படு-களம்
எழுத்தின் சுதந்திரம் சொல்லி நண்பனானாய்
பெண்ணில்லையடி நீ ஆணென்று தோளில் கை போட்டாய்
பாலியல் சனநாயகம் பேசி நிகழக் கூடாதெனும் தருணத்தில் நிகழ்ந்து விட கூடிக் கலந்தாய்
மடியில் கட்டியிருந்த உண்மைப் பூனையை இனியும் மூட முடியாது வளைய வர விட்டாய்
கட்டிலின் கால்களுக்கு பின் விலங்கு போட்டு எனக்குத் திரையும் இட்டாய்
அந்யோன்யங்களுக்கிடையே எல்லாம் தந்தும் பெற்ற பின் அழகை தின்று அறிவை மறைத்து நீ ஆணாகிப் போன தருணத்தில் என் சமதளங்களை உடைத்து பள்ளத்துள் உனைத் தள்ளி சிலுவைகள் நடுகின்றேன்
உச்சி மலையில் தென்றல் மட்டுமே எனைத் தழுவ அனுமதித்து
குருத் தோலை திருநாளெல்லாம் புதிய சிலுவைகள் நடப் பட்டு ஆண்கள் அறையப் பட்டு காதலோடு வழி மீள
படுக்கையறை எல்லாம் நிராகரித்து போர்பயிற்சிக் களம் ஆக்கி கட்டிலின் கால்களில் கத்தி செய்கிறேன்
பெண்கள் காதலில் எப்பவும் காதலர்களாக “ஆண்கள்” இல்லாது போக Labels: கவிதை |
Post a Comment