|
Saturday, August 05, 2006 |
மனவெளிப் பயணம் 6 |
27.10.05 மதியம் 2 மணிக்கு katwaigt எனும் கடலோர கிராமத்திற்கு போகின்றோம் வீசும் காற்றில் வெயிலின் வெப்பமும் குளிரின் சுகந்தமும் கலக்கச் செய்கின்ற கடல், நுரை பூக்க கரையில் மோதுகின்றது கடல். பட்டம் விடும் சிறுவர்கள் மணலில் கோட்டை கட்டி குழந்தைகளுக்கு உதவுவதாய் சொல்லி பால்ய கால நினைவலைகளுக்குள் தங்களையும் கரைய விடும் பெரியவர்கள், துணையாய் நாய்களோடு நடமாடும் மனிதர்கள். நாய்தான் அவர்கள் பேச்சை கேட்கின்ற, அதீதமாய் எதுவும் எதிர்பார்க்காது கட்டுப் பட்டு நிற்கின்றதோ? மனிதனுக்கு எப்பவும் தனக்கு அடிமையாய் இருக்கின்ற ஒரு நபர் தேவையாயிருக்கின்ற மனோநிலையை வெளிப்படுத்தும் நாயோடு நடப்பவர்கள். அன்புக்கு கட்டுப் படுகின்ற ( அடிமைத் தனத்தை ஏற்றுக் கொள்கின்ற அல்ல) சக மனிதருக்கான ஏக்கம் எப்பவும் தொடர்கின்றது. அதே நேரம் இல்லாத குடும்ப அமைப்பு வாழுகின்ற ஒவ்வொருவருக்கும் இடையே அப்படியான ஒரு ஈர்ப்பை உருவாக்க முடியாது உதிர்த்துப் போடுகின்றது. கால்புதையும் மணல் சிதறிக் கிடக்கும் இறந்த கால எச்சங்களாய் சிப்பிகள் , நிகழ்காலமாய் விழித்துப் பார்க்கும் நண்டுத் துளைகள் எதிர்காலமாய் ஆர்ப்பரித்து விரிந்து கிடக்கும் நீலக் கடலோடு நடக்கின்றேன் யாருமற்ற வெளியாய் ஒரு வெறுமை சூழுகின்றது.ஓயாத இரைச்சல் நிகழ்த்தும் கூட்டமிருந்தும் அந்த வெறுமை கழிவிரக்கமாக மாறவிடாது முழுக்க முழுக்க எனக்கான உலகமிது என்ற சிந்தனையை உரத்து சொல்லி தனிமை ரசிக்கப் பழகுகின்றேன் பாடல்களை உரத்துப் பாடிய படி கடலோடு நீள நடக்கின்றேன் ஒரு மணி நேரம் இருக்குமா? திரும்பி வருகையில் என் குரலினில் ஒரு பெரிய மாற்றமிருந்தது குரல் வழக்கத்தை விட சுகமானதாய் குழைவானதாய் மாறியிருந்தது தொடர்ந்து பாடியது இதை சாத்தியப் படுத்தியதா? கடலின் உப்புக் காற்றா? ஈரக் காற்றா? எது சாத்தியப் படுத்தியிருக்கும்?. வந்ததிலிருந்து இன்று வரை கால் உறை இல்லாது நடக்கவே இல்லாததால் பாதங்கள் மிருதுவாகிப் போயிருக்க இன்று தான் குறுமணலில் பாதம் புதைய நடக்கின்றேன் அதன் ஸ்பரிசம் சில்லிடுகை ஆதரவான நினைவை தந்து தனிமையை அகற்றப் பார்க்கின்றது.
8.30 மணி ஆகியிருக்க இன்னமும் சூரியன் முழித்துக் கொள்ளாத நேரமாகியிருக்க இருள் பூமி விட்டுப் போக மறுத்து கட்டிக் கொண்டு கிடக்கிறது. சோறிட அழைக்கும் காகங்கள் இல்லை விடியலைச் சொல்லும் சேவல்கள் இல்லை இருள் போர்வை போர்த்தி விடியலை எழும்ப விடாது செய்திருந்த குளிர் எனையும் எழும்ப விடாது செய்திருக்க ஈரம் சுமந்த காற்று வந்ததன் நினைவை காதலாய் போர்த்திப் போக போர்த்துகின்ற ஈரம் எல்லாம் தூர எறிந்து எனை மரத்துப் போகச் செய்கின்ற வட துருவக் கடலில் காலை நனைக்கின்றேன் இனி எது குத்தினாலும் குத்தல்களை உணராது என் பாதம்
“சேவல்கள் கூவாத பொழுதினிலும் எனக்கான விடியல்கள் உதயமாகின்றன “ என்று எப்பவோ எழுதிய கவிதை வரிகள் நிஜமாகியிருக்க, எப்பவோ எழுதுகின்ற வரிகள் பின்னாளில் நிஜமாகின்றதின் சத்தியம் ஆச்சரியம் தருகின்றது. காரின் பம்பர் அடிபட்டிருந்ததை சரி செய்துவிட்டு றஞ்சியின் வீட்டுத் தரை விரிப்பு ஒட்டுகின்ற வெலையை செய்யத் துவங்கினர் சுசியும் ராஜனும். தரை விரிப்பை ஒட்டுவதற்கு வீட்டின் அலமாரிகளையெல்லாம் பிரித்து உள்ளிருந்த துணிமணிகளையெல்லாம் எடுத்து ஒவ்வொரு , அலமாரியையே பிரித்து எடுத்து ஒவ்வொரு அறையாய் ஒதுக்கி ஒட்டி விட்டு பின் மீண்டும் அலமாரி கட்டில் என அடுக்கும் வேலையில் இன்பா வேகமாய் இருக்க உடன் நானும் தயக்கங்களுடன் . அலமாரியில் இருந்த துணியை ஒதுக்கத் துவங்கவும் எனது நினைவு அலமாரியிடமிருந்து சிவகாசி வந்து போகின்றது. புதிதாய் திருமணமாகி புது மணப் பெண்னாய் புகுந்த வீடு போய் மெல்ல மெல்ல எனக்கான இடம் எனதான வீடு என்று எண்ணத்தை பதிய வைத்துக் கொள்ள துவங்கிய தருணத்தில் ஆறுமாதங்கள் கடந்து விட கிறக்கத்திற்கு ஓய்வு எடுக்க வென்று அம்மா வீடு போய் 15 நாட்கள் இருந்து வாந்தியெல்லாம் நின்று விட்டுத் திரும்பிய தருணத்தில் எனது அலமாரி நான் வைத்து விட்டு போன படியாக இல்லாதிருக்க நான் இல்லாத தருணங்களில் புடவைகளை அடுக்கி வைக்க அலமாரி திறந்ததற்காக கோபப் பட்டு அதிலிருந்து அலமாரிச் சாவிக் கொத்தை இடுப்பில் செருகிய படி நடந்த நாட்களில் இருப்பை காப்பாற்றும் அவசியமும் எனக்கானது என்று மாற்றிக் கொள்ள வேண்டி இருந்த எண்ணங்களும் நினைவுக்கு வர எந்த வித தயக்கங்களுமின்றி அடுத்தவர் அலமாரியை ஒதுக்க , மனம் வராமல் தவித்தாலும் இன்பாவோடு வேலைகளைத் தொடருகின்றேன். நான் இருந்த பொழுதுகளில் ஒரு நாளும் அலமாரி அடுக்க உதவாதவர்கள் யாரும் அறியாது சிறுவாட்டுப் பணத்தை புடவைக்குள் வைத்திருக்கிறேனா என்று அறிந்து கொள்ளத்தான் என் அலமாரி திறக்கப் பட்டது என உணர்ந்த போது எனது கோபம் இன்னமும் அதிகரித்து இரட்டைத் தாழ்ப்பாள் போட வைத்திருந்தது ஆனால் மாறுகின்ற காலகட்டங்களில் அலமாரிகளை உடமையாக்குவதை நான் தூர எரிந்து விட நான் அறியாது திறந்து பார்க்கும் எண்ணமும் தொலைத்து போக எதை எங்கே எப்படி செயல்படுத்த வேண்டும் என் உணர்த்தி போகின்ற விடயங்களாய் மாறிப் போகின்றன அன்றைக்கு அலமாரியை எனது இருப்பாக்கி எதிர்ப்பை சொல்ல நேர்ந்த காலத்தையும் இன்றைக்கு அடுத்தவர் அலமாரியை யோசிக்காது அடுக்கி வைக்க நேர்ந்திருக்கின்ற சூழலும் அலமாரிக்குள் வீட்டுக்குள் எங்களது இருப்பை சிறை வைத்து விடக் கூடாது என்று எண்ணம் தந்து போகின்றது. இன்றைக்கும் தமிழகத்து சூழலில் சமையல்கட்டை வேலையை பகிர்வதைக் கூட அதிகார பகிர்வாய் நினைத்து இருப்பு தொலைந்து போகுமோ என்று பயப்படும் மாமியாரையும் , இருப்பை கைக்கொள்ள நினைக்கும் மருமகளையும் தினந்தோறும் பார்க்கின்றோம். 29.10 கலை 8.45 க்கு ஆம்ஸ்டர்டாமிலிருந்து கிளம்பி மாலை 4 மணிக்கு பெர்லின் வந்து சேருகின்றோம் என்னுடன் இருவார பொழுதுகளை ஓடித் திரிய வேண்டிய இயந்திர உலகத்துக்கிடையே இருந்து விடுபட்டு திரிந்த சுசி இன்பா இருவரும் தங்கள் விடுமுறையை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்தது அவரவர் பணிகளுக்கு திரும்பிப் போக தனிமையென்று வீட்டோடு நின்று விடக் கூடாதென்று யோசிக்கத் துவங்கிய தருணமிது 30.10.05 காலை உணவை முடித்துக் கொண்டேன். நண்பன் உடன் இல்லா பொழுதுகள் தொடர்கின்றன. சுசீக்கு டாட் மூன் எனும் இடத்தில் வேலை . வந்திருப்பது ஆண் நண்பனாயிருந்தால் உடன் அழைத்துப் போயிருக்கக் கூடுமோ நான் பெண்ணாயிருப்பதால் யோசிக்க வேண்டியிருக்கிறதோ தயக்கம் யார் வளர்த்தது ? நாடா? அதைத்தான் தாண்டி வந்தாச்சே சமூகமா? கேள்வி கேட்கும் நபர்களில்லையே . எங்களது மனோபாவங்களா? ஆம் என்கிறது மனது. பெண் என்பதால், விடுபட வேண்டியிருக்கின்றதோ எனும் என் கேள்வியே தவறோ? எனக்குள்ளும் அப்படி நினைப்பு எழக் கூடாது என நினைக்கின்றேன் தனியான பயணங்களுக்கு இல்லை எனக்கான பயணத்திற்கு தயாராகின்றேன் அதே நேரம் எனக்காக என்று இருவாரமும் இனி வரும் நாட்களையும் திட்டமிடுபவர்களையும் வருந்தச் செய்யக் கூடாது எனும் பயமும் எப்பவும் உடனிருக்க பெர்லினை சுற்றி வரத் திட்டமிட்டு கிளம்புகின்றேன் .பொ. கருணாகர மூர்த்தி அவர்கள் வந்திருந்தார்கள். இலக்கிய விசயங்களை பேசிக் கோண்டிருந்து விட்டு, நேரம் கிடைக்கும் போது வெளியே போக எனக்குத் துணை வருவதாய் சொல்லிப் போனார் திறந்தேயிருக்கின்றன கூண்டுகள் வாசல்களில் வழி மறிக்கும் புன்னகைகள் பூட்டில்லா வாய்கள் வாய்த்திருந்த போதும் கேட்பதற்கான காதுகளற்ற முகங்கள் பேசும் எண்ணத்தையே புதைகுழிக்குள் இறக்கியிருக்க இன்னிசை பிறக்கும் சலங்கைகள் தான் காலில் எனினும் போகின்ற இடங்களை சொல்லும் உளவாளியாய் மாற நடக்கவே இயலாது போயிற்று
நேற்றைய இரவு 2 மணியிலிருந்து 1 மணி நேரம் குறைத்து வைக்கப் பட்டிருக்கின்றது . இன்றைக்கு வழக்கம் போல் தயா நேரம் குறைத்து வைக்க பட்டது மறந்து 5 மணிக்கு வழக்கமாய் கிளம்பும் வேலைக்கு தன் கடிகார நேரமான 5 மணிக்கே கிளம்பிப் போக, எல்லார் கடிகாரமும் 4மணி காண்பிக்க சிக்கல் வந்ததை சொல்லிப் போகின்றார். |
posted by mathibama.blogspot.com @ 8/05/2006 02:19:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment