|
Monday, April 20, 2009 |
மூன்றாவது கண்ணியில் தொலையும் முதற் கண்ணியின் இருப்பு |
திலகபாமா
மனித வாழ்வின் அடிப்படைத் தேவை எதுவெனக் கேட்டால் கூசாமல் சொல்லுகின்ற பதில் பணமும் அதற்கான பதவியும் என்றாகிப் போன இருபத்தொன்றாம் நூற்றாண்டிலிருந்து கொண்டு வாழ்க்கைச் சங்கிலிப் பிணைப்பின் தொடர்ச்சியில் இணையும் பணமும் பணியும் இழையின் தொடக்கம் எதிலிருக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
எளிமையாகச் சொன்னால் பணியும் , பணமும் கிடைத்தபின் உடலின் பசி மறக்க , மானம் எனும் உணர்வு காக்க வென்று எழும் அடிப்படைத் தேவைகள் பணியும் பணமும் கிடைத்ததாலேயே நிறைவு பெற்று விடுகின்றதா? இல்லவே இல்லை. பணி கிடைத்தபின் அது தந்த பணம் கிடைத்த பின் வயிறு செரிக்க உணவு தேடி அலைவது கோடீஸ்வரனுக்கும், கோவணாண்டிக்கும் பொதுவாகிப் போகின்ற ஒன்றாகின்றது. ஆதி காலம் தொட்டு இன்றைய அணு ஆயுதக் காலம் வரை முதல் கண்ணி எங்கள் வாழ்தலுக்கான உற்பத்திப் பெருக்கமே , மெல்ல மெல்ல உற்பத்திப் பெருக்கத்தை ஒழுங்கு செய்யவும் ஒருங்கிணைக்கவும் ஒழுங்கமைவுக்குள் கொண்டு வரவும் படிப்படி நிலைகளாக நிர்வாகம், கிளை உற்பத்திகள் அதன் மேம்பாடுகள் என முக்கிய நரம்பு , கிளை பிரிந்து , கிளை பிரிந்து, பரந்து கொள்வது தவிர்க்க முடியாதொன்றாகிப் போக , உற்பத்தி பெருக்கத்தை வழி நடத்த தொடர் கண்ணிகளாக உருவாகிய சேவைப் பணி அமைப்புகள், தன்னைத் தானே முக்கியப் படுத்திக் கொண்டு தொடக்க உற்பத்திப் பெருக்கத்தின் தேவையையே தொடர் காலங்களில் மறக்கடித்து விடுகின்றன. அப்படியான ஒன்றாகத்தான் இன்றைய நிறுவனங்களும் அதன் பணிகளும் மனித வாழ்வை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. நிறுவனங்களும் சேவை அமைப்புகளும் தேவை என்று ஒரு புறம் இருக்க அவை எதை ஒழுங்கு செய்ய தோற்றுவிக்கப் பட்டதோ அதன் மூலத்தையே மறந்து விட்டு தன்னிச்சையாக காகிதங்களில் கையெழுத்தும் ஒன்று கூடலும், செலவினங்களின் கணக்கும் அதற்கான பணம் பெறுதலுமாக முதற்கண்ணியின் தொடர்ச்சியை அறுத்து விட்டு தனித்து பிரம்மாண்டமாய் இயங்கிக் கொண்டு பேர் வாங்கிக் கொண்டு, நடக்காததை சொல்லாததை செய்யாததை தவறுகளில்லை என மறைத்துப் போகின்றன. அரசு சார்ந்த அரசு சாரா என்று எல்லா சேவை அமைப்புகளுமே இன்றைக்கு அப்படியான ஒரு சிக்கலுக்குள் இருந்து கொண்டிருக்கின்றது மேலோட்டமாக பார்த்தால் எல்லலாம சரியாக நடந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் ஒரு புள்ளியில் ஒரே ஒரு சுயநலமி உள் புகுந்து விட்டால் போதும் சுவடே தெரியாமல் அழித்துப் போகும் உள்ளிருந்து கொல்லும் வியாதியாய் மாறிப் போவதும் தவிர்க்க முடியாததாகிறது. புரிந்த மாதிரியும் ஆனால் புரியாத மாதிரியும் தொனிக்கும் இக்கட்டுரை இன்றும் வெளிச்சத்திற்கு வர வேண்டுமென்றால் ஒரு உதாரணமோடு சொல்லலாம்
நான் இருக்கும் சிவகாசி தொழில் நகரம்.குழந்தைத் தொழிலாளர்கள் எனும் கரும்புள்ளியை இன்னமும் அழிக்க முடியாமல் சுமந்திருக்கும் நகரம். இன்றைக்கு சட்டங்கள் கெடுபிடியாய் மாறிவிட்ட போதும் , அலுவலகங்களை விட்டு வெளி வந்து விட்ட குழந்தைகள் வீடுகளில் வேலை செய்வதை எதைக் கொண்டு தடுக்க. வாழ்வியலோடு தொடர்பில்லா தொழிற்கல்வி இல்லா 10ஆம் வகுப்பு படிப்பு பெரிய முன்னேற்றத்தை வாழ்வில் தந்து விடுவதில்லை.மேலும் மீண்டும் பெற்றவர்களோடு சொந்த வயலுக்கு வேலைக்கு போவதையும் தடுத்து விடும் மனநிலையையும் தந்து விட இரண்டும் கெட்டான் நிலையில் அவர்களது வாழ்வு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகிறது அரசாங்கம் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கென்று பலகோடி ஒதுக்குகின்றது. அதற்கென்று தனி நிர்வாக அமைப்புகள் பணி புரிய சேவை ஊழியர்கள் என அதை நம்பியே பிழைக்கும் ஒரு வட்டம் உருவாகியிருப்பது தவிர்க்க முடியாததாகிப் போக அந்த வட்டம் அப்பிரச்சனை தீருவதையும் விரும்ப வில்லை தீர்ந்து விட்டால் தங்கள் இருப்பு தொலைந்து விடும் அபாயமும், கையாலாகாத் தனமும் மனத்தைக் கவ்வ 3 மாதத்திற்கு ஒரு முறை வலிய குழந்தை தொழிலாளர்கள் மீட்பு எனும் செய்தியை கொடுக்கப் பார்க்கின்றது . எதற்காக உருவானதோ அந்த முதற்கண்ணியிலிருந்து அறுபட்டு மூன்றாவது கண்ணியில் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள போலித்தனங்கள் முளைக்கின்றது. பணம் பதவி, பணி இம்மூன்று மட்டுமே ஆதாரமாகக் கொண்டு சேவை அமைப்புகள் மனிதச் சிந்தனையை, மனிதனுக்கான உற்பத்தி பெருக்க சிந்தனையை திசை திருப்பி விடுகின்றன. உற்பத்திப் பெருக்கம் பற்றி கவலைப் படாத பணியும் பதவியும் பணமும் வழி மாறிப் போகும் பயணமாகிப் போகின்றன
சிறுநகரத்திற்கான பிரச்சனை என்றில்லை உலகப் பிரச்சனையான எய்ட்ஸ், வேலைவாய்ப்பு, நீர் நிலை பாதுகாப்பு, பொருளாதாரம், உணவு உற்பத்தி, மனித உரிமைகள் , போரும் வன்முறையும் இப்படி பல்வேறு பிரச்சனைகளை சேவை அமைப்புகள் கையிலெடுத்து முதற்கண்ணியின் இருப்பைத் தொலைத்து விட்டு மூன்றாம் கண்ணியில் அறுபட்டபடி அலைகின்றன.. அந்த அலைதல் சிலருக்கும், பலருக்கும் தற்போதைய வாழ்வாகவும் இருப்பாகவும் இருந்து கொண்டிருக்கும் வரையில் அதோடு திருப்தி படுகின்றவனாகவே மனிதன் இருந்து விடுகின்றான் . உற்பத்தி பெருக்கத்திற்காகவே எல்லா நிர்வாக அமைப்புகளூம், அதற்கான மனோ நிலலகளை உருவாக்கவே சேவை அமைப்புகளூம் என்பதை உணர்ந்து கண்ணிகள் அறுபடாது ஒன்றினைந்து ஊர் கூடி தேர் இழுக்கட்டும் எல்லை வரும் நன்றி http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13039&Itemid=185Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 4/20/2009 01:43:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment