சூரியாள்

Friday, January 27, 2006
மனவெளிப் பயணம்


மனவெளிப் பயணம்

இருந்து பழகிய இடம் சுகமானதாய் இருந்த போதும், புதிய அனுபவங்களூடாக தன்னை கண்டறிய
நினைப்பவர்களுக்கு பயணம் எப்பவும் பிரியமானதாகவே இருந்து வருகின்றது. அதிலும் பெண்ணின் மனவெளி இதுவரை இருந்து பழகிய இடமிருந்து வெளிக் கிளம்புவதென்பது மிக அரிதானதாகவே இருக்க, எழுத்துலகிற்கு அறிமுகமாயிருந்த ஆரம்ப நாட்களில் சந்திக்கும் அனைவரும் சொன்ன வசனம் ஒன்று” பயணப் படுங்கள்” என்று.
பெண்ணின் இருப்பு வாழ்வு எல்லாம் ஆதிக்க சமுதாயம் தீர்மானித்ததாய் இருளுக்குள் இருக்க, பெண் தன்னை கண்டறிய இப்படியான தன்னிச்சையான பயண அனுபவங்களும் தேவைப்படுக்கின்றன என்று நான் நம்பியதை இந்த பயண முடிவுகள் சரியென்று சொல்லியிருந்தன. அப்படியாக நான் கடந்த பயண மன வெளிகளை வெறும் இடமும் காலமும் மட்டுமல்ல, உணர்வுமான வெளிகளை இந்த கட்டுரையில் பேசப் போகின்றேன்
மெல்ல மெல்ல ஓடி வேகத்தைக் கூட்டி ஒரு கட்டத்தில் காற்றை அறுத்துக் கொண்டு மிதந்த படி பயணிக்க துவங்கியது .பயணிக்க வேண்டிய தூரம் 8662 என்று விமானத்தில் இருந்த தொலைக்காட்சியில் ஒரு அலைவரிசையில் தகவல்கள் நாம் கேட்காமலே வந்து போகின்றது. 35000 அடி உயரத்தில் 831 கி மீ வேகத்தில் பயணப் பட கையில் எடுத்த எனது குறிப்பேடு 8ம் தேதியில் என் கண் முன்னால் விரிய இப்பொழுது மனமும் விமானமும் யாரை யார் முந்துவதென போட்டியிடுவதாய் எனக்குப் பட்டது. நிலங்கள் நிறம் வெளுத்து கண்களிலிருந்து மறைந்தே போயின. வெளியில் எங்கும் நிசப்தம் உறைந்து கிடப்பதாய் கண்ணுக்கு புலப்பட்டது. காலடியில் கடல்கள் காணாது போயின. எவ்வளவு நெருங்கினாலும் தொட்டு விடவோ கடந்து விடவோ முடியாததாய் தூரத்து தொடுவானம். எது மேகம் எது வானம் ? எல்லாம் ஒரே வெள்ளைப் போர்வைக்குள் ஒளிந்து கொள்ள ஒரு கட்டத்தில் பார்ப்பதற்கென்று ஒரு வெளியும் இல்லாது வெண்மை நிரவித் தெரிய
நான் எங்கிருக்கின்றேன் ? நீரிலா நிலத்திலா, வானத்திலா, காற்றிலா ஒளியிலா பஞ்ச பூதங்களுக்குள்ளும் அல்லாத ஒன்றிலா? எந்தக் காலத்தில்? காலம் , கடிகார முட்களுக்குள் சிக்கியதா? இந்தியக் கடிகாரம் ஒரு நேரமும், இலங்கை கடிகாரம் ஒரு நேரமும் இலண்டன் கடிகாரம் ஒரு நேரமும் சொல்ல நானோ எனக்கான சிந்தனைத் தளத்தில் எனக்கான நேரத்தில்.
மெல்ல சின்ன உறுத்தல் இருக்கத்தான் செய்கின்றது. அம்மா வீடு கூட இத்தனை நாட்கள் மொத்தமாய் போய் இருந்ததில்லை நான், 41 நாட்கள் பயணம். உறுத்தலை நினைக்க மறத்து தூங்கிப் போன இரவு எதிரில் வந்து போனது. ஆம் இப்பொழுதுதான் நில எல்லைகளையும், நீர் எல்லைகளையும் கடக்க எனக்கான பொழுதுகள் உதயமாகின்றன.
தூரத்து நீலம்
வானமா கடலா
வெள்ளை நிறங்கள்
மேகமா, தொடு வானமா
என்னையும் இவ்வளவு
தூரத்தில் நின்று பார்
பிடிக்க முடியாத
நிறமாக குளிராக
நான் மாற தொலைகின்றன
எனதும் உனதுமான எல்லைகள்
எங்கிருந்து துவங்கினேன்.? நினைக்கவே வியப்பாகத்தான் இருக்கின்றது. பட்டி வீரன் பட்டி எனும் கிராமத்தில் தனியே வெளியே செல்ல அனுமதி அளித்து விடத் தயங்கும் குடும்பம், சமூகச் சூழலிலிருந்து இத்தனை நாள் தனியாகப் பயணம் நினைக்க நினைக்க நெஞ்சு உரம் ஏறுகின்றது. கடைசி நேர விமான ஏறுதலுக்கு முன் எல்லாவற்றையும் போட்டு விட்டு வீடு போய் விடலாமா என மனம் தடுமாறியது தாண்டி, பறந்து கொண்டிருப்பது நினைத்து தனியாக சிரித்து கொள்ள எதிர்த்து வந்த விமான சிப்பந்தி எனைப் பார்த்து தானும் முறுவலித்துப் போகின்றார்.
8.10.05
தூர தேசப் பயணம் மூன்று மாதங்களுக்கு முன் மெல்லத் திட்டமிட்டது. பெண் போகலாமா? அதுவும் தன்னந்தனியாக புருசன் குழந்தை விட்டு போகலாமா? என்னிடம் நேரடியாக கேட்கப் படாத கேள்விகள் சுற்றிச் சுழன்று அவ்வப் போது என்னை மெல்லத் தீண்டி என் எண்ணங்களைக் கலைத்துப் போடப் பார்க்கின்றன
இழுத்துச் செருகிய முந்தானையாய் மடிப்பு கலையாது , பின் குத்திய சேலையாய் என் எண்ணங்களை எத்தனை வீசும் காற்றுக்கும் அசைய விடாது வைத்திருக்கின்றேன்.
ஒரு பதினைந்து நாட்களுக்கு என்று திட்டமிட்டது இன்று ஒரு மாதப் பயணத் திட்டத்தில் வந்து நிற்கின்றது ஒரு மாதம் போனா வீட்டுக் காரர் எப்படி சமாளிப்பார். கேள்விகள் ?
எத்தனை வீடுகளில் கணவர் மாதக் கணக்காய் வருசக் கணக்காய் விட்டுப் போக மனைவி , நீங்கள் அலட்சியமாய் சொல்லுகின்ற பெண் தனியாக வாழ்வைச் சமாளிக்கும் போது ஆண் ஒரே ஒரு மாதம் சமாளிக்க மாட்டாரா என்ன?
பதிலா? கேள்வியா? விடை சொல்லனுமா? பதில் தெரிந்தால் தானே விடை சொல்ல அவர்கள் கேள்வி கேட்டது பதிலுக்காக அல்ல என் பயணத்தை நிறுத்தி விட
ஒரு வேளை நான் ஒரு கணிணி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து அலுவலகப் பணியாக 6 மாத பயிற்சி என்று அனுப்பினால் பெருமையாக சொல்லிக் கொள்ளக் கூடும் சுற்றமும் நட்பும், இப்போதோ நல்ல அம்மாவாக இருக்க கட்டளையிடுகின்றன.
உன் குழந்தை உன்னை விட்டு இருந்திடுவானா? அடுத்த கேள்வி
கூட வரேன்னு சொல்லலையா?
அவனிடமே கேளுங்கள் என் பதில்
நோ ப்ராபிளம் நான் இருந்து கொள்வேன். இப்பவும் அம்மா ஊருக்கு போனா நான் தானே பார்த்துக் கொள்கின்றேன், அவனின் பொறுப்பான பதிலை பாசமில்லாத பதிலாக என் வளர்ப்பு பெருமையாக சொல்லப் படாது , மாற்றி வாசிக்கப் படுகின்றது.
ஒரு மழை நாள் இரவில் மொட்டை மாடியில் காயப் போட்டிருந்த துணி நனைய விடாது எடுக்கப் போய் நான் நனைந்து கீழிறங்க , ஈர உடை மாற்றி அறை விட்டு வெளி வர என் பையன் அழுது கொண்டிருந்தான். அருகில் சென்றேன். புரியாமல் மடிமீது சாய்த்தேன். ஏண்டா அழுகுறே? என் கேள்விக்கு
நீங்க செத்துப் போயிடுவீங்களா என்று கேட்டான்? அதிர்ந்து போனேன் ஏன் அப்படி தோணுச்சு என் று கேட்க என் friend அம்மா காய்ச்சல்ல இறந்து போயிட்டாங்களாம், நீங்க மழையில் நனைஞ்சுட்டீங்க , காய்ச்சல் வரும் வந்தா நீங்களும் செத்துப் போவீங்களா?
தூக்கி வாரிப் போட்டது . என் இருப்பு , அன்பு தரும் சந்தோசங்களை விட அது இல்லாமல் போகும் போது அவன் உடைந்து போவான் என்று நேரிடையாக பார்க்க கிடைத்த சந்தர்ப்பத்தில் உறுதி எடுத்தேன்.
என் பிள்லைகள் எனை நம்பியல்ல அவர்கள் நானில்லாத பொழுதும் சமாளிக்க வாழப் பழக வேண்டும், நானில்லா விட்டால் வீட்டில் எதுவுமே அசையாது என்று எல்லாரையும் போல் சொல்வது பெருமையல்ல அது கூடாது என்று என் தீர்மானிப்பில் இரு வருட பயிற்சி , இன்று நானில்லா விட்டாலும் உடையாது நான் பார்த்துக் கொள்வேன் எனச் சொல்லப் பழகியிருக்கும் சின்ன மகன்.
உலகத்திலேயே எந்த குடும்பப் பெண்ணு இப்படி போட்டுப் போக நினைக்க மாட்டா
அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலை . எனக்கு கிடைச்சிருக்கு நகர்ந்து முன்னேறி நிறுவியே ஆகனும் நான்.
லஷ்மி அம்மாளிடம் முறையீடு, நீங்க தானே குரு சொல்லுங்களேன்.போகக் கூடாதுனு, அவ கெட்டிக் காரி நினைச்சதை சாதிப்பா விடுமுறையில வங்கி கடன் வாங்கி குடும்பத்தோடு போய் வரட்டும் இப்போ வேண்டாம். என் மாமனாரின் முறையீடு
அடுத்து என் அப்பாவிற்கு கடிதம் அப்பா கடிதத்தை தூக்கி மூலையில் வைத்திட்ட போதும் எனக்கு கடிதம் எழுதுகின்றார். மாப்பிள்ளையின் அனுமதியோடு தான் போகிறயா? எனக்குத் திரும்ப கேட்க ஆசை, “ என்னை என்ன வித்துபுட்டீங்களான்னு “ ஆனால் பாவம் தாங்க மாட்டார்கள். எனக்கான விசயத்திற்கு யாரிடம் அனுமதி கேட்கனும்?
“ எல்லாம் எங்கள் இருவரின் திட்டமிடுதலிம் பேரில் தான் நடக்கின்றது” அந்த பதிலோடு நிறுத்திக் கொள்கின்றேன்
எப்படியோ இந்த பயணத்தில் சொல்ல முடியா விசயங்களும் அதை சொல்லி விடுகையில், எனது வெற்றிகள் தோல்விகளாக மாறிப் பொகும் சாத்தியக் கூறுகள் இருப்பதால் சொல்லாமலேயே விடப் படுகின்ற வெற்றிடங்கள் இருக்கட்டும்
ஆனால் அதையும் சேர்த்து பேசக் கூடிய சாத்தியங்களைத்தான் நானும் வெற்றியாகக் கருதுகின்றேன். அப்படியான நாட்கள் சாத்தியமாகாதவரை காத்திருப்பதுதான் உங்களுக்கும், தொடர்ந்து அதற்காக போராடுவதும்தான் எனக்கும் நல்லது
இது என் பயணமா? இல்லை தனித் திறமைகள் உள்ள பெண் சிதைந்து போகாமல் குடும்ப குகைக்குள் போய் தன்னையும் நிறுவி வரும் முயற்சி.
எந்நேரமும் யாரும் ஏதாவது சொல்லி நிறுத்தி விடக் கூடிய ஆபத்து எப்போதும் தலை மேல் தொங்கும் கத்தியாய்
இன்றைய பொழுது போயிற்று நாளை….ஞாயிறு… செவ்வாய் பயணம்


விமான சிப்பந்தி சாப்பாடு கொண்டு வந்து தர ஆரம்பிக்க நாட்குறிப்பை மூடி வைக்கின்றேன். என்றோ விதைத்த விதைகள் இன்று என் பயணத்திற்கு அறுவடையாய் கை சேருகின்றது. சூழ இருந்த சமூகம் சரியென்பதா? தவறென்பதா? எனத் தடுமாறி சிந்தித்த இடைவெளியில் வெளிக் கிளம்பியிருக்கின்றேன். திரும்பி வருகையில் சரியென்று சொல்ல வைப்பதற்கான ஆயுத்தங்களோடு தரை இறங்குவேன்.
11 மணி நேரப் பயணம். 10.30 மணிக்கு தொடங்கியது மணி இப்பொழுது மாலை 7.15 என்று என் மணிக்கூடு சொல்கிறது. வெளியே காலம் இன்னும் சூரியனின் முகம் காண்பித்து இருளை காணாது போகச் செய்திருக்கின்றது மணல் மேடுகள் சூரிய ஒளியை விழுங்கி, நிழலை துப்பிய அராபிய நாடுகளின் மேல் நின்று தேடுகின்றேன் சோலைகளை. புள்ளிகளாய், சதுரங்களாய், தூரத்துப் பச்சையாய் நிஜமாகவே தூரத்து பச்சையாய் காட்சி தருகின்றன. மேலிருந்து பார்க்க சவுதி அரேபியாவின் பாலைவன மணற்குன்றுகள் பார்க்க அரிய காட்சிகளாய் விரியவானிலிருந்து நீருக்குள் தீவுகளாய், தீபகற்பங்களாய் தெரியும் நிலபரப்புகளாய், பார்க்க அழகு, இருட்டியவுடன் bucharest நகரம் இரவில் இருளில் விளக்கு புள்ளிகளிட்டு வெளிச்சக் கோலமிட்டிருந்தது. இரவு வந்த பின்பும் தலைக்குள் ஏதோ நிகழ்ந்து கொண்டே இருப்பதாய் தோன்ற தூக்கமே வரவில்லை
இதோ உலகத்தின் மூன்றாவது ஜனநெரிசல் அதிகம் உள்ள ஐரோப்பாவின் அதிக விமானங்கள் வந்து போகும் விமான தளம். வெளிச்சப் புள்ளிகளை கிழித்துக் கொண்டு விமானம் தரையிறங்குகின்றது.
இன்னும் வரும்....
(வடக்கு வாசல் இதழில் வெளி வந்துள்ள கட்டுரை)
posted by Thilagabama Mahendrasekar @ 1/27/2006 08:22:00 pm  
2 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates