|
Thursday, February 25, 2010 |
பெண் கவிஞர்கள் இன்று |
பெண் கவிஞர்கள் இன்று திலகபாமா (திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் வாசிக்கப் பட்ட கட்டுரை)
கவிஞர்கள் காலம் காலமாக வாழ்வை , வாழ்வின் முரணை விசாரணைக்குள்ளாக்கி அதன் முன்னகர்தலை மொழியின் இயங்கியலூடாக சிந்தனை தளத்திற்கு வேரடி நீராய் மாற்றித் தருபவர்கள். இதில் ஆண் பெண் கவிஞர்கள் பேதமில்லை . மொழி நாடு இனம் வரையறை இல்லை எனினும் மொழி தன் இருப்பினூடாக பதிவு செய்து போகும் காலமும் இடமும் விமரிசனப் பார்வையில் பிரித்துப் பார்ப்பதற்கும் கவிதைகளின் நுண் துளைவழி உற்று நோக்கு வதற்கும் வாசகனின் மையக் குவியத்தை ஒரு முகப் படுத்துவதற்கும் இப்பிரித்தல்கள் உதவுமென்பதால் பெண் கவிஞர்கள் மட்டும் அதுவும் இன்றைய பெண் கவிஞர்களை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு ஒரு உரை என்பது சரியாக இருக்கும் நான் என் வாசிப்பினூடாக 3 வகைப்படுத்தல்களை முன் வைக்கின்றேன்
1 கவிதை ஒரு செயல் என நம்புபவர்கள் 2, கவிதை எங்கள் வாழ்வென்று நம்புபவர்கள் 3 கவிதையை தங்கள் இருப்பாக்குபவர்கள்
கவிதையை செயலாக நம்புபவர்களின் துவக்கம் முதல் முதலாக எழுதத் துவங்குபவர்களிடம் தொடங்குகின்றது . ஆரம்பத்தில் கவிதை எழுதுவதை செயலாகவே நம்பத் துவங்குகின்றோம். பெரும்பாலான நேரங்களில் அடுத்தவரிடம் சொல்லத் தயங்குவதை எழுத்தில் வடிகாலாக மகிழ்வாக மட்டும் வடிய விட்டுப் போகின்றவர்கள். இளமைப் பருவத்தில் பதின்ம வயதில் பேசத் தயங்குகின்ற விசயத்தில் தொடங்குகின்ற இவர்கள் வேறு செயல்கள் வாய்க்கின்ற வரையில் கவிதையோடு தொடர்கின்றார்கள் வேலை திருமணம் , இடம் மாறுதல் போன்றவை சிலரின் கவிதைகளை நிறுத்தி விடுகிறதெனில் அவர்கள் கவிதையை ஒரு செயலாக நம்பி விட்டவர்கள். இன்னும் சிலரோ தொகுப்பு போட்ட நிலையில் அச்செயல் முடிந்ததாய் நின்று போகின்றார்கள். திருமணம் ஆனதும் காதல் வெற்றியடைந்ததாய் சுபம் சொல்லி முடிப்பவர்கள் போல. இக்கவிதைகளில் பாடுபொருள் வெறும் பெண்களின் பிரச்சனைகள் என்று கவனத்திலெடுப்பதாக நினைத்துக் கொண்டு கள்ளிப் பால், திருமணம் , காதல் தோல்வி, அதிலும் காத்திருப்பு, வரதட்சனை என்பதாக வெற்றுக் கோசங்களையும் தட்டையான மொழியூடாகவும் பேசப் பட்டும் விடுகின்றது.
நமது பார்வை குவிய வேண்டிய இடமென்பது கவிதை எங்கள்வாழ்வு என மொழியை வாழ்வோடு இயங்க அனுமதித்தவர்களிடம்தான்.எல்லா சம்பவங்களும் கவிதையல்ல.சம்பவங்களுக்கு பின்னாலிருக்கின்ற உணர்வுகள் ஏற்கனவே இருக்கின்ற வார்த்தைகளின் முகத்திலிருந்தே புதிய தரிசனங்களாக்கி வாசிக்க தருவதே கவிதை அவ்வகையில் பெண் கவிஞர்களின் துவக்கம் இரா மீனாட்சியிலிருந்து துவங்குகின்றது. கவிஞர்களின் பெயர் பட்டியல் தவிர்த்து கவிதைகள் வாயிலாக கவிஞர்களை வாசிக்க வேண்டுமென நம்புகின்றேன். அவ்வகையில் இப்பகுதியைச் சேர்ந்த கீதாஞ்சலி பிரிய தர்ஷிணியின் “திருமதியாகிய நான்” எனும் என் சமீபத்திய வாசிப்பு அத்தளத்தில் பேசுவதற்கான வாய்ப்பைத் தந்திருக்கின்றது.
நாம் இரண்டு விசயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம் ஆணின் வாழ்வும் வெற்றியும் பெண்ணின் வாழ்வும் வெற்றியும் அன்று தொடங்கி இன்று வரை வேறு வேறொன்றாகவே இருக்கின்றது. அதன் வாசிப்பில் தான் எழுதப் படுகின்ற மொழியின் இயங்கியலும் அதன் வெற்றி தோல்வியும் வாசிக்கப் படுகின்றது. சில கவிதைகளின் வெற்றி யாருமே உணர்ந்து கொள்ளாத இடமிருந்தும் கூட நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது தன்னைத் தானே மரித்துக் கொண்டு
இன்னுமொன்று பிரபலமாகுவதை , புகழ்பெறுவதை உச்சமென வாசிக்கின்ற மனோநிலையும் ஆணின் வெற்றி வாழ்வு அடிப்படையில் தீர்மானிக்கப் படுவதாய் இருக்க மௌன அங்கீகாரங்களுக்கிடையே வெற்றி பெற்றதாய் சொல்லப் படாத கவிதைகளை , எழுத்துக்களை , எழுதப் படாத வெற்றுத் தாளாய் மனதை வைத்துக் கொண்டு வாசித்தால் தான் அதன் வாழ்வின் மொழி புரியும். இதுவரை இருந்திருக்கின்ற ஆண்களின், சமூக குரல்களிலிருந்து புதிய தரிசனங்களை தருகின்ற குரல் பெண்களிடமிருந்து ஒலிக்கத் துவங்கியிருக்கின்றது
கடல் சிறுமி
கடல்பற்றி ஒரு கவிதை எழுதச் சொல்லிக் கேட்டபடி மாலையில் நெளிந்தபடி வந்தாள் எதிர்வீட்டுச் சிறுமி
உனக்கு கடல்பற்றி ஏதும் தெரிந்தால் நீயே எழுது என்றேன் தெரியாதே என்ற அவள் கொஞ்சம் யோசித்து கடல் ப்ளூவாக இருக்கும் என்றாள் இன்னும் சொல் என்றதும் நாலு வரி போதும் என்று ஆசிரியை சொன்னதாகச் சொன்னாள் நாலு வரிகளுக்குள் அடங்கி விடக் கூடியதான ஒரு கடலை தனியே உட்கார்ந்து தேடிக் கொண்டிருக்கிறேன்
கவிஞனின் கவிதையில் ஒரு சொல் வெறும் அச்சொல்லாகவே இல்லாது பன்முகத் தன்மை கொண்டிருப்பதும் எல்லாவற்றுக்குமான பொதுமையாகிப் போவதும் தான் சிறப்பு. இக்கவிதை ரொம்ப எளிதாகப் புரிந்து கொள்ளப் பட்டு விட்ட சொற்களுக்கிடையில் கடலைப் புரிந்துகொள்ள முடியாமல் போன வியப்பையும் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட விசயமாக சிறுமிக்கான கடல் நிலை கொண்டிருப்பதையும் அது மேலும் விரிவு படாமல் அதற்குள்ளாகவே தாங்கள் பார்த்து விட்ட நாலு வரிகளுக்குள்ளாகவே இருந்து விடக் கோருவதும் , முன் தீர்மானங்களின் வழி வாசிக்கக் சொல்வதையும் சொல்லாமல் சொல்லிச் செல்கின்ற கவிதை வரிகள் இவை. கவிதை புரிதலுக்கானது அல்ல உணர்தலுக்கானது . இதோ இன்னுமொரு கவிதை உங்கள் உணர்தலுக்காக
பொருட்காட்சி விட்டு வந்து வெகுநேரம் ஆகியிருந்தும் தலைக்குள் ஓடிக் கொண்டுள்ளது
பொம்மை ரயில் ஒன்று சிரிக்கும் புத்தர் பொம்மை கூடவும் கான்டீன் மிளகாய் பஜ்ஜியும் கொதிக்கிறது மனதில் கரித்து விடாமல் பிரியமானவர்களுடன் எடை பார்த்து துப்பும் காகிதச் சீட்டு ஒன்றையும் மல்லிகைச் சரத்தையும் எறிய சாக்கடையில் மிதக்கிறது நிலா என் கைப்பைக்குள் அவிழ்ந்த ரிப்பனாய் சுருண்டபடி நான் என் பொருட்காட்சி விட்டு நடந்து
கடைசி ஐந்து வரிகளில் கவிதை எப்பவும் நாம் பேசுகின்ற பொருட்காட்சியிலிருந்து வேறு இடத்திற்கு நகட்டிக் கொண்டு போய் விடுகின்றது. பொருட்காட்சிக்கு முன் “ என் “ என கவிஞர் சேர்க்கின்ற வார்த்தை பொருட்காட்சி என்கின்ற வார்த்தையை வாழ்வாக வாசிக்க வைத்து விடுகின்றது.
பெண்கள் சார்ந்த விசயங்கள் தான் என்றில்லாது , சமூகம் பெண்களூடாக எங்கெல்லாம் பயணிக்கிறதோ எங்கெல்லாம் அவளைப் பெண்ணாக நிறுத்தி விட முனைகிறதோ, இப்படி எல்லா தளமிருந்தும் பெண்களின் குரல் வரத் துவங்கி விட்டது தட்டையான வாசிப்பை உணருதலை புறம் தள்ளி
தாயுள்ளத்தைத் தவிர வேறெந்த உள்ளமும் ஆண் உடலுக்குள்ளிருந்தாலும் பெண் உடலுக்குள்ளிருந்தாலும் ஆணின் சுயநல உள்ளமே எப்பவும் எனக்கு இது பிடிக்கும் எனது நினைப்பு இது எனது ஏக்கம் எனது வலி இப்படியே சொல்லிக் கொண்டிருக்கின்ற சுயநல உள்ளமே ஆண்களுக்கும் ஆண் மனதுகளுக்கும் வாய்க்கிறது பெண்களிலும் நிறைய ஆண் உள்ளங்கள் இருக்கவே செய்கின்றன அவை சுயம் பேசுவதன் மூலமும் தன் வழியாகவே தன் நிறத்தின் சாயலாகவே எதையும் பார்க்க வல்லவை. ஆனால் தாயுள்ளம்தான் உண்மையில் பெண் மனம் அதுவே கவிஞனின் மனமும் கூட அதனாலேயே தன்னைப் பெண்ணாகப் பாவித்து எழுதிய ஆண்கவிஞர்கள் நம்மிடையே நிறைந்து இருந்தார்கள். அப்பெண் மனமே தனக்கு ஏதொன்று கிடைத்திருந்தால் நல்லாயிருக்குமே என்று நினைக்கும் போதே அதே போல் ஒன்றைத் தன் எதிராளிக்குத் தந்து விடத் தயாராகி விடும். அப்படிப்பட்ட கவி மனம் கவிதையை வாழ்வாக நம்புபவர்களிடமிருந்து நமக்கு நம் வாழ்வின் அடுத்த நகர்தலுக்கான அச்சாணியாய் மாற்றி விடும் அதிசய சொற்களாய் ஆகி விடுகின்றது
கவிதையை தங்கள் இருப்பாக்குபவர்களின் இடமிருந்து வாசகன் கவனமாய் இருத்தல் அவசியம். நிஜம் போல பொய்யும் வலி போல தங்களையும் எப்பவும் கவிதை வாயிலாக முன்னிறுத்திக் கொள்பவர்கள்.இவர்கள் கவிதைகள் அவநம்பிக்கையையும். இதுவரை பேசப் படாத துணிச்சல்களாக பொய்மைகளையும் மாற்றி முன் வைத்து விட்டுப் போகின்றது. இக்குரல்கள் ஊடகங்களினால் பிரபலப் படுத்தப் படுகின்றன. அப்படி சில பெண் கவிஞர்கள் இதுவரை ஆண் எழுதிய எங்கள் உடலை நாங்களே எழுதினால் என்ன என எழுதிக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக பெண் உடல் சார்ந்த வளாக சித்தரிக்கப் பட்டதாலேயே அவள் உடமைப் பொருளாயும், வணிகப் பொருளாயும் மாறிப் போனாள் இந்த உலகமய மாக்களில். அதிலிருந்து மீள பெண் தான் உடல் மட்டுமல்ல . இச்சமூகம் சிதைப்பது அவள் உடலை மட்டுமல்ல அவள் உணர்வுகளையும் தான் எனவும், அவள் அறிவும் ஆற்றலுமானவள் அவள் பார்வைகள் நாலு அறைகளுக்குள்லானது மட்டுமல்ல நாலு அறைகளுக்குள்ளாகவும் அவள் பெற்ற அனுபவம் இந்த உலகத்துக்குமானது என்பதை நிரூபிக்க வேண்டும். ஒரு கவிதை உண்மையான வாழ்வின் துயரத்தை சரியான பொதுமையில் பேசுமாயின் அக்கவிதை அவளுக்கானதாக மட்டுமல்லாது வாசிப்பவருடைய அனுபவமாக மாறி விடக் கூடும் உதாரணமாக எனது ஒரு கவிதை
நேசிக்கின்ற படியால் கொலை செய்யப் படுகின்றேன் உனக்கு வலிக்குமென்றுதான் உண்மைகளைப் புதைக்கின்றேன் புதைபடுகின்ற வலியோடு கூடு தேடி அலையும் எந்தன் உடலும்
சொல்ல முடியா உண்மைகள் சூழ்ந்து விட தூரப் போகின்றேன் நெருக்கடி தாங்காது பார்க்கின்ற தூரத்தில் இருந்தும் உணர முடியா தூரத்தில் நீ சொல்லிப் போகின்றாய் பெண் புதிரானவளென்று
இக்கவிதை வாசிக்க நேர்ந்த ஒரு அமைதிப் படையில் வேலை செய்த காவல் அதிகாரி இக்கவிதை இலங்கைப் பிரச்சனையை பேசுகிறது என்கின்றார். ஆதிக்கத்துக் கெதிராக ஒரு பெண்ணாயிருந்து எழுதப் பட்ட கவிதை , ஆதிக்க அரசாங்கத்துக்கெதிரான ஒரு இன விடுதலைக்கானதாய் வாசிக்கவும் முடியுமென்பதற்கு அச்சம்பவம் ஒரு சாட்சி
ஆனால் கவிதையை தன் இருப்பாக்குபவர்கள் தன்னையையே எழுதத் தொடங்கி , தன்னின் நிஜத்தையும் எழுதாது மேலெலும்பாது தான் மட்டுமாகவே சுருங்கிப் போவது நிராகரிக்க வேண்டியது
இன்றைய வாழ்வுதான் உனது எனதுமான நிஜம் ஆனால் ஆண் கட்டமைத்த இச்சமூகத்தில் பொய்யைத் தான் நிஜமென வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை எடுத்துச் சொல்ல பெண் குரல்கள் பழைய மற்றும் மேற்கத்திய சாயங்கள் ஏறாத பெண் நிலை வாதமாக முன்னெடுக்கப் படவெண்டும் அப்படி முன்னெடுப்பவர்கள் பட்டியலில் வைகை செல்வி, இளம்பிறை , தமிழச்சி, நந்திதா, சக்தி ஜோதி இன்னும் பலரது கவிதைகள் புதிய புதிய தளங்களாக வந்த வண்ணம் இருக்கின்றன.அவற்றை வாசிப்பதுவும் வளர்த்தெடுப்பதுவும் வாசகனின் வேலை |
posted by mathibama.blogspot.com @ 2/25/2010 07:40:00 pm |
|
2 Comments: |
-
தமிழ்ப்பெண்கள் : பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை Center for Tamil Female Bloggers www.tamilpenkal.co.cc
-
ஆஹா! மிக அருமையான, சிந்தனையைத் தூண்டும் ஆக்கம். பகிர்வுக்கு நன்றி.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
தமிழ்ப்பெண்கள் : பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை Center for Tamil Female Bloggers www.tamilpenkal.co.cc