சூரியாள்

Sunday, March 11, 2007
பெண் எழுத்து

திருச்சியில் பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் நடந்த சாகித்ய அகாதமி நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப் பட்ட கட்டுரை

பெண் எழுத்து
திலகபாமா

பெண் தன் எழுத்தை எந்தப் புள்ளியிலிருந்து துவங்குகின்றாள். விடிவெள்ளியிலிருந்து அது கிளம்புவதில்லை. இருளில் வெளிச்சப் பொறியைத் தூவி விதைக்கும் உரசல்களாக முளைக்கின்றன. சில உரசியே உடைந்து போகின்றன சில உரசல்களில் பற்றிக் கொள்கின்றன.பற்றிக் கொண்டவை தொடர்ந்து உயிர்த்திருக்க போராடிப் பார்க்கின்றன. அதன் பற்றிக் கொள்ளும் வேகமும் பயணப்படு திசையும் தலைமுறை தலைமுறைக்கும் போராட்டத்தை விட்டுச் செல்வதாகவே இருக்கின்றன
ஏன் பற்றிக் கொண்ட பொறி நிரந்தர சூரியனாய் ஒளிர முடியாது போகின்றது .ஒன்று நூற்றாண்டு நூற்றாண்டுகளாக ஊற வைக்கப் பட்ட மனித வாழ்வில் பெண் வாழ்வில் எது எரிதல் எது வெளிச்சம் என உணர்ந்து கொள்ள முடியா அளவுக்கு சிதைவுகள் உணர்வுகளில்
இரண்டு உடலைக் காரணமிட்டு பத்திரப் படுத்தப் பட்ட பெண் வாழ்வு எப்பவும் கவனங்கள் உடலோடவே நின்று போக உணர்வுச் சிதைவுகள் மறக்கடிக்கப் படுகின்றன. உண்மையில் உணர்வுச் சிதைவுகள்தான் உள்ளிருந்தே அரித்து பார்க்கப் படுகின்ற உடல் சிதைவுகளை காட்டிலும் வன் கொடுமைகளாக , சமூக பிரச்சனையாகவும் வெளியில் வேறொரு ரூபம் காட்டித் திரிவதாய் மாறிப் போகின்றன

விடுதலையாக உணர்த்தப் படுவதும் வாழ்வு வாசிக்கப் படுவதும் எப்பவும் ஆணாலேயும் ஆண் வழிச் சிந்தனையாலும், ஆணை நிராகரிப்பதாக சொல்லப் படும் போதும் அவனை மையப் படுத்தி விலகிச் செல்வதுமாய் இருக்க உணர்ந்து விட முடியா உண்மை உணர்வுகள் கரிகளாகவே உணர்த்தப் பட்டு பூமியின் அடித்தட்டுகளில் ஒளிராத வைரங்களாக புதைந்து கிடக்கின்றன

வாழ்வு மாறுகின்றது கல்வி கை வந்தது அன்றாடப் பணி அடுக்களை தாண்டி அலுவலகமாகின்றது. இதுவரை அம்மாவிடமிருந்து பழகிய வாழ்க்கை அப்படியே படி எடுக்க முடியாச் சூழலில் பெண் புதிதாய் தன்னைச் சந்திக்கிறாள், இதுவரை சமூகம் அறிமுகப் படுத்தியிராத அவளாக.

இதுவரை போயிருந்த பாதையென்றால் நடந்து நடந்து தேய்ந்த அடிச்சுவட்டில் தொடர்ந்திருப்பாள். புதிதாய் முள் வெட்டி காடுதிருத்தி பாதை தேடி புதிய கற்பனை இலக்குகள் புதிய அவளது இயல்புகளை வடிவமைக்க ஒப்பாரியாகவும் தாலாட்டாகவும் மட்டுமிருந்த உணர்விலக்கியம் வேறு பலவற்றையும் தன் கச்சாப் பொருளாக்குகின்றது

ஒருவருக்கிருந்த வாழ்வு மற்றவருக்கில்லை. பெண் வாழ்வும் கௌரவமும் அடுத்தவரிடம் பேசி விட முடியா அழுத்தம் இவற்றிலிருந்து பெண் எழுத்து கிளைக்கின்றது. அவை பெரும் பாலும் பாடு பொருளைத் தேடித் திரிவதில்லை. சிதைபட்ட அவளது உணர்விலிருந்தே வேர் கொள்கின்றது.
அவளது எழுத்தில் வார்த்தைகள் வாய்ஜாலாமிடுவதில்லை. அதன் வாய்மைகள் புதிய வார்த்தைகளாகிப் போகின்றன. அழகியலை வடிவமைப்பதில்லை . குழந்தையை நேசிக்கும் மனநிலையிலிருந்து யாருக்குமில்லாத புதிய அழகியல்கள் குழந்தை விளையாட்டாய் கையகப் படுத்துகிறாள்.
உண்மைகளை உணர்வுகளை நினைவு மனம் உள்வாங்கி தர்க்கித்துக் கொண்டதை விவாதித்ததை , தீர்வுகண்டதை தான் கண்ட தீர்வு அடுத்தவருக்குப் பொய்த்துப் போனதை மௌன மனத்தின் உரத்த ஒப்பாரிகளாய் தாலாட்டாய் பரணியாய் உணர்த்தி விடப் பார்க்கின்றன.அவளது எழுத்து இதற்கு முந்தைய வடிவாக்கங்களை முறைமைகளை கோட்பாடுகளை கையிலெடுப்பதில்லை உண்மையில் அதற்கு நேரமோ அவகாசமோ இருப்பதில்லை.
அது புதிய இயல்புகளை கட்டமைக்கப் பார்க்க அது இதுவரை பார்த்திராத ஒன்றாக இருப்பதாலேயே மிரண்டு போகின்ற எழுத்துலகம் அதை நிராகரிப்பதுமாய் இருக்கின்றது.
எந்த எதிர் துருவம் சென்றாலும் வெற்றியாய் உணர விடாப் பக்கமிருப்பதால் அவளுள்ளும் இயலாமையும் நம்பிக்கையின்மையும் கூடுதலாகவே இருக்கின்றன. இயலாமையை பேசுகின்ற படைப்புகள் இயற்கையியலுக்குள் தன்னை தள்ளி தானே அடுத்த அடி எடுக்க விடாது செய்து விடுகின்றனஅதைத் தாண்டி தட்டி காலடி எடுத்து வைப்பவர்கள் மிக அரிதே அப்படி அரிதாய் வந்தவர்கள் இளமை வேகத்தில் வேகமாய் வந்து வேகமாய் வாழ்வின் ஓட்டத்தில் ஆணின் வாழ்க்கை நிறம் தாங்கி தாண்டிப் போய் விடுகின்றார்கள் அடையாளமற்று
அடையாள மற்றுப் போகின்றவர்களை வெற்றியாக மட்டுமல்லாது கடந்து வந்த போராட்ட வலியின் , மறக்கப் பட்டு விட்ட வலியையும் பேசுவதும் பெண் எழுத்தாகும்

தன்னை உணர்த்த உரத்துச் சொல்லி தன் கலப்படமில்லா உலகத்தை பார்க்கத் தந்து ஆதிக்க மனோபாவனங்களற்று பொதுமைக்குள் வந்து விடப் பேசும் தன்னுலகம் பெண் எழுத்தாகும்

அப்படி சுயம்புவாய் எழும்பும் பெண் எழுத்துக்களை ஏற்கனவே உள்ள எழுத்துலகம் எப்படி பார்க்கின்றன
வலியை சொல்லும் உலகை புலம்பும் உலகமிது என சொல்லிப் போகின்றது
புதிதாய் படைக்கின்ற எழுத்துலகை தங்கள் கை பட்டியலுக்குள் இல்லாததால் செல்லாது என அறிவித்துப் போகின்றது.
உணர்வுச் சிதைவுகளை உணர்த்தி விடும் படைப்புகளையும் ஆதிக்க சிந்தனையிலிருந்து , நிஜ விடுதலையை நோக்கி நகர்த்தி விடும் படைப்புகளையும் சில நேரம் திட்டமிட்டு நிராகரித்தும் சிலநேரம் இதுவரை இல்லாத பார்வைகளை முன் வைப்பதால் புரிந்து கொள்ள இயலாமலும் , சொல்லப் பட்டதுவை அதுவாகவே வாசிக்காதும் தன் இயலாமையை மறைக்க குற்றஞ் சாட்டியும் போகின்றது.

இன்னும் சில நேரம் இன்றைய தகவலும் தொழில் நுட்பமும் வாசிக்கக் கிடைக்க கூடிய மேற்கத்திய ஐரோப்பிய பெண்ணியத்தை , இதுவரை இங்கு யாரும் சொல்லப் படாதது எனும் தளத்தில் முன் வைத்தும் அதே போல் மொட்டைப் புரிதலோடு படி எடுத்தும் கொண்டிருக்கின்றன.அவற்றை வாசிக்கும் போது அதன் சூழல் அதற்குப் பிண்ணிருந்த தேவை , இவையும் வாசிக்கப் பட்டிருக்கிறதா? அதை விவாதித்து அதை இந்த களத்திற்கு கொண்டு வந்திருக்கிறோமா?
உலக இலக்கியத்தை எழுத்தாக வாசிப்பது இருக்கட்டும், உள்ளூர் சனத்தின் உணர்வுகளை செத்துப் போகாத படைப்பாளிகளாய் படைத்து தந்திருக்கிறோமா?

கோட்படு ரீதியாக உண்டான வரைவிலக்கணத்துல் நாளைய வாழ்க்கை ஏன் இன்றைய வாழ்க்கை யாவது சிக்குமா? கோட்பாடுகளை அச்சாக்கி அதில் பிரதிமை செய்து தரும் எழுத்துக்கள் , தன்னோடவே இருக்கும் தமிழ் சமூகத்தின் மண் சார்ந்த உணருதல்களை உள் வாங்குவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறோமா?

இன்னுமொரு முக்கிய விடயம் கோட்பாடுகளை வாசித்து மொழி பெயர்த்து தருபவர்கள் அவர்களுக்கே நேர்மையாக அதன் நியாய அநியாயங்களையும், சாதக பாதகங்களையும் எங்கள் முன் வைக்கின்றதா?
பொதுவான போக்குகளையே வைக்கத் தவறுகின்ற இலக்கிய உலகு ஆணாதிக்க வாசிப்பிலேயே அவற்றை வாசித்து தருகின்றது.

பெண்ணை அவள் உடல் கடந்து அவளே வந்து விட முடியா தன்மையை நிறுவிப் போகச் செய்கின்றது
இன்றைய புதிய புதிய தேவைகளுக்கேற்ப உண்மைகளை பேசையில் தான் புதிய கருப் பொருட்கள் கவிதையின் பாடுபொருளாகியும் புதிய வடிவாக்கங்களும் பிறக்குமே அல்லாது புதிதாய் எதைப் பேச எனத் தேடித் திரிவது போலிகளின் உற்பத்திக்கும் செயப் படு பொருளாக எழுத்து மாறுவதற்கும் வழி வகுக்கும்.

ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலை நோக்கில் ரேகை சட்டத்திற்கெதிராக “ கட்டை விரலை வெட்டு” என்பதற்கும் பெண் ஒடுக்கப் படுதலுக்கெதிராக “ கர்ப்பப் பையை எடுத்துப் போடு” என்பதிலும் பெரும் வேறு பாடு இருக்கின்றது இரண்டாவதில் பெண்ணின் இயல்பான பெண்மையை காலியாக்கப் பட்டு விடுகின்றது விடுதலை வேண்டுமெனில் பெண் பெண்மையை இழக்கத்தான் வேண்டுமா?
பெண் விடுதலை கண்டிப்பாக எந்த நிபந்தனைகளுமின்றி அமைய வேண்டும்
இன்று மண் சார்ந்து பேசுகின்ற கோட்பாடுகள் கூட விடுதலை கிடைக்க கிடைக்க உதிர்ந்து விடும் என்பதுவே நிஜம் அந்த இழப்பை சந்திக்க கோட்பாடுகளை புதிய சிந்தனைகள் மூலம் வடிவமைப்பவர்களும் தயாராக வேண்டும்

பெண் வேண்டுவது பாலியல் சுதந்திரம் மட்டுமன்று பாலியல் தெரிவுக்கான சுதந்திரம், அதுவும் கூட பெண்ணின் ஒட்டு மொத்த விடுதலையில் நூறில் ஒரு பங்கு மட்டுமே
பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு உண்மையான எதிர்ப்பாக இல்லாமல் கட்டுப்பாடற்ற தனி மனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறிவிடும் அபாயமும் இருக்கின்றது

இன்றைய ஊடகங்களினால் பெரிதாக்கப் பட்டு விட்ட தோற்றம் தரும் பெண் எழுத்து.பாலியல் சுதந்திரம் எனும் மாய வலைக்குள் சிக்க வைக்கப் பட்டு ஒட்டு மொத்த விடுதலையை விட்டு வெறும் படுக்கையறைக்குள் முடக்கப் படும் முயற்சிகள் தானே அறியாமலும் அன்பின் பேராலும் தான் நிகழ்த்தப் படுக்கின்றன. அந்த நிகழ்த்தப் படுதல்களைத் தாண்டி உண்மையான உணருதல்களாய் எழுதப் படுகின்ற பெண் எழுத்து ஏற்கனவே நிறுவப் பட்டிருக்கிற அளவு கோள்களுக்குள் சிக்கவில்லை என்பதால் கவனிப்பாரற்று கிடக்கின்றன.

என்னைப் பொறுத்தவரை பெண் விடுதலை என்பது என் முன்னால் இருக்கும் சமூகமோ அல்லது ஆணோ நான் எதுவாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்ற போது நான் அதுவாக இல்லாது போதல் ஆகும்
இலக்கிய உலகில் நிறுவப் படாவிட்டாலும் எழுத்தும் சிந்தனையும் எழுதுகின்ற அப்பெண்ணின் தொடர் இயக்கத்தில் வெளிப்பட்டு சூழ இருந்தவர்களை மெல்ல மெல்ல நிறம் மாற்றிப் போகும் . அந்த நிற மாற்றுதலே உண்மையில் அதன் வெற்றி
அப்படியான எழுத்தில் பெண் மொழி மட்டுமல்ல, அப்படி பார்க்கப் புகுவது கூட ஆணாதிக்க சிந்தனையே அன்றி வேறல்ல அவளது குழநந்தைகளுக்கான பாடலில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே இருக்கின்றனர்.அவளது வாழ்வுக்கான பாடலில் விரிகின்ற உலகம் ஆணின் வெளியையும் அரசியல் பார்வைகளையும் நவீன யுகத்தில் கணிணி தொடுதல்களும், யுகாந்திர யுகாந்திர தொன்ம நுண்ணரசியிலை புதிதாய் சமைக்கின்ற காட்சிகளையும் உள்ளடக்கியதே. பெண் எழுதுவதாலேயே எப்பவும் பெண்ணிய எழுத்தென்று முத்திரை குத்தப் படுவதும் ஆபத்தானதே , அந்த ஆபத்தையும் கடந்து வாசிக்கும் போதும் வாசிக்கப் படும் போதும் தான் பெண் எழுத்து பிரபஞ்ச எழுத்தாக பார்க்கப் படும் அப்படி பார்க்கப்படும் அன்றைக்குத்தான் பெண் எழுத்து சரியாக பார்க்கப் பட்டும் எழுதப் பட்டும் இருக்கிறதென்பதைச் சொல்ல முடியும்

Labels:

posted by mathibama.blogspot.com @ 3/11/2007 06:58:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates