26.1.2011 அன்று ‘ மேகலை இலக்கிய கூடல்’ என்ற இலக்கிய அமைப்பு தேவநேயபாவாணர் சிற்றரங்கில் தொடங்கப்பட்டது. எந்த இஸங்களையும், அரசியலையும் சாராமல் எல்லா இஸங்களையும், அரசியலையும் பேசும் களமாகவும், இலக்கியம் பேசுவது, விவாதிப்பது, படைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் இவ்வமைப்பு செயல்பட உள்ளதாக அமைப்பாளர்கள் சார்பாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய இல. சைலபதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக கவிஞர் வைகைச்செல்வி வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மூத்தபத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான திரு.மாலன் தலைமையுரையாற்றினார்.வாழ்த்துரை வழங்கி பேராசிரியர் பாரதிபுத்திரன் சிறப்புரையாற்றினார். மாலன் பேசும்போது ‘புதிய சிந்தனைகளை இலக்கிய அமைப்புகள் உருவாக்கவேண்டும். எது நவீனம் என்பது குறித்த பிரக்ஞையோடு வாழ்க்கையைப் படித்து புத்தகம் எழுதுவதா? புத்தகம் படித்து புத்தகம் எழுதுவதா? என்பதையும் சிந்தித்து செயல்படவேண்டும். 10 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவை எப்படி எழுதப்பட்டிருக்கிறது, எப்படி எழுதியிருக்கலாம்? இப்படி எழுதியிருக்கலாமோ என்று இளைஞர்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் விவாதிக்கலாம்’ என்று கருத்து தெரிவித்தார்.
பாரதிபுத்திரன் பேசும்போது ‘ பல பிரச்சனைகளை பல படைப்புகள் முன்வைத்தாலும் இலக்கிய படைப்புகள் அனைத்திற்கும் மாபெரும் பிரச்சனையாக கருதப்படுவது உலகமயமாக்கல். இப்பொழுது உலகமயமானதால் பொது அடையாளத்தை ஏற்றுக்கொள்வதா? அல்லது நமது தனிபட்ட பண்பாட்டு அடையாளத்தை ஏற்றுக்கொள்வதா? இந்தச் சிந்தனையுடன் தான் படைப்புகளை அணுக வேண்டியிருக்கிறது.’ என்றார்.
இவர் உரையைத் தொடர்ந்து கவிஞர் திலகபாமாவின் ‘ கழுவேற்றப்பட்ட மீன்கள்’ நாவல் விவாத அரங்கு தொடங்கியது. விவாத அரங்கில் வேலம்மாள், அன்பாதவன், அம்ருதம் சூர்யா, உமாசக்தி, பா.ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலம்மாள் ‘ திலகபாமாவின் நாவல் ஜனரஞ்சகமான நாவல் அல்ல. இரண்டு மூன்று வாசிப்புகளுக்கு உட்படும் போது அக்கதையினூடாக பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. இந்தக் கதையில் மூலம் எந்தச் சமூகத்திலும் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பெண் சமமாகக் கருதப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. இந்தச் சமூகத்தோடு இணங்கி இருக்க முடியாமல் போகின்றபோது சிக்கல் ஏற்படுகின்றது. அதனால் மனப்பிறழ்வு உண்டாகின்றது. திலகபாமா நாவல் முழுவதும் பெண்ணுக்கான இருப்பை மனதிற்குள்ளாக பேசுவது போன்ற உரையாடல் வழி வைத்துள்ளார்.’ என்றார்.
இவரைத்தொடர்ந்து அன்பாதவன் பேசும் போது ‘ individual differs’ என்பது உளவியல் பற்றிய ஒற்றை வரி மந்திரம். தனிமனிதர்கள் ஒருவர் போல இன்னொருவர் இருப்பதில்லை பிறரிடமிருந்து மாறுபட காரணங்கள் பல உண்டு. மணவாழ்க்கையின் ஆதார குணங்களாக உளவியல் வல்லுனர் நம்பி குறிப்பிடுகின்றார். ஒருவரை மற்றொருவர் சரியாக புரிந்து கொள்ளுதல், நட்புரிமை,விட்டுக் கொடுக்கும் மனோபாவம், கருத்துப் பரிமாற்றம், தேவையான உணர்ச்சி வெளிப்பாடுகள், அளவான உடலுறவு ஆகிய காரணங்களின் ஊடே இக்கதை பயணிக்கிறது. நாவலில் பலவீனமாக நான் கருதுவது செறிவின்மை! இன்னும் கவனமுடன் edit செய்திருப்பின் கூறியது கூறலைத் தவிர்த்திருக்கலாம். ‘ காதுகள்’ என்ற உன்னதமான புதினம் படைத்த அமரர். எம்.வி. வெங்கட்ராம் அவர்களுக்குப் பின் உளவியல் பின்னணியில் சிறப்பான புதினத்தை படைத்திருக்கும் கவிஞர் திலகபாமாவை. தமிழ் வாசக உலகம் நீண்ட நாட்களுக்கு நினைவில் வைத்திருக்கும்.என்றார்.
அம்ருதம் சூர்யா, ‘ஒரு படைப்பை எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக் கொள்வது அந்தப் படைப்பாளனுக்குத் தரப்படும் மிகக் கொடுமையான கொலைத் தண்டனை என்பார் சார்த்தர். எல்லாவற்றிலும் தெரிந்த வற்றைத் தேடாதே, தெரியாதவற்றைத் தேடு என்று ஆதிமூலம் கூறுவார். அந்த வகையில் இந்நாலலில் தெரியாதவற்றைத் தேடும் முயற்சியை மேற்கொண்டேன். ஆண்களை பலமாகச் சாடும் போக்கு நாவல் முழுவதும் விரவி இருக்கிறது. முத்துலட்சுமி கணவனை ‘அது’ என்று சாடுவது, நாகலிங்கம் , பாண்டிகதை என எல்லாவற்றிலும் ஆணாதிக்க எதிர்ப்புக்குரலாக ஒலிக்கிறது. எல்லா இடங்களிலும் பாமாவின் ஆதிக்கம் விரவியிருக்கிறது. குழந்தைகள் பேசும்போது கூட மெட்சூராக பாமாவின் குரலிலேயே பேசுகின்றனர். மொழி மிகவும் கொடுமையானதாக இருக்கிறது.’ என்றார்.
உமாசக்தி, ‘கதைமுழுவதும் நேர்க்கோட்டில் பயணம் செய்கிறது. பாண்டி கதை சிறுகதைக்குரிய கருப்பொருளுடன் மையத்திலிருந்து தனியாக தெரிகிறது. நாவலின் மொழிநடை அழகியல் சார்ந்த மொழியாக உள்ளது. உளவியல் சிக்கலை புதிய மொழியில் திலகபாமாவின் நாவல் அமைந்துள்ளது.’ என்றார்
பா.ரவிக்குமார், ‘ நாவலை உட்செறித்துக் கொள்ள 2,3 முறை வாசிக்க வேண்டியது அவசியமாகின்றது. பெண்ணிய வாசிப்பு என்ற வட்டத்திற்குள் இதை சுருக்கிவிடவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். பன்முக வாசிப்பு இந்த நாவலுக்கு அவசியமாகின்றது. இந்த நாவல் மிகவும் முக்கியமானது என்பதில் மாற்றுகருத்து கிடையாது.’ என்றார்.
திலகபாமா ஏற்புரையின் போது, ‘இந்த நாவல் ஈகோ கிளாஷ் நாவலா என்று கேட்டால் இது ஈகோ கிளாஷ் நாவல் மட்டும் அல்ல, மன பிறழ்வு நோய் பற்றிய நாவலா என்று கேட்டால் மன பிறழ்வு நோய் பற்றி மட்டும் சொல்கின்ற நாவல் அல்ல, பாலியல் சிக்கலை பற்றி பேசகூடிய நாவலா என்று கேட்டால் பாலியல் சிக்கலை பற்றி மட்டும் பேசக்கூடிய நாவல் அல்ல . பெண்ணியம் குறித்தான நாவலா என்று கேட்டால் பெண்ணியம் மட்டும் பேசக் கூடிய நாவல் அல்ல. ஏனென்றால் இந்த நாவலில் பெண்மட்டும் சிக்கலுக்குள் இல்லை. குமாரும் சிக்கலுக்குள் இருக்கிறான். நாகலிங்க தாத்தாவும் சிக்கலுக்குள் இருக்கிறார். பெண்ணியம் மட்டும் திலகபாமா பேசிவிட்டு போகிறார் என்று சொன்னீர்கள் என்றால் உங்களுடைய ஏற்கெனவே இருக்க கூடிய பொது புத்தியில்தான் இருக்கிறீங்க என்பது அர்த்தம். இது எல்லாவற்றிர்க்கும் இடையில் நின்று கொண்டு ஆணும் பெண்ணும் சந்தோஷமாக இருக்கவேண்டியதை உணரவைக்க வேண்டியதற்கான நாவல். என்றார். இறுதியாக இராஜேஸ்வரியின் நன்றியுரை வழங்க விழா நிறைவுற்றது.
உங்கள் வளர்ச்சி மலைக்க வைக்கிறது பாமா!பட்டிவீரன்பட்டியின் பெயரை இன்னும் பெருமையோடு சொல்லிக் கொள்வோம்.