இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்-2
சின்ன உலகங்களைத் தின்னும் பெரிய உலகங்கள்
ஒரு மனிதம் காக்கப் படுவதற்காக எடுக்கப் பட்ட போராட்டமெனினும் அப்போராட்டம் தொடர்கின்ற காலகட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ கேட்டது கிடைப்பதற்கான வழி வகைகள் மறக்கப் பட்டு வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் படுவதற்கான தருணம் மட்டுமே கவனத்தில் உறைந்து விடக் கூடிய அபாயம் அதிகார மையத்துக்கு மட்டுமன்றி ஒடுக்கப் பட்ட போராட்ட மனத்திற்கும் ஏற்பட்டு விடுகின்றது என்பது துரதிர்ஷடமான உண்மையாகிப் போகின்றது. ஒரு முறை மதுரையில் நடக்க விருந்த இலக்கியக் கூட்டத்திற்கு அழைப்பிதழில் என்பெயரையும் சேர்த்துக் கொள்வதாய் நண்பர் சொல்லிய போது கூட்ட ஏற்பாடுகள் ,அழைப்பாளர்கள் பற்றிய விபரம் கேட்டேன். யாரின் மேலும் எந்த கருத்தோட்டத்தின் மேலும் எனக்கு விரோதம் இல்லை என்ற போதும் புரட்சிகள் போலவும் நவீனங்கள் போலவும் நடிக்கும் நபர்களிமிருந்தும், கூட்டத்திலிருந்தும் எனைத் தள்ளியே வைத்திருக்கின்றேன் இப்பொழுது வரைக்கும். எனவே அவர் சொன்ன அழைப்பாளர்களும் கூட்ட ஏற்பாடு முறைகளும் திருப்தி தராததால் அழைப்பிதழில் என் பெயர் வேண்டாம் என்றேன் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவதும் விருப்பமின்மையும் தனிப்பட்ட விசயங்கள் தானே நபரோ அக்கூட்டத்தில் என் பெயர் இருப்பது எனக்குப் பெருமை என நான் நினைக்க வேண்டுமென எதிர்பார்க்க நான் தவிர்த்தேன். எவ்வளவோ அழுத்திச் சொல்லியும் அழைப்பிதழில் என் பெயர் இடம் பெற்று விட்டது- முதல் தவறு அடுத்த தவறு நிகழ்ச்சி அழைப்பிதழ் ஊரெல்லாம் போய்ச் சேர்ந்த பின்னும் எனக்கு இறுதிவரை அனுப்பப் படவே இல்லை.நண்பர்கள் சிலர் அழைப்பிதழில் பெயர் இருக்க ஏன் வரவில்லை என தொலைபேசிக் கேட்டனர்.நானோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும், பெயர் போட நான் மறுப்பு சொன்னவரிடமும் என் அனுமதி இன்றி பெயர் போட்டதை நிகழ்வில் தெரியப் படுத்துவது அவசியம் என்று சொல்கின்றேன்.வலியுறுத்துகின்றேன் என் தொலைபேசித் தொந்தரவு தாங்க முடியாது ஏற்பாட்டாளர்களும் பெயர் மறுத்த பின்னும் “நட்பின் பெயரால்” என் பெயரை உரிமையோடு போட்டவரும்(?) அழைப்புகளைத் தவிர்த்தனர். “பெயரெல்லாம் ஒரு பிரச்சனையா” என்ற உணர்வுகளை தட்டையாக்கும் கேள்விகளுக்குப் பின்னரும் இவர்கள் தங்கள் விருப்பங்களுக்காக அடுத்தவர் உணர்வுகளை சிதைக்கின்றதை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம் எனக்கு. இன்னும் அந்த கோபமே தீருவதற்குள் சமீபத்தில் பேராசிரியர் சுந்தர் காளி இலங்கைத் தமிழருக்காக நடக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழில் உங்கள் பெயரைப் போட்டிருக்கின்றேன் என்று தொலைபேசிச் சொன்னார். நமக்கும் உடன்பாடான பிரச்சனைதான். போருக்கும் அதிகாரத்திற்கும் எதிரான மனோ நிலைதான் எனக்குள்ளூம். ஆனால் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவுதான் என்ற போதும் கேட்காமல் ஏன் போட்டீர்கள் என்று கோபிக்க முட்யவில்லை.
இப்பவும் அடுத்த தவறும் நிகழ்கின்றது. போட்டது தான் போட்டார்கள் அழைப்பிதழையாவது அனுப்ப வேண்டாமா? என்ன நிகழ்வு எங்கு? யார் யார்? என் பங்கு என்ன? தெரிந்து கொள்ள
அனுப்பவில்லை. அதற்கும் காரணம் சொன்னார்கள். திடீர் ஏற்பாடுகள் அனுப்ப முடியவில்லை என்று . ஆனால் பலருக்கும் அழைப்பிதழ் கிடைத்திருக்கவே செய்திருக்கின்றது.மேலும் கவிஞர் ஜெயபாலன் வரமுடியாது நிகழ்வுக்கு அவர் தந்தை இறப்புச் செய்தியால் அவர் கவிதையாவது வந்து வாசியுங்களேன். நீங்கள் தானே அவரது தோழி என்று
அப்போ நான் அழைக்கப் பட்டதன் காரணம் கவிஞர் என்பதாலா அல்லது ஜெயபாலன் தோழி என்பதாலா? ஜெயபாலன் தோழி என்பதால் என்றால் எப்படி அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியும். கேள்விகள் தோன்றி முடியுமுன்னரே தொலைபேசி உரையாடல் முடிந்து விட்டது.
ஜெயபாலனிடம் நான் தொலைபேசிக் கேட்கின்றேன்.அவர் போகப் போவதாய் எனக்குத் தகவல் கிடைக்க பெயர் போடுவதின் பின்னால் மௌனமாக சிதைபடும் உணர்வுகளச் சொல்கின்றேன். இலங்கைப் பிரச்சனை இன்றைய trend ஆகிப் போனதின் சலிப்பையும் சொல்கின்றேன். உணர்வு ரீதியான ஒரு பிரச்சனையை பொருளாக்கிப் போட்டதின் அபத்தமும், பண்டமாக்கியதன் பயன்பாட்டுக்கே எல்லார் “தமிழன்” உணர்வயும் தக்க வைத்துக் கொள்ளும் அபாயத்தையும் பேச , எதையும் கேட்க திராணியற்று ஒற்றை வாக்கியத்தில் “ திலகபாமா உங்களது உலகம் சின்னது எங்களது உலகம் பெரியது உங்களுக்குப் புரியாது” என கோபம் தெறிக்க வார்த்தை வருகின்றது. என் உலகம் உனக்கு சின்னதாய் தெரியும் போது உங்கள் உலகமும் எனக்கு சின்னதாய் தெரிய வாய்ப்பிருக்கிறது தானே
ஒரு கிராமத்து ஆணாதிக்கவாதியும், சாதாரண பிரஜையுமானவன் வாயிலிருந்து வரும் “ பொம்பளைக்கு என்ன தெரியும்” எனும் வசனத்திற்கும், நிவேதிதாவிடம் மனைவி வந்து என்ன செய்யப் போகிறாள் என்ற கேட்ட பாரதியின் கேள்விக்கும், இன்றைய வ.ஐ.ச. ஜெயபாலன் கேள்விக்கும் எனக்கொன்றும் வித்தியாசம் தெரியவில்லை.
இன்று எல்லா பொது விடயங்களிலும் ”தன் முனைப்பு” கூடி விட்டது பிரச்சனைகளை முன்னிறுத்தி சரி செய்யும் மனநிலையை விட பிரச்சனையைச் சொல்லி தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் மனப் பான்மைதான் எங்கெங்கும் தீப்பிடித் தலைகின்றது.இதைச் சொல்கையில் மிக எளிதாக என்னையும் இந்த குற்றச் சாட்டுக்குள் தள்ளி விடக் கூடிய சாத்தியம் எதிராளிக்கும் இருக்கும் எனும் புரிதலோடு தான் தவிர்க்க முடியாது இந்த உரையாடலுக்கு வருகின்றேன். இலங்கை தமிழர்க்காதரவான படங்கள் , போர் நிறுத்ததைக் கோரும் கூட்டங்கள் போராட்டங்கள், அமைதிக்கான project எடுத்து பணி செய்யும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் இன்றைய இருப்பின் இழப்பை விரும்பாமல் எப்பவும் பிரச்சனைகளை நீடிக்கின்ற காரணிகளாக மாறி விட்டனரோ என்ற ஐயப்பாடும் நீடிக்கவே செய்கின்றது.
நீண்ட கால தீர்வுகளை பேசத் தயாரில்லை பெரிய உலகங்கள். சின்ன உலகங்களை தின்று விடும் பெரிய உலகங்கள் தொடர் பயணத்தில் சின்ன உலகங்களை எப்படி நிராகரித்ததோ, தின்று வளர்ந்ததோ அதே நிராகரிப்புக்கு , தின்னுதலுக்கு தன்னையும் காவு கொடுக்க வேண்டி வரும் என்பதை இன்று கண்டு கொண்டிருக்கின்றன. அடங்க மறு திருப்பி அடி என்ற வசனங்கள் புரட்சி போல தோன்றினாலும் திருப்பி அடித்த பந்தாய் நமை நோக்கியே திரும்ப வரும் என்பதைச் சொல்லும் தன்முனைப்பில்லாத நிர்வாகத் திறமை உடைய தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை.
வன்முறை வழித்தடம் சின்ன சின்ன உலகங்களைத் தின்று எப்பவும் தன்னை பெரிதாக்கிக் காண்பித்துக் கொண்டு ஒரு கட்டத்தில் எந்த அதிகாரத்திற்கெதிராக அது கிளம்பியதோ அதே அதிகாரமாக மாறிப் போனதின் சாட்சியங்களையும் அதன் அழிவின் துயரங்களையும், சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
சின்ன உலகத்திற்கும் , பெரிய உலகத்திற்கும் பசி ஒரு சாண் வயிற்றில்தான். உயிர்கள் வதைபடுவது கண்ணுக்குத் தெரிவதாலேயே அது பெரிய உலகமாகவும், உணர்வுகள் வதைபடுவது தெரியாததாலேயே அது சின்ன உலகமாகவும் எப்படி அறிவார்ந்த பெருமக்கள் சொல்ல முடிகின்றது.உணர்வுகளின் சிதைவுகள் சின்ன உலகமல்ல, என உணரும் நாளில் எல்லாருக்குமான மகிழ்வான தருணங்கள் விடுதலையென சாத்தியமாகும்
தனிப்பட்ட உரையாடல்களை பொதுவில் நான் எப்பவும் சாட்சியமாக்க விரும்புவதில்லை.காரணம் நான் அப்படிச் சொல்லவில்லை நீங்களாக அப்படி உணர்ந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் எனத் தப்பித்து விடக் கூடும். இன்னொன்று பேராசிரியரோ, ஜெயபாலனோ வலிக்கட்டும் என விரும்பி வலியை ஏற்படுத்த வில்லை. ஆனால் இதுவும் வலியென்று உணராமல் இருப்பது தான் ஆச்சரியமளிக்கிறது. சின்ன உலகமென்றும் பெரிய உலகமென்றும் வசனங்கள் எல்லாவற்றையும் பேசி ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தந்து விட்டது. ஆம் “இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்.” Labels: கட்டுரை |
திலகபாமா உங்களது உலகம் சின்னது எங்களது உலகம் பெரியது உங்களுக்குப் புரியாது” என கோபம் தெறிக்க வார்த்தை வருகின்றது. என் உலகம் உனக்கு சின்னதாய் தெரியும் போது உங்கள் உலகமும் எனக்கு சின்னதாய் தெரிய வாய்ப்பிருக்கிறது தானே///
மிக நன்றாக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!!
பிரபலம் என்பதையும் மீறி மனிதத்தன்மை என்று ஒன்று உள்ளது!!
அதை அழகாக விளக்கியுள்ளீர்கள்!!!
தேவா...