|
Monday, January 19, 2009 |
தூர தேசம் போன நண்டு |
வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும் வாழ மட்டுமே வைக்கும் பூமியாய் எப்பவும் இருக்கும் எம் தாய்த்திருமண்ணின் தை மாதப் பிறப்பில் வாழ்த்தியபடி வணங்குகின்றேன்
கவியரங்கில் தமிழ்ப் பொங்கலிட துவங்குகின்றேன்.
ஆடியிலே பிறந்த மண்ணாய் பச்சை ஆடையின்றி தவழுவாள் முதல் முடி இறக்கியவளாய் நாற்று துளிர் விட பொக்கை வாய் சிரிக்க நடை பயில்வாள்
கெண்டை துள்ள பாத்தியில் அல்லி மொக்கு விரிக்க வரப்பு நீர் கொலுசாய் கிணுகிணுங்க
காற்றில் ஆடும் தாவணியாய் பசுமை அசைந்தாட குமரியாய் ஏற்றத்தின் அசைவில் பந்தாடுவாள்
நரை கூடி குமரித் தோற்றம் தொலைத்த எம் ஔவையாய் எல்லார் பசி தீர்க்க தையில் வீடு வருவாள் நாங்களிடும் படையல் வாங்க
இளமையும் மூப்பும் நாளின் இருபொழுதாய் தாங்கி தினம் தினம் விடியலில் புதிதாய் பிறந்தவள் இன்றெங்கே
பிசைஞ்ச மண்ணெடுத்து பானையாய் சுட்டெடுத்து குத்தலரிசி களைஞ்சு விட்டு பொங்கலாய் பொங்கியவள் குக்கர் விசிலுக்குள் காணாமல் போனதெங்கே
ஏட்டைத் தொட்டவன் எனை மறந்தான்-களத்து பாட்டைப் படிச்சவன் பாவையாய் போனான் நடவு நட்டபடி குனிஞ்சிருந்த உடம்பு திரையைப் பார்த்து குந்தியபடி கரையுது மென்பொருளில் கோட்டை கட்டி மௌசே இயக்கமாகிப் போனது
மனிதன் ஒரு பக்கம் இறுக இயற்கை மறுபக்கம் கருக செல்லாத நாணயமாய் வாழ்வு
வெள்ளம் ஓடிய ஆறுகள் வெள்ளத்தின் போது மட்டுமே விழிச்சிருக்கு
பள்ளம் பார்த்து நிரம்பிய நீர்கள் பள்ளமாகவே விலா எலும்பு காட்டி வாடிக் கிடக்கு
வரப்பு நண்டு ஒன்று தூர தேசம் கிளம்புது
மாறும் வாழ்க்கை மாற்றத்தை மூட்டையாய் தோளில் போட்டு
தேசாந்திரம் போன நண்டு நிறுவனப் படிகளில் ஏறியபடி கேள்வி கேட்குது
அலைபேசி, மகிழுந்து அணு உலை, மென்பொருள் நிறுவனங்கள் மெல்ல மெல்ல விதைக்கப் படுது அயலக பறவைகள் கூடு கட்டவென்று
சூரியனை தொலைத்த குளிர்விக்கப் பட்ட அறைகள் சூரியப் பொங்கலிட ஏன் வேணும்
சக்கரங்களை காலில் கட்டி புகை துப்பி மறையும் வாகனங்கள் மாடுகளுக்கு ஏன் நன்றி சொல்லனும்
சுவர்களுக்குள் சுருங்கி தொலைக்காட்சிக்குள் முடங்கி தொடர்கள் உறவுகளாக மாறி விட காணும் பொங்கலில் ஆற்றங்கரை ஏன் நிறையனும்
கட்டிய அணைகளில் நீர் சிறையிருக்க முடிச்சிட்ட தாலியில் பெண்ணும் சொத்தாக
விளைஞ்ச நெல்லெடுத்து சுட்ட மண்ணெடுத்து புது வெள்ள நீரெடுத்து கரும்புருகிய வெல்லமெடுத்து பொங்கலிட ஏன் வேணும்
தேசாந்திரம் போன நண்டு நிறுவனப் படிகளில் ஏறியபடி கேள்வி கேட்குது புதிது புதிசாய் கேள்வி கேட்குது
உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிட பயங்கரவாதங்கள் பக்கத்தில் அவ்வப்போது பார்த்திட்டோம்
கடல் கடந்த போருக்கு கண்ணீரால் தூதனுப்பினோம் தேர்தலும் ஒரு வெள்ளாமையாக தார் பாய்ச்சி கட்டிய வேட்டி தரை புரள ஜிப்ஸி ஏறி கூப்பிய கையோடு போனோம்
நிறுவனப் படிகளின் குளிரில் ஆயிரமாயிரம் அறிவியல் அதிசயங்கள் உலகத்திற்கே போட்டியாய் விளைய எட்டுக் கையிலும் அலைபேசியோடிருந்த நண்டு சிறு வயிறு பசியெடுக்க பத்தும் பறந்து கிறங்கி விழ புதுப் பதில்கள் உரைக்குது
அவரவர் வட்டில் சோறு அவரவர் முன்னிருக்க சமாதானமும் சந்தோசமும் நிறைஞ்சிருந்தது அது அந்தக் காலம்
பண்டங்களுக்கு பண்டமே மாற்றாக பணங்களே விலை போனது அது அந்தக் காலம்
ஆக்கிரமிக்கவும் , அடங்கிடவும் ஆளின்றி விடுதலையே வாழ்வாகியிருந்தது அது அந்தக் காலம்
ஒரு வட்டில் சோறு இருவர் முன்னிருக்க குரங்கு உபாயங்கள் முளைச்சிடுது சோறு விளைவித்த மண் மண் கையிலெடுத்திருந்த பெண் பெண்ணை கொண்டாடிய ஆண் முதல் அதிகாரமும் அடிமையும் முளைவிட்டது
ஒரு வட்டில் சோறு நால்வர் முன்னிருக்க அணி பிரிந்து ஆள் சேர்த்து போர் முன்னெடுப்புகள் துவங்குது
காலம் பார்த்து கற்ற நண்டு புதுக் கீதை சொல்லுது பார்த்தன் இன்றி தேரும் இன்றி பைபிள் எழுதிப் போகுது கன்னி மரியுமின்றி, உயிர்த்தெழுதலுமின்றி குரானும் வாசிக்கப் பழகுது
படிச்சவனெல்லாம் பார்க்கவேணும் தொலைக்க முடியா தொழில் விவசாயமுன்னு நினைக்கவேணும்
முப்பாட்டன் குடுமியாகவும் இல்லாம நவீன பங்காகவும் மாறாம மென்பொருள் அறிவையும் விளை பொருளுக்கு கொண்டு வரவேணும்
பழம் பெருமை பேசும் திண்ணைகள் அழிய புதுப் பெருமைகள் பிறக்க வேணும்
பேயாத மழையில் பயிர்கள் மாட்டுத் தீவனமாக பேய்ஞ்சு கெடுத்த மழையில் எதுவுமில்லாதாகிப் போக கோவணாண்டியாய் நின்ற விவசாயிக்கு புத்தாடை தரும் நிலமாய் பருத்தி புடவையாய் காய்க்க வயக்காட்டை மாத்த வேணூம்
அதிகாரம் தொலைத்த நிறுவன அறிவுகளை விதை நெல்லா மாத்த வேணும் வரப்புகள் தொலைத்த வயக்காட்டுப் பரப்புகளை பெருந்தொழிலாய் இளைஞன் கையிலெடுக்க வேணும்
கார் தொழிற்சாலைகள் விவசாய கருவிகளை வடிவமைக்கட்டும்
அணு உலைகள் பேயாத மழையிலும் பெருகும் விளைச்சலுக்கும்
பேஞ்ச மழையிலும் நிறையும் குளத்துக்கும் அடி கோலட்டும்
நாலு வழிச் சாலைகள் நகரங்களை மட்டுமன்றி மனிதர்களின் உழைப்பை இணைக்கட்டும்
வயிறு நிறைஞ்சா பூர்வ குடியா, புலம் பெயர்ந்தவனா சண்டையிருக்காது
வயிறு நிறைஞ்சா உன் நாடு , என் நாடு பிரித்தலுமிருக்காது
வரைபடக் கோடுகள் நிர்வாகத்திற்கேயன்றி மனிதனின் நினைப்பிலிமிருக்காது
தனித்துவங்கள் பெருமைக்கா, பொதுமைக்கா குழப்பமிருக்காது
வயிறு நிறைஞ்சா சயனைடு தாலி கட்டி தீவிரவாதம் தேடித் திரிய நினைப்புமிருக்காது
வயிறு நிறைக்க மண்ணிருந்தா அதை உழைப்பில் நிறைக்கும் மனமிருந்தா பயிரு வளர்க்கும் திறமிருந்தா அதை பகிர்ந்து உண்ணும் தீர்க்கமிருந்தா
பழசும் புதுசும் இணைஞ்சிருந்தா அதை பழக்கும் பொது அறிவிருந்தா இளமை முதுமை பகிர்தலிருந்தா அதை கலக்கும் பக்குவம் அறிந்திருந்தா
உன்னை ஜெயிக்க உலகம் ஜெயிக்க ஆசை வராது தன்னை பெருக்க, தண்ணீரும் அடக்க தேவை வராது ஆயுதம் பிடிச்சு, ஆளை அழிக்கும் அறிவும் வராது பெரியோரென்றும், சிரியோரென்றும் பேதம் வராது
வயிறு சொன்ன வேதமுணர்ந்த நண்டு மண்ணில் இறங்குது கதிரறுப்பின் பின் பொங்கலிட கனவு காணுது அதன் விதைப்பில் மணியாக வாழ்க்கை விளையுது
கவியரங்கில் தமிழ்ப் பொங்கலிட தானும் கிளம்புதுLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 1/19/2009 04:04:00 pm |
|
2 Comments: |
-
என்னங்க.. எதாவது கவியரங்கத்துல கவிதை வாசிக்க எழுதியதா?
வார்த்தைகள்லாம் ரொம்பவே நல்லாருக்குங்க....
வாழ்த்துக்கள் தோழி!
-
ஆமாங்க கவியரங்க கவிதைதான். வானொலி நிலையத்தில் வாசித்தது.நன்றி
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
என்னங்க.. எதாவது கவியரங்கத்துல கவிதை வாசிக்க எழுதியதா?
வார்த்தைகள்லாம் ரொம்பவே நல்லாருக்குங்க....
வாழ்த்துக்கள் தோழி!