சூரியாள்

Saturday, June 17, 2006
மனவெளிப் பயணம் 5

வான்கோ அருங்காட்சியகம்
ஆம்ஸ்டர்டாமில் நான் பார்த்த பல்வேறு விசயங்களையும் ஒப்பீட்டளவில் கோர்த்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் பெரும்பாலான ஓவியங்கள் ஓவியர் வான்கோ சந்தித்த பாலியல் தொழிலாளர்களின் முகங்கள். பாலியல் தொழிலாளர்கள் என்ற போதும் அவர்கள் இன்றைக்கு காணக் கிடைக்கின்ற அல்லது எந்த விதமான ( எனது அவதானிப்பில் சிக்கிய வரை) உடல் சார்ந்த சித்தரிப்புகள் அவரது ஓவியத்தில் இல்லை அவர்களையும் மனிதர்களாய் அங்கீகரிக்கும் மனநிலை அவரிடம் இருந்திருக்கக் கூடும் ஆகவே தான் இன்று கலையெனும் பேரில் நவீனக் கலையெனும் பேரில் எங்கள் (பெண்கள்) உடலையே மையப் படுத்தி வரைந்து போவது நிகழ்ந்து கொண்டிருக்க பாலியல் தொழிலாளர்களிடையே உடனேயே இருந்திருந்தும் அவர்களையே வரைந்த போதும் முகங்களை மட்டுமே வரைந்திருப்பது மதிக்க நினைத்திருக்கின்றார் என்று தோன்றியது.
இயற்கையை அவர் தூரிகையால் எழுதிப் பார்த்திருப்பது.வண்ணங்களின் சுழற்சிகளூடாக நம்மையும் பயணிக்க வைக்கின்றது நட்சத்திர இரவுகளும் , கோதுமை வயல் வெளிகளும் அதனூடாக பறந்து வாழும் காகங்களும் பறவைகளும் சாடியில் நிறைந்திருக்கும் பூங்கொத்துக்களும் பெரும் பாலான இடத்தை பிடித்திருக்கின்றன.
2 மணி நேர பார்வையிடலுக்கு பின் மழை விட்டிருக்க வண்டிக்குத் திரும்புகின்றோம்.மூவருமாக நகருக்குள் கட்டிட வெளிக்குள் காண முடியாதிருந்த அம்மண்ணின் உணர்வலைகளுக்குள் நுழைய முயலுகின்றேன்.உலகத்திலேயே அதிக உயரமுள்ள மக்கள் நான் ஏதோ அசாத்தியமான பிரம்மாண்ட உலகத்தினுள் நடந்து போவதாய் தோன்றியது.


நகரம் முழுவதும் நீராலேயும் போக்குவரத்து அமைக்கப் பட்டிருக்கின்றது. ஏறக்குறைய நகர் முழுவதும் 1500 பாலங்கள் நிரம்பியிருக்கின்றது பாலங்கள் இந்நகரின் சிறப்பு அம்சமும் கூட அரை வட்ட வடிவில் நகர வடிவாக்கம் அமைந்திருக்க நாங்களும் ஒரு படகில் நகரை வலம் வருகின்றோம்.
நதி வழி நகரின் முக்கிய இடமிருந்து படகு கிளம்புகின்றது எங்கெங்கு பார்க்கினும் இரு சக்கர மிதி வண்டிகள் நிறுத்தப் பட்டு இருக்கின்றது . இரயில் நிலையம் கப்பல் சரக்கேத்தும் இடம் தபால் நிலையம், முக்கிய பல்கலைக்கழகம் , அருங்காட்சியகங்கள் என்று சுற்றி வருகின்றது . படகு இப்பொழுது எங்களைச் சுற்றி எல்லா திசையிலும் நீர் இருக்கின்றது .ஆம்,! மழை பார்வையை மறைக்க கீழே கால்வாயாகவும் மேலே மேகமாகவும் , சூழுகின்ற திசையெல்லாம் வீழுகின்ற மழையாக நீர் எங்களைச் சூழ ஒரு பயணமிது. பழமை சார்ந்த கட்டிடங்களின் அழகிய காட்சிகள்


கிழக்கிந்திய கப்பலின் நினைவாக நின்று கொண்டிருக்கும் கப்பல் முடிந்து நகருக்குள் நடக்கத் துவங்க நகரின் மையப் பகுதிக்கு வருகின்றோம். எல்லா வித கேளிக்கைகளும் நிரம்பியிருக்கும் “டாம் ஸ்கொயர்” எனப்படும் சதுக்கம். “ மேடம் துஷா” எனப்படும் முக்கிய நபர்களின் மெழுகு உருவச் சிலைகள் இருக்குமிடம் இங்கும் இருக்கின்றது லண்டனில் இருப்பதை போல.


வெளிச்சம் கவ்வி தின்று இருளை போர்த்த நினைத்த மேகம் படை படையாய் அணிவகுத்து வந்த போதும் கூசும் விளக்கொளியில் அதையெல்லாம் முறியடித்து போட்ட படி இருந்ததந்த இடம் கேளிக்கைகளின் வடிவங்களையும் பார்க்கிறேன் 8 கைகளுடைய எலும்புக் கூடு திடீரென கீழிறங்கி நமை மிரளச் செய்யும் ராட்சத சிலந்தி ராட்சத கொரில்லா உருவமாய் திடீரென உயிர்த்து உள் வர அழைக்கும் பயமுறுத்தும் குரல் ( நவீன , பின்நவீன இலக்கிய வாதிகளின் புனைவு உலகம் இப்படி சாதாரண கேளிக்கைகளுக்குள் இருந்தா நகல் எடுக்கின்றது.) இத்தோடு நம்மூர் திருவிழா நேர பொட்டல் நினைவுக்கு வருகின்றது மாடென்றும் மயிலென்றும் வேசமிட்டு வரும் ஆட்டங்கள் குச்சியின் உச்சியில் அழகாய் சிங்காரித்த பொம்மையை கை தட்ட வைத்து மிட்டாயை குழந்தைகளின் கற்பனைக்கு ஏற்ற மாதிரி செய்து விற்கும் தாத்தா, வாலு பையன்கள் வாங்கினால் வீட்டு வாசல் வரை கூட பத்திரமாய் வராத பலூன் மற்றும் பிளாஸ்டிக் சாமான்கள் , ஊதி ஊதி காற்றை சப்தமாகவும் சோப்பு நுரையாகவும் மாற்றிப் போகும் குழந்தைகள் வெட்கத்தோடு கைகளில் கண்ணாடி வளையலிட்டுக் கொள்ளும் புது மணப்பெண் கதறக் கதற சிரித்த படியும் மூக்கு குத்திக் கொள்ளும் பெண்கள் எல்லாரும் வேலையும் இதர கொண்டாட்டங்களையும் முடிக்க காத்திருக்கும் நாடக மேடை.மக்களோடு விடிய விடிய முழித்திருக்கும் சாமி, இவற்றின் முன்னால் வக்கிர கற்பனைகள் எதுவும் கலந்து விடாத கொண்டாட்டங்களில் மகிழ்வு கனநேரம் நினைவுக்கு வந்து போகின்றது
.
நகரின் மைய இடமிருந்து சின்ன சின்னதாய் பின்னலிட்டுப் போகும் சந்துக்குள் நுழைகின்றோம் நெடுக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நீள சிவப்பு விளக்குகள் எரிகின்றன. ஆம் பாலியல் தொழில் சட்ட பூர்வமாக நடைபெறும் “தம்” பகுதியில் தான் இருக்கின்றோம்.வெறும் கண்ணாடிக்கு பின் புறம் தன்னுடலை பொருளாக்கி அரை குறை ஆடையுடன் தெருவில் போகும் ஆண்களை அழைக்கும் தோரணையில் கண்ணாடிப் பதுமைகளாய் நிற்கின்றார்கள்.சில கண்ணாடிக் கதவுகளில் திரை தொங்குகின்றது.அறிவால் விக்கிரமாதித்தன் சிம்மாசப் பதுமைகளாய் இருந்து அரசோச்ச உதவியதாய் சொல்லப் படுகின்ற புனைவின் உக்கிரம் நினைவுக்கு வருகின்றது.

அசையாத அடித்தட்டுகள்
உதிரி மணல்களாய்
ஒட்டாது இருக்கின்ற
மேல் நிலைகள்
எல்லாம் இயல்பாய் போனதாய்
சொல்லிக் கண்ணாடிச் சிறையிருக்கும்
அரை நிர்வாணச் சின்ரல்லாக்கள்

வந்து போகும் இளவரசர்களிடம்
பாதரட்சைகளை
மறந்தாவது போட்டு விடக்
காத்திருக்க
சமூகமெனச் சொல்லி
சில தாலிகளுக்குள்ளும்
உரிமை எனச் சொல்லி
சில கண்ணாடி கதவுக்கு பின்னும்
ஆடிக் கிடப்பதை சுகமாக்கிப் போகும்
நடமாடும் மனிதர்கள்

அசைகின்ற அடித்தட்டில்
மணல்கள் இறுகி
முழுங்கித் தீர்க்க
எதுவாகியிருக்க வென்று
உணராது தவிக்கும்
தலை தொலைத்த உடலங்கள்

உடலங்களை தொலைத்து
மூளைகள் உயிர்த்தெழ
ஏங்கும் தவமிருப்புகள்
மூடி விட்ட புற்றுகளில்
முழுகிப் போகின்றன
வரங்கள் வந்து போன போதும்
உணராது போக
உடைத்து வந்து
எப்போ நான் உடலற்று திரிய

கண்ணாடிப் பதுமைகள் என்னவோ சிரித்தபடி மகிழ்வாய் இருப்பதாய் சொன்னாலும் காசுக்கு தின்று போகின்ற கூட்டத்தின் முன்னால் இன்றும் சீரழிந்து கிடக்கும் பெண்ணின் அவலம் என்னைத் தலை குனிய வைக்கின்றது. மூளை மழுங்கச் செயும் கஞ்சா விற்பவனை விரட்டிப் பிடித்த கலவர நிகழ்வை கல்லாய் சமைந்தவளாகவே நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் .பெண்ணுக்கு இதுவே சுகம் என்று பழக்கப் படுத்திக் கொண்டிருக்கும் சமூகத்தின் மேல் வெறுப்பு பற்றிக் கொண்டு வருகின்றது, அரசாங்க சலுகைகளாய் தந்து போகின்ற காசுகளால் எதை நிரப்ப முடியும்
இன்று எத்தனை காலத்திற்குத்தான் பெண் உடல் அழகு சார்ந்ததாகவும் ஆணுக்கான சுகத்தை தருவதாயும் நிறுவப் போகின்றோமோ தெரியவில்லை பெண் உடல் பார்க்கப் பட வேண்டிய தளத்தை மாற்றி கட்டமைக்க பெண்னையும் சிந்திக்க விடாத சூழலை உருவாக்கிக் கொண்டு அதையே தூக்கிப் பிடித்து பெண்ணுக்காக கொக்கரிப்பதாய் சொல்லும் சமூகம் பெண் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க சொல்லிப் பார்க்கின்றது மேலைத் தேய நாடுகளை முன்னுதாரணமாகக் நிறுத்தி இந்தியாவுக்குள்ளும் நுழைக்கப் பார்க்கின்றது. மும்பை போன்ற இடங்களில் சாதித்ததை . எல்லாரிடமும் பரப்பவும் நினைக்கின்றது. முத்து லெட்சுமி ரெட்டி அவ்வளவு கஸ்டப் பட்டு சாதித்ததை விட்டுக் கொடுத்து விடுவோமா என்ன?
மதுரையில் தாய் எனும் நிறுவனத்தை தற்செயலாக என் நண்பர் அதில் பணிபுரிவதகச் சொன்னதால் உள்ளே நுழைந்தேன்.எய்ட்ஸ் ஒழிப்பிற்காக அந்த நிறுவனத்திற்கு நிதி பில்கேட்சால் தரப் படுகின்றது.
பாலியல் தொழிலாளர்களை அடையாளம் கண்டு ஒன்றினைக்கின்ற அதே தருணத்தில் அவர்களை அதிலிருந்து மீட்பது பற்றி யாருமே பெசுவதில்லை. முக்கியமாக “இத்தனை தொழிலாளர்கள்” என்று கணக் கெடுப்பே அவர்களது தேவையாய் இருக்கின்றது இத்தொழிலாளர்கள் இருக்கும் வரைதான் அவர்களது வேலையும் இருப்பும் என்றிருக்க பாலியல் தொழிலை இவர்கள் ஒழிக்க எப்படி நினைப்பார்கள்.அங்கிருக்கும் பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கப் படுகின்ற தொழில்கள் அழகு கலை கூடை பிண்ணுதல்
அதே போல் நான் இலங்கை சென்றிருந்த போதும் நான் உணர்ந்த ஒரு விடயம் இன்றைக்கு பலர் சமாதானப் பேச்சு வார்த்தை என்பதில் பணி புரிகின்றார்கள் அது ஒரு புரோஜெட் ஆகவே கட்டமைக்கப் படுகின்றது. அதை ஒரு பணியாக எடுத்து செய்து கொண்டிருப்பவர்கள் அதன் மூலம் கிடைக்கும் இருப்பையும்வசதியையும் தொலைக்க விரும்புவார்களா என்பதுவும் கேள்விக் குறியே
அப்படிப்பட்டவர்கள் நம்மிடையேயும் தலித்தியம் பெண்ணியம் எனும் தளத்தில் அதன் மேல் ஏறி நின்று கொண்டு தனக்கு கிரீடம் சூடிக் கொள்ளப் பார்க்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள்.
ஒடுக்கப்பட்டவர்களுக்காக என்று சொல்லி பதாகை தாங்குபவர்கள் ஒரு நாளும் விடுதலை பெற்று சமநிலை வர விடவே மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை சமநிலை இல்லாதிருப்பதுவா வாழ்க்கை.
அப்படிப்பட்டவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும் ஆயுதம் ஏந்தி அணுகுண்டிட்டு வெல்வதை விட இன்றைய வல்லரசுகள் வளர்ந்து வரும் நாடுகளின் மூளைகளை வெல்வதன் மூலமும் சமநிலையை குலைப்பதன் மூலமும் ஆதிக்கம் செலுத்தி விடத் தயாராகின்றன.
தனி மனிதனின் வாழ்க்கை பாடுகளிடையே தேசத்தை விட்டுக் கொடுக்க அதன் புனிதங்களை விட்டுக் கொடுக்க யாரும் முன் வரக் கூடாது
posted by mathibama.blogspot.com @ 6/17/2006 12:13:00 am  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates