சூரியாள்

Monday, March 19, 2007
திராவிடக் கவிதைகளில் பெண்ணியம்
சுதந்திரப் போராட்டங்களின் பின் அரிய நாட்டை சுதந்திர பூமியாக என்றைக்கும் போல் தான் சுழன்ற புவி என்ற போதும் உதித்த சூரியனென்ற போதும் கைசேர்த்த பின்னரும் , தமிழ் நாட்டு இலக்கியங்களின் போக்குகளை அரசியல் வாழ்வியல் மாற்றங்கள் தீர்மானித்தன

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்றும் கொள்வாரோ
என்று பாடிப் பறக்க முடியாது சிறை பட்டும் துயர் பட்டும் வாழ்ந்த இலக்கிய கூட்டம் அடுத்த பாடுபொருளை தேடிய மௌனம் இருந்த போதும், பின்பு வந்த அரசியல் மாற்றங்கள் அது திணித்த வாழ்வியல் மாற்றங்கள் சமூகப் பார்வையாளனாக விமரிசகனாக இருந்த உண்மையான ஒவ்வொரு பிரஜைக்குள்ளிருந்தும் மொழியின் ஊற்றில் உணர்வுகள் கொப்பளித்து விழத் துவங்கின.

இந்தியாவின் பல்வெறு பகுதிகளும் , மொழி வாழ்வு கலாசாரம் பண்பாடு என பிளவு பட்டும் கிடந்த போதும் பட்ட துன்பம் சொல்லி அரசியலமைப்புக்குள் சேர்த்தாச்சு
ஒரு அதிகார மையம் அமைக்கப் பட்டது அது தேவையானதும் கூட ஆனால் நகருகின்ற காலங்களில் எவ்வளவுக்கெவ்வளவு மையம் ஸ்திரமாக இருக்க வேண்டுமோ அவ்வளக்கவ்வளவு மாற்றங்களை உள் வாங்கும் இலகு தன்மையுடைதும் இருத்தல் அவசியம்

வந்து போன ஆங்கிலேயனால் பல்வேறு புதிய அனுபவங்கள் வாய்க்கப் பெற்ற அடித்தட்டு வர்க்கமும், தன்னை விழிப்பில் வைத்துக் கொள்ள முயல சுய மரியாதைச் சிந்தனைகள் தோற்றம் பெறுகின்றன.
மையத்திலிருந்து தூரத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதனிடமிருந்து நிராகரிக்கப் பட்ட அழுத்தத்திலிருந்து ஒரு எண்ணம் சிந்தனை இயக்கம் , கலை எல்லாமே உருவாகும், அது மெல்ல மெல்ல ஒரு ஒழுங்குக்குள் தன்னை கொண்டு வரப் பார்க்கும். அதன் பொருட்டாக அந்த சமூகத்தின் கட்டமைப்புகளை அவை உள்வாங்கும்,கட்டமைப்புகளை உள்வாங்கியதாலேயே அது அரசியலாக்கப் படும். அப்படி செவ்வியல் தன்மையை அடைகின்ற போது அது சிலரிடம் அகப் பட்டு அழிவைத் தேடப் பார்க்கும். காலம் மீண்டும் அதை அவ்விசயம் மனிதருக்கானதாய் இருக்கின்ற போது வென்றெடுக்கும் . இது கால சுழற்சி யாராலும் மறுக்கவோ நிரகரிக்கவோ முடியாது.
சுய மரியாதை சிந்தனை மெல்ல அரசியலாகி, அரசியலில் கைகள் திராவிட வர்ணம் பூசப் பட்டு இலக்கியத்தின் முகத்திலும் அந்த வர்ணம் பிரதி பலித்தன அந்த கால கட்ட இலக்கிய வாதிகளாக அதிலும் கவிஞர்களாக என்னுடைய பட்டியலில் நீலாம்பல் அம்மையார், ராமாமிர்தம் அம்மையார், சத்யவாணி முத்து, தெரியாத பெயர்களாக சொல்லப் படுகின்றதா? ஆம் பெண்களின் வெற்றிகள் பேசப் படாத பொருளாக போயிருப்பதிலிருந்தே அன்றைய பெண்ணிய புரிதல் இல்லையென்பது உணர்த்தப் பட்டு விடும் ஆனால் இன்றும் கூட அதுவேதான் பெண்களின் நிலை , பாரதி தாசன் வாணி தாசன் புலமைப் பித்தன் முடியரசன் சுரதா என்பவர்கள் வந்து சேர்கின்றார்கள்
தாயாண்மை சமுதாயம் அழிவுக்கு வந்த காலம் தொட்டு , நில வுடமைச் சமுதாயம் தொடங்கியது முதல் பெண்ணுக்கு எதிரான, உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான அவர்களை எப்பவும் அடிமை இடத்திலேயே வைத்திருப்பதற்கான சாணக்கியத்தனங்கள் ஆதிக்க மனோபாவங்களினால் மெல்ல மெல்ல கட்டமைக்கப் பட்டு அதற்குள்ளேயே வேர் விட்டு வேர் விட்டு சமுதாயம் கலாசாரம் பண்பாடு அரசியல் விழுமியங்கள் ஒழுக்க நிலைகள் எல்லாம் கட்டப் பட்டு விட்டன அதிலும் குறிப்பாக பெண்ணினம் காப்பாற்றப் படும் பொருட்டும் கவனிக்கப் படும் பொருட்டுமே அடிமைத் தனத்தை விரும்பி ஏற்க வைக்கவும் அதை இயல்பாக மாற்ற பழக்கப் படுத்தப் பட்டும் அதை உணர்ந்து கொள்ளவே முடியாத படிக்கு சுகமான இருப்பாகவும் கட்டமைக்கப் பட்டு விட்டன . மாறாக சிந்தனைகள் எழும்போதெல்லாம் அதன் எதிர் துருவம் இன்னும் கொடூரமானதாகவும் இருப்பதால் பழகிய கொடுமையே போதுமென தீர்மானிக்க பழக்கப் படுத்தப் பட்டு விட்டது . எல்லாம் செயப் பாட்டு வினைகளே அன்றி செய்வினை ஒன்றுமில்லாது போனது துரதிர்ஷ்டம் தான். பலர் நினைக்கின்றார்கள் கட்டமைப்புக்கு எதிரானது மாறானது கட்டுடைப்பு என்று . அது புலிக்கு பயந்து முதலைக் கிணற்றில் குதித்த கதையாகிப் போகும்.

மாறாக தன் இயல்பை உணரச் செய்வதும் , ஏற்கனவே எழுதப் பட்டிருப்பவைகளில் தேவைப் படும் போது நிகழ் வாசிப்பு செய்வதன் மூலம் நம் நகர்தலின் வேகத்தை கணக்கிட்டு கொண்டு தேவைக்கு ஏற்ப அதை உயர்த்த ஆவன செய்வதும் இன்றைய பெண்ணியமாக இருக்கின்றது
அந்த வகையில் இதுவரை வாசித்த திராவிட கவிஞர்கள் சிலரது எழுத்துக்களை நிகழ் வாசிப்பில் உங்கள் முன் வைக்க இருக்கின்றேன்.
திராவிட கவிஞர்களில் சொல்லப் பட்ட எந்த பெண் படைப்பாளியின் படைப்பும் வாசிக்க கிடைக்கவில்லை.


திராவிட கவிஞர்களின் பிரஞ்கை பூர்வமான சிந்தனையும் எண்ணமும் மனித நேயமும் , தமிழ் மொழி வளர்ச்சியும் மட்டுமாகவே இருக்க, அதற்கு மனித நேயத்திற்கு உள்ளான இடைப் பிரிவுகளாகத்தான் பெண் பற்றிய கவனிப்பும் சாதிய ஒடுக்கு முறைக்கெதிரான குரலும் இருந்து வந்திருந்தது.
இரு விதமானபார்வையை வாசிப்பினூடாக நிகழ்த்த வேண்டியிருக்கின்றது
ஒன்று பெண்ணைப் பேசும் படைப்புகள்
இரண்டு பெண் உணர்வுகளைப் பேசும் படைப்புகள்

சங்க கால இலக்கியம் தொட்டு இன்று வரை கவிதைகளில் பெண்ணை பாடு பொருளாக்கி பாடியவர்கள் மிகக் குறைவு பாரதி நிவேதிதா தேவியை பற்றி பாடியிருக்கின்றார். பெண்ணைச் சித்தரிக்க தயாராயிருக்கும் கவிதா உலகு பாடு பொருளாக்கி பாடவே இல்லை என்றே சொல்லலாம்.சுரதா சீதக் காதி முதல் பாரதி தாசன் வரை புகழ்ந்து கவிதை புனைந்திருப்பர், சீதக் காதி , உமறுப் புலவர் வேத நாயகம் பிள்ளை உ.வே.சாமிநாத ஐயர் பாண்டித் துரை தேவர் ஞானியார் அட்கள் மறை மலை அடிகள் பாரதியார் திரு. வி. க பாரதி தாசன் என நீள பட்டியல் வரிசை இடம் பெறும் கால கட்டத்தில் ஒரு பெண் கூட உங்கள் பார்வையில் சொல்லத் தகுந்தவளாக அமையவில்லையா?பேண்ணின் வெற்றிகள் வெற்றிகளாக ஆண்களால் உணரப் படவில்லையா?


பெண் உணர்வை பேசுகின்ற விதமாக அமைக்கப் பட்ட சுரதாவின் “மணக்க மாட்டேன்” எனும் கவிதையின் வரிகளும் , அவரது எண்ணங்களான பகுத்தறிவு தாய் மொழிப் பற்று இவற்றையே பெண் கூற்றாக திணித்துப் போவது அல்லாது வேறு பேசவில்லை.
தாய் மொழிப் பற்றில்லானை
தையல் நான் மணக்க மாட்டேன்

திருக்குறள் கல்லாதானை
திருமணம் செய்து கொள்ளேன்

-----பிறந்த நாட்டைக்
கண்ணே போற் சிறந்ததாகக்
கருதாதான் ஈக்கள் மொய்த்த
புண்ணே போல் இழிந்தோன் அந்தப்
புல்லனை மணக்க மாட்டேன்.

புதுமை புரட்சி என்று கூத்திட்ட போதும் காலம் காலமாக சொல்லப் பட்டு வந்த ஆண் வலிமை , பெண் அழகு நளினம் என்றும் பிரித்தல் விட்டு மாறவில்லை
குன்றனென்றும், காடனென்றும் மருதனென்றும்
குமணனென்றும் பெயரிடலாம் ஆண்கட்கெல்லாம்

அன்னமென்றும் அன்றிலென்றும் அல்லிஎன்றும்
அருவியென்றும் பெயரிடலாம் பெண்டிர்க்கெல்லாம்

சுரதாவின் அகல்யை குறித்த பார்வை பெண்மன உணர்வை நிராகரிப்பதுமாயும் , உடைமைப் பொருளாக பார்ப்பதுவுமாகத்தான் இருக்கின்றது.
குற்றம் புரிந்த மற்றொரு மங்கையோ?
கௌதம முனிவரின்கட்டில் மனைவியாம்

கட்டில் மனைவி என்பதுவும், மங்கை செய்தது குற்றம் என்றால் குற்ரத்திற்கு உடனிருந்த ஆடவன் பார்வையிலிருந்து மறைக்கப் படுவது பெண்ணுக்கு எதிரான சிந்தனை
பாரதி தாசன்

பாரதி தாசன் காலம் பெண்ணுக்கு படிப்பெதற்கு என நம்பியிருந்த சமூகத்தை கடக்க வைக்க சமூகச் சிந்தனையுள்ளவர்கள் போராடிய காலம் பெண் வீட்டை காடு கழனி வேலை தவிர வேறெதுவும் அதிகம் கையிலெடுக்காத தருணம் குடும்பப் பராமரிப்பு மட்டுமே பெண்ணுக்காக சொல்லப் பட்டிருந்த கால கட்டத்தில் பெண் படிப்பு பற்றி சொல்ல வேண்டியதன் நிர்பந்தமே இருண்ட வீடும் குடும்ப விளக்கும் ஆகும் .
பெண்களை எப்பவும் அழகியல் சார்ந்த ஒரு விடயமாகவும் ஆண் வாழ்வதற்கான மகிழ்ச்சி தரக் கூடியவளாகவும் சித்தரிக்கப் பட்டிருந்த காலகட்டத்தில் பாரதி தாசன் குடும்ப விளக்கு அன்றைய வழக்கிற்கு மாற்றாக பெண்ணை கவிதையின் பாடுபொருளாக்கி இருப்பதே முக்கிய விசயமாகும்.
பாரதி தாசன் முன்னுரையிலேயே சொல்லி விடுகின்றார்.” வருவாய் கூடத் துவங்கியதும் பெரு வாழ்வுக்கு பெண்கள் பழக்கப் பட்டு விடுகின்றனர் என்று.

பெண்கள் மட்டும் தானா? பதில் யார் சொல்வது . தன் வேலையைதானே செய்து கொள்ளும் காந்தீய தத்துவத்தை போதிக்கும் போதும் அதே தத்துவம் ஆணுக்கும் பொருந்துமல்லவா? அப்படியானால் அன்றாட உணவுக்கு வேண்டியதை தானே சமைத்துக் கொள்வது இயல்பாக உணர்த்தப் பட்டிருக்கிறதா? ஆனால் அது எப்பவும் பேசப் படாத உணமையாகவே இருளுக்குள் இருந்து விடுகின்றது ஒரு பெண் நாளெல்லாம் அவளுக்காக என்றில்லாது எப்பவும் உடனிருக்கின்ற எல்லோருக்காகவும் உழைக்கின்றவர்களாக அடிமைத் தனத்தை சந்தோசமாக ஏற்கின்றவளாக வடிவமைக்கப் படுகின்றாள். அதே நேர அவரது அக்கவிதை படிக்கும் போது மகிழ்ச்சி தருகின்ற இரு விடயம்
அவரே அறியாது பெண் இத்தனை வேலைகள் செய்பவளா என “சும்மாயிருப்பதாய்” இன்றைக்கும் சொல்லிக் கொள்ளும் பெண்கள் கூட நினைத்துப் பார்த்திடாத ஒன்றாக , பட்டியலிடுகின்றார்.பெண்களே இதுவரை உலகுக்கு காண்பிக்கத் தவறிய பக்கமது.இன்றும் கூட பத்திர பதிவுகளில் வேலைக்கு சென்று பொருள் ஈட்டாத மனைவிகளை “ சுக ஜீவனம்” என்றே சொல்லிப் போகின்றார்கள் பணமோ பொருளோ புகழோ அல்லாது வேலை செய்பவளாக இருந்தும் சுக ஜீவனம் செய்பவளாகவே இந்த சமூகத்தால் உணரப் படுகின்றாள்.இன்றைய புள்ளி விபரங்கள் பெண் ஒரு நாலைக்கு 95 வேலைகள் செய்கின்றாள் என சொல்கின்றது . அதை அன்றே கவிதையில் சொல்லியிருக்கின்றார் பாரதி தாசன்
இன்னொன்று அதே நேரம் அப்பெண் சோறாக்குவது பணி விடை என்று மட்டுமல்லாது நிர்வகத் திறமையோடும் தனித்து செயல்படும் திறம் இருப்பதையும் அவரே அறியாமல் சொல்லிச் சென்றிருப்பார்.
கணவருடைய கடைக்குப் போய் பழைய கடன் தீர்த்து புதிய கடன் தந்து அவளே முடிவெடுக்கக் கூடியவளாகவும், பிள்லைகளை தனியே கடற்கரைக்கு( 54ம் ஆண்டுகளில் அது சாதாரான விடயம் அல்ல)கூட்டிச் செல்பவளாகவும் கவிதை பேசுவது அன்றைய கால கட்டத்தில் புரட்சியான விடயமே.

அதோடு வழமையான பெண்வீட்டுச் சீர் வழக்கம் மாற்றி ஆணின் தாயும் தந்தையும் சீராக என்றில்லாது பார்க்க வரும் போது அன்பின் பொருட்டு வண்டி நிறைய பொருட்களும் பண்டங்களும் கொண்டு வருவதை சொல்லிச் செல்வது இன்றைக்கும் புரட்சிதான்
வண்டி விட்டிறங்கி வந்த
மாமியும் மாமனும்கற்
கண்டொத்த பதிலும்கூறிக்
கொண்டு வந்திட்ட பண்டம்
குறையாமல் இறக்கச் சொன்னார்

குடும்ப விளக்கு தவிர தனிக் கவிதைகளில் அவாது ஒட்டு மொத்த பார்வையில் ஒரு தனித்த வித்தியாசம் உண்டு சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலும் சேசு மொழிந்த தெள்ளமுது எனும் கவிதையிலும் அறியாமல் கேள்வி கேட்பவன் ஆணாகவும் அனுபவத்தால் உணர்ந்து அரசியல் , பகுத்தறிவோடு பதில் சொல்பவள் பெண்ணாகவும் இதுவரை இல்லாத வழக்கம் மாற்றி வடிவமைத்திருப்பார்

வாணிதாசன்
கன்னியின் கனவு எனும் கவிதையில் பெண் மன உணர்வுகளாக கவிதையின் இறுதி வரிகளில்
பெண்கள் மண வாழ்வின் உரிமை
பெற்றிட நான் முனைவேன்
கண்கள் எனக்குண்டு-விரும்பும்
காதலன் நானடைவேன்
என்று கூறிச் சென்றாலும், அவர் கேட்பார், நான் நாணுவேன் எனும் வழமையான ஆண் வழிச் சிந்தனையில் தான் எல்லா கவிதைகளும் இருக்கின்றன.பகுத்தறிவு விளக்கத்திற்கும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக குரல் கொடுக்கவும் பெண்ணும் பெண் காதலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது
எட்டிப் பழமோ பறைச்சி இதழ்”


மாமியார் செய்ததைப் போல்
மருமகள் செய்வாள் என்றிப்
பூமியில் பெண்கள் சொல்லும்
கொள்கையில் புரட்சி காண்போம்

தாய் எனும் கவிதையில்
தாயினை இகழ்வார் மாற்றாந்
தாய் வர உணருவாரே

இரண்டு இடங்களிலும் பெண்களுக்கு எதிராய்பெண்களையே கிளப்பி விடும் போக்கு இருக்கின்றது. பெண்ணே பெண்னுக்கு எதிரி
மாமியார் செய்ததையே மருமகள் செய்ய ஒப்ப மாட்டாள். அப்படி ஒப்பினாள் என்பதையே பெண்களே சொல்லக் கூடிய புரட்சி வரக் காண்போம் என்கிறார்.
தாயின் பெருமை தகப்பன் இன்னொரு திருமணத்தில் தன் வாழ்க்கை தொடங்க உணருவாரே என்று சொல்லியிருக்கலாமே
அப்துல் ரக்மான்

பெண் எனும் கவிதையில் அப்துல் ரக்மானின் பார்வையைப்பாருங்கள்.
பெண்ணை
வெறுக்காமல் இருக்கவே
விலகிச் செல்கின்றேன்
பெண்
தூரத்தில் தான்
அழகாயிருக்கிறாள்

ஏன் அழகாக இருப்பதை மட்டுமே பார்க்க விரும்புகிறீர்கள். அன்பை எதிர் நோக்கியிருந்தால் அவளில்லாதபொழுதினும் உணரலாம்


அவள் தாயாகிப்
பரிபாலிக்கிறாள்
தாரமாகி
நிக்கிரகம் செய்கிறாள்

அவளாக இருக்க விட்டுப் பாருங்கள் அன்பாக இருப்பாள், அறிவாக , ஆண்மையாக மிளிருவாள்

நம்மை
வசீகரித்து
நம் சிறகுகளை எரிக்கும்
விளக்கு அவள்

நீங்கள் பூச்சிகளாக இருந்தாள் உங்கள் சிறகுகள் எரிக்கப் படும். பார்வையாக மாறிப் பாருங்கள் காட்சியாகுவாள்

நம்மை
இரையாகப் பிடித்துண்ன
இருட்டு மூலைகலில்
அவள்
வலை பின்னுகின்றாள்

இருட்டிலும் , மூலையிலும் வைத்திருந்தால் வலையும் பின்னுவாள் இரையாக்கவும் செய்வாள்

நம்மை விழுங்குவதும்
உமிழ்வதுமாக
அவள் சலைக்காமல் விளையாடுகிறாள்

அவளை தின்று விட மாட்டீர் என நம்பிக்கை இருந்தால், விளையாட்டை விட்டு விடுவாள்.


முடியரசன்
ஊரார் எனும் கவிதையில் கலப்பு மணம் செய்வதால் வருகின்ற தொல்லை பற்றி பேசும் போது
பெண் உடல் நோயால் நலிவுற ஊர் புறணி பேசுகின்றது.எப்பவும் ஊர் ஏன் புறணியில் சுட்டு விரல் நீட்டுவது பெண் பக்கமாக இருக்கின்றது. ஊர்ப் பெண்கள் போய் மாமியிடமும், மருமகளிடமும் புறணி பேசுவதாய் அமைவது ஆண்டாண்டு காலமாய் உள்ள கிரமத்து ஆணாதிக்க சிந்தனை மரபில் வந்த பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்பதை சொல்லிப் போகின்றது.
நாட்டு விடுதலைக்காக போராடிய போதும், சாதிய விடுதலை, அறியாமை விடுதலை இப்படி எத்தனை விடுதலை பற்றி பேசிய போதும் பொராடிப் பெற்ற போதும் அதோடு சேர்த்து பெண் விடுதலையும் பேசி விட முடியாத ஒன்றாகவே இருக்கின்றது

திராவிடக் கவிஞரில் கருணாநிதி எழுதிய தனிப்பாடல்களை வாசிக்க எண்ணி திராவிடக் கட்சிக் காரரை அணுக அவரோ , கலைஞரை விமரிசனம் செய்ய வேண்டாம் என்று புத்தகங்கள் தர மறுத்தார்.சங்கத் தமிழும், தாய் கவிதையும் உள்ளடக்கம் அவரது இல்லை என்பதால் பெண்ணிய வாசிப்புக்குள் அதை கொண்டு வர விருப்பமில்லை மற்ற கவிஞர்களின் புத்தகம் இந்த கட்டுரையாக்கத்திற்கு வாசிக்க தந்த அவருக்கு எனது நன்றிகள்

இன்றைய கனிமொழி திராவிடக் கவிஞர்கள் வரிசையில் உண்டா என்றால், திராவிட அரசியலில் இதுவரை பங்கில் இல்லாத கனிமொழி இன்று வந்து விட்ட பிறகு அவர்களது பெண்னியம் என்னவாக இருக்கின்றது. தேர்தலுக்கு முந்தைய எத்திராஜ் கல்லூரியில் இதே நிறுவனத்தார் நடத்திய கருத்தரங்கில் கண்ணகி எங்களது பண்பாட்டுச் சின்னம் அல்ல என்று வாதிட்டார்.
தேர்தலுக்கு பின் மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசியதாக தினமனி வெளியிட்ட செய்தியில் கண்ணகி பெண்களுக்காக போராடவில்லை. ஆனால் போராளி என்றார்.

கட்டுடைப்பு பெண்ணியம் என்று பேசியவர்கள் எதிர்த்தவர்களை கலாசார காவலர்கள் என்று குற்றம் சாட்டியவர்கள் இன்று கலாசாரம் காப்போம் என்கின்றார்கள். ஆகவே பாரதியின் உணர்வு தாங்கியிருந்த பாரதி தாசன் ,
(அவரிடமும் மாறுபட்ட கருத்து இருந்திருந்த போதும்), தவிர திராவிட கவிஞர்களிடம், திராவிட அரசியல் இருக்கின்றது பெண்ணியம் எங்கே எனும் கேள்வி எஞ்சி நிற்கின்றது
தேர்தல் நேரத்தில் சிவகாசியில் துணிவோடு செயல் பட்ட பூஜா குல்கர்னியை நமக்குத் தெரிந்திருக்காது. ஆனால் சிவகாசி ஜெயலட்சுமியை எல்லாருக்கும் தெரியும். மறக்க மறந்து விடுவோம்

இன்றைக்கு 1937 களில் இருந்த ப்ரெஞ்சு தேசத்தை சேர்ந்த ஹெலன் சீக்சூவை புதிய பெண்ணிய கோட்பாளராகவும் , அவரது கோட்பாடுகளை இன்றைய பெண்கவிஞர்கள் தத்து எடுத்து அதை படி எடுத்து கொண்டிருப்பதிலும் பெண்ணியம் எங்கே இருக்கின்றது எனும் கேள்வி எழும்புகின்றது
பாரதியின் விசாலாட்சியிலிருந்து, தர்மரின் பேச்சி வரை நம்மிடையே வாழுகின்ற மக்களிடமிருந்து பெண்ணியம் பிறந்து அது இலக்கிய உதாரணங்களாய் மாற வேண்டும் . அதற்கான தளங்களை நிகழ் வாசிப்புகள் நிகழ்த்தட்டும்
posted by Thilagabama m @ 3/19/2007 11:51:00 am  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates