|
Tuesday, April 11, 2006 |
நனைந்த நதி -2 |
நனைந்த நதி சிறுகதை தொகுப்பிலிருந்து கல்லறையில் கல்பூ
அந்த மொகலாய மன்னரின் கல்லறை உயர்ந்து எழும்பி நின்று கொண்டிருந்தது..சிதைந்து கொண்டிருந்த அரண்மைனைச் சுவர்களை பார்த்து கல்லறை சிரிப்பதாய் இருந்தது. பராமரிப்பு இல்லாது போன கல்லறைக் கூடம், சுற்றுலா துறையினரின் கையில் வந்திருந்ததாலும், கோட்டை சுவர்களை வீழ்த்த நினைப்பதுபோல் கல்லறையைத் தகர்க்க நினைக்கும் எதிரிகள் இல்லாததாலும் இன்னமும்கொஞ்சம் பிழைத்திருந்தது...
மழை நீர் வடிந்து வடிந்து தழும்பேறிப் போன சுவர்கள். தாஜ்மகாலை நினைவு படுத்தும் தோற்றம். சமாதியாகி கொண்டிருக்கும் அரண்மனை சுவர்களாய் தானும் கூட சமாதியாகலாம் என்றிருப்பதாய். கல்லறையில் காற்று வந்து பேசிப் போனது.கல்லறையின் மேல் காற்றோடு உலாவிக் கொண்டிருந்தவளை உங்கள் கண்ணுக்கு தெரிகிறாளோ இல்லையோ என் கண்ணுக்கு தெரிந்தாள், ஒருவேளை என்னிலிருந்து எழுந்ததாலாயிருக்கலாம் .அவள் நின்றிருந்த அமைதியில் ஒரு அழகிருந்தது.
ஆழமிருந்தது. ஆழமிருந்ததால் வந்த அழகோ?....காற்று அவளை இழுத்துச் செல்ல பார்த்தது. கல்லறையின் உயரம் அவள் வானத்தில் மிதப்பதாய் தோற்றம் தந்தது.தீண்டித் தீண்டி அவள் மேலாடைக்குள் புகப் பார்த்தது கொஞ்சம் எனக்கு பொறாமை வந்தது தென்றலைப் பார்த்து....அடுத்த கணம் யோசனையும் வந்தது. அவளென்ன எனக்கு சொந்தமா?.... பொருளா பண்டமா சொந்தம் கொண்டாட.?. .சொந்தம் கொண்டாடும் போது தானே பொறாமை தலை தூக்குகிறது. காதலனுக்கும், கணவனுக்குமே அவள் சொந்தமாக இருக்க முடியாது போய் இருக்கும் போது,.உணர்வுகள் பிரிந்த உடலை ,எனக்குள் வைத்திருக்கும் நான் உடல் பிரிந்த உயிராய் என்மீது நின்று கொண்டிருக்கும் அவளை எப்படி சொந்தம் கொண்டாட....
நழுவப் பார்க்கும் மேலாடையை இழுத்து பிடிக்கும் ஆசையை அவள் விட்டிருந்தாள்.காற்றோடு போவதாய் உயரப் பறந்து, உடலை விட்டு போக முடியாது மெல்லத் தாழ்ந்த அவள் மேலாடை, நட்சத்திர சிதறலாய் மின்னினாலும் ,
சோகமா? அறிவார்ந்த சிந்தனையா? என சொல்ல முடியாதிருந்தது. குத்திட்டு நின்றிருந்த அவள் கருவிழிகள் விழிகள் மட்டுமல்லாது அவளும் ஒரு நிலைக்கு வந்திருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தன.மறையப் போகும் சூரியனுனின் மஞ்சள் வெயிலில் குளித்திருந்தாள்.தீண்டலில் அவளை உணர்வு பெறச் செய்ய முடியாது போக தோற்றுப் போனதாய் கரைந்து போய் வீழ்ந்தான் சூரியன். வெட்கமோ? இருக்கலாம்.. குந்தி பார்வையால் கூட அல்லாது மந்திர ஒலியால் சூரியனை தீண்டி ஓர் உயிர் கையில் ஏந்தினாலே அந்த வல்லமை பெண்ணுக்குள், மென்மை என்று சொல்லப்படும் பெண்மைக்குள் இருந்த வலிமை தனக்கு இல்லாது போனது தந்த வருத்தம்..
வீழ்ந்து போனான். மெல்லக் கழிந்த இருள், அவளை அணைத்து கொள்ளப் பார்த்தது அணைத்த அணைப்பில் இருள் ஒளியாகி உயிர் பிரிய, செய்வதறியாது திகைத்து நின்றது..
வானில் அந்த பிறை நிலா, வளர் நிலா வளர்ந்து வளர்ந்தாவது அவளை கொள்ளை கொள்ளப் பார்த்தது. நிலவொளி தழுவ நீலவானமாகி நின்றாள், விசம் ஏறி நின்ற உடம்பாக தீண்டிப் பார்த்தவர்களை எண்ணித் தீர்த்தாள். எல்லாம் தனை பண்டமாய் பார்த்த உயிர்கள். ஆனால் எல்லாரையும் ஜடமாய் இருந்து கொன்றதையும், தீண்ட வந்தவர்கள் ஜூவாலையாயல்லாது , இவள் குளிர்ந்த தேகம் கண்டு செய்வதறியாது விலகியதையும்.... .. ஆம். தீண்டித் தீண்டி உணர்வு தர முடியாது உயிர் செத்து போனவர்கள் வந்து போனார்கள் அவள் கண் முன். கல்லறையான என் மேல் நிற்கும் அவளை மண்ணால் மூடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தாலும் நானும் அவளை தீண்ட முடியாமல்தான்....
அவளை தீண்ட முடியாவிட்டாலும் அவளின் உணர்வலைகள் எனக்குள் மோதிச் சாகையில், அலறி அழுகாது அவள் கல்லாய் நிற்கையில் கல்லறையின் இலக்கணம் எனக்குள் அர்த்தமாக ஆரம்பிக்கும்.
அவள் ஓடித் திருந்த காலங்கள் நினைவுக்குள் வந்த போது நீலப்பாவாடை உடுத்து விரல் நுனியால் அதை ஏந்தியபடி என்னுள்ளும் ஓடினாள் மொட்டு இதழ் இதழாய் விரிக்கும் நேரம் மலராத மொட்டுக்குள் துளையிட்டு, தேன் குடிக்க தேடி வந்த வண்டுகள், தனியிடம் இழுத்துப் போய் தழுவப் பார்த்த வாலிபங்களும், வயோதிகங்களும், புயலாய் வீசாது, புயலுக்கான அழுத்தங்கள் அவள் தாங்கி நிற்கையில் மெல்ல அதிர்வு தாங்கி விலகி நிற்கும் மீசை பெருச்சாளிகள்.
துணைக்குஆள் அழைக்கவி ல்லை, புழுதி வாறித் தூற்றவில்லை. அடையாளம் காட்டுவதாய் ஆரவாரம் செய்யவில்லை..இரகசியமாய் இரகசியம் காத்தாள். அதனாலேயே வெளியாகிவிடுமோ இரகசியமென்றே...... சில கடுவன் பூனைகள் வாலை சுருட்டிக் கொண்டு விதிர்த்து பார்த்தன அவளை....அலட்சிய பார்வையோடு நிமிர் நடை போட்டாள்
அப்போது..... வீசும் தென்றலுக்கு கூட துவளும் மகரந்த இழைகள் சவுக்காக மாறிய காலங்கள். சவுக்கடி வாங்குபவர்கள் புதிது புதிதாய் முளைக்க,மலர் மலராதிருக்க தீர்மானம் தனக்குள் போட, தீர்மானங்களை தொலைக்க வந்த வாழ்வு.
காதல் சொல்லி காதோடு அவளை கனிய வைக்க, மொத்த மலரும் மலர்ந்து காட்சியாக காணக் கண் கோடி வேண்டும். கோடிகள் இல்லாது கோடியில் தள்ளப்பட்ட காதல். .கோடிக்குள் கோடிழுத்து ஓவியமாய் அதையே உணர்ந்து ரசிக்கும் கூட்டம். ஓவியமாய் காத கோடு மூளியாய் நின்றது. மூளியாய் நின்றதனில் முல்லை மலர்கள் செருகி அலங்காரம்...கோடுக்கும் கொஞ்சம் வாசம் வந்தது தினம் முல்லை மலர் செருக வாசத்தோடு அதற்கும் முகிழ்த்து விட ஆசை வர தவமாய் காதல் கொண்டு வரமாய் பூத்தது. அதிகார அலுவல்களில் அலுப்படைந்து போன கனவுதனில் பூத்திருந்தது புரியாமலே , உணரப் படாமலேயே போகும் போது உயிர் பெற்றது தவறோ என்று அரிப்பு வந்தது.மக்களுக்குதந்த அரசன் அவந்தான்.அவளும் அதை உணர்ந்தே துணை சேர்ந்திருந்தாள்.அந்தபுரத்திற்குள் அவள் அந்தரங்க ஆசைகள் அவிந்து கொண்டிருக்க பூத்து பூத்து தினம் காத்திருக்க சாபங்கள் இல்லாமலேயே அகலிகையானது.
ஆம்.பூ ஒன்று கல்லானது. நிமிடத்தில் மந்திர காரியமாய் நிகழ்ந்து விட்ட மாயமில்லை அது. தான் கல்லாவதை பார்த்து பார்த்து அதன் வலி உணர்ந்து , வலியை சுகமாய் நினைத்து மெல்ல மெல்லக் கல் ஆனது.
போவொர் வருவோர் ஸ்தல விருட்சமாய் இருக்கே என தீண்டிப் பார்க்க இறுகிக் கொண்டே போனது . தேனாகி நிரம்பி பூத்திருந்த போது உதறப்பட்ட வலி, பலர் தீண்ட வந்த போது தேனாகியிருக்கலாமோ....
நினைவுகள் நெருப்பாய் இருந்தன. எத்தனை உதறல்கள், உணர்வில்லாது காண்பித்து,இன்று நான் உதறப்படுகையில் வலித்தது கண்ணிப் போனது கருத்து கல் பூவாய் மாறிப் போனது.
வழி வந்த சிற்பிக்கு கல் பூவிற்க்குள் தேன் வர்ணமயமாய் தெரிய விழியில் தீண்டிப் போனான்.. தீண்டல்களாய் விழாத தீண்டல். தீண்டல்கள்ஆயிரம் இருக்க விழி அவளை தீண்டித் திருடிப் போக இதோ அந்த நினைவெழ இவள் எழுந்து என் மேல் நிற்கின்றாள். இப்போது அவள் உயிர்ப்பூ தீண்டிய விழிகளை பால் வெளிகளுக்கப்பால் வைத்து விட்டு தினமும் எடுத்து வந்து தீண்டச் சொல்லி மகிழ்ந்து பூக்கிறாள்
வாழ்கிறாள்..கனவுகளோடு கரையேறுவதா வாழ்வு..ஒரு நாள் அவளும் வெள்ளமாய் கரை மீறலாம். எந்த நியாயப் படுத்தல்களும் தேவைபடாமலேயே எந்த சுட்டு விரல் நீட்டல்களும் அவளை சுட்டு விடாமலேயே.
அது நிகழுமென்று அவளும் நினைத்திருக்கவில்லை, வெளிகளுக்கப்பால் இருந்த விழிகள் கண்ணருகில் வந்து நிற்கையில் சந்திக்க முடியாது களைத்து தான் கிடந்தாள். பழகிய விழிகள் என்றாலும் அதிர்ந்தாள். அதிர்வுகளை தாங்கிய சுவாசமவளுக்குள் ஓர் பெரும் எதிர்ப்பு சக்தியாய் நிறைய, இன்று அவள் கல்லறையில். கல்லறைக்குள் போன தன் உயிர் சக்தியை , எதிர்ப்பு சக்தியாக்கி காற்றில் பரவ விட கல்லாய் நின்றிருந்தாள்.உணர்வுகளை தட்டிச் செல்லும் அந்த விழிகளை எப்படி உதாசீனப்படுத்துவது. ஏன் உதாசீனம் செய்யனும். உணர்வெனும் காற்றை உறவென்றும், தாலியென்றும் உறைக்குள் அடைத்தாலும் தீராது வெளியே நிரம்பிக் கிடக்கும் காற்றாய் நிறைந்திருக்கும் என்பதை உணர உள்ளுக்குள் வீசும் காற்றிலும் வியர்த்தபடி நின்றிருந்த தீபா, உதிர்ந்த இலையொன்று முகத்தில் மோத நிலைக்கு வந்தாள். மெல்ல நிமிர்ந்து பார்த்த போதுதான் அந்த குதுப் சாயி தோம்ஷின் கல்லறை அவளை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இதுவரை தன்னோடு பேசிக் கொண்டிருந்தது கல்லறையா? கல்லறையில் கல்லாக பூத்திருந்தவளா? பிரமையா? கற்பனையா? தனது நடைமுறை வாழ்க்கை பிண்ணனனியில் மனம் பேச நினைத்ததை பேசிய அரூவமா? கூர்ந்து நோக்கிய அவள் கண்களில் கல்லறை சுவர்களுகருகில் சல்லடைக் கண்களாய் சரிந்து வீழ்ந்த மேலாடை மின்னும் நட்சத்திர சரிகையுடன் மறையப் போவதாய்......... அதுவும் பொய்
தோற்றமோ..மேகத்துக்கிடையில் மின்னிய நட்சத்திரமா?
தோன்றிய உருவங்கள் பொய்யானாலும், பேசிய உணர்வுகள் தனக்குள் சக்தியாவதை உணரும் பொழுதில் தோளில் உறுத்திய கைவிரல்கள் , சட்டென்று திரும்ப பார்வை வெப்பம் தாளாது அதிர்ந்து தழுவிய விரல்கள் நழுவ நின்றான் அவள் கணவன். அதிர்ந்து நின்ற கணவன் பார்த்து அவளுள்ளும் அதிர்வு. காதலென்று இல்லாது அழைக்கும் கடமையாய் தீண்டிய விரல்கள் பரிச்சியமானதுதான் என்றாலும் அன்னியமாய் தோன்றியதின் நிதர்சனம் உறுத்த, உணராத விரல்களை ஒதுக்கி, விழிகளால் தன் உயிர் உயிர்பிக்க தயாரானாள்
நிமிர்ந்திருந்த அந்த கல்லறை அவளை குனிந்து நோக்கியது தனக்கடியில் முகிழ்த்திருக்கும் இன்னொரு கல்மலர் உயிர் ஏற்று வாசம் தாங்கப் போவதை |
posted by mathibama.blogspot.com @ 4/11/2006 10:17:00 am |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment