|
Friday, June 02, 2006 |
இலவசமாய் ஏமாற்றுகள் |
இலவசமாய் ஏமாற்றுகள்
“ம் “என்றால் சிறைவாசம், “ஏன்” என்றால் வனவாசம் என்றிருந்த காலங்களை உடைக்க சிந்திய இரத்தமும் பண்ணிய தியாகங்களும் , சிந்தனை வழியாகவும் செயல் வழியாகவும் உழைத்த உழைப்புகளும் நினைந்து நினைந்து இன்றைய நிலையின் மகத்துவத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் . உருளுகின்ற உலகம் இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மட்டுமல்ல மனிதனை நாகரீகம் எனும் படிக்கட்டுகளில் ஏற்றி விடவும் முயற்சிக்கிறது. உணவு , உடை , பழக்க வழக்கங்கள் எவை மாறிய பொதும் வாழ்வதற்கான ஆசையும் அதற்கான நேர்மையான உழைப்பும், நேர்மையாய் வாழ்வதற்கான போராட்டமும் மாறாததே. புதுமைப் பித்தன் சொல்லுவார் 200 ஆண்டுகளாக சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம் என்று. அப்படியான செக்கு மாட்டுத் தன சிந்தனையை கலைத்து புதிதாய் இன்றைய தேவைக்கு கட்டமைத்து, ஒழுங்கு செய்வதற்கான சிந்தனையை வடிவமைப்பது இலக்கியங்கள். அதற்கு செயல் வடிவாக்கம் கொடுப்பது மனிதனின் பல்வேறு போராட்டங்களும், அதன் ஒட்டு மொத்த சொல்லாடலாய் திகழும் அரசியலும். அப்படி சிந்தனை வழியாக செயலும், செயலின் வழியாக மீண்டும் சிந்தனையும் மாறி மாறி திருத்தப் படுகின்றன, வடிவமைக்கப் படுகின்றன, புதிதாய் தோற்றுவிக்கப் படுகின்றன. அரசியலின் அநாகரீகங்களின் உச்ச கட்டங்களை தேர்தலின் மிக நெருங்கிய இந்த கால கட்டத்தில் சந்தித்து வருகின்றோம். ஊடகங்கள் , அதிலும் தொலைக்காட்சியும், செய்தித் தாள்களும் கட்சி கட்டிக் கொண்டு இரண்டாய் நாளாய் பிரிந்து கிடக்கின்ற வேளையில் சாமான்ய மனிதனை கிறுக்காக்குவதையும் தாண்டி , ஒவ்வொரு அறிவிப்பின் பல்வேறு பக்கங்களையும் யோசிக்க வைத்தும் போகின்றன. ஏன் எதற்கு யார் என்பது கூட அறியாது சின்னங்களில் குத்தி விட்டு வரும் நிலை மாறியிருக்கின்றது. சொல்வதை எல்லாம் நம்பி விடுகின்ற நிலை தாண்டி சொல்வதற்கு பின்னால் இருக்கின்ற மறைக்கப் பட்ட பகுதிகளை வெளிச்சமிட்டு காட்டியும் போகின்றன அவைகளே அறியாது ஊடகங்கள். இலவசங்களாய் வந்து விழுகின்ற அறிவிப்புகள் , தேர்தல் வாக்குறுதிக்கென்று ஏழுமலை ஏழுகடல் தாண்டி வைக்கப் பட்ட அரக்கனின் உயிராய் பாட்டி சொன்ன கதைகளின் புனைவுகளையும் வென்று சிந்துபாத் கதையாய் நீளப் போகின்றன. அறிவிக்கப் பட்ட இலவசங்கள் மக்களுக்காகவா? அல்லது அடுத்த கட்சிக் காரனை விட பெரியதாய் சொல்லியிருக்கின்றேன் என்று பூச்சாண்டி காட்டவா? எதை இலவசமாய் தரப் போகின்றார்கள் ? முதலில் அவை இலவசங்கள் தானா? எந்தக் காலத்தும் யாரும் எதையும் சும்மா தந்து விட வும் சும்மா பெற்று விடவும் வாய்ப்பே இல்லை என்பது பொது ஜனம் அறியாததா? அதுவும் இன்றைய வணிகச் சூழலில், எல்லாவற்றுக்கும் விலை பேசும் கால கட்டத்தில் அதெல்லாம் சாத்தியம் தானா? மக்கள் பணத்தையே சேமிப்பாக்கி அதிலேயே கடனும் தந்து , அதற்கெனவே வட்டி வசூலிக்கும் சில சேமிப்புத் திட்டங்களைப் போல் , மக்கள் வரிப்பணத்திலேயே ஆட்சி நடத்தும் அரசாங்கங்கள் மனிதனின் வாழ்வதற்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது அதன் கடமையாக இருக்க எப்படி சாத்தியமாகின்றது” கடமைகளை” இலவசங்களாய் சொல்லிப் போக? உணவும் உடையும் இருப்பும் வாழ்வை உயர்த்தும் கல்வியும் தொடரும் வாழ்வும் பயணத்தில் மக்களின் நோய் , வேலையின்மை முதுமை என்று பற்பல காலங்களில் உருவாகும் அடிப்படி தேவைகளுக்கு சாமான்யனின் முதுகு தடவி தோள் கொடுக்கும் அரசாங்கத்தை மக்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சியால் இதுவரை சாத்தியமாக்க முடிந்ததா? முடிந்திருந்தால் இன்று இலவச அறிவிப்புகளாய் சொல்லப் படுபவை எல்லாம் திட்டங்களாய் அறிவிக்கப் பட்டிருக்கும் , சாதாரண வியாபாரியின் விற்பனை தந்திரத்தோடு “ இலவசமெனும்” பேரில் அறிவிக்கப் பட்டிருக்காது எந்த கட்சித் தலைவரும் அவர்கள் சொந்த உழைப்பின் பணத்திலிருந்து இலவசமாய் துன்பம் கண்டு துயரம் கண்டு தானம் தரும் எண்ணத்தில் தந்து விட வில்லை “இலவசங்களை” மகள் உழைத்து சேமித்த சேமிப்பிலிருந்து நேராகவும் மறை முகமாகவும் கட்டிய வரிப் பணத்திலிருந்து மக்களுக்கே அவரவர்கள் பெருந்தன்மையோடு இலவசமாய் கொடுக்கப் போவதாய் அறிவித்துப் போகின்றார்கள். அறிவிப்புகள் எல்லாம் நிஜங்கள் போல தோற்றம் தரும் மாயைகளே. சாமான்ய மனிதனாய் இருந்து அரசாங்க அலுவலகத்தில் தனக்கு சேர வேண்டிய உரிமைகளை கூட பெற்றுக் கொள்ள முடியவில்லையே. தெரிந்த ஆட்களோடுதான் செயல்படுத்த முடிகின்றது. ஊனமுற்றவர்களும் வயோதிகர்களும் யாரையும் எதிர்பார்க்காது வாழக் கூடிய தன்னிச்சையான வாழ்வுக்கு யார் உத்திரவாதம் தர முடியும்? மொத்தத்தில் “இலவசம்” எனும் வார்த்தையின் அர்த்தத்தை மாற்றி விட்டுப் போயிருக்கின்றார்கள் “ஏமாற்றென்று” |
posted by mathibama.blogspot.com @ 6/02/2006 12:25:00 am |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment