|
Tuesday, June 23, 2009 |
திசைகளின் தரிசனம் |
திசைகளின் தரிசனம்
பயணக் கட்டுரை திலகபாமா காவ்யா வெளியீடு 16, இரண்டாம் குறுக்குத் தெரு டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம் சென்னை-600 024. போன்: 044-23726882 விலை ரூ.90/-
இலக்கியத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருப்பவர் திலகபாமா. கவிதை, சிறுகதை, கட்டுரை என்னும் நிலைகளைக் கடந்து இயங்கி வருபவர். தற்போது தன் பயணங்களை வைத்து கட்டுரையாக்கித் தந்துள்ள தொகுப்பு 'திசைகளின் தரிசனம்'. இலங்கை, இலண்டன், டார்ஜிலிங், துருக்கி, பாலித்தீவு ஆகிய வெளிநாடுகளில் கவிஞர் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை உள்ளார்ந்த உணர்வுடன் கூறியுள்ளார். 2005ல் முதல் முறையும் 2007ல் இரண்டாம் முறையும் இலங்கை சென்றுள்ளார். இராவணன் பற்றிய விவரங்களுக்காக மீண்டும் இலங்கை வர வேண்டும் என்னும் ஆர்வம் எழுந்தாலும் "இப்பொழுது இருக்கிற கலவரச் சூழலில் இன்னொரு முறை இலங்கை வருவது சாத்தியமா?'' என்னும் கட்டுரையாளரின் அச்சம் குறிப்பிடத்தக்கது. இரண்டு முறையும் இலக்கியம் சார்ந்தே பயணித்துள்ளார். பல இடங்களில், பல தலைப்புகளில் பேசியுள்ளார். வரவேற்பையும் பெற்றுள்ளார். விவாதங்களையும் எதிர்கொண்டுள்ளார். இலண்டன் பயணம் பற்றியது இரண்டாம் கட்டுரை. இந்தக் கட்டுரைகள் வடக்கு வாசல் இதழில் தொடராக வெளிவந்தவை. பெண் தன்னைக் கண்டறிய இவ்வாறான பயணங்கள் அவசியம் என்று ஒரு போராட்டத்துக்குப் பின்னே வெற்றி பெற்றேபயணத்தைத் தொடங்கியுள்ளார். இக்கட்டுரை முழுக்க பெண்ணியமே பேசியுள்ளார். பெண் முன்னேறும் போது ஆணே காரணம் என்பவர்கள் ஆண் முன்னேறும் போது அதற்குக் காரணமாயிருந்தாலும் அது அப்பெண்ணின் கடமை என்போரைச் சாடியுள்ளார். பெண் பாலியல் தொழிலைக் கட்டுரையாளர் ஏற்கவில்லை. முத்துலட்சுமி ரெட்டியை நினைவுகூர்ந்து அவர் வழியில் செல்பபவராக தன்னை நிறுத்திக் காட்டியுள்ளார். இலண்டன் பயணத்தைப் போல இக்கட்டுரையும் நீண்டதாக உள்ளது. மூன்றாவதாக கட்டுரையாளர் பயணித்த இடம் 'டார்ஜிலிங்'. இது இலக்கியம் சார்ந்ததாக அல்ல. இன்பச் சுற்றுலாவாக உள்ளது. டார்ஜிலிங் பயணத்தில் தான் கண்டு களித்ததை கட்டுரையாகப் படம் பிடித்து விருந்தாக்கித் தந்துள்ளார். இடையிடையே கவிதையாகவும் வடித்து ரசிக்கச் செய்துள்ளார். தீண்டித் தழுவி அணைத்துக் கொள்ளப் பார்க்கும் குளிர் மறுத்தோடும் உடல் வெளித் தள்ளிப் போகிறது வெக்கையின் வேட்கையை இமயத்தின் கம்பீரமெடுத்து ஓடுகின்றநதி பாறை தகர்த்து கரை உடைத்து எக்காளச் சிரிப்பிட்டு புவி புரட்டி வருகின்றது போல உள்ளது கவிதையோட்டம். மருத்துவக் கருத்தரங்கம் ஒன்றிற்காக 'துருக்கி'ச் சென்றவர் அவ்வனுபவத்தையும் கட்டுரையாக்கித் தந்துள்ளார். தென்னிந்திய மொழிகள் பேசும் நான்கு தோழியரோடு நட்பு ஏற்படுவதைப் பெருமையுடன் கூறுகிறார். "வேறுபாடுகளை மீறி மகிழ்ந்திருத்தல் எல்லாருக்கும் ஒன்று தானே?'' என மொழியைக் கடந்து மனம் நேசிப்பதை மகிழ்ச்சியுடன் வியக்கிறார். "என்னுடைய தேர்வாக இல்லாது தவிர்க்க முடியாது நான் போக நேர்ந்த பயணமாகவே அமைந்திருந்தது'' என 'பாலித்தீவு' பயணம் குறித்துத் தொடங்கியுள்ளார். ஆயினும் வாய்ப்புகளை நழுவ விடுவதில்லை என்கிறார். துருக்கியருக்குக் கண் போல் பாலித்தீவினருக்கு பூனை தெய்வம் என்கிறார். பாலித்தீவில் உள்ள வீடுகளில் கிராமத்து படம் போல் விக்கிரகம் இன்றி கோவில்கள் உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். மற்றப் பயணங்களைப் போல பாலித்தீவின் பயண முடிவு சுபமாக இல்லை. ஒரு கலகத்துடனே முடிவுற்றதை அச்சத்துடன் விவரித்துள்ளார். வானிலை மோசமாக இருந்ததால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது என்றும் "சாவை பக்கத்து இருக்கையில் பாத்திருக்க வைத்த கடைசி 20 நிமிட பயணம் வாழ்வில் மறக்க முடியாதது'' என்னும் வரிகள் அதன் பயங்கரத்தை உணர்த்துகின்றது. கவிஞரின் பயணங்கள் ஒவ்வொன்றுமே மறக்க முடியாதவையாகத் தான் உள்ளன. எல்லா பயணங்களையும் திட்டமிட்டே தொடங்கியுள்ளார். நாள், நேரம் குறிப்பிட்டு ஒவ்வொரு நிகழ்வையும் எழுதியிருப்பது அவரின் திட்டமிடலுக்குச் சான்று. ஒவ்வொரு பயணத்தையும் கட்டுரையாக்க வேண்டும் என்னும் முன்முடிவுகளைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. பயணம் தொடங்குவதற்கான முன் தயாரிப்புகளுடனே ஒவ்வொரு கட்டுரையையும் தொடங்கியுள்ளார். பயணம் மேற்கொண்ட நாடுகளில் கண்டதையும் மக்களுடன் பழகியதையும் அவரின் பழக்க வழக்கங்களையும் கூறியுள்ளார். பயணக் கட்டுரைகள் என்னும் போதிலும் பெண்ணிய நிலையிலிருந்து சிறிதும் விலகாமல் எழுதியுள்ளார். கட்டுரையாளர் ஓர் அசைவப் பிரியர் என்பதையும் அறியச் செய்கிறது. கட்டுரையினூடாக சி.கனகசபாபதியின் மனைவி லட்சுமி அம்மாள் உள்பட பலருடனான தன் நட்பையும் உறவையும் கூறியுள்ளார். "நட்பின் அடித்தளமுமே இலக்கியம் சார்ந்ததுதானே'' என்னும் வரியே சான்றாக உள்ளது. இடையிடையே சில கவிதைகளையும் மேற்கோளாக்கித் தன் கவியார்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கட்டுரைகளின் மூலம் வாசிப்பவர்களையும் திசைகளைத் தரிசிக்கச் செய்கிறார். நதியைப் படமெடுக்க வந்தவர் தன்னைப் படமெடுத்ததைத் தான் சுவைத்த தருணங்கள் என்கிறார். பயணக் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் நேர்காணலும் ஓர் இலக்கியக் கட்டுரையும் தனித்துக் காணப்படுகின்றன. நேர்காணல் 'தீபம்' தொலைக்காட்சியில் வந்ததாகும். பெண்ணிய போக்கில் தீவிரவாதம், மிதவாதம் என்னும் இருவகை இருந்தாலும் "வாழ்க்கை என்ன சொல்லிச் செல்கின்றதோ அந்த இடத்தில் இருந்துதான் எங்களுடைய பாதையை தொடங்கணும் என்பதில்தான் நான் இருந்து கொண்டு இருக்கிறேன்'' என ஒரு வினாவிற்கு பதில் அளித்துள்ளார். சி.கனகசபாவதி மீதான தன் மதிப்பீட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். பெண் தன்னை நிலைநிறுத்துவதான முயற்சிகள் தொடர்பாகக் கொழும்புவில் நடைபெற்ற கருத்தரங்கின் மீதான தன் பார்வையைக் கட்டுரையாக்கித் தந்துள்ளார். இது விவாதமாக உள்ளது. 'பெண்ணிய நாடகத்தின் ஆக்கம்' என்னும் நாடகத்தை முன் வைத்து ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளார். ஒரு சோறு பதம் என்பதை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை ஒர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார். இமையத்தின் 'செடல்' நாவலை முன் வைத்து பேசியதில் நம்நாட்டு மதிப்புகள் வெளிநாட்டில் இழக்கச் செய்யக்கூடாது என்று கருத்துரைக்கிறார். தமிழீழத் தேசியமும் தமிழர் அடையாள மறுப்பும் தலித் அரசியலூடாக இலங்கையில் பேசுவது பிழையாகப் போகுமென்று கருதுவது குறிப்பிடலுக்குரியது. தன் கட்டுரை மீது எழுந்த விமரிசனங்களையும் நேர்மையாக ஒப்புக் கொண்டுள்ளார். இத்தொகுப்பில் இக்கட்டுரை அந்நியமாயிருந்தாலும் அவசியமாக உள்ளதை மறுப்பதிற்கில்லை. பயணக் கட்டுரை எழுதுவது எளிதானதல்ல. பயணித்தினூடே கட்டுரைக்கான தரவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். கவிஞர் திலகபாமா பயணத்திலும் வெற்றிப் பெற்றுள்ளார். பயணக் கட்டுரையிலும் வெற்றிப் பெற்றுள்ளார். ஒரு தேர்ந்த மொழியையும் அழகாகக் கையாண்டுள்ளார். பயணக் கட்டுரைக்கும் ஓர் இலக்கியத் தகுதியைப் பெற்றுத் தர முயற்சித்துள்ளார். இலக்கியத்தில் தன் அடுத்த கட்ட பயணத்தைத் தொடர்ந்துள்ளார். "பயணம்'' தொடர வாழ்த்துக்கள். பொன்.குமார்
நன்றி:வடக்கு வாசல், பொன் குமார்Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 6/23/2009 10:52:00 pm |
|
1 Comments: |
-
உங்களை காண இவ்வளவு நாட்கள் ஆகியுள்ளதே,வாழ்த்துகள் தோழி.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
உங்களை காண இவ்வளவு நாட்கள் ஆகியுள்ளதே,வாழ்த்துகள் தோழி.