|
Wednesday, May 24, 2006 |
மனவெளிப் பயணம் 4 |
ஞாயிறு மாலை 3.45க்கு பெர்லினிருந்து கிளம்புகின்றோம். நீளச் சாலைகள் மட்டுமே உயிர்த்திருக்கின்ற பூமியில் இருக்கின்றோமோ எனும் சந்தேகம் கிளப்பும் புறவழிச் சாலை அப்படியான பூமியில் மனிதருக்கு பதில் வாகனங்கள் மட்டும் உயிர்வாழ்வதாய் தோற்றம் தர ,இயந்திரங்களோடு வாழப் பயந்து பின்னோக்கி ஓடும் பூமி, அதில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்க முயலும்மரங்கள் கிருஸ்துமஸ் விழாவிற்கென்று வளர்ந்து உதிராது நிற்கும் பசுமை சுமந்திருக்கும் மரங்கள்,மூடிய காரின் கண்ணாடிக் கதவுக்குள் இருந்து காணக் கிடைக்க, ஒரு மணி நேரத்தில் 180 கி. மீ வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வசதி. வழியெங்கும் இலையுதிர்க்க நிறம் மாறிய படி இருக்கும் மரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் மொட்டை மரமாக நிற்கத் துவங்கும். மரங்கள் சொல்வதில்லை குளிரை விழுங்கி குளிரோடு சிலநேரம் தனது பச்சையங்களையும் தானே விழுங்கித்தான் பத்திரப் படுத்தப் போகின்றதோ? பயணங்களில் தான் என் மனம் என்னோடு பேசத் துவங்குகின்றது . நான் காது கொடுத்து கேட்க வேண்டியவளாகின்றேன். எப்பவும் எல்லாரும் அவர்களுக்கான மகிழ்வாய் நான் மாறுவதை விரும்பும் போது நான் மாறிப் போகின்றேன் ஏனென்றால் நானும் அதையே விரும்பினேன். எனக்கானவராய் மாறிப் போகின்ற நபர், காலம், சூழல் இதிலெல்லாம் காதல் உருவாகத் துவங்குகையில் எதிர்த்திருப்பவர்களின் எதிர்பார்ப்பை மிதிக்க முடியாதவர்களாகிப் போகின்றோம். நான் எப்பவும் சலனிக்காது என் வேலைகள் இலட்சியங்கள் போராட்டங்களோடு பயணிக்க பயண நேரங்கள் பெரும்பாலும் எனது தனிமையான நேரங்களாகிப் போக என் மனம் அந்த நேரங்களில் தான் என்னோடு தர்க்கிக்கின்றது. பேசுகின்றது ,காதலிக்கின்றது , சண்டையும் போடுகின்றது . அதனூடான குடும்ப வாழ்வின் பிரசவங்கள் தான் என் எண்ணக் குழந்தைகள் எழுத்துக் குழந்தைகள் சூரியன் வாயு சந்திரன் , இந்திரன் என எல்லா உயர் சக்திகளுடன் என் மந்திரம் கலக்க கை சேருகின்ற குழந்தைகளை ஆற்றில் விடாது அர்ச்சுனனாக்கும் வலு சேர்க்கின்றேன் எப்பவும் என் கைகளுக்கு. இன்பா கேட்கின்றார், பல முக்கிய படைப்பாளிகளுடன் தாங்கள் பயணித்த போது இருந்த கலகலப்பு என்னோடு பயணிக்கின்ற போது இருக்கவில்லையே என்று, ஒரு கவிஞர் அல்லது கலையோடு தொடர்புடையவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என தீர்மானிக்க முடியுமா? 524 கி.மீ பயணம் டென்மார்க் நோக்கி. வைன்(vegen) வந்து சேர, சத்ய்தாஸ் அவரது வீடு வந்து சேர்ந்தோம். சாப்பிட்டுஅன்றிரவு சத்யதாஸின் மகள் சத்யா “பாலம்” எனும் பத்திரிக்கைக்காக பேட்டி எடுத்தார்.அவரது வீட்டில் அன்று இரவு தங்கிய பொழுதுகள் அற்புதமானவை, அதை அப்படியானதாய் மாற்றியது சத்யா, சில நேரம் இளையவர்கள் ஆச்சரியப் படுத்துகின்றார்கள் அவர்காளின் இயல்புகள் எங்களை கற்றுக் கொள்ள வைக்கின்றன. இன்னமும் எந்த வித சாயலும் படிந்திடாத அதே நேரம் நிகழ்கின்ற வாழ்வை ஒட்டி சிந்திக்கின்ற அனுபவம் வாய்த்திருக்கின்றதையும் காண சந்தோசம் வருகின்றது . அதை விட நான் பேசுகையிலும் அதை அப்படியே ஏற்காமல் கேள்வி எழுப்பி புதிய தளமிருந்து என்னையும் யோசிக்க வைத்த சத்யா தற்போதைய போலித் தனங்களோடு எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணியக் கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து புதிய இளம் தலைமுறை புதிய கட்டமைப்புகளை அதன் தனித் தன்மையால் நிகழ்த்தி விடும் எனும் நம்பிக்கையும் நாமும் எங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பதையும் அடையாளம் காண்பித்துப் போகின்றது . 24.10.05 மறு நாள் கிளம்பி அருகில் இருந்த குன்ஸ்ட்(kunst museum) அருங்காட்சியகம் போனோம் அன்று விடுமுறையாம். வெளியே இருந்த சில சிற்பங்கள் பச்சை புல்வெளியில். சுள்ளென்று அடிக்கும் வெயில், எங்கிருந்து தான் குளிர் வருகின்றதோ தெரியவில்லை, உள்ளுக்குள் நடுங்கிய படியே தான் கருஞ் சிற்பங்களை பார்க்க கொஞ்சம் நெஞ்சதிர்கின்றது. காற்றையும் கிழித்துக் கொண்டு அல்லது அதோடு கரைந்து அதுவாகவே மாறி , காற்று மனித முகம் கொண்டு வேகமெடுத்து ஓடுவதாய் ஓட அதன் கையில் மணல் மணிக் கூடு. அசையாச் சிற்பமெனினும், காலம் மெல்லக் கரைவதாயும் அதற்குள் ஓட வேண்டிய இடத்தைச் சேர்ந்து விடத் துடிக்கும் மனிதனின் அவல வடிவத்தையும் குறிப்பதாய் தொனிக்கின்றது. அதே வேளையில் நம்மூர் சிற்பங்கள் நினைவு வருகின்றது இந்தியாவிலும் போரும் போர் சார்ந்த வாழ்வும் இருந்ததை நம் சங்க இலக்கியங்கள் மூலமும், இன்னமும் அதன் சாட்சியாய் நிற்கின்ற கோட்டை கொத்தளங்களை காணும் போதும், அதன் வழி வந்த கலை வடிவங்களான இலக்கியமோ, சிற்பமோ, ஓவியமோ எதிலும் அவநம்பிக்கை பயணம் இருந்ததில்லை. ஆனால் மேலைத் தேய இந்த எல்லாக் கலைகளிலும் அவநம்பிக்கை பயணம் தெரிய நமது கலைகளின் ஆழம், போருக்கு பின்னும் நம்பிக்கையில் பயணிக்க வைத்த வாழ்க்கை முறை , கலாசாரம், பண்பாடு எல்லாம் மகிழ்வைத் தருகின்றாது.
குன்ஸ்ட் அருங்காட்சியம் அருகே கடை வீதியில் இருந்த ஒரு சிலையொன்று உயர்ந்து நின்ற கவசம் பூன்ற அந்த சிலை எழும்புக் கூடுகளின் மேல் நிமிர்ந்து நின்றது அந்த சிலையின் அடியில் கவிதை வரிகள் எங்களுடன் வந்த சத்யதாஸ் அவர்களின் மொழிபெயர்ப்பில் niels Hansan Jacobsen(1861-1941)என்பவரின் கவிதை வரிகள்
“ தலையிலிருந்து கால் வரை இரும்புகளால் அணிந்திருந்தான் அவன் முகத்தில் கழுகின் சாடை இருந்தது, கொடுமை செய்வதை பற்றி கருணை இல்லாதவனாக இருந்தான். அவன் காலில் விழுந்து கெஞ்சினேன். அதெற்கெல்லாம் அவன் மசியப் போறதில்லை. பேசுவதற்கு ஒன்றும் இல்லை. வலியை உணர்த்துகின்ற வரிகள் Militarismen(1898-1899) போகிற வழியில் வயல் வெளிகள் உழுது விட்டபடி கிடக்க, இதுவரை புலம் பெயர்ந்த தமிழர்கள் விவசாயத்தில் நுழையவில்லை. காணி வாங்கி விவசாயம் பண்ணுவது ஏன் சாத்தியப் படவில்லை. வயல் வெளிகளில் குளிர் காலத்திற்காக சேகரிக்கப் பட்ட வைக்கோல் வெள்ளை பாலிதீன் பைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றது அங்கிருந்து கிளம்பி ரீபெக்( Ribe) எனும் கிராமத்திற்கு செல்கின்றோம். நதி உண்மையில் நதியின் கரையில் நிற்கின்ற மகிழ்வைத் தருகின்றது. கொஞ்சிச் சிணுங்கிய படி ஓடுகின்றது நிறமற்றிருந்த நீர் அதற்கு நிழல் தந்து கொண்டிருந்த மரங்கள் , நீரில் மிதந்து கொண்டிருந்த படகுகள் அதன் பின் புறத்தில் பழமையின் வண்ணம்குறையாது ஒரு ஒழுங்குகளுக்குள் நிற்கும் கட்டிடங்கள் என நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் நகரமாய் இருக்க, பெரிய நுழைவாயிலுக்குள் நுழைகின்றோம். தரையெங்கும் சதுர சதுர கற்கள் பதித்திருக்க. தெருவில் நடந்து கொண்டிருக்கும் போதே வானுயர நின்ற அந்த தேவாலயம் பழமையின் கம்பீரம் ஜொலிக்க நிற்கின்றது தேவாலயங்களோ கோவிலோ அதன் பிரம்மாண்டத் தோற்றம் நமக்குள் இருக்கும் “நானை” சின்னதாக்கிப் போடுகின்றது பாதிரிமார்கள் புதைக்கப் பட்ட இடங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய மெலிதான சிற்பங்களைக் காண எனக்கு சித்தர்கள் நினைவு வந்து போகின்றது. தேவாலயத்தின் மேல் தளத்திற்கு போகின்றோம்.தூரத்து நதி கடலோடு கலந்து வரும் சங்கமிப்பு மெல்ல ஊறும் புழுக்களாய் நகர்ந்து போய்க் கொண்டிருந்த இரயில் பச்சை பசேலென்று அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த மனித சாம்பல் சுமந்து நிற்கும் சுடுகாடு? இடுகாடு? உயர இருந்து பார்க்க சகதிகள் கூட கண்ணுக்கு அழகாகவே தெரிய காற்றின் குளிரை உள்வாங்கியபடி தேவாலயத்திற்குள் இறங்குகின்றோம். 1686ல் வடிவமைக்கப் பட்ட கடிகாரம் 450 வருடங்களுக்கு முந்தியது என்ற போதும் ஓடிக் கொண்டிருக்கின்றது.எத்தனை விதமான பருவ மாற்றங்களுக்கு, சூழல் மாற்றங்களுக்கு, எத்தனை விதமான மனிதருக்கு சாட்சிகளாக நின்று கொண்டிருக்கிறது. இன்றைய நவீன ஓவியங்களின் குழப்பங்கள் இல்லாது வருடிப் போகும் ஓவியங்கள் , தாங்கியிருந்த சுவர்கள் பேரமைதியும் குளிர்ச்சியும் தந்து போகும் சூழல். உயரத்தில் இருக்கும் ஆர்கன் கேட்க மட்டுமே சாத்தியப் படுகின்ற இசையை பார்க்கவும் முடிகின்றதாய் மனப் பிரமை தர வெளியேறுகின்றோம். வைனை இட்டுக் கிளம்பி ஆர்ம்ஸ்டர்டாமை நோக்கி பயணமாகின்றோம்
பகல்கள் இரவுகளாக நிறாம் தொலைக்கப் பார்க்கின்றேன் இரவுகள் விடியல்களாக கழுவிப் போட அதில் நடக்கின்றேன்
சந்தோசங்கள் அடுத்த கட்டத்தில் உருட்டிய தாயத்தில் பாம்பு கடித்து வால் வந்து சேர கனத்து சுமைகளாகிப் போகின்றன விதைத்து விட்டு அறுவடைக்கு காத்திராது அடுத்த பருவம் தேடிப் பறக்கும் கண்டம் கடக்கும் காலப் பறவை மீண்டு வருகையில் முடித்த அறுவடை போக சிதறிய நெல்மணிகள் என் திரும்பலுக்காய் காத்திருக்க விரித்த சிறகுகளில் வியனுலகு குடித்து முடிக்கின்றேன் மண் தின்னதை யாரும் காணாததால் இதுவரை என் வாய் திறக்கச் சொல்லவில்லை அதற்குள் சுழலும் உலகம் காண
இப்பொழுது நால்வராக மழையும் எங்களோடு புறப்பட்டிருந்தது சுட்டிக் குழந்தையாக கால் உதறி வீம்புக்கழுகும் குழந்தை நினைவு வைப்பர் தள்ளத் தள்ள வந்து வீழும் தூறல் தந்து போகின்றது மாலை 5 மணிக்கு துவங்கிய எங்கள் பயணம் இரவு நீண்ட நேரம் ஆகிவிட தொடர்ந்து போக முடியாது “ஹம்பெர்க்” எனும் இடத்தருகில் வண்டி நிறுத்தி ஓய்வெடுக்கவென்று ஒதுக்கப் பட்ட இடத்தில் நிறுத்தி விட்டு அதோடேயே தூங்கிப் போனோம் சுருட்டி எடுத்து வந்திருந்த படுக்கைக்குள் எங்களைத் திணித்துக் கொண்டு பூட்டிக் கொண்டோம். கூட்டுப் புழுவாய் மாறுதல் மனிதனுக்கு சாத்தியமா? விடியலில் வண்ணச் சிறகுகள் என் முதுகில் முளைத்திருக்குமா? தூக்கத்தில் லார்வாவாகி முடங்கி, சிறகுகளோடு வெளிவந்து நிறங்களை பூமியெங்கும் நான் உதிர்க்க……… எங்கிருந்தோ வந்து நின்றது காவல் துறை வண்டி. எங்களது வண்டி சக்கரங்களில் ஒன்று காத்தில்லாமல் இருப்பது பற்றி எச்சரிக்கை செய்து போக முயலும் போது எங்கள் வண்டியில் இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்டிருந்த ஒரு விபத்தில் வண்டியின் முன்பகுதி நசுங்கியிருப்பதை கேள்வி எழுப்பி அது பற்றிய முழுத்தகவலும் பெற்றுக் கொண்டு எங்கள் கடவுச் சீட்டுக்களை பரிசோதித்து விட்டு வண்டியை சரி செய்து கிளம்ப இரத்தமும் சதையுமான மனிதன் வெறும் கடவுச் சீட்டாக மாறிப் போவது பற்றிய கவலை எனக்குள் எழுகின்றது. சக்கரத்தை சரி செய்து கிளம்ப எத்தனித்த போதும் தூக்கம் மூவரையும் அழுத்த மீண்டும் ஓரிடம் நிறுத்தி 8 மணி வரை தூங்கிப் போனோம் நாங்கள் விழித்த போது இரவெல்லாம் விழித்திருந்த அசதியில் தூங்கிப் போயிருந்தது மழை, உடன் சூரியனும். மேகக் கூட்டத்திற்குள் தன்னை திணித்துக் கொண்டு எழும்ப மனமில்லாது கிடந்தது சூரியன். 10 மணிக்கு ஆம்ஸ்டர்டாம் நகரின் எல்லைக்குள் நுழைகின்றோம் நாங்கள் எதிர்பார்த்து வந்த உறவினர்கள் வீட்டில் இல்லாது போக வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு விட்டு அங்கேயே இருந்த கடையினில் முகம் கழுவி நாங்களும் குரோசோங்(crosong) சாப்பிட்டு விட்டு நகருக்குள் புகுந்தோம். ஊரின் நடுப் பகுதிக்கு வர திடீரென எங்களை ஒரே மாதிரியான உயர அழகிய கட்டிடங்கள் சூழ்ந்து கொண்டன. நாங்கள் மிரண்டு நிற்கிறோம் ஒரே சாலையில் டிராம் மற்றும் அனைத்து வாகனங்களும் பயணிக்க தயக்கங்களோடேயே வண்டி ஊர்கின்றது. அருங்காட்சியகங்கள் நிறைந்த நகரத்தின் முக்கிய இடத்தில் வந்து வண்டியை நிறுத்தி விட்டு ஓட்டி வந்த களைப்பு தீர இன்பாவை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு வான்கோவின் ஓவியங்கள் நிறைந்த அருங்காட்சியகத்திற்குள் செல்கிறோம். |
posted by mathibama.blogspot.com @ 5/24/2006 05:14:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment