரியப் படுத்தும் பாரதியின் சிந்தனை வெளியை மெச்சிய படியே கடந்து விடுகின்றோம்.ஆனால் அதையும் தாண்டி உரையாடுபவர்களை உற்று நோக்க அறியாமையில் கேள்வி கேட்பவன் ஆணாகவும், பெண் ஆளுமையோடு பதில் சொல்வதாக இருப்பதுவும் பெண்ணை அறிவின் வெளிப்பாடாக பார்க்கிறது அழகு எனச் சொல்லாமல் சொல்லிப் போகும் பாடலாக அமைகின்றது "காலத்தின் விதி மதியைக் கடந்திடுமா? என்றேன் காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள் ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாலிலெ ஒன்றிரண்டு பலித்திடலாமென்றாள் ................... மூலத்தை சொல்லவோ வெண்டாமோ? என்றேன் முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்
கற்பை பொதுவில் வைப்போம் என்று உரத்து சொன்னதோடல்லாமல்,கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் என்று பேசி வந்த காலத்திற்கிடையில், கற்பு தவறுகின்ற பெண்களாலேயே உலகம் சீரழிகின்றது எனப் பேசி வந்த சமூகத்திற்கிடையே , பெண் கற்பு நெறி தவறுவதற்கு ஆண் கற்பு நெறி தவறுவதும் தான் காரணம் என்று ஒழுக்கத்தை இருபாலாருக்கும் பொதுவில் வைத்தவன் பாரதி ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ ....................................... காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்து கற்பு கற்பு என்று கதைக்கின்றாரே -விடுதலைக் காதல்
கவிதையில் அவரது சிந்த னை சவுக்கடிகளாய் சமுகத்தின் மீது சாடுகின்றது
இப்படியாக விடுதலை உணர்வை அடிமை மனோபாவத்திற்கெதிரான மாற்றுக் குரலாக உணர்வுகள் சிதைபடுவதைக் கண்ட பொழுதெல்லாம் உணர்வுகள் சிதைபடுவதை மறுத்து வாழ்ந்த மானிடர்க்கெல்லாம் அது ஒடுக்கப் பட்டோராக இருந்தாலும் , பெண் மக்களாக இருந்தாலும் கண்ட ஒவ்வொரு தருணத்திலும் அவர்களுக்கு தன் எழுத்தின் சிந்தனை வழி தொடர்ந்து உணர்த்தப் புகுந்தவன் பாரதி இன்றைக்கு பெண்ணினத்திற்க்காகப் பேசப் பரிந்து வரும் இலக்கிய வாதிகளும் இலக்கியமும் தன் கையைக் கொண்டே பெண் கண்ணைக் குத்தும் வேலையை மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் நம்முன்னே எழும்புகின்ற பெரிய கேள்வி பாரதி இச்சமூகம் வழி வழியாக மரபணுவிலும் ஊடாகத் தந்த ஆணாதிக்க மனோநிலையை கடந்தேகினானா? என்பது அவன் எந்த வித ஆதிக்க மனோநிலையையும் தன்னிலிருந்து அகற்றி வென்றிருந்தான். அதை விட ஆதிக்க மனோநிலை தன்னிலிருந்ததை ஒரு பெண்ணே நிவேதிதா தேவி அடையாளமிட்டு காண்பித்த போது உண்மையை ஒத்துக் கொள்ளும் திட சிந்தனையும், அதை பகிரங்கப் படுத்தும் உண்மையும் கொண்டிருந்தவன். பெண் துணையோடு அவளின் மனித இருப்பை உணர்ந்து விட்ட தருணத்தை உரத்து வெளிப்படுத்தி கடந்தேகியவன் எனவே அவனது நாட்டு விடுதலைத் தேடலிலும் பெண் விடுதலை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி இருந்தது . இன்னும் சொல்வதற்கு ஆயிரக் கணக்கில் அவன் கவிதைகள் சான்றுகள் தந்த வண்ணம் இருக்கிறது. அதை முற்றும் உணர்ந்த வாசிப்பு நம்மிடம் மிக குறைவாகவே இருக்கின்றது.
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப் பின்னதற்கு காவலென்று பேருமிட்டு நீதமில்லாக் கள்வர் நெறியாயிற்றப்பாLabels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 9/11/2009 09:19:00 pm   |
|
|
|
| Tuesday, July 07, 2009 |
| உடல் தானம் சில உறுத்தல்கள் |
உடல் தானம் சில உறுத்தல்கள்
மூன்று வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கின்றேன். மருத்துவக் கண்காட்சி. சற்றேறக் குறைய 15 வருடங்களுக்கு பிறகு அப்போது நடந்தது. அதில் கலந்து கொண்டு சுற்றி வந்தது நல்ல அனுபவம். என் குழந்தைகளோடு போய் கொண்டிருக்க ஒரு அறையில் இருந்த தொலைக்காட்சியில் அறுவை சிகிச்சைகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடன் இருந்தவர்கள் குழந்தைகள் பார்க்க வேண்டாமென்று சொல்லவும் என் குழந்தைகள் நாங்கள் பயப்படமாட்டோம் என்று சொல்லி இருந்து பார்த்து கேள்விகள் எழுப்பி நேரம் போனதே தெரியாமல் தாகம் எடுக்கும் வரைக்கும் சுற்றி வந்தனர். அதில் ஒரு அறைக்குள் நுழைய காலடி எடுத்து வைத்ததும் யோசித்தார்கள் அனைவரும். வேகமாக நடந்தது முன்னேறிக் கொண்டிருந்த எல்லாரது கால்களும் அந்த அறை வாசலில் தயங்கின சில முன்னேறிப் போகாமல் திரும்பின.இன்னும் சில வேக நடை தொலைத்து மெதுவாக நடந்து அந்த அறையை விட்டு வெளியேறியதும் இலகுவாயினர், அந்த அறையில் உடல்கள் பாடம் செய்யப் பட்டு பாகங்களாங்கப் பட்டு இருந்தன மாணவர்கள் படிக்கும் வசதிக்கென.. மனதில் அன்று நின்று விட்ட காட்சி அது.
போன வருட தொடக்கத்தில் ஒரு எண்ணம் உடலை தானமாக மருத்துவக் கல்லூரிக்கு தந்து விட வேண்டும் என்று. என்ன செய்ய வேண்டும்? என்ற என் கேள்வியை எனக்கிருந்த மருத்துவச் சூழல் எளிதாக்கித் தருமென நம்பியிருந்தேன். கேள்விகளை என் கணவரிடமிருந்தே துவக்கினேன். நிறைய சட்ட விசயங்கள் இருக்குப்பா. அவ்வளவு எளிதான விசயமில்லை மதுரை மருத்துவ்ச்க் கல்லூரியில் அனாடமி துறையில் கேட்டால் சொல்லுவாங்க. சொல்லி விட்டு அவரது வேலைகளுக்குள் மூழ்கிப் போனார் இங்கிருக்கின்ற கண் தானத்திற்கு பெருமுயற்சி எடுக்கின்ற அமைப்புகளைக் கேட்டேன். உற்சாகமான “அவசியம் செய்திடுவோம்” என்கின்ற பதிலோடு உறைந்து போனார்கல். உள்ளூர் அரசு மருத்துவர் ஒருவரை அனுகி கேட்டேன். மதுரை நான் செல்லும் போது அதற்கான விண்ணப்பப் படிவம் வாங்கி தருகின்றேன் என்று சொன்னார். பார்க்கும் போதெல்லாம் எல்லாரும் அடுத்த வாரம் என்பதையே பதிலாகத் தந்து காணாமல் போக மூன்று மாதங்கள் ஓடி விட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்து போகிறவர் என்பதால் அவரே படிவமும் , கூடவே என்ன என்ன செய்யனும் என்பதையும்பெற்ரு வரச் சொல்லி கேட்க , தொடர்ந்த என் நச்சரிப்பில் படிப்புக்கு நடுவில் எல்லா விபரங்களும் பெற்றுத் தந்தார் நான் இன்னார்தான் என நோட்டரி பப்ளிக் கையெழுத்து போட்டுத் தரனும் எனவும், என் குடும்ப அங்கத்தினர்களின் சம்மதமும் வேணும் என்று சொல்ல, எல்லாமும் எல்லாரையும் தெரிந்த மாதிரி இவ்வளவு நாளும் எனது பாவலாக்கள் இருந்திருந்திருக்கின்றன என்று தோன்றியது. ஒவ்வொரு விசயத்திற்காக அணுக அணுகத்தான் எதுவுமே நமக்குத் தெரியவில்லை என்று தோன்றியது. 20 ரூபாய்க்கான பத்திரப் பேப்பரில் நான் இன்னார்தான் என்று எழுதி வாங்குவதற்குள் 3 வாரம் ஓடியிருந்தது. அடுத்து அதை எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் முடித்து விட்டதாக எண்ணிக் கொண்டு என் கணவர் மற்றும் என்னுடைய ஒப்புதல் கடிதமோடும் மதுரை சென்று மருத்துவக் கல்லூரிக்குள் தயக்கத்தோடவே அனாடமி துறையைத் தேடிப் போனால் வெறும் மேசை எனை வரவேற்றது. கல்லூரிக்கு பரிச்சியமில்லாத என் அந்நிய தயக்கம் கண்டு ஒருவர் விசாரிக்கின்றார். என்ன்ப்பா வேணும். உடல் தானம் செய்வதற்காக கேட்க வந்திருக்கின்றேன் என்று சொல்ல விரைந்து சென்று என்னை நாற்காலி போட்டு அமரச் செய்து துறை பேராசிரியர்கள் வருவார்கள் என்று சொல்லி விட்டு சென்றார். மருத்துவக் கல்லூரிக்குள் நானே நுழைந்து வாங்கியிருக்க இவ்வளவு தயங்கியிருக்க வேண்டியதில்லை என்பது பின்னரே புரிந்தது
இந்த வாசத்துக்குள் என் உடலும் கிடத்தப் பட்டிருக்கும் என்ற நினைப்போடவே அங்கு அமர்ந்திருக்க வந்து எனது ஆவணங்களை சரி பார்த்த பேராசிர்ரியர். இது ரொம்ப காலத்துக்கு முந்தைய வழிமுறைகள் இப்ப நிறைய மாத்திட்டாங்க. நிறைய பிரச்சனையும் சட்ட சிக்கலும் வருதுங்கிறதுனால எல்லாவற்றையும் முறையா செய்ய வலியுறுத்துறாங்க என்றார்
. நான் சென்றிருந்த நேரம் ஒரு மாணவன் விபத்தில் இறந்து அவனது உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப் பட்டதை அடுத்து ஊடகங்கள் கொடுத்த புகழாரத்தில் சில பெற்றோர்கள் தங்கள் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் உறுப்புகளை சரியான விபரம் தெரியாது தானமாய் வழங்க முன்வந்திருந்த நேரம் சில விசயங்களுக்கு முறையாக கிடைக்கின்ற புகழ் கூட அதற்குத் தகுதி யில்லாதவர்களையும் அதை செய்யத் தூண்டி விடுவது சிக்கலான விசயம் தான். எனவே சட்ட திட்டங்கள் கடுமையாக்கப் பட்டிருப்பது தானம் என்ற பேரில் உடல் வியாபாரமாகி விடக் கூடாது என்ற அரசின் நிர்வாகத்தின் பயம், ஏற்கனவே பெண் உடலை பொருளாக்கி விட்ட இந்த வியாபார சமூகத்திடமிருந்து அதை மாற்றி விடத் தவிக்கும் எனக்கு ரொம்ப நியாயமான பயமாகத் தோன்றியது. பேராசிரியர் சொன்னார் ஆனால் சட்டங்கள் கடுமையான பிறகு இதுவரை ஒரே ஒருவர் தான் முறையான விண்ணப்ப கடிதம் தந்து எங்கள் கைகளில் இருக்கின்றது. தானம் கொடுக்க விரும்புபவர்கள் வெகு சிலரே அதிலும் அவர்களே விரும்பினாலும் உறவுகள் விரும்புவதில்லை . அப்படி எல்லாம் விரும்பி வந்தாலும் சட்ட திட்டங்களை முறையாக செய்து முடித்து வருபவர்கள் இல்லை என்றார். ஏற்கனவே இருந்த ஒரு நபரின் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை பார்த்து என்ன என்ன ஆவணங்கள் வழங்க வேண்டும் என குறித்துக் கொண்டு மீண்டும் வீடு திரும்பினேன்.
நோட்டரி பப்ளிக் கொடுத்திருந்த நான் இன்னார் தான் எனும் ஆவணத்தை எடுத்துக் கொண்டு கிராம அதிகாரியைச் சந்தித்தேன். விசயத்தைச் சொல்லி வாரிசுதாரர் சான்றிதழ் வேண்டும் என்றேன். உயிரோடு இருப்பவர்களுக்கு இதுவரை வாரிசுதாரர் சான்றிதழ் தந்ததில்லை என்றனர்.அதனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது என திருப்பி அனுப்பினர். மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியரைச் சந்தித்து ஏற்கனவே கொடுத்திருந்த நபர் வழங்கியிருந்த வாரிசு சான்றிதழ் எப்படி எழுதப் பட்டிருந்தது என்று பார்த்து எழுதிக் கொண்டு வந்தேன் மீண்டும் கிராம அதிகாரி அலுவலகப் படையெடுப்பு. அவர் கேட்டு செய்து வைக்கின்றேன் போய் வாருங்கள் என்று அனுப்பி விட்டார்.
இதுவரை யாரும் இப்படி எழுதி வாங்காததால் இறப்பதற்கு முன் வழங்க படிவம் எதுவும் இல்லை எனவே இது போல டைப் செய்து கொண்டு வாருங்கள் என்று ஒரு கையெழுத்து பிரதி கொடுத்து அனுப்பினார். அது தட்ட்ச்சு செய்து நிரப்பி அவரின் கையெழுத்து வாங்கி வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு சென்றது அவரது முத்திரை வேண்டும் என்பதற்காக. அவர் கிராம அலுவலக அதிகாரி எழுதிக் கொடுத்தது தவறு நான் எழுதுவது போல் எழுதிக் கொடுங்கள் என்று அவர் ஒரு மாதிரி படிவம் தயாரித்துக் கொடுக்க. மீண்டும் அதை தட்ட்ச்சு செய்து நிரப்பி அவர் கையெழுத்துக்காக காத்துக் கிடந்தது படிவம். அவர் முத்திரை கிடைத்ததும் தாசிதாரின் அலுவலகத்திற்குச் சென்றதும், அவர் இதுவரை எழுதிய படிவங்கள் எல்லாம் தவறு என தானும் ஒரு மாதிரி தயாரித்துக் கொடுக்க மீண்டும் தட்ட்ச்சு நிரப்புதல் அலுவகத்தில் அதிகாரிக்காக காத்திருத்தல் என்று தொடங்கி கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி , தாசில்தார் மூன்று பேருடைய முத்திரையுடனும் இவர்கள் தான் என் வாரிசுகள் என்பதற்கான சான்றிதழ் என் கைவந்தபோதும் முழுதாக 6மாதங்கள் கடந்து விட்டிருந்தன. இதோடு என் குழந்தைகள் , கணவர் ஆகியோரின் ஒப்புதல் கடிதமோடும். உடலை தானமாக எடுத்துக் கொள்ள யாரும் தடை சொல்ல மாட்டார்கள் எனற கடிதமும் இணைத்து மருத்துவக் கல்லூரி வழங்கிய படிவத்தையும் நிரப்பிக் கொண்டு போய் மருத்துவக் கல்லூரியில் துறை பேராசிரியரிம் சமர்ப்பித்தேன். இப்ப என்ன அவசரம் இன்னும் எவ்வளவோ காலம் கிடக்கு மெதுவா செய்திருக்கலாம் நிங்க என்றார். தோணுறப்ப செய்திடனும் எனும் வார்த்தையோடு எனது பங்கை முடித்து விட்ட திருப்தியில் வீடு வந்து சேர்ந்தேன் நன்றி கல்கிLabels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 7/07/2009 10:49:00 am   |
|
|
|
| Tuesday, June 23, 2009 |
| திசைகளின் தரிசனம் |

திசைகளின் தரிசனம்
பயணக் கட்டுரை திலகபாமா காவ்யா வெளியீடு 16, இரண்டாம் குறுக்குத் தெரு டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம் சென்னை-600 024. போன்: 044-23726882 விலை ரூ.90/-
இலக்கியத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருப்பவர் திலகபாமா. கவிதை, சிறுகதை, கட்டுரை என்னும் நிலைகளைக் கடந்து இயங்கி வருபவர். தற்போது தன் பயணங்களை வைத்து கட்டுரையாக்கித் தந்துள்ள தொகுப்பு 'திசைகளின் தரிசனம்'. இலங்கை, இலண்டன், டார்ஜிலிங், துருக்கி, பாலித்தீவு ஆகிய வெளிநாடுகளில் கவிஞர் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை உள்ளார்ந்த உணர்வுடன் கூறியுள்ளார். 2005ல் முதல் முறையும் 2007ல் இரண்டாம் முறையும் இலங்கை சென்றுள்ளார். இராவணன் பற்றிய விவரங்களுக்காக மீண்டும் இலங்கை வர வேண்டும் என்னும் ஆர்வம் எழுந்தாலும் "இப்பொழுது இருக்கிற கலவரச் சூழலில் இன்னொரு முறை இலங்கை வருவது சாத்தியமா?'' என்னும் கட்டுரையாளரின் அச்சம் குறிப்பிடத்தக்கது. இரண்டு முறையும் இலக்கியம் சார்ந்தே பயணித்துள்ளார். பல இடங்களில், பல தலைப்புகளில் பேசியுள்ளார். வரவேற்பையும் பெற்றுள்ளார். விவாதங்களையும் எதிர்கொண்டுள்ளார். இலண்டன் பயணம் பற்றியது இரண்டாம் கட்டுரை. இந்தக் கட்டுரைகள் வடக்கு வாசல் இதழில் தொடராக வெளிவந்தவை. பெண் தன்னைக் கண்டறிய இவ்வாறான பயணங்கள் அவசியம் என்று ஒரு போராட்டத்துக்குப் பின்னே வெற்றி பெற்றேபயணத்தைத் தொடங்கியுள்ளார். இக்கட்டுரை முழுக்க பெண்ணியமே பேசியுள்ளார். பெண் முன்னேறும் போது ஆணே காரணம் என்பவர்கள் ஆண் முன்னேறும் போது அதற்குக் காரணமாயிருந்தாலும் அது அப்பெண்ணின் கடமை என்போரைச் சாடியுள்ளார். பெண் பாலியல் தொழிலைக் கட்டுரையாளர் ஏற்கவில்லை. முத்துலட்சுமி ரெட்டியை நினைவுகூர்ந்து அவர் வழியில் செல்பபவராக தன்னை நிறுத்திக் காட்டியுள்ளார். இலண்டன் பயணத்தைப் போல இக்கட்டுரையும் நீண்டதாக உள்ளது. மூன்றாவதாக கட்டுரையாளர் பயணித்த இடம் 'டார்ஜிலிங்'. இது இலக்கியம் சார்ந்ததாக அல்ல. இன்பச் சுற்றுலாவாக உள்ளது. டார்ஜிலிங் பயணத்தில் தான் கண்டு களித்ததை கட்டுரையாகப் படம் பிடித்து விருந்தாக்கித் தந்துள்ளார். இடையிடையே கவிதையாகவும் வடித்து ரசிக்கச் செய்துள்ளார். தீண்டித் தழுவி அணைத்துக் கொள்ளப் பார்க்கும் குளிர் மறுத்தோடும் உடல் வெளித் தள்ளிப் போகிறது வெக்கையின் வேட்கையை இமயத்தின் கம்பீரமெடுத்து ஓடுகின்றநதி பாறை தகர்த்து கரை உடைத்து எக்காளச் சிரிப்பிட்டு புவி புரட்டி வருகின்றது போல உள்ளது கவிதையோட்டம். மருத்துவக் கருத்தரங்கம் ஒன்றிற்காக 'துருக்கி'ச் சென்றவர் அவ்வனுபவத்தையும் கட்டுரையாக்கித் தந்துள்ளார். தென்னிந்திய மொழிகள் பேசும் நான்கு தோழியரோடு நட்பு ஏற்படுவதைப் பெருமையுடன் கூறுகிறார். "வேறுபாடுகளை மீறி மகிழ்ந்திருத்தல் எல்லாருக்கும் ஒன்று தானே?'' என மொழியைக் கடந்து மனம் நேசிப்பதை மகிழ்ச்சியுடன் வியக்கிறார். "என்னுடைய தேர்வாக இல்லாது தவிர்க்க முடியாது நான் போக நேர்ந்த பயணமாகவே அமைந்திருந்தது'' என 'பாலித்தீவு' பயணம் குறித்துத் தொடங்கியுள்ளார். ஆயினும் வாய்ப்புகளை நழுவ விடுவதில்லை என்கிறார். துருக்கியருக்குக் கண் போல் பாலித்தீவினருக்கு பூனை தெய்வம் என்கிறார். பாலித்தீவில் உள்ள வீடுகளில் கிராமத்து படம் போல் விக்கிரகம் இன்றி கோவில்கள் உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். மற்றப் பயணங்களைப் போல பாலித்தீவின் பயண முடிவு சுபமாக இல்லை. ஒரு கலகத்துடனே முடிவுற்றதை அச்சத்துடன் விவரித்துள்ளார். வானிலை மோசமாக இருந்ததால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது என்றும் "சாவை பக்கத்து இருக்கையில் பாத்திருக்க வைத்த கடைசி 20 நிமிட பயணம் வாழ்வில் மறக்க முடியாதது'' என்னும் வரிகள் அதன் பயங்கரத்தை உணர்த்துகின்றது. கவிஞரின் பயணங்கள் ஒவ்வொன்றுமே மறக்க முடியாதவையாகத் தான் உள்ளன. எல்லா பயணங்களையும் திட்டமிட்டே தொடங்கியுள்ளார். நாள், நேரம் குறிப்பிட்டு ஒவ்வொரு நிகழ்வையும் எழுதியிருப்பது அவரின் திட்டமிடலுக்குச் சான்று. ஒவ்வொரு பயணத்தையும் கட்டுரையாக்க வேண்டும் என்னும் முன்முடிவுகளைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. பயணம் தொடங்குவதற்கான முன் தயாரிப்புகளுடனே ஒவ்வொரு கட்டுரையையும் தொடங்கியுள்ளார். பயணம் மேற்கொண்ட நாடுகளில் கண்டதையும் மக்களுடன் பழகியதையும் அவரின் பழக்க வழக்கங்களையும் கூறியுள்ளார். பயணக் கட்டுரைகள் என்னும் போதிலும் பெண்ணிய நிலையிலிருந்து சிறிதும் விலகாமல் எழுதியுள்ளார். கட்டுரையாளர் ஓர் அசைவப் பிரியர் என்பதையும் அறியச் செய்கிறது. கட்டுரையினூடாக சி.கனகசபாபதியின் மனைவி லட்சுமி அம்மாள் உள்பட பலருடனான தன் நட்பையும் உறவையும் கூறியுள்ளார். "நட்பின் அடித்தளமுமே இலக்கியம் சார்ந்ததுதானே'' என்னும் வரியே சான்றாக உள்ளது. இடையிடையே சில கவிதைகளையும் மேற்கோளாக்கித் தன் கவியார்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கட்டுரைகளின் மூலம் வாசிப்பவர்களையும் திசைகளைத் தரிசிக்கச் செய்கிறார். நதியைப் படமெடுக்க வந்தவர் தன்னைப் படமெடுத்ததைத் தான் சுவைத்த தருணங்கள் என்கிறார். பயணக் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் நேர்காணலும் ஓர் இலக்கியக் கட்டுரையும் தனித்துக் காணப்படுகின்றன. நேர்காணல் 'தீபம்' தொலைக்காட்சியில் வந்ததாகும். பெண்ணிய போக்கில் தீவிரவாதம், மிதவாதம் என்னும் இருவகை இருந்தாலும் "வாழ்க்கை என்ன சொல்லிச் செல்கின்றதோ அந்த இடத்தில் இருந்துதான் எங்களுடைய பாதையை தொடங்கணும் என்பதில்தான் நான் இருந்து கொண்டு இருக்கிறேன்'' என ஒரு வினாவிற்கு பதில் அளித்துள்ளார். சி.கனகசபாவதி மீதான தன் மதிப்பீட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். பெண் தன்னை நிலைநிறுத்துவதான முயற்சிகள் தொடர்பாகக் கொழும்புவில் நடைபெற்ற கருத்தரங்கின் மீதான தன் பார்வையைக் கட்டுரையாக்கித் தந்துள்ளார். இது விவாதமாக உள்ளது. 'பெண்ணிய நாடகத்தின் ஆக்கம்' என்னும் நாடகத்தை முன் வைத்து ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளார். ஒரு சோறு பதம் என்பதை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை ஒர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார். இமையத்தின் 'செடல்' நாவலை முன் வைத்து பேசியதில் நம்நாட்டு மதிப்புகள் வெளிநாட்டில் இழக்கச் செய்யக்கூடாது என்று கருத்துரைக்கிறார். தமிழீழத் தேசியமும் தமிழர் அடையாள மறுப்பும் தலித் அரசியலூடாக இலங்கையில் பேசுவது பிழையாகப் போகுமென்று கருதுவது குறிப்பிடலுக்குரியது. தன் கட்டுரை மீது எழுந்த விமரிசனங்களையும் நேர்மையாக ஒப்புக் கொண்டுள்ளார். இத்தொகுப்பில் இக்கட்டுரை அந்நியமாயிருந்தாலும் அவசியமாக உள்ளதை மறுப்பதிற்கில்லை. பயணக் கட்டுரை எழுதுவது எளிதானதல்ல. பயணித்தினூடே கட்டுரைக்கான தரவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். கவிஞர் திலகபாமா பயணத்திலும் வெற்றிப் பெற்றுள்ளார். பயணக் கட்டுரையிலும் வெற்றிப் பெற்றுள்ளார். ஒரு தேர்ந்த மொழியையும் அழகாகக் கையாண்டுள்ளார். பயணக் கட்டுரைக்கும் ஓர் இலக்கியத் தகுதியைப் பெற்றுத் தர முயற்சித்துள்ளார். இலக்கியத்தில் தன் அடுத்த கட்ட பயணத்தைத் தொடர்ந்துள்ளார். "பயணம்'' தொடர வாழ்த்துக்கள். பொன்.குமார்
நன்றி:வடக்கு வாசல், பொன் குமார்Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 6/23/2009 10:52:00 pm   |
|
|
|
| Saturday, June 06, 2009 |
| இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் |
இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்
உரையாடல்கள் , தனிப்பட்ட உரையாடல்கள் பொதுமையில் பேசுவது சரியல்ல என்ற விழுமியங்களுக்கு அப்பால் எனக்குக் கிடைக்கின்ற ஒரே ஒரு தடயங்களாய் அவை இருக்கும் பட்சத்தில் அவையன்றி உண்மையை சொல்லவும் முடியாதிருப்பதால் இன்னும் சில உரையாடல்களை முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. உரையாடல்களை சொன்ன நபர்களும் தருணங்களும் முக்கியமில்லை ஏனென்றால் இது தனிநபர்களைக் கூண்டிலேற்றும் முயற்சியல்ல. சமூகத்தின் ஒட்டு மொத்த சாயம் மனித முகத்தில் அழிக்க முடியாது கறையாக கவிழ்ந்திருப்பதை சுட்டிக் காண்பித்து புரிய வைக்கும் முயற்சியே.
விருது நகரில் ஒரு இலக்கிய அமைப்பு நடத்திய ஆண்டு விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தேன். எனக்கு முன்னால் பட்டி மன்ற நிகழ்வு நடத்தப் பட்டுக் கொண்டிருந்தது. சிரிப்பு வரவழைக்கின்றேன் பேர்வழி என்று வீட்டுப் பெண்களை கோமாளிகளாக்கி , குறை சொல்லிச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர். பேச வந்த தலைப்போ புத்திலக்கியமா? சங்க இலக்கியமா? கருத்தாழத்தில் விஞ்சி நிற்பது. பேச்சின் மூலம் புத்திலக்கியத்தின் சுவாரசியத்தையும் , பழைய இலக்கியத்தின் தொன்மைகளையும் பெருமையையும் சொல்லி வாசிக்கும் ஆர்வத்தை தூண்டி விட வேண்டியது பேச்சாளர்களது கடமை. ஆனால், பேச்சு சுவாரசியமும், ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கு கூட கருத்தாழம் என விசயத்தில் காட்டவில்லை. அதையும் தாண்டி பொதுப்புத்தியின் கருத்துக்களையே மேலும் மேலும் அழுத்தமாகும் வண்ணம் பேசிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்.பேச்சுக் கிடையில் பெண் மேல் தெரியாமல் கைபட்டால் கூட கற்பு போய் விடும் என்கின்ற ரீதியில் பேச்சுக்கள் போக, மாற்றுச் சிந்தனைகளை முன் வைக்க வேண்டிய தேவையிலிருந்து என் உரை நகன்றது.
ஐரோப்பிய பயணங்களை முன்னிட்டு அதிலிருந்து இன்னும் அதிகமாக நான் விரிவாக்கிக் கொண்ட பெண் நிலைச் சிந்தனைகள் என பேச்சு போக , கூட்டம் இறுகலான அமைதியோடு அமர்ந்திருந்தது. அதுவரை இருந்து கொண்டிருந்த சலசலப்பு வெளியேறியிருக்க உறைந்து போயிருந்தது கூட்டம்
கூட்டம் முடித்து வந்து விட்டு நண்பரோடு அதைப் பற்றி தொலைபேசிக் கொண்டிருந்தேன். என் பேச்சு எப்படி இருந்தது என்ற அவரது கேள்விக்கு நானே எப்படி சொல்வது என்ற கேள்விக்குப் பின்னர் தொடர்ந்தேன். கூட்டம் ஆழ்ந்த சிந்தனையோடு இறுக்கமாக இருந்தது என்றேன். எதிர் முனையிலிருந்து கேள்வி “ அப்போ உங்க மொழி புரிஞ்சிருக்காது” புரியாமல் போறதுக்கு என்ன இருக்கு தமிழில் தானே பேசுறேன். அதுவும் சம்பவங்களின் சாட்சியங்களோட . அப்போ ஜனரஞ்சகமா பேசினீங்களா? இந்த கேள்வி அடுத்த அபத்தமாய் தோணித்து. ஏனென்றால் , திரை சின்னத் திரை என்று எல்லா ஊடகங்களும் “சனங்கள் கேட்கிறார்கள். தருகின்றோம்” என்று அவர்கள் வியாபாரப் புத்திக்கு சாதகமாக சனங்களின் ரசனையை மறைமுகமாக குறைத்து சொன்னபடி இருப்பதன் வெட்கக் கேடு என் முன்னாடியும் கேள்வியாக நிற்கிறதோ எனும் பயம். அப்படிச் சொல்ல முடியாது என்று சொல்லி வைக்க அவரின் அடுத்த கேள்வி இரண்டும் கெட்டானா பேசினீங்களா?
அதிர்ந்து போனேன். இதுவரை நண்பரிடமிருந்து என் பேச்சின் திறமை பற்றி முன் வைக்கப் பட்ட மூன்று வாக்கியங்களும் திறமையற்றிருப்பதாய் கட்டி விட நினைக்கும் வாக்கியங்கள்
1 உங்க மொழி புரிஞ்சிருக்காது 2 ஜனரஞ்சகமான பேச்சா 3இரண்டும் கெட்டானா பேசினீர்களா?
அப்போ எனக்கு முன்னால் உங்களால் வைக்கப் படுகின்ற தெரிவுகள் “ நான் நல்ல விதமாகத்தான் கேட்டேன், நீங்க தப்பா புரிஞ்சுக்கிறீங்க “என்று ரொம்பத் தெளிவாய்த் தப்பித்துக் கொள்ளக் கூடிய தெரிவுகள் அதே நேரம் மூன்று தெரிவும் அதைத் தாண்டி வேறொன்றை அதாவது திறமையாக பேசினேன் என்று ஒத்துக் கொள்ள மறுக்கும் மனத்திலிருந்து எடுக்கப் பட்ட தெரிவுகள். இத்தெரிவுகள் என்னை விட்டே என் பேச்சு திறமையற்றிருந்தது எனத் தெரிவு செய்து விட நிர்ப்பந்திக்கின்றன.
ஒரு முறை காலச்சுவடு பல எழுத்தாளர்களுக்கு பட்டப் பெயர் இட்டிருந்தது( அதில் என் பெயரும் அடக்கம்) அதில் ஒரு கவிஞருக்கு “புன்னகை அரசி” என்று பெயரிட்டிருந்தது உண்மையில் அக்கவிஞர் சிரித்த முகத்தோடு இருப்பவர் என்ற உண்மை இருந்த போதும் அப்படியான நல்ல அர்த்தத்தில் அப்பத்திரிக்கை அவ்வார்த்தையை வெளியிடவில்லை எனும் தொனி வாசிப்பவருக்கு புரியக் கூடியதாகத்தானிருந்தது.அதன் ஒட்டு மொத்த தொனியில் அவ்வார்த்தை அக்கவிஞரை ” இளிச்சவாய்” என்ற பொருளில் சொல்லும் வஞ்சப் புகழ்ச்சி அணியே என்று எல்லாருக்கும் தெரிந்தாலும் தட்டிக் கேட்க முடியா தொனியில் அவ்வார்த்தை பிரயோகம் இருந்தது. யாரும் எதுவும் கேட்காமலேயே , அல்லது பேசிப் பெரிசு படுத்தாமலேயே எல்லா படைப்பாளிகளும் அந்த விசயத்தை கைவிட்டனர்
என்னிடம் பேசப் பட்ட தொலைபேசி உரையாடலுக்கும் இவ்வார்த்தை பிரயோகத்தை பயன் படுத்திக் கொண்டு பட்டப் பெயரிட்ட பத்திரிக்கை உணர்வுக்கும் பெரிய வித்தியாசமில்லை இன்னது செய்கிறோமென்பதை அறியாமல் செய்யவில்லை. அறிந்து செய்வதை அறியாமல் செய்வது போல் பாவனை செய்கின்றார்கள் “ பிதாவே இவர்களது பாவங்களை உணரச் செய்யும்
நன்றி
Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 6/06/2009 07:58:00 pm   |
|
|
|
| Monday, April 20, 2009 |
| மூன்றாவது கண்ணியில் தொலையும் முதற் கண்ணியின் இருப்பு |
திலகபாமா
மனித வாழ்வின் அடிப்படைத் தேவை எதுவெனக் கேட்டால் கூசாமல் சொல்லுகின்ற பதில் பணமும் அதற்கான பதவியும் என்றாகிப் போன இருபத்தொன்றாம் நூற்றாண்டிலிருந்து கொண்டு வாழ்க்கைச் சங்கிலிப் பிணைப்பின் தொடர்ச்சியில் இணையும் பணமும் பணியும் இழையின் தொடக்கம் எதிலிருக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
எளிமையாகச் சொன்னால் பணியும் , பணமும் கிடைத்தபின் உடலின் பசி மறக்க , மானம் எனும் உணர்வு காக்க வென்று எழும் அடிப்படைத் தேவைகள் பணியும் பணமும் கிடைத்ததாலேயே நிறைவு பெற்று விடுகின்றதா? இல்லவே இல்லை. பணி கிடைத்தபின் அது தந்த பணம் கிடைத்த பின் வயிறு செரிக்க உணவு தேடி அலைவது கோடீஸ்வரனுக்கும், கோவணாண்டிக்கும் பொதுவாகிப் போகின்ற ஒன்றாகின்றது. ஆதி காலம் தொட்டு இன்றைய அணு ஆயுதக் காலம் வரை முதல் கண்ணி எங்கள் வாழ்தலுக்கான உற்பத்திப் பெருக்கமே , மெல்ல மெல்ல உற்பத்திப் பெருக்கத்தை ஒழுங்கு செய்யவும் ஒருங்கிணைக்கவும் ஒழுங்கமைவுக்குள் கொண்டு வரவும் படிப்படி நிலைகளாக நிர்வாகம், கிளை உற்பத்திகள் அதன் மேம்பாடுகள் என முக்கிய நரம்பு , கிளை பிரிந்து , கிளை பிரிந்து, பரந்து கொள்வது தவிர்க்க முடியாதொன்றாகிப் போக , உற்பத்தி பெருக்கத்தை வழி நடத்த தொடர் கண்ணிகளாக உருவாகிய சேவைப் பணி அமைப்புகள், தன்னைத் தானே முக்கியப் படுத்திக் கொண்டு தொடக்க உற்பத்திப் பெருக்கத்தின் தேவையையே தொடர் காலங்களில் மறக்கடித்து விடுகின்றன. அப்படியான ஒன்றாகத்தான் இன்றைய நிறுவனங்களும் அதன் பணிகளும் மனித வாழ்வை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. நிறுவனங்களும் சேவை அமைப்புகளும் தேவை என்று ஒரு புறம் இருக்க அவை எதை ஒழுங்கு செய்ய தோற்றுவிக்கப் பட்டதோ அதன் மூலத்தையே மறந்து விட்டு தன்னிச்சையாக காகிதங்களில் கையெழுத்தும் ஒன்று கூடலும், செலவினங்களின் கணக்கும் அதற்கான பணம் பெறுதலுமாக முதற்கண்ணியின் தொடர்ச்சியை அறுத்து விட்டு தனித்து பிரம்மாண்டமாய் இயங்கிக் கொண்டு பேர் வாங்கிக் கொண்டு, நடக்காததை சொல்லாததை செய்யாததை தவறுகளில்லை என மறைத்துப் போகின்றன. அரசு சார்ந்த அரசு சாரா என்று எல்லா சேவை அமைப்புகளுமே இன்றைக்கு அப்படியான ஒரு சிக்கலுக்குள் இருந்து கொண்டிருக்கின்றது மேலோட்டமாக பார்த்தால் எல்லலாம சரியாக நடந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் ஒரு புள்ளியில் ஒரே ஒரு சுயநலமி உள் புகுந்து விட்டால் போதும் சுவடே தெரியாமல் அழித்துப் போகும் உள்ளிருந்து கொல்லும் வியாதியாய் மாறிப் போவதும் தவிர்க்க முடியாததாகிறது. புரிந்த மாதிரியும் ஆனால் புரியாத மாதிரியும் தொனிக்கும் இக்கட்டுரை இன்றும் வெளிச்சத்திற்கு வர வேண்டுமென்றால் ஒரு உதாரணமோடு சொல்லலாம்
நான் இருக்கும் சிவகாசி தொழில் நகரம்.குழந்தைத் தொழிலாளர்கள் எனும் கரும்புள்ளியை இன்னமும் அழிக்க முடியாமல் சுமந்திருக்கும் நகரம். இன்றைக்கு சட்டங்கள் கெடுபிடியாய் மாறிவிட்ட போதும் , அலுவலகங்களை விட்டு வெளி வந்து விட்ட குழந்தைகள் வீடுகளில் வேலை செய்வதை எதைக் கொண்டு தடுக்க. வாழ்வியலோடு தொடர்பில்லா தொழிற்கல்வி இல்லா 10ஆம் வகுப்பு படிப்பு பெரிய முன்னேற்றத்தை வாழ்வில் தந்து விடுவதில்லை.மேலும் மீண்டும் பெற்றவர்களோடு சொந்த வயலுக்கு வேலைக்கு போவதையும் தடுத்து விடும் மனநிலையையும் தந்து விட இரண்டும் கெட்டான் நிலையில் அவர்களது வாழ்வு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகிறது அரசாங்கம் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கென்று பலகோடி ஒதுக்குகின்றது. அதற்கென்று தனி நிர்வாக அமைப்புகள் பணி புரிய சேவை ஊழியர்கள் என அதை நம்பியே பிழைக்கும் ஒரு வட்டம் உருவாகியிருப்பது தவிர்க்க முடியாததாகிப் போக அந்த வட்டம் அப்பிரச்சனை தீருவதையும் விரும்ப வில்லை தீர்ந்து விட்டால் தங்கள் இருப்பு தொலைந்து விடும் அபாயமும், கையாலாகாத் தனமும் மனத்தைக் கவ்வ 3 மாதத்திற்கு ஒரு முறை வலிய குழந்தை தொழிலாளர்கள் மீட்பு எனும் செய்தியை கொடுக்கப் பார்க்கின்றது . எதற்காக உருவானதோ அந்த முதற்கண்ணியிலிருந்து அறுபட்டு மூன்றாவது கண்ணியில் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள போலித்தனங்கள் முளைக்கின்றது. பணம் பதவி, பணி இம்மூன்று மட்டுமே ஆதாரமாகக் கொண்டு சேவை அமைப்புகள் மனிதச் சிந்தனையை, மனிதனுக்கான உற்பத்தி பெருக்க சிந்தனையை திசை திருப்பி விடுகின்றன. உற்பத்திப் பெருக்கம் பற்றி கவலைப் படாத பணியும் பதவியும் பணமும் வழி மாறிப் போகும் பயணமாகிப் போகின்றன
சிறுநகரத்திற்கான பிரச்சனை என்றில்லை உலகப் பிரச்சனையான எய்ட்ஸ், வேலைவாய்ப்பு, நீர் நிலை பாதுகாப்பு, பொருளாதாரம், உணவு உற்பத்தி, மனித உரிமைகள் , போரும் வன்முறையும் இப்படி பல்வேறு பிரச்சனைகளை சேவை அமைப்புகள் கையிலெடுத்து முதற்கண்ணியின் இருப்பைத் தொலைத்து விட்டு மூன்றாம் கண்ணியில் அறுபட்டபடி அலைகின்றன.. அந்த அலைதல் சிலருக்கும், பலருக்கும் தற்போதைய வாழ்வாகவும் இருப்பாகவும் இருந்து கொண்டிருக்கும் வரையில் அதோடு திருப்தி படுகின்றவனாகவே மனிதன் இருந்து விடுகின்றான் . உற்பத்தி பெருக்கத்திற்காகவே எல்லா நிர்வாக அமைப்புகளூம், அதற்கான மனோ நிலலகளை உருவாக்கவே சேவை அமைப்புகளூம் என்பதை உணர்ந்து கண்ணிகள் அறுபடாது ஒன்றினைந்து ஊர் கூடி தேர் இழுக்கட்டும் எல்லை வரும் நன்றி http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13039&Itemid=185Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 4/20/2009 01:43:00 pm   |
|
|
|
| Saturday, April 04, 2009 |
| படித்ததில் பிடித்தது |
துயருறும் எழுத்து : ஷோபாசக்தி[2-Apr-2009]
29 மார்ச் 2009 அன்று லண்டனில் நடைபெற்ற ‘எதுவரை’ சஞ்சிகை அறிமுக அரங்கில் நிகழ்த்திய உரை: நிகழ்வுக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் ராகவன் அண்ணன் அவர்களே, ‘எதுவரை’ பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் பெளஸர் அவர்களே, வந்திருக்கும் தோழியர்களே, தோழர்களே பணிவுடன் வணங்குகின்றேன். நீண்ட நாட்களிற்குப் பிறகு ஈழம், புகலிடம், தமிழகம் என மூன்றுநிலத் தமிழ் எழுத்துகளை இணைத்து ஒரு காத்திரமான சிறுபத்திரிகை புகலிடத்தில் தோன்றியிருக்கும் உற்சாகமான தருணத்தில் நாமிருக்கிறோம். இந்தத் தருணத்தை பெளஸர் தனது அயராத முயற்சியால் சாத்தியப்படுத்தியிருக்கிறார். சரியாகத் திட்டமிடும்போது புகலிடச் சிறுபத்திரிகைகளுக்கு நிதி ஒரு பிரச்சினையாக இருக்க வாய்ப்பேயில்லை. குழுவாதத்தால் சிறுபத்திரிகைகள் நின்றுபோய்விடுகின்றன என்பதும் குழந்தைப்பிள்ளைக் கதை. சமூகத்தில் நான்கு வர்க்கமும் நானூறு சாதிகளும் மூன்று பாலினமும் முப்பத்தேழு இயக்கங்களும் பலபத்துவிதமான அரசியல் போக்குகளும் இருக்கும்போது நீங்கள் எழுத்தாளர்களிடம் மட்டும் ஒரேயொரு இறுக்கமான குழுவை எதிர்பார்க்க முடியாது. குழுக்கள் இல்லாமல் சிறுபத்திரிகை இயக்கம் கிடையாது. தமிழில் ஆழமான தடங்களைப் பதித்த எல்லா சிறுபத்திரிகைகளுக்குப் பின்னும் தனித்துவமான அரசியல் - இலக்கிய நோக்குகளைக் கொண்ட குழுக்களே இருந்துவந்திருக்கின்றன. எழுதுவதற்கு ஆட்களில்லாமல் அல்லது எழுத்தாளர்களை ஒருங்கிணைக்க முடியாமல்தான் புகலித்திடத்தில் சிறுபத்திரிகைகள் அநேகமாக நின்று போகின்றன. எழுதுகின்ற ஒரு விடயத்தில் நாம் பெளஸருக்குக் கைகொடுத்தால் அவரால் இந்தப் பத்திரிகையைத் தொடர்ச்சியாகக் கொண்டுவர முடியும். மற்ற விசயங்களில் அவரை யாராலும் மடக்கவோ முடக்கவோ முடியாது. அவரோடு இணைந்து ஒரு வேலையைச் செய்வது பேயோடு தோட்டம் செய்வதைப் போன்றது என்பது எனது அனுபவம். மக்கள் துயருறும் சூழலில் ஒரு எழுத்தாளரின் பணி எதுவாயிருக்க வேண்டும் என்பதைக் குறித்துப் பேசுமாறு என்னைப் பெளஸர் பணித்திருக்கிறார். நம்மைத் துயரம் இன்று நேற்றா சூழ்ந்தது? வாழ்க்கையே துயரமானது என்பது போதிசத்துவனின் வாக்கு. சாதிய அடிமைத்தளை, வர்க்க அடிமைத்தளை, இனரீதியான அடிமைத்தளை, பாலின அடிமைத்தளை, பண்பாட்டு அடிமைத்தளை என்று பெரும்பான்மை மக்கள் வரலாறு முழுவதும் தளைகளாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். போததற்கு நம்மிடம் கடந்த முப்பது வருடங்களாய் போரின் துயரும் வடுவும் சேர்ந்திருக்கின்றன. இந்தப் பிளாஷ் பேக்குகளை ஓட்டுவதற்கு இப்பொழுது இங்கே நேரமில்லை. இந்தக் கணத்தில் நமது தேசத்தில் நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகள் குறித்து எனது கருத்தை, எனது துயரை, எனது ஆற்றாமையையே நான் இப்போது இங்கே சொல்ல விரும்புகிறேன். நான் இப்போது ஏதாவது ஒரு இயக்கம் சார்ந்தவனோ, கட்சி சார்ந்தவனோ கிடையாது. இன்று இலங்கையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எந்தவொரு அரசியல்சக்திக்கும் வாயளவிற் கூட நான் ஆதரவு தெரிவிக்கத் தயாரில்லை. அதேபோல என்னைப் போன்ற எளியவர்களின் கருத்துகள் அவர்களிற்கு ஒரு பொருட்டேயல்ல என்பதும் எனக்குத் தெரியும். என்போன்றவர்களின் கருத்துகள் வெகுசனங்களைச் சென்றடைவதில்லை என்றும் எனக்குத் தெரியும். அதற்காக நான் கருத்துகளே இல்லாமல் இருக்க முடியுமா? இந்த யுத்தத்தில் நானுமொரு முன்னைய பங்காளி என்ற வகையிலும் இந்த யுத்தத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையிலிருந்தும் என் கருத்துகளையும் என் யுத்த எதிர்ப்புக்குரலையும் நான் ஒலித்துக்கொண்டுதானிருப்பேன். கேட்கக் காதுள்ளவர் கேட்கட்டும். தோழர்களே! நந்திக் கடலிலே நமது மக்களின் பிணங்கள் மிதந்துகொண்டிருக்கின்றன. யுத்தமுனையில் எவ்வளவு மக்கள் சிக்கியிருக்கிறார்கள் என்ற சரியான தகவல் கூட நம்மிடமில்லை. புலிகள் மூன்று இலட்சம் என்கிறார்கள், அரசு எழுபதாயிரம் என்கிறது. இடையில் UNO இரண்டு லட்சம் என்கிறது. இந்த எண்ணிக்கை விளையாட்டுக் கூட எப்போதும் ஒரேமாதிரிச் சொல்லப்படுவதில்லை. வாய்க்கு வந்த மாதிரிப் பொய்ப் புள்ளிவிபரங்கள் ஏறுக்குமாறாக வந்துகொண்டிருக்கின்றன. புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் குண்டுவிழாத துண்டுநிலமும் கிடையாது. சாவுவிழாத வீடும் கிடையாது. மோதல் தவிர்ப்புப் பகுதி என அறிவித்துவிட்டு அந்தப் பகுதியையே, பொதுமக்கள் வாழும் பகுதிகளையே இலங்கையின் முப்படைகளும் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கின்றன. இன்று இலங்கை இராணுவம் அதிநவீனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. புலிகளின் தளங்களையும் பொதுமக்கள் வாழும் பகுதிகளையும் துல்லியமாக வேறுபடுத்திக் கண்டுபிடிக்கும் ராடர்கள் அவர்கள் வசமிருக்கின்றன. முன்னேறி வரும்போது எவ்வளவு தூரத்தில் மனித நடமாட்டமிருக்கிறது என நுகர்ந்து கண்டுபிடிக்கும் அதிநவீன உணர்கருவிகள் அவர்களிடமுண்டு. பொதுமக்கள் எனத் தெளிவாக இனங்கண்ட பின்பும் மக்களை இரக்கமேயில்லாமல் எறிகணைகளை வீசியும் விமானத் தாக்குதல்களை நடத்தியும் கொன்றொழிக்கிறார்கள். மருத்துவமனைகள் கூட தாக்கியழிக்கப்படுகின்றன. இதை இனப்படுகொலை எனச் சொல்லாமல் வேறெப்படி அழைப்பது? அப்படியானால் கொழும்பிலும் அரசகட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் இப்போது தமிழ்மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றொரு கேள்வியை நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இனப்படுகொலை என்பது பல்வேறு நுட்பமான வழிகளிலும் பொருத்தமான தருணங்களையும் களங்களையும் தேரர்ந்தெடுத்துத்தான் செயற்படுத்தப்படும். அய்ரோப்பாவில் நாஸிகள் யூதர்களை இனப்படுகொலை செய்தபோதும் இந்த தந்திரமான உத்திகளைத்தான் நடைமுறைப்படுத்தினார்கள். மறுபுறத்தில் இந்தப் படுகொலைகளுக்குத் துணைபோன ஒருபகுதி யூதர்களை நாஸிகள் பாதுகாக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு. யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் கொழும்பிலும் இன்றும் அரச படையினராலும் அரசின் நிழலில் நிற்கும் தமிழ் இயக்கங்களாலும் சிறுகச் சிறுகத் தமிழர்கள் கடத்தப்பட்டும் கொலைசெய்யப்பட்டுக்கொண்டும் தானிருக்கிறார்கள். கொழும்பு போன்ற நகரங்களில் வாழக்கூடிய செல்வந்தத் தமிழ் வியாபாரிகளுக்கோ, பெரும் பதவிகளிலிருப்பவர்களுக்கோ, கொழும்பு செவன் தமிழ் மேட்டுக்குடியினருக்கோ உடனடிச் சிக்கல்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால் அங்கே வாழும் சாதாரண ஈழத்தமிழ் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் கைது தப்பினால் மரணம் என்ற அபாயத்துக்குள்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலோ கிழக்கிலோ இலங்கை இராணுவம் இன்னொரு இனப்படுகொலை அத்தியாயத்தை தொடக்கி வைக்காது என்று யாரும் ஆருடம் சொல்லலாம். ஆனால் தருக்கபூர்வமாக ஆதாரம் காண்பிக்கமுடியாது. கடந்த முப்பது வருடங்களாக நாட்டின் பலபகுதிகளிலும் தொகுதி தொகுதியாக கட்டங்கட்டமாக அரசபடையினர் இத்தகைய இனப்படுகொலைகளை நடத்திவருகிறார்கள். நாட்டின் முன்னைய அதிபர்களை விட இன்றைய அதிபர் ராஜபக்ச யுத்தத்தில் தீவிரமாயிருப்பதற்கும் முன் எந்தக் காலங்களிலும் இல்லாதவாறு இராணுவத்தினருக்கு அதிகாரங்கள் குவிந்திருப்பதற்கும் இராணுவத் தளபதிகள் அரசியல் அறிக்கைகள் வெளியிடுவதற்கும் இந்த இனவாத அரசை எதிர்த்துக் குரலெழுப்பும் சனநாயகவாதிகளும் ஊடகவியலாளர்களும் நாடு முழுதும் கொல்லப்படுவதற்கும் நாம் சாட்சிகளாயிருக்கிறோம். நாடு முழுவதும் நீதித்துறையும் மனிதவுரிமைகளும் செத்துக் கிடக்கின்றன. அய்.நா.அவையின் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டதுபோல சிறிலங்காவின் காவற்துறை எதிர்க் கிளர்ச்சிப் படையின் பாத்திரத்தையே இப்போது வகித்துக்கொண்டிருக்கிறது. இந்த அவலச் சூழலுக்குள்தான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் சிக்கியிருக்கிறார்கள். அதிகம் விவரிக்க வேண்டியதில்லைத் தோழர்களே! கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசபீடத்தில் பேரினவாதிகள் மட்டுமே வீற்றிருக்கிறார்கள் என்பதும் குறிப்பாக இன்றைய மகிந்த அரசு மனிதவுரிமைகளுக்கு எள்ளளவும் இடமளிப்பதில்லை என்பதும் கடந்த காலங்களில் இலங்கைத்தீவில் உழைக்கும் மக்கள் போராடிப்பெற்ற சமூகநலச் சலுகைகளை இந்த அரசு சிறுகச் சிறுகச் சிதைத்து முழு நாட்டையும் மறுகாலனியமயப்படுத்தியிருக்கிறது என்பதும் நாமறிந்தவையே. இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசு. ஆனால் இப்போது நந்திக் கடலில் மிதந்துகொண்டிருக்கும் பிணங்களுக்கு இலங்கை அரசபடைகள் மட்டுமே காரணமில்லை. அரசபடையின் கொலை இலக்குகளுக்கு நேராக விடுதலைப் புலிகள் நமது மக்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். உயிருள்ள தடுப்புச் சுவர்களாக, மனிதத் தடுப்பரண்களாக மக்களைத் துப்பாக்கிமுனையில் புலிகள் தம்மோடு தடுத்து வைத்திருக்கிறார்கள். புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பிவரும் மக்களைப் புலிகள் சுட்டு வீழ்த்துகிறார்கள் என வன்னியிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எந்த மக்களைக் காப்பாற்றுகிறோம் என ஆயுதங்களை ஏந்தினோமோ, எந்த மக்களின் பணத்திலும் பவுணிலும் ஆயுதங்களை வாங்கினோமோ, எந்த மக்கள் செய்த அளப்பெரிய தியாகங்களால் நாம் நெருக்கடியான சூழல்களில் எமது உயிர்களைக் காப்பாற்றினோமோ, எந்த மக்கள் வழங்கிய துணியில் எம் நிர்வாணத்தை மறைத்தோமோ, எந்த மக்கள் போட்ட பிச்சைச் சோற்றில் இந்தத் தேகங்களை வளர்த்தோமோ அந்த மக்களையே புலிகள் இப்போது சுட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். போர் நடக்கும் நிலப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறவிடாமல் புலிகள் தடுத்து வைத்திருக்கிறார்கள். மக்களின் இரத்தத்தால் நந்திக் கடல் இப்போது நிறைந்திருக்கிறது. புலிகளும், புலிகளின் ஆதரவு அணிகளும், புலிகள் ஆதரவு ஊடகங்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இந்த இரத்தப் பழியை எந்தக் கடலில் கழுவப்போகிறார்கள்? இந்தச் செய்தியொன்றும் ‘ஒட்டுக் குழுக்கள்’ உருவாக்கி உலாவவிட்ட வதந்தியல்ல. அய்.நா.அவையும் சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்புகளும் சொல்லும் செய்தியிது. புலிகள் ஆதரவு எழுத்தாளர்களே! விடுதலை, இலங்கை அரசின் இன அழிப்பு, தமிழர்களின் ஒற்றுமை, யுத்ததந்திரம், அண்ணனின் வழிகாட்டல், உள்ளுக்கு வரவிட்டு அடிப்பது என்ற பல்வேறு காரணிகளைச் சொல்லி விடுதலைப் புலிகளைச் சகித்துக்கொள்ளுமாறு எங்களுக்குச் அறிவுரை சொன்னீர்களே. இனியுமா நாம் விடுதலைப் புலிகளைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள்! இப்போது கூட யுத்தத்துக்குத் தப்பியோடும் அப்பாவிச் சனங்களைத் தடுக்காதீர்கள், கொல்லாதீர்கள் என்று புலிகளுக்குச் சொல்ல உங்களுக்கு வாய் வரவில்லையென்றால் நீங்கள் எழுத்தாளர்கள் அல்ல கொலைகாரர்கள். நீங்கள் ஊடகவியலாளர்களல்ல மாபியாக்கள். மக்கள் விருப்பத்துடன்தான் புலிகளோடு இருக்கிறார்கள் என நீங்கள் சொல்வதில் மயிரளவாவது உண்மையுண்டா? புலிகள் அந்தப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்திருந்தும் ஒவ்வொருநாளும் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தப்பித்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருவதை நீங்கள் அறியமாட்டீர்களா? இந்தத் துரோகம் புலிகளிற்குப் புதிதல்ல. 1990ல் தீவுப்பகுதியை இராணுவம் கைப்பற்றும் போதும் புலிகள் மக்களைத் தப்பிச்செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் மக்களைத் தங்களுக்கு உயிருள்ள தடுப்புச் சுவர்களாக நிறுத்தினார்கள். அந்தத் துரோகத்தால் ஒரே நாளில் தீவுப்பகுதியல் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்திடம் பலியிடப்பட்டார்கள். என் சொந்தக் கிராமத்தில் மட்டும் முப்பத்தைந்து இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். 1995ல் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றும்போது மக்களைக் கட்டாயப்படுத்தி நடமாடும் தடுப்புச் சுவர்களாக மக்களைத் தம்முடன் புலிகள் வன்னிக்கு ஓட்டிச் சென்றார்கள். வரமறுத்தவர்களை துரோகிகள் என முத்திரை குத்தினார்கள். இந்த மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம் எனச் சொல்பவர்கள் எதற்காகப் ‘பாஸ் சிஸ்டம்’ என்ற ஒன்றை அன்றிலிருந்து இன்றுவரை நடைமுறையில் வைத்திருக்க வேண்டும்? ஒரு தமிழனுக்கோ தமிழச்சிக்கோ நாட்டின் எந்தப் பகுதிக்கோ அல்லது இன்னொரு நாட்டுக்கோ சுதந்திரமாகச் சென்றுவரக் கூடிய உரிமையை மறுக்க இவர்கள் யார்? இந்தக் கொடிய யுத்தச் சூழலில் கூட லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு அல்லது வீடு வாசலை எழுதி வாங்கிக்கொண்டுதான் ஒருசில மக்களை யுத்தப் பகுதியிலிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்கிறார்கள் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்பது? பணமோ எழுதிக்கொடுக்க வீடுவாசல்களோ இல்லாத மக்கள்தான் இப்போது அங்கே சிறைப்பட்டிருக்கிறார்கள். ஒரு சில எழுத்தாளர்கள் இப்போது விமர்சனங்களோடு விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அநேகமாக நமது ஈழத்து எழுத்தாளர்கள் இப்படி வழுவழுத்துப் பேசுவதில்லை. நாம் புலிகளை விமர்சித்தால் அவர்கள் ‘துரோகி’ என்ற ஒரு முத்திரையை நமக்கு ஓங்கிக் குத்திவிட்டுச் சத்தமில்லாமல் போய்க்கொண்டேயிருப்பார்கள். இதற்குமேல் விவாதிக்கவோ பதிலளிக்கவோ அவர்களது குற்றவுணர்வு அவர்களை அனுமதிப்பதில்லை. அல்லது பிரச்சினைகள் குறித்துக் கள்ள மவுனம் காப்பார்கள். தமிழகத்து எழுத்தாளர்கள்தான் நம்மைப் பாடாய்ப்படுத்துகிறார்கள். தமிழ்த் தேசிய உணர்வென்பது அவர்களுக்குப் பார்ப்பனிய எதிர்ப்புடன் தொடர்புடையது. மைய அரசின் மீதிருக்கும் அவர்களின் எதிர்ப்புணர்வு தமிழ்த் தேசியம் என்ற புள்ளியை வந்தடைகிறது. ஆயுதப் போராட்டம் மீது அவர்களில் பலருக்கு இருக்கும் ஒருவித ஈர்ப்பை ஒருகாலத்தில் நானும் அந்த ஈர்ப்பில் சிக்கயிருந்தவன் என்ற நிலையிலிருந்து என்னால் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அவர்கள் ஒருகாலை இந்தத் தமிழ்த் தேசியத்தில் வைத்திருந்தாலும் அவர்கள் மறுகாலை அவர்கள் இவ்வளவு காலமும் வாயளவில் கற்றுத்தேர்ந்த இடதுசாரித் தத்துவத்திலும் தலித்தியம், பின்நவீனத்துவம் போன்ற நுண்அரசியற்தளங்களிலும் வைத்திருக்கிறார்கள். அதாவது ஆற்றிலே ஒருகால் சேற்றிலே ஒருகால். ஆகவேதான் அவர்கள் விமர்சனத்தோடு புலிகளுக்கு ஆதரவு என முனகுகிறார்கள். தமிழகத்துப் படைப்பாளிகள் ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் தமிழினப் படுகொலைக்கு எதிராகச் சென்னையில் கண்டனக் கவிதைப் போராட்டம் நடத்தினார்கள். டெல்லிவரை திரண்டு சென்று ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார்கள். நாம் அவர்களுக்கு என்றும் நன்றிகளோடிருப்போம். இந்திய நடுவண் அரசு இலங்கைக்கு ஆயுதங்களையும் நிதியையும் வழங்குவதை எதிர்த்து அவர்கள் எழுப்பிய குரல் மிகச் சரியானது. இவர்களில் ஒருசாரார் விடுதலைப் புலிகள்தான் ஈழத்தமிழர்களின் காவல் தெய்வங்கள் என்றும் கருதுகிறார்கள். இருக்கட்டும்! அது அவர்களின் அரசியல் கருத்துரிமை. ஆனால் புலிகளுக்கு மாற்றுக் கருத்துக்கொண்டிருப்பவர்களை, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தில் கருத்துச் சுதந்திரத்தையும் சனநாயகத்தையும் வலியுறுத்திப் புலிகளின் ஒவ்வொரு பாஸிசச் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்திப் போராடிவரும் மறுத்தோடிகளை, ஈழத்தமிழ்க் குறுந்தேசியவாதத்தின் விட்டுக்கொடுக்காத எதிரிகளைப் பார்த்து நீங்களும் எங்களைப்போலவே கண்களையும் காதுகளையும் இறுகமுடிக்கொண்டு சவமாயிருங்கள், பாஸிஸ்டுகளை பகுதியளவு ஆதரியுங்கள் என்று அறிவுரை சொல்வதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நாகார்ஜுனனின் வலைப்பதிவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த விவாதம் ஒன்றில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்தும் இந்தத் தருணத்தில் பேசிவிடலாம். நோம் சோம்ஸ்கியில்தான் விவாதம் ஆரம்பித்தது. விவாதத்தின் தொடர்ச்சியில் இன்றைய நிலையில் புலிகளை விமர்சனத்தோடு ஆதரித்தேயாக வேண்டும் என்றும் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் ஏன் புலிகளை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் அங்கே சொல்லப்படவில்லை. புலிகள் என்ன கொடுமைகள் செய்தாலும் அவர்களால்தான் தமிழ் மக்களைக் காப்பற்ற முடியும் என்றொரு கதை இவ்வளவு காலமாகச் சொல்லப்பட்டு வந்தது. இப்போது அந்தக் கதையும் பொய்த்துப் போயிற்று. நமது மக்கள் அய்ரோப்பியத் தெருக்களில் ‘பராக் ஒபாமாவே ஈழமக்களைக் காப்பாற்று, நிக்கலோ சார்க்கோஸியே காப்பாற்று’ என ஒபாமாவின், சார்க்கோஸியின் படங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு பேரணியிற் செல்கிறார்கள். புலிகளின் எந்தப் பண்புகளுக்காக நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும்? அவர்களுடைய தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்ளைகளுக்காகவா? அவர்களின் அசைக்கமுடியாத இடதுசாரி நிலைப்பாட்டுக்காகவா? அவர்கள் முஸ்லீம் மக்கள் மீது கொண்டிருக்கும் ஆழமான அன்புக்காகவா? அவர்கள் சிங்கள உழைக்கும் மக்களைத் தமது வர்க்க சகோதரர்களாய் வரித்து வாழ்வதற்காகவா? புலிகள் கருத்துச் சுதந்திரம்மீது கொண்டிருக்கும் காதலுக்காகவா? தமிழீழம் அமைவதுதான் இந்தியாவுக்குப் பாதுகாப்பு அல்லது பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவை விழுங்கிவடும் என இந்திய அரசுக்கு அவர்கள் கொடுக்கும் துப்புக்காகவா? பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அது ஈழத் தமிழர்களுக்கு நன்மையளிப்பதாயிருக்கும் என்று அவர்கள் கசிந்துவிடும் வதந்திகளுக்காகவா? தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கொடுமைகளை அவர்கள் வெட்டி வீசிய வேகத்திற்காகவா? இல்லை நமது மக்களை இன்று சுட்டு நந்திக் கடலில் வீசும் வீரத்திற்காகவா? இவற்றில் எந்தக் காரணத்துக்காக நாம் புலிகளை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்லுங்கள். தயவு செய்து ஒரேயொரு காரணம் சொல்லுங்கள் ஆதரித்துவிட்டுப் போகிறோம். அதைச் சொல்வதை விட்டுவிட்டுப் புலிகளை விமர்சிப்பவர்களை சிறிலங்கா அரசின் ஆதரவாளர்கள் என போகிறபோக்கில் முத்திரை குத்துவது யோக்கியமான செயலா? உசுப்பேற்றி உசுப்பேற்றிவிட்டு முத்துக்குமாரன் முதல் பத்து உயிர்களைத் தீக்குத் தின்னக்கொடுத்துவிட்டுக் காங்கிரஸ் கூட்டணியில் சரணடைந்திருக்கும் திருமாவளவனையோ அம்மாவின் கையில் கூட்டணி வைத்திருக்கும் தா.பாண்டியனையோ சட்டையில் பிடித்து நியாயம் கேட்கத் துப்பில்லை, அந்த வரலாற்றுத் துரோகத்தை எதிர்த்து ஒரேயொரு கல்லைவீச வக்கில்லை, நமக்கு நாட்டாமை பண்ண வந்துவிட்டார்கள். தனியாக ஒரு சிங்கள இயக்குனர் வந்து மாட்டிக்கொண்டபோது கொழுந்துவிட்டெரிந்த அந்தத் தர்மஅடித் தமிழ் வீரம் இப்போது எங்கே போனது? ஒருபுறம் பாஸிசப் புலிகள் மறுபுறம் இனவெறி அரசு என்ற நிலையில் இரண்டில் ஏதாவது ஒரு நிலையெடுப்பது அதிகார விருப்புடைய அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் சரியாயிருக்கிலாம். ஆனால் அது மக்களுக்குச் சரிப்படாது. இன்று மக்கள் விரும்புவது யுத்தத்தையல்ல. அவர்கள் அமைதியையே விரும்புகிறார்கள். உயிரைக் கொடுத்தாவது தாயகத்தை மீட்போம் என்ற நமது முன்னைய முழக்கத்திற்கு இப்போது அர்த்தம் ஏதுமில்லை. ஒரு உயிருக்கு முன்னால் தாயகம் ஒரு பொருட்டேயல்ல என்று கதறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். வன்னியிலுள்ளவனைக் கொல்லக்கொடுத்துவிட்டு லண்டனிலும் பாரிஸிலும் டொரோண்டோவிலும் உள்ளவனுக்கு என்ன தமிழீழம் வேண்டிக்கிடக்கிறது? சமூகத்தின் மனச்சாட்சி எனச் சொல்லப்படும் கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு தார்மீகக் கடமையிருக்கிறது. இந்த இடத்தில் புரட்சியாளர் ப்ரான்ஸ் பனொனின் கூற்றொன்றைச் சுட்டிக்காட்ட நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். “வரலாற்றை உருவாக்குபவன் ஒடுக்குமுறையாளன்தான். அவன் எழுதகின்ற வரலாறு அவனால் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவனது சொந்த வரலாறே. இதற்கு மாறாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகின்றது. ஆனால் அந்த வரலாற்றை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும்தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல” என்பார் ப்ரான்ஸ் பனொன். பனொனின் கூற்று நமது சூழலுக்கு எவ்வளவு பொருந்துகிறது என்பதை விடுத்து பனொன் எழுத்தாளர்களுக்கு வழங்கும் தனித்துவமான வரலாற்றுப் பாத்திரத்தை நீங்கள் கவனியுங்கள். புகலித்திடத்தில் இருக்கக்கூடிய சில எழுத்தாளர்களும் சில இணையத்தளங்களும் இன்றைய யுத்தத்தை நியாயப்படுத்திப் பேசிவருவது ஒன்றும் இரகசியமானதல்ல. அவர்களைப் போலவே நமக்கும் புலிகளின் அரசியல்மீது மீது ஆழமான வெறுப்புண்டு. ஆனால் இந்த யுத்தத்தில் பொதுமக்களின் ஒரு துளி இரத்தம் சிந்துவதைக்கூட நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல் யுத்தமுனையில் தமது இளைய உயிர்களைக் பலிகொடுக்கும் புலிகளின் அடிமட்டப் போராளிகளையும் இலங்கை இராணுவத்தின் சிப்பாய்களையும் நினைத்து நான் துயருறுகிறேன். தலைமையிலிருப்பவர்களின் அதிகார வெறிக்காக அதிகாரத்தில் எந்தக் காலத்திலும் எந்தப் பங்குமில்லாத இவர்கள் உயிர்துறக்கிறார்கள். இன்று புலிகளின் அணிகளில் நின்று போரிடுபவர்களில் கணிசமானோர் புலிகளால் கட்டாயமாப் பிடித்துச் செல்லப்பட்டு அரைகுறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட அப்பாவிகளே என்பதையும் யுத்த முனையின் முன்னரங்கத்தில் தள்ளிவிடப்பட்டிருக்கும் இலங்கை இராணுவவீரன் இராணுவச் சீருடை போர்த்த ஏழை விவாசாயியே என்பதையும் நாம் மறந்துவிட இயலாது. நாங்கள் இலங்கை அரசாலும் புலிகளாலும் இந்திய அமைதிப்படையினராலும் துரத்தப்பட்டு அகதிகளாக ஓடிவந்தோம். நாம் இங்கு வந்தபோது ஜெர்மனியில் பாணும் சலாட்டும் பொக்கட் மணியும் தந்து முகாமிலே வைத்தார்கள். முகாம் வாழ்வு ஒரு வாழ்வா என்று பிரான்ஸுக்கு எஸ்கேப் ஆனோம். குடியுரிமை கிடைத்ததும் பிரஞ்சுக்காரன் ஆங்கிலம் பேசத் தெரியாத முட்டாளாயிருக்கிறானே என்று பீல் பண்ணி லண்டனுக்கு வந்தோம். ஒருபகுதி கிளம்பி கனடாவுக்கும் போனோம். ஓடினோம் ஓடினோம் உலகின் எல்லைக்கே ஓடினோம். இனி ஓட இடமில்லாததால் அப்படியே வீடும் காருமாய் மெல்லச் செட்டிலாகிவிட்டோம். இதில் தவறொன்றுமில்லை. ஒரு சுதந்திர உயிரியாக இருக்க விருப்புறுவதும் இவ்வுலக இன்பங்களைத் துரத்திச் செல்வதும் மானிட இயல்பு. ஆனால் இங்கிருந்துகொண்டு அங்கே வவுனியா முகாமிலே மக்களை இராணுவம் அடைத்துவைத்திருப்பது சரிதான் எனச் சொல்லுபவனைச் செருப்பால் அடிக்கவேண்டாமா? அவை அகதிகள் முகாம் கிடையாது. அவை தடுப்புமுகாம்கள். அல்ஜீரியாப் போராட்டத்தின் போது பிரான்ஸ் அல்ஜீரியப் பாலைவனங்களில் அமைத்த தடுப்புமுகாம்களை ஒத்தவை அவை. மக்களுடன் புலிகளும் கலந்து வந்துவிட்டதால்தான் இந்த ஏற்பாடு என்பது ஒருதரப்பு அறிவுஜீவுகளுடையவாதம். இது முஸ்லீம் மக்களில் சிலர் காட்டிக்கொடுத்ததால் ஓட்டுமொத்த முஸ்லீம் மக்களையும் வெளியேற்ற வேண்டியதாகப் போய்விட்டது எனப் புலிகள் வைக்கும் அயோக்கியத்தனமான வாதத்திற்குச் சற்றும் குறைவில்லாத அயோக்கியத்தனம். தோழர்களே தயவு செய்து உண்மையைப் பேசுங்கள், கோத்தபாய ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போலப் பேசாதீர்கள். இந்தத் தடுப்பு முகாம்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கு இயங்கப்போகின்றன எனத் தெரியவில்லை. யுத்தப் பகுதிகளிலிருந்து தப்பிவரும் மக்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பதும் அரசின் கடமை. ஏனெனில் இவை ராஜபக்சவின் சொந்தப்பணத்திலிருந்து பெறப்படுபவையல்ல. இவை இலங்கையின் உழைக்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுபவை. ஆனால் அகதியாய் வந்த மக்களை மட்டுமல்லாமல் தாம் கைப்பற்றிய பிரதேசங்களிலிருந்த மக்களையும் அவர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து மந்தைகளைப் போல ஓட்டிவந்து தடுப்புமுகாம்களில் அரசாங்கம் அடைத்து வைத்திருப்பது போர்க்குற்றம் அல்லாமல் வேறென்ன? “சர்வாதிகாரம் ,ஒடுக்குமுறை, வன்முறை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் எந்தவொரு வடிவத்தாலும் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும் விதிவிலக்கேதுமின்றி அவையனைத்திற்கும் பதிலடி கொடுப்பதும் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதும் பாட்டாளி வர்க்கத்தின் கம்யூனிஸ்டுகளின் கடமை” என்பார் லெனின். இது வேறெந்த வர்க்கமுமல்ல நமது சொந்த வர்க்கம் அங்கே ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு எழுத்தாளரின் கடமை பகிரங்கமாக உண்மையைப் பேசுவதும் எழுதுவமாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன். அரசியல் சாணக்கியத்தனங்களும் சதுரங்கக் காய்நகர்த்தல்களும் திரைமறைவுப் பேச்சுகளும் இரண்டகமும் நம்முடைய வேலையல்ல. அது நமக்குச் சேரவும் சேராது. நமது சூழலில் இலக்கியமும் தீவிர நேரடி அரசியலும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பகுத்துப் பார்க்க முடியதவாறு ஒன்றில் ஒன்று கலந்திருக்கின்றன. அதிகார சக்திகளின் எந்தவொரு மக்கள் விரோத செயலுக்கும் நாம் உடனுக்குடன் எதிர்வினைகள் செய்ய வேண்டும். அதிகார சக்திகளின் நிழலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நின்று நாம் எழுதுவதைவிட எழுதாமல் சும்மாயிருந்து மதுவருந்தி மாய்வதே மேலானது என்பது எனது உறுதியான கருத்து. ஒரு புனைவு எழுத்தாளர் அரசியல் எழுத்தில் ஈடுபடும்போது அவனுடைய படைப்பாற்றல் திசைதிருப்பப்படுகிறது என்றொரு கருத்தும் இலக்கிய எழுத்துலகில் காலம்காலமாய் ஒருசாராரால் பரப்பப்பட்டுவருகிறது. நமது சகமனிதர் கொல்லப்படும்போது, சமூக இழிவில் வாழும்போது, அடிமைத்தனத்தில் சிக்கியிருக்கும்போது அதைக் குறித்துப் பேசாமல் படைப்பாவது மயிராவது. நம் ஒவ்வாரு எழுத்தும் நமது சகமனிதருக்காகத் துயருறுவதே இன்றைக்கான புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக இருக்க வேண்டும். கொண்டாட்டத்தையும் காதலையும் நம் அடுத்த தலைமுறை எழுதட்டும். அதற்கான முன்பந்தனையாக நாம் உண்மையை எழுதவேண்டும். அதாவது துயரை எழுதவேண்டும். ஏனென்றால் நம் காலத்தில் உண்மை என்பது துயராய் இருக்கிறது. இங்கே புகலிடத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் தாம் நடத்தும் பிரமாண்டமான பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் சாவிலும் வாழ்வோம் என்ற கோஷத்தை முன்வைக்கிறார்கள். அதாவது ஈழத்தில் மக்கள் செத்தால் இவர்கள் இங்கே வாழ்வார்கள் என்பதுதான் இதன் உட்கருத்து. தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஊடகங்கள், கோயில்கள், தொண்டுநிறுவனங்கள் நடத்தி நாங்கள் வாழ்வோம். அந்த மக்களைச் சுரண்டித் தின்ற பாவத்திற்காகப் போகாத ஊருக்கு ‘வணங்காமண்’ கப்பல் விட்டுக் குற்ற உணர்வைத் தவிர்த்துக்கொள்வோம் என்பது இதன் வெளிக்கருத்து. பிள்ளையார் பால் குடித்ததற்குப் பிறகு அய்ரோப்பாவில் உருவாக்கிவிடப்பட்டிருக்கும் ஆகப்பெரிய முட்டாள்தனமும் ஏமாற்றும் இந்த ‘வணங்காமண்’ பயணம்தான். எங்களுக்குப் பேரணிகள் நடத்தச் சக்தியில்லாமலிக்கலாம். ஆனாலும் நாங்கள் எதிர்முழக்கமாய் ‘மரணத்திலிருந்து வாழ்வுக்கு’ என்று சொல்லுவோம். அதுதான் இந்த ‘எதுவரை’ சிறுபத்திரிகையின் முழக்கமாயும் இருக்கிறது. தோழர்களே! ஒரு கருத்துத் தன்காலத்தில் எவ்வளவு தூரத்திற்கு செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பதைவிட அந்தக் கருத்தில் பொதிந்திருக்கும் அறத்தின், தார்மீகத்தின் அளவை வைத்தே அந்தக் கருத்து எதிர்காலத்தில் மதிப்பீடு செய்யப்படும். நாம் அறத்தைப் பேசுகிறோம். அதையே எழுதுவோம். வாய்ப்பளித்த தோழர்களுக்கு நன்றி, வணக்கம்.
நன்றி - சத்தியக்கடதாசி நன்றி புகலி.காம்Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 4/04/2009 10:59:00 am   |
|
|
|
| Sunday, March 22, 2009 |
| கவிதையில் படர்ந்த மிளகுக் கொடிகள் |
கட்டுரைத் தொகுப்பின் முன்னுரை கானல் காடும் -கவிதையும் ஒன்றான தினத்தின் வாசிப்பு
தி. க.சிக்கு சாகித்ய அகாதமி பரிசு கொடுக்கப் பட்டதற்கு நடந்த பாராட்டு விழா எனத் துவங்கிய பாரதி இலக்கியச் சங்கம் மெல்ல மெல்ல தன் கிளைகளை வெவ்வேறு திசைகளில் வியாபித்துக் கொண்டது மாதம் ஒரு முறை படைப்பரங்கம் சந்திப்பு எனத் தொடர்ந்த அதன் செயல்பாடு ஒரே மாதிரியான தொடர் நிகழ்ச்சியாக என்றுமே அமையாமல் போய் ஒவ்வொரு நிகழ்வும் வேறு வேறு மாதிரி தன்னை வடிவமைத்துக் கொண்டது என் படைப்புகளைப் போலவே. அவ்வப் போது வாய்க்கின்ற சந்தர்ப்பங்களில் எனது நூறு சதவீத உழைப்பும் ஆர்வமும் இருக்க படைப்பரங்கங்கள் கருத்தருங்குகளாகி, கல்லூரி நிகழ்சிகளாகி,பயிற்சிப் பட்டறைகளாகி, பரிசளிப்பு நிகழ்வுகளாகி ,2003 இல் கடனாவிலிருந்து இணையம் வழியாக கணிணி வழி ஏற்புரை கவிஞர் திருமாவளவன் நிகழ்த்திட தொலை தொடர்பையும் முழுக்க பயன் படுத்திக் கொண்ட முதல்முக்கிய இலக்கிய நிகழ்வுமாகி கானல் காடு கருத்தரங்காகி இப்படியாக இதன் நகர்தல் செயல்பாடு.
கானல் காடு கருத்தரங்கு இருந்து இல்க்கியம் பேசுகின்ற அமைப்புகள் நமக்கு புதிதல்ல .செல்லப்பா வத்தலக்குண்டில் எழுத்தாளர்களையெல்லாம் அழைத்து தங்க வைத்து , தங்குவதற்கு வீடுகள் ஏற்பாடு செய்து ராஜமய்யர் நூற்றாண்டு விழா நடத்திய காலம் தொட்டு பல்வேறு பட்ட தரப்பினரும் தொடர்ந்து நடத்தி வருவது தான் மாலன் தான் ஒரு முறை பேசிய பேச்சின் ஊடாக இருநாள் கருத்தரங்கம் நடத்தினால் என்ன? என்று கேட்டு வைக்க எனது இலக்கிய நண்பர்கள் சுசீந்திரனும் ,வ.ஐ.ச.ஜெயபாலன் என்னோடு என் தாய் வீட்டுக் காப்பித் தோட்டங்களுக்கு வந்திருந்தபோது காடுகளோடு நெகிழ்ந்தது நினைவுக்கு வந்தது. நான் நெடுக காட்டோடு வளர்ந்ததால் என் வாழ்விலும் எழுத்திலும் அதனுடைய மண் வாசம் கண்டு அவர்கள் பிரமித்த போதுதான் காடுகள் எனக்குள் என்ன மாற்றம் செய்திருக்கின்றன என உணர்ந்திருந்தேன்.அங்கேயே நிகழ்வு நடத்தினால் என்ன ? கேள்வி எழுந்தது. அவ்வளவு தூரத்தில் எந்த வித அடிப்படை வசதியுமில்லாத இடத்தில் நடத்துவது சாத்தியமா? எல்லாம் சரியாகத் திட்ட மிட முடியுமா உங்களால்? எப்பவும் போல் பெண்ணால் தனியாகச் செயல் பட்டு விட முடியுமா எனும் கேள்வியை இப்பவும் எனைச் சுற்றி இருந்தவர்கள் அன்பில் பேராலேயே கேட்டனர். ஏன்? கேலிக்கூத்தாய் ஆக்கிடாதீங்க ? அன்போடு(?) சொன்னார்கள் எப்பவும் போல் என் திட்டமிடுதல்கள் தேவையை முன்னிறுத்தி எழும்ப அதில் தவறு வருவதற்கு சாத்தியமே இல்லை முதல் கருத்தரங்கை பற்றி மாலனும் நானும் தொடர்ந்து பேச நிகழ்வு வடிவம் பெற்றது சமீப காலமாக என் கவனத்தில் வர நேர்ந்த இலக்கியச் சந்திப்புகள் " குடிப்பதற்காக எனவும், வேறு பல ஒன்று கூடுதலுக்காகவும் என மாறிப் போனதை உணர நேர்ந்த போது நிகழ்வின் ஒரு ஒழுங்கு கண்டிப்பாக இருக்கவும் என் கைப்பிடிகளுக்குள் நிகழ்வின் போக்கு இருப்பதற்கும் சேர்த்தே திட்டமிட்டேன்.யாரிடமும் நிகழ்வுக்கான பங்கேற்பு கட்டணம் வாங்க மனம் இடம் தரவில்லை. காரணம் பங்களிப்பு செய்து விட்டு ஆக்கிரமிக்கவும் சுதந்திரம் என்று எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று கூவவும் தயாராக இருக்கும் ஒரு சில நவீன இலக்கியவாதிகளிடமிருந்த அணுகுமுறை தந்த அனுபவம். " மதுபானங்களுக்கு அனுமதியில்லை" என்று போட்டதனால், ' இவசொல்படி நாம கேட்கனுமா என்று வராமல் தவிர்த்தவர்களும் வந்து விட்டு இரவில் தவிர்க்க முடியா காரணம் சொல்லி திரும்பியவர்களும் இருந்தார்கள்.
பட்டி வீரன் பட்டியில் ஒரு பொது நிகழ்ச்சி அடுத்த ஒன்றரை நாளும் படைப்பாளிகளின் ஆத்மார்த்த உரையாடலோடு கூடிய சந்திப்பு என நிகழ்வு நடந்து முடிந்தது.
முடித்து அந்நிகழ்வை விட்டு விலகி ஐரோப்பாவில் நான் பயணப் பட்ட போது அந்நிகழ்வின் அழுத்தமான வாசம் எல்லார் நினைவிலும் நிற்கக் கண்டேன்.அதற்கு முக்கிய காரணம் நிகழ்வை ஒன்று விடாமல் பதிவு செய்து ஒலிப்பதிவை எழுத்துப் பதிவாக மாற்றி மாலன் இணைய இதழ்களில் வலம் வர விட்டது. அந்நிகழ்வின் முக்கிய நகர்வுகளாக நான் கண்டது 1 , சுயமரியாதை இயக்கத்திற்கு பிறகு ஏறக்குறைய கட்டி தட்டிய மனோநிலைக்கு வந்து விட்ட பட்டி வீரன் பட்டி கடந்து வந்த பாதையின் பெருமையைப் பேசியதால் நிகழ்ந்த அசைவு 2, மாலன் வார்த்தையூடாக" இந்த இடம் எல்லாருக்குள்ளும் இருந்த " நான்" ஐ அழித்து விட்டது" 3, கருத்தியல் ரீதியான வேறுபாடு படைப்பாளியிடத்தில் வெறுப்பாக மாறாமல் எல்லாருக்குள்ளும் இருந்த இறுக்கம் தளர்ந்து மென்மையானது.(இது அடுத்த படைப்பூக்கத்துக்கு நல்லது 4, பிரம்மராஜன் வார்த்தையூடாக" நல்ல வேளை குடி அனுமதிக்கப் படவில்லை .எல்லாரும் சுய நினைவோடு பேசியதும் நன்றாகவே இருந்தது". 5, இந்த செடிகள், மரங்கள் பூமிக்களித்து போல் நாம் ஒன்றையும் இதுவரை செய்யவில்லை இன்னமும் " கூட்டத்தில் ஒருவரிடமிருந்து கேட்ட வசனம் பலரது இயல்பை உணரச் செய்திருந்ததை உணர்த்தியது 6, இந்திரன் வார்த்தையூடாக " இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படம் இனி ஒரு முறை வாய்க்குமா தெரியாது.பல தரப்பட்ட நபர்கள் ஒன்றாக இருக்கும் படமிது"
எல்லாவற்றிற்கும் மேலாக தொடர்ந்து பலர் கேட்டனர். அடுத்த நிகழ்வு எப்போது? எங்களுக்கும் அழைப்பிருக்குமா? எனது பொருளாதாரம் லட்சுமி அம்மாள் உடல் நிலை எனது எழுத்து இவையெல்லாம் மீண்டும் இது போன்ற நிகழ்வுக்கு யோசிக்க விடவில்லை.
இரண்டாவது கருத்தரங்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்றைய இலக்கியத் தேவையை முன்னிறுத்தி கவிதையில் புனைவுக்கும் நடப்பியல் யதார்த்தத்திற்குமான இடைவெளி அல்லது தொடர்பு விவாதப் பொருளாக முன்னிறுத்தப் பட்டது. பிரம்மராஜன் முதலிலேயே சொன்னார் இந்த முறை கட்டுரைகளாக எல்லாரும் தரச் சொல்லுங்கள் திலகபாமா . பின்னர் தொகுப்பாக்கும் போது நல்ல பதிவாக இருக்கும் என்று சொன்னது நல்ல விசயமாக பட்டது. இதோ இன்று நம் கைகளில் சமகால கவிதைப் போக்குகளை பல்வேறு தரப்பினரும் (இன்னும் பல தரப்புகள் இருக்கின்றது என்றாலும்) அவரவர் ரசனைக்கேற்ப கோட்பாடுகளுக்கேற்ப வாழ்க்கைக் கேற்ப தந்த கட்டுரைகள். அடுத்து சமீப காலப்பெண்ணிய அரசியலுக்கு ஆண்டாளும் தோள்சீலைப் போரட்டமும் வலுவில் இழுக்கப் பட்டு பயன்படுத்தப் படுவது வருத்தம் தர அது பற்றிய சரியான வரலாற்றுப் பார்வை பேசப் பட வேண்டும் என்று தோன்றியதன் விளைவே தோதாத்ரி அவர்களது ஆண்டாள் பற்றிய உரையும், தோள் சீலை போராட்டம் பற்றிய விவாதமும், தோள் சீலை போராட்டம் பற்றிய விவாதத்தை துவங்கி வைத்த பேராசிரியர் கட்டுரையாக கடைசி வரை ஆக்கித் தராததால் அக்கட்டுரை விடுபட்டிருக்கின்றது. அந்நிகழ்வுக்கு வந்திருந்த இன்னும் சிலரும் கட்டுரை தரவில்லை எனவே அவர்கள் பெயர் விடுபட்டிருக்கின்றது நிகழ்வு முடிந்த பிறகு ஒவ்வொருவரும் கடிதம் எழுதியிருந்தார்கள் . தொலைபேசியில் நிகழ்வு பற்றி பகிர்ந்து கொண்டார்கள் ஆய்வு பட்ட மாணவ மாணவிகள் தங்களது மாணவனின் கவிதை வாசிப்புத்தான் பெரும் விவாதத்திற்கு வழி வகுத்தது எனவும் பா.வெங்கடேசன் , பழனிவேளும் பிரம்மராஜன் கட்டுரை ஒன்றே இந்நிகழ்வின் வெற்றி எனவும் பழமலய் ஆண்டாள் பழங்குடி நாட்டவராக இருக்கலாமோ எனத் தெரியக் கிடைத்த நிகழ்வு என்பதால் மகிழ்ச்சி என்றதும், இப்படி இந்நிகழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் முக்கியமானதாய் கருதப் பட்டதே அந்நிகழ்வின் நிறைவாக எனக்குமாகியிருந்தது இறுதியில் பட்டி வீரன்பட்டியில் சௌந்திர பாண்டியனாரில் சமாதியில் சில மணித் துளிகள் நின்றதும் மகிழ்வே இதைப் போல் அடுத்த வருடமும்? "போலச் செய்வது சாத்தியமில்லை எனக்கு எப்பவுமே" தொகுப்பைத் திட்டமிட்ட போது எனக்கு நேரக் கெடுபிடியில் அமிர்தம் சூர்யாவை செய்து தர முடியுமா எனக் கேட்க மகிழ்வோடு செய்து தந்திருக்கிறார். நானும் ஒருகட்டுரை ஆசிரியராக இந்நிகழ்ச்சி வடிவமைத்தவராக சில உணர்வுகளை இதில் பகிர்ந்திருகின்றேன். கவிதையென்பது வாழ்க்கை-திலகபாமா கவிதையின் இயற்பெயர் புனைவு-அமிர்தம் சூர்யா கவிதையென்பது யாதெனில் கவிதை: கவிதையென்பது உணர்வின் பெரு நதி- தமிழ் மணவாளன் கவிதை தீர்மானங்களுக்குள் சிக்காதது-எழிலரசு வலியின் ஒலி கவிதையென்றாகின்றாது; கவிதை ஒரு கைவாளாகின்றாது- அம்சப் பிரியா
எத்தனை வார்த்தைகளில் சொல்லப் பட்டாலும், காடும் கவிதையும் ஒன்றான தினத்தின் வாசிப்பினூடாக கவிதை உணரப் பட்டிருக்கிறது. அதுவே நிறைவுLabels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 3/22/2009 07:05:00 pm   |
|
|
|
| Saturday, February 28, 2009 |
| இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்-2 |
இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்-2
சின்ன உலகங்களைத் தின்னும் பெரிய உலகங்கள்
ஒரு மனிதம் காக்கப் படுவதற்காக எடுக்கப் பட்ட போராட்டமெனினும் அப்போராட்டம் தொடர்கின்ற காலகட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ கேட்டது கிடைப்பதற்கான வழி வகைகள் மறக்கப் பட்டு வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் படுவதற்கான தருணம் மட்டுமே கவனத்தில் உறைந்து விடக் கூடிய அபாயம் அதிகார மையத்துக்கு மட்டுமன்றி ஒடுக்கப் பட்ட போராட்ட மனத்திற்கும் ஏற்பட்டு விடுகின்றது என்பது துரதிர்ஷடமான உண்மையாகிப் போகின்றது. ஒரு முறை மதுரையில் நடக்க விருந்த இலக்கியக் கூட்டத்திற்கு அழைப்பிதழில் என்பெயரையும் சேர்த்துக் கொள்வதாய் நண்பர் சொல்லிய போது கூட்ட ஏற்பாடுகள் ,அழைப்பாளர்கள் பற்றிய விபரம் கேட்டேன். யாரின் மேலும் எந்த கருத்தோட்டத்தின் மேலும் எனக்கு விரோதம் இல்லை என்ற போதும் புரட்சிகள் போலவும் நவீனங்கள் போலவும் நடிக்கும் நபர்களிமிருந்தும், கூட்டத்திலிருந்தும் எனைத் தள்ளியே வைத்திருக்கின்றேன் இப்பொழுது வரைக்கும். எனவே அவர் சொன்ன அழைப்பாளர்களும் கூட்ட ஏற்பாடு முறைகளும் திருப்தி தராததால் அழைப்பிதழில் என் பெயர் வேண்டாம் என்றேன் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவதும் விருப்பமின்மையும் தனிப்பட்ட விசயங்கள் தானே நபரோ அக்கூட்டத்தில் என் பெயர் இருப்பது எனக்குப் பெருமை என நான் நினைக்க வேண்டுமென எதிர்பார்க்க நான் தவிர்த்தேன். எவ்வளவோ அழுத்திச் சொல்லியும் அழைப்பிதழில் என் பெயர் இடம் பெற்று விட்டது- முதல் தவறு அடுத்த தவறு நிகழ்ச்சி அழைப்பிதழ் ஊரெல்லாம் போய்ச் சேர்ந்த பின்னும் எனக்கு இறுதிவரை அனுப்பப் படவே இல்லை.நண்பர்கள் சிலர் அழைப்பிதழில் பெயர் இருக்க ஏன் வரவில்லை என தொலைபேசிக் கேட்டனர்.நானோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும், பெயர் போட நான் மறுப்பு சொன்னவரிடமும் என் அனுமதி இன்றி பெயர் போட்டதை நிகழ்வில் தெரியப் படுத்துவது அவசியம் என்று சொல்கின்றேன்.வலியுறுத்துகின்றேன் என் தொலைபேசித் தொந்தரவு தாங்க முடியாது ஏற்பாட்டாளர்களும் பெயர் மறுத்த பின்னும் “நட்பின் பெயரால்” என் பெயரை உரிமையோடு போட்டவரும்(?) அழைப்புகளைத் தவிர்த்தனர். “பெயரெல்லாம் ஒரு பிரச்சனையா” என்ற உணர்வுகளை தட்டையாக்கும் கேள்விகளுக்குப் பின்னரும் இவர்கள் தங்கள் விருப்பங்களுக்காக அடுத்தவர் உணர்வுகளை சிதைக்கின்றதை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம் எனக்கு. இன்னும் அந்த கோபமே தீருவதற்குள் சமீபத்தில் பேராசிரியர் சுந்தர் காளி இலங்கைத் தமிழருக்காக நடக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழில் உங்கள் பெயரைப் போட்டிருக்கின்றேன் என்று தொலைபேசிச் சொன்னார். நமக்கும் உடன்பாடான பிரச்சனைதான். போருக்கும் அதிகாரத்திற்கும் எதிரான மனோ நிலைதான் எனக்குள்ளூம். ஆனால் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவுதான் என்ற போதும் கேட்காமல் ஏன் போட்டீர்கள் என்று கோபிக்க முட்யவில்லை.
இப்பவும் அடுத்த தவறும் நிகழ்கின்றது. போட்டது தான் போட்டார்கள் அழைப்பிதழையாவது அனுப்ப வேண்டாமா? என்ன நிகழ்வு எங்கு? யார் யார்? என் பங்கு என்ன? தெரிந்து கொள்ள
அனுப்பவில்லை. அதற்கும் காரணம் சொன்னார்கள். திடீர் ஏற்பாடுகள் அனுப்ப முடியவில்லை என்று . ஆனால் பலருக்கும் அழைப்பிதழ் கிடைத்திருக்கவே செய்திருக்கின்றது.மேலும் கவிஞர் ஜெயபாலன் வரமுடியாது நிகழ்வுக்கு அவர் தந்தை இறப்புச் செய்தியால் அவர் கவிதையாவது வந்து வாசியுங்களேன். நீங்கள் தானே அவரது தோழி என்று
அப்போ நான் அழைக்கப் பட்டதன் காரணம் கவிஞர் என்பதாலா அல்லது ஜெயபாலன் தோழி என்பதாலா? ஜெயபாலன் தோழி என்பதால் என்றால் எப்படி அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியும். கேள்விகள் தோன்றி முடியுமுன்னரே தொலைபேசி உரையாடல் முடிந்து விட்டது.
ஜெயபாலனிடம் நான் தொலைபேசிக் கேட்கின்றேன்.அவர் போகப் போவதாய் எனக்குத் தகவல் கிடைக்க பெயர் போடுவதின் பின்னால் மௌனமாக சிதைபடும் உணர்வுகளச் சொல்கின்றேன். இலங்கைப் பிரச்சனை இன்றைய trend ஆகிப் போனதின் சலிப்பையும் சொல்கின்றேன். உணர்வு ரீதியான ஒரு பிரச்சனையை பொருளாக்கிப் போட்டதின் அபத்தமும், பண்டமாக்கியதன் பயன்பாட்டுக்கே எல்லார் “தமிழன்” உணர்வயும் தக்க வைத்துக் கொள்ளும் அபாயத்தையும் பேச , எதையும் கேட்க திராணியற்று ஒற்றை வாக்கியத்தில் “ திலகபாமா உங்களது உலகம் சின்னது எங்களது உலகம் பெரியது உங்களுக்குப் புரியாது” என கோபம் தெறிக்க வார்த்தை வருகின்றது. என் உலகம் உனக்கு சின்னதாய் தெரியும் போது உங்கள் உலகமும் எனக்கு சின்னதாய் தெரிய வாய்ப்பிருக்கிறது தானே
ஒரு கிராமத்து ஆணாதிக்கவாதியும், சாதாரண பிரஜையுமானவன் வாயிலிருந்து வரும் “ பொம்பளைக்கு என்ன தெரியும்” எனும் வசனத்திற்கும், நிவேதிதாவிடம் மனைவி வந்து என்ன செய்யப் போகிறாள் என்ற கேட்ட பாரதியின் கேள்விக்கும், இன்றைய வ.ஐ.ச. ஜெயபாலன் கேள்விக்கும் எனக்கொன்றும் வித்தியாசம் தெரியவில்லை.
இன்று எல்லா பொது விடயங்களிலும் ”தன் முனைப்பு” கூடி விட்டது பிரச்சனைகளை முன்னிறுத்தி சரி செய்யும் மனநிலையை விட பிரச்சனையைச் சொல்லி தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் மனப் பான்மைதான் எங்கெங்கும் தீப்பிடித் தலைகின்றது.இதைச் சொல்கையில் மிக எளிதாக என்னையும் இந்த குற்றச் சாட்டுக்குள் தள்ளி விடக் கூடிய சாத்தியம் எதிராளிக்கும் இருக்கும் எனும் புரிதலோடு தான் தவிர்க்க முடியாது இந்த உரையாடலுக்கு வருகின்றேன். இலங்கை தமிழர்க்காதரவான படங்கள் , போர் நிறுத்ததைக் கோரும் கூட்டங்கள் போராட்டங்கள், அமைதிக்கான project எடுத்து பணி செய்யும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் இன்றைய இருப்பின் இழப்பை விரும்பாமல் எப்பவும் பிரச்சனைகளை நீடிக்கின்ற காரணிகளாக மாறி விட்டனரோ என்ற ஐயப்பாடும் நீடிக்கவே செய்கின்றது.
நீண்ட கால தீர்வுகளை பேசத் தயாரில்லை பெரிய உலகங்கள். சின்ன உலகங்களை தின்று விடும் பெரிய உலகங்கள் தொடர் பயணத்தில் சின்ன உலகங்களை எப்படி நிராகரித்ததோ, தின்று வளர்ந்ததோ அதே நிராகரிப்புக்கு , தின்னுதலுக்கு தன்னையும் காவு கொடுக்க வேண்டி வரும் என்பதை இன்று கண்டு கொண்டிருக்கின்றன. அடங்க மறு திருப்பி அடி என்ற வசனங்கள் புரட்சி போல தோன்றினாலும் திருப்பி அடித்த பந்தாய் நமை நோக்கியே திரும்ப வரும் என்பதைச் சொல்லும் தன்முனைப்பில்லாத நிர்வாகத் திறமை உடைய தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை.
வன்முறை வழித்தடம் சின்ன சின்ன உலகங்களைத் தின்று எப்பவும் தன்னை பெரிதாக்கிக் காண்பித்துக் கொண்டு ஒரு கட்டத்தில் எந்த அதிகாரத்திற்கெதிராக அது கிளம்பியதோ அதே அதிகாரமாக மாறிப் போனதின் சாட்சியங்களையும் அதன் அழிவின் துயரங்களையும், சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
சின்ன உலகத்திற்கும் , பெரிய உலகத்திற்கும் பசி ஒரு சாண் வயிற்றில்தான். உயிர்கள் வதைபடுவது கண்ணுக்குத் தெரிவதாலேயே அது பெரிய உலகமாகவும், உணர்வுகள் வதைபடுவது தெரியாததாலேயே அது சின்ன உலகமாகவும் எப்படி அறிவார்ந்த பெருமக்கள் சொல்ல முடிகின்றது.உணர்வுகளின் சிதைவுகள் சின்ன உலகமல்ல, என உணரும் நாளில் எல்லாருக்குமான மகிழ்வான தருணங்கள் விடுதலையென சாத்தியமாகும்
தனிப்பட்ட உரையாடல்களை பொதுவில் நான் எப்பவும் சாட்சியமாக்க விரும்புவதில்லை.காரணம் நான் அப்படிச் சொல்லவில்லை நீங்களாக அப்படி உணர்ந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் எனத் தப்பித்து விடக் கூடும். இன்னொன்று பேராசிரியரோ, ஜெயபாலனோ வலிக்கட்டும் என விரும்பி வலியை ஏற்படுத்த வில்லை. ஆனால் இதுவும் வலியென்று உணராமல் இருப்பது தான் ஆச்சரியமளிக்கிறது. சின்ன உலகமென்றும் பெரிய உலகமென்றும் வசனங்கள் எல்லாவற்றையும் பேசி ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தந்து விட்டது. ஆம் “இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்.” Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 2/28/2009 02:05:00 pm   |
|
|
|
| Monday, February 09, 2009 |
| இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் |
இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்
இணைய தளத்தில் எனக்கோர் தகவல் கணிணி வழியாக அனுப்பப் பட்டிருந்தது. அது பலருக்கும் அனுப்பட்டிருந்த தகவல்.அதிகாரத்திற்கு எதிரானவர்களின் கவனத்திற்கு ,அதுவும் பெண் படைப்பாளிகளின் கவனத்திற்கென்று தொட்டவுடன் அது மற்றொரு பக்கத்திற்கு அழைத்துச் சென்றது, அதில் காட்சிப் படங்கள் உறைந்து கிடந்தன. என் கணிணி விரல் தொட உயிர்த்துத் தொலைத்தன. போர் உடையில் துப்பாக்கிகள் மட்டுமே தருமமாய் இருந்தவன் பெண் சவத்திலிருந்து ஆடையை உரித்து விட்டு பார்த்து மகிழ்ந்ததை வெற்றிக் களிப்பாய் காட்சிகள் வர்ணத்தில் வந்து போயின.போர் முனையின் குருதி நுகர்வில் வாழ்ந்து தொலைப்பவர்களின் அன்றாடம் ஆகிப் போன மனதின் வக்கிரங்களை காட்சிகள் சாட்சிகளாக்கிப் போயின. அதிகாரத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கும் தருவாயில் செத்து வெறும் உடலாகிப் போன மனிதத்தைக் கூட பெண்ணாக மட்டுமே , பெண் உடலாக மட்டுமே பார்த்துத் தொலைக்கும் மிருகங்களுக்கும் இல்லாத வக்ர குணம் எரிச்சலூட்டிப் போக இன்னொரு எரிச்சலும் சேர்ந்து எழும்பியது.
அதிகார வெற்றிக் களிப்பில் எந்தத் தளத்தில் பெண் உடலை வெறியாட்டம் பயன்படுத்தியதோ , அதையே கண்ணீரோடும் கம்பலையோடும் அவன் செய்து விட்டானே என்ற புலம்பலோடும் அதே பெண்ணை வெறும் உடலாக இன்னொரு பக்க புலம்பலுக்காக எம்மவரும் பயன்படுத்திக் கொண்டிருப்பது இன்னும் எரிச்சலூட்டியது அதிகார வெறியார்களுக்குத் தான் இன்னொரு இனப்பெண்ணை கேவலப் படுத்தி, அப் பெண் உடலைக் கையிலெடுத்துச் சீரழித்துப் போட்டு படமாக்கி அவ்வினத்தவரையே கேவலப் படுத்தி விட முடியுமென்று தோன்றுகிறது என்றால், அதே படத்தை தன் இனப் பெண்ணாக இருந்த போதும் அதிகார வெறியர்களை வெளியில் போட்டு உடைக்க தன் பெண்களையே அவர்கள் உடலை நிர்வானப் படுத்திய காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள முடியுமா? காட்சிகளை மறைத்து விட மனம் பதைக்காதா? அக்காட்சிகளின் மூலம்தான் எதிராளியின் இன வெறியை காண்பித்துக் கொடுக்க முடியுமென்றால் , அரிப்பு புண்ணாகும் அளவுக்கு சொறிந்து விடுவதுதான் தீர்வு என்பது போலல்லவா ஆகி விடுகின்றது.இதே காட்சிகளில் தன் சொந்த சகோதரி , தாயின் உடலாயிருந்தால் இவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியுமா?இதில் வேடிக்கை என்னவென்றால், இதே சகோதரி தாய் எனும் வசனத்தை காட்சிகளைக் காட்டிப் புலம்புபவர்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தன் தாய், சகோதரி என்றால் இனவெறி அரசாங்க நபர்கள் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பும் போதே அதே படத்தை நாமும் பாவிக்கிறோம் என்ற அறிதல் ஏன் இல்லாமல் போனது? ஒட்டு மொத்தத்தில் எந்த ஒரு சுதந்திரப் போராட்டங்களும் , விடுதலைச் சிந்தனைகளூம் கூட ஏன் தன் சக பெண் இனத்தை அவளை உடலாக பயன்படுத்திக் கொள்ளும் பழைய ஆண்டான் அடிமைச் சிந்தனையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்லவே இல்லை. அப்படி விடுவித்துக் கொள்ளாதது அடிமைச் சிந்தனை காடுகளை அழித்த போதும் அதன் விதைகளை மண்ணோடு உறைய விட்டது போலல்லவா ஆகி விடும். மீண்டும் அது ஒரு சாரல் மழையில் அவை தழைத்து விடக் கூடுமல்லவா
பிடித்து விட்ட புலி வாலாய் போரும் வன்முறையும் ஆதிக்க மனோ நிலையை நோக்கியே நகன்றபடி இருக்கின்றது. அன்பை நேசத்தை நோக்கி நகற்றுவதே இல்லை மனிதர்களை என்று எப்போவாவது உணர்ந்திருப்போமா?
பெண்ணியச் சிந்தனையைச் சொல்லி ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தைக் குறை சொல்வதா? என்ற கேள்வி இதன் தொடராக வரும் என்பதையும் என்னால் அவதானிக்கவே முடிகின்றது. ஆனால் போராட்டத்தை ஒரு கால கட்டம் வரைக்கும் மதித்திட்ட போதும் , குறை கண்டவிடத்து சொல்லித் தானே ஆகவேண்டும். அதிவும் அதிகாரத்திற்கு எதிரானவர்களுக்கான, பெண் படைப்பாளிகளின் கவனத்திற்கென்று குறிப்பிட்டு அனுப்பும் போது, அப்படங்களை உபயோகப் படுத்து முன்னர் இதையும் சேர்த்து சொல்லித் தானே தீரனும். உண்மைகளை உடைக்கின்ற அவசரத்தில் பெண்ணை உடலாக பாவித்து விட்டதை இன்னது செய்கிறோமென்று அறியாமல் செய்து விடுகின்றார்கள்
பாரதி சொல்லுவான் பெண் அடிமையுற்றால் பிள்ளைகளும் அடிமைச் சிந்தனையில் தானே வளரும் என்று இது சின்ன விடயம் அல்ல. சத்தியமான உண்மை ஒரு விடுதலை எண்ணம் எல்லாருக்குமான விடுதலை எண்ணமாகவும் உருமாறாது போனால் தொடர் இயக்கத்தில் விடுதலை இயக்கங்களிம் இன்னுமொரு ஆதிக்க மனோபாவம் கொண்ட அதிகார மையமாக உருவாகுமே அல்லாது மனிதருக்கான விடுதலையாக மாறுவது சாத்தியமில்லை என்பதை நம் முன்னே நடந்து கொண்டிருக்கின்ற அழிவுகள் சாட்சியமாக்கிக் கொண்டிருக்கின்றன.
Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 2/09/2009 08:02:00 am   |
|
|
|
| Friday, January 16, 2009 |
| நடனங்களில் மிதிபடும் சுயமரியாதை |
நடனங்களில் மிதிபடும் சுயமரியாதை
தமிழ் நாட்டின் இன்றைய அரசியலில் மிகப் பெரிய பலமாய் இருந்து கொண்டிருப்பதுவும் அஸ்திவாரமாய் மண்ணுக்குள் புதையுண்டு நமக்கு காணக் கிடைக்காததுவாய் இருந்து கொண்டிருப்பதுவும் சுயமரியாதையே அவற்றில் அடிப்படையில் தான் அரிச்சுவடி எழுதப் பழகிய அரசியல் காட்சிகள் இன்று ஒவ்வொரு தமிழ்குடிமகனும் அறிந்தும் அறியாமலும், எதிர் மறையாகவோ நேர் மறையாகவோ தாக்கம் தந்து , கொடியேற்றி கோட்டைக்குப் போய் பொற்காலம் என்று பொய்யுரைத்து ஊடகங்களில் மூழ்கிக் கிடக்கின்றன. அப்படி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருந்த அந்த மந்திரச் சொல்லின் ஒளி நாமே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமையெல்லாம் தீண்டித் தழுவி புனிதப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டாமா? எப்போவிருந்து அதன் நிழலின் இருளை நாம் மனிதனின் மேல் அவன் உழைப்பின் மேல் விழ விடத் தயாரானோம். நடனங்கள் உடல் உழைப்பில் களைத்துச் சோரும் மனிதன் அதே உடல் அசைவின் மூலம் மனித உற்சாகத்தை மீட்டெடுக்கும் ஒரு கலை. மூளையின் உழைப்பில் சோர்வுறும் மனிதன் விரும்பி தன்னை மீட்டெடுக்க கண்டெடுத்த கலை வடிவ உடல் உழைப்பு நடனம்.
அந்நடனம் எங்கெங்கும் இந்த இரண்டாண்டுகளில் ஊடகங்களில் விற்பனைப் பிரதானப் பொருளாகிப் போக அதில் அடிக்கடி மிதிபடுவது மனிதனின், மனிதத்தின் சுயமரியாதையே
சமீபத்தில் ஒரு நிகழ்வில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து 4 வருடங்களாக அந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து கொண்டிருக்கின்றேன். கால மாறுதல்களை அதனால் அவதானிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. முதல் இரண்டு வருடம் வரை நடந்த போட்டிகளில் வெற்றி தோல்விகள் வெகு இயல்பாய் ஏற்றுக் கொள்ளப் பட்டு மாணவ மாணவிகள் ஆட்டங்களை கொண்டாட்ட மனோநிலையோடு முடித்து விட்டுச் சென்றார்கள்.போன வருடம் முதல் அதிலும் இந்த வருடம் இன்னும் அதிகமாக போட்டியில் சில விசயங்கள் எனக்கு நெருடலாய் படத் துவங்கின. முதலில் அப்போட்டிகளில் உற்சாகமான நல்ல விசயங்கள் . நடனம் என்பதன் மேலிருந்த தயக்கம் , மனத்தடை எல்லாம் கழன்று விட்டன. அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களுக்கு நிகரான உடலசைவுகளை தங்களாலும் முடியுமெனச் செய்வதற்கும் , அதற்கு வீட்டிலுள்ளோரின் குறிப்பாக பெற்றோரின் ஆதரவும் கிடைத்து வருவதும் மிகப் பெரிய விசயம்(உணர்ச்சி வசப் பட்டு திரைபடத்தை மிஞ்சும் உடலசைவுகளை போலச் செய்வது துரதிர்ஷ்டவசமே) 80 களில் நடன நிகழ்ச்சிக்கு பெயர் கொடுத்தேன் என்பதற்காக வீட்டில் நான் அடி வாங்கிய காலங்கள் நினைவுக்கு வருகின்றன.பொது இடங்களில் பெண் உடலசைவு இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படி இருக்கக்கூடாது எனும் காலங்கள் தகர்ந்து விட்டன. நாட்டிய நிகழ்வு முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில் மாணவர்களால் கேலி செய்யப் பட்டதாலேயே அடுத்த வாரமே படிப்பு நிறுத்தி திருமண பந்தத்துக்குள் ஆட்படுத்தப் பட்ட எம் பள்ளித் தோழியின் நினைவும் இன்னும் மறையவில்லை எனக்குள். ஆனால் இவையெல்லாம் மாறியிருக்கின்றது . போட்டி போட்டுக் கொண்டு போட்டிகளுக்கு தயார் செய்கின்றனர். அந்த சந்தோசத்தோடு முடிந்து விடுகின்றதா? அதுதான் இல்லை சமீபத்திய தொலைக்காட்சி நடனக் காட்சிகளின் பாதிப்பில் எல்லாரும் திறமை சாலிகளாக அல்லது திறமை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் ஒரு பொதுமைக்கு வந்து விட எல்லாரும் ஒரே போல் சிறப்பாக வெளிப்படுத்தினர்.தேர்வுக் குழுவிற்கு மதிப்பெண் போடுவதில் சிக்கல் வருமளவிற்கு உண்மையிலேயே 27 நடனக் குழுவினரிடையே 10 குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருக்க ஒப்பீட்டு ரீதியிலும் , ரசனை ரீதியிலும் முதல் மூன்று குழுக்களை மூவர் அடங்கிய குழு தேர்ந்தெடுத்து அறிவித்து முடிக்க, ஆங்காங்கே சோகமே உருவாக பரிசு பெறாத மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர். என்னேரமும் அழுது விடத் தயாராயிருந்த மனோநிலையில். தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தொடர்களில் அழுது கொண்டிருந்தது காணாதென்று நடனப் போட்டிகளில் தோல்வியடைந்தவர்களின் அழுகையை நெருக்கத்தில் தொடர்ந்து காண்பித்து கண்ணீரில் உணர்வுகளின் வெளிப்பாட்டில் காசு பார்க்கும் அயோக்கியத் தனம். அது மட்டுமல்லாது அதே அழுகின்ற மனோ நிலையை பக்க விளைவாகவும் தந்து போயிருப்பதை நினைக்க எவ்வளவு மோசமான உணர்வுச் சிதறல்களுக்கு இடம் கொடுத்து விடுகிறோம் நாமே அறியாமல் என்ற கவலை வருகின்றது. இது தெற்கில் ஒரு ஊரில் என்றால் இன்னொரு எதிர்திசை மனோபாவமும் இருக்கின்றது. அது சென்னை போன்ற இடங்களிலிருந்து கிளம்புவது சென்னையில் இதே போல் ஒரு கல்லூரிக் கிடையே நடந்த நடனப் போட்டிக்கு எனது நண்பர் ஒருவர் நடுவராக போயிருந்த அனுபவத்தைச் சொல்லிய போது எதிர் திசை மனோபாவத்தை உணர்ந்தேன். நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகளும் சிறப்பாக செய்திருக்கின்றனர். எல்லாருக்குள்ளும் வென்று விட வேண்டும் என்ற முனைப்புக்கும் மேலாக “எப்படியாவது” வென்று விடுதல் எனும் மனோபாவம் வெறியாகவே இருப்பதை உணர முடிந்தது. அதை இப்படியும் சொல்லலாம். தோல்விகளை இயல்பாக எடுத்துக் கொள்வதை தொலைத்துக் கொண்டே இருக்கின்றோம்.
அந்த நடுவர் இடைவேளையின் போது செல்லிடைப் பேசியில் பேசுவதற்காக தனிமை நோக்கிச் செல்ல அங்கு வந்த மாணவி தன் நடனத் திறமை எப்படி இருந்தது என கேள்வி எழுப்பியிருக்கின்றார். நடுவரோ நன்றாக இருந்தது எனச் சொல்ல அடுத்து வருவபர்கள் இன்னும் நன்றாகவே ஆடுவார்கள் அதனால் நீங்கள் எங்களுக்கு இன்னும் கூடுதல்மதிப்பெண் போடுங்கள் நாங்கள் வெற்றி பெற என்று கேட்டிருக்கின்றார். அவர் அதிர்ந்து போய் நிற்க “ மதிப்பெண் கூடப் போட்டால் உங்களுக்கு ஒரு முத்தம் தருவேன் என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியில் உறைய வைக்க , எங்கே எதற்கும் தயாராயிருக்கும் அம்மாணவி ஏதாவது ஏடாகூடாமாக நிகழ்த்தி விடுவாளோ எனப் பயந்து மீண்டும் கூட்டம் இருக்கின்ற இடத்திற்கே திருப்பி வந்து விட்டார்.காதல் குறித்து அங்கு பேசப் பட்ட பகிரப் பட்ட கருத்துக்களும் சொல்லப் பட்ட பதில்களும் வாழ்வின் புனிதங்களைப் பற்றிய எல்லாவற்றையும் உடைத்துப் போடுவதாய் இருக்கின்றது. வெற்றி பெற்றோம் என்ற பெருமையைத் தவிர வேறு எதையுமே தந்திடாத ஒரு கல்லூரிகளுக்கிடையேயான நடனப் போட்டியில் தோல்விக்காக அழுவதும், தோல்விகளைத் தவிர்க்க எந்த விலையும் தரத் தயாராயிருப்பதையும் , சுயமரியாதை பற்றிய சிந்தனை அறவே இல்லாமல் போய் விட்டிருப்பதன் அடையாளமே இது . இது மோசமான அடையாளம் தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் அசைவே “சுயமரியாதை” என்ற புள்ளியிலிருந்து தொடங்கி நிற்க தெரிந்தோ தெரியாமலோ அனிச்சைச் செயலாகவே கூடவோ சுயமரியாதை உணர்வு ஒவ்வொரு செயல்பாட்டிலும் இதுதானென்று பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்திருக்க வேண்டாமா? சுயமரியாதையைக் கைவிட்டு கண்ணீர் சிந்துவதும் , வெற்றிக்காக குறுக்கு வழிகளும் நியாயமே எனும் இரு துருவ செயல்பாடுகளும் நிராகரிக்கப் படவேண்டியவை. ஊடகங்கள் நிராகரிக்கப் படவேண்டிய எதிர்மறைகளை அவர்களின் சுயநலங்களுக்காக நன்றாகவே விதைத்து விடுகின்றன. திறமையும் வெற்றியும் “சுயமரியாதை” எனும் அஸ்திவாரத்தின் மேலே எழுப்பப் பட வேண்டிய கட்டிடங்கள் நன்றி: அதிகாலை.காம் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9694&Itemid=163Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 1/16/2009 09:52:00 am   |
|
|
|
| Monday, November 24, 2008 |
| திரைப்படங்களும் பெண்ணும் |
திரைப் படங்களும் , பெண்ணும்
நாமே அறியாமல் திரைப் படங்களில் நம் உணர்வுகளைச் சிதைத்து போகும் இன்னுமொரு விசயம் பெண் உடல். இதற்காக கவலைப் பட வேண்டியது பெண்கள் அல்லது பெண்ணியவாதிகள் மட்டுமல்ல. மொத்த சமூகமுமே அதன் பலனை அனுபவித்த வண்ணமே இருக்கின்றது.
பெண் உடலை காட்சிப் பொருளாக்கித் தந்து விடுகின்றது இன்றைய திரைப்படங்கள். திரைத்துறையைப் பொதுவாக சீர்படுத்துவது பற்றி நான் யோசிப்பதே இல்லை அது முழுக்க முழுக்க வியாபாரம். பிழைப்புக்கான வழி. ஒருவர் அதை லட்சியம் என்று எடுத்துச் செய்தாலும் , கூட்டு முயற்சியில் உருவாகின்ற ஒரு படம் தவிர்க்கவே முடியாமல் உடன் வேலை பார்த்த ஒரு பெரிய கூட்டத்தைப் பணத்தால் நிறைவு செய்து விட வேண்டிய பொறுப்பு இருந்து கொண்டே இருக்கும் வரைக்கும் அது வியாபாரம் என்பதைத் தாண்டி கலை உணர்வுக்குள் வந்து விடவே முடியாது என்பது என் அபிப்பிராயம் கலை உணர்வுகளை விற்றுப் பிழைக்கவே அத்துறை பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது . எனவே அதை சீர் படுத்துவது பற்றி நான் பேசப் போவதில்லை. ஆனால் அதைச் சந்திக்கும் மனிதனின் உணர்வுதனை அவனே அறியாது எங்கெல்லாம் தன் காலடிகளை வைத்து சிதைத்து விட்டும் போகின்றது என்பதை அடையாளம் காட்டவே விரும்புகின்றேன். ஆபாசம் என்பதற்கு ஆயிரத்தெட்டு வரை முறைகளை ஒவ்வொருவரும் சொல்லக் கூடும் . இயல்பாக இல்லாது வலிய சொல்லப் படும் அல்லது உறுத்தலாக செய்யப் படும் எல்லாமே ஆபாசம் தான். ஏற்கனவே இன்றைய பொருளியல் உலகு எல்லாவற்றையும் பொருளாக்கி விற்பனை வியாபாரமாக்கியதில் பெண் உடலையும் உணர்வையும் பொருளாக்கி விற்பனைக்கு தந்து விட்டது என்பதைக் கண்கூடாக சாட்சியங்களோடு பார்க்க நமக்குத் தருவது திரைப் படங்கள். அதனால்தான் பிளேடு விளம்பரத்திற்குக் கூட பெண் உடல் தேவைப் படுகின்றது.பெண் உனைக் காதலிக்க வேண்டுமா எங்களது body spray உபயோகப் படுத்துங்கள் என கூசாமல் கோர முடிகின்றது விளம்பரங்களால். இலங்கையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஒரு நண்பர் கேள்வி கேட்டார். திரைப்படங்களுக்கு எதிராய் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று? நான் சொன்னேன், போராட்டம், தார் பூசுவது இதையெல்லாம் விட பெண் உடல் பொருளாக பார்க்கப் படுவதற்கு எதிரான கருத்தியலை உருவாக்க வேண்டும். அதை என் இலக்கியங்கள் கவிதைகள் அறிவுத் தளத்தில் செயல் படுத்தும் என்றேன்.பெண் என்பவள் உடல் மட்டுமல்ல என்பதும் நிறுவப் பட வேண்டும். இந்த கருத்தியல்கள் இயக்க தளங்களில் இருப்பவர்களால் சுவீகரிக்கப்படும் ஆனால் அதே திரை நாமே அறியாமல் நமது உள்ளத்து உணர்வுகளை இன்று மாற்றியிருக்கின்றது. பெற்றோர்களுக்கு குழந்தையின் உடலும்,(அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் தான்) தம்பதியினருக்கு அவரவர்களது உடலும் தவிர்த்து அந்நிய உடலை பார்க்க நேர்ந்தால் கூசுகின்ற நாம் அல்லது பார்வையை விலக்கிக் கொள்கின்ற நாம், எந்த வித தயக்கமும் இன்றி இன்று திரையில் அதில் வருகின்ற எல்லா உடல்களையும் ஆடைகளைந்து பார்ப்பதை இயல்பாக்கி வைத்திருக்கின்றோம். முன்பெல்லாம் எப்பவாவது வரும் ஆடல்காட்சிகளில் கூட பெண் உடலை பார்க்கக் கூசுகின்ற குடும்பச் சூழல், இன்று தவிர்க்க முடியாமல் படமுழுக்க வரும் அரை குறை காட்சிகளை இது இயல்பு என பார்க்க வைத்திருக்கின்றது. விதி விலக்குகளை எல்லாம் புதிதாய் காண்பிக்கின்றோம் என்று எல்லாரும் அறிய காண்பித்து விடுவதால் எதுவும் தப்பில்லை எனும் மனோ நிலை பொதுப் புத்தியாக மாறுவதற்கு வழி சமைத்து விடுகின்றது.அவர்கள் காண்பிக்கின்ற விதி விலக்குகளை பார்த்து விட்டு எல்லாரும் அதேபோல் இருக்க முயற்சித்து மலினப் படுத்தி விடுகின்றார்கள் அதில் பேசப் பட்ட விசயத்தை இதனால் எத்தனை மூடி மறைத்தாலும் எப்படி உடை உடுத்தினாலும் காமிராக் கண் வழியாக வக்கிரமாக பார்க்கச் சொல்லிக் கொடுக்கின்ற வேலையை தொடர்ந்து செய்து விடுகின்றன.இது ஆரோக்கியமான போக்கு அல்ல . 3வயதுக் குழந்தைகள் கூட பள்ளியில் நண்பர்களிடையே என்ன என்று தெரியாமலேயே காதல் பற்றி பேசுவதும், பெண் குழந்தைகளை கட்டி அணைத்து காதல் என்று செய்யத் துணிவதையும் பார்க்க நேருகின்ற போது திரைப்படங்கள் எவ்வளவு ஆழமாக சிதைக்கின்றன என்று யோசிக்க வேண்டியிருக்கின்றது. நாம் தருவது எப்படி இந்த சமூகத்திற்கு போய் சேரும் என்ற கணிப்பு இல்லாது , தீர்மானம் இல்லாது கலைமற்றும் அறிவுத் தளத்தில் செயல் படுபவர்கள் செயல்பட முடியாது. கூடாது. இதைச் சொல்லும் போது நான் கலாசாரக் காவலராக முத்திரை குத்தப்படக் கூடும்.. என்னைப் பொறுத்தவரை கலாசாரம் என்பது மனிதனோடு மனிதன் இணக்கமாக வாழ்வதற்கு நடைமுறையில் உருவாகும் செயல்பாடுகளே அன்றி , வெற்றுச் சடங்குகள் கலாசாரம் அல்ல.அப்படியான கலாசாரங்களை எப்பவும் பேண விரும்புபவளாகவே இருப்பேன். பலர் சடங்கு முறைமைகளை கலாசாரம் என்று நம்பிக் கொண்டு கலாசாரம் எங்களை அடிமைப் படுத்துகின்றது என்று வாதிடுகின்றனர்.. சடங்குமுறைமைகள் கலாசாரம் அல்லவே.
இதில் வெள்ளித் திரை மட்டுமல்ல , சின்னத் திரை இன்னும் மோசமாக இயங்கி வருகின்றது. பள்ளிக் கூடக் காட்சிகள், ஒரு பெண் 4 மாணவர்கள், ஒருவருக் கொருவர் அவளை எனக்கானவள் என்று உடைமைப் பொருளாய் சித்தரிக்கும் நிகழ்வை இன்னும் எத்தனை காலம் “அன்பெண்று” சொல்லிக் கொண்டிருக்கப் போகின்றார்கள். எனக்கென்று வீடு இருக்கின்றது எனக்கென்று ஒரு கார் இருக்கின்றது என்பது போல் எனக்கென்று ஒரு பெண் இருக்கின்றாள் என்று உடைமைப் பொருளாய் மாற்றி விடுகின்ற செய்கைகளை அன்பின் பேராலேயே நிகழ்த்தி விடுகின்றனர்.
என் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்த ஒரு இளம் மாணவி( செவிலியர் பயற்சிக்கென வருகின்ற மாணவி) ஒரு நாள் வாசலுக்குப் போவதும் வருவதுமாக வேலை சிரத்தையின்றி இருக்க , அழைத்து என்னவென்று கேட்டேன், முதலில் சொல்ல மறுத்த அவள், தன் காதலன் வாசலில் இருப்பதைச் சொன்னாள். இங்கு எதற்கு வந்திருக்கின்றார். என்று கேட்க. நான் யாருடனும், குறிப்பாக ஆண்களுடன் பேசக் கூடாது என்று சொல்கிறார் அக்கா என்றாள் அதிர்ந்து போனேன். காதல் தொடக்கம். இதிலேயே என்னைத் தவிர அயலாடனும் பேசாதே என்று சொல்லும் இளைஞன் , அதிலும் அதை வேவு பார்க்க வேலை பார்க்கும் இடம் வரை வரும் இளைஞன், நாளைய வாழ்க்கை பற்றிய பிரமிப்பு எனக்கு வர எடுத்துச் சொல்கின்றேன். அந்தப் பெண் ஒரே வார்த்தையில் சொல்கின்றாள். என் மேல் இருக்கின்ற பாசம், அவனுக்கு மட்டும் தான் நான் என்று சொல்வது எனக்கும் பிடிக்கின்றது என்று. திரைப்படங்கள் தருகின்ற ரொமாண்டிக்கான இந்த நினைப்பிற்குள் இருப்பது தற்காலிகமான சுகமாக இருக்கலாம். ஆனால் யதர்த்தம் வேறு விதமானதாயிற்றே தான் வைத்தியம் பார்க்க வந்த இடத்தில் அவளைக் காதலித்தது போல் இன்னொரு முறை வேறு யாரும் காதலித்து விடுவார்களோ , அவளும் அதையும் நம்பத் துவங்கி விடுவாளோ என்ற பயமும் அவனை அவளை பத்திரப் படுத்தும் மனோ நிலைக்கு தள்ளுகின்றது.அந்தப் பத்திரப் படுத்தலில் தன் சுயம் தொலைந்து போவதை காதல் அன்பு என்று சொல்லி பூசி மறைக்கப் பார்க்கின்ற ஆண் உலகை வாசித்து விட முடியாதவளாக பெண் இருப்பை வைத்திருப்பதில் இந்த திரைப் படங்கள் மிக முக்கியமான பங்காற்றி இருக்கின்றன. வித்தியாசமான திரைப்படமாய் கலை இலக்கிய அமைப்புகளாலும் தூக்கிச் செல்லப் பட்ட படங்களும் கூட அப்படியான வாழைப்பழ ஊசி ஏத்தலாய் சில கருத்தியல்களை பெண்ணுக்கு எதிராக செய்து விடுகின்றன. ஆட்டோகிராஃப் எல்லாரும் விரும்பி பார்த்த படமென்பதற்கு அப்பால் ஒரு ஆண் பல பெண்களை நேசிப்பது என்பது இயல்பு என்பதாய் பெண் பொதுப்புத்தியில் நுழைத்து விடுவது துரதிர்ஷ்டமே. பெண் உடல் மழுங்கடிக்கப் பட்ட வெற்றுப் பொருளாகப் பார்க்கப் படுவதிலிருந்து தவிர்க்க, எமது முன்னோர்கள் தந்திருக்கும் உறவுக்களுக்கிடயேயான புனிதத்தை வெற்றுச் சடங்குகளுக்குள் சிக்காது மீட்டெடுக்க வேண்டியது மிக அவசியம் உதாரணமாக ஒரு துக்க வீட்டில் உறவை இழந்த துக்கம் தவிர்க்க , இன்னும் பல உறவுகள் இருக்கின்றோம் என்பதை உணத்தவே உறவுகள் வந்து துணி எடுத்துக் கொடுத்து தன் அருகாமையை தெரிவிக்க சொல்லிக் கொடுத்தனர் நம் முன்னோர். ஆனால் துணி எடுத்துக் கொடுத்தலை வெற்றுச் சடங்காக்கி அதில் கௌரவம், ஆணவம் , தன் முனைப்பு எல்லாம் வந்து “ உறவுகளின் அருகாமையை உணர்த்துகின்ற நெகிழ்வுச் சம்பவமே” நிகழ்ந்து விட முடியா தளத்தை இன்று உருவாக்கி இருக்கின்றது அந்த சடங்கு கலாசாரத்தை தூர எறிந்து விட்டு உறவுகளின் புனிதங்களை பேணும் கலாசாரங்கள் தகவமைக்கப் படுதலும் இன்றைய மனிதம் பேணும் வழிகளாக அமையும். நன்றி அதிகாலை.காம்Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 11/24/2008 10:00:00 am   |
|
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|