சூரியாள்

Wednesday, November 12, 2008
சுருட்டப் பட்ட வீடும், விரிக்கப் பட்ட மைதானமும்
(உயிர் எழுத்து இதழில் வெளி வந்த சிறுகதை)
சுருட்டப் பட்ட வீடும், விரிக்கப் பட்ட மைதானமும்

திடப் பொருளென சொல்லப் பட்ட அறைச்சுவர்கள் நெகிழ்ந்து வித வித வடிவங்களெடுப்பதை என்றாவது சந்தித்ததுண்டா நீங்கள்? அடிக்கடி அப்படியான விநோதங்களுக்குள் திமிங்கல முழுங்களாய் நான் போக நேர்ந்து விடுவதுண்டு. துளியும் சேதாரமின்றி விழுங்கி பயணப் பட வைத்து அந்த அறைகளென சொல்லப் பட்டவைகள் எனைச் செரிக்காமல் துப்பி விடுவதும் உண்டு.

இதோ இந்த இருவர் விளையாட்டுகளில் நாலு சுவர்களுக்குள்ளான இந்த மையக் கூடம் விநோத உருவங்களாக அவர்கள் நினைக்கின்ற வடிவமைக்கின்ற எல்லாமாகவும் மாறிய படி இருந்தது. சமையலறையிலிருந்த என் தாளிப்புச் சத்தங்களோ, குழாயில் தண்ணீர் வரும் சப்தமோ குக்கரின் கூவலோ அவர்களை அவர்களின் உலகம் விட்டு தரையிறக்குவதே இல்லை. இது பள்ளி விடுமுறை. அடுத்த வருடம் தொட்டு பெரியவனின் இந்த வெளி புத்தகங்களுக்குள் அதன் எழுத்துக்களை எண்ணச் சொல்லி சிறைப்பிடிக்கப் படலாம் அரசாங்கத் தேர்வை முன்னிட்டு. அவன் திறமைகள் வெறும் எண்களாலேயே வாசிக்கப் படலாம்.அவன் எதிர்காலங்கள் அந்த சிறையிருப்பை அவன் சரியாகச் செய்து முடித்து நன்னடத்தை சான்று வாங்கி வெளிவருவதை முன்னிட்டு வாழ்வின் முக்கிய திருப்பமாக மாறக் கூடும்

விரும்பியோ விரும்பாமலோ கூடிருப்புக்குள் அவனைத் தள்ளியாக வேண்டிய நிர்ப்பந்தம் கொஞ்ச காலம் அவனது பரந்த வெளியை மறக்க வைக்கக் கூடும்

இதோ என் சிந்தனைகள் அவ்வப் போது இடைவெட்டினாலும் காதுகள் அடுத்த அறையினில் அவர்களது உரையாடலில் உருவாகிய உலகத்திற்குள் எனையும் இழுத்துப் போட்டுக் கொள்கின்றது.
நாற்காலி கவிழ்த்திப் போடப் பட்டு விண்வெளி பயணத்துக் காணதாய் மாறியிருக்க இல்லாத எதிரிகள் அறையெங்கும் நிறைய, நாலாபக்கம் என் சமையலறைக் கரண்டிகள் குண்டு துப்பும் துப்பாக்கியாகி மோதி சிதறடித்துக் கொண்டிருந்தது. அறை வான வெளியாக இருவரும் மிதந்து கொண்டிருந்தார்கள். புதிது புதிதாய் சாகசங்களை நிகழ்த்தத் தேவையான எதிரிகளை வலுவான சிலநேரம் பலமற்ற எதிரிகளை தாங்களே உருவாக்கிக் கொண்டு அதன் வலைக்குள் வீழ்ந்து செய்வதறியாது திகைத்து புதிய ஆயுதங்களையும் இரகசியங்களையும் கண்டு பிடித்து பலம் பெற்று மீண்டும் யுத்தம் நடத்தி எல்லாம் சிதறடித்து தரையிறங்கினார்கள். சின்னவனுக்கோ இறங்கிய பிறகு சந்தேகம் எழுந்தது. இன்னமும் ஒரு எதிரியை விட்டு விட்டு வந்ததாக மீண்டும் களமேறி பறந்தான். நாற்காலி இருந்த இடத்திலேயே இருக்க அவன் எதிரியின் இடத்திற்கு போய் சேர்ந்து தீர்த்து விட்டு வெற்றியின் களிப்பும் போரின் சோர்வும் முகத்தில் அப்ப தரையிறங்கினான். இறங்கிய இடமெங்கும் புழுதி பறக்க அதற்குள்ளிருந்து மெல்ல அவன் வெளிப்பட்டான்.
பருப்பு குக்கர் விசிலடிக்க , தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நான் அடுப்பை குறைத்து வை குமார் என்று சொல்ல , அவனோ தான் அடுத்த தாக்குதலுக்கு தயாராயிருப்பதாய் சொல்லி தம்பியை அடுப்பை குறைடா செல்வம் எனச் சொல்ல , அவனோ புதிய எதிரி மீண்டும் கண்ணில் தெரிவதாயும் எதிரியின் தாக்குதலில் தன் களம் நிலை குலைவதாயும் சொல்லி மீண்டும் அறையை விண்வெளியாக்கி மறந்து போக நான் வீட்டின் தரையிருந்து பிடுங்கிக் கொள்ள முடியா வேரோடு , தொலைபேசியை காத்திருக்கச் சொல்லி விட்டு அடுக்களைக்குள் பாய்ந்தேன். அடுப்பின் கோபம் குறைத்து , வாசுகி காலம் தொட்டு நான் விட்டு வந்த இடத்திலேயே நின்றிருந்த தொலைபேசியோடு தொடர்ந்தேன்.

எனது உரையாடல் முடித்து வெளியேற இதுவரை பால் வெளியாய் , கருந்துளையாய் இருந்த வெளிகள், போரின் எச்சங்களை சுமந்ததாய் இருந்த அந்த வெளி தூள் தூளாகியிருந்தது. விண்வெளிக் கலங்கள் கழிந்து கிடந்த . சனிக் கிரக குப்பைகள் சுமந்த வளையமாய் வீடு சுழன்று கொண்டிருந்தது, இப்பொழுது வாகன இரைச்சல் எங்களது முக்கிய படுக்கையறைக்குள்ளிருந்து கேட்டது. இரைச்சலோடு, புகையின் திணறுலுமாக நிரப்பியது அந்த அறையை வாகனங்களின் துடிப்பும் சுவாசமும். படுக்கை கார்களின் ஓடு தளமாயும், தலையணைகள் அவை ஏற முடியா சாகச மலைக் குண்றுகளாகவும் மாறியிருந்தன.நல்ல நிலையிலிருந்த சில கார்களும் சில டப்பாக்களும் போட்டிக்குத் தயாராகியிருந்தன . என் குரல் அவர்களைத் துரத்துகின்றது .
“ ரெண்டு பேரும் வீட்டை தலை கீழா கவுத்து விட்டு போனா என்ன அர்த்தம்
அதது இடத்துல வையுங்கடா”
என் குரல் அவர்களைத் துரத்தியதில் தோற்றுப் போய் பின்தங்க கார்களின் இரைச்சலில் கரைந்து போகின்றது அவர்கள் உலகத்தை தொட்டு விட முடியாமலேயே.

எல்லாக் காயும் நறுக்கி முடித்திருக்க கை துடைக்க துண்டெடுக்க வெளி வந்த நான் விண் வெளியாக இருந்த மையக் கூடத்தை மீண்டும் வீடாக்கி விட்டும் போகின்றேன்.
என் சின்ன சின்ன பொருட்களின் இடமாற்றங்களில் இதுவரை பால்வெளிப் பாதையாக இருந்த கூடம் , பளிங்கு சுமக்கும் அறையின் மூச்சு முட்டும் வெளியாய் மாறிச் சுருங்கிக் கொள்கின்றது. என் அழுத்தப் பிழிதலில் அறைவிட்டு வெளித் தள்ளப் பட்ட பிள்ளைகளின் உலகு வெள்ளமென மாறி வெளியே ஓடுகின்றது.

*
இன்னும் ஒரு நாளை நீங்கள் எங்களோடு செலவிடத் தயாராகின்றீர்கள்.
காலையிலேயே வீடு இன்று அவர்களுக்கானதாய் மாறத் தயாராகியிருந்தது.கூடத்தில் வந்தவர்கள் அமரவென்று போடப் பட்டிருந்த மெத்தை நாற்காலிகள் பதுங்கி இடந்தரத் தயாராயின. ஆடுவதற்கென்று போடப் பட்ட நாற்காலி ஆடாமல் நிறுத்தி வைக்கும் வசத்தில் ஒதுக்கப் பட்டிருந்தது. உடையும் பொருட்கள், வீடு மைதானமாகிக் கொண்டிருப்பது உணர்ந்து தாங்கள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல என தங்களை அடுத்த அறைக்குள் நகர்த்திக் கொண்டன.இருவரும் ஒவ்வொருவரும் 11 பேருக்கும் சமமாய் தன்னை விரித்துக் கொண்டார்கள் ஆடுகளத்தின் பரப்பு அறை சுவர்களில் பட்டு அதன் மேலேறி விரிந்தது ஒரு பக்க சுவர் ஸ்டெம்ப் ஆகியிருக்க, 2 ஓட்டங்களுக்கு ஒரு எல்லையும் 4 ஓட்டங்களுக்கு ஒரு
எல்லையும் 6 ஓட்டங்களுக்கு ஒரு எல்லையும் என ஓடாமலேயே ஓட்டங்கள் சாத்தியமாக புதிய எல்லைகள் குறிக்கப் பட்டு விளையாட்டு சட்டமாகின,

நான் மைதானத்திலிருந்து சமையலறைக்குள் போய் விட்டு மீண்டு வரும் போது 6 நபர்கள் ஆட்டம் விட்டு வெளியேறி 150 வது ஓட்டம் ஓடப் படாமலேயே ஒருவன் கணக்கில் ஏறியிருந்தது. இருந்தது ஒரே பந்து . பந்து தீரப் போவதாய் செல்வம் சொல்கின்றான். அடுத்து அவன் தீர்த்து போன பந்தை குமார் மீண்டும் வளர்த்து முதலிலிருந்து வீசத் துவங்குவான்.
நானோ படுக்கையறையில் நேற்றைய அழுக்குகள் துவைத்து உலர்த்தப் பட்டிருந்ததை மடித்து அவற்றின் பரப்பினை குறைக்கும் முயற்சியில் மூழ்கிப் போகின்றேன். தீர்ந்து விட்டதாய் நினைத்த அழுக்குகள் படுக்கை மேலே துவைத்து உலர்ந்த உருப்படிகளாகி இடத்தை நிரப்பியிருந்தன. மடிக்க மடிக்க அது தன்னைச் சுருக்கிக் கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றது. நாளை இவையே மீண்டும் விஸ்வரூபமெடுத்து தீராத அழுக்குகளாய் கூடை நிரப்பும். மடித்த ஒழுங்கிலில்லா ஆடைகள் அலமாரிக்குள் தங்களைப் புதைத்துக் கொண்டன. அடுக்கப் பட்ட அவை பல்வேறு வர்ணங்களில் வரிசைக் கோடாய் மாரித் தெரியத் துவங்க , மீண்டும் மைதானத்துள் இடை குறுக்கிட வேண்டி யிருந்தது.சொல்லிப் போகின்றேன்.
“திருப்பி வீடா மாத்தி வைக்கலை பாத்துகுங்க”

பறந்து வந்த பந்து மட்டையில் பட்டு சுவரில் தெறிக்கின்றது. இதுவரை இருவருக்குள்ளும் இருந்த நடுவர் காணாமல் போய் விட்டாரா என்ன? ஒரே சல சலப்பு

நான் குச்சி மாரும் , பினாயிலும் கையிலெடுத்து இன்னொரு திசை வழி மைதானத்தை ஊடுருவுகின்றேன்.கழி வறைக்குள் திருகி விட்ட தண்ணீர் என் காதுகளில் நிரம்பி வழிய முழுக்க அதன் சுவராகி மட்டும் போகின்றேன்.தண்ணீர் ஈரத்தில் விடியலில் கழுவிய முகமாய் புதிதாய் காட்சி தர , கதவைத் திறந்து பினாயில் வாசம் அறையெங்கும் நழுவ விட்டு வெளியேற மைதானத்தை கடக்க நேருகையில் மைதானம் ஆளற்றுக் கிடக்கின்றது.படுக்கையில் குமாரும் செல்வமும். குமாரது கைகளில் ஹாரி பாட்டர் தடிமனான புத்தகம் அவன் நெஞ்சில் உட்கார்ந்திருந்தபடி சாய்ந்து நிற்கின்றது.செல்வமோ குப்புறப் படுத்திருக்கின்றான். முதுகு குலுங்கிக் கொண்டு இருக்கின்றது.கையிலிருந்ததை அதது இடங்களில் செருகி விட்டு மீண்டும் ஆளற்ற மைதானத்தைக் கடக்கின்றேன். என்னாச்சு என் கேள்விக்கு பதில்களற்று கிடக்கிறது படுக்கை. சுருட்டப் பட்ட கம்பளத்திற்குள் என் வீடு மூச்சுத் திணறி கிடக்கின்றது அதன் திணறலின் சப்தம் என்னுள்ளேயிருந்தும் கேட்டுக் கொண்டிருந்ததால் மைதானம் முழுக்க 100 பந்துகள் பட்டுத் தெறிப்பது போல் மனம் பதறி தப்பிக்க முயலுகின்றது. எல்லாப் பந்துகளையும் நிறுத்தி விட என்னில் முளைக்கின்றது நூறு கைகள்.ஆனால் அவை தரையில் பட்டுத் தெறித்த பந்துகளின் ஓசை காதுகளில் அறைய வேறு வழியின்றி மைதானத்தை வெளித்தள்ளி வீட்டை விடுவித்து கம்பளத்தை நடுவில் விரித்து , நானும் அதன் மௌனத்தில் எனை கரைத்துக் கொள்கின்றேன்

Labels:

posted by mathibama.blogspot.com @ 11/12/2008 08:28:00 pm  
2 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates