|
Tuesday, November 24, 2009 |
நீடிக்குமா மகிழ்வு தொடர் வாழ்வில் |
நீடிக்குமா மகிழ்வு தொடர் வாழ்வில்
பொதுப் புத்தி என்று ஒன்றை அடையாளம் சொல்ல முடியுமா? கடைந்து விட்ட தயிரில் மிதக்கும் வெண்ணெய் பொதுப் புத்தியா பிரிந்து கலந்து நிற்கின்ற மோர் பொதுப் புத்தியா ? இக்கேள்வியின் குழப்பத்துகிடையேயும் இச்சூழலில் இக்காலகட்டத்தில் “இது” பொதுப் புத்தியாக இருந்திருக்கின்றது என்று அடையாளமிட முடியும் ஒரு சில உதாரணங்களோடு. சரியான நுண்ணரசியலோடு உற்று நோக்க சில விசயங்கள் பொதுப் புத்தியாக உருவாகி ஓடுகின்ற ஆற்றுக்குள் உணரப் படாத ஊற்றுக்களாய் மனித அடிப்படை தளங்களையே அசைத்துப் போவதைப் பார்க்க முடியும் இந்த பொதுப் புத்திகள் அறிவாளிகள் தளத்திலிருந்து ஆரம்பத்தில் இதுவரை பார்க்கப் படாத விசயமாக அடையாளம் காணப் பட்டு ஒரு தர்க்கமென உருவெடுத்து அவர்களிடமிருந்து விரும்பியோ விரும்பாமலோ மக்களிடமும் சமூகத்திடமும் ஒரு போர்வையாய் வீழ்ந்து அதை மூடி மறைத்து வாழ்வின் வேர் வரை ஊடுருவி சில சமயம் உரமாகவும் சில சமயம் தேவையற்ற இறுக்கமாகவும் மாறித் தொலைய பின்னாளின் அவை மலினப் பட்டு அறிவாளி என்ன காரணத்திற்காக சொன்னானோ அதற்கு எதிரான மாற்றுக் காரணங்களுக்காகவும் பயன் பட்டு தொட்ட நோக்கங்களையும் சிதைத்தும் போய் விடுகின்றன. அறிவாளிகளால் புதிய அல்லது இதுவரை இல்லாததுவாய் சிலாகிக்கப் பட்டு தொடர் பயன்பாட்டின் நன்மை தீமை தெரியும் முன்னரே பெயர் ஈட்டித் தந்து விட்டு , அந்த புகழினாலேயே பரவி வியாபித்து விற்பனைத் தந்திரங்களூடாக வளர்ந்து விடுகின்ற விசயங்களும் உண்டு இன்றைய பின் நவீனத்துவம், உடல்மொழி போல சமீபத்தில் உன்னைப் போல் ஒருவன் படத்தை எப்பவும் போல் பிள்ளைகளுடன் பொழுதைக் கழிக்கும் விதமகவே சென்று வந்தேன்.
இன்று மதமும் சாதியமும் மனிதர்களுக்கிடையில் ஒன்று இரண்டாகி இரண்டு நாலாகி பெருகி நிரம்பி வழிந்தபடி எழுப்பும் கேள்விகளுக்கும் அப்பால், எப்பவும் பெண்களைப் பயன்படுத்தியே பழகிய திரையுலக அபத்தங்களுக்கு அப்பால்( நல்ல வேளையாக கதாநாயகி பாத்திரமும் குத்தாட்ட நடன சிகாமணிகளும் தவிர்க்கப் பட்டதால் அத்தைகைய குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பித்து விட்டது படம்) முதல்வரின் ( படத்தில் வரும்) , காவல் துறைக் கண்காளிப்பாளரின் அழுத்தங்களையெல்லாம் சுமப்பதற்கு ஒரு பெண் பாத்திரம் என்ற இன்னும் இன்னுமான அபத்தங்களுக்கெல்லாம் அப்பால் பார்க்கப் படாமல் ஒளிந்து கிடக்கும் இன்னொமொரு விசயமாக என்னுள் நிறைய சிந்தனைகளை கேள்விகளை எழுப்பி விட்ட வகையில் அந்தப் படம் என்னளவில் ஒரு முக்கிய அடையாளம் அல்லது துவக்க இடமாகவே காட்சி தந்தது. எழுபதுகளில் எதிர்மறை வழிபாட்டியல் நம்மிடையே மெல்ல காலூன்றி இன்று வரை பரவி புரையோடிப் போய் அதன் உச்சகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. அன்றெல்லாம் நாயக வழிபாடு என்பது கதாநாயகன் மிக சாதாரண மனிதன் செய்து விட முடியாத அரிய செயல்களைச் செய்கிறவனாகவும் , ஏழை பங்காளன், நலம் விரும்பி ,உண்மையே பேசுபவன் , தான் துயரப் பட்டும் நல்லதையே செய்பவன் கனவிலும் தான் விரும்பிய பெண்ணைக் கூட ஆடை அவிழ்த்துப் பார்க்காதவன் இன்னும் இன்னுமாக இருந்த காலங்கள் போய், திருடியாவது நல்லதைச் செய்பவன், கடைத் தேங்காயை எடுப்பதும் தர்மம் செய்யவென்றால் நல்லது என்கின்ற பாவனையும், நல்லதை செய்ய பெண்ணை அல்லது அடிமையை பயன்படுத்திக் கொள்ளுதல் சரியெனவுமாக கொஞ்ச காலமும், கொலைகாரனின் வரலாறு, தாசியின் வரலாறு , ஒன்று மில்லாதவனின் வரலாறு என்று சொல்லப் படாத பக்கங்களைத் தேடிச் சலித்தவர்கள் இயலாமையின் பக்கங்களிலும், உழைப்பின்மையின் இடமும், குடிவெறியனும், பெண் போகமாக நினைத்தவனும் நாயக அந்தஸ்துக்கு உயரத் தொடங்கினார்கள். மொத்தத்தில் விதி விலக்குகள் பற்றி பேசுவது நடைமுறையாகிப் போனது சிகரெட் குடிப்பது தவறு என்றிருந்த காலம் போய் , சிகரெட்டை தூக்கிப் போட்டும் பிடிப்பதை சவாலாக நிறுவியதும், சிகரெட்டை ஒளித்தால் காதல் மனதில் வந்து விட்டது என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் சுவையை சிகரெட் வழி ஏத்தியதுமான பொதுப் புத்தியை நாமே அறியாமல் எதிர்மறை வழிபாட்டு மரபியல் நம்முள் திணித்தது .எல்லாமே “சரிதானா “என்ற சந்தேகத்தை முதலில் தந்து “ஏன் சரியாக இருக்கக் கூடாது” என கேட்க வைத்து பின்னர் எல்லாமே “அவரவர்கள் பார்வையில் சரிதானே” என்று பதிய வைத்து , பதிய வைத்ததை வாழ்வாகவே மாற்றி வைத்தது . அப்படி திசை திரும்பிப் பயணிக்க வைக்கின்ற ஒரு சிந்தனை தளமாக உருவாவது பின்னாளில் மலினப் பட்டு காலாவதியாகிய பின்னும் உணரப் படாமலேயே பயன் படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது பொதுப் புத்தியாக இன்னுமொன்று
பெரிய சாதனையைச் செய்தாலும் தன்னடக்கமாய் இருந்திருந்த காலத்தில் கால வெள்ளத்தால் செய்தவை மறக்கப் பட்டு விட்டதை அடையாளமிட்டு இன்று எதைச் செய்தாலும் பெயரை நிறுவி கொள்ளுவது என்று தொடங்கி யதை ஒன்றுமே செய்யாதவர்களும் கடைப்பிடித்து, செய்ததாக பெருமை பேசுவதும் அதையே நிறுவுவதற்காக மலின அரசியலையும் செய்து விடுவதுமாக பொதுப் புத்தி நிறுவிக் கொண்டிருக்கின்ற இந்த கால கட்டத்தில் உன்னைப் போல் ஒருவன் ஒரு மாற்று முனை, தொடர்ந்து இந்த இருபது ஆண்டுகளில் அதிலும் கடைசி ஐந்து ஆண்டுகளில் இலக்கிய உலகில் நாம் வாசிக்க நேர்ந்த பின் நவீனத்துவம் தொட்டு , சமூகச் செயல்பாடு வரைக்கும் ஒன்றுமில்லாதவையாக நம்பப் வைக்கப் பட்டிருப்பவை மையப் பார்வைக்கு வரவேண்டும் என்ற அழுத்தக் கோட்பாடு முன் வைக்கப் பட்டது அதாவது விளிம்புகள் மையங்களுக்கு வரவேண்டுமென்ற அறிவாளிகள் தளத்திலிருந்து நகன்ற கோட்பாடு மெல்ல மெல்ல விளிம்புகளைத் தேடிப் பிடித்து தரமேற்றுதல் பீடத்துக்கானதாய் என்றிருக்க வேண்டியது மாறி சின்னத் தனங்கள் எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துப் இதுவரை பார்க்கப் படாதவையாக அடையாளப் படுத்தப் பட்டு அரியணையேற்றி விளிம்பு நிலைகள் என்பதே மலினப் பார்வைக்குட்பட்டு பொதுப் புத்தியாக மாறிப் போனதன் விளைவுதான் திரைப்படங்களில் மோசமான குண நலன்கள் எல்லாம் “ இதுவும் முக்கியத்துவம்” என ஆகிப் போனது . நிஜமாகவே முக்கியப் படுத்தப் படவேண்டியவைகள் புறக்கணிக்கப் பட்ட காலமாகவும் மாறிப் போயிருக்கின்றது . மையங்கள் எப்படி மையங்களாக உருவெடுக்கின்றன. ஏதோ ஒரு வகையில் அந்தந்த காலகட்டத்தில் அவற்றின் பணி அல்லது சிந்தனையின் தேவை செய்யப் படுகின்ற பணி/ சிந்தையின் தரம், பணி/ சிந்தை சரியாக சமூகத்திற்கு அர்ப்பணிக்கப் பட்ட விதம் இவையெல்லாம் சேர்ந்து மனித திட்டமிடுதலைத் தாண்டி மையமாக உருமாறியிருக்கும் . இந்த மையங்களை நாம் வரவேற்றே ஆகவேண்டும் , விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவைகள் ஓங்கி வளர வேண்டும் என்பதுக்கும் அப்பால் தேவையில்லாது ஒதுக்கப் பட்ட விளிம்புகள் மையத்துக்கு வலிந்து கொண்டு வரப் படுதல் போலித்தனத் தேவைகளை உருவாக்கி மனிதச் சிந்தனைகளையும் பணிகளையும் திசை மாற்றி விடுகின்றன. அதிலிருந்து விடுபட எத்தனிக்கும் முக்கிய வெளிப்பாடாகத்தான் இப்படத்தை அடையாளப் படுத்த வேண்டி இருக்கின்றது
ஒன்றுமில்லாதது எல்லாம் ஆர்ப்பாட்டம் மேள தாள முழங்க அரியணை ஏற முக்கிய நிகழ்வுகள் தங்களை மேடை யேற்றாது ஒன்றுமில்லாததாய் கரைத்துக் கொள்வது தவிர்க்க முடியாததாகிப் போகின்றது. அப்படிபட்ட கரைதலை வலியுறுத்தும் முக்கிய மாற்று முனையாக இப்படத்தின் காமன் மேன் எனும் வசனம் , அக்கதாபாத்திரம் எல்லாம் செய்து விட்டு கரைந்து போவதன் மூலம் நிகழ்த்துக் காட்டியிருக்கிறது. அப்படியானால் வன்முறைக்கு எதிராக வன்முறை என்ற படத்தின் இன்னுமொரு கருத்தாக்கத்தை ஆதரிக்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பி விடாதீர்கள் ஏனென்றால் ஒரு கேள்விக்கு, பலநேரம் பதில் இல்லாதவர்கள் அல்லது பதில் தன்னை காட்டிக் கொடுத்து விடும் என நம்புபவர்கள் செய்கின்ற விசயம் தான் அடுத்த கேள்வியை தொடுத்து வைப்பது. அப்படியான கேள்விகளுக்கும் எதிரும் புதிருமான பதில்கள் இருக்கவே செய்கின்றன. முதலிலேயே சொல்லி விட்டேன் படத்தில் எனக்கு எதிரான விசயங்களூம் இருக்கவே செய்கின்றன . நாம் முக்கியப் படுத்த வேண்டிய விசயமாக அல்லது கவனிக்க மறந்த விசயமாக “ பெரிய விசயத்தை செய்தாலும் கரைத்து கொள்வது” என்பதை குவி மையப் படுத்தப் படவேண்டி இருக்கின்றது. எப்பவும் பீடமேறுதலையே கவனத்திலெடுத்து செய்யப் படுகின்ற விசயங்கள் எல்லாம் அது விளிம்போ மையமோ சிறியதோ பெரியதோ வழிதவறியோ போகின்றன. செய்கின்ற வேளையில் ஆத்மார்த்தமாக பொது நலமோடு உண்மையாக செயல்படுகின்ரவர்கள் கானாமல் போவது ஒன்றுமில்லாததாய் மறைந்து போவது செய்த விசயம் அதே விசயமாக வாசிக்கப் படுவதற்கு உதவும் என எத்தனைபேர் உணர்ந்திருக்கின்றோம். பொய் சொல்கின்ற குழந்தை அல்லது முதன் முதலாய் திருடுகின்ற குழந்தை அதை சரியான நேரத்தில் திருத்தி விடும் வகையில் அணுகத் தெரிந்தவர்கள் அக்குழந்தையை திருத்தியதாக எப்படி பெருமை அடித்துக் கொள்ள முடியாதோ அப்படி கரைந்து போய் விட வேண்டும் .தன்னிடம் பாலியல் சிந்தனையோடு நெருங்கும் ஆணின் சிந்தனையை திசை திருப்பி வென்று விடுகின்ற பெண் அப்படி அவன் நெருங்கியதாக எப்படி குற்றச் சாட்டை வைக்க முடியாதோ அப்படி கரைந்து விட வேண்டும். உன்னைப் போல் ஒருவனின் ஒன்றுமில்லாததாகிப் போகும் காமன் மேன் ஆக மாறிப் போவதை இன்னும் நல்ல விசயத்தை செய்கிறவனாக வன்முறைக்கு எதிர் வன்முறை என்றில்லாது காட்டிப் போயிருந்தால் இன்னும் அதன் வாசிப்புத் தளத்தின் தரம் உயர்ந்திருக்கும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது உபாயம் மட்டுமே. நல்ல நட்பாக எப்படி இருக்க முடியாதோ அது போல வன்முறைக்கு எதிர் வன்முறை அல்ல ஆனால் ஆண்களின் வீரம் என்பது வன்முறைதான் பெண்களின் பலம் என்பது அன்புதான் எனவே பெண்களை படத்திலிருந்து அப்புறப் படுத்தி விடுகின்றார்கள் சின்னதன விசயங்களையெல்லாம் பெரிசுபடுத்திக் கொண்டிருக்கின்ற தளத்திலிருந்து 70 களிலிருந்து எதிர்மறை வழிபாட்டு மரபியில் புழக்கத்துக் கொண்டு வந்ததை நேர்மறை வழிபாட்டு மரபுக்கு மாத்தக் கூடிய தருணமாக இப்படத்தின் சில விசயங்களை அடையாளம் கொள்ளலாம் எனும் ஆவல் வருகின்றது. அந்த ஆவலை தந்து போன வரைக்கும் மகிழ்வே நீடிக்குமா மகிழ்வு தொடர் வாழ்வில்
நன்றி : அதிகாலை.காம்Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 11/24/2009 10:15:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment