சூரியாள்

Friday, September 11, 2009
பாரதியின் விடுதலை தேடலில் பெண்
பாரதியின் விடுதலை தேடலில் பெண்
திலகபாமா

பாரதி சுதந்திர வேட்கை தொண்டையை வரளவைத்த காலகட்டத்தில் , வேட்கை த்ணிக்க விடுதலை நீரை தேடித் திரிந்த நெருப்புப் பறவை . வான வெளிகளின் எல்லைகளை சிறகசைப்பில் அழித்தபடி பறந்த அந்தப் பறவையை பெண்ணிய சோதனைக்குள் இட்டு வெல்லுமா எனச் சட்டம் கட்டிப் பார்ப்பது கூட எனக்கு உடன் பாடில்லை.
இன்றும் தேசிய விடுதலையோடு பெண் விடுதலையையும், சக மனிதத்தின் விடுதலையையும் சேர்த்து நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டுகள் கழித்தும் எண்ணிப் பார்க்க முடியாதவர்களாக இருக்கின்றவர்களின் மத்தியில் இருளைச் சுமந்தபடி பொழுதைக் கழித்த மானிடர்க்கிடையில் , விடியலின் விண்மீனை விதைத்தவன் பாரதி. தேச விடுதலையோடு ,பெண் விடுதலையை மனதளவிலாக எந்த விதத்திலும் குறைவாக சிந்திக்காதவன் . இன்று நியான் விளக்குகளின் வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு விண்மீனை வாசிக்கத் தருவது நமது கடமையாகின்றது
விடுதலை என்ற உணர்வு காணுமிடமெல்லாம் நிரம்பி வழிய வேண்டுமென்பதை வேட்கையாக தாங்கித் திரிந்த பாரதி நாட்டு விடுதலையை உயர்த்திப் பிடித்த போதும் , காடனும் மாடனும் உணர்வு பெறுவதையும் , பெண்கள் பெரும் சக்தியாக உணரப் படுவதின் மூலம் விடுதலை உணர்வு பெறுவதையும் கவிதைகளில் கொட்டித் தந்தவன் பாரதி.
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வோர் விசயங்கள் அன்றைய யதார்த்தத்தை முன்னிட்டு முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் பாரதியின் சிந்தனையில் முதன்மைப் படுத்தப் பட்டிருப்பது அன்றைய அடிமை மனோபாவ எதிர்ப்பும் அதிகார வர்க்கத்திடமிருந்து விட்டு விடுதலையாவதுவும்
அந்த அடிமை மனோபாவ எதிர்ப்பில் இருந்து கிளம்பியதுதான் பெண்ணின் அன்றைய இருப்பு கிளப்பிய சிந்தனைகளும் அதில் விளைந்த எதிர் மனோ நிலைகளும் பாரதியின் கவிதைகளில் பெண் பற்றிய அன்றைய இருப்பின் மாற்றுக் குரலாக ஒலித்தது.
பெண் வீட்டை விட்டு வெளியேற முடியா கல்வி கற்ற இயலா அடிமை வாழ்வுக்கெதிரான குரலாகவே
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"

என்பதுவுமான கும்மிப் பாடல்கள் முழுக்க எதிரொலித்தது.அவருக்கு பிறகு பாடிய பாரதி தாசன் கூட பெண்ணை ஒரு குடும்பத்துக்கானவளாக குறுக்கி விட்ட போதும் அவருக்கு முந்தைய காலகட்டத்திருந்து கொண்டு

"பெண் விடுதலை யென்றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றிகேளீர்
மண்ணுக்குள் ளெவ்வுயிருந் தெய்வமென்றால்
மனையாளுந் தெய்வமன்றோ? மதி கேட்டீரே!
விண்ணுக்கு பறப்பதுபோற் கதைகள் சொல்வீர்
விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்
பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை
என்றும்
ஐம்பூதக்களும் சிவனுக்கானதாய் பாடியதிலிருந்து விடுபட்டு
"பூதமனைத்தும் ஆனாய் காளி" என்று , பெண்ணை ஐம்பூதத்துக்குமானவளாய் பாடியதிலிருந்தும்
தாய் மாண்பு எனும் கவிதையில்
பெண்ணாட்டி தனையடிமை படுத்த வேண்டிப்
பெண் குலத்தை முழ்தடிமை படுத்தலாமா?
.........................................................................
பெண்ணடிமையுற்றால்
மக்களில்லாமடிமையுறல் வியப் பொன்றாமோ?
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராமென்பான்
நாட்டினிலே...........
எனக் கேள்வி எழுப்பி பெண்ணடிமைத்தனம், நாட்டு அடிமைத்தனத்துக்கும் ஆன வித்தாய் மாரிவிடும் என எச்சரிக்கும் பாரதியின் கவிதை வரிகள் அவரது விடுதலைத் தேடலில் பெண்ணையும் கொண்டு வந்து வைத்து விடுகின்றது.
காலம் காலமாய் கொடுப்பவளாய் சாந்த சொரூபியாய் , மகாலட்சுமி என சொல்லப் பட்ட பெண்ணிணத்தை
ஆண்மை வழங்குவதும் அவளே என்றும்,
உக்ர வடிவாய் சொல்லப் பட்டு நிராகரிக்கப் பட்ட அல்லது அச்சம் தரும் வடிவை
"அன்பளித்து விட்டாய் காளி
ஆண்மை தந்து விட்டாய் " என்றும்

"மானம் வீரிய மாண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்"

"ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
என்றும் காளியை நேசத்துக் குரியவளாய் தூக்கிப் பிடித்தது மறுப்புக்குரல் தானே. ,மேலும் பெண்ணுக்கான படிமத்தை பிரட்டிப் போட்ட வித்தையை " கட்டுடைப்பு , பின்னவீனத்துவம் எனும் சொல்லாடல்கள் வாராத காலத்திலிருந்தே செய்தவன் பாரதி

"மையுறு வாள் விழியாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்க முற்றிருந்தாரே"

மண் பொன், பெண் விலக்க வேண்டியதாய் சொல்லிய விழுமியங்களுக்கிடையிருந்து பெண்ணையும் பொன்னையும் மண்ணெனக் கொண்டு உடமை யாக்கத் துடிக்கும் ஆதிக்க நிலையிருப்பதை அப்பாடல் நம் கவனத்திற்கு எடுத்து வருகின்றது
. நிலவுடமை கால கட்டத்திற்கு பிறகு தான் பெண்ணும் உடைமைப் பொருளாய் பார்க்கப் பட்டு ஆணுக்குள் அடைபடத் துவங்குகின்றாள்.அவள் உடமைப் பொருளா எனக் கேள்வி வாசிப்பவனை கேட்க வைக்கும் கவிதை வரிகள் இவை
மிக இயல்பாக கேள்வி பதில் தொனியில் அமைந்திருக்கும் அழகுத் தெய்வம் என்ற கவிதையில் வழமையாக நமை ஆசரியப் படுத்தும் பாரதியின் சிந்தனை வெளியை மெச்சிய படியே கடந்து விடுகின்றோம்.ஆனால் அதையும் தாண்டி உரையாடுபவர்களை உற்று நோக்க அறியாமையில் கேள்வி கேட்பவன் ஆணாகவும், பெண் ஆளுமையோடு பதில் சொல்வதாக இருப்பதுவும் பெண்ணை அறிவின் வெளிப்பாடாக பார்க்கிறது அழகு எனச் சொல்லாமல் சொல்லிப் போகும் பாடலாக அமைகின்றது
"காலத்தின் விதி மதியைக் கடந்திடுமா? என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலெ ஒன்றிரண்டு பலித்திடலாமென்றாள்
...................
மூலத்தை சொல்லவோ வெண்டாமோ? என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்


கற்பை பொதுவில் வைப்போம் என்று உரத்து சொன்னதோடல்லாமல்,கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் என்று பேசி வந்த காலத்திற்கிடையில், கற்பு தவறுகின்ற பெண்களாலேயே உலகம் சீரழிகின்றது எனப் பேசி வந்த சமூகத்திற்கிடையே , பெண் கற்பு நெறி தவறுவதற்கு ஆண் கற்பு நெறி தவறுவதும் தான் காரணம் என்று ஒழுக்கத்தை இருபாலாருக்கும் பொதுவில் வைத்தவன் பாரதி
ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ
.......................................
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்து
கற்பு கற்பு என்று கதைக்கின்றாரே -விடுதலைக் காதல்

கவிதையில் அவரது சிந்த னை சவுக்கடிகளாய் சமுகத்தின் மீது சாடுகின்றது

இப்படியாக விடுதலை உணர்வை அடிமை மனோபாவத்திற்கெதிரான மாற்றுக் குரலாக உணர்வுகள் சிதைபடுவதைக் கண்ட பொழுதெல்லாம்
உணர்வுகள் சிதைபடுவதை மறுத்து வாழ்ந்த மானிடர்க்கெல்லாம் அது ஒடுக்கப் பட்டோராக இருந்தாலும் , பெண் மக்களாக இருந்தாலும் கண்ட ஒவ்வொரு தருணத்திலும் அவர்களுக்கு தன் எழுத்தின் சிந்தனை வழி தொடர்ந்து உணர்த்தப் புகுந்தவன் பாரதி
இன்றைக்கு பெண்ணினத்திற்க்காகப் பேசப் பரிந்து வரும் இலக்கிய வாதிகளும் இலக்கியமும் தன் கையைக் கொண்டே பெண் கண்ணைக் குத்தும் வேலையை மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் நம்முன்னே எழும்புகின்ற பெரிய கேள்வி பாரதி இச்சமூகம் வழி வழியாக மரபணுவிலும் ஊடாகத் தந்த ஆணாதிக்க மனோநிலையை கடந்தேகினானா? என்பது
அவன் எந்த வித ஆதிக்க மனோநிலையையும் தன்னிலிருந்து அகற்றி வென்றிருந்தான். அதை விட ஆதிக்க மனோநிலை தன்னிலிருந்ததை ஒரு பெண்ணே நிவேதிதா தேவி அடையாளமிட்டு காண்பித்த போது உண்மையை ஒத்துக் கொள்ளும் திட சிந்தனையும், அதை பகிரங்கப் படுத்தும் உண்மையும் கொண்டிருந்தவன். பெண் துணையோடு அவளின் மனித இருப்பை உணர்ந்து விட்ட தருணத்தை உரத்து வெளிப்படுத்தி கடந்தேகியவன்
எனவே அவனது நாட்டு விடுதலைத் தேடலிலும் பெண் விடுதலை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி இருந்தது . இன்னும் சொல்வதற்கு ஆயிரக் கணக்கில் அவன் கவிதைகள் சான்றுகள் தந்த வண்ணம் இருக்கிறது. அதை முற்றும் உணர்ந்த வாசிப்பு நம்மிடம் மிக குறைவாகவே இருக்கின்றது.

பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்கு காவலென்று பேருமிட்டு
நீதமில்லாக் கள்வர் நெறியாயிற்றப்பா

Labels:

posted by mathibama.blogspot.com @ 9/11/2009 09:19:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates