சூரியாள்

Saturday, January 28, 2006
மனவெளிப் பயணம்
வடக்கு வாசலில் கட்டுரையோடு வந்திருக்கும் பெட்டி செய்தி


பெண்கள் சந்திப்பு , லண்டன்

அக்டோபர்15, 16 நடந்த பெண்கள் சந்திப்பு , இந்த முறை இராஜேஸ்வரி அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டு ஒருங்கிணைக்கப் பட்டிருந்தது. இலங்கை கனடா இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கல் வந்திருந்தனர். ஓவியர்கள், எழுத்தாளர்கள், இயக்கம் சார்ந்த பெண்கள் இப்படி எதிலும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ளாதவர்களும் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்த இருபது பேர் மறுநாள் நிகழ்வு முடிவின் போது 50 பேர் வரை வளர்ந்திருந்தது. இந்நிகழ்வில் முக்கிய விடயம் பெண்களின் எழுத்து ஓவிய படைப்புகள் தாங்கி வெளி வந்திருந்த சந்திப்பு மலர் ஆகும் பல்வேறு தளத்திலிருந்து படைப்புகளை தாங்கி வந்திருந்த போதும் புலம் பெயர்ந்த பெண்களின் படைப்புகள் ( அவர்களுக்கு அவர்களாலேயே உருவாக்கப் பட்டதளம் என்பதாலும், வருடந்தோறும் சில தமிழ் நாட்டு பெண் படைப்பாளிகளின், படைப்பு என்னதும் வந்திருந்த போதும் ) இடம் பெற்றிருக்கின்றன.மேற்கத்திய கலாசாரத்திற்குள் வந்து விட்ட போதும் இரு படகுகளிலும் சவாரி செய்ய நினைக்கும் மனநிலையில் போலித்தனங்கள் நிறைந்து வாழ எத்தனிப்பது படைப்பின் வழி நிதர்சனமாக தெரிந்தது.பொதுவான இலக்கிய அமைப்புகளில், ஆண்கள் ஆக்கிரமித்து விடுகின்ற மேடை அரங்கு போன்ற தயக்கம் தரும் சூழலிலிருந்து விடுபட்டு எல்லாரும் எல்லாமும் பேசி, பகிர்ந்து கொள்வதாக நிகழ்வு இருந்தது. மருத்துவர் கீதா பேசிய விசயங்களின் பின்னிலும் பின்னால் நடந்த சில விவாதங்களின் போதும்” இதைக் கேட்கவா கனடாவிலிருந்து வந்திருக்கிறேன்” என்று சுமதி ரூபன் சொல்லிய படியே இருக்க அந்த மொழி வழி வந்த அகங்காரம் சலிப்புற வைத்தது பலரையும்
posted by Thilagabama M @ 1/28/2006 01:43:00 pm   0 comments
Friday, January 27, 2006
மனவெளிப் பயணம்


மனவெளிப் பயணம்

இருந்து பழகிய இடம் சுகமானதாய் இருந்த போதும், புதிய அனுபவங்களூடாக தன்னை கண்டறிய
நினைப்பவர்களுக்கு பயணம் எப்பவும் பிரியமானதாகவே இருந்து வருகின்றது. அதிலும் பெண்ணின் மனவெளி இதுவரை இருந்து பழகிய இடமிருந்து வெளிக் கிளம்புவதென்பது மிக அரிதானதாகவே இருக்க, எழுத்துலகிற்கு அறிமுகமாயிருந்த ஆரம்ப நாட்களில் சந்திக்கும் அனைவரும் சொன்ன வசனம் ஒன்று” பயணப் படுங்கள்” என்று.
பெண்ணின் இருப்பு வாழ்வு எல்லாம் ஆதிக்க சமுதாயம் தீர்மானித்ததாய் இருளுக்குள் இருக்க, பெண் தன்னை கண்டறிய இப்படியான தன்னிச்சையான பயண அனுபவங்களும் தேவைப்படுக்கின்றன என்று நான் நம்பியதை இந்த பயண முடிவுகள் சரியென்று சொல்லியிருந்தன. அப்படியாக நான் கடந்த பயண மன வெளிகளை வெறும் இடமும் காலமும் மட்டுமல்ல, உணர்வுமான வெளிகளை இந்த கட்டுரையில் பேசப் போகின்றேன்
மெல்ல மெல்ல ஓடி வேகத்தைக் கூட்டி ஒரு கட்டத்தில் காற்றை அறுத்துக் கொண்டு மிதந்த படி பயணிக்க துவங்கியது .பயணிக்க வேண்டிய தூரம் 8662 என்று விமானத்தில் இருந்த தொலைக்காட்சியில் ஒரு அலைவரிசையில் தகவல்கள் நாம் கேட்காமலே வந்து போகின்றது. 35000 அடி உயரத்தில் 831 கி மீ வேகத்தில் பயணப் பட கையில் எடுத்த எனது குறிப்பேடு 8ம் தேதியில் என் கண் முன்னால் விரிய இப்பொழுது மனமும் விமானமும் யாரை யார் முந்துவதென போட்டியிடுவதாய் எனக்குப் பட்டது. நிலங்கள் நிறம் வெளுத்து கண்களிலிருந்து மறைந்தே போயின. வெளியில் எங்கும் நிசப்தம் உறைந்து கிடப்பதாய் கண்ணுக்கு புலப்பட்டது. காலடியில் கடல்கள் காணாது போயின. எவ்வளவு நெருங்கினாலும் தொட்டு விடவோ கடந்து விடவோ முடியாததாய் தூரத்து தொடுவானம். எது மேகம் எது வானம் ? எல்லாம் ஒரே வெள்ளைப் போர்வைக்குள் ஒளிந்து கொள்ள ஒரு கட்டத்தில் பார்ப்பதற்கென்று ஒரு வெளியும் இல்லாது வெண்மை நிரவித் தெரிய
நான் எங்கிருக்கின்றேன் ? நீரிலா நிலத்திலா, வானத்திலா, காற்றிலா ஒளியிலா பஞ்ச பூதங்களுக்குள்ளும் அல்லாத ஒன்றிலா? எந்தக் காலத்தில்? காலம் , கடிகார முட்களுக்குள் சிக்கியதா? இந்தியக் கடிகாரம் ஒரு நேரமும், இலங்கை கடிகாரம் ஒரு நேரமும் இலண்டன் கடிகாரம் ஒரு நேரமும் சொல்ல நானோ எனக்கான சிந்தனைத் தளத்தில் எனக்கான நேரத்தில்.
மெல்ல சின்ன உறுத்தல் இருக்கத்தான் செய்கின்றது. அம்மா வீடு கூட இத்தனை நாட்கள் மொத்தமாய் போய் இருந்ததில்லை நான், 41 நாட்கள் பயணம். உறுத்தலை நினைக்க மறத்து தூங்கிப் போன இரவு எதிரில் வந்து போனது. ஆம் இப்பொழுதுதான் நில எல்லைகளையும், நீர் எல்லைகளையும் கடக்க எனக்கான பொழுதுகள் உதயமாகின்றன.
தூரத்து நீலம்
வானமா கடலா
வெள்ளை நிறங்கள்
மேகமா, தொடு வானமா
என்னையும் இவ்வளவு
தூரத்தில் நின்று பார்
பிடிக்க முடியாத
நிறமாக குளிராக
நான் மாற தொலைகின்றன
எனதும் உனதுமான எல்லைகள்
எங்கிருந்து துவங்கினேன்.? நினைக்கவே வியப்பாகத்தான் இருக்கின்றது. பட்டி வீரன் பட்டி எனும் கிராமத்தில் தனியே வெளியே செல்ல அனுமதி அளித்து விடத் தயங்கும் குடும்பம், சமூகச் சூழலிலிருந்து இத்தனை நாள் தனியாகப் பயணம் நினைக்க நினைக்க நெஞ்சு உரம் ஏறுகின்றது. கடைசி நேர விமான ஏறுதலுக்கு முன் எல்லாவற்றையும் போட்டு விட்டு வீடு போய் விடலாமா என மனம் தடுமாறியது தாண்டி, பறந்து கொண்டிருப்பது நினைத்து தனியாக சிரித்து கொள்ள எதிர்த்து வந்த விமான சிப்பந்தி எனைப் பார்த்து தானும் முறுவலித்துப் போகின்றார்.
8.10.05
தூர தேசப் பயணம் மூன்று மாதங்களுக்கு முன் மெல்லத் திட்டமிட்டது. பெண் போகலாமா? அதுவும் தன்னந்தனியாக புருசன் குழந்தை விட்டு போகலாமா? என்னிடம் நேரடியாக கேட்கப் படாத கேள்விகள் சுற்றிச் சுழன்று அவ்வப் போது என்னை மெல்லத் தீண்டி என் எண்ணங்களைக் கலைத்துப் போடப் பார்க்கின்றன
இழுத்துச் செருகிய முந்தானையாய் மடிப்பு கலையாது , பின் குத்திய சேலையாய் என் எண்ணங்களை எத்தனை வீசும் காற்றுக்கும் அசைய விடாது வைத்திருக்கின்றேன்.
ஒரு பதினைந்து நாட்களுக்கு என்று திட்டமிட்டது இன்று ஒரு மாதப் பயணத் திட்டத்தில் வந்து நிற்கின்றது ஒரு மாதம் போனா வீட்டுக் காரர் எப்படி சமாளிப்பார். கேள்விகள் ?
எத்தனை வீடுகளில் கணவர் மாதக் கணக்காய் வருசக் கணக்காய் விட்டுப் போக மனைவி , நீங்கள் அலட்சியமாய் சொல்லுகின்ற பெண் தனியாக வாழ்வைச் சமாளிக்கும் போது ஆண் ஒரே ஒரு மாதம் சமாளிக்க மாட்டாரா என்ன?
பதிலா? கேள்வியா? விடை சொல்லனுமா? பதில் தெரிந்தால் தானே விடை சொல்ல அவர்கள் கேள்வி கேட்டது பதிலுக்காக அல்ல என் பயணத்தை நிறுத்தி விட
ஒரு வேளை நான் ஒரு கணிணி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து அலுவலகப் பணியாக 6 மாத பயிற்சி என்று அனுப்பினால் பெருமையாக சொல்லிக் கொள்ளக் கூடும் சுற்றமும் நட்பும், இப்போதோ நல்ல அம்மாவாக இருக்க கட்டளையிடுகின்றன.
உன் குழந்தை உன்னை விட்டு இருந்திடுவானா? அடுத்த கேள்வி
கூட வரேன்னு சொல்லலையா?
அவனிடமே கேளுங்கள் என் பதில்
நோ ப்ராபிளம் நான் இருந்து கொள்வேன். இப்பவும் அம்மா ஊருக்கு போனா நான் தானே பார்த்துக் கொள்கின்றேன், அவனின் பொறுப்பான பதிலை பாசமில்லாத பதிலாக என் வளர்ப்பு பெருமையாக சொல்லப் படாது , மாற்றி வாசிக்கப் படுகின்றது.
ஒரு மழை நாள் இரவில் மொட்டை மாடியில் காயப் போட்டிருந்த துணி நனைய விடாது எடுக்கப் போய் நான் நனைந்து கீழிறங்க , ஈர உடை மாற்றி அறை விட்டு வெளி வர என் பையன் அழுது கொண்டிருந்தான். அருகில் சென்றேன். புரியாமல் மடிமீது சாய்த்தேன். ஏண்டா அழுகுறே? என் கேள்விக்கு
நீங்க செத்துப் போயிடுவீங்களா என்று கேட்டான்? அதிர்ந்து போனேன் ஏன் அப்படி தோணுச்சு என் று கேட்க என் friend அம்மா காய்ச்சல்ல இறந்து போயிட்டாங்களாம், நீங்க மழையில் நனைஞ்சுட்டீங்க , காய்ச்சல் வரும் வந்தா நீங்களும் செத்துப் போவீங்களா?
தூக்கி வாரிப் போட்டது . என் இருப்பு , அன்பு தரும் சந்தோசங்களை விட அது இல்லாமல் போகும் போது அவன் உடைந்து போவான் என்று நேரிடையாக பார்க்க கிடைத்த சந்தர்ப்பத்தில் உறுதி எடுத்தேன்.
என் பிள்லைகள் எனை நம்பியல்ல அவர்கள் நானில்லாத பொழுதும் சமாளிக்க வாழப் பழக வேண்டும், நானில்லா விட்டால் வீட்டில் எதுவுமே அசையாது என்று எல்லாரையும் போல் சொல்வது பெருமையல்ல அது கூடாது என்று என் தீர்மானிப்பில் இரு வருட பயிற்சி , இன்று நானில்லா விட்டாலும் உடையாது நான் பார்த்துக் கொள்வேன் எனச் சொல்லப் பழகியிருக்கும் சின்ன மகன்.
உலகத்திலேயே எந்த குடும்பப் பெண்ணு இப்படி போட்டுப் போக நினைக்க மாட்டா
அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலை . எனக்கு கிடைச்சிருக்கு நகர்ந்து முன்னேறி நிறுவியே ஆகனும் நான்.
லஷ்மி அம்மாளிடம் முறையீடு, நீங்க தானே குரு சொல்லுங்களேன்.போகக் கூடாதுனு, அவ கெட்டிக் காரி நினைச்சதை சாதிப்பா விடுமுறையில வங்கி கடன் வாங்கி குடும்பத்தோடு போய் வரட்டும் இப்போ வேண்டாம். என் மாமனாரின் முறையீடு
அடுத்து என் அப்பாவிற்கு கடிதம் அப்பா கடிதத்தை தூக்கி மூலையில் வைத்திட்ட போதும் எனக்கு கடிதம் எழுதுகின்றார். மாப்பிள்ளையின் அனுமதியோடு தான் போகிறயா? எனக்குத் திரும்ப கேட்க ஆசை, “ என்னை என்ன வித்துபுட்டீங்களான்னு “ ஆனால் பாவம் தாங்க மாட்டார்கள். எனக்கான விசயத்திற்கு யாரிடம் அனுமதி கேட்கனும்?
“ எல்லாம் எங்கள் இருவரின் திட்டமிடுதலிம் பேரில் தான் நடக்கின்றது” அந்த பதிலோடு நிறுத்திக் கொள்கின்றேன்
எப்படியோ இந்த பயணத்தில் சொல்ல முடியா விசயங்களும் அதை சொல்லி விடுகையில், எனது வெற்றிகள் தோல்விகளாக மாறிப் பொகும் சாத்தியக் கூறுகள் இருப்பதால் சொல்லாமலேயே விடப் படுகின்ற வெற்றிடங்கள் இருக்கட்டும்
ஆனால் அதையும் சேர்த்து பேசக் கூடிய சாத்தியங்களைத்தான் நானும் வெற்றியாகக் கருதுகின்றேன். அப்படியான நாட்கள் சாத்தியமாகாதவரை காத்திருப்பதுதான் உங்களுக்கும், தொடர்ந்து அதற்காக போராடுவதும்தான் எனக்கும் நல்லது
இது என் பயணமா? இல்லை தனித் திறமைகள் உள்ள பெண் சிதைந்து போகாமல் குடும்ப குகைக்குள் போய் தன்னையும் நிறுவி வரும் முயற்சி.
எந்நேரமும் யாரும் ஏதாவது சொல்லி நிறுத்தி விடக் கூடிய ஆபத்து எப்போதும் தலை மேல் தொங்கும் கத்தியாய்
இன்றைய பொழுது போயிற்று நாளை….ஞாயிறு… செவ்வாய் பயணம்


விமான சிப்பந்தி சாப்பாடு கொண்டு வந்து தர ஆரம்பிக்க நாட்குறிப்பை மூடி வைக்கின்றேன். என்றோ விதைத்த விதைகள் இன்று என் பயணத்திற்கு அறுவடையாய் கை சேருகின்றது. சூழ இருந்த சமூகம் சரியென்பதா? தவறென்பதா? எனத் தடுமாறி சிந்தித்த இடைவெளியில் வெளிக் கிளம்பியிருக்கின்றேன். திரும்பி வருகையில் சரியென்று சொல்ல வைப்பதற்கான ஆயுத்தங்களோடு தரை இறங்குவேன்.
11 மணி நேரப் பயணம். 10.30 மணிக்கு தொடங்கியது மணி இப்பொழுது மாலை 7.15 என்று என் மணிக்கூடு சொல்கிறது. வெளியே காலம் இன்னும் சூரியனின் முகம் காண்பித்து இருளை காணாது போகச் செய்திருக்கின்றது மணல் மேடுகள் சூரிய ஒளியை விழுங்கி, நிழலை துப்பிய அராபிய நாடுகளின் மேல் நின்று தேடுகின்றேன் சோலைகளை. புள்ளிகளாய், சதுரங்களாய், தூரத்துப் பச்சையாய் நிஜமாகவே தூரத்து பச்சையாய் காட்சி தருகின்றன. மேலிருந்து பார்க்க சவுதி அரேபியாவின் பாலைவன மணற்குன்றுகள் பார்க்க அரிய காட்சிகளாய் விரியவானிலிருந்து நீருக்குள் தீவுகளாய், தீபகற்பங்களாய் தெரியும் நிலபரப்புகளாய், பார்க்க அழகு, இருட்டியவுடன் bucharest நகரம் இரவில் இருளில் விளக்கு புள்ளிகளிட்டு வெளிச்சக் கோலமிட்டிருந்தது. இரவு வந்த பின்பும் தலைக்குள் ஏதோ நிகழ்ந்து கொண்டே இருப்பதாய் தோன்ற தூக்கமே வரவில்லை
இதோ உலகத்தின் மூன்றாவது ஜனநெரிசல் அதிகம் உள்ள ஐரோப்பாவின் அதிக விமானங்கள் வந்து போகும் விமான தளம். வெளிச்சப் புள்ளிகளை கிழித்துக் கொண்டு விமானம் தரையிறங்குகின்றது.
இன்னும் வரும்....
(வடக்கு வாசல் இதழில் வெளி வந்துள்ள கட்டுரை)
posted by Thilagabama M @ 1/27/2006 08:22:00 pm   2 comments
Monday, January 23, 2006
கிறுகிறுத்தே சுழலும் பூமிகாதலாய் கசிந்ததாய்
ஊற்றெடுத்த பிரவாகம்
புவியின் மேடு பள்ள தீர்மானிப்பில்
நகரத் துவங்கியது

மேடுகள் நதியினை
அருவியாய் மாற்ற
பள்ளங்கள் குளம் கண்மாயாய்
தீர்மானித்தன

அலைகடல் சேரும் வரை
ஓயாது நடந்த என் பயணம்
சிந்துவதாயும் சிதறுவதாயும்
சிலர் தீர்மானித்திருக்க

கல்கொண்டு கட்டிய
கரிகாலன் தோற்க
புவி தனக்குள்
நிரப்பிக் கொண்டது
ஊற்றுக் கண்களை
யாரும் கண்டு விட முடியா
அணைகளாய் மாற்றிய படி

நிறைந்து வந்த குளங்களை
தூறோட விட்டு
வெறும் பள்ளங்களாய் மாற்றி
அணைகளுக்குள் சிறைப்பட்ட நீர்
உப்புக் கரிக்கத் துவங்குகிறது
ஊற்றுக் கண்கள்
புண்களாகிப் போக
நிலத்தடி நீர்கள் ஆவியாவதை
காணப் பொறுக்காது

நதி நடந்த பாதையில்
பூத்திருந்த பூக்களால்
நிலமகள்
உதட்டுச் சாயம் எழுதிய
காலங்கள்
கரைந்துபோகின்றன

தாகங்களால் வெடித்த உதடுகள்

நச்சு இலக்கியங்களாய்
பெய்து போகிற மழையும்
தீர்க்க முடியா தாகமுடன்
என்றும் பூமி
இப்பொதெல்லாம் கிறுகிறுத்தே சுழலுகிறது.
posted by Thilagabama M @ 1/23/2006 05:36:00 pm   1 comments
Friday, January 20, 2006
நடப்பியல் இயக்கம்

திலகபாமா, இராஜலட்சுமி, விழி. பா. இதயவேந்தன், தோதாத்ரி, பொன்னீலன்
நடப்பியல் யதார்த்தமோடு
உடன் படாக் கருத்தை
உரைக்கின்ற மொழிகளை
விசாரணைக்கு உள்ளாக்குவோம்
இந்த வசனத்தை இந்த அரங்கின் முக்கிய முழக்கமாக வைத்து நிகழ்வு துவங்கியது

28.12.05 அன்று பாரதி இலக்கிய சங்கம் நடத்திய சி. க நினைவரங்கு, பல்வேறு பட்ட தங்களிலிருந்து படைப்பாக்கத்தை வாசிப்பு இளம் தலைமுறையினரிடையே வலுப்படுத்தும் நோக்குடன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

காலை அரங்கம்
தோதாத்ரி பொன்னீலன் வி, பா இதயவேந்தன், லஷ்மி அம்மாள்

காலையில் நடந்த சி. கனகசபாபதி அரங்கத்தில் பேராசிரியர் தோதாத்ரி கனகசபாபதியின் எழுத்துக்களிலிருந்து அவரை தான் உணர்ந்த இடம் பற்றி விரிவாக உரையாற்றினார்,.
அவரது உரையில்
புதுமைப் பித்தன் எனும் படைப்பாளியும் சி. க எனும் விமரிசகரும் எங்கு ஒன்றுபடுகின்றார்கள் என்றால், இலக்கியம் சுத்தமாக இருக்க வேண்டும் , பிரசாரமாக இருக்கக் கூடாது, சமூக விமரிசனம் இருக்க வேண்டும். எனும் இடத்தில் ஒன்று படுகின்றார்கள் கனகசபாபதியின் கட்டுரைகளில் ஆய்வு பாணி அதிகமாக தென்படுகின்றது. சுத்த இலக்கியம் அதற்குள் படைப்பாளி வரக் கூடாது. படைப்புகள் நனவிலி மனத்தின் வெளிப்பாடாக வருகின்றது என்பது சத்தியமான உண்மை என்ற போதும் நனவிலி மனத்தில் விகாரங்களை விளங்காத மொழியை மட்டும் தான் கூறுவேன் என்றால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது நினைவிலி மனத்தின் மூலமாக யதார்த்தம் வெளிப்பட வேண்டும்.
சங்க காலம் தொடங்கி நவீன காலம் வரைக்கும் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கின்றார். புதுக் கவிதைகள் மரபு வழி ஆய்வு செய்திருக்கின்றார். ரசனை உருவம் இரண்டையும் இணைத்துக் கொண்டு அவரது விமரிசனங்கள் இருந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய விமரிசன உலகில் இலக்கிய உருவத்தை மையப் படுத்தி விமரிசன கட்டுரைகள் எழுதியதில் அழுத்தமான அசைக்க உடியாத பங்கு சி. கவினதுஎன்றார்

பொ.நா. கமலா


தொடர்ந்து பேராசிரியர் பொ. நா கமலா அவர்கள் “ புதுக்கவிதை விமரிசனத்தில் சி. க வின் இடம் எனும் தலைப்பில் அவரது விமரிசனம் இன்றைய கவிதை போக்குகளுக்கு எவ்வளவு பிரயோசனமாக இருக்கின்றது என்பதை பற்றி பேசினார்.
ஆவணப் படங்கள் திரையிடல் நிகழ்வில்” வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு” எனும் படம் திரையிடப்பட்டது. நோர்வேயில் வசித்து வரும் புகைப்படக் கலைஞர் தமயந்தியின் “ ஆதலினால் காதல் செய்வீர் எனும் ஒளியோவியத் தொகுப்பு திரையிடப் பட்டது. அசையாத படங்கள் பலரது நெஞ்சையும் அசைத்து விட்டிருந்தது. சி. சு செல்லப்பா விடம் எடுக்கப் பட்ட பேட்டி( யதார்த்தா பென்னேஸ்வரன் நிதிவசதி இல்லாததால் முழுமையாகாத) திரையிடப் பட்டது. பல வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய ஆவணம் இது.

மேடையில் அமிர்தம் சூர்யா


மையம் கொண்டுள்ள மாற்றிதழ் அதிர்வும் தமிழ் வெளியில் அதன் பிரதி பலிப்பும்” எனும் தலைப்பில் அமிர்தம் சூரியா வடக்கு வாசல் இதழையும் பெண்ணே நீ இதழழயும் மையமாகக் கொண்டு பேசியது பல்வேறு சிந்தனைகளை பலருக்குள் கிளப்பியிருந்தது. அதேநேரம் கட்டுரையாளர் , ஒரு கருத்தையும் மாற்றுக் கருத்தையும் வைத்துக் கொண்டே போன தொனி , பார்வையாளர்களை ஒரு படைப்பாளியாய் உங்கள் கருத்து என்ன? என்று தப்பிச் செல்ல விடாது கேள்வி கேட்க வைத்திருந்தது.

மேடையில் வைகை செல்வி

பெண்ணே நீ இதழ் பற்றிய வைகைசெல்வி விமரிசனமும், கையோடு இன்றைய எழுத்தின் வக்கிர , கருத்துச் சுதந்திரம் எனும் பேரில் இலக்கியம் வணிக மயமாக்கப் படுவதால் பெண்ணுக்கு நேருகின்ற அவலத்தை சுட்டிக் காட்டுவதாய் இருந்தது. நிகழ்வுக்கு வந்திருந்த மாணவி வளர்மதி வடக்கு வாசல் இதழை பற்றிய விமரிசனத்தை முன்வைத்தார், சுகுமாரன், கலாப் பிரியா கவிதைளுக்கு எதிராக நிறைய கேள்விகளை எழுப்பினார்.அதிலிருந்த நேர்காணல்களை வெகுவாக பாராட்டினார். வானகமே வையகமே சுற்றுப் புறச் சூழல் சார்ந்த இதழை முத்து பாரதி விமரிசன உரை நிகழ்த்தினார்.


கவிஞர் வில் விஜயன் ஏற்புரை வழங்கினார். பலகுரலில் இன்றைய இலக்கிய போக்குகளை பேசி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்

விழா மேடையில் எ.இராஜலட்சுமி,விழி பா.இதயவேந்தன்

மாலை 4. 30 மணிக்கு பரிசளிப்பு விழா வும், சி கனகசபாபதியின் “ புனைகதைகள் நூல் வெளியீடும், நடை பெற்றது. சி. கனகசபாபதி நினைவுப் பரிசை எனக்கான காற்று தொகுப்பின் ஆசிரியரான ஏ. இராஜலட்சுமி யும் சி. சு செல்லப்பா நினைவுப் பரிசு மலரினம் மெல்லிது எனும் நூலின் ஆசிரியர் விழி. பா இதயவேந்தனுக்கும் பொன்னீலன் விருதை வழங்க லச்மி அம்மாள் ரொக்கப் பரிசு ரூபாய் 5000 வழங்கினார். இருவரது ஏற்புரையும் , பொன்னீலனது நூல் அறிமுக உரையும் நிகழ்ந்தது.


நினைவுப் பரிசுகள்

அந்த உரையில் சி. க 40 ஆண்டுகாலம் விமரிசன உலகில் மிகச் சிறப்பாக பணியாற்றிய பல்கலை வல்லுநர். அன்று விமரிசகர்கள் ஆங்கிலம் , அல்லது சமஸ்கிருதம் படித்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் விமரிசனம் செய்யும் போது தமிழே என்னிலிருந்து தான் துவங்கி வருகின்றது என்று சொல்வார்கள். சி. க அப்படி இல்லை தமிழ் மட்டும் படித்த பேராசிரியர்கள் 18 ஆம் நூற்றாண்டுகளோடு தமிழ் இலக்கியம் முடிந்து விட்டது என்றும் பாரதியைக் கூட ஒத்துக் கொள்ள தயங்குபவர்களாக இருந்தார்கள். ஆங்கில , ஜெர்மன் இலக்கியமும் தமிழ் இலக்கியமும் படித்து அறிந்த பல்கலை செம்மல் அவர். எனவே அவரது விமரிசனம் பரந்து பட்டதாய் இருந்தது. 1950 இலக்கியம் இரண்டாக உடைகின்றது. . குறுங்குழுவாதம் இங்கு தமிழக இலக்கியத்தை முடக்கி வைத்திருக்கின்றது. ஒன்றாக இருந்து எல்லா கோட்பாடுகளையும் கற்று தன்னுடைய புதிய சிந்தனை ஊடாக விரிவாக ஆராய்ந்தார். தெற்கே வானமாமலை, வடக்கே சி. க..
சரியான உருவம் ஏற்படாத எந்த உள்ளடக்கமும் உள்ளத்தை தைக்காது . இலக்கியம் இன்றிலிருந்து நாளைக்கு மாறுகின்ற செழுமையை செய்ய வேண்டும். உருவமும் உள்ளடக்கமும் சரியாக வந்தால் தான் இலக்கியம் வலிமையாக இருக்கும் . அந்த அளவில் இரண்டையும் வலியுறுத்தி விமரிசனம் செய்தவர் சி. க என்றும் தனி மனிதத்துவத்தை எதிர்த்தும், கால வரிசையில் தன்னுடைய விமரிசனத்தை வைத்தவர் என்றும் பேசினார்
150 மாணவிகள் பங்கேற்றிருந்தனர் . பரிசுக்காக அனுப்பட்ட நூல்களின் ஒரு பிரதி இராசபாளையத்தை அடுத்துள்ள முறம்பு எனும் சிற்றூரில் அமைக்கப் பட்டிருக்கின்ற நூலகத்திற்கு அன்பளீப்பாக வாங்கப் பட்டது
posted by Thilagabama M @ 1/20/2006 08:37:00 pm   0 comments
Wednesday, January 18, 2006
செரிபடட்டும்கூண்டுக்குள்
வெட்ட பட்ட சிறகுகளுடன்
முன்னால் அளிக்கப் பட்ட
நீரும் சோறும் சலிக்க
கட்டி விட்ட வளையலில்
ஊஞ்சலாடும் கிளிகள்

முன்னிருக்கும் சோறு
கிளிக்காகவா?
கூண்டுக்காரன் சதை பசி
தீர்க்கும்
தனக்கே தனக்கான உணவாயிருக்க

வெளியே நின்று கிளிக்காய்
கருத்து சுதந்திரக் கூட்டம் நடத்தும் பூனைகள்
நரகறி ருசித்துப் பழகி
முன்னும் பின்னும் எப்பொழுதும்
தின்னுவதற்கு தயாராய்
சட்டியை சூடாய் வைக்க
நெருப்பு மூட்டப் பார்க்க

கிளி தன் சதை எரித்து
காயத்ரி மந்திரம் செபிக்கிறது.
சிலுவையில் அறைந்த உடல்கள்
இற்றபின்
மூன்றாம் நாள் உயிர்க்க

எந்த கறுப்பு அங்கிகளுக்குள்ளும்
மறைத்து விட முடியா சுதந்திரம்
தான் வைத்திருந்த நெருப்பில்
தெரிவதற்காக

சூழுகின்ற தீயில்
உடைகின்றன கூண்டுகளின் துகள்கள்

எல்லாரின் நினைவுப் பாதையிருந்தும்
சதை ருசிகளை அழித்து சாம்பராக்கி
குடித்து போகின்றது
உள்ளுக்குள் செரிபடட்டும் கசன்களென
posted by Thilagabama M @ 1/18/2006 08:13:00 pm   0 comments
யார் குற்றம்?
கசிந்து
கிணுகிணுத்த கால் கொலுசாய்
ஓடிய ஊற்று
பெய்கின்ற மழையில்
கூடுகின்ற நீரின் சங்கமத்தில்
உடை படுகின்றன கரைகள்

பூக்களோ
பிணங்களோ
எது மிதந்த போதும்
நாற்றங்களை கரைய விட்டு
கலங்கல்களை காலடியில் நசுக்கி
தாய்ப்பாலாய் ஓட

பிட்டுக்கு மண்சுமந்த
பரமசிவன் பரம்பரையில்
நாங்களும் சுமக்கின்றோம்
பிரேதங்களை நீரில் விடப்பார்த்திருந்த
பாவங்களை

சுமக்காத மண்ணுக்காய்
கண்ணயர்ந்த காரணங்களுக்காய்
விழுகின்ற சவுக்கடிகள்
விடியலுக்குச் சொல்லும்
புது வெள்ளம் நதிகளின் குற்றமல்ல
கரைகளை முழ்க விட்டு
பார்த்திருந்தவர் குற்றமென்று
posted by Thilagabama M @ 1/18/2006 08:05:00 am   3 comments
Tuesday, January 17, 2006
சூழ்நிலைப் பாடம்
கால்கள் ஆயிரமிருந்தும்
முதுகெலும்பில்லாது
ஊறும் புழுக்களைப் பார்க்கின்றேன்.

முதுகெலும்பிருந்தும்
நிமிர முடியாது கூன் போடும்
விலங்குகளைப் பார்க்கின்றேன்

எலும்பும் தசையும்
இறுகிக் கிடக்கையிலும்
சிறகு தூக்கிப்
பறக்கும் பறவைகளைப் பார்க்கின்றேன்

கனமில்லாது
இலேசாகி இருப்பினும்
மூழ்கி வரும் மீன்களைப் பார்க்கின்றேன்

எனக்கு இருந்த
கால்கள்
எழும்புகள்
கனங்கள்
இலேசாகுதல்
எதை எங்கே நிறுவ
தினந்தோறும் நடக்கிறது
ஓர் சூழ்நிலைப் பாடம்
posted by Thilagabama M @ 1/17/2006 10:56:00 am   0 comments
Wednesday, January 11, 2006
மனவெளிப் பயணம்

மனவெளிப் பயணம்

இருந்து பழகிய இடம் சுகமானதாய் இருந்த போதும், புதிய அனுபவங்களூடாக தன்னை கண்டறிய நினைப்பவர்களுக்கு பயணம் எப்பவும் பிரியமானதாகவே இருந்து வருகின்றது. அதிலும் பெண்ணின் மனவெளி இதுவரை இருந்து பழகிய இடமிருந்து வெளிக் கிளம்புவதென்பது மிக அரிதானதாகவே இருக்க, எழுத்துலகிற்கு அறிமுகமாயிருந்த ஆரம்ப நாட்களில் சந்திக்கும் அனைவரும் சொன்ன வசனம் ஒன்று” பயணப் படுங்கள்” என்று.....

நான் எழுதும் ஐரோப்பிய பயணம் பற்றிய தொடர் வடக்கு வாசல் ஜனவரி இதழில் இருந்து வெளிவர இருக்கின்றது.

வடக்கு வாசல் முகவரி
யதார்த்தா.கி.பென்னேஸ்வரன்
vadakku vasal publication
5210 basant road
near karanail singh stadium
paharaganj
New delhi.110055
011-55937606
posted by Thilagabama M @ 1/11/2006 02:15:00 am   0 comments
Monday, January 09, 2006
தாகம் தீர்க்கும் மணல்கள்

தாகம் தீர்க்கும் மணல்கள்

விடிகின்ற பொழுதொன்றில்
சேவல்களாய் கூவிய
இந்திரன்கள் திகைக்க
கமண்டலமிருந்து கை ஊற்றிய நீர்
தெளிக்கத் தேடிய ஜடப் பொருள்
காணாது கௌதமனும் சிலையாக

தின்று விடவும்
சாபத்தினால் உறைய விடவும்
நீங்கள் தீர்மானித்திருந்த
நானென்ற
என் உடல்தனை அறுத்து கூறிட்டு
திசையெங்கும் எரிய
சூனியத்தில் திரிந்தலைகின்றன

உடலில்லா எனை
தழுவ முடியாது இந்திரன்களும்
தலை சீவ முடியாது பரசு ராமன்களும்
சாபமிட முடியாது கௌதமன்களும் இருக்க

சேவல்களால் கூவாத பொழுதிலும்
சூரியன்கள் உதிக்காத தருணங்களிலும்
எனக்கான விடியல்கள் உதயமாகின்றன

ஆறுகள்
சாபமேற்ற அகலிகைகளால் நிரம்பியும்
நீர்கள் எல்லாம்
பரசுராமன் வெட்டித் தீர்த்த
உடல்கள் மிதந்தலைய
தீரப் போவதில்லை உங்கள் தாகங்கள்

வெளியெங்கும் என் காதல்கள்
நானே தீர்மானித்தாலொழிய
பானைகளாகாது சிதறிக் கிடக்க

ஒப்பீடுகள் தொலைத்து
உணர முடிந்த கணமொன்றில்
உடலாக மட்டுமல்லாது
இயற்கையின் எல்லாமாகி
மணல்களும்
நீர் சுமக்கும் பானையாகி
தாகம் தீர்க்கும் அதிசயம் காண்பாய்
posted by Thilagabama M @ 1/09/2006 11:20:00 pm   3 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates