|
Saturday, April 15, 2006 |
பகிர்வு |
பாலாஜி, திலகபாமா, தமிழ் மணவாளன், சொர்ணபாரதி (கல்வெட்டு இதழ் ஆசிரியர்) கோட்டில் குந்தியிருந்த எண்ணற்ற புள்ளிகளின் மனப்பொழுதின் பகிர்வுகள்
இஸம் மற்றும் குழு அரசியல் சாராது திறந்த மனதுடன் தர்க்கிக்க நமக்குள் நாமோ அல்லது இன்ன பிறதோ பிறரோ வீசி விட்டு முளைத்து நிற்கும் கருத்து பயிர்களை இனம் கண்டு அவற்றினுடைய இருப்பின் பிண்ணனி மற்றும் அதனின் சமூக பகிர்வு அறிய எமது இயங்கியலை அடுத்த கட்ட நகர்வுக்கு முன் நகர்த்த இறுகியகட்டமைப்பற்ற ஒரு அமைப்போடு உரையாட இலக்கியம் சார் உரையாடல் அவசியப் படுகின்றது. அந்த அவசியத்தை 25.3 06 அன்று சென்னை எழும்பூரில் ஹோட்டல் அபிராமியில் மாலை 3.30க்கு நிகழ்த்தி கொள்ள தொழிலதிபரும் ஹைக்கூ கவிஞருமான திரு விஜயன் இடமளிக்க … சக இலக்கிய தோழமைகளை ஒன்றிணைக்கும் பணியை சொர்ணபாரதியும் மேற்கொள்ள இளம் பனிக்கால சூழலோடு(a/cஅறையில்) சுமார் 25 இலக்கிய சகாக்களின் அமர்தலோடு துவங்கியது
இணைய தளத்தில் தொடர்ந்து எழுதும் அமெரிக்க வாசியான பாஸ்டன் பாலாஜியும் சிவகாசியிலிருந்து கவிஞர் திலகபாமாவும் சுற்றுச்சூழல் அதிகாரியும் கவிஞருமான வைகை செல்வியும் எழுத்தாளர் அமிர்தம் சூர்யாவும் தமிழ் திரையுலகிலிருந்து கவின்(இயக்குநர்) மற்றும் பதிப்பாளர்கள் கவிஞர்கள் நாடகாஆசிரியர்கள் என பல்வேறு முகாந்திரங்களிலிருந்து வந்திருந்தனர். பாஸ்டன் பாலாஜி தனது வாசிப்பு அனுபவங்களை பற்றி பேச ஆரம்பித்திருந்தார் மௌனியை இணைய தள வாசகர்களுக்குஅளிக்கும் போது கவர்ந்திழுக்கும் விதமாய்” மௌனியை பற்றி திரிஷா என்ன சொல்கிறார்?” என்று தலைப்பிட்டு வலையில் இழுக்கின்றார்கள் மௌனியை பற்றி பேசிவிட்டு திரிஷா மௌனியை இன்னும் படிக்க வில்லையாம் என்று முடிப்பார்கள் என்றார். மேலும் எஸ்.வி. சேகர் , கிரேஸி மோஹன் நாடகங்கள் போடுவதால் பாஸ்டன் தமிழ் சங்கம் நல்ல நிலையில் இல்லை என்றும் இந்திரா பார்த்த சாரதி நாடகம் நடத்துவதால் லாஸ் ஏஞ்சல்ஸ் நியூஜெர்ஸி தமிழ் சங்கம் சிறப்பாக இருப்பதாகவும் சொன்னார். கவிஞர் திலகபாமா ” மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்” என்ற தலைப்பில் பேச துவங்கினார். அந்த பேச்சின் சாரம் இதுதான்
• பெண்கள் எழுதுவதெல்லாம் பெண்ணிய எழுத்தா? பெண்கள் பற்றி பிறர் எழுதுவது பெண்ணிய எழுத்தாகுமா?ஔவை எழுதியது எல்லாம் பெண்ணிய எழுத்தாகுமா? மன்னர்களையே பாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணை கதையின் நாயகியாக வைத்து , அதுவும் மன்னனையே எதிர்த்து கேள்வி கேட்பதாய் புரட்சி பாத்திரமாய் சமைத்த இளங்கோ பெண்ணிய வாதியா?பெண்ணியம் என்ற வார்த்தையே இன்று அர்த்தம் இழந்துள்ளது அதை பெண்நிலைவாதம் என்று குறிப்பிடலாம் • ஏற்கனவே பெண்களுக்கென்று இருக்கின்ற விழுமியங்கள் கட்டுப் பாடுகள் இவற்றிலிருந்து எப்போது எழுத்து மாறு பட்டு கேள்விகளை தந்து போகின்றதோ அதை பெண்ணியமாக பெண் நிலை வாதமாக கொள்ளலாம். • அதிமுகவில் மதிமுக சுயமிழந்து நிற்பதை போல பின் நவீனத்துவ சிந்தனைக்குள் பெண்ணியம் தன்னை இழந்து கட்டுடைந்து கிடக்கின்றது. • மாற்று அரசியலில் உடல்மொழியை முன்வைப்பது எனக்கு உடன் பாடில்லை எங்கள் வெற்றியை கூட யாருடைய பெருந்தன்மையாய் கூறுவது ஆணாதிக்க அரசியல் தான் பாஸ்டன் பாலாஜி திலகபாமா உரைக்கு பின் விவாத தன்மை மேலெழுந்தது. கவின் தனது கேள்விகளையும் எதிர்வினையை முன் வைக்கும் போது….” தனிமனித கோபத்தை தத்துவத்தின் மீதான கோபமாக மாற்றக் கூடாது லஷ்மி மணிவண்ணனின் மது மயக்க கலாட்டா மற்றும் மைத்ரி சுகிர்தராணி சல்மா போன்றவர்களின் அதிக பட்ச வரம்பு மீறல்களை வைத்து பெண்ணியத்தை வரையறுக்க கூடாது. உடல்மொழி என்று இவர்கள் எழுதுவது அதிக பட்சம் 5வார்த்தைகள்(முலை யோனி மயிர் ….) தான் அந்த வார்த்தை மீதான பிரமிப்பை உடைப்பதாகவும் அதை கொள்ளலாமே. இது புதிய ஆயுதம் இதில் கொஞ்சம் மிகை தனம் இருக்கலாம். அதற்காக ஆயுதமே வேண்டாம் என்பது தவறில்லையா?” என்பதாய் எதிவினையாற்ற .. முரன் களரி முனுசாமி சகஜ அரசியலுக்கு எதிரான மாற்று அரசியலே வேண்டாம் என்பது எப்படி சரியாகும் .மாற்று அரசியலில் இயங்கும் எழுத்துக்களை எப்படி நிராகரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
அமிர்தம் சூர்யா பாலாஜி, திலகபாமா தொடர் விவாதத்தின் போது தன்னை தலித்தாக உணர்ந்து எழுதுதல் பிறர் வலியை உள்வாங்கி எழுதுகிறேன் என்பதெல்லாம் அமெரிக்காவில் பலிக்காது. கறுப்பின மக்களை எழுத குறைந்த பட்சம் 3 வருடமாவது அவர்களுடன் வாழ்ந்தது உணர்ந்து எழுதினால் தான் எடுபடும் இல்லையெனில் அந்த எழுத்து குப்பைக்கு போய் விடும் என்று பாஸ்டன் பாலாஜி சொன்னதன் மூலம் தமிழக எழுத்தாளர்களின் புனைவுகள் எல்லாம் குப்பையா? என்ற அமிர்தம் சூர்யா கேள்வி எழுப்ப ”ஐய்யோ சாமி ஆளை விடுங்க” என்றார். தொன்மத்தை கூட ஆண்கள் வசதிக் கானதாய் மாற்றி வாசிக்க பழக்கப் பட்டு இருக்கின்றோம் என்று திலகபாமா கூறியது எதன் அடிப்படையில் என்ற போது “ ஆமாம் சீதை போல் வாழ சொல்லப் படுகின்றது யாரும் கண்ணகி போல வாழ சொல்லுவதில்லை –தீக்குளிக்கத்தான் தீ வைப்பதற்கு அல்ல என்றார். இடைமறித்து அமிர்தம் சூர்யா மாதவியிடம் போகும் வரை கணவனின் தவறை இடித்துரைக்கும் போக்கை துளியும் துவங்காத அபத்த பெண்ணியவாதி கண்ணகி என்ற ஒரு வாசிப்பும் உண்டு தானே . பிறகு அந்த ரோல் மாடலும் தவறாயிற்றே என்றார். மேலும் மாற்று அரசியலில் ஈடுபாடுள்ள நவீன இலக்கிய நண்பர்களின் வருகை இன்னமும் கூடுதலாயிருந்தால் விவாதம் சூடு பிடித்திருக்கும் என்று சொல்ல மணிமேகலை நாகலிங்கம் ( மனைவியின் பேரில் உள்ள விருப்பத்தில் தனது மனைவியின் பெரை முதற்பெயராக வைத்துள்ளவர் இவர்) அதை மறுத்தார். திலகபாமா கருத்து (பெண்ணிய வாதம்) தமிழ் சூழலுக்கு ( யதார்த்த) சரியாக இருக்கையில் அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏன் விவாதிக்க வேண்டும் என்றார். தொடர் கலந்துரையாடலில் விஜயேந்திராவும் வைகை செல்வியும் தமிழ் மணவாளனும் சொர்ணபாரதியும் பங்கேற்றுப் பேச…. வில்விஜயன் பகிர்வு
வில் விஜயன் தன்னை கிருபானந்த வாரியார் மற்றும் ஜனகராஜ் குரலுக்கு மாற்றி கலை நிகழ்ச்சி செய்தார். அதில் ஜனகராஜ் குரலில் … இந்த பெண்ணிய மெல்லாம் வீட்டுக்கு உதவாது. நடைமுறையில் எது செயல் படுமோ அது எல்லாருக்கும் சரியே அதை பேசுங்கள் ஒரு உறையில்ரெண்டு கத்தி இருக்கப் படாது. ஒரு வீட்டுல ரெண்டு கூர் இருக்கக் கூடாது. ஒரு கூர் ஒரு மொக்கை . அது தான் சரி ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்தான் கூர் என்று தன் எதிர்ப்பை சிரிப்பு நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தினார். சிற்றுண்டிக்கு பிறகு எல்லாரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ப்ரியமானதை சொல்லவும் செய்யவும் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது என்று பாமா சொன்னதையும் கூளப்ப காதலும் வேண்டாம், மைத்ரியும் வேண்டாம் என்று கவின் சொன்னது பாமா முன் வைத்த பெண்ணியத்தின் சுருக்கமாக கொள்ளலாம் என்றும் , நல்ல ப்ளம்பர் யாரு எங்க இருப்பார் என்று சொல்லுவதற்கான நண்பர்கள் பலரும் உண்டு ஆனால் ஒரு கதை பற்றி அதன் தர்க்கம் பற்றி நுட்பமாக பேசி பகிர்ந்து கொள்ளும் நபர் பலருக்கு வாய்ப்பதில்லை என்ற பாஸ்டன் பாலாஜி சொன்னது தவறு இங்கு வந்திருப்பவர்கள் எல்லாரும் நல்ல நண்பர்கள் தான் தர்க்கிக்கிறவர்கள் தான் சென்னை வரும் போதெல்லாம் பாலாஜியின் குறை நீங்கும் என்றும் அமிர்தம் சூர்யா தன் நன்றியுரையில் குறிப்பிட்டார். சுவாரஸியாமான பொழுது ஹோட்டலுக்கு வெளியே வந்த போதும்வாசலில் தமிழக அரசியல் தேர்தலை முன் வைத்து தொடர்ந்தது.சிவகாசியில் நடக்க இருக்கும் புதுமை பித்தன் விழாவில் மீண்டும் சந்திக்க தீர்மானித்து பிரிய மனமின்றி பிரிந்தனர் ஒருவருக் கொருவர் கை குலுக்கி. அப்பொழுது காற்று சிறைப்படவில்லை. நட்பின் குஷி கொஞ்ச நேரம் குந்தியிருந்தது
வைகை செல்வி, வில் விஜயன், பாலாஜி, விஜயன் தொகுப்பு ;சொல்வலை வேட்டுவன், சென்னைப் பட்டினம். |
posted by mathibama.blogspot.com @ 4/15/2006 11:32:00 pm |
|
2 Comments: |
-
-
என்னைப் போல சென்னையில் இருந்தும் வரமுடியாத ஆசாமிகளின் சார்பாக பகிர்வுக்கு நன்றி.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
பகிர்வுக்கு நன்றிகள்!