இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்
இணைய தளத்தில் எனக்கோர் தகவல் கணிணி வழியாக அனுப்பப் பட்டிருந்தது. அது பலருக்கும் அனுப்பட்டிருந்த தகவல்.அதிகாரத்திற்கு எதிரானவர்களின் கவனத்திற்கு ,அதுவும் பெண் படைப்பாளிகளின் கவனத்திற்கென்று தொட்டவுடன் அது மற்றொரு பக்கத்திற்கு அழைத்துச் சென்றது, அதில் காட்சிப் படங்கள் உறைந்து கிடந்தன. என் கணிணி விரல் தொட உயிர்த்துத் தொலைத்தன. போர் உடையில் துப்பாக்கிகள் மட்டுமே தருமமாய் இருந்தவன் பெண் சவத்திலிருந்து ஆடையை உரித்து விட்டு பார்த்து மகிழ்ந்ததை வெற்றிக் களிப்பாய் காட்சிகள் வர்ணத்தில் வந்து போயின.போர் முனையின் குருதி நுகர்வில் வாழ்ந்து தொலைப்பவர்களின் அன்றாடம் ஆகிப் போன மனதின் வக்கிரங்களை காட்சிகள் சாட்சிகளாக்கிப் போயின. அதிகாரத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கும் தருவாயில் செத்து வெறும் உடலாகிப் போன மனிதத்தைக் கூட பெண்ணாக மட்டுமே , பெண் உடலாக மட்டுமே பார்த்துத் தொலைக்கும் மிருகங்களுக்கும் இல்லாத வக்ர குணம் எரிச்சலூட்டிப் போக இன்னொரு எரிச்சலும் சேர்ந்து எழும்பியது.
அதிகார வெற்றிக் களிப்பில் எந்தத் தளத்தில் பெண் உடலை வெறியாட்டம் பயன்படுத்தியதோ , அதையே கண்ணீரோடும் கம்பலையோடும் அவன் செய்து விட்டானே என்ற புலம்பலோடும் அதே பெண்ணை வெறும் உடலாக இன்னொரு பக்க புலம்பலுக்காக எம்மவரும் பயன்படுத்திக் கொண்டிருப்பது இன்னும் எரிச்சலூட்டியது அதிகார வெறியார்களுக்குத் தான் இன்னொரு இனப்பெண்ணை கேவலப் படுத்தி, அப் பெண் உடலைக் கையிலெடுத்துச் சீரழித்துப் போட்டு படமாக்கி அவ்வினத்தவரையே கேவலப் படுத்தி விட முடியுமென்று தோன்றுகிறது என்றால், அதே படத்தை தன் இனப் பெண்ணாக இருந்த போதும் அதிகார வெறியர்களை வெளியில் போட்டு உடைக்க தன் பெண்களையே அவர்கள் உடலை நிர்வானப் படுத்திய காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள முடியுமா? காட்சிகளை மறைத்து விட மனம் பதைக்காதா? அக்காட்சிகளின் மூலம்தான் எதிராளியின் இன வெறியை காண்பித்துக் கொடுக்க முடியுமென்றால் , அரிப்பு புண்ணாகும் அளவுக்கு சொறிந்து விடுவதுதான் தீர்வு என்பது போலல்லவா ஆகி விடுகின்றது.இதே காட்சிகளில் தன் சொந்த சகோதரி , தாயின் உடலாயிருந்தால் இவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியுமா?இதில் வேடிக்கை என்னவென்றால், இதே சகோதரி தாய் எனும் வசனத்தை காட்சிகளைக் காட்டிப் புலம்புபவர்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தன் தாய், சகோதரி என்றால் இனவெறி அரசாங்க நபர்கள் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பும் போதே அதே படத்தை நாமும் பாவிக்கிறோம் என்ற அறிதல் ஏன் இல்லாமல் போனது? ஒட்டு மொத்தத்தில் எந்த ஒரு சுதந்திரப் போராட்டங்களும் , விடுதலைச் சிந்தனைகளூம் கூட ஏன் தன் சக பெண் இனத்தை அவளை உடலாக பயன்படுத்திக் கொள்ளும் பழைய ஆண்டான் அடிமைச் சிந்தனையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்லவே இல்லை. அப்படி விடுவித்துக் கொள்ளாதது அடிமைச் சிந்தனை காடுகளை அழித்த போதும் அதன் விதைகளை மண்ணோடு உறைய விட்டது போலல்லவா ஆகி விடும். மீண்டும் அது ஒரு சாரல் மழையில் அவை தழைத்து விடக் கூடுமல்லவா
பிடித்து விட்ட புலி வாலாய் போரும் வன்முறையும் ஆதிக்க மனோ நிலையை நோக்கியே நகன்றபடி இருக்கின்றது. அன்பை நேசத்தை நோக்கி நகற்றுவதே இல்லை மனிதர்களை என்று எப்போவாவது உணர்ந்திருப்போமா?
பெண்ணியச் சிந்தனையைச் சொல்லி ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தைக் குறை சொல்வதா? என்ற கேள்வி இதன் தொடராக வரும் என்பதையும் என்னால் அவதானிக்கவே முடிகின்றது. ஆனால் போராட்டத்தை ஒரு கால கட்டம் வரைக்கும் மதித்திட்ட போதும் , குறை கண்டவிடத்து சொல்லித் தானே ஆகவேண்டும். அதிவும் அதிகாரத்திற்கு எதிரானவர்களுக்கான, பெண் படைப்பாளிகளின் கவனத்திற்கென்று குறிப்பிட்டு அனுப்பும் போது, அப்படங்களை உபயோகப் படுத்து முன்னர் இதையும் சேர்த்து சொல்லித் தானே தீரனும். உண்மைகளை உடைக்கின்ற அவசரத்தில் பெண்ணை உடலாக பாவித்து விட்டதை இன்னது செய்கிறோமென்று அறியாமல் செய்து விடுகின்றார்கள்
பாரதி சொல்லுவான் பெண் அடிமையுற்றால் பிள்ளைகளும் அடிமைச் சிந்தனையில் தானே வளரும் என்று இது சின்ன விடயம் அல்ல. சத்தியமான உண்மை ஒரு விடுதலை எண்ணம் எல்லாருக்குமான விடுதலை எண்ணமாகவும் உருமாறாது போனால் தொடர் இயக்கத்தில் விடுதலை இயக்கங்களிம் இன்னுமொரு ஆதிக்க மனோபாவம் கொண்ட அதிகார மையமாக உருவாகுமே அல்லாது மனிதருக்கான விடுதலையாக மாறுவது சாத்தியமில்லை என்பதை நம் முன்னே நடந்து கொண்டிருக்கின்ற அழிவுகள் சாட்சியமாக்கிக் கொண்டிருக்கின்றன.
Labels: கட்டுரை |
எம்.ஏ.சுசீலா,
அன்பின் திலகபாமா, மிகக்கூரிய அவதானிப்பு.உண்மையை உடைப்பதற்காகக்கூடப்பெண்மையைக்கொச்சைப்படுத்தலாகாது என்று எழுதிய உங்கள் துணிவைத்தலை வணங்கி வாழ்த்துகிறேன்.பிரியங்களுடன்,சுசீலாI cannot post comments directly