சூரியாள்

Thursday, April 13, 2006
மனவெளிப் பயணம் 3

வந்ததிலிருந்து இன்று வரை அரங்கங்களின் செயற்கை வெப்பத்திற்குள்ளும் சுகமாய் இருந்தாயிற்று. லண்டன் பாலத்தை கண்டு விடவென்று . வெளியே கிளம்பி குளிருக்கான ஆடைக்குள் என்னைப் புதைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே அடி வைக்க சில்லென்ற குளிர் மூடாத முகத்தை, அதிலும் குறிப்பாக மூக்கின் நுனியை சீண்டிப் போகின்றது.
பாதைகளை சிக்னல் மரங்களில் இருக்கும் பொத்தானை அழுத்த கொஞ்ச நேரத்தில் கடக்கலாம் எனும் பச்சை விளக்கு எரிய தைரியமாய் சாலையைக் கடக்க முடிகின்றது பெட்டிக் கடை போன்று சாலையோரம் இருந்த கடையில் பேருந்து மற்றும் இரயில் பயணத்திற்கான பயணச் சீட்டு( day card) வாங்கிக் கொண்டு (ஒரு நாளைக்கானது 8 பவுண்ட்ஸ், ஏறக்குறைய 480 ரூபாய் )கிளம்பினோம். காங்கிரீட் காடுகள் என்பது பழசு. கண்ணாடிக் காடுகளாய் நம்மை சிறு துரும்பாக்கிப் போகும் நவீன கட்டிட அடுக்குகள் உயர்ந்து நிற்க , இன்னொரு இரும்பு கட்டிடமாய் இருந்த அந்த சிகப்பு நிற மாடிப் பேருந்து அசையாமல் நின்று போன கட்டிடங்களிடையே அசைகின்ற கட்டிடமாய் நகருகின்றது நிறுத்தங்களில் மெல்லச் சரிந்து நடைபாதை மேடைக்கு சரிசமமாக வந்து நிற்கும் பேருந்துகள், ஒவ்வொரு நிறுத்தங்களிலும் பேருந்து பற்றிய விபரங்கள் பேருந்து போகும் வழித்தடங்கள், எத்தனையாவது நிமிடத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு போகும் என்னும் தகவல்கள் அதை விட ஒவ்வொரு நிறுத்தத்திலும் வைக்கப் பட்டிருக்கும் “ நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள்” என்று (ஆங்கிலத்தில் தான்) குறிக்கப் பட்டிருக்கும் வரைபடங்கள் யாருடைய உதவி இன்றியும் பயணித்து விட வைக்கும் ஒழுங்குகள் ஏறக்குறைய ஐரோப்பா( லண்டனிலும் , பெர்லினிலும்)முழுவதும் பார்க்க நேர்ந்தது.
போகுமிடத்தை சொல்லி விட்டால் அடுத்து இடது பக்கம் திரும்புக என்றெல்லாம் சொல்லி போகவேண்டிய இடம் வரை துல்லியமாகச் சொல்லும் நேவிகாடர் சிஸ்டமும் இளைய அப்துல்லா கூட்டம் நடக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியாது திணறியது
அதே நேரம் ஒரு வாடகை வண்டி பிடித்து இடங்களுக்கு போவது அதிகச் செலவு தரக் கூடியது. பெண்கள் சந்திப்பு நடந்த இடமிருந்து, இளைய அப்துல்லா புத்தக வெளியீடு நடந்த இடம் சுமாராக 8 கி. மீ தொலைவு இருக்கும். 2 வாடகை வண்டிகளில் 10 பேர் போக நாங்கள் அன்று செலவளித்த தொகை, இந்திய பணத்தில் 10000 த்தை நெருக்கியது.


*
திடீரென கட்டிடங்கள் விலகி பாலமும் பாலத்தினடியில் ஓடுகின்ற தேம்ஸ் நதியும் நதியில் வீழ்ந்து அதன் குளிரை சுமந்து வரும் குளிர் காற்றும் வெயிலின் வெம்மையை துரத்தி நம்மை சில்லிட வைக்கின்றது
நமது ஊர் ஆற்றங்கரை தென்னந்தோப்பும் நெல் வயல்களும் நினைவுக்கு வர நதி நீருக்கு அருகாமையிலேயே வானளாவி நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்கள் கண்ணாடிகளால் வெயில் பட்டு பிரதிபலிக்கின்றது.நீரை வேரில் வாங்கி பயிர் வளரும், கட்டிடங்கள் வளருமா? முரண்களின் மேல்தான் எப்பவும் நம் பயணம்
எங்கேயோ வெடிக்கின்ற
துப்பாக்கி சப்தம்
கடல் கடந்து சிலரை
செவிடாக்கிப் போகின்றன.
புறப்பட்ட புகை
சிலர் கண் மூடி
குருடாக்கிப் போகின்றது
அநுமன் வால்பட்டு
பற்றிய தீயின் தெரிப்பு
துருவங்களின் பனிகளை
உருக்குகின்றது
பெயரில்லாதிருந்து
நிறங்களை சுவீகரித்து
முப்பரிமானத்தில்
ஏழு வர்ணம் காட்டி
கடலில் செவ்வண்ணம் கரைத்து
நீலவண்ணம் இருளாகி
நட்சத்திர ஒளிதெறிப்பாய்
மின்னித் துளியாக
எது எதுவாக மாறுமோ
எதை பாதிக்குமோ
அறியாமலேயே
தெரிந்து கொள்ள தேடல்களோடு
எம் பயணங்கள்
, கப்பல் நிற்குமளவிற்கு ஆழமும் ஓட்டமும் இருந்த போதும் காங்கிரீட் கட்டிடங்களுக்கிடையே சிறைப்பட்டிருக்கும் செயற்கைத் தனமோ ஏதோ ஒன்று நமது ஊர் காட்டாற்றில் மணல் பாதங்களில் உரச கால் நனைக்கும் சந்தோசத்தை தராமலே போகின்றது காங்கிரீட் கரைகளில் ஓடுவது ஆறு என்பதை மனம் ஒத்துக் கொள்ள மறுக்கின்றது. இந்த நாட்களில் காட்சிகளின் தரிசனத்தில் மட்டுமே என் மனம் இருந்ததே அல்லாது உணர்வுகளோடு பொருத்திப் பார்க்க அதற்கு இன்னமும் கொஞ்சம் அவகாசம் தேவையாயிருந்தது

பாதாள இரயில் பயணங்கள் தரையெல்லாம் மூடும் பனிக்கு பயந்து உருவாகிய பாதாள இரயில்கள் , ம் ம்…. மனிதனின் பயங்களுக்குத் தான் எவ்வளவு சக்தி. எத்தனை கண்டு பிடிப்புகளை தந்து போகின்றது, கூடவே சில நேரம் பின் விளைவுகளையும் பிரம்மாண்ட தோற்றமும் நகரும் படிக் கட்டுகளும் உடைய இரயில் நிலையங்கள் உள்ளே நவீன இசைக் கருவிகளுடன் பாடிப் பிச்சை யெடுக்கும் கலைஞன், அவரால் இரயில் சத்தத்தை மீறியும் அந்த நிலையத்திற்குள் நிரப்பப் படும் இசை
எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கின்ற காவல் துறையின் அபாய ஒலி , இன்னமும் நினைக்கையில் ஒரு வித பதட்ட உணர்வைத் தந்து போகின்றது குற்றம் நடந்தவுடன் காவல் துறை வந்து விடுகின்றது எனும் பெருமைக்கு அப்பால் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை விகிதத்தை நினக்க வைத்து பயமும் தந்து போகின்றது
1886-1894 இல் கட்டி முடிக்கப் பட்ட இந்த பாலம். ரோமர்கள் காலத்தில் மிகச் சிறந்த அனைத்துலக வணிகம் நடைபெறுவதற்கு முக்கிய காரணியாக தேம்ஸ் நதி. 1960 களிலிருந்து எங்கும் இல்லாத அளவிற்கு கடல் வாணிகம் , புதிய கப்பல்கள் கட்டப் பட்டு நடத்தப் பட்டிருக்கின்றது
பாலத்தின் வலது கரையில் டவர் ஆஃப் லண்டன் ,, பழங்காலத்து கோட்டை வில்லியம் அவர்களால் 1078 இல் கட்டப் பட்டது உள்ளது. இங்கு நிறைய ராணிகள் தூக்குத் தண்டணை தரப் பட்டு சிறை வைக்கப் பட்டிருக்கின்றனர்.(ஏன்?)
லண்டனில் சவுத் ஆல் எனும் இடம், இரயில் நிலையத்தில் முகப்பு ஹிந்தியில், எழுதப் பட்டிருக்கின்றது. அந்த தெருவில் போகின்ற போது , டெல்லியின் முக்கிய தெருவில் இருப்பதான உணர்வைத் தந்து போகின்றது.
நான் போயிருந்த நேரம் சிறுவன் ஒருவனை பற்றிய செய்தி பரபரப்பாக இருந்தது. அந்த சிறுவன் இலங்கையிலிருந்து தன் உறவினர் வீட்டில், வந்திருந்திருக்கின்றான், லண்டன் வந்து 3 மாதங்களாகின்றது.அவர்கள் வீட்டு குழந்தையைப் பள்ளியில் விட்டு வர தினந்தோறும் சவுத் ஆல் பகுதி வழியாகத்தான் போய் வருவானாம். திரும்பும் போது விட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வருவானாம். திடீரென ஒரு நாள் காணாமல் போய் விட்டான். குழந்தை திருட்டு அங்கு அடிக்கடி நடப்பது பலருக்கு பயத்தை தந்திருக்கின்றது. ஒரு நாள் தெருவில் 2 குழந்தைகளை பெல்ட் போட்டு நாய்க்குட்டியை கட்டி இழுத்து போவது போல் பாதுகாப்புக்காக கட்டி போய்க் கொண்டிருந்தனர்.இந்த சிறுவன் பின்னர் கிடைத்தானா? தெரியவில்லை. சிறுவன் கடத்தப் பட்டானா? அல்லது விரும்பியே காணாமல் போனானோ? சந்தேகங்களுக்கு விடை கிடைக்காமலேயே போனது.

பேட்டி கூட்டம் என இடங்கள் பார்க்க முடியாது போனது.
இந்த ஒரு வாரத்தில் இதுவரை என் வாழ் நாளில் இதுவரை யார் வீட்டிலும் அல்லது அடுத்தவரை சிரமப் படுத்திவிடுவோமோ எனும் தயக்கத்தோடு தங்கியதில்லை என்பதால் நிறைய தயக்கங்களை விழுங்கிய படி இருக்க பயம் வருக்கின்றது. தவறுதலாய் அதிக நாள் பயணத் திட்டம் போட்டு விட்டேனோ என்று.
பார்த்த காட்சிகளை பதிவாக்கி விட்டு 20 காலை பெர்லின் போக தயாராகின்றோம்
பெர்லின் முதல் பார்வையிலேயே பிடித்துப் போகின்றது லண்டனும் பெர்லினும் ஓரளவிற்கு ஒரே மாதிரியான நகரமே எனினும்ஏதோ அந்த நகரத்தின் முகத்திலும் நட்பான தோற்றம் தெரிவதாய் இருக்கின்றது நகரத்திற்குள்ளும் ஒரு கிராம மனோபாவம் தொற்றிக் கொண்டிருப்பதாய் படுகின்றது. இன்னமும் உலகத்தின் வெளிச்சமென்று சொல்ல முடியாது ஆர்ப்பாட்டங்களை அதிகம் உள்ளே வராது அடங்கியிருக்கின்ற கொஞ்சம் கிராமத்து நெஞ்சமும் உள்ளிருக்கும் ஊராக எனக்கு பட்டது.
இரவு வெளிச்சத்தில் பெர்லின் நுழைவு வாயிலை பார்க்கப் போகின்றேன், வெறும் ஒற்றைச் சுவரின் முன்னிலும் பின்னிலும் எவ்வளவு மாறுபட்ட ஆட்சி முறை நடந்திருக்கின்றது நினைக்க ஆச்சரியம் தான்
சுவடுகள் வீழ்ந்த பின்னும் அதன் சுவடுகள் இன்னும் அதன் தரையின் முகத்தில் ஒட்டிக் கொண்டு தானிருக்கின்றது.கிழக்கு ஜெர்மனியாய் இருந்த தெருக்களில் வறுமையின் தடங்கள் , எத்தனை அலங்காரம் செய்தும் மறைக்க முடியா விசயமாய் தெரிகின்றது.ஸ்பிரே நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஜெர்மானிய பாராளுமன்றம்,அதன் பிரம்மாண்டம் பார்த்து விட்டு வீடு திரும்புகின்றோம்..நதிக்கரை ஒட்டி முழுக்க ஆசாங்க அலுவலகங்கள்
லண்டனில் ஒரு வாரம் அலைந்த அலைச்சலின் அலுப்பு தீரு மட்டும் மறுநாள் ஓய்வெடுத்தோம்.நண்பர் சுசீந்திரன் வீட்டில். காலையில் அவர்களது வீட்டில் கீழே தங்கியிருந்த நண்பர் மணியுடன் கிளம்பி கடை வீதிக்குச் சென்றேன்.ஏற்றுமதி தொடர்பாக சிறிது காலமாக எனக்குள் இருந்த ஆர்வம் காரணமாக கடை வீதிகளில் சுற்றி வர ஆசைப்பட்டு உடன் சென்றிருந்தேன்.இயற்கை உற்பத்தி பொருட்களுக்கு அதாவது செயற்கையான உரமிடப் படாத பொருட்களுக்கு அங்கு நிலவி வரும் வாங்குபவர்களின் விருப்பம் ஆரோக்கியமானது “bio –products” என்றால் கண்ணை மூடிக் கொண்டு கேட்க்கின்ற விலையை கொடுத்து வாங்கும் ஆர்வம் இருக்கின்றது அப்படியான சான்றிதழ் வழங்கப் பட்ட பொருட்களும் மிகச் சரியான தரத்திலிருந்து விடுகின்றது. பொருட்களின் வகைகள் வாங்குபவர் தேர்ந்தெடுப்பதற்கு நிறைய வாய்ப்புகளை தருக்கின்றது. தேனில் மட்டும் எத்தனை விதமான வகைகள். ஆச்சரியம் தொற்றிக் கொண்டது
நம்மூரில் வேம்பு பூக்கும் காலங்களில் எடுக்கப் படும் தேனில் ஒரு வித கசப்பு இருப்பதை ருசித்து அறிந்திருக்கின்றோம், இன்னும் சில பகுதிகளில் முருங்கை தோட்டத்திற்குள் தேன் பெட்டி வைத்திருப்பார்கள் மலைத்தேனுடன் ஒப்பிட அதில் மருத்துவ குணம் சிறிதளவும் இல்லை எனக் கேள்விப் பட்டிருக்க கடைகளில் தேன் தரவாரியாக , சூரிய காந்தி தேன்,கோதுமை தேன் என்று பலவித பூக்களில் பேரில் வேறு வேறு நிறங்களில் வேறு வேறு சுவைகளில், சில தேன்கள் திரவமாக சில தேன்கள் , சீனி போல நெய் போல ம்…… மரங்களில் பெயர்கள் தெரியவில்லை என்பதற்காக மண் சார்ந்து ஆர்வமில்லாதவர்கள் என்று முடிவு கட்டி விடவும் கூடாதோ? கேள்விகள் ,


( அனாஸ் என்று அழைக்கப் படும் இளைய அப்துல்லாவின் துப்பாக்கிகளின் காலம் புத்தக வெளியீடு தேசம் பத்திரிக்கை யினரால் எற்பாடு செய்யப் பட்டிருந்தது. நிகழ்வின் முடிவில் பெண்ணிய நிகழ்ச்சி என்னும் தலைப்பில் தேவ கௌரி, றஞ்சி, நான் , மூவரும் பெசுவதாக அழைப்பிதழ் அடிக்கப் பட்டிருந்தது. இளைய அப்துல்லா புத்தக வெளியீடும் விமரிசனமும் முடிய 9 மணிக்கு மேல் ஆகிவிட, அந்த நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் ( அதில் குழந்தைகளும் இருந்தன) இன்னும் இனி கிளம்பி தங்கள் வீடு போய் சேர வேண்டுமே, பெண்ணிய நிகழ்ச்சி தேவையா எனும் கேள்விகளை நானும் றஞ்சியும் எழுப்ப , தேவ கௌரி தான் பேசப் போவதில்லை என்று சொல்லி விட ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தலின் பேரில் பேசத் துவங்கினோம். பெண்கள் சந்திப்பில் றஞ்சி வாசித்த புகலிடப் பெண்களின் இலக்கியம் கட்டுரையை இங்கும் வாசித்தார். நானோ மிகச் சுருக்கமாக பத்து நிமிடங்களுக்குள் தமிழகத்தில் பெண்ணியம் எனும் தலைப்பில் மண் சார்ந்து என் பார்வை எப்படி இருக்கின்றது . இங்கிருக்கின்ற உங்களுக்கு தமிழகத்து பெண்ணிய சூழலாக வாசிக்க கிடைப்பது எல்லாம் காலச் சுவடும் உயிர்மையும் திட்டமிட்டு காண்பிக்கும் ஒரு பக்கமே, அது கூட முழுமையானதல்ல . பெண் விடுதலை என்பது என்னைப் பொறுத்தவரை ஆனோ, அவள் சார்ந்த சமூகமோ அவளை தீர்மானிக்க முயலுகின்ற போது அதுவாக இல்லாது போவதே .இங்கிருக்கின்ற அதாவது மேலைத்தேயத்தில் இருக்கின்ற தீர்வுகளாக சொல்லப் படுகின்ற ஒன்றை அப்படியே எங்கள் மண்ணுக்கு கொண்டு போவது சரியாக இருக்காது.எனவே மண் சார்ந்து சிந்திக்கவும் பழகுதல் வேண்டும் என்று பேச. சுமதி ரூபனும், விஜியும் அதற்கு மாற்றுக் கருத்துக்களை சொல்ல, உரத்து பேசியபடி நடந்து கொண்ட விதம், கூடியிருந்தவர்கள் அவர்கள் கருத்தை ஏறெடுத்தும் பார்க்காத சூழலையும், என் கருத்து நிலையின் நியாயங்கள் உள் வாங்கப் படும் சூழலையும் உருவாக்கியிருந்தது.)
posted by mathibama.blogspot.com @ 4/13/2006 11:48:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates