சூரியாள்

Thursday, October 30, 2014
ஆசிரியர்கள் 1
                      ஆசிரியர்கள் 
ஞானாம்பாள்: 
இன்னமும், கட்டையால் சூழ்ந்த கல் சிலேட்டையும் அதன் கடுமையான முனையால் வாங்கிய அடியையும்  தலையால் மறக்க முடியாது. வலிக்கவே செய்கின்றது. அந்த வீட்டின் முன் 6அடிநீளமுள்ள  வராண்டா அதில் எப்பவும் கிடக்கின்ற மரப் பெஞ்ச் இருள் சூழ்ந்து இருக்கக் கூடிய சமையல் கட்டும் ஒரு மச்சும், கொள்ளை வாசலைக் கொண்டிருந்த நடு ஹால் பழைய வாசம் வீசக் கூடிய சூழல், வராண்டாவில் இருந்த பெஞ்சில் உடையாத வெள்ளை, மற்றும் பல வர்ண சாக்பீஸ்கள், கரும் புள்ளிகளையுடைய பிரம்புக் குச்சி, தென்னை ஓலைகளாலானா விசிறி,  இவற்றோடு காலையில் ஞானம்மாள் அவர்களோடு தனிமையில் இருந்த அறை மாலையானால் மாணவ மாணவிகளின் குரல்களால் நிரம்பி விடும். 
      இலேசான கூனுடன் மூக்கில் நழுவிய கண்ணாடியின் வழியாக உற்றுப்பார்க்கும் கண்கள், குட்டையான உருவம், மெலிசான வெந்நிற தேகம், தேகம் தாண்டி வலிமை உணரவைக்கும் குரல், தென்னை விசிறியின் காம்பைப்பிடித்து விசிறாது மேலே பிடித்து விசிறும் பாங்கு.  70 வயது இருக்கும். வயதை யோசிக்காத பருவம் எனது அப்பொழுது,
    குறிப்பிடப்பட்ட சிலரின் பிள்ளைகள் மட்டுமே இவரது வகுப்புகளில் பங்கு எடுக்க முடியும். என் பிள்ளையை யாரும் அடிக்கக் கூடாது என்பவர்கள் இந்த  டியூசனுக்கு வர முடியாது.  பள்ளிக்கூடத்தில்  எனது  சிலேட்டை  பார்த்தவுடன்  யார் வேண்டுமானாலும்  சொல்லி விடுவார்கள் இது  ஞானாம்மாள்  டீச்சரிடம்  படிக்கின்ற  பிள்ளையோடது என்று.
       ஏனோதானோ என்று இல்லாது முரட்டுக்கட்டை விளிம்புகளுடன் கூடிய எடை கூட இருக்கக் கூடிய சிலேட்டை மட்டுமே அனுமதிப்பார். ஒரு பக்கத்தில் முழுக்க படுக்கைவசத்தில் கோடு போட்டிருக்க வேண்டும். அந்த கோடுகளுக்கு இடையேயான இடைவெளி இவ்வளவு என்பது கூட கறாராக இருப்பார். பின் பக்கத்தில் எண்களை எழுதுவதற்காக நெட்டு வசத்தில் கோடுகள் இருக்க வேண்டும். கல் சிலேட்டில் ஆணி வைத்து கோடு போட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளிலும் வீட்டிலிருந்தே சிலேட்டை கழுவி துடைத்து எடுத்துப் போயிருக்க வேண்டும். முந்தின நாள் எழுதிப் பார்த்த பாடங்கள் அறிந்தும் அறியாமலும் சிலேட்டில் இருக்குமானால் அன்று நான் போட்டுப் போயிருந்த நல்ல சட்டை பாழாகிப் போய் விடும். 
   என்னைக் கோபத்தோடு பார்க்கின்ற போது, பக்கத்தில் இழுத்து வயிற்றுப் பகுதியில் கை வைத்து கிள்ளுவார். அவரிடம் படித்துக் கொண்டிருந்த காலங்களில் அடி வயிறு முழுக்க பிறை பிறையாக காயங்கள் இருந்து கொண்டே இருந்தன. இன்றைக்கும் ஞாபகம் வருகின்றது தொப்புளைச் சுற்றி பிறை வடிவத்தில் நிறைய தழும்புகள், அவ்வளவும் விரல் நகங்களின் பதிதல்கள். நினைத்துப் பார்க்கவே அச்சமூட்டும். ஆனால் இதற்கும் அப்பால் ஒரு அன்பும், கரிசனமும் அந்த ஆசிரியையின் பேரில் இருக்கவே செய்தது. 
சிலேட்டில் எழுதிய பாடங்களுக்கு கலர் சாக்பீஸில் அவர் வழங்குகின்ற கௌரவம் இன்னுமும் இனிக்கிறது. அச்சடித்தாற்போல் கையெழுத்து, அன்றைக்கு பாடங்களை அன்றைக்கே  படித்து எழுதிப் பார்க்க வைத்து விடுவது, கேள்வி பதில்களை மட்டுமல்லாது  பாடப் புத்தகங்களை  வாசிக்க வைப்பது இவையெல்லாம் ஞானாம்பாள் ஆசிரியையின் சிறப்பம்சங்கள். அதற்கு நாங்கள் கொடுக்கின்ற விலை பிரம்படி, விசிறிக் காம்பால் அடி, இப்படி பலதாக இருந்தது.
  அந்த ஊர் பெரிய மனிதர்களின் convent  குழந்தைகள் விடுமுறையில் தமிழ் படிக்க அவரிடம் வந்து சேர்வார்கள். வாயிலும் மனதிலும் வராத தமிழ் அவர்கள் எழுத்தில் தறிக்கெட்டு தாண்டவமாட கால்களுக்குள் இட்டு வெளியேறமுடியாமல் அடைத்துக் கொண்டு அவர்விடுகின்ற அடி பார்ப்பவரை கண்கலங்க வைக்கும். இன்றைக்கெல்லாம் அப்படி நடந்தால் கேஸை போட்டு விடுவார்கள். பெற்றவர்கள் அவ்வளவு அடிக்கப்புறமும் ஊர் பெரிய மனிதர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது டியூசனுக்குச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கெஞ்சினார்கள் என்றால் இன்று யாரும் நம்பமாட்டார்கள்.

என் கையெழுத்து அவர் பெயரை பலரை உச்சரிக்க வைக்கும். பள்ளிக்கூட ஆசிரியர்கள் அனைவரும் அவருடைய மாணவி என்றால் ஒரு மரியாதை காண்பிக்கத் தொடங்கி விடுவார்கள்.
கருங்கல் குச்சி இல்லாமலவர் வேறு குச்சியை வைத்து எழுத அனுமதிக்கவே மாட்டார். தென்னை ஓலை விசிறி எப்பவும் அவர் கைகளில் இருக்கும். சில நேரம் விசிற சில நேரம் அடிக்க, விசிறிக் காம்பில் அடிபட்டு சிவப்பு வரித்தடங்களோடு வீடு வந்திருக்கிறேன் பலநேரம்.
       ஞானாம்மாள்  டீச்சருக்கும்  தண்ணிகாட்ட ஒருவன் வந்தான். என் தம்பி, வந்தவுடன் டீச்சருக்கு கண்டிசன் போடுவான். என்ன என்ன பாடம் படிக்கனும் எழுதனும்னு சொல்லுங்க என்று.
     அவரும் கணக்கு, தமிழ், ஆங்கிலம், அறிவியல், புவியியல், வரலாறு என்று எல்லா பாடத்திலும் அன்றைக்கு நடத்தினதை எடுத்து படித்து எழுதிக் காட்ட வேண்டும் என்று சொல்லி முடிக்கும் முன்னரே தயாராகிவிடுவான். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமையே எழுதி முடித்து விட, இன்னும் இரண்டு கணக்கு செய்து காண்பிக்கலாமே என்று டீச்சர் கேட்க இல்லை , நீங்கள் சொன்னதை நான் செய்திட்டேன் அவ்வளவுதான் என்று கறாராக சொல்லிவிடுவான்.


ஞானம்மாள் டீச்சர் அவருடைய உறவுகள் நட்புகள் என்று யாரையுமே பார்த்ததில்லை. அடிக்கடி அவர் வாயில் நழுவி வந்து கொண்டே இருக்கும் பெயர் சாந்தாக்கா. அவர் நம்பும் ஒரே நபர் அவர்தான். சாதமா, புளிக்காத தயிரா, ஊறுகாயா எது வேண்டுமானாலும் எங்கள் கால்கள் நடக்கும் சாந்தாக்கா வீட்டிற்கு. 
பக்கத்து வீட்டார்களுடன் ஒன்ற முடியாது . டீச்சர் எப்பவும் அவர்கள் வெறுப்போடு தன்னைப் பார்ப்பதாய் சொல்லிக் கொண்டே இருப்பார், சூனியம், செய்வினை வைப்பது போன்றவற்றில் நிறைய நம்பிக்கை  அவருக்கு இருந்தது.
     சுவரெல்லாம் கருப்பு மை எப்பவும் தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அதைத் தெளித்தவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றும் கூறுவார். அப்படித் தெளித்திருப்பதால்  தன் வாய் முழுக்க  புண்ணாகி விட்டதாகவும், சாப்பிட முடியவில்லை எனவும் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய இருண்ட மச்சு என்னை எப்பவும் பயமுறுத்தும் ஒன்றாகவே இருந்தது. தனிமைக்கு வாசனை என்று ஒன்று இருந்தால் அது இப்படியானதாகத்தான் இருக்க வேண்டும்
   ஐந்தாம் வகுப்போடு அவர்களிடம் படிப்பது நின்று போனது. நான் கல்லூரி படித்த காலத்தில் எப்பவாவது  விரும்பிப் போய் அவரைப் பார்த்து வருவதாகவே எங்கள் சந்திப்பு மாறிப் போனது. நான் கல்லூரி படித்த காலத்தில் எனக்கு அம்மா, அப்பா அனுப்பிய கடிதமொன்று அந்த ஆசிரியை இறந்து போன தகவலோடும் வந்தது. 

    காலம் எங்களிடமிருந்து அவர்களை அடித்துக் கொண்டு போனது. தொலைந்து போன கல்சிலேட்டும் கூர் தீட்டிய கல்குச்சியும் நினைவுக்கு வருகின்ற போதெல்லாம் அந்த வயதான ஆசிரியையின் அன்றைய மனநிலை இன்றைக்குத்தான் கொஞ்சம் புரிகின்ற மாதிரித் தெரிகின்றது.  தாயும் தந்தையுமற்ற தம்பி தங்கைகளுக்காக  திருமணத்தைத் தள்ளிப் போட்டு போட்டு பிறகு அது வாய்க்காமல் போன காலம் அவரது. தந்தையின் சொத்துக்களை உறவினர்கள் எடுத்துக் கொண்டதால் எழுந்த பொருளாதாரத் தனிமை, மனிதர்களின் மேல் விழுந்த அவ நம்பிக்கை, உடன் பிறப்புகளுக்காக வாழ்ந்திருந்த போதும், என்றுமே நான் அவரோடு இருந்திருந்த காலங்களில் யாருமே அவரை வந்து பார்த்ததில்லை எவ்வளவு தவித்திருக்கும் அந்த முதுமையின் தனிமை அதிலும் பெண்மையின் தனிமை, எல்லோரின் பெயரிலும் ஒரு அவ நம்பிக்கை வைத்துக் கொண்டு நம்பிகையற்ற மனநிலையில் பகிர்ந்து கொள்ள யாரும் அற்ற தனிமையில் ஒரு பெண்னின் வாழ்வு என்பது எத்தகைய வன்முறை என்பது இப்பொழுது வலியோடு புரிகிறது.

posted by Thilagabama M @ 10/30/2014 07:35:00 pm   0 comments
Thursday, October 09, 2014
இராஜஸ்தான் பயணம் 3
அங்கிருந்து அதை எட்டி நகன்டால் கோட்டைச் சுவர் நீளப் போகின்றது. சுற்றுலாப்பயணிகள் போகிற திசைவழி நடந்து போக பள்ளத்தை நோக்கி அழைத்துப் போகின்றது. படியிறங்கிப் போனால் பள்ளத்தில் பச்சைத் தண்ணீர் நிறைந்து இருக்கின்றது. அந்தத் தேக்கத்திற்கு சிறிய ஊத்து ஒன்றுதான் ஆதாரமாக இருக்கின்றது.  ஜனங்கள் அந்த சலசலவென்று ஓடும் ஊத்தில் தொட்டு வணங்கி கண்களில் ஒத்திக் கொண்டு நகல்கின்றனர்.
கோவிலில் பூஜைகள் செய்ய வயதான பெண்மனி இருக்கின்றார். அவர் கையால் கல்கண்டு வாங்கிக் கொண்டு திரும்பி வந்தேன். தொடர்ந்து இடிபாடுகளுக்கிடை இருந்த கட்டிடங்களை கடந்து போக, வழியில் ஒரு தாமரைக் குளம் நீரும் பூவும் நிறைந்திருந்த அந்தக் குளத்தில் தான் 3000 பெண்கள் ராணி பத்மினியோடு தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இடமிது நாட்டின் மானம், மண்ணின் இருப்பு, மன்னவனின் வெற்றி, கனவனின் ஆண்மை, 
ராணி பத்மினி பற்றி பலவித கதைகள் உலவிக் கொண்டிருக்கின்றது. அவள் பேரழகி அதிலும் அறிவானவள், ஆண்மையானவள், சிங்கள அரசனின் மகள், ராஜபுத்திர வீரனை மணந்தவள். அழகிய பேசும் கிளிக்கு சொந்தக்காரி. 3000 பெண்களோடு தீயில் விழுந்தாள் இன்று அந்த இடம் நீராலும் பூக்களாலும் குளிர்ந்து கிடக்கின்றது.
ஒட்டுமொத்த நினைவுகளும் ஆழ்மனதை  புனைவுக்குள் தள்ளி காலியாய் கிடந்த அரண்மனையை தீயில் குதித்த 3000 பெண்களின் ஆன்மாக்களோடு சுற்றிவரச் செய்கின்றது.

பத்மினியின் அரண்மனையை சுற்றி வந்து விட்டு வெளியே வந்தால் கோட்டையின் சூரிய வாசலை சந்திக்க முடிந்தது. நாலு திசைகளிலும் நாலு வாயில்கள் சூரிய, சந்திர பெயர்களில் விளங்குகின்றன. சுற்றி வர முடியாமல் எல்லா வாயில்களையும் பார்த்துவர சாத்தியமில்லாமல் போகின்றது. மிகப் பெரிய இடம், வெயிலும், தூரமும் வசக்கிவிடுகின்றது. தண்ணீரை துணைக்கழைத்துக் கொண்டு திரும்புகின்றேன். வழியெங்கும் பாபா நாம் தேவ் கோவிலுக்கு போகும் யாத்திரிகளின் தீவிரம் ஒரு புறம் என் கவனத்தை ஈர்க்க, அவர்கள் கூடாரங்களை ஏக்கத்தோடு பார்த்தபடியே திரும்புகின்றேன் உதய்பூருக்கு.

posted by Thilagabama M @ 10/09/2014 06:00:00 pm   0 comments
மறுநாள் காலை மவுண்ட் அபு செல்ல திட்டமிடுகின்றோம், காலை 6 மணிக்கு புறப்படுகின்றோம்.
மீண்டும் யாத்திரிகளின் கூடாரங்கள் ஈர்க்கின்றன. இறங்கி காலை சாப்பாடு அவர்களோடு சாப்பிடலாமா என்கின்றேன். இல்லை. அதற்கு நீங்கள் யாத்திரிகளாய் இருந்தே ஆக வேண்டும்  வண்டியில் கொடி கட்டியிருக்க வேண்டும் என்று காரோட்டி சொல்ல கடந்து போகின்றோம். சின்னச்சின்ன பசுமையான குன்றுகளை கடந்து போகின்ற போது ஆதிவாசிகளின் கதைகளால் நம்மை மிரட்டுகின்றார். அந்த மிரட்டல் கதைகள் நம்மை வேகமாக உதய்பூர் திரும்ப வைப்பதற்காக முயற்சிகள் என்று புரிந்து கொண்டாலும் புரியாதது போலவே நகன்று கொண்டிருக்கின்றேன்.
பசுமைக் குன்றுகள் குடையப்பட்டு சாலைகள் நம்மை அழைத்துக் கொண்டு செல்கின்றன. மவுண்ட் அபு உலக அமைதிக்கான இடமாய் அறியப்படுகின்றது. பிரம்மக்குமாரிகள் அமைப்புகள் எல்லா இடங்களிலும் ஆக்கிரமித்திருக்கின்றன.
இயற்கை, சுகமான சீதோட்சன நிலை, புளிக்கும் மாங்காய் தின்று கொண்டே தொலைந்து போகக் கூடிய நடை. அந்த மலையில் கால வரலாற்றைச் சொல்லும் பாதைகள் நிறைந்த  இடம். அந்த இடத்தை தேனிலவு முனை என்கின்றார்கள்.
எல்லாம் அனுபவித்து விட்டு திரும்புகின்றேன் உதய்பூருக்கு. திரும்புகின்ற வழியெங்கும் மீண்டும் பாபா ராம் தேவின் பக்தர்கள். ஒரு இடத்தை நெருங்கையில் பெருங் கூட்டம் சுற்றி ஒரு மலைக்குன்றை பார்வையாளர்கள் மேடையாக்கி நடுவில் ஒரு  நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. “காளிநாட்டியம்” என்றார்கள், போய் நானும் கூட்டத்தில் அமர்ந்தேன். அம்மன் முகத்தை நெஞ்சில் கட்டிக் கொண்டு ஒருவர் இருந்தார். அவரைச் சூழ்ந்து பல கிராமவாசிகள் சாம்பிராணி புகை போட்டபடி, மயிலிறகுகளை கைகளில் வைத்தபடி அமர்ந்திருந்தனர். ராசா வேசம் போட்ட ஒருவன் கூலிங்கிளாசும் புராண அரச உடையும் போட்டு இரு மனைவிகள் சூழ வலம் வருகின்றான் கூட்டத்தினரை. ராணி வேசமிட்டிருந்ததும் ஆண்களே. சலைங்கையிட்டு கூட்டததைச் சுற்றி வர ராணிகள் பயந்து ஓட கொள்ளைக் கூட்டம் அரசனை விரட்டுகிறது. சுழன்று சுழன்று அரசனும் கொள்ளைக் கூட்டமும்  (அதிலும் இருவர் தான்) கத்தியும், கூச்சலும் வேகமுமாக சுற்றி வருகின்றனர். இரும்புச் சங்கிலிகள் கொண்ட கொத்து ஒன்று அங்கே கிடக்கிறது. ஆடும் சிலர் ஓடி வந்து அதை எடுத்து தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு திரும்புகின்றனர். 
நானும் கூட்டத்தினரோடு எழுந்து அரசன் வேசம் கட்டியவரிடம் சாம்பல் வாங்கிக் கொண்டு திரும்புகின்றேன். அவசியம் எங்களோடு சாப்பிட்டு போக வேண்டும் என்று அழைக்கின்றனர். கருப்பட்டி போட்டு ஒரு இனிப்பு வழங்கப் படுகின்றது. அதிக நகைகள் போட்டிருந்த தலைவர் ஒருவர் எங்களைக் கவனித்துக் கொள்கின்றனர். இசையுடன் நான்கைந்து ஆண்கள் ஆடும் உற்சாக நடனத்தை கண்டு ரசித்து விட்டு திரும்புகின்றேன்.

காரோட்டியிடம் கிடைக்காது கிடைக்காது என்றாயே கிடைத்து விட்டது பார்த்தாயா என்று கேட்டு விட்டு அவர்கள் கூடாரத்தில் சாப்பிட்டுவிட்ட திருப்தியில் திரும்பினேன் உதய்பூர்.

posted by Thilagabama M @ 10/09/2014 05:59:00 pm   0 comments
Tuesday, October 07, 2014
ராஜஸ்தான் பயணம் 2
மிக நீளமான கோட்டை
மிகப்பெரிய அழிவை சந்தித்த கோட்டை. உள்நுழைந்தவுடன் 9 மாடி கொண்ட வெற்றிக் கோபுரம் ஓர் உயர குத்துவிளக்கால் நமை வரவேற்கின்றது. தலையை விட பெரிதாய் தலைப்பாகை அணிந்த ஆண்கள். முகத்தில் பாதி மறைக்கும் மூக்குத்தி அணிந்த உள்ளூர் பெண்கள் நம்மை கவர்ந்திருக்கின்றனர்.
வெட்கப்படும் அவர்களோடு நின்று படம் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு இடிபாடுகளுக்கிடையில் காலம் தாண்டி நின்று கொண்டிருக்கும் கட்டிடங்களை அனுகுகின்றேன். ஒரு கோவில் 3 முகம் கொண்ட சிவன் சிலை கொண்ட கோவில் ஒன்று இடிபாடுகளுக்கிடையேயும் வழிபாடு நடப்பதால் பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் கோவில் இது.
சிரித்தபடி விழித்துப் பார்க்கும் நேர்முகம், வாய்திறந்து கையில் இருப்பதை விரும்பிப் பார்க்கும் இடது முகம், கண்மூடி மௌன நிலையில் இருக்கும் வலது முகம் கழுத்தில் பாம்பு, கையில் உத்திராட்டம் என்று வித்தியாசமான சிவன் கோவில், அதன் பிரம்மாண்ட தோற்றம் குளிர்ச்சியான இடச்சூழலும் என்னை அழுத்தி உட்கார வைத்து விடுகின்றது. எதிரில் இருந்த பிரம்மாண்டமான முகம் சிரித்தும், பயமுறுத்தியும், சாந்தப்படுத்தியும் என்னுள் நுழைந்து கொள்கின்றது.

கோவிலை விட்டு வெளியேறி வந்த பின்பும் விழித்துப் பார்த்த சிவபெருமானின் கண்கள் என்னை உற்றுப் பார்க்கின்றது.posted by Thilagabama M @ 10/07/2014 11:48:00 pm   0 comments
Monday, October 06, 2014
ராஜஸ்தான் பயணம் 1
சென்னை21.8.14
 காலை 3 மணிக்கு விழிப்பு வந்து விட்டது. தூங்க முடியாது தவித்து கிளம்பத் தொடங்கி விட்டேன். உதய்பூரை நோக்கி கிளம்பியது என் பயணம். காரை 4.20 மணிக்கு அவசியம் வர வேண்டும் என்று சொல்லியிருந்தும் 5 மணிக்குத்தான் வந்தனர். விமானநிலையத்தில் அதிக கூட்டம். 4.30 மணிக்கு கிளம்பியிருந்தால் கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும். விமானம் டில்லியை நோக்கி கிளம்பியது. டெல்லி வந்து சேர்ந்து பின் அங்கிருந்து உதய்பூர் விமானத்தை பிடித்தேன். மெல்ல மெல்ல தமிழ் பேசியவர்களிடமிருந்து விலக நேர்ந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. இப்பொழுது முழுக்க என்னைச் சுற்றி நான் புரிந்து கொள்ள முடியாத பாசையில் பேசுபவர்கள்.
     12.30க்கு உதய்பூர் வந்து சேர்ந்தேன். டாக்சி ஒன்று எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்த அதே குறுகிய தெருக்கள், பொருத்தமில்லாத அலங்காரங்களுடன். வீடுகளுக்கிடையில் சில வீடுகள் ஹோட்டல்களாக மாற்றப்பட்டிருந்தன. துறுத்தலாக ஆங்காங்கே நிறைய இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். வெளிநாட்டு பயணிகளை எதிர்பார்த்தபடி பல கலைப்பொருட்கள் நிறைந்த கடைகள் ஆங்காங்கே இருந்தன.
     2 மணிக்கு சித்தூர்கட் கிளம்பி போக விரும்பினால் கார் ஏற்பாடு செய்வதாக சொன்னான் ஹோட்டலில் ஒரு இளைஞன். சரி என்றேன் வந்து சேர்ந்தான் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கட்டி அணைத்து, மகிழ்வை பல விதத்திலும் பகிர்ந்து கொண்டான். “எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்  இங்கிவனைபாரதியின் பாட்டு மனதில் ஓடியது.
     சித்தூர்கட் கிளம்பிப் போகலாம், இதுவரை எப்பவும் தனியாக இருந்த அந்த பயணம் சோனுவால் சுவையாக மாற்றப்பட்டது. எனை கவனித்துக் கொள்ளும் நபரோடு பயணித்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது.எனை எல்லா இடத்திலும் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்தான்

இராஜஸ்தான் மேட்டுப்பகுதிக்குள்ளே பயணமாகின்றோம். ஆங்காங்கே பசுமையான மலைக்குன்றுகள் அதை ஊடறுத்து போகும் சாலைகள் என சுவாரசியமான பயணம். வழியில் காரோட்டி தன் கதைகளால் நிரப்பினான். வழியெங்கும் சீமைக் கருவேலம், ஹிந்தியில் மிலாத்திபபுள் என்று அழைக்கப்படுகின்றது. வெளிநாட்டு கருவேலம் என்பதுதான் அதன் பொருள். (தேசிகா பபுளும்)  உள்நாட்டு கருவேலமும் இருக்கின்றது காமராசர் விருதுநகர் மாவட்ட வறட்சியை பார்த்து கொண்டு வந்து போட்ட சீமைக் கருவேலத்தை, இந்திராகாந்தி பாலைவனத்தில் பசுமை விளைக்காதா என்றி யோசித்து போட்டதாகச் சொல்லப்படுகின்றது. வழியெங்கும் சாரை சாரையாக ஜனங்கள் மோட்டார் சைக்கிளிலும், ஆட்டோ, மற்றும் வசதிக்கேற்ப வாகனங்களிலும் பல வர்ணக் கொடிகளைக் கட்டியபடி ஜெசல்மீர் நோக்கி பயணிக்கின்றனர். ஒரு குடும்பம் முழுக்க பயச்சுமையுடன் பைக்கில் குழந்தையோடு பயணிப்பது அதில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிப்பது காண்பதற்கு வருத்தமும் மகிழ்வுமான விசயமாக இருக்கின்றது. அவர்கள் அறுவடை முடிந்து விட்ட நாளை கொண்டாடுகின்றனர் வழிபாடும் வழிபாடுகள் வழியாக பகிர்தலையும். ஆம் வழிநெடுக பக்தர்களின் பயணவழி சாப்பாடு விருப்பங்களோடு கவனித்துக் கொள்ளப் படுக்கின்றது தன்னார்வ தொண்டர்களால். ஜெசல்மீரில் பாபா ராம் தேவ் வழிபாட்டுக்காக போகின்ற பக்தர் கூட்டமது. ஆங்காங்கே சாலையோரங்களில் இருபக்கமும் கூடாரங்கள் அமைத்திருக்கின்றார்கள். சமையல் நடந்து கொண்டே இருக்கின்றது. கொடி கட்டி பயணிக்கின்ற பக்தர் கூட்டங்களை கூவிக் கூவி ழைக்கின்றனர். இளைப்பாற வண்டிகளை நிறுத்திவிட்டு உண்டு உறங்கி மீண்டும் பயணிக்கின்றனர் பக்தர்கள். நாமும் நிறுத்தி அவர்களோடு சாப்பிடுவோமா என்று கேட்கின்றேன். காரோட்டி இல்லை பக்தர்களுக்கு மட்டும்தான் நாம் வண்டியில் கொடி கட்டவில்லையே என்கின்றார். சரி பக்தர்களுக்கு கிடைக்க வேண்டியதை நாம் கேட்கக் கூடாது என்ற வார்த்தையோடு பயணிக்கின்றேன். மதியச் சாப்பாடு எங்காவது சாப்பிடலாம் என்று கேட்க காரோட்டி மங்கள்வாடில் சாப்பிடுவோம் என்கின்றார். அங்கே டால்மட்டி, குருமா ருசியாக இருக்கும் என்கின்றார். அது அவர்களின் பிரதேச சாப்பாடு ஆனால் சித்தூர் காட் கோட்டையை பார்ப்பதற்கு அதிக நேரமாகிவிட்டதனால் நிறுத்தி உணவு எடுத்தால் தாமதமாகிவிடும் என்று வேகமாக பயணிக்கிறோம். சோனு பயணத்தை அர்த்தமுள்ளதாக்கின்றான். ஒரு நீளமான மலை நெடுக கோட்டை தெரிகிறது.
தொடரும்


posted by Thilagabama M @ 10/06/2014 06:26:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates