சூரியாள்

Monday, March 06, 2006
மனவெளிப் பயணம் 2


சன நெருக்கடி அதிகமுள்ள விமான நிலையத்திலிருந்து, அறிவிப்பு பலகைகளையும், கடந்து போகின்ற ஆட்களின் பின்னாடியும் போய் பெட்டிகள் வந்து சேரும் இடம் காத்திருந்து , எடுத்து வெளியே வர பார்வையாளர்கள் கூட்டத்தில் அழைத்து செல்ல வந்த நண்பர்கள் சுசீ, இன்பாவை கண்டதும் தான் குளிர் உறைக்கத் துவங்கியது. அது வரை குளிரைக் கூட உணர முடியா நிலையில், போய் சேருவது பற்றிய கவலையில் மனது இருந்திருக்க வேண்டும் தோள் சாயும் நண்பர்கள் கிடைத்ததும் மனம் இயலாமையை உணருகின்றது. பல நேரங்களில் பெண்ணின் சார்பு நிலை இதுதான். தனக்கான ஆணை சார்ந்து இருக்கின்ற வரை இயலாமையை யாரோ தனக்கானதை நிறைவேற்றிட வேண்டும் என எதிர்பார்க்கும். கூட தோள் சுமக்க ஆளில்லாது தனியாளாய் நிற்க நேருகின்ற சமயங்களில் தான் தன் பலம் உணரத் தலைப் படுகின்றது. உண்மையில் இந்த பயணம் என் பலத்தை எனக்கு உணர்த்தியிருக்கிறது.
தொடர்ந்த நாட்களில் குளிரின் தீவிரம் உணர விடாது உடைகள் போர்த்துக் கொண்டு இல்லை சுமந்து கொண்டு திரிவதும், பெரும் தண்டனையாகத்தான் இருக்கின்றது
மறு நாள் அறைக்குள்ளிருந்து விடிந்து விட்ட பொழுதை ஆர்வமோடு பார்த்துக் கொண்டிருந்தேன். மூடிய அறைக்குள் கண்ணாடி சன்னல் வழியாக பனி மெல்லிய, பார்வை ஊடுருவக் கூடிய புகையாக இருக்க சூரியன் தன் கிரகணங்களில் அதைக் கூட்டி எடுக்க பிரயத்தனம் எடுத்த படி இருக்க, வரவேற்பறைக்கு இணையாக அலங்கரிக்கப் பட்ட குளியலறை ஆச்சரியத்தை தந்தது. தரையெல்லாம் விரிப்பு விரிக்கப் பட்டு சன்னல் மற்றும் உள்ளிருந்த அலமாரிகளின் திட்டுகளில் எல்லாம் பொம்மைகளும் , செடிகளும் வாசனையை நிரப்பும் காய்ந்த பூக்களும் வைக்கப் பட்டு எப்படி குளிப்பது? யோசிக்குமுன்னரே தண்ணீர் ஒரு பொட்டும் சிந்தாது தொட்டியுள்ளிருந்து (டஃப்) குளித்து வெளிவர அறிவுரை தரப்பட்டது. முதலிலேயே தீர்மானித்திருந்தேன் அங்கிருக்கும் வரை அங்கு கிடைக்கின்ற அந்தந்த நாட்டு சாப்பாட்டை ஏற்றுக் கொள்ளுவது என்றும் நம்மூர் சாப்பாடுதான் வேண்டுமென தேடித் திரிவதில்லையென்றும்.
காலை உணவாக பான் என்று சொல்லப் படும் ப்ரெட், நாம் காய்ச்சல் நேரங்களில்மட்டுமே வெறுப்போடு சாப்பிட நினைக்கும் ரொட்டியில், இதுவரை நமக்கு அதில் பூசி சாப்பிடவென்று தெரிந்தது,வெண்ணையும் ஜாமும், ஆனால் பானில் பூசிச் சாப்பிடவென்று வித விதமான பொருட்கள் அங்கு தயாரிப்பு உணவாக கிடைக்கின்றது அதில் சைவம் அசைவம் இரண்டும் அடக்கம். அங்கு மட்டும் இல்லை இங்கும் கிடைக்கிறது என்பது போய் வந்த பின்புதான் தெரியவருகின்றது. இவ்வளவு நாளும் அதே பொருட்கள் கடையில் இருந்த போதும் கவனத்திற்கு வராமலே போய் இருக்கின்றது. அறைக் கதகதப்பு விட்டு வெளியில் வர நினைத்துப் பார்த்திராத குளிர் போர்த்த கெண்ட் எனும் இடத்திலிருந்து க்ரொய்டன் எனும் இடம் வந்து பின் ஹெய்சில் நித்தியானந்தன் வீட்டில் வந்து தங்கினோம்
ஐரோப்பிய வாழ்க்கை ஆடம்பரமான வாழ்க்கையென்று எப்போதும் நம் முன் ஒரு பார்வை வைக்கப் படுகின்றது அதே போல் இன்றைய இலக்கியங்களில் வக்கிரமான போக்குகளை கொண்டு சேர்க்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும்(லதா ராமகிருஷ்ணன் கவனிக்க, படைப்புகளை பற்றிய விமரிசனமே அன்றி படைப்பாளியை பற்றி அல்ல), அதை வளர்த்து விடும் பத்திரிக்கைகாரர்களின் போக்குகளையும் கண்டித்து எழுதுகையில் எனக்கு சொல்லப் படுகின்ற வசனம்” உலக இலக்கியங்களை வாசித்தீர்களானால் தெரியும்” , என்றும்” நாங்கள் எழுதுவது உலக இலக்கியத்திற்கு ஒப்பானது” என்றும், சொல்லுவதும், இன்று நான் பார்க்க நேர்ந்த ஐரோப்பிய தமிழர்கள், ஐரோப்பியர்கள் வாழ்க்கை இவற்றோடு எப்பவும் மனதிற்குள் ஒரு ஒப்பீடு இருந்து கொண்டே இருந்ததை நிகழ்த்தியிருந்தது. சமூகத்தை அறிந்து கொள்ள விழையும் படைப்பாளி மனம் அந்த ஒப்பீடுகளிலிருந்து தப்பிக்க முடியாது என்றே நினைக்கின்றேன்
நீளுகின்ற இரவுகள், இயந்திரமயமான வாழ்க்கை, தனி மனித சுதந்திரம் இருக்கின்ற அதே நேரத்தில், யாருக்கும் யாரும் ஆதரவுமாக இல்லாத தனிமை, அதிகப் படியான குளிர் மனிதனுக்குள் வக்கிரங்களை எழுப்பி விடுவதாகத்தான் இருக்கின்றது. அதை வடிய விடும் முயற்சியாகவே அங்கத்தைய சாப்பாடு வாழ்வியல் எல்லாமே வடிவமைக்கப் படுகின்றது,அந்த வாழ்வியலை தொடர்ந்தே அங்கத்தைய இலக்கியங்களூம் இருக்கும் அதை கொண்டாடுவதை விடுத்து நம் மண் சார்ந்து யோசிக்க என்று நாம் பழகப் போகிறோமோ தெரியவில்லை. இந்த கேள்விகளை, அதற்கான பதிலை இந்த பயணம் முழுக்க சாட்சிகளோடு கண்டேன்.
சூழ இருந்த நண்பர்கள் நான் ஏன் அமைதியாயிருக்கின்றேன் என்று கேள்வி எழுப்ப எனக்குள் நடந்து கொண்டிருக்கின்ற விவாதங்கள் , எழும்பத் துவங்கியிருந்த நேரமாதலால் சொல்லி விட முடியா சூழலில் அப்பொழுது நான் இருக்க என் விவாதங்கள் இதோ என்னோடு இங்கு இன்று தரையிறங்கியிருக்கின்றன, 14 அக்டோபர் தொடக்கம் 20 வரை லண்டனில் நான் இருந்த குடும்பங்கள் அவர்களது வாழ்க்கை முறை , பெண்கள் தொடர்பாக நிறைய எனக்குள்ளாக பேசிக் கொண்டிருந்தேன்.
இயந்திராமாய் ஓடித் திரிந்து இரவில் மட்டுமே சந்திப்பது என்று இருந்த குடும்பங்களும் அப்படியே மண்ணோடு பெயர்த்தெடுத்துப் போய் பொருத்தமில்லாது ஒட்டிக் கொண்டிருக்கும் குடும்பங்களுமாக இரு வேறு திக்குகளையும் தூரத்தில் நின்று தராசின் முள்ளாய் அவதானிக்க முடிந்திருக்கின்றது என்றே நம்புகின்றேன்.எருமைத் தோலை பரதேசம் அனுப்பினாலும் வெளுக்காது என்று உணர்த்திய நிகழ்வும் கருந்தோல்களை மறைக்க சதையோடு பிய்த்தெரிந்து விட்டு குருதி உதிர நிற்க பார்த்ததும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாய்த்தது
கிரோய்டன் பகுதியில் ஜனநெருக்கடி மிகுந்த இடத்தில் உள்ள வீட்டிற்குள் 4 குடும்பங்கள் , ஒரே சமையலறை வரவேற்பறை கழிப்பறையை பொதுவாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். நம்மூரின் காம்பவுண்ட் வீடுகளை பார்த்திருக்கின்றேன். ஒன்று போல் தொடர் வீடுகள் என ஆனால் இன்று மிகச் சாமான்யனின் வருமானத்தில் கூட அப்படி வாழ்வதற்கு சம்மதிப்பானோ தெரியவில்லை. கூட்டுக் குடும்பங்களில் 5 குடும்பங்கள் வரை கூட ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இது வேறு மாதிரி. ஆண்கள் வேலை விசயமாக பறந்திருக்க பெண்கள் அறைக்குள்ளும், குழந்தைகளோடும் தொலைக்காட்சி தொடர்களோடும் மிக மோசமாக சிக்கிய படி இருக்கின்றனர்.

மேலைத்தேய போக்குகள் என்பது வளர்ந்து விட்ட நாடுகளின் வாழ்வியல் மேல் நமக்கு இருக்கின்ற ஈர்ப்பு இங்கே நேரில் நின்று பார்த்தால் எல்லாம் சில்லு சில்லாக உடைந்து போகின்றது. துவைக்குமியந்திரமும், பாத்திரம் கழுவும் இயந்திரமும் அறைகளில் வெல்வெட் விரிப்புகளும் தமிழகத்து, வாழ்வியல் தேவைகளுக்கும், ஆடம்பரங்களுக்குமிடையேயான வேறுபாடுகளை உணர்ந்து பார்க்கத் தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் திகைப்பூட்டலாமே ஒழிய அங்கு வளர்ந்து விட்ட நாடுகளின் அடிப்படைத் தேவைகளே தவிர அவை ஆடம்பரமல்ல என புரிந்து கொண்டு விட்டால் காலணி வீடுகளைக் கூட தவிர்த்து விடுகின்ற நமது சூழலில், ஐரோப்பிய மோகம் நில்லாது ஓடிப் போய்விடும் குண்டுச் சட்டிக்குள் ஐரோப்பா போயும் குதிரை ஓட்டும் நிலைமை நீடிப்பதை பார்க்க வருத்தமாகவே இருக்கிறது, கடல் தாண்டி நாடு தாண்டிவந்த பின்பும் எங்கள் மனத் தடைகள் ஏன் தாண்ட இயலாததாய் இருக்கின்றன, சமையல் குழந்தை வளர்ப்பு, தொலைக்காட்சி, வேலைக்கு போனாலும் சுயங்களை சிந்திக்க விடாத சூழலை இங்கேயும் காண முடிகின்றது.
ஒரு தமிழ்க் குடும்பந்தை சேர்ந்த கணவன் மனைவியை சந்திக்க நேர்ந்தது. இரண்டு கூட்டங்களில் நான் பேசிய பேச்சின் பின் என்னைச் சந்திக்க விரும்பம் தெரிவிக்க சந்தித்தேன். பெண்ணியம் என்பதை இதுவரை செய்து கொண்டிருந்த வேலைகளிலிருது தப்பித்து விடுவதற்கான ஒன்றாக பெண்ணும், பெண்ணிய கோசங்கள் தான் பெண் தன்னை உணரத் துவங்குவது தான் சந்தோசமாக திருப்தியுடன் வேலை செய்ய விடுவதில்லை எனும் குற்றச் சாட்டுடன் ஆணும் இருந்தனர்.இந்த சூழல் நாம் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்
15.10.05
இன்று பெண்கள் சந்திப்பு காலை நானும், இன்பாவும், மீனா அக்காவும் கிளம்ப நன்கு கொளுத்துவதாய் பிரகாசமாய் ஒளிரும் சூரியன் அதே நேரம் மூக்கின் . விரல்களில் நுனி உறைய வைக்கும் குளிர் , விடுகின்ற மூச்சு புகையாக மாறி வேதாளமாய் கண்ணில் தெரிந்து மெல்லத் தேய்கின்றது. இலையுதிர்த்து கிடந்த அந்த மரத்தின் பெயரை பலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது போனது. ஒரு வேளை தெரிந்தவர்களை சூழல் ஆர்வம் உள்ளவர்களை நான் அணுகவில்லையோ? தரையெங்கும் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற இலைகள் அதை நசுக்கி மேலே ஏறி வேகமெடுத்து பின்னர் அதுவும் பறக்க விட்டும் போகும் வாகனங்கள் எப்பவும் வாகனங்கள் மூடியபடி ஓடுவதாலா இல்லை வாகனங்களின் புகை கட்டுப் பட்டில் இருப்பதாலா? சென்னையில் ஆட்டோவில் போன பிறகு முகத்தில் படியும் தூசி இங்கு இல்லை .பயணங்களின் போது ஏதோ வித்தியாசமாக உணருகின்றேனே என்று எனது நீண்ட நேர யோசிப்புக்கு பின்னர்தான் ஒலிப்பான்களின் சப்தம் எங்கும் எந்த வண்டியிடமிருந்தும் வரவில்லை என்பது உரைத்தது ஓடும் கார்களின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலிருந்து எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்ற இவர்களுக்கு மரங்களின் பெயர்கள் தெரியவில்லை. எங்கள் மண்ணில் வேம்பு, புளிய மரம் வாகை , புங்கை ,பனை, தென்னை, கருவேலம், என்று எத்தனை மரங்கள் சாமான்யனுக்குக் கூட தெரிந்திருக்கும் என்று நினைக்கும் போது, மண்ணோடு இணைந்த எங்கள் வாழ்வு மகிழ்வைத் தருகின்றது.ஐசே(eiche) அந்த மரத்தின் பேராக சொல்லப் பட்டது.


பச்சை நிறம் வெளுக்க
உடல் முழுவதும் பழுக்க
தன் இலைகளை
சில்லிட்ட மண் பரப்பெங்கும்
வந்து சேரப் போகின்ற
பனி காலத்தை வெல்ல
பனி தன் வாழ்வை வென்று விடாதிருக்க
முழுக்க உதிர்த்து
ஒன்றுமில்லாததாய் நிற்க

சாய்க்க முடியா குளிர்
பாவம் சொல்லிப் போகின்றது.

சுழலும் மாற்றத்தில்
உரத்துப் பேசிய குளிர்
மரித்துப் போகும்
துளிர்க்கும் இலைகளால்
மரம் நிரம்புகையில்
இரண்டு நாள் பெண்கள் சந்திப்பு பல விசயங்களையும், சந்திக்க சிந்திக்க வைத்திருந்தது. லண்டனிலும் சரி ஐரோப்பாவிலும் சரி பெண்கள் சந்திப்பு மேல் பல பெண்களுக்கே கூட வெறுப்பு இருப்பதை உணர முடிந்தது.இந்நிகழ்வுக்கு வராத பல குடும்பத்து பெண்கள் இந்த நிகழ்வை ஒரு பயத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது( இது என் உணருதல் மட்டுமே) இது ஐரோப்பா மட்டுமல்ல பெண்ணியம் பேசுகின்ற பெண்களை இயல்பு யதார்த்த வாழ்வில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் அச்சத்தோடு பார்ப்பதும், இதெல்லாம் நடைமுறைக்கு சரிவராது என்று முற்றிலுமாக நிராகரித்து விடுவதும் பெண்ணியம் பேசுகின்றவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களை முற்போக்காக சிந்திக்க தெரியாதவர்களாய் மிகக் குறைவாக மதிப்பிடுவதும் நாம் இந்தியாவிலும் காணூம் காட்சிதான். எனினும் யோசிக்க வேண்டி இருக்கின்றது. இந்த இருவேறு எல்லைகளும் எங்கே சந்திக்கப் போகின்றது என்பதை.
படைப்பாளி ஒரு படி முன்னகர்ந்து சமூகத்தை பார்க்க கூடியவன் தான் கருத்துக்கள் சிந்தனைகள் இயல்புக்கு ஒத்து வராதது போல் தோன்றினாலும் குறை சொல்ல முடியா தளத்தில் இருந்திருக்க வேண்டும். பெண்களின் சந்திப்பு ஆண்களின் எதிர்ப்பை சந்திப்பது தவிர்க்க முடியாதென்றாலும் பெண்களின் எதிர்ப்பையும் ஏன் சம்பாதிக்கனும். பெண்களுக்கென்று உருவாக்கப் படுகின்ற , அல்லது உருவாகின்ற அரிய சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் பெண்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகள். அதை ஆக்கபூர்வமாக கட்டமைக்க வேண்டிய தேவை தொடர்ந்து நடத்தப் போகின்றவர்களுக்கு இருக்கின்றது.குஷ்பூ பிரச்சனை பேசத் துவங்குகையில் வெளியேறி வந்தாச்சு. அன்று இரவில் நித்தியானந்தன் வீட்டில் நடந்த பார்பிக்யூ விருந்தில், சந்தோசமான பாட்டும் பகிர்தலுமாக. மொழி நாடு சுற்றம் எல்லாம் விட்டு அந்நிய மண்ணில் இருப்பதின் தனிமை தவிர்க்கின்ற இப்படியான பொழுதுகள் அவர்களுக்கு தேவையானதாய் இருக்கின்றது.
நிகழ்வு முடிய இளைய அப்துல்லாவின் புத்தக வெளியீட்டுக்கு பெண்கள் சந்திப்பு நடந்த இடமிருந்து தொலைவு போக வெண்டியிருந்தது. இளைய அப்துல்லவின் புத்தக வெளியீட்டுக்குப் பின் பெண்ணிய நிகழ்வு என்று றஞ்சி தேவகௌரி நான் ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருக்க நேரம் போவது பற்றியும் எப்படி போவது என்று முடிவு எடுக்காதவர்களாகவும் இருந்தார்கள், அதே நேரம் யாராவது தங்களுக்காக முடிவெடுப்பார்கள் என்று இரண்டு நாள் தீவிரவாதப் பெண்ணியம் பேசியவர்கள் கூட சார்பு நிலையில் இருந்தது , அந்த நிலையில் 10 பேர்களுக்காக பொறுப்பேற்று அந்த நிகழ்வுக்கு கொண்டு சேர்த்த மீனா பொறுப்பேற்ற தன்மையும் ஒப்பீட்டு ரீதியில் , நாடோ , மொழியோ கலாச்சாரமோ எல்லாம் கடந்து பெண்கள் உரிமைகளையும் பெற செயல்பட வேண்டிய உழைக்க வேண்டிய தளத்தை அடையாளம் காட்டியது


பெண்கள் சந்திப்பில் ஒரு தோழியோடு பேசிக் கொண்டிருந்தபோது, தனது 14 வயது பையன் கேட்ட கேள்வியை பகிர்ந்து கொண்டார். அவரது வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகின்றவர்கள். மனைவியின் தந்தை 60 வயதானவர் அவர்களோடு வந்து தங்கியிருக்க இலங்கையிலிருந்து வந்திருக்கின்றார். கணவன் மனைவி இருவரும் வெளியே கிளம்பிச் செல்லுகையில் பெரியவருக்கு தேவையான சமையலை செய்து வைத்து விட்டுப் போக, பையன் பொறுக்க முடியாது கேட்டு விட்டான். தாத்தா ஏன் சமைக்க மாட்டாரா என்று?ஆண்கள் சமைக்கத் தெரியாமல் இருப்பது எங்களுக்கு புதிய தகவலில்லை என்றாலும், அவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கின்றது. தன் வாழ்நாளில், வாழ்க்கையின் அடிப்படை தேவையான சமையலைக் கூட தெரிந்து வைத்திருக்காத என்ன மனிதர் இவர் என்று? எல்லாரும் அந்த கேள்வியை ரசித்துச் சிரித்தோம். நிறைய யோசிக்க வேண்டிய கேள்வியும் கூட. ஐரோப்பாவிலும் பலபேர் கோப்பை கழுவிச் சம்பாதிக்கிறோம் என்று சொல்லுகையிலும், தமிழகத்திலும் யாராவது வீட்டில் ஆண்கள் சமைத்தால் பெருமையாக சொல்லுவதும் நடக்கின்ற போது எனக்குள் கேள்வி எழும்புகின்றது. பெண்கள் தினந்தோறும் செய்கின்ற சமையல் வேலை தனிமனித வேலையாகவே எப்பவும் பார்க்கப் பட ஆண்கள் சமைத்தால் மட்டும் பொது உழைப்பாக சித்தரிக்கப் படுவதும் ஆணாதிக்க மனோ நிலையின் இன்னுமொரு வடிவம் தானே ஆண் சமைப்பது அரிதான விடயம் என்பதற்காக சமைப்பதை பெருமையாக பேசுவதை நாம் நிறுத்தவே வேண்டும். பெண் முன்னுக்கு வரும் போது அதற்கான அடித்தளமாக கணவரை நிறுத்துவதும், ஆண் முன்னுக்கு வரும் போது அதற்கு உதவுவது பெண்ணின் கடமையாக மாற்றி அலட்சியப் படுத்துவதும் நாமே அறியாது நாம் வெளிப்படுத்துக்கின்ற ஆணாதிக்க மனோநிலையின் இன்னுமொரு வடிவம் தான்.
posted by mathibama.blogspot.com @ 3/06/2006 12:22:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates