|
Tuesday, April 18, 2006 |
நனைந்த நதி -3 |
வெற்றுத் தாள்களில் விளைந்த அச்சுகள்
இயந்திரத்துள் போயும் வந்தும் கொண்டிருந்த காகிதம் போகும் போது வெற்றுத் தாள்களாய் போய் வெளி வருகையில் எழுத்துக்களோடு வெளி வந்தது.இயந்திரத்தோடு இயந்திரமாகிப் போயிருந்த குமாருக்கு தனது வாழ்வைப் பிரதிபலித்தாய் தோன்ற கண்கள் நிலைக்குத்தியது. கைகள் மட்டும் வேலையைத் தொடர மனமோ தனது வாழ்வின் வெள்ளைப் பக்கங்களை கண்களுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது.
விடுமுறை நாளன்று சுவரேறிக் குதித்த அந்த மாநகராட்சி பள்ளியில் நானும் எனது நண்பர்களும். செம்மண்ணு அடித்து போட்டிருந்த அரை குறை ஓடுதளம் .என் வாழ்விலும் திருப்பத்தை உணர்த்தி , மனத்தை செக்கு மாடாய் சுற்றச் செய்யும் என்று உணராது ஆடிக் கொண்டிருந்த காலங்கள். யாரும் துரத்தாமலேயே மூச்சிரைக்க ஓடும் ஓடுதளம். தற்போது நான் மூச்சிரைக்க ஓடியும் எல்லையோ, முடிவோ வராது, நாக்கு தள்ள முழங்கால்களுக்கு கீழ் கால் எங்கே என்று உணர முடியாத படி ஓடிக் கொண்டிருப்பதாய்...... தீபாதான் தட்டி விட்டாள்"ஏன் அச்சு கோர்த்ததில் ஏதும் தவறிருக்கா? அப்படி வெறிச்சிட்டுஇருக்கீங்களே"
ஓடுதளத்திலிருந்து நடப்பு வேலைகளுக்குள் வந்து விழுந்தேன். அதன் அடையாளமாய் உதிர்ந்து விழுந்த பெருமூச்சு.
" தப்புதான் " தனையறியாது உதிர்ந்து விழுந்த சொல் ஒன்று தீபாவின்
காதுகளுக்கு போய்ச் சேரமாலேயே கரைந்து போயிற்று. அடித்து வெளிவந்த
காகிதங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.
எல்லாம் சரியாகத்தானே இருக்கு சொல்லி விட்டு அடுத்த வேலைகளைக்
கவனிக்க அடுத்த தட்டில் இருந்த அடுக்களைக்குள் போனாள்..உள்ளிருந்து
வானொலியில் தாய் வீடு நிகழ்ச்சி ஆரம்ப மென தொகுப்பாளர்
உச்சரிக்கையில் கடந்து வந்த தனது தாயின் நினைவுகளும்...எனது தாய் வீடும் வந்து
போக....கைகளில் வந்தமர்ந்த ஈ தந்த எரிச்சலோடு நினைவுகள் தட்டி விட்டு....
எனது கால்களும் நினைவுகள் மீறி இயல்பாய் அடுத்த வேலையை நோக்கி
போனது. அச்சிட்டப்பட்ட காகிதங்கள் ஒரே சீராய் வெட்டப்பட்டு வெளிவந்து
கொண்டிருந்தது.
மீண்டும் மனது ஓடுகளத்திற்குள்......அச்சு எழுத்துக்கள் பதியாத வெற்றுத்தாள்
மனதை, மனம் ஆசையோடு தடவிப் பார்த்தது. எத்தனை சந்தோசங்கள்,
எத்தனைஎத்தனை கும்மாளங்கள் எல்லாம் ஒரு சில வார்த்தைகளில் என்
மனதுக்குள் விழுந்த வார்த்தைகளால் அழியாத அச்சாகிப் போனாது....இப்போது
வெட்டுப் பட்டுக் கொண்டிருக்கும் காகிதங்களாய் கண்ணில்....தெரிய முதல் முறை
செய்யும் வேலை உறுத்தியது. என் வாழ்வை பிரதிபலித்து காண்பித்த கண்னாடியாய்
வேலை.....உடைத்து விட மனம் துடிக்கும் உள்ளே இருக்கும் உயிரும் உடலும் அதை
ஆட்சேபிக்கும் அவைகள் ஜீவித்திருக்க வேண்டி.மனம் தான் வெட்டப்பட்டு
வெட்டப்பட்டு கிடந்தது....
பள்ளியின் முன் வாசலுக்கு எதிர்த்திருந்த கருவேலங்காட்டுக்குள்ளிருந்து பெறக்கிய கட்டைகள் ஸ்டெம்பாக இருக்க இருந்த ஒரே மட்டையைப் பிடிக்க சண்டை நடந்து கொண்டிருந்தது விளம்பரங்களில் வரும் கிரிக்கெட்
வீரர் களை சுற்றும் பெண்கள் பார்த்து எங்களுக்குள்ளும் ஆசை முளை விடும் மீசை பருவமது....
எங்கே எதற்காக ஆரம்பித்த சண்டை என்பதெல்லாம் நினைவிலிருந்து அழிந்து போய் இறுதியில் வெளிவந்த
வாய் வார்த்தைகள் மட்டும் திரும்ப திரும்ப பிரதி எடுக்கும் அச்சு இயந்திரமாய் என் மனம் முழுவதும் அச்சாக்கிப் போயிருந்தது
"உங்க அம்மாவைப்பத்தி தெரியாதா? உனையெல்லாம் சேர்க்க மாட்டோம்? உன் கூட சேரக்கூடாதுன்னு வீட்ல
சொன்னாங்க....அதிர்ந்து நான் நிற்க உங்க அம்மா உங்க பெரியப்பாவை வெச்சுகிட்டு இருக்காராம்"
மட்டை தர முடியாதுன்னு சொல்லியிருக்கலாம்.....போடான்னு சண்டை போட்டு வந்திருப்பேன்......அவன் சொல்லிய
காரணம் வேளை தெரியாது இரைச்சல் தின்று அங்கு மௌனம் நிரப்பியது ....இன்னும் என் மனம் கூசச்
செய்தது.....அமைதியாய் கிளம்பியவன் வீடு நெருங்க நெருங்க அனலானான்.......புரிந்தும் புரியாதுமிருந்த விசயம்
தந்த கோபம் பட்டென போட்டு உடைக்க .....புரிய வைக்க முடியாது விழித்த தாயின் கண் பார்த்து வெறித்திருந்தேன்
பார்க்க மனம் பயந்தது......தாயிடம் கோபித்தது நெருடலாக இருக்க தப்பைத்தானே கேட்டோம்.. தந்தையின்
இடத்தில் இன்று கேட்க வேண்டியவன் நானல்லவா.தன்னைதானே சமாதானம் செய்ய முயன்று நகல்கையில்.....
அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கும் மனசு சடாலென அம்மா காலில் விழ நொறுங்கிய மனசு இன்று வரை சேர்க்க முடியாது.கெஞ்சிய அம்மா சொன்ன விளக்கங்களும் நடை முறை பிரச்சனைகளும் ஒத்துக் கொள்ளாத மனது . தற்கொலை செய்து கொள்ள வென அம்மா கொல்லைபுற கிணறு தேடி இரவில் ஓடிய போது எல்லாவற்றையும் மனதில் புதைத்து எதுவுமே நடக்காததாய் வாழ்க்கையை நகர்த்த முயலுவதே என் வாழ்வாய்......
குனிந்த தலையோடு களம் விட்டு வெளியேறிய நான் மீண்டும் ஆடுகளத்துள் நுழையவும் இல்லை ...மனதுள் இருந்த பாரம் தலை நிமிரவும் விடவில்லை.
ஓடிக் கொண்டிருந்த இயந்திரம் வேலை முடிந்ததாய் நிறுத்தினான்.மனசு மட்டும் நிறுத்த முடியாது, நச் நச் என்று வெட்டிக் கொண்டிருந்தது
....இருபது வருடங்கள் ஓடியும் அழியாத அந்த வார்த்தைகள் அலுப்பு தர நிலை படியதனில் வந்து சோர்ந்து உட்கார ,சமையல் அறையிலிருந்து வந்த தீபா " முடிச்சாச்சா? பின் அடிச்சிரலாமா?" கேட்டுக் கொண்டு வெட்டுப் பட்ட பக்கங்களை அடுக்க ரம்பித்தாள்
..........என்னங்க யோசனை?
அடித்த புத்தகத்தில் வந்த விசயம் மனசில் ஓடிக்கிட்டிருக்கு தீபா....
"என்ன அது ?" பிரச்சனையில் தீவிரம் உணராது கேட்டாள் ஏன் சொன்னோம் அவளிடம்....இத்தனை வருட வாழ்வில் சொல்லாது காத்திருந்த ரகசியம்........வேறு வழியில் வந்து விட்டதே ....மனசு பயந்தாலும்......வேறு வழியில் இரகசியம் காத்தது சந்தோசமும்......இவற்றை சொன்னதே கனமும் குறைய ஆரம்பித்திருப்பதும் எனை மேலும் தொடர வைக்க
"இப்ப அடிச்ச மேட்டரில 20 வயது பையனின் அம்மா தவறு செய்யவதாகவும்....மகனுக்கு தெரிய வந்து அவன் நொறுங்கிப் போவதாகவும், 40 வயது ஆகியும் ஈரத்தோடு அவன் மனம் கண்ணீர் சிந்துவதாயும்.....முடிக்காது
மனசு நினைவுக்குள் மூழ்கிப் போக
"அய்ய இதுதானா பிரச்சனை நான் கூட என்னவோன்னு நினைச்சேன்.....19 வயசுல அவன் கோபமோ வருத்தமோ
பட்டிருந்தா நியாயம். 40 வயசுல நடந்து முடிஞ்சதை நினைச்சு உடைஞ்சா கிறுக்குத் தனமுங்க
முந்திய தலைமுறை செய்த தவறுகள் நமக்குப் பாடமா நினைக்கனும்...பாரமா நினைக்க வேண்டாம் நம்மால அடுத்த
தலைமுறை இதுபோல உருகாம இருக்க புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கட்டும்"
" வெட்டாம தாள அச்சு மையால் கரையாக்காம எப்படிங்க பக்கம் கோர்த்து புத்தமாக்குகிறது
லாபத்திலிருந்து கிடைக்கிற நட்டத்தை விட நட்டத்திலிருந்து கிடைக்கிற லாபம் பெரிசுங்க....காகிதத்தை வெட்டிடோம்னு கவலைப் படாம ....புத்தமாச்சேன்னு சந்தோசப்படுங்க"
வார்த்தைகள் காத்தோடு கரைய விட்டு அரிசியிலிருந்து கல்லை பிரித்தெடுத்து முடித்தவளாக உலையில் போடப் போனாள்
வாசலில் நிழலாட..."தீபா உன் தங்கச்சி வந்திருக்கு....இருந்து சாப்பிட்டு போம்மா"....சொல்லிவிட்டு தனியே இருந்த தாயை தன்னுடன் இருக்கச் சொல்லலாம் என்ற நினைப்புடன் அம்மா வீடு போய் வந்திடறேன் தீபா சொல்லி
விட்டு வெளியேறினேன்
மை வாசனை கரைந்து வாசலில் இருந்த வேம்புவிலிருந்து கசந்த ஆனால் சுகந்தமான வாசனை எனை தழுவிச் சென்றது (நனைந்த நதி சிறுகதை தொகுப்பிலிருந்து) |
posted by mathibama.blogspot.com @ 4/18/2006 07:50:00 am |
|
3 Comments: |
-
பட்டிவீரன்பட்டி - நம்ம சுப.மாரிமுத்து சார் ஊர்தானே? கேள்விப்பட்டு இருக்கேன்.
-ஞானசேகர்
-
எனக்கு பட்டிவீரன்பட்டியைப் பற்றி ஒன்றும் தெரியாது. பட்டிமன்றங்களில் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு பெண் அந்த ஊர்தான். பொதுவாக கடைசியில் வரும் 'பட்டி' என்ற வார்த்தை, ஆரம்பமாக அமைந்திருப்பதால், ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.
மற்றபடி, நான் கொடைக்கானல் சென்றபோது, அவ்வூரின் வழிகாட்டியைப் பார்த்து இருக்கிறேன். பெயர்க்காரணம் என்று ஏதாவது உண்டா?
-ஞானசேகர்
-
பட்டி வீரணக் கவுண்டர் என்பவர் முதன் முதலில் குடியேறியதால் அந்த பெயர் ஊருக்கு வந்ததாக சொல்லுவார்கள், மலை விவசாயத்தை நம்பி இருக்கும் ஊர் அது. நீதிக் கட்சியின் வழித் தோன்றல் சௌந்திரபாண்டியனாரின் ஊரும் அதுதான்
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
பட்டிவீரன்பட்டி - நம்ம சுப.மாரிமுத்து சார் ஊர்தானே? கேள்விப்பட்டு இருக்கேன்.
-ஞானசேகர்