|
Tuesday, July 04, 2006 |
டார்ஜிலிங் பயணம்-7 |
10.5.07 காலையில் 8 மணிக்கே தயாராகி காலை சாப்பாட்டை கையில் எடுத்துக் கொண்டு கலிங்பாங் போக வேண்டியது, பயணத் திட்டத்தில் இருக்க, நாம்சி வழியாக கலிம்பாங் போக மாற்றியமைக்கின்றேன். மைத்ரேயி புத்தர்பற்றி விசாரிக்க நாம்சியை அனைவரும் சுட்டிக் காட்டுகின்றனர்
நாம்சியில் பத்மசாம்பவா 135 அடி உயர சிற்பம் இருக்கின்றது. கையில் சூலாயுதமும் உடுக்கையும் நீண்டு வளந்த முடியுடனும், கிரீடம் தரித்து தாமரை மேல் அமர்ந்து, புத்தர் போல் காது வளர்த்து, புத்தரா? சிவனா சந்தேகம் வருகின்றது இதுவரை எத்தனை மலை தாண்டி வந்திருப்பேன்.நினைத்து பார்க்கின்றேன். கலிம்பாங் வந்து சேர்கின்றோம். கொஞ்சம் நெரிசல் கூடிய சிற்றூர் . மாலை ஓய்வெடுத்து விட்டு மறுநாள் அங்கிருக்கும் அனுமார் கோவில். கோவில்கள் எல்லாம் மலையின் உச்சிகளில் பார்க்க அழகிய காட்சிகள் அங்கிருந்து டர்பின் அண்ட் டாரா மலை போகின்றோம் நாலாபுறமும் நிமிர்ந்து நிற்கின்ற மலைச் சிகரங்கள் சமயத்தில் அதையும் வென்று நிற்கின்ற சின்னஞ் சிறிய செடிகள். ஒரு மணி நேரம் அந்த இயற்கையை பிரியாது இருந்து விட்டு அங்கிருந்து டர்பின் மானஸ்ட்ரி போகின்றோம். அழகிய வண்ண ஓவியங்கள் புத்த கோவில் சுவரெங்கும். மதிய உணவுக்கு பிறகு கிளம்பி டார்ஜிலிங் வந்து சேர்கின்றோம்.
12.5.06 காலை 3 மணிக்கு எழும்பி சூரிய உதயம் பார்க்கப் போகின்றோம்.வழி நெடுக பெண்கள் பைகளில்காப்பி போட்டு விற்கின்றனர்.இவ்வளவு அதிகாலையில் பெண்கள் குளிரில் வேலையை தொடங்குவது அவர்களது உழைப்பின் தீவிரத்தை உணர்த்திப் போகின்றது. மேக மூட்டம் காரணமாக சூரிய உதயம் பார்க்க முடியவில்லை. நான் பார்க்க நினைத்த மைத்ரேயி புத்தர் இங்குதான் உட்கார்ந்த நிலையில் இருக்கின்றது. குலூம் மானஸ்ட்ரி . போக்குவரத்து நெரிசலுக்குள் சிக்கி ஒரு வழியாக தங்கிய இடம் வந்து சேர்கின்றோம். டார்ஜிலிங்கை பயணத்தில் கடைசியாக வைத்துக் கொள்ளுவது நல்லது. அதன் நெருக்கடியும், நல்லவேளையாக தப்பித்து வந்தோம் என்று நிறைவைத் தரும். டார்ஜிலிங் இரயிலில் போகலாம் என்று ஆசை காட்டி போய் விடாதீர்கள். அழகிய காட்சிகள் பார்க்கக் கிடைக்கும் ஆனால் பயண ஆசையையே விட்டு விடுவீர்கள். அவ்வளவு மெதுவாக , நமக்கு அலுப்பு ஏற்படுத்தும் விதத்தில் இரயில் போகின்றது. டார்ஜிலிங்கில் ஒரு மிருகக் காட்சி சாலை இருக்கின்றது நாம் பார்க்க அதற்குள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்கள் பற்றிய அருங்காட்சியகம் ஒன்றும். மலையை விட்டு மறுநாள் இறங்குகின்றோம். டீஸ்டா ஆறு, வெள்ளை ஆறாய் சீறிப் பாய்ந்து மலைகளுக்கிடையில் ஓடிவருகின்றது. ராஃட் போட்டிங் எனப் படும் அதி வேக படகுச்சவாரி இருக்கின்றது. இமய மலைச் சிகரத்துக்கு பிரியா விடை தந்து மலை விட்டு இறங்கி தேயிலைத் தோட்டங்களுக்கிடையே பயணித்து பாக்டோக்ரா விமான நிலையம் வந்து சேர்கின்றோம்
கற்பனைக்குள் சிக்கி விடாத இன்னொரு உலகம் எம் கற்பனைகளை எட்டி விடாத நிதர்சன உலகம் இரண்டுக்குமிடையே இரவையும் பகலையும் காலடியில் போட்டு நசுக்கியபடி ஆசைகளையும் நிராசைகளையும் தோலுரித்து மண்டையோடு மாலையிட்டு நீலம் பூத்துக் கிடக்கிறது இன்னொரு உலகு யாராலும் கண்டு உணர முடியாபடிக்கு
கடந்து விட்ட காலங்களிலும் வரைந்த தூரிகைகள் மக்கி விட்ட போதும் அழியாத ஓவியமாய் வாசிக்கப் பட்ட அர்த்தங்கள் அழிந்து போன போதும் காதலை மட்டும் ஜீவனோடு வைத்திருந்த படிக்கு உலாவ
குழந்தை சண்டையாய் உரித்துப் போட்ட இனிப்பின் தாள்களாய் தொட்டால் உயிர்க்கும் ஒளியாய்
நீலவானம் மறைத்து கீழிருப்பதை மறுத்துப் போகும் மேகமாய்
ஓடி வந்த நதி தேய்ந்து மணலாய் மாறிப் போனதாய் தளிர்களின் சக்தியைப் பூவாகவும் பூக்களின் உயிர் காயாயும் மாறி மாறிப் போன போதும் உண்டு உயிர்த்து பரி நிர்வாணமாய் வைத்துக் கொள்ளும் இயற்கையை உணராமலேயே இயங்கும் மனிதன் கண்டும் உணரமுடியா உலகில் கனவோடவே மூடிய விழியோடு
|
posted by mathibama.blogspot.com @ 7/04/2006 08:38:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment