சூரியாள்

Saturday, May 27, 2006
நனைந்த நதி -5

.காட்டு வழிக் காற்று

அந்த ஆலமரம் நிழலில் நின்று கொண்டிருக்கிறோமா இல்லை சூரியன் தூவிச் சென்ற வெயில் உருளைகளில் நிற்க முடியாது உருண்டு கொண்டிருக்கிறோமா? தொடங்கிய புள்ளி ஒன்றாய் இருக்க எங்கெங்கோ புள்ளியிட்டு இல்லாத போது தேடியலைந்து கண்டு எல்லாப் புள்ளிகளையும் ஒன்றாய் இணைக்க முயன்றதில் விழுது வீழ வீழ்ந்து விடாது வியாபித்தபடி நின்று கொண்டிருந்தது எனக்குள் துவங்கிய ஆட்டம் போல. கண் முன்னே ஏதோ உருவம் தோன்ற முயன்று கண்ணாமூச்சிஆடிய படி இருந்தது இப்பொழுது எதுஆரம்பம் என்பது அந்த ஆலமரத்தில் மட்டுமல்ல என்னிலும் கண்டறிய முடியாததாகவே
கால் ஊன்றிய வேர் எது?
இதுவாய் இருக்குமோ?
இல்லை இது பின்னாளில் வீழ்ந்த விழுது
இதுவாய் இருக்குமோ?
விழுதுகள் வேர்களான பின் தன் நிஜம் மறைத்துக் கொண்டன. சாத்தியமில்லை முகம் மறைத்துக் கொண்ட பின் நீ குற்றம் சொல்ல விழி தேடித் திரிவது.. ஒரு வேளை கண்டாலும் அது போட்டிருந்த முகமூடிகளின் விழியாய் இருக்க சுட்டு விரல் நீட்டலில் பிரயோசனம் தான் என்ன?
போகிறது, இது முதல் விழுதாய் இருக்கக் கூடும் எனும் நம்பிக்கையில் பேசுகின்றேன்
போன பருவத்தில் நதி போன பாதை தேய்ந்து சுவடாகிக் கிடக்க புது வெள்ளம் சுவடழித்து பழசு மறந்து மறைத்து ஓடிக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா? வழக்கம் போல . வழக்கங்கள் பழக்கங்களுக்கு அடிமையாகாது புதிதாய் சிந்தனைகள் கேள்விகள் புறப்பட தினம் தோறும் எரிச்சல் தந்த காத்திருப்பு. முறித்து விட மனம் கனிந்து பின் கனன்று நின்றது. பழைய சுவடுகள் கண்ணில் படாது போயிருக்க பூமி மேல் முளைத்திருந்த பச்சை புல்லும் பூத்திருந்த வண்ணங்களூம் ஈர்க்க புதிய தடங்களோடு பயணிக்கிறேன்
இயந்திர மயமாகிப் போன வாழ்வின் இரசனைகளும் காதலுணர்வும் மாறிப் போகக் கூடுமா? என்ன?ஆனால் கூடுதலான உழைப்புக்கு அப்படியான உணர்வுகளை புதுப்பித்தல் தேவையாய்த்தானிருக்கிறது என்பதை உணராது வாழ்வதாய் சொல்லிக் கொள்ளும் மனிதராய் என் கணவர் குமாரும்.

அடுப்பில் தோசைக்கல்லை காய வைத்திருந்து காத்திருந்தேன் காத்திருப்பில் கவனம் திசை திரும்ப இப்போது அதிகம் காய்ந்து விட்டது கறுப்புச் சட்டியிலிருந்து ஆவி பறந்து கொண்டிருக்க இப்போ மாவு அதில் சமமாகப் பரவ முடியாது என் மனம் எதிலும், நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் ஒட்டாது தவிப்பதைப் போல , இருந்தும் பசிக்கு அவசரமாக ஊத்தித் தொலைக்க தேவையாயிருந்தது கரண்டியில் மாவெடுத்து சட்டியில் மையமாய் வைத்துச் சுற்ற கரண்டியோடு மாவு பாதி வெந்தும் வேகாமலும் பின்னாலேயே சுருண்டு வந்தது . எரிச்சல் பற்றிக் கொள்ள அடுப்பை நிறுத்தினேன். இனி இந்த தோசையை மனமா சாப்பிட முடியாது. தவிப்போடு காத்திருந்தது கிடைத்த போது அனுபவிக்க முடியாமல் போவது பற்றிய நீண்ட நாளைய வருத்தம் இன்றைய வெறும் சாப்பாட்டும் பிரச்சனையிலும் முன் நிற்க. போய் கட்டிலில் விழுந்தேன். வயிற்றுக்குள் பசி வளரஆரம்பித்திருந்தது சின்னப் புள்ளியாயிருந்த அதன் உருவம் வெடித்து உள்ளிருந்து வந்த ஒற்றைப் புழு மெல்ல ஊர்ந்த படி என்னைத் தின்னபடி விஸ்வரூபம் எடுக்க வண்ண சிறகுகள் மெல்ல முளைக்க பறக்கத் துவங்கியது கால்களில் மாட்டியிருந்தது என் உருவம். நான் பிடி உதற நினைத்து ஒன்றும் ஆகி விடப் போவதில்லை நினைத்துக் கொண்டிருக்கையில் தூக்கிப் பறந்த வழியில் கண்ட மெல்லிய ரோஜா பற்றிக் கொள்ள கையோடு வந்தது பூவோடு முள்ளும் அவள் கைகளில் அது வாளாய் உருமாறியிருந்தது .வாளெடுத்து வீசத் துவங்க இரண்டு பட்ட சிறகுகள் துண்டாகி காற்றில்ஆடி அசைந்து படகாய் மிதந்து வீழ கனமோடு அதற்கு முன்னால் தரை சேர்ந்திருந்தேன் .மீள முடியா காயமோடு இதற்கு கால்களடியிலேயே இருந்திருக்கலாமோ? நினைப்பே தவறு என மனமுதற வீழ்ந்த அவள் காயங்களின் குருதி ஈரத்தில் வேர் ஊன்றியிருந்தது அவள் கையோடு வந்திருந்த ரோஜாச் செடி.
இன்னொரு தலைமுறை அவளிலிருந்து சந்தோசமாய் முகிழ்க்க காயம் தாங்கத் தயாரனாள். விஸ்வரூபம் எடுத்ததை அடக்க நினைத்து குப்புறப் படுக்க கண் மூடிய போதும் நினைவுக்குள் இருந்து ஒன்றிலிருந்து மற்றொன்றாய் நிறைய வெடித்து கிளம்புவதை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது தடுமாற காதுக்குள் அலறல் ஓசை கேட்டது.
"வெள்ளிக் கிழமையும் அதுவுமா இப்படியா படுத்து மூஞ்சிய தூங்கிகிட்டு கிடப்பாங்க" காதுகளில் குரல் பட்டு எதிரொலித்தது நாராசமாய் இருந்தது வார்த்தைகளின் ஒலி அலைகள் காற்றில் கரைந்து விழுதலிலும் வேகமாய் வேலையோடு கரைந்து போயிருந்தான். குமார் கேள்விகள் ஒரு நாளும் பதில்களை நோக்கி ஒரு நாளும் எழுப்பப் படுவதில்லை இப்போ நிஜமாகவே வயிற்றுக்குள்ளிருந்து அலறியது வெறும் பசிதானா?
கேள்வி வந்தது
நிச்சயமாக இல்லை.
மனப் பசி காதல் பசி, காமப் பசி. வார்த்தையாடல் சரிதானா? யோசனை வந்தது நிச்சயமாக இல்லை இருக்க முடியாது. மனம் சொன்னது " பெண்களெல்லாம் காமப் பசி இல்லைன்னு பொய் சொல்வீங்க". மனதுக்குள் ஒருஆண் குரல் பெண்ணுக்காய் குரல் கொடுப்பதாய் சொல்லிக் கொண்டு போனது
"இல்லை இல்லை"
இப்போ கண்கள் மூடியிருந்தும் மனதோடு இதுவரை பேசியிருந்தவள் வாய் இப்போது உச்சரிக்க குளியறையிலிருந்து வெளிவந்த குமார் எரிச்சலோடு
" என்ன இல்லை?" என்று கேட்க விழித்துக் கொண்டேன்.
துண்டோடு ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தான் . தலை முடி படிய மறுத்திருந்தது அதை படிய வைப்பதையே பிரதான கலவையாகக் கொண்டிருந்த அவன் அவசரமும் செய்கைகளும் சிரிப்பு தந்தது . என் சிரிப்பின் வெறுப்பின் சாயலும் சுமந்திருக்க வேண்டும் கண்டு இன்னும் கோபமானான். தலையை துவட்டிய படியே "ஆமா ராத்திரியெல்லாம் கூப்பிட்டா வந்திடாத . இப்போ கிடந்து புலம்பு."
அவன் தலை முடி இருந்து தெறித்த நீர்த்துளிகள் ஊசிகளாய் என் மேலிறங்கின
எதற்கு பதில் சொல்கிறான் திகைத்து அதிர்ந்து போய் இருக்க தன் மனம் கேள்விக்கு பதில் கிடைத்தது சந்தோசமாயிருந்தது . இது காமப் பசியல்ல. அதுவாயிருந்தால் தனித்துக் கொள்ள எனக்கொன்றும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலியே. அதையும் தாண்டி இன்னமும் மனது வேறெதையோ தேடிக் கொண்டிருக்கிறது. ஏன் குமாருக்கு புரிய மறுக்கிறது. மனசு சிரித்துக் கொள்ள
"எல்லார் வீட்டிலேயும் எது நடக்கிறதோ? அது மாதிரிதான் நானும் இருக்கிறேன் . நீதான் என்னவோ பிரமாதமா என்னை காதலிக்கிறதில்லைன்னு கவலைப் படுறே." சொல்லிய வாறே கதவைத் திறந்து செருப்பு போட்டு வெளீயேறியிருந்தான் அலுவலகத்திற்கென்று
அவன் திறந்து வெளீப்போன கதவு மீண்டும் மூடிக் கொண்டது. இப்போ எதைத் திறப்பது?
யாருக்காகத் திறப்பது?
அவளுள் கேள்வி. சரி, கேள்விக்கு விடை கண்டு என்ன செய்ய ". இப்போதே பதில் கிடைத்திருந்தது மனப் பசியிலும் காதல் பசியிலும் மனம் துன்புறுவது . இந்த பதிலை தேடியிருக்க வேண்டியது நானா? இல்லை குமாரா? நான் இந்த பதில் தேடிப் பெற்று என்ன செய்யப் போகிறேன்? புரியாது விழிக்க விழி திறந்து வைக்க மனமில்லாது மூடிக் கொண்டேன். நான் நினைத்திருந்த காதல் கை சேருவதாயான கற்பனையில் ஒரு வித போதை வர மெல்லத் கண் அயர்ந்திருந்தேன் விழித்துப் பார்க்கையில் காட்டுக்குள் இருந்தேன். அடர் காடு. பெய்து ஓய்ந்திருந்த மழைத்துளியில் மிச்சங்கள் ஒவ்வொரு காற்றசைவுக்கும் உதிர்ந்து நனைத்தது எனை காதலால். எங்கிருந்தோ பறவை ஒலி தன் நேசத்தை காற்று வழி அனுப்பித்துக் கொண்டிருந்தது வித வித மான மிருகங்கள் என் நேசிப்புக்காயும் அரவணைப்புக்காயும் காத்துக் கிடக்க எல்லாவற்றுக்கும் தன் அன்பை பூரணமாய் வழங்கியபடி தன்னைத்தானே உயிர்ப்பித்த அகலிகையாய் நான் மாறியிருந்தேன். வனத்தினுள் ஒரு கோயில் ஆள் அரவமற்று சுகந்த காட்டு மலர்களின் வாசனையும் வேர்களின் வெப்ப சுவாசமும் கலந்தகாற்று நாசி தீண்டிப் போக கருவறை அருகில் சென்றேன். கடவுள் என் வாசம் பட்டு விழிகள் திறக்க கடவுள்ஆயிரத் தெட்டு வருடங்களாக தவமிருந்ததாயும் எனக்கே எனக்கானவள் நீயென்றும் சொல்ல சிரித்து வைத்தேன்.
கடவுளின் விழிகளில் திகைப்புத் தெரிந்தது
"பலபேர் தவமிருந்து என்னோடு கலந்திடும் வரம் கேட்டிருக்க, ஏன் சிரிப்போடு உன் நிராகரிப்பு? "
கடவுளின் கேள்வியிது
"உன்னுடையவளாய் எனைத் தந்து விட்டு பின்னர் உனக்காகவெண்று காத்திருக்கும் தவறு தனை ஒரு போதும் நான் செய்யப் போவதில்லை. நான் தேங்கி விடுகின்ற நீருமன்று. வேர் ஊன்றுகின்ற மரமுமன்று ஆதி அந்தம் சொல்ல முடியா நீர் உணர மட்டுமே முடிந்த காற்று , பெய்து விட்டு போன மழைநீர் தேனாய் மாறுகின்ற அதிசயம். சூரிய ஒளியாய் இருக்கையில் எரிக்கவும், நிலவின் ஒளியாய் மாறுகையில் குளிரவும் பழகிய ஒளி . தொடருக உந்தன் தவத்தை யாரையும் உடைமையாய் ஆக்கிவிடத் துணியாத மனத்துக்காக , சொல்லி காற்றாய்த் தழுவி நீராய் முத்தமிட்டு ஒளியாய் பிரிந்து பறந்தேன்
நிகழ்ந்து முடிந்திருந்த ஸ்பரிசத் சங்கமத்தில் உடல் கரைந்து போயிருக்க , கடவுள் கல்லாகியிருந்தார். இனி எந்த பெண்ணின் உடலிலும் சுகம் அடைந்து விட முடியாது என்பதை சுகங்கள் மனத்தோடு தொடர்புடையதை உணர்த்தி போயிருந்தது அவளது உடல். உடல் தாண்டி இன்னும் எதோ தெரியத் துவங்க. கடவுளுக்கு ஞானக் கண் திறந்திருந்தது.
எல்லாரும் எல்லாமும் உறைந்து நிற்க கையோடு சில பூக்களும் வேர்களும் நட்சத்திரங்களும் அன்புப் பரிசாய் தாங்கி என் பயணம்
என் மேனியில் நீர் வடிவது உறுத்த இமை திறப்பில் உதறப் பட்டன காடுகளும் எல்லாமும்.
மின்சாரம் நின்று போயிருக்க வியர்த்திருந்தது .பூவின் கடவுளின் வாசம் இன்னும் என் நாசியில். எல்லா எண்ணங்களையும் தூர எறிந்து விட்டு குளிக்கப் போனேன் . காத்திருப்பு என்பது என்னிடமிருந்து தன்னைக் கழட்டிக் கொண்டது
posted by mathibama.blogspot.com @ 5/27/2006 11:47:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates