|
Tuesday, July 07, 2009 |
உடல் தானம் சில உறுத்தல்கள் |
உடல் தானம் சில உறுத்தல்கள்
மூன்று வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கின்றேன். மருத்துவக் கண்காட்சி. சற்றேறக் குறைய 15 வருடங்களுக்கு பிறகு அப்போது நடந்தது. அதில் கலந்து கொண்டு சுற்றி வந்தது நல்ல அனுபவம். என் குழந்தைகளோடு போய் கொண்டிருக்க ஒரு அறையில் இருந்த தொலைக்காட்சியில் அறுவை சிகிச்சைகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடன் இருந்தவர்கள் குழந்தைகள் பார்க்க வேண்டாமென்று சொல்லவும் என் குழந்தைகள் நாங்கள் பயப்படமாட்டோம் என்று சொல்லி இருந்து பார்த்து கேள்விகள் எழுப்பி நேரம் போனதே தெரியாமல் தாகம் எடுக்கும் வரைக்கும் சுற்றி வந்தனர். அதில் ஒரு அறைக்குள் நுழைய காலடி எடுத்து வைத்ததும் யோசித்தார்கள் அனைவரும். வேகமாக நடந்தது முன்னேறிக் கொண்டிருந்த எல்லாரது கால்களும் அந்த அறை வாசலில் தயங்கின சில முன்னேறிப் போகாமல் திரும்பின.இன்னும் சில வேக நடை தொலைத்து மெதுவாக நடந்து அந்த அறையை விட்டு வெளியேறியதும் இலகுவாயினர், அந்த அறையில் உடல்கள் பாடம் செய்யப் பட்டு பாகங்களாங்கப் பட்டு இருந்தன மாணவர்கள் படிக்கும் வசதிக்கென.. மனதில் அன்று நின்று விட்ட காட்சி அது.
போன வருட தொடக்கத்தில் ஒரு எண்ணம் உடலை தானமாக மருத்துவக் கல்லூரிக்கு தந்து விட வேண்டும் என்று. என்ன செய்ய வேண்டும்? என்ற என் கேள்வியை எனக்கிருந்த மருத்துவச் சூழல் எளிதாக்கித் தருமென நம்பியிருந்தேன். கேள்விகளை என் கணவரிடமிருந்தே துவக்கினேன். நிறைய சட்ட விசயங்கள் இருக்குப்பா. அவ்வளவு எளிதான விசயமில்லை மதுரை மருத்துவ்ச்க் கல்லூரியில் அனாடமி துறையில் கேட்டால் சொல்லுவாங்க. சொல்லி விட்டு அவரது வேலைகளுக்குள் மூழ்கிப் போனார் இங்கிருக்கின்ற கண் தானத்திற்கு பெருமுயற்சி எடுக்கின்ற அமைப்புகளைக் கேட்டேன். உற்சாகமான “அவசியம் செய்திடுவோம்” என்கின்ற பதிலோடு உறைந்து போனார்கல். உள்ளூர் அரசு மருத்துவர் ஒருவரை அனுகி கேட்டேன். மதுரை நான் செல்லும் போது அதற்கான விண்ணப்பப் படிவம் வாங்கி தருகின்றேன் என்று சொன்னார். பார்க்கும் போதெல்லாம் எல்லாரும் அடுத்த வாரம் என்பதையே பதிலாகத் தந்து காணாமல் போக மூன்று மாதங்கள் ஓடி விட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்து போகிறவர் என்பதால் அவரே படிவமும் , கூடவே என்ன என்ன செய்யனும் என்பதையும்பெற்ரு வரச் சொல்லி கேட்க , தொடர்ந்த என் நச்சரிப்பில் படிப்புக்கு நடுவில் எல்லா விபரங்களும் பெற்றுத் தந்தார் நான் இன்னார்தான் என நோட்டரி பப்ளிக் கையெழுத்து போட்டுத் தரனும் எனவும், என் குடும்ப அங்கத்தினர்களின் சம்மதமும் வேணும் என்று சொல்ல, எல்லாமும் எல்லாரையும் தெரிந்த மாதிரி இவ்வளவு நாளும் எனது பாவலாக்கள் இருந்திருந்திருக்கின்றன என்று தோன்றியது. ஒவ்வொரு விசயத்திற்காக அணுக அணுகத்தான் எதுவுமே நமக்குத் தெரியவில்லை என்று தோன்றியது. 20 ரூபாய்க்கான பத்திரப் பேப்பரில் நான் இன்னார்தான் என்று எழுதி வாங்குவதற்குள் 3 வாரம் ஓடியிருந்தது. அடுத்து அதை எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் முடித்து விட்டதாக எண்ணிக் கொண்டு என் கணவர் மற்றும் என்னுடைய ஒப்புதல் கடிதமோடும் மதுரை சென்று மருத்துவக் கல்லூரிக்குள் தயக்கத்தோடவே அனாடமி துறையைத் தேடிப் போனால் வெறும் மேசை எனை வரவேற்றது. கல்லூரிக்கு பரிச்சியமில்லாத என் அந்நிய தயக்கம் கண்டு ஒருவர் விசாரிக்கின்றார். என்ன்ப்பா வேணும். உடல் தானம் செய்வதற்காக கேட்க வந்திருக்கின்றேன் என்று சொல்ல விரைந்து சென்று என்னை நாற்காலி போட்டு அமரச் செய்து துறை பேராசிரியர்கள் வருவார்கள் என்று சொல்லி விட்டு சென்றார். மருத்துவக் கல்லூரிக்குள் நானே நுழைந்து வாங்கியிருக்க இவ்வளவு தயங்கியிருக்க வேண்டியதில்லை என்பது பின்னரே புரிந்தது
இந்த வாசத்துக்குள் என் உடலும் கிடத்தப் பட்டிருக்கும் என்ற நினைப்போடவே அங்கு அமர்ந்திருக்க வந்து எனது ஆவணங்களை சரி பார்த்த பேராசிர்ரியர். இது ரொம்ப காலத்துக்கு முந்தைய வழிமுறைகள் இப்ப நிறைய மாத்திட்டாங்க. நிறைய பிரச்சனையும் சட்ட சிக்கலும் வருதுங்கிறதுனால எல்லாவற்றையும் முறையா செய்ய வலியுறுத்துறாங்க என்றார்
. நான் சென்றிருந்த நேரம் ஒரு மாணவன் விபத்தில் இறந்து அவனது உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப் பட்டதை அடுத்து ஊடகங்கள் கொடுத்த புகழாரத்தில் சில பெற்றோர்கள் தங்கள் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் உறுப்புகளை சரியான விபரம் தெரியாது தானமாய் வழங்க முன்வந்திருந்த நேரம் சில விசயங்களுக்கு முறையாக கிடைக்கின்ற புகழ் கூட அதற்குத் தகுதி யில்லாதவர்களையும் அதை செய்யத் தூண்டி விடுவது சிக்கலான விசயம் தான். எனவே சட்ட திட்டங்கள் கடுமையாக்கப் பட்டிருப்பது தானம் என்ற பேரில் உடல் வியாபாரமாகி விடக் கூடாது என்ற அரசின் நிர்வாகத்தின் பயம், ஏற்கனவே பெண் உடலை பொருளாக்கி விட்ட இந்த வியாபார சமூகத்திடமிருந்து அதை மாற்றி விடத் தவிக்கும் எனக்கு ரொம்ப நியாயமான பயமாகத் தோன்றியது. பேராசிரியர் சொன்னார் ஆனால் சட்டங்கள் கடுமையான பிறகு இதுவரை ஒரே ஒருவர் தான் முறையான விண்ணப்ப கடிதம் தந்து எங்கள் கைகளில் இருக்கின்றது. தானம் கொடுக்க விரும்புபவர்கள் வெகு சிலரே அதிலும் அவர்களே விரும்பினாலும் உறவுகள் விரும்புவதில்லை . அப்படி எல்லாம் விரும்பி வந்தாலும் சட்ட திட்டங்களை முறையாக செய்து முடித்து வருபவர்கள் இல்லை என்றார். ஏற்கனவே இருந்த ஒரு நபரின் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை பார்த்து என்ன என்ன ஆவணங்கள் வழங்க வேண்டும் என குறித்துக் கொண்டு மீண்டும் வீடு திரும்பினேன்.
நோட்டரி பப்ளிக் கொடுத்திருந்த நான் இன்னார் தான் எனும் ஆவணத்தை எடுத்துக் கொண்டு கிராம அதிகாரியைச் சந்தித்தேன். விசயத்தைச் சொல்லி வாரிசுதாரர் சான்றிதழ் வேண்டும் என்றேன். உயிரோடு இருப்பவர்களுக்கு இதுவரை வாரிசுதாரர் சான்றிதழ் தந்ததில்லை என்றனர்.அதனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது என திருப்பி அனுப்பினர். மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியரைச் சந்தித்து ஏற்கனவே கொடுத்திருந்த நபர் வழங்கியிருந்த வாரிசு சான்றிதழ் எப்படி எழுதப் பட்டிருந்தது என்று பார்த்து எழுதிக் கொண்டு வந்தேன் மீண்டும் கிராம அதிகாரி அலுவலகப் படையெடுப்பு. அவர் கேட்டு செய்து வைக்கின்றேன் போய் வாருங்கள் என்று அனுப்பி விட்டார்.
இதுவரை யாரும் இப்படி எழுதி வாங்காததால் இறப்பதற்கு முன் வழங்க படிவம் எதுவும் இல்லை எனவே இது போல டைப் செய்து கொண்டு வாருங்கள் என்று ஒரு கையெழுத்து பிரதி கொடுத்து அனுப்பினார். அது தட்ட்ச்சு செய்து நிரப்பி அவரின் கையெழுத்து வாங்கி வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு சென்றது அவரது முத்திரை வேண்டும் என்பதற்காக. அவர் கிராம அலுவலக அதிகாரி எழுதிக் கொடுத்தது தவறு நான் எழுதுவது போல் எழுதிக் கொடுங்கள் என்று அவர் ஒரு மாதிரி படிவம் தயாரித்துக் கொடுக்க. மீண்டும் அதை தட்ட்ச்சு செய்து நிரப்பி அவர் கையெழுத்துக்காக காத்துக் கிடந்தது படிவம். அவர் முத்திரை கிடைத்ததும் தாசிதாரின் அலுவலகத்திற்குச் சென்றதும், அவர் இதுவரை எழுதிய படிவங்கள் எல்லாம் தவறு என தானும் ஒரு மாதிரி தயாரித்துக் கொடுக்க மீண்டும் தட்ட்ச்சு நிரப்புதல் அலுவகத்தில் அதிகாரிக்காக காத்திருத்தல் என்று தொடங்கி கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி , தாசில்தார் மூன்று பேருடைய முத்திரையுடனும் இவர்கள் தான் என் வாரிசுகள் என்பதற்கான சான்றிதழ் என் கைவந்தபோதும் முழுதாக 6மாதங்கள் கடந்து விட்டிருந்தன. இதோடு என் குழந்தைகள் , கணவர் ஆகியோரின் ஒப்புதல் கடிதமோடும். உடலை தானமாக எடுத்துக் கொள்ள யாரும் தடை சொல்ல மாட்டார்கள் எனற கடிதமும் இணைத்து மருத்துவக் கல்லூரி வழங்கிய படிவத்தையும் நிரப்பிக் கொண்டு போய் மருத்துவக் கல்லூரியில் துறை பேராசிரியரிம் சமர்ப்பித்தேன். இப்ப என்ன அவசரம் இன்னும் எவ்வளவோ காலம் கிடக்கு மெதுவா செய்திருக்கலாம் நிங்க என்றார். தோணுறப்ப செய்திடனும் எனும் வார்த்தையோடு எனது பங்கை முடித்து விட்ட திருப்தியில் வீடு வந்து சேர்ந்தேன் நன்றி கல்கிLabels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 7/07/2009 10:49:00 am |
|
2 Comments: |
-
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன் செய்திவளையம் குழுவிநர்
-
\\நன்றி கல்கி\\ என கடைசியில் உள்ளதே?
இந்தக் கட்டுரையில் வருவது உடல் தானம் செய்தது நீங்கள்தானா? மிக நல்ல விஷயம்.
உடல் தானம் சில உறுத்தல்கள் என தலைப்பிட்டுள்ளீர்கள்,.
கஷ்டப்பட்டு செய்ததால் இது உறுத்தலாகத் தெரியலாம்.
ஆனால் இதுவே உங்களுக்க பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.
\\ஒவ்வொரு விசயத்திற்காக அணுக அணுகத்தான் எதுவுமே நமக்குத் தெரியவில்லை என்று தோன்றியது. \\
என்ற வரியிலிருந்து இதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
\\ எனவே சட்ட திட்டங்கள் கடுமையாக்கப் பட்டிருப்பது தானம் என்ற பேரில் உடல் வியாபாரமாகி விடக் கூடாது என்ற அரசின் நிர்வாகத்தின் பயம், ஏற்கனவே பெண் உடலை பொருளாக்கி விட்ட இந்த வியாபார சமூகத்திடமிருந்து அதை மாற்றி விடத் தவிக்கும் எனக்கு ரொம்ப நியாயமான பயமாகத் தோன்றியது. \\
இது போன்ற பயங்கள் நியாமானதுதானே?
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்