சூரியாள்

Tuesday, November 28, 2006
மனவெளிப் பயணம் 8
சக்ஸன் ஹவுஸ்
உள்ளே நுழையும் போது சுற்றுலா பயனிகளுக்காக அங்கிருந்த வதை முகாம் எப்படி கட்டிட அமைப்புகளோடுஇருந்தது என்று விளக்கிக் கொண்டிருக்கின்றார்.
இன்று நினைவிடமாக மாற்றப் பட்டு இருக்கும் இந்த இடம் நாசிகளால் உருவாக்கப் பட்ட வதை முகாம்களின் முக்கியமானதொன்று. 1938-45 வெறும் ஒன்பது வருடங்களுக்குள் இந்த மண் ஒட்டு மொத்த அவலங்களை 2 இலட்சம் மனிதர்களின் மன உளைச்சல்களை இன்னும் முனகிய படி கிடக்கின்றது இன்று கண்ணாடிகளால் மூடி தரைகள் பத்திரப் பட்ட போதும் அதற்குள் இருந்து குருதி வாசம் தவிர்க்க முடியாததாகவே நம்மை மூச்சு முட்டச் செய்கின்றது துப்பாக்கிகளின் கணல் அதிர்ந்துமுழங்கும் குரல் சாவுக் கருகில் நெருங்கி விட்ட அவலங்களின்குரல் பட்டினியும் , நோயும் வாட்ட அனத்திய குரல்கள் இரத்தம் தெறிக்க மண்ணில் வீழ்ந்த உடலங்களின் சப்தம் நிறைவேறாக் கனவுகளோடு செத்த உடல்கள் எரிகையில் வெடிக்கும் சப்தம் உணவுக்காய் கொடுக்கப் படுகின்ற சீனிக்காய் தூக்கித் திரியப்பட்ட அலுமினியக் குவளைகளின் முனகல்கள் எப்படியும் வெளிவந்து விடும் எனும் நம்பிக்கையில் எழுதப் பட்ட துண்டு நினைவுக் குறிப்புகள் வண்ணங்கள் மட்டுமல்லாது வலிகளோடு கீறப்பட்ட வாழ்த்து அட்டைகள் , செத்த பிறகும் உடலிலிருந்த மதிப்பான சாமான்களை, தலைமுடியும் தங்கப் பல்லும் கூட பிரிக்கவென்று உரிக்கப் பட்ட தோலின் சப்தமும் கிழிபட்ட உடலின் மரித்த வாசமும் இன்ன்மும் ,கேட்கவும் உணரவும் நுகரவும் கூடிய இடமாய் அது 2,00,000 பேரை தனக்குள் கர்ப்பப்பைக்குத் திரும்பும் பய உணர்வோடு உள் கொண்டிருந்தது அந்த இடம் ஒரு அமானுஷ்யமாய் நமக்குள்ளும் பரவிக் கொள்ளும் உணர்வை சரியான வார்த்தைகளினால்தான் சொல்லிப் போகிறேனா? தெரியாது
1,00,000 பேர் தப்பித்து போனவர்கள் தாய்மண் , வீடு ,எல்லாம் வெறுத்து நாடு விட்டு நாடு தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சாட்சியாய் இந்த குருதி வாசம் வீசும் பூமியில் பூக்களின் வாசம் தினந்தோறும் வீசுகின்றது.யாராவது தினம்இங்கு வந்து இறந்து போன அல்லது தகவல் அறிய முடியாது காணாது போன சிலரை நினைத்து தினமும் புதிய பூக்களை வைத்துப் போகின்றனர்.அழிந்து போவது உடல் மட்டுமே அழியாத நினைவுகள் சந்தோசமாயும் துக்கமாகவும் மாறிப் போகின்றது
“Arbeit Machtfrei “ வேலை செய்வதல் விடுதலை அடைவாய் இந்த வசனம் அதன் கம்பிக் கேட்டில் எழுதப் பட்டிருக்கின்றது இது நாசிகளின் முக்கிய வாசகம் .விடுதலை என்பது சாவைக் குறிக்கின்றது.யூதர்கள் கம்யூனிச கட்சி சார்ந்தவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என பலரையும் இந்த சிறை காவு கொண்டிருக்கின்றது.
இதன் நுழைவாசலில் மாடியில் அந்த இடத்தின் சுற்று வட்டாரத்தையும் குறிவைக்கக் கூடிய ஒரு மெஷின் கன் வைக்கப் பட்டிருக்கின்றது.அரை வட்ட வடிவில் இருக்கும் முகாமுக்குள் நினைத்தபோது எங்கிருந்தவர்களையும் இதிலிருந்து சுடலாம்.
வதைமுகாமின் சாட்சிகளாக வைக்கப் பட்டிருக்கின்ற அருங்காட்சியகத்தில் , ஒரு பழைய பதிவில் எழுதியிருந்தது இறந்து போனவரது முக்கிய சொத்துடமைகள் திருப்பி கொடுக்கப் பட்டதாய் அந்த பட்டியலில் தொப்பி, காலிலிட்ட செருப்பு, மேலங்கி , உள்ளாடை கால்சராய் இத்யாதி இத்யாதி…
பொறுப்போடு ஒப்படைக்கப் பட்டதாய் எழுதப் பட்ட பட்டியலை கலைத்துப் போட்டுத் தேடுகின்றேன் முக்கிய சொத்து கையளிக்கப் படாதது மட்டுமல்ல, பட்டியலில் இல்லை என்பதுவும் உணரப் படவும் இல்லை அது சொத்தென.ஆம் அந்த ஆளின் உயிர்..இறந்தவனின் முக்கிய சொத்தே அதுதானே.
2.11.05
காலை சீக்கிரமே எழுந்து நேற்று நடந்த நிகழ்வுகளை எழுதிவிட்டு கிளம்பி மணி வருவதற்காக காத்திருந்தேன் அவரும் நானும் அலக்ஸாண்டர் பிளாட்ஸ் போகின்றோம். அங்கிருந்து நடந்த படி alte national galare க்கு போய் அருங்காட்சியகங்களை எல்லாம் பார்ப்பதற்கான நுழைவுச் சீட்டு வாங்கி old national galareக்கு போகின்றோம். உள்ளே 19ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள். 3 மாடி உள்ள இந்த கட்டிடத்தில் “நாள் “ என்பது ஒரு பெண்ணுருவிலும் அதன் முதுகில் மரணமும் தூக்கமுமாகிய இரு குழந்தைகளை சுமந்தபடி இருந்தது.ஆயுதங்களை கீழே போட்டு விட்டு நிம்மதியாய் தூங்கும் வெள்ளை நிற பழிங்குச் சிலை இன்னமும் மனசில் நிற்கும் கலை வடிவங்கள் அவை.
அடுத்து பழைய அருங்காட்சியகம். அங்கே பழம் பொருட்கள் ரோம கலாச்சாராத்தின் வெளிப்பாடாய் பாபிலோன் பாக்தாத் ஆகிய இடங்களிலிருந்து எடுக்கப் பட்ட பொருட்கள் , மேல் மாடியில் எகிப்தின் வெளிப்பாடாய் சேகரிக்கப் பட்ட பொருட்கள் ஆகியவை இருந்தன. தாயும் தந்தையும் மகளும் அமர்ந்திருந்த சிற்பத்தில் தாய் தனது கணவன் இடுப்பை சுற்றி வளைத்து கை போட்டிருக்க அது ஆணுக்கும் பெண்ணுக்குமான சமத்துவத்தை குறிக்கின்ற, சொல்கின்ற வகையில் இருந்தது மம்மிகள், குழந்தைகளை வைத்திருந்த மம்மிகள் இப்படியாக பார்த்தது ஏராளம் எகிப்திலிருந்து எடுத்து வரப் பட்டிருந்த உலகத்தின் மிக முக்கிய சிறப்பான அழகிய பெண் சிற்பம் நோர்பிரெட்டி(nefretiti) என்பது.எகிப்திய அரசி தன் உருவத்தை தானே செதுக்கியிருக்கின்றாள். உலகிலேயே மிக அழகான சிற்பம் என்று உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இதைப் பார்க்க வென்றே இங்கு வந்து போகின்றனர்.
மூன்றாவதாக pergomon museum சென்று பார்த்தோம். அந்தக் கட்டிடம் உள்ளே வைக்கப் பட வேண்டிய பொருட்களுக்கென்றே வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
2வது 5 வது நூற்றாண்டு கட்டிட மிச்சங்கள். பிரம்மாண்டத்துக்குள் நமை மூழ்க வைத்த அருங்காட்சியகம் இது . அந்த அருங்காட்சியகத்துள் ஒரு நகரையே பெயர்த்தெடுத்து கோட்டையின் பிரம்மாண்டங்களோடு வைத்திருக்கின்றார்கள்.100 அடிக்கும் உயரமான தூண்கள். எப்படித்தான் கொண்டு வந்தார்களோ என்று வியக்க வைக்கின்றது Temple of Athena polis , market gate of Millet ஆகிய இடங்களை பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து வைத்திருக்கின்றார்கள்.
அதிகப் படியான வரலாற்றுத் தகவல்களால் மிகக் கனமான பொழுதுகளாய் மாறியிருந்ததை மெல்ல வீதிகளீல் நடை போட்டபடி லேசாக்கப் பார்க்கின்றோம்

கிழக்கு ஜெர்மனியின் வசம் இருந்த தெருக்களில் எல்லா நாட்டு சாப்பாட்டு கடைகளும் இருக்க , தெருக்களில் தனியே போகின்ற ஆண்களை வழி மறிக்கும் விலை மாந்தர், மீண்டும் மனதை வருத்தம் கவ்விக் கொள்ள , அதுவரை தெரியாதிருந்த அலுப்பு எனக்கு தொற்றிக் கொள்ள இரவு 10மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.
3.11.05
இன்று மதியம் 1.30 மணிக்கு மணி அவரோடு கிளம்பி நிக்கோலஸ் எனும் இடத்திற்கு அவர் நடத்துகின்ற கேக் கடைக்குபோகின்றோம். ஹெர்பல் டீ ஒன்று போட்டுத் தருகின்றார்கள் வெந்நீரில் துளசி இலை போட்டு சுட வைத்து சீனியும் போட்டு டீ எனத் தருகின்றார்கள் குளிருக்கு அது இதமானதாக இருக்க மீண்டும் கேட்டு வாங்கி குடிக்கின்றேன் நம்மூரில் பால் தண்ணியா இருந்து அதில் டீ பொட்டால் கூட “என்ன வெந்நித் தண்ணியில் டீ போட்டுத் தருகிறாய்?” என்று கேலி செய்யும் குரல் நினைவுக்கு வருகின்றது.ஆனால் இங்கோ வெந்நீரைக்கூட சுகமானதாய் உணர வைக்கின்றது குளிர் அமைதியான இடம்.அங்கிருந்து வான்சே எனும் இடத்திற்கு இரயில் எடுத்து போய் இறங்குகின்றேன் அங்கு அழகான ஏரி இருப்பதாய் மணி சொல்லியிருக்க, இரயில் நிலையத்திருந்து எந்தபக்கம் போனால் ஏரி வரும் தேடுகிறேன். எல்லா பக்கமும் கொஞ்ச கொஞ்ச தூரம் போய் பார்த்து விட வேண்டியதுதான் ஏரியை ஒளித்து வைத்திருக்க முடியாதே எனும் நம்பிக்கையில். ஒரு 100 அடி நடையில் மறையத் துவங்கும் செங்கதிரோடு செவ்வானத்தை முழுங்கிவிடத் துடிக்கும் ஏரி என் கண்ணில் படுகின்றது. யாருமற்ற ஏரியில் படகுகள் நிரம்பியிருக்கின்றன 5 மணிக்கே படகு சவாரிகள் நிறுத்தப் பட்டு விட்டது. அதன் கரையோரம் ஏகாந்தமாய் நடந்து திரிந்து விட்டு மீண்டும் இரயில் நிலையம் வந்து ஒவ்வொரு இடமாய் மாறி ஜீவாலஜிகல் கார்டன் வந்து” கெய்சர் வில்லியம் சர்ச்” , இரண்டாம் உலக யுத்தத்தில் அழிக்கப் பட்ட தேவாலயம் , மிச்சமிருக்கின்றது அழிவின் நினைவாக, இருக்கின்ற ஒரே அறையிலான உயரமான கட்டிடத்தில் அழகான ஓவியங்கள்


4.11 .05
இன்று பெர்லினின் பழைய நகரத்திற்குப் போய் பார்த்து வந்தேன். பழைய கட்டடங்களை அதன் பழமை மாறாது பராமரிக்க அரசாங்கமும் கவனமெடுத்து வருகின்றது.
காலம் கண் முன்னால்
வெள்ளை மேகமாய்
கடந்து போகிறது
பிடித்து விட நினைக்கையிலோ
அபௌதீகமாய் மாறி
காற்று கரைத்து குடித்து போக
சில நேரம் நான்
ஊடுருவிக் கடந்து போகவும்
திடீரென குளிர்ந்து
மண் ஈரமாக்கிப் போவதுமாய்

எது என் காலம்
பார்க்கின்ற உணர்கின்ற
எமை உயிர்க்கின்ற ஒன்றாக

நிறைந்து வழியும்
தேவாலய மணியோசைகள்
காலத்தோடு நிலத்தையும்
எம்மிலிருந்து நகர வைக்கும்
கடகடக்கும் இரயிலோசைகள்
நினைவுகளை உதறவைக்கும்
காவல் பதட்ட சப்தங்கள்

எல்லா ஓசைகளூம்
ஒன்றிலேயே பிறந்து
ஒன்றிலேயே முடிந்த போதும்
இருந்த இடமிருந்து
கடந்த வழியிருந்தும் வெறொன்றாய்
மாறிப் போகின்றன

5.11.06
ஊருக்குப் போவதற்கு உறவினர்,நண்பர்களுக்கென சில சாமான்கள் வாங்க எண்ணி பழைய நகரத்திற்கு மீண்டும் போகின்றோம்.
அதிக காசு செலவிடாமலும் அதே நேரம் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படியாக பொருட்கள் வாங்க விரும்புகின்றேன்.இவ்வளவு நாள் நீண்ட பிரயாணத்திற்கு வழியனுப்ப யாருமில்லாது தந்தந் தனியாக விருது நகரில் இரயில் ஏறியதும், போக வேண்டாம் என்று என்னுடன் சண்டை பொட்டிருக்கும் அம்மாவையும் கூட்டிக் கொண்டு திண்டுக்கள் இரயில் நிலையத்தில் நான் வருத்தப் படக் கூடாது என்று மனம் கேட்காது வந்திருந்த என் தந்தையும், அம்மா கோபம் மறைத்து கையிலெடுத்து தந்த பூவும், விமான நிலையத்தில் எனை வழியனுப்ப வந்து கண்கலங்கி நின்ற வைகை செல்வியும் நேரில் நகர்ந்து வர முடியா சூழலிலும் எப்பவும் தொலைபேசியில் குரலோடு கூட வந்த லஷ்மி அம்மாவும் நினைவுக்கு வந்து போகின்றார்கள். சில தருணங்களுக்கான மதிப்பை என்ன திருப்பிச் செலுத்தி நன்றியைச் சொல்ல?
இருந்த போதும் ஏதாவது கொண்டு சொல்லலாம் எனும் நம்பிக்கையில் சின்னச் சின்ன சாமான்கள் அன்பைச் சொல்ல சேகரிக்கிறேன்.
அங்கு கடை வீதியில் 4 நபர்கள் ஒரு பேனரை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்க போய் விசாரித்தோம்
அவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையும் அப்படி நின்று இனவாதம் வன்முறை , அனுசரித்து போகாமலிருத்தல் யூத எதிர்ப்பு இவற்றிற்கு எதிராக என்று கொடி பிடித்துக் கொண்டிருந்தனர்.
அதிலிருந்த வாசகங்கள்
மற்றவரை மதித்து
வன்முறையை விலக்கி
இன் முகம் காட்டுவோம் என்பது
ஜெர்மானிய விருந்து சாப்பாடு இன்று சுசீ இன்பா கை வண்ணத்தில் , மணியும் எங்களோடு
7.11.06
இரவில் பார்த்த ஓட்டப் பல் சர்ச்சை பகலில் பார்த்து படங்கள் கொஞ்சம் எடுத்து விட்டு அருகே இருந்த புதிய தேவாலயத்திற்குள் போகின்றேன் நவீன கலைஞரால் வடிவமைக்கப் பட்ட கட்டிட அமைப்பு, இயேசுவின் உருவம் அங்கு வாசித்துக் கொண்டிருக்கும் இசை மெய்மறந்து உட்கார வைக்கின்றது.கொஞ்ச நேரம் இருந்து கேட்டு விட்டு நகலுகிறோம் நானும் ஹரிணியும்.சுவர்கள் தாண்டியும் இன்னும் இசை தொடர்வது கேட்க மூன்று இளைஞர்கள் தெருவில் நடனமாடிக் கொண்டிருந்தனர் .அவர்களது ஆட்டம் என்னைக் கவர நின்று முழுக்க பார்த்து விட்டு அங்கிருந்த ஷாப்பிங் காம்பிளஸ்க்குள் போக அங்கே நீர்க் கடிகாரம், 12 மணி நேரத்தை குறிக்க 12 பெரிய குடுவைகளும், 60 நிமிடத்தை குறிக்க 60 குடுவைகளுமாக , ஆச்சர்யமான விடயம் தான் . பச்சை நிற திரவம் சரியாக 1 மணி இரண்டு நிமிடத்தை காட்டியது. “ காடவே” எனப்படும் மிகப் பெரிய பல்பொருள் அங்காடி மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டுமே வாங்கக் கூடியது. எல்லா பொருட்களும் கிடைக்கக் கூடியதாய்.தாரிணியோடு இங்கிருப்பவர்களின் புலம் பெயர் தமிழர்கள் பற்றி வாழ்க்கை முறை பற்றியும் நிறைய விவாதித்தபடி வந்தேன்.
8.11.05
நேசிக்கிறபடியால்
கொலை செய்யப் படுகின்றேன்
உனக்கு வலிக்குமென்று தான்
உண்மைகளை புதைக்கின்றேன்.
புதைபடுகின்ற வலியோடு
கூடு தேடி அலையும்
எந்தன் உடலும்

சொல்ல முடியா உண்மைகள் சூழ்ந்து விட
தூரப் போகின்றேன்
நெருக்கடி தாங்காது

பார்க்கின்ற தூரத்தில் இருந்தும்
உணர முடியா தூரத்தில் நீ
சொல்லிப் போகின்றாய்
பெண் புதிரானவளென்று

தாரிணியும் நானும் ஸ்லாட்ச் பேலஸ் போக காலை 9 மணிக்கு பேருந்துக்காக காத்திருக்கின்றோம், ஜெர்மனிய நபர், அவரும் காத்திருக்கின்றார். என்னை உற்றுப் பார்க்கின்றார். என் நெற்றிப் பொட்டு அவர் கவனத்தை கவர்ந்து விட பொட்டு பற்றி விசரிக்கின்றார். தாரிணி அவருக்கு ஜெர்மானிய மொழியில் பதிலுரைக்கிறார். பொட்டு ஏன் வைக்கின்றார்கள்? நீங்கள் இந்தியரா? திருமணமான பெண்கள் அவசியம் வைக்கனுமா? கறுப்பு பொட்டு திருமணமான பெண்கள் வைப்பதில்லையாமே? தாரிணி பொட்டு வைக்காததை பார்த்து அப்போ உங்களுக்கு திருமணமாகவில்லையா? ஜெர்மானியர்களுக்கு சமீபத்தில் காணக் கிடைத்த ஹிந்தி திரைப் படங்களின் மூலம் இந்தியர்கள் மேல் ஒரு விதமான ஆர்வம் வந்திருக்கின்றது. குடும்ப அமைப்பு, தொட்டு விடாத காதல், ஆடைகள் இப்படி அவர்களின் பார்வை இந்தியர்கள் பக்கம் விழத் துவங்கியிருப்பது அங்கிருக்கும் அரங்கங்களீல் ஓடும் ஹிந்தி திரைப்படங்கள் வழியாகவும், உடைகள் வியாபாரத்தில் இந்திய உடைகளுக்கான தேவை கூடியிருப்பதன் மூலமும் தெரிய வருகின்றது. அவரின் ஆர்வத்திற்கான பதில்களை தந்து விட்டு பேருந்து ஏறி ஸ்லாட்ஸ் அரண்மணை போகின்றேன். இரண்டாம் உலகப் போரில் சிதிலமடைந்த அரண்மனையை மறு சீரமைப்பு அழகாய் செய்திருக்கின்றார்கள். நம்மூரில் நல்லாயிருக்கின்ற அரண்மனையையே சிதிலமடைய போட்டு வைத்திருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டி வருகின்றது. அது சரி காசு கொழிக்கும் ஐரோப்பிய நாடுகளல்லவா

கோடை காலத்திற்கு குளிர்காலத்திற்கு என்று அரண்மனை இருவிதமாக இருக்கின்றது.ஒரு அறையின் மேற்கூரையில் நான்கு பருவ காலங்களையும் குறிக்கும் படங்களும் மேல் கூரை மேலே திறக்கும்படியும் இருந்தது. ஒரு அறையில் திசை காட்டும் கருவி, மரச் சாமான்கள் பத்திரப் படுத்தப் பட்டுள்ளன. ஒரு அறையில் சீன பாத்திரங்களும் , hollend இருந்து கொண்டு வரப் பட்ட பாத்திரங்களும் வைத்து சுமார் 5000 வைத்து அலங்கரிக்கப் பட்ட அறையிது, பல்லாங்குழி மாதிரி ஒரு விளையாட்டு கருவி என் கவனத்தை ஈர்த்தது.
உள்ளே படமெடுக்க அனுமதியில்லாததால் முழுக்க கண்களால் உண்டு சுவைத்து பதிவு செய்து விட்டு வெளியே வந்தோம் பசி எடுக்க அங்கிருந்த ஒரு துருக்கி ஹோட்டலில் கபாப் சாப்பிட்டு ( இனி இரவு வரைக்கும் சாப்பிட முடியாது அந்த அளவு சாப்பாடு)
பின் Dalhan drofe போய் அங்கிருந்த மியுசியம் போய் பார்த்தோம் இந்திய ஆப்பிரிக்கன் கொரியா அருங்காட்சியகங்கள் ஒரே கட்டிடத்திற்குள் இருந்தன.இந்தியன் மியூசியத்தில்


கொரியா மியூசியத்தில் Water ahadow படம் ஓடிக் கொண்டிருந்தது.இருட்டு அறைக்குள் இரு படங்கள் ஒன்று வாட்டர் ஸேடோ,இன்னொன்று நமை குழப்பும் விதமாயும் இருந்தது. குழப்புகின்ற விதமாய் எடுக்கப் பட்ட படம் எது நிஜம் எது நிஆல் என்று நாம் யூக்க்க முடியா வண்ணம் , உண்மையில் அந்த அறைக்குள் போகவே எனக்கு பயம் வந்து , பிறகு மெல்ல கவனத்தை ஒரு முகப் படுத்தி புரிதலை சாத்தியப் படுத்திய பிறகு தான் அதன் தொழில் நுட்பம் பிரமிப்பை தந்தது. வாட்டர் ஸேடோ ஒரு தரையில் இருந்த குழி போன்ற பகுதிக்குள் நீர் நிரம்பியது. அந்த தொற்றம் நிழல் என்று நம்ப னீண்ட நேரம் எடுத்தது. நீருக்குள் விரல் ஒன்று தொட்டு மீண்டது. ஒரு கல் சப்தத்துடன் வீழ்ந்து நம் முகத்தில் த்ண்ணீர் தெளித்த பிரமை தந்து போனது ஒரு 2 நிமிட படத்தில் தோளோடு யாரோ உராய்ந்து போவது போல் சப்தமும் நிழலும் வந்து போனது.மறுநாள் பாரீஸில் நடக்க இருக்கின்ற 32ஆவது இலக்க்ய சந்திப்புக்கு கிளம்புவதற்கு பெட்டி படுக்கை தயார் செய்து விட்டு படுத்து தூங்கிப் போனேன்.
9.11.06
காலை 6.15 க்கு கிளம்பி ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகி பாரிஸ் போவதற்கு வெளியேறுகின்றோம். பாரிஸில் ஏற்கனவே வெடித்துக் கொண்டிருந்த இனக் கலவரம் செய்திகள் எங்களையும் பயமுறுத்த நிராகரித்துக் கிளம்புகின்றோம். இந்தியாவிலிருந்து பாரிஸ் போகவேண்டாம் கலவரமாக இருக்கிறதாமே என்று கேட்கின்றார்கள். நாங்களும் பாரிஸில் இருக்கும் நண்பர்களைத் தொலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கின்றது . ஆலன் (aheln ) இன்பா அவர்களின் அக்கா வீடு உணவு உண்டு அவர்களின் குழந்தைகளொடு பொழுதுகளை கழித்து விட்டு கிளம்புகின்றோம் அவர்கள் வீட்டில் ஒரு ஜெர்மானிய 80 வயது பெரியம்மா என்னை மிகக் கவர்ந்தார். அவர் தன் வீட்டில் வைத்து வளர்த்து வந்த சின்னஞ் சிறிய கற்றாலை செடி அழகிய பூ பூத்திருப்பதை எவ்வளவு உற்சாகத்தோடு கொண்டு வந்து காண்பிக்கின்றார். சுசீ அவரை பற்றி சொன்ன தகவலும் மகிழ்வைத் தருகின்றது. தன் கணவரின் நினைவாக அந்த அம்மா தன் கணவர் தங்கள் திருமண நாளன்று பரிசாக வாங்கித் தந்திருந்த ஒரு வைன் பாட்டிலை இன்றும் மிகச் சந்தோசமாக இருக்கும் தருணங்களில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லாருக்கும் ஊற்றித் தந்து இன்னும் பத்திரமாக வைத்திருக்கும் சம்பவத்தை சொல்ல , நினைவுகள் தான் மனிதனின் எவ்வளவு பெரிய மகிழ்வை தரக் கூடிய சொத்து .
3 மணிக்கு வெளியேறி ஜெர்மனியை கடந்து பெல்ஜியம் வழியாக 1200 கி. மீ தூரம் கடந்து இரவு 10 மணிக்கு பாரிஸ் வந்து சேருகின்றோம். கடலுக்கு அடியில் போடப் பட்ட பாலங்களை கடந்து பாரிஸின் நெருக்கமான குடியிருப்பு பகுதியில் ஒரு 5 அடுக்கு மாடிக் குடியிருப்பு. அங்கு இருந்த தருணங்களில் எது நினைவுக்கு வருகின்றதோ இல்லையோ ஒவ்வொரு முறையும் ஏறி இறங்கிய 86 படிகளை இப்போ நினைத்தாலும் கெண்டைக்கால் நரம்பு இழுக்கிற வலியை உணர வைக்கும், குத்தலான சுழற்படிக்கட்டுகள் ஏறுகின்ற வேகத்தை எங்கே இடை நிறுத்தினாலும் அடுத்த அடி எடுக்க விடாது கிறு கிறுக்க வைக்கும். லஷ்மி அக்கா வீடு. புதிய அறிமுகங்கள் புகைப் படக் கலைஞரும் கவிஞருமான தமயந்தி லஷ்மி அக்கா பாரீஸில் நடக்க இருக்கின்ற சந்திப்புக்கு மையப் புள்ளியாக இருந்து மனதால் ஒவ்வொன்றையும் வடிவமைக்க நல்ல ஒரு நண்பர்கள் குழு சுசீந்திரன் , அசோக், தமயந்தி , மலரக்கா என்று ( நான் சொல்ல மறந்த நபர்களும் இருக்கலாம், இவர்கள் தான் நான் நெருக்கமாக பார்த்தவர்கள்) இயங்கிக் கொண்டிருந்தது, இந்த குழுவில் தன்னை முன்னிலைப் படுத்த பிரயத்தனமெடுக்காது ஒவ்வொருவரும் வேலை பார்த்ததுவும் இந்த ஒற்றுமைக்கு ஒரு காரணம். இலக்கியம் வேறல்ல , அரசியல் வேறல்ல வாழ்க்கை வேறல்ல எல்லாம் கலந்ததே இந்த சந்திப்பு இலகிய ஆர்வம் என்று மட்டுமல்லாது இலங்கை வாழ் தமிழர்கள் பரவலாக கலந்துகொண்டிருந்தனர்.
10.11.06
லஷ்மி அக்கா காலையிலேயே வேலைக்கு போயிருக்க சாப்பிட்டு 12 மணிக்கு கிளம்பி பாரீஸ் நகரை சுற்றி வந்தோம். பெர்லினோடு ஒப்பிடுகையில் அதிலிருந்த ஒழுங்கு இங்கில்லாமலிருப்பதாக உணர்ந்தேன் அதிக கட்டிடனங்களூடான சென்னையை பார்ப்பதாக உணர்ந்தேன் இரயில் நிலையத்தில் எனக்கு முன்னிலும் பின்னிலும் தமிழ் பேச்சுக் குரல்கள் கேட்டு ஆச்சரியமும்சந்தோசமுமாய் இருந்தேன் . தமிழ் குரல் கேட்டு விசுக் கென திரும்பி பின்னால் பார்க்க அதுவரை பேசிக் கொண்டு வந்தவர்கள் அமைதியாகிப் போகின்றார்கள் தமிழ் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்ரு உரத்து பேசியவர்களுக்கு என் நெற்றிப் பொட்டு வாயைக் கட்டிப் போட்டது தம்ழர்களுக்கு தமிழர்களால் நடத்தப் படும் கடைகள் ஒரு வீதி நெடுக பெட்டிக் கடையில் வடையும் காபியும் வாங்கிச் சாப்பிடுகையில் வெளி நாட்டில் இருக்கின்றோம் என்பது மறந்து போனது. அங்கிருந்து லஷ்மி அக்கா வேலை பார்க்கின்ற இடத்திற்கு வர கேட் ஆப் பாரிஸ் போகச் சொல்லி வழி சொல்லக் கிளம்பினோம், ஒரு நீண்ட பேருந்துப் பயணம், பேருந்தில் ஏறுகையில் பல்வேறு பட்ட ஆட்களும் கூடுதலாக கறுப்பின ஆட்களாக இருக்க நகரின் மையப் பகுதிக்கு வர வர ப்ரெஞ்சு மக்கள் நிறைந்து விடுகின்றார்கள். பேருந்தில் ஒரு நபர்குடித்து விட்டு பியர் டின்னோடு வர நேருந்தில் இருந்தவர் ஆட்சேபம் செய்கின்றார்.குடி வெறியில் உடன் இருப்பவர்களை எல்லாம் அழைத்து தொந்தரவு செய்ய அதை ஒரு நபர் கடுமையாக கண்டிக்கிறார். ( குடித்தவரும் எதிர்த்தவரும் கருப்பினத்தவரே)அந்த நேரத்தில் அவர் முகத்தில் தெறித்த கோபம் மெல்ல தன் அருகில் அமர்ந்து தூக்கத்தை கட்டுப் படுத்த முடியாது விழி திறக்க தவிக்கும்குழந்தையை கரிசனதோடு நோக்க இரசித்த படி வருகின்றேன். பேருந்தை விட்டு இறங்கி கேட் ஆஃப் பாரிஸ் முன்னால் நடக்கின்றோம் போக்குவரத்து நெரிசல் கூட இருக்கின்ற இடமாக இருக்க கேட் ஆஃப் பாரிஸ் அருகில் போக முடியவில்லை அடுத்த நாளில் நிகழ இருக்கின்ற ஒரு அரசாங்க நிகழ்வுக்கென ஒத்திகை பார்க்கப் பட்டுக் கொண்டிருக்க அந்த கட்டிடத்தை சுற்றி 8 சாலைகள் வந்து சேர்கின்றன. அங்கிருந்து பார்க்க உலக அதிசயமான ஈபில் டவர் பார்க்கக் கிடைக்க அதை நோக்கி நகர எத்தனித்து பேருந்து நிலையத்தில் இருந்த வரை படத்தை பார்த்து பேருந்தில் ஏறி போகின்றோம், பேருந்து எங்களை இறக்கி விட மனி 6 ஆக 5 நிமிடம் இருக்க இருளில் உலக அதிசயம் காண கண் கொள்ளா காட்சியாக கண்முன்னே நிற்கின்றது. அதை தொட்டு விடும் ஆசையில் முழு நிலவு வானில் எழுந்து வந்து கொண்டிருந்தது . நாங்களும் அதே ஆசையில் டவரின் காலடியை நெருங்குகின்றோம் திடீரென வெளிச்சப் புள்ளிகளை யாரோ டவரின் மேல் கொட்டி விட்டார் போல் அழகாய் மின்னுகிறது.கண்ணில் கண்ட அழகை அதே விதத்த்ல் சொல்லி விட முடிகிறதா மணியைப் பார்க்கின்றேன் ஆறு சரியாக மணிக்கொரு முறா மின்னும் ஈபில் ட்வர் மேலே ஏறுவதற்கான வரிசையில் நிற்கின்றோம். இரண்டு மாடிகளாய் இருக்கின்ற டவரில் மேலே மேலே போகின்றோம் லிப்டில் முழுக்க எந்த இடத்திலுமே வெல்டிங் வைக்காமல் கட்டப் பட்ட இரும்பு கோபுரமிது. இங்கிருந்து டில்லி 6600 கி. மீ தூரத்தில் இருப்பதாக பார்க்கிறேன் ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்களும் இங்கிருந்து எவ்வளவு தூரம் எனும் குறிப்பு இருக்கின்றது. மேலே சுழலுகின்ற விளக்கு விழுகின்ற தூறல்களுள் வர்ணம் பூசிப் புதிய கலை ஒன்றை தந்து போகின்றது. குளிர் மெல்ல மெல்லக் கூடுகின்றாது . நகரின் விளக்கு அலங்காரங்களை அங்கிருந்து ரசித்து விட்டு இரண்டாம் மாடியிலிருந்து முதல் மாடிக்கு படி வழியாக இறங்குகின்றோம். பின் முதல் தளத்திலிருந்து தரைக்கு லிப்டில் இறங்கி அங்கிருந்த கடையில் பிசா வாங்க்கி சாப்பிட்டு வீடு வந்து சேருகின்றோம்
11.11.06
மறு நாள் மதியச் சாப்பாடு முடிந்த நேரத்தில் வெளியே எங்காவது போய் வரலாமென்று நான் சொல்ல புகைப் படக் கலைஞர் தமயந்தி பலமுறை பாரிஸ் வந்த போதும் செயின் நதிக் கரையை இதுவரை படமெடுத்ததில்லை என்று சொல்ல செயின் நதிக் கரைக்கு போகும் வழியை லஷ்மி அக்காவின் பையன் கபிலன் வரைந்து தர பெற்றுக் கொண்டு கவனமாக வழியை தொலைத்தோம்
பாதையை தொலைத்து விட யாரிடம் விசரிக்கலாம் என்று யோசிக்கிறோம் “ இந்தியன் குசினி” எனும் சாப்பாட்டு விடுதி கன்ணில் பட உள்ளே போய் ஆங்கிலத்தில் விசாரிக்க அவர் என் நெற்றியை பார்த்து விட்டு இந்தியரா என்று உற்சாகமாகி ஹிந்தி தெரியுமா? என்று கேட்கிறார். பன்மொழி பல் இனம் என்று வாழ்ந்த போதும் தாய் மொழி கேட்க ஆசைப் பட்டு இருப்பது , புரிகின்றது.அவர் எங்களுக்கு ஆர்வத்தோடு வழி சொல்லி விடை தர எங்கள் கண்ணில் மிக நீண்ட பாலம் பட ஆறு வந்து விட்டது என்று போய் எட்டிப் பார்த்தால் பாலத்தினடியில் கட்டிட வெளிகள் நிரம்பியிருக்க ஏமாற்றத்தோடு மீண்டும் தேடித் திரிந்து இது தான் சரியான பாதை என்று உறுதி செய்து பாலத்தில் பாதி வரை வந்த பின்புதான் மிகப் பரிய ஆறு கண்களில் சிக்க பின் அது தமயந்தின் புகைப்படக் கருவிக்குள் சிக்கியது.
ஒரு புகைப்படக் கலைஞரூடான அநுபவம் சுவாரசியம் தான் நதியைப் படமெடுக்க வந்தவர் எனை தொடர்ந்து படமெடுக்கத் துவங்க தயக்கமும் வெட்கமும் வந்து புகைப் படத்தை கலையாக்கும் அவர் நுட்பத்தை கவனமெடுக்கத் தயக்கம் விலகிப் போகின்றது. வித்தியாசமான அநுபவம், ரோட்டில் நான் நடந்த படி இருக்க என் முன்னால் தமயந்தி எனை படமெடுத்த படி ஒவ்வொரு அசைவையும் படமெடுத்த படி நகர . நான் விரும்பிச் சுவைத்த தருணங்கள்.
நதியோடு படகோடு புறாக்களோடு புல்வெளியோடு 500 படங்கள் எடுத்து முடித்த பின் வீடு திரும்புகின்றோம்.எல்லாரும் இரவுச் சப்பாட்டுக்குத் தயார் செய்ய நான் மறு நாள் நிகழ்வில் பேச வேண்டியவற்றுக்கு தயார் செய்ய தனியறையில் இருக்க ஒரு குரல் “திலகபாமா” என்று கேட்கின்றது எனக்கு சந்தேகம் பாரிஸ் நகர வீதியில் நம்மை யார் அழைப்பது . நாங்கள் இருப்போதோ 5 வது மாடியில் பிரமையோ என்று யோசித்திருக்கையில் மீண்டும் அதே குரல் நிஜமென்பதை உணர்த்த எழும்பி தயக்கத்தோடு என்னை யோரோ அழைக்கிறார்கள் என்று சொல்ல உடன் இருந்தவர்களும் நம்பவில்லை , கனவு கண்டு விட்டேனோ என்று யோசிக்கிறார்கள். மீண்டும் திலகபாமா எனும் குரல் , சுகன் என்பவரின் குரல் எனை சந்திக்க ஆவலோடு வந்த சுகனை நான் ஒளிந்து கோண்டு இல்லை என்று சொல்லி பின்னர் கேலியோடு சந்தித்தோம்.எல்லாருடனுமான சாப்பாடு இலக்கியப் பேச்சு, கேலிப் பேச்சுமாக, கிளம்புகையில் சுகன் ஏதாவது அதிகமா பேசியிருந்தால் பெரிசா எடுத்துக் கொள்ளாதீங்க எல்லாம் கேலிக்குத்தான் என்று சொல்லி நகர்ந்தார்.
12.11.05
மறுநாள் காலை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காலை 8 மணிக்கே வெளிக் கிளம்பி நிகழ்வு நடக்க இருந்த இடத்திற்கு போய் அரங்கத்தை வடிவமைக்கின்றார்கள் அசோக் ஒவ்வொரு விசயத்திலும் முக்கிய கவனமெடுத்து அரங்கை வடிவமைக்கின்றார். ஓவிய நண்பர்கள் படங்களை சுவர்களில் மாட்டி இதுவரை வெறும் அறையாக இருந்ததை கலை உணர்வோடு கூடிய அரங்கமாக மாற்றுகின்றார்கள்
தமயந்தி தனது புகைப்படங்களை பார்வைக்கு அழகாய் கலைத்துப் போட்டு வைக்க 10.30 மணியளவில் ஏறக்குறைய எல்லா இலக்கிய நண்பர்களும் வந்து விட விழா துவங்குகின்றது சுசீந்திரன் அவரது துவக்க உரையுடன்
அரங்கில் குளிர் வந்து விட்டது எனக்கு. ஓடுகின்ற ஹீட்டருக்கு அடியில் இருந்தால் காய்ச்சல் அடிப்பது போலவும் அதை விட்டு நகரத் துவங்கியதும் குளிர் பிடித்து விடுவதும் மிகப் பெரிய துயரமாய் இருந்தது.இன்றைக்கு பேசுவதாய் இருந்த என் பேச்சு நாளை வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். கருத்தரங்கு சிறப்பாய் நடைபெறுவதற்கான என்னுடைய ஒத்துழைப்பை நல்கத் தயாராக இருப்பதாய் சொல்லி விட்டு, அன்றைய கூட்ட முடிவில் No more tears படம் காட்டுவதற்கான தயாரிப்பில் இருக்க இடைவெளியில் ஷோபா சக்தி இந்தியா வந்திருந்த போது அ. மார்க்ஸ் வீட்டில் நண்பர் சுசீந்திரனுடன் போன போது அங்கு பாடிக் காண்பித்த “ கத்திரிக்காய்க்கு” எனும் நாட்டுப் புறப் பாடலை இப்பொழுது அவசியம் பாடுங்கள் என்று சொல்ல நான் பாடத் துவங்க, அதுவரை கணமான விசயங்களை பேசி , சிந்தித்து கவனித்து ஓய்ந்து போயிருந்த எல்லாரும் உற்சாகமானார்கள்.நண்பர்கள் இன்னும் சிலரும் நாட்டுப் புறப் பாடல்களை பாடத் துவங்க ஆடவும் வழி வகுத்தது. அந்த உற்சாகமான பொழுதுகளுக்கு பின்னர் படம் துவங்க, அரங்கத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒப்படைக்க வேண்டி வந்ததால் படம் பாதியிலேயே நிறுத்தப் பட்டது.
13.11.05
இன்று எனது பேச்சு, எனக்கு முழுத் திருப்தியான பேச்சாக இருந்தது அந்த அரங்கம். நான் வந்த வேலையை நிறைவாக செய்து முடித்த உற்சாகத்துடன் இருக்கின்றேன். ஒட்டு மொத்த நிகழ்வின் அலுப்பும் நிறைவாக முடித்து விட்ட மகிழ்வின் நிறைவும் தொற்றிக் கொள்ள விழா முடிந்து வீடு திரும்பி தூங்கிப் போனோம்.திரும்புகையில் ஜமுனா ராஜேந்திரன் எங்களோடு நடந்து முடிந்த விசயங்களை உரத்து யோசித்தபடி வந்தார்..

14.11.05
மீண்டும் செயின் நதிக் கரைக்கு போய் விட்டு வந்தோம் இன்றும் நானும் தமயந்தியும்.மாலை 6 மணிக்கு பாரீஸை விட்டுக் கிளம்பினோம்.இரவு 1 மணிக்கு ஆலன் வந்து சேர்ந்தோம் . காலை 10 மணிக்குத் தான் முழிப்பு வந்தது
12 மணிக்கு கிளம்பி மாலை 5 மணிக்கு பெர்லின் வந்து சேர்ந்தோம். என் பயணம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. மனது ஒரு பக்கம் வீட்டை, குழந்தையை கணவரை என்று நினைக்கத் துவங்குகின்றது. அடுத்த வரம் இன்னேரம் சிவகாசியில் இருப்பேன். மனது அடிக்கடி சொல்லிக் கொள்கின்றது. ஏறக்குறைய ஒரு தேர்வுக் காலத்தை நிறைவுக்கு கொண்டு வருகின்ற விடுபடலை என் மனம் உணர்கின்றது , அதே நேரம் லண்டனில் போனமுறை சுசீயோடு இருந்தேன், இந்த முறை தனியே இருக்க வேண்டுமே தயக்கம் பயமாயும் உருளுகிறது. ஊருக்குக் கிளம்பிவதற்கு தேவையான சாமான்கள் வாங்க அலைந்து திரிய சுசியிடம், இறைச்சி சமைத்து தரும் படி கேட்க இரவு விருந்துச் சாப்பாடும்,இயல்பாக பேசுவது போல் பேசினாலும் பிரிவுத் துயரம் கணக்கத் துவங்கியுமிருக்கின்றது.
16.11.05
இன்று 10.25 க்கு விமானம் லண்டனுக்கு , 7 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்புகின்றோம் நானும் இன்பாவும் சுசியும். பிரிவை துயரமாக மாற்றி விடக் கூடாது எனும் பயம் எனக்குள் என்னதான் இந்தியா திரும்புகின்றோம் , விட்டுப் பிரிந்து வந்த கோகுல் வீடு நண்பர்கள் பார்க்கப் போகின்றோம் என்ற போதும் கண்ணில் நீர் கோர்க்கின்றது.வழியனுப்புபவர்களின் எல்லைக்குள் அவர்கள் நிற்க நான் கடந்து உள் நுழைந்து போகின்றேன், சென்னையில் கிளம்பிய போது வைகை செல்வி கண்ணில் நீர் கோர்க்க இருந்ததை நினைத்துப் பார்க்கின்றேன். உணர முடிகின்றது அந்த வலியை.சுசியும் இன்பாவும் போன பிறகு அழுது தீர்க்கின்றேன் சந்தோசமாய். மனசு கொஞ்சம் லேசாக நின்று கொண்டிருக்கின்ற விமானங்களின் பிரம்மாண்டம் சின்னச் சின்னதாய் மாறிப் போவதையும் பார்க்கின்றேன்11.30க்கு விமானம் லண்டன் வந்து சேர விமான நிலையத்திலிருந்து வெளிவர நாதன் ஏத்திப் பொக வந்திருந்தார். நாதனோடு க்ரோய்டன் பயணம் அவர்களோடு இரவு தங்கி விட்டு மறுநாள் காலை வெளிக்கிளம்ப யோசிக்கிறேன்
17.11.05
காலை எழும்பி சாப்பிட்டு மேப் , போகுமிடம் தகவல்களோடு வெளிக்கிளம்பினேன். மீண்டு வருவேனா? பயமும் ஒரு புறம் மொழி பிரச்சனை இல்லையெனும் நம்பிக்கையையும்.வெஸ்ட் குரொய்டனிலிருந்து இரயில் எடுத்து விக்டரி வருகின்றேன். அங்கிருந்து வெளிவந்து நடந்த படியே பக்கிங்காம் அரண்மனை போகத் தீர்மானித்து நடக்க ஒரு இடத்தில் செண்டர் லண்டன் வரைபடம் வாங்கிக் கொள்கின்றேன். நடந்த படியே அரண்மனை அருகே குயின் கேலரி போகின்றேன்.இந்தியப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்க்ன்றன. திப்பு சுல்தான் கிரீடம், ஷாஜஹான் நகை, பார்க்கப் போறாமையாக இருக்கின்றது எங்கள் சொத்து எங்கள் சொத்து என்று மனம் எரிகின்றது என்ன செய்ய முடியும்
செப்டம்பர் வரைதான் அரண்மனையை பார்க்கலாமாம், வீதிகளில் தனியாளாய் குளிரும் வெயிலும் இணைந்த அந்த பொழுதுகள் சுகமானவை.தனியாக எங்கும் போய் மீண்டு வர முடியும் தனம்பிக்கை பிறக்கின்றது அங்கிருந்து வின்ஸ்டன் சர்ச்சில் மியூசியம் போய் பார்த்து விட்டு அங்கிருந்து வெஸ்ட் மினிஸ்டர் இரயில் நிலையத்தில் இரயில் ஏற நினைத்து போனவள், இரயில் நிலையத்தின் இன்னொரு வாசல் வழி வந்து நிற்க லண்டன் ஐ என சொல்லப் படும் மிகப் பெரிய ரங்க ராட்டினம் ,மாலை நேரச் சூரிய வெளிச்சத்தில் தேம்ஸ்நதியை நடந்த படி பார்த்து விட்டு மீண்டும் இரயில் நிலையத்துக்குள் வந்து அங்கிருந்து ஹவுன்ஸ்லோ போய் தீபம் அலுவலகம் கண்டு பிடித்து போகிறேன்.போன முறை வந்த போது இவர்களது அலுவலகத்தை கண்டு பிடிக்க ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் நாதனொடு சுற்றி வந்தது நினைவுக்கு வர.நித்தியானந்தன் வரவேற்கிறார்.இடம் கண்டு பிடித்து வந்து சேர்ந்ததை மெச்சுகின்றார். 6மணி இலங்கைத் தேர்தல்செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற பரபரப்பில். நானும் அவர்களோடு கலந்து கொள்கின்றேன் நவஜோதி பத்மநாபா ஐயர் ஆகியோர் பேசுகின்றார்கள். பத்மநாபாஐயர் அன்று நடந்த கூட்டத்தில் நான் பேசியதை நியாயமென உணர்ந்ததாக சொல்கின்றார்.. இரவு 3 மணி வரை தீபம் டி.வி யில் இருந்து விட்டு . வீடு போனேன்.
18.11.05
ஐரோப்பிய பயணத்தின் கடைசி நாள் இன்று. 10.30 மணிக்குத் தான் எழுந்தேன் .மீனா அக்கா வேலைக்கு போயாச்சு .மருத்துவமனைக்கென்று பெர்லினில் ஆர்டர் கொடுத்திருந்த ஆம்பு பேக்( செயற்கை சுவாசத்திற்கு பயன்படுதக் கூடிய சாமான்) நான் கிளம்பிய அன்று வந்திருப்பதாகவும்மறுநாள் பெர்லினில் இருந்து கிளம்பிய நண்பர் ஒருவரிடம் கொடுத்து விட்டிருப்பதாகவும் சொல்ல. அந்த நண்பரோ வீட்டு முகவரியும் போன் எண்ணும் தர மறுத்து நாதனுக்கு தொலைபேசியில் தான் லண்டன் பால இரயில் நிலையத்தின் அருகில் இருக்கின்ற ட்டூலி தெருவில் பெகல் பாக்டரி ஷாப்க்கு அருகில் தான் அதை கொண்டு வந்து காத்திருப்பதாக சொல்ல , நான் அந்த இடத்தை கண்டறிந்து போகவென்று கிளம்புகின்றேன்.ஹவுன்ஸ்லோவில் இருந்து 647 பேருந்து எடுத்து ஈலிங் ப்ராட்வே இறங்கி டுபில் எடுத்து அங்கிருந்து லண்டன் பிரிட்ஜ் போகின்றேன்,. அட எவ்வளவு எளிதாக சொல்லி விட முடிகின்றது. ஆனால் வார்த்தைகளுக்கு அப்பால் தேடித் திரிந்த சுவாரசியம் இருக்கின்றதே. 1 மணிக்கு போக வேண்டியவள் 3 மணிக்குத்தான் வந்து சேருகின்றேன், நாதனுக்கு போன் எடுக்கிறேன் நான் இடத்தில் காத்திருப்பதாகவும் அந்த நன்பர் தொலைபேசினால் வரச் சொல்லியும். அரைமணிதியாலம் காத்திருக்க என் கைக்கு சாமான் கிடைக்கின்றது.மிகப் பெரிய சாதனை செய்து விட்ட தெம்பும் உற்சாகமும் கிடைக்கின்றது.
Brige- west minister-victoria-west croydon வந்து நாதன் வீடு வந்து சேர்ந்து பயனத்திற்கு தயாராகி 8 மணிக்கே படுத்து தூங்கிப் போனேன் ,இது என் கடைசி இரவு ஐரோப்பாவில்..
19.11.05
எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு நன்றி சொல்லி ஹீத்துரோ விமான நிலையத்தில் விமானம் ஏறி , கிளம்பத் துவங்கவும் உடம்பெல்லாம் வலி அலுப்பு தொற்றிக் கொள்கின்றது. 41 நாட்களின் அலைச்சல் வலி. கொடுத்த சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு பக்கத்து இருக்கையில் ஆள் இல்லாது இருக்கவே படுத்து தூங்கிப் போகின்றேன்.கடிகாரத்தில் மணி விடியற்காலை 5 காண்பிக்க வெளியே 10 மணிக்கான வெளிச்சம். மேலிருந்து பார்க்க அழகான தோற்றத்துடன் மாலத்தீவுகள் . கடந்த சுனாமிக்கப் புறம் எப்படி இவையெல்லாம் பத்திரமாய் இருக்கின்றது என்று வியப்பு தொற்றிக் கொள்ள., அங்கிருந்து இலங்கை பின் சென்னை மாலை 7. 30 மணிக்கு வந்து இறங்குகின்றது.வரவேற்க வைகை செல்வியும் ராதா கிருஷ்ணனும் வந்திருக்க
இதோ சொந்த மண்ணில் சுவாசக் காற்றதை அதன் கண கணப் போடு அநுபவிக்கின்றேன் இந்த வெப்பம் எப்பவும் தேவையாயிருக்கின்றது. குளிர் நினைக்கவே பயமாய் இருக்கின்றது இந்த வெப்பம் எப்பவும் தேவையாயிருப்பதை தூர இருந்த நாட்கள் உணர்த்தியிருக்கின்றன.
இருக்கைகள்
கட்டிப் போட்டிருக்கின்றன
பறந்ததாய் சொல்லிப் போகின்றோம்
எப்பவும்
முரண்களோடவே நாம்

முட்டி வலிக்க
நீட்ட முடியாமலும்
நடக்க முடியாமலும்
அலுமினியப் பறவை எனைத் தூக்கி
கடல் கடக்க
காலங்கள் சுருங்குகின்றன காலடியில்
நீ இப்போதிரவிலும்
நான் சுட்டெரிக்கும் வெயிலிலும்
சூரியனுக்கும் கிழக்கே
விரட்டித் திரிந்த படி இருக்க
பிடிக்க முடியா சூரியன்
எப்போதும் ஒளியோடு
இருந்து விட
வரம் தந்து போகின்றது
மேகம் தூவுகின்ற
நீர்த் தூறலாய்
என் நினைவுகளை
பாலை மணல் மேடுகளிலும்
கடல் நீருள்ளும்
கட்டிட கூட்டங்களுக்குள்ளும்
மூடிய கதவு தாண்டியும்
தூவிப் போக
விதையுறக்கம் காணுகின்றன
மீனுள் மோதிரமாக
உதிரும் மணலினை
ஒட்டவைக்கும் ஈரம்
கொண்டு வரும் ஊற்றாக
கட்டிட வெளிகள் தாண்டி
சுழலும் விசிறியின் காற்றாக
துகில் களையும்
முற்றும்
posted by Thilagabama M @ 11/28/2006 12:34:00 pm   1 comments
Thursday, November 16, 2006
கவிதை
போகசக்தி

எனக்கென்று எப்பவும்
பயிர் வளர்க்கின்றேன்
ஆசை ஆசையாய்
புதுமுளை வாசத்தில் மகிழ்ந்து
குழந்தை தழுவலில் கரைந்து
பூ விரிந்து மணம் எனக்குள் கரைய
வழியும் தேன் என் விரல் நனைக்க
சிலநேரம் அதன் நிழலில் குளிர்ச்சியாலும்
காதலெனும் பெயரோடிருக்க

எனைச் சிறைவைக்க
சந்திரன்கள் நினைக்கையிலெல்லாம்
என் பயிரைக் குறிவைக்க
தூரப் போகின்றேன்
இது எனதல்ல என்றுணர்த்தி

இப்போ நானும் சுதந்திரமாய்

நான் வளர்த்த கன்று
நூறாவது தலைமுறைக்கு
சுதந்திரங்களை விளைவித்துக் கொண்டிருந்தது
போகசக்தியாய்


வானும் நிலவும் சேர்ந்திருப்பதாய்
பலர் சொல்லித் திரிய
என்னோடு நெருக்கமென்று
நிலவும் காண்பித்து திரிய
நானோ எப்போழுதும் தூரத்தில்
நிலவோடும் ஒட்டாது
posted by Thilagabama M @ 11/16/2006 09:49:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates