சூரியாள்

Monday, January 29, 2007
படு-களம் ,கவிதை

படு-களம்

எழுத்தின் சுதந்திரம் சொல்லி
நண்பனானாய்

பெண்ணில்லையடி நீ ஆணென்று
தோளில் கை போட்டாய்

பாலியல் சனநாயகம் பேசி
நிகழக் கூடாதெனும் தருணத்தில்
நிகழ்ந்து விட கூடிக் கலந்தாய்

மடியில் கட்டியிருந்த
உண்மைப் பூனையை
இனியும் மூட முடியாது
வளைய வர விட்டாய்

கட்டிலின் கால்களுக்கு பின்
விலங்கு போட்டு
எனக்குத் திரையும் இட்டாய்

அந்யோன்யங்களுக்கிடையே
எல்லாம் தந்தும் பெற்ற பின்
அழகை தின்று அறிவை மறைத்து
நீ ஆணாகிப் போன தருணத்தில்
என் சமதளங்களை உடைத்து
பள்ளத்துள் உனைத் தள்ளி
சிலுவைகள் நடுகின்றேன்

உச்சி மலையில்
தென்றல் மட்டுமே
எனைத் தழுவ அனுமதித்து

குருத் தோலை திருநாளெல்லாம்
புதிய சிலுவைகள் நடப் பட்டு
ஆண்கள் அறையப் பட்டு
காதலோடு வழி மீள

படுக்கையறை எல்லாம் நிராகரித்து
போர்பயிற்சிக் களம் ஆக்கி
கட்டிலின் கால்களில் கத்தி செய்கிறேன்

பெண்கள் காதலில் எப்பவும்
காதலர்களாக “ஆண்கள்”
இல்லாது போக

Labels:

posted by Thilagabama M @ 1/29/2007 09:02:00 pm   0 comments
Saturday, January 27, 2007
அசையும் புகைப்படங்கள்
posted by Thilagabama M @ 1/27/2007 11:29:00 pm   1 comments
Saturday, January 20, 2007
கண்ணாடி பாதரட்சைகள்
கண்ணாடி பாதரட்சைகள்


சுவர்களற்ற
எல்லைகளும் மூலைகளுமில்லா
உலகம்
சிறையிட்டு முடக்கியிருந்தது எம்மை

சன்னல்கள் இல்லை காற்று வர
வாசல்கள் இல்லை வழிகாட்ட
கூரைகளும் இல்லை பிய்த்தெறிய

அஞ்ஞாத வாசத்தில்
என்னால் விதையூணப்பட்ட
பூசணி ரதமாக
உணவளிக்கப்பட்ட
குதிரைகள்
காற்றைக் கிழித்து
விரைகின்றன விருந்துக்கு

காற்றோடு இசை நடனமிட
பாதங்களோடு தரைகள் உரசிக் கொள்ள
பூக்களின் இதழ்களை ஆடையாயிட்டு
காத்திருந்தேன் சிறை மீள

நடன விருந்தில்
இளவரசனோடு கைகோர்க்க
சுவர்கள் தெரிந்ததா வாசல்களோடு

நள்ளிரவில்
முட்களின் சங்கமத்தில்
அலங்கார உடைகள் கந்தலாகிடுமோ
உணர்வுகள் முந்த
வாசல் தாண்டி வந்தவள் தான்
நானே சிறை புகுந்தேன்

இதோ நகர் வலம் வருகின்றன
கண்ணாடி பாதரட்சைகள்

தேவதைகளால்
ஆசீர்வதிக்கப் பட்ட பின்னும்
என் அடையாளங்கள்
என் இருப்புகள்
பாதரட்சைகளா?

கால்களுக்குள் சேருமென்ற போதும்
பாதம் கண்ணாடிச் சில்லுகளால்
கிழிபடும் என்றிருந்தும்
கால் நுழைக்கையில்
உடைத்துப் போகின்றேன்

இன்னுமொரு சிறை வைக்க
என்னைத் தேடும் இளவரசன்
அடையாளங்களின்றித் தவிக்க

அருள வரும் தேவதைக்குச் சொல்வேன்
என்னை நானாய்
அடையாளம் கொள்ளும் நாளில்
நானே சிறை மீள்வேன்
போய் வா வென


முச்சந்தி : ஸிண்ட்ரெல்லா
- என். சொக்கன்
ஆர். எம். கே. வி.யோ சென்னை சில்க்ஸோ, 'ஸிண்ட்ரெல்லா பாவாடை' என்று ஒரு புது விளம்பரம் தொடங்கி, அதில் திருமதி. சுஜாதா ரங்கராஜனை நடிக்கவைத்து பிரபலப்படுத்தியபோதுகூட, ஸிண்ட்ரெல்லா என்றால் யார் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்துகொள்கிற ஆர்வமும் உண்டாகவில்லை.
அதற்கு முன்போ பின்போ ரஹ்மானிசையில், 'அழகிய ஸிண்ட்ரெல்லா, ஸிண்ட்ரெல்லா,. நேரில் வந்தாள்', என்று ஹரிஹரன் பாடும் பாடலைக் கேட்டிருக்கிறேன். அப்போதும், ஸிண்ட்ரெல்லா என்பவள், க்ளியோபாட்ராபோல் ஒரு பேரழகி என்றுதான் நினைத்துக்கொண்டேன்.
'ஸிண்ட்ரெல்லா' என்று சொல்லும்போது, நாக்கு நுனி உதடுகளைத் திரும்பத் திரும்ப வருடிச் செல்லும் அழகுக்காகவே, அந்தப் பெயரை எத்தனைமுறை வேண்டுமானாலும் சொல்லிப்பார்க்கலாம். இதேபோல் இனிமையாக வருடுகிற, உச்சரிக்கச் சுகமான இன்னொரு பெயர், ரஷ்ய எழுத்தாளர் விளாடிமிர் நபகோவின் நாவல் கதாநாயகி 'லோலிதா'.
இப்படி நுனி நாக்கில் உச்சரித்துப் பரவசரப்படமுடிகிற பெயர்களைக் கொண்ட பெண்கள் எல்லாருமே, பேரழகிகளாகதான் இருக்கவேண்டும் என்பது, அப்போது என்னுடைய தீர்மானமான முடிவாக இருந்தது.
உண்மையில், ஸிண்ட்ரெல்லா என்பவள் பேரழகியா என்று தெரியவில்லை. ஆனால், அவள் நிஜத்தில் வாழ்ந்த பெண் இல்லை, ஒரு தேவதைக் கதையில் வரும் கதாபாத்திரம்தான் என்று ஒரு நண்பர் சமீபத்தில் சொன்னார். அதுமட்டுமில்லை, ஒவ்வொரு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களும், இந்த ஸிண்ட்ரெல்லாக் கதையைத் தங்களுக்கேற்ப மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னார் அவர்.
நண்பர் சொன்னதைக் கேட்டதும் கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டியது, இணையத்தில் தேடியபோது ஏராளமான ஸிண்ட்ரெல்லாக் கதைகள் விதவிதமாகக் கிடைத்தன.
இந்தக் கதைகள் எல்லாவற்றுக்கும் பொதுவான அம்சங்கள் இரண்டுதான் - ஸிண்ட்ரெல்லாவும், அவள் தவறவிடுகிற ஒரு செருப்பும் !
முதலாவதாக, ஸிண்ட்ரெல்லா என்பவள் ஓர் ஏழைச் சிறுமி. அவளுடைய பெயர் கதைக்குக் கதை மாறினாலும், அநேகமாக எல்லாக் கதைகளிலும் அவளுக்கு அப்பாமட்டும்தான், அம்மா இல்லை. ஆகவே, அவளுடைய அப்பா, இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார்.
புதிதாக வந்த சித்திக்கு, ஸிண்ட்ரெல்லாவைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆகவே, அவளுக்கு ரொம்பக் கஷ்டமான வேலைகளைத் தந்து கொடுமைப்படுத்துகிறாள். சில கதைகளில், சித்தியின் மகள் அல்லது மகள்களும் இந்தக் கொடுமைப்படுத்துதலில் பங்குகொள்கிறார்கள்.
வழக்கம்போல, ஸிண்ட்ரெல்லாவின் அப்பா இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. சொல்லப்போனால், ஸிண்ட்ரெல்லாவுக்கு அப்பாவாக இருப்பது, மனைவி இறந்ததும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது ஆகிய இரண்டைத்தவிர, இந்தக் கதையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை.
ஸிண்ட்ரெல்லாவைப் பிடிக்காத சித்தி, அவளுக்குச் சரியாக சாப்பாடுகூட போடுவதில்லை. ஆனால், அவள் தலையில் ஏகப்பட்ட சிரமமான வேலைகளைச் சுமத்துகிறாள். ஆகவே, நாள்முழுதும் கஷ்டப்பட்டு உழைக்கிறாள் ஸிண்ட்ரெல்லா.
அப்போது ஊரில் ஒரு திருவிழா வருகிறது. அதற்குப் போகவேண்டும் என்று ஆசைப்படுகிறாள் ஸிண்ட்ரெல்லா. அவளுடைய சித்தி அதற்கு அனுமதிப்பதில்லை. ஆகவே, ஸிண்ட்ரெல்லா வருத்தத்துடன் இருக்கும்போது, அவளெதிரே ஒரு தேவதை தோன்றுகிறது.
தேவதை என்று பொதுவாகச் சொன்னாலும், இதுவும் கதைக்குக் கதை மாறுகிற விஷயம்தான். சில கதைகளில் நிஜ தேவதை, வேறு சில கதைகளில் ஒரு மீன், அல்லது ஒரு பாட்டி, அல்லது வேறொரு மாயக் கதாபாத்திரம். இப்படி ஏதோ ஒருவிதத்தில் ஸிண்ட்ரெல்லாவுக்கு உதவி கிடைக்கிறது.
என்ன உதவி ? அவள் ஆசைப்பட்டதுபோல் திருவிழாவுக்குச் சென்று கலந்துகொள்ளலாம். அதற்கான குதிரை வண்டி, பளபளப்பான புது ஆடைகள், செருப்பு என்று எல்லாம் அவளுக்குக் கிடைக்கிறது.
ராமாயணத்தில்கூட, ராமரின் பாதுகைகளுக்குக் கொஞ்சூண்டுதான் முக்கியத்துவம். சினிமா பாஷையில் சொன்னால், அத்தனை பெரிய கதையில், இரண்டே இரண்டு ஸீன்களில்தான் வருகிறது அந்தப் பாதுகை. ஆனால், ஸிண்ட்ரெல்லாவைப் பொறுத்தவரை, கதையில் முக்கியமான திருப்பம் உண்டாக்குவதும், கடைசியில் கதாநாயக- நாயகியரைச் சேர்த்துவைப்பதும் இந்தச் செருப்புதான்.
அது எப்படிப்பட்ட செருப்பு என்பதுகூட தெளிவாக இல்லை. சில கதைகளில் அதைத் தங்கச் செருப்பு என்று வர்ணிக்கிறார்கள், சிலவற்றில் அது கண்ணாடிச் செருப்பு, வைரச் செருப்பு(?), தோல் செருப்பு, அல்லது 'வெறும்' செருப்பு.
அந்தச் செருப்பு எதனால் செய்யப்பட்டது என்பது முக்கியமில்லை. அதை ஸிண்ட்ரெல்லாமட்டும்தான் அணியமுடியும். அதுதான் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், ஊரில் அவள் வயதுப் பெண்கள் எத்தனை பேர் இருந்தாலும், அந்தச் செருப்பு யாருக்கும் பொருந்துவதில்லை, ஸிண்ட்ரெல்லாவின் கால்களுக்குமட்டுமே பொருந்தக்கூடியதாக அந்த மாயச் செருப்பு இருக்கிறது.
ஆனால், அந்தச் செருப்புக்கும், ஸிண்ட்ரெல்லாவின் புது ஆடைகளுக்கும் இரவு பன்னிரண்டு மணிவரைதான் ஆயுள். அதன்பிறகு, அவள் பழையபடி கிழிந்த ஆடைகளை அணிந்த ஏழைச் சிறுமியாக மாறிவிடுவாள். ஆகவே, இரவு பன்னிரண்டு மணிக்குள் திருவிழாவிலிருந்து திரும்பிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு கிளம்புகிறாள் ஸிண்ட்ரெல்லா.
திருவிழாவில், புது ஆடைகளில் ஜொலிக்கும் ஸிண்ட்ரெல்லாவை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. யார் இந்த அழகி என்று எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்க, அங்கே அவள் ஓர் அழகிய இளைஞனைச் சந்திக்கிறாள். அவனோடு சேர்ந்து நடனமாடுகிறாள். இருவரும் ஒருவரையொருவர் நேசிப்பதாக உணர்கிறார்கள்.
'யார் நீ ? உன்னை நான் இதற்குமுன் பார்த்ததே இல்லையே', என்று ஆவலோடு விசாரிக்கிறான் அந்த இளைஞன்.
ஸிண்ட்ரெல்லா அதற்கு சரியாக பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறாள். இரவு பன்னிரண்டு மணியானதும், விருட்டென்று அங்கிருந்து ஓடி வந்துவிடுகிறாள். அப்போதுதான், அவளுடைய ஒரு செருப்பு அங்கேயே தவறி விழுந்துவிடுகிறது. (சில கதைகளில், அவளை மீண்டும் சந்திக்கவேண்டும் என்பதற்காக அந்த இளைஞன் தந்திரம் செய்து, அந்தச் செருப்பைத் திருடிக்கொள்கிறான்)
திருவிழாவில் ஸிண்ட்ரெல்லாவிடம் மனதைப் பறிகொடுத்த அந்த இளைஞன், அந்த நாட்டின் அரசன், அல்லது இளவரசன், அல்லது பிரபு, அல்லது வேறெதோ ஒரு பெரிய பதவி, செல்வாக்கில் உள்ளவன். ஆகவே, எப்படியாவது மீண்டும் அவளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்கிறான்.
இதற்காக, ஸிண்ட்ரெல்லாவின் செருப்பைப் பயன்படுத்துகிறான் அவன். அதாவது, அந்தச் செருப்பு, எந்தப் பெண்ணின் காலுக்குப் பொருந்துகிறதோ, அவளைதான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று பகிரங்கமாக அறிவித்து, நாடுமுழுதும் அந்தச் செருப்பை ஊர்வலமாகக் கொண்டுசெல்கிறான்.
ஏகப்பட்ட பெண்கள் அந்தச் செருப்பைக் காலில் அணிந்துகொள்ள முயல்கிறார்கள் - ஸிண்ட்ரெல்லாவின் சித்தி மகள்கள் உள்பட. ஆனால், அது யாருடைய காலுக்கும் பொருந்தவில்லை.
கடைசியில், ஸிண்ட்ரெல்லாவின் காலில் அந்தச் செருப்பைப் போட்டதும், அது கச்சிதமாகப் பொருந்துகிறது. சட்டென்று, பழையபடி ஜொலிக்கும் ஆடைகளில் தேவதைபோல் அழகியாகத் தோன்றுகிறாள் அவள்.
பிறகென்ன, அவளுக்கும், அவளுடைய காதலனுக்கும் திருமணம் நடக்கிறது. சில கதைகளில் அவளைக் கொடுமைப்படுத்திய சித்தியும், அவளுடைய மகள்களும் தண்டிக்கப்படுகிறார்கள், சில கதைகளில் மன்னிக்கப்படுகிறார்கள்.
அநேகமாக எல்லா ஸிண்ட்ரெல்லா தேவதைக் கதைகளின் அடிப்படை இழை இதுதான். ஆனால், மாற்றாந்தாயால் கொடுமைப்படுத்தப்பட்டு, தேவதையிடம் உதவிபெறும் இந்தச் சிறுமி, உலகெங்கும் பல கலாச்சாரங்களில் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு சம்பவங்களுடன் தோன்றுகிறாள். இப்படி ஆங்காங்கே வடிவம் மாறினாலும், இந்த எளிய கதை, பல தலைமுறைகளாக, அநேகமாக எல்லா உலக நாடுகளிலும் இந்த அளவுக்குப் பிரபலமடைந்திருப்பதன் உளவியல்கூறுகளை யாரேனும் ஆராய்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
நிற்க. ஸிண்ட்ரெல்லாவைப் பிரதான பாத்திரமாகக் கொண்ட ஒரு நவீன கவிதையை சமீபத்தில் வாசித்தேன், 'கண்ணாடிப் பாதரட்சைகள்' என்று தலைப்பு, எழுதியவர் திலகபாமா.
'சுவர்களற்ற / எல்லைகளும் மூலைகளுமில்லா / உலகம் / சிறையிட்டு முடக்கியிருந்தது எம்மை', என ஸிண்ட்ரெல்லாவின் சோகத்தைப் பொதுமைப்படுத்தித் தொடங்கும் கவிதை, 'தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டபின்னும் / என் அடையாளங்கள் / என் இருப்புகள் / பாதரட்சைகளா ?', என்று கேட்கும்போது, இந்தப் பழைய தேவதைக் கதைக்குப் புதியதொரு கோணத்தைத் தருகிறது.
'கால்களுக்குள் சேருமென்றபோதும் / பாதம் கண்ணாடிச் சில்லுகளால் / கிழிபடும் என்றிருந்தும் / கால் நுழைக்கையில் / உடைத்துப்போகிறேன்', என்று கண்ணாடிப் பாதரட்சைகளைச் சிதைத்துவிட்டு, 'இன்னுமொரு சிறை வைக்க / என்னைத் தேடும் இளவரசன் / அடையாளங்களின்றித் தவிக்க'விடுகிறாள் இந்தக் கவிதையின் நவீன ஸிண்ட்ரெல்லா, கூடவே, 'அருள வரும் தேவதை'யிடம், 'என்னை நானாய் / அடையாளம் கொள்ளும் நாளில் / நானே சிறை மீள்வேன் / போய் வா' என்று சொல்லித் திருப்பியனுப்பிவிடுகிறாள் !
இந்தக் கவிதை 'வடக்கு வாசல்' என்ற சிற்றிதழில் இடம்பெற்றுள்ளது. திரு. யதார்த்தா. கி. பென்னேஸ்வரனை ஆசிரியராகக் கொண்டு, புது தில்லியிலிருந்து (5210, Basant Road , Near Kamal Singh Stadium, Paharganj, New Delhi - 110 055) வெளிவரும் இந்தப் புதிய பத்திரிகையின் முதல் இதழில், எஸ். ராமகிருஷ்ணனின் 'சேர்ந்திசை' என்ற சிறுகதையும், பி. ஏ. கிருஷ்ணனின் அமெரிக்கப் பயணம் குறித்த கட்டுரையும் தவறவிடக்கூடாதவை !
ஏகப்பட்ட கவிதைகள், அவற்றை வரிசையாகத் தொகுக்காமல், இதழில் ஆங்காங்கே இடம்பெறச் செய்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். புத்தக விமர்சனங்களுக்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கலாம்.
நன்றி தமிழோவியம்.காம்
posted by Thilagabama M @ 1/20/2007 10:44:00 am   0 comments
Wednesday, January 10, 2007
கூர் பச்சையங்கள் தொகுப்பிலிருந்து
அகத்தியம்

இல்லாத திட்டமிடுதல்களுடன்
சம்பவித்து விடுகின்ற பரிமாற்றங்கள்
உரைத்து உடைத்து விட
தேவைப்படாத மன எழுச்சிகள்
உறை பனியாய் முனை நீட்டி
ஆழநீரோட்டத்தோடு நகழ
நானும் தராமல்

நீயும் எடுக்காமல்
கடந்து செல்கின்ற நிமிடங்களில்
நடந்து விடுகின்ற கலப்புகள்

காற்றோடு கலந்து விடும் ஈரநீரா
நீரின் ஈரமொடு கலந்த காற்றா
இரண்டும் தொலைந்து
தென்றலாகிப் போக

இலக்கணத்துளிறுகக்
கட்டிவிட முடியாத ஒன்று
புரிய வைக்கத் தேவையில்லாத
புரிந்துணர்வுக்கு
எழுதிப் போகும் புதிய
அகத்தியத்தை
posted by Thilagabama M @ 1/10/2007 11:27:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates