|
Friday, September 08, 2006 |
மனவெளிப் பயணம் 7 |
31.10.06 ஈசன்( சுசியின் சகோதரர்) வரை படங்கள் தந்து பேருந்து ரயில் விபரங்களும் தந்து போனார். தமிழிலேயே அவர் பேசிய போதும் புரியாத மொழியில் பேசியதாய் உணர்ந்து கொண்டிருக்க சொன்ன தகவல்களை மனசு உருப்போட்டுக் கொண்டிருந்தது. பின்னர் ஒவ்வொரு இடத்தையும் பார்க்க நேருகின்ற போது ஈசன் அவர் சொன்னதை பொருத்திப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டே சென்றேன் இணையத்திலிருந்து பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய தகவல்கள் எடுத்துக் கொண்டேன் ரயில் நிலையம் வந்து ஸ்பாண்டொவிலிருந்து(spandau) ஜீவாலஜிக்கல் கார்டன் வரை வந்து சேருகின்றேன். பார்க்கின்ற ஒவ்வொரு இடமும் நெஞ்சுக்குள் பிரதி எடுத்து வைத்துக் கொள்கின்றேன். வழியெங்கும் கையிருந்த கடலைத் தோலை விட்டுப் போவது கணக்காய் எல்லா இடமும் என் மூச்சுக் காற்றின் வாசத்தை விட்டுப் போகின்றேன் திரும்பி வருகையில் எடுக்க . இனி நான் போக வேண்டிய இடத்துக்கு பேருந்தில் செல்ல வேண்டும் 2 பேருந்துகள் சுற்றுலா வந்திருப்பவர் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களைச் சுற்றி வருகின்றது 100 எண் பேருந்தும் 200 எண் பேருந்தும் 100ம் எண் பேருந்தில் ஏறி Hues der kultur form ல இறங்கி அங்கிருந்த அரங்கத்தினுள் நுழைகின்றேன். அன்று திங்கள் கிழமை அருங்காட்சியகங்கள் அரங்கங்கள் எல்லாமே ஐரோப்பாவில் திங்கள் அன்று விடுமுறை விட்டு விடுகின்றார்கள்.வரவேற்பறை மட்டும் திறந்திருக்கின்றது. அரங்கத்திற்கு முன்னால் நவீன சிற்பக் கலை வடிவம் ஒன்று பிரம்மாண்டமாய் நிற்க தூரத்து தேவாலய மணியோசை சூழலுக்கு இதமான இசையாய் வீழ அந்த அரங்கத்துள் நுழைகின்றேன் அங்கு நடக்க இருக்கின்ற நிகழ்வு பற்றி நான் விசாரிக்கத் துவங்க விடையளித்த நபர் நீங்க நிகழ்ச்சி செய்ய விரும்புகிறீர்களா? என்று கேட்கின்றார். வேகமாக மறுத்து விட்டு சில கலை நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளை பெற்றுக் கொண்டு வெளியேறி நடக்கின்றேன். ஸ்பிரே நதிக் கரையோரம் நடந்த படி , ஜெர்மானிய பார்லிமெண்ட் கட்டிடங்களோடு நடக்கின்றேன். கொல்லப் பட்ட யூத மக்களின் நினைவாக வரிசையாக வைக்கப் பட்டிருந்தது கற்கள் உல்லாசப் பயணிகளின் வசதிக்காக நகரும் கழிவறை வைக்கப் பட்டிருக்க அதற்கு நான் கொடுக்கிற தொகை ரூபாய் 25 என்கின்ற உணருதல் உள்ளுக்குள் வர, சிரிப்பு வந்தது. கூடவே வெங்கட் சாமிநாதன் ஒரு முறை சொல்லிய வசனமும் “ இங்கே பைசா பைசாவா சேகரிச்சு அங்கே ஐரோப்பியர்களுக்கு கொட்டனுமா?” எனை கடந்து சென்றவர் என் நெற்றியை பார்த்ததும் மெல்லச் சிரித்தார். நீங்கள் குஜராத்தியா? இந்தியரா?என்று கேட்க ரொம்பவும் நேசத்தோடு இந்தியக் குடும்பத்தினர் நெருங்கி வந்தனர். தூர தேசத்தில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் கூட ரொம்ப நெருங்கிய உறவாக எண்ண வைத்தது நெகிழ வைத்தது. இன்னும் கொஞ்ச தூரம் நடக்க பெர்லின் வாசல் வந்தது .சைக்கிள் ரிக்ஷா உல்லாசப் பயணிகளை கவர உலா வருகின்றது . அழகிய தேவதை சிலை தன் முன்னால் காசு போடுபவர்களையெல்லாம் ஆசிர்வதித்தபடி இருக்க அதன் அருகில் போய் நின்ற பெண்மணியின் தோளில் மாற்றுக் கை போட்டபோது தான் தெரிந்தது அது தேவதை வேசமிட்ட மனிதர் என்று அலுமினியக் கலவை பூசி மனிதச் சிலையாகவே இன்னும் சிலர் . சுற்றிக் காண்பிப்பதாய் சொல்லிக் கூவிக் கூவி அழைக்கின்றனர், பெர்லின் வாசலின் உச்சியில் மெல்லியதாய் சில சிற்பங்கள் குதிரை உடலும் மனித முகமும் கொண்ட சென்டோர் (centaur) போர் புரியும் மனிதர்கள் அடங்கிய சிற்பங்கள். மெல்ல நகன்று அடிக்கின்ற வெயிலின் சுகத்தை அநுபவித்தவாறு நடக்க வருகின்றது உண்டர் டென் லிண்டர்( under den linder ) எனப்படும் இடம் நாஜிகளால் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக கட்டப் பட்ட சதுக்கம் நடந்து விட்ட தவறுகளை மறந்து விடாது அதன் கொடுமைகளை பின் விளைவுகளின் நினைவுச் சின்னமாக பெர்லினில் அது திகழுகின்றது. ஒரே இடத்தில் ஆயிரக் கணக்கில் அமைக்கப் பட்டிருக்கும் கல்லறைகளை நினைவுறுத்தும் நினைவிடம் அதனூடாக நடக்கையில் திடீரென நமை மூழ்கடிக்கின்றது .போரின் மூழ்கடிக்கும் இருப்பை நினைவுறுத்துகின்றது.நாசிசத்தின் கொடுமைகளால் புரட்சி செய்து இறந்து போன ஆன்மாக்களின் சுவாசக் காற்றின் மிச்சத்தை ஆழ இழுத்து எனக்குள் விதைத்துக் கொள்கின்றேன். கனத்த மனதைத் தூக்கி கால்கள் மெல்ல நடை போட பசியெடுக்கத் துவங்குகின்றது. ஏதாவது சாப்பிடலாமே என்று மனது கெஞ்ச , கடையேதும் தெரிகிறதா என்று தேடுகின்றேன் நம்மூர் பெட்டிக் கடை போல் ஒரு கடை தெரிய சுற்றிச் சிலர் சில உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருக்க கடையருகில் போய் நிற்கின்றேன், விற்கப்படும் பொருள்களின் பட்டியல் அறிவிப்புப் பலகையில் இருக்க கொஞ்ச நேரம் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் என்ன கேட்டால் என்ன தருகின்றார்கள் என்று அவதானித்து விட்டு பின் அறிவிப்பு பலகையில் இருந்ததை அப்படியே நான் உச்சரிக்க , ரொட்டித் துண்டத்துக்குள் ஒரு இறைச்சியை சுட்டு உள்ளே வைத்து தருக்கின்றார். அங்கே இருந்த இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு கொஞ்சம் குளிர்குறைந்த மாதிரி தெரிய மீண்டும் நடக்கின்றேன். வெறும் கண்ணாடியிலாலேயே கட்டப் படிருப்பதாய் தோற்றம் தரும் கட்டிடங்கள் சூழ்ந்த தெருக்களில் நிற்கின்றேன் இடிக்கப் பட்ட பெர்லின் சுவர் நினைவாக , மிச்ச சுவர்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்க பார்த்தபடி அங்கிருந்து பேருந்து எடுத்து அலெக்ஸாண்டர் பிளாட்ஸ் எனும் இடம் பொகின்றேன், நவீனத்துக்குள் இருந்து காலஇயந்திரத்தில் பழமையான கிரேக்க நகருக்குள் வந்து விட்டோமோ எனும் சந்தேகம் எழுகின்றது. உயர தூண்களும் தூண்களின் மேல் நிறுத்தப் பட்ட முக்கோண விதானங்களுமாய் கட்டிடங்களுக்கு முன்னால் மக்கள் மிகச் சிறியதாய் உரு மாறியிருந்தார்கள் நானும் அவர்களோடு நடக்கத் துவங்குகின்றேன், எப்பவும் இரயிலோ பேருந்தோ இறங்கியதும் இடம் போறதா வலம் போறதா திகைப்பு இருக்கும் , நின்று நிதானித்து யோசித்து நகலுகிறேன் .ஐரோப்பாவிலேயே இரண்டாவது உயர கோபுரத்தின் முன்னால் வந்து நிற்கின்றேன் . மிகப் பெரிய வரிசை அதன் மேல் ஏறி பெர்லின் நகரின் முழுத் தோற்றத்தைக் காண ஆவல் எழ வரிசையில் நிற்கின்றேன். இரண்டு மணி நேர நின்றதற்கு பிறகு இருட்டி விட்டபின் இது வரை வந்த வழியெங்கும் நான் விட்டு வந்த தடயங்களை எடுத்து வீடு போய்ச் சேரத் தடை வருமோ , புதிய ஊர் புரியாத பாசை “வணக்கமும்”, “போய் வருகின்றேன்” என்பதுவுமாக சில வார்த்தைகள் மட்டுமே உணரத் துவங்கியிருந்த நாட்கள் காலையில் பார்த்த இடங்கள் இரவின் மையிருட்டில் வெறு வேடம் புனைந்து விட்டால் போகச் சிரமப் படுவேனோ என்று பயம் வர வரிசையிலிருந்து விலகி அருகிலிருந்த இரயில் நிலையத்தை நோக்கி நகர்கின்றேன்.ஸ்போண்டோ போகும் இரயிலைத் தேடுகின்றேன் நேர் திசை போகும் இரயில் எது எதிர் திசை போகும் இரயில் எது? நிதானமாக முடிவுக்கு வந்து ஏற வீடு வந்து சேர்கின்றேன். 1.11.05 இன்று தீபாவளி தீபாவளிக்கான எல்லா நடைமுறைகளும் தொலைத்த வெற்று நாளாக இருக்க எல்லா நாட்களும் ஒரே 24 மணி நேரங்கள் தான் மனிதன் தான் அந்த நிமிட முட்களின் டிக் டிக் சப்தத்தையும் சங்கீதமென மாற்றிப் போகின்றான். இன்றைக்கு நாஜிகளால் உருவாக்கப் பட்ட வதை முகாம் சென்று பார்த்து விடலாமா? இன்பாவை கேட்கின்றேன், இன்று அவருக்கு விடுமுறையாக இருக்க நல்ல நாளும் பொழுதுமா அங்கு போனால் மனசுக்கு வருத்தமா இருக்கும் பரவாயில்லையா என்று கேட்க எல்லா நாட்களையும் ஒரே மனநிலையில் சந்திக்க திடமாகத்தேன் இருக்கின்றேன் என்று சொல்ல கிளம்புகின்றோம். |
posted by mathibama.blogspot.com @ 9/08/2006 09:56:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment