சூரியாள்

Sunday, December 18, 2011
நிசும்ப சூதினியும் , வேதாளமும் 1

(புதிய பார்வை இதழில் வெளி வந்த சிறுகதை

நிசும்பசூதினியும், வேதாளமும்-1
திலகபாமா

வாரணாசி அரண்மனையில்  அரிச்சந்திரனின் பட்டதரசியான சந்திர மதியின் பல்லாங்குழிகளோடு சோழியில் தோற்றும் வெற்றி விதைத்த அந்தரங்கத் தோழி நிசும்ப சூதினி சோழியோடு  மட்டும் தான் தோற்கப் பிறந்தவள் வாழ்வில் வாளெடுத்தாளோ கூரின் எதிர் நிற்க ஆளூமில்லை  நிழலுமில்லை. அரண்மனைப் புகாப் பொழுதில் அவள் வயலோடு  தினைப்புலம் காக்க சென்றிருந்த நேரம் புலத்தின் கடைசியில் நின்றிருந்த  முருங்கை சடைச்சடையாய் பச்சைப் பாம்புகளாய் காய்த்துக் கிடந்தது. பகலில் காய் பறித்து  வீட்டுக்கு எடுத்துச் சென்றவள் ஒரு நாள் காவல் சுற்றி வந்தாள் கையில் தடியோடு  தூக்கிச் செருகிய பாவாடை இருளைக் கூட்டி தன்னோடு வைத்துக் கொள்ள முடியாமல் தவிக்க முருங்கையில் நிலவின் ஒளியில் இருள் கோடுகளாய் தெரிந்த  காய்களுக்கு நடுவில் வெளி நிழல் தலைகீழாகத் தொங்கக் கண்டாள்.
“யார் நீ?”
பதில் சொல்வதற்கு  நிழல் அசைந்தது.
என்ன செய்கின்றாய்?
தன்னைக் கண்டு வாளிடைச் செருகிய  வீரர்களும் அஞ்ச, தான் கண்ணில் பட்டும் அசராது கேள்வி கேட்கும் பாவையைப் பார்த்து வியந்தது.
வியப்பு பதில் சொல்ல வைத்தது

“விக்கிரமாதித்தன் தூக்கிச் சுமந்த வேதாளம் நான்
அவனுக்கப்புறம் இன்னும் எனக்கான தோள் கிடைக்கவில்லை. என் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மூளையும் கிடைக்கவில்லை. எனை அதோ தூரத்தில் விளக்கெரிகிற காளி கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் “
சிரித்தாள் . அவள் சிரிப்பில் இருள் விழித்துப் பார்த்தது.நட்சத்திரங்கள் சில உதிர்த்தன. தினைப்புலம் ஓர் அடி உயர்ந்து நின்றது. .

தோளும் மூளையும் நீ முன்தீர்மானித்த இடத்தில்  கிடைக்காததால் இல்லை  என்று சொல்லிப் போகின்றாய். உன் கண்ணெதிரிலேயே நின்றாலும் உன் புத்தியின் முன் தீர்மானங்கள் அதை கண்டடைய விடப் போவதில்லை.
தொங்கிய வேதாளம் மெல்ல வந்து மௌனப்பாய்ச்சலாய் தாக்கிய வார்த்தைகளை அடையாளம் கண்டு  வழக்கமான அதன் நிலைமாறி தலைக்கீழாக நேராக நின்றது
“என்னை இறக்கி விட முடியுமா” கேள்வி கேட்டபடி   தரையில் நின்ற வேதாளம் கண்டு சிரித்தாள் நிசும்ப சூதினி.கேள்வியின் அபத்தம் இன்னும் உரைக்கவில்லை வேதாளத்திற்கு
விக்கிரமாதித்தன் உனை வலுவில் இறக்கினான் நானோ என் வார்த்தைகளிலாலேயே இறக்கியாச்சு
தூக்கித் திரிவது ஒன்றும் பிரச்சனையில்லை
காற்றில் அலையும் உடம்பு நேராகி தரை நோக்கி நின்றிருந்ததை அப்பொழுதுதான் வேதாளம் உணர்ந்தது. சுதாரித்து அடுத்த வளைத்தலுக்கு ஆயுத்தமானது
என் கேள்விகள்...........

கேட்கலாமே

சொல்லி முடிக்கு முன் பதில் வந்தது . என் பதில்கள் இதுவரை நீ சரியென்று நம்பிக் கொண்டிருந்ததைத் தூக்கிச் சாப்பிடும் . ஒத்துக் கொள்ள முடியுமா  உன் தராசுகளை மீறி புதிய மொழிதனை வாசிப்பாயா?
மீண்டும் அதிர்ந்தேன்  ஆனானப் பட்ட விக்கிரமாதித்தனுக்கே நான் சட்ட திட்டம் போட்டேன் இவள் எனக்கு போடுகிறாளே.
என் அதிர்வில் மெத்தென்ற அதிர்வாய் எனை இழுத்து தோள் சேர்த்தாள்.சுமந்து கொண்டு நடந்தாள்
ஆகட்டும் கேள்விகள்
கேள்விகளுக்காக சொல்லப் படத் துவங்குகின்றன கதைகள் பாத்திரங்கள் உணர்வையும் மொழியையும் பேசி விட்டு கேள்விகளின் பதில்களை விரும்பி  விதைத்து விட்டுப் போகின்றன.நிசும்ப சூதினியின்  செவி வழி கதைகள்  நம்மிடம் உலாவரப் போகின்றன. தோற்பதை வெற்றிகரமாகப் பழகிய  அவள் விரல்கள்  அதை அங்கீகரிக்காது  மயானக் கரையில் எரித்த சமூகம், எரியும் போது பிடுங்கித் தின்ற அவலம், தூக்கி எரியப் பட்ட தாலிகளை அளிக்கப் பட்ட வரங்களாய் சொல்லித் திரிய வேண்டிய நிர்பந்த கெட்டிக் காரத்தனம்........ போதும் போதும் நீளுகின்றது பட்டியல் உள்ளம் சுமந்த வருத்தமளவிற்கு

1,பொய் சொன்னதாகச் சொன்ன உண்மைகள்

ஒரு ஊரில் இலவக்குறிஞ்சி என்றொரு பெண்   இருந்தாள் . அவள் விழியின் தீட்சண்யம் அவள் அகம் தந்ததா? அகத்தின் ஒளி  விழியின் பார்வையைத் தீர்மனித்திருந்ததா?  பார்க்கும்  உள்ளங்கள் விவாதம் நடத்தும் விழியாள் இறுக்கிச் செறுகிய மேலாடை அவள் சரிப்படுத்தத் தேவையில்லாது அவள் அசைவுக்கெல்லாம் உயிர்த்திருந்து மறைத்ததாய் சொல்லிக் கொண்டிருந்தது.காலத்திடமிருந்து இதுவரை கற்றுக் கொள்ள வேண்டியதை  எல்லாம் அது   எடுத்து வைக்குமுன்னரே உறிஞ்சிக் கொள்ளும் சாமர்த்தியக் காரி. பெண் பிள்ளைகளுக்கே பொறாமையும் பயமும் தரும் வேலைக்காரி.உழைப்பு அவள் சிரிப்பைப் போல் இயல்பாக இருந்து கொண்டே இருந்தது.  ஆண்களை வாழ்வென நம்பும் பெண்கள் அவளக் கண்டால் தன் ஆணை ஒளித்து வைக்கத் தலைப் பட்டார்கள் அதே நேரம் அவளிடம் அவர்கள் நெருங்கி விட முடியாது எனும் துணிவும் பெற்றிருந்தனர்.
அவள் நிழலைத் தீண்டி விட முடிந்தால் கூட  அவளைத்  தீண்டி விட்டதாய்  பெருமை பேசித் திரியும் ஆண்கள் கூட்டம் . உண்மையில் உள்ளூர அவளைத்  தீண்ட முடியாமைக்கும்  மனநெருக்கமாய் கூட அமர முடியாத தூரத்தில் அவள் இருப்பதையும் கண்டு மனம் வெதும்பி  வெல்ல முடியாத போது “ நீ ஆம்பிளை மாதிரி” என்று சொல்லிப் போய்க் கொண்டிருந்தது.
அவளோ அவன்கள் விரும்புகின்ற பெண்ணாக மாற முடியாமைக்கு வருந்தாது தனைத் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தாள்.
போய்க் கொண்டே இருந்ததில் நிறைய ஆண்களும் பெண்களும்  வந்து வந்து போன படி இருந்தனர்.  ஒவ்வொருவரூடான பகைமையும் நட்பும் நிறைய கேள்விகளோடு கற்றுக் கொடுத்தலை அறிமுகப் படுத்தியிருந்தது.
இலவக் குறிஞ்சியின் ஆடல் கலையின் ரசிகனாக அறிமுகமானான்  காணுமல்லன்
அவன் ரசனைக்கு  கொஞ்சம்  கொஞ்சமாக நட்பாகி காதலும் சுமக்கும் நெகிழ்ந்த தருணத்தை இருவரும் அடைந்திருந்த பொழுதினில் ஒரு நாள்  அவன் தன் அந்தரங்க விசயங்களை  பகிர்ந்து கொள்பவனாய் மாறுகின்றான். இலவக் குறிஞ்சியோ   நட்பு இறுகி நட்பின் பகிர்தலில்  இடைவெளிகள் குறைந்து காதலை நோக்கி நகரும் போதும் அது காமத்தை நோக்கி சென்று விடாது தட்டையாக்கி தட்டையாக்கி பயணிக்கப் பழகியிருந்தவள்.  அதே நேரம் காணுமல்லனின் ஒவ்வொரு நகர்வும் பகிர்தலின் கூடுதல்  பயன்பாட்டை உறிஞ்சிவிட கோரியபடி அவன் உள்ளம் செயல்படுவதை உணர்ந்த படி இருந்தாள். எனவே தூரங்களை  ஒரு அளவுக்கு  மேல் குறையவிடாது இருக்கும் படி பார்த்துக் கொண்டாள். அவன் காதல் நெருக்கமானது தான் என்று புரிய  வைக்க   முயன்றபடி இருந்தான். காணுமல்லனோ எப்பவும் இதுவரை சந்தித்திருந்த   ஆடலழகிகள்  பற்றி சொல்லியபடியே அவர்களை விட இவள் சிறந்தவள்  என வியந்தபடியே  இருந்தான்.
போன கோடை விழாவில் சந்தித்த பாலவந்தாகி  கலையை மட்டுமல்லாது  அவளையும் எல்லாருக்குமானவளாய் மாற்றித் தருவதை சொல்லிக் கொண்டே இருந்தான். அதை வெறுப்பது போல் சொல்லிய அவன் வார்த்தையில் என்னைத் தனக்குத் தரக் கோரும் கோரிக்கையும், தனக்கு மட்டுமானவளாய்  இருக்கக் கோரும் நிர்ப்பந்தமும் சேர்ந்தே இருந்தது. 
“பாலவந்தாகி நடனத்தில் நளினமோடு  சேர்த்து அசைவில் அனைவரையும் அழைக்கும் தோரணையும் இருந்தது குறிஞ்சி . உன் அசைவுகளில் நளினம் எல்லாரையும் வாழ்த்துமே அல்லாது வரவேற்காது . உன் விழி மொழியும் எனக்கு மட்டுமான புரிதலுக்கான மொழியாக பிரத்தேயமாக இருப்பதன் சுவை. அடாடா!  அதை வேறொருவர் அறியத் தரமாட்டாய் தானே” பாலவந்தாகியின் விழியில் வலை தெரிகிறது குறிஞ்சி”

அப்போ பாலவந்தாகி  வலை விரித்தாளென்றால் அதில் விழுந்தவர்களில் நீயும்  ஒருவன் தானோ”
இருக்கலாம் ஆனால்  என் காதலின்   மதிப்பைப் பத்திரப் படுத்த தெரிந்தவளல்ல அவள்”
அப்போ உனக்குத் தெரிந்ததா” நீயும் அவள் காதலை பத்திரப் படுத்தத் தெரியாது கழன்று கொண்டவன் தானே மல்லா”
பிறகேன் பாலவந்தாகியை மட்டும் குற்றேவல் சொல்லும் கயமைப் புத்தி”
மல்லனின் பேச்சு அடுத்த கிளைக்குத் தாவியது அந்த கிளையில் இப்பொழுது சுந்தர கீர்த்தி சிக்கிக் கொண்டான்
அவனும் நல்ல ரசிகன் இல்லையா” குறிஞ்சி கேட்டாள்

ரசிகன் தான். தன் ரசனைக்கு பாலவந்தாகியை விலை பேசி விட்டான்
“புரியலையே” சீண்டினாள் குறிஞ்சி.
‘அவளோடு இணைந்து அவனும் நாட்டியமாடினான்’. -காணுமல்லன்
நல்ல விசயம் தானே கலைஞர்கள் இருவர் எல்லா விசயத்தாலும் ஒன்று படுவது என்பது?
பகிர்தலுக்காக ஒன்றுபட்டோம் என்றில்லாது ஒன்று பட்டோம் பகிர்ந்து கொள்ளுதலிலும் தடையில்லை என்பது சுதந்திர மனோபாவம் தானே. குறிஞ்சி
நிறைய நிகழ்வுகள் முடிந்து பேர் வாங்கிய பிறகு அவன்  தேசாந்திரம் போய் விட்டான். இப்பொழுதெல்லாம் அவன் வருகின்ற காலம் மட்டும் தான் அவள் அரங்கேறுகின்றாள் . அதுவும் அவனோடு மட்டும்”காணுமல்லன்
உன் பிரச்சனை என்ன மல்லா? அவள் அவனுக்கானவனாக மட்டுமிருப்பதா? எல்லாரும் நேசிக்கக் கூடியவளாய் அவள் பொதுமையில்  வாழப் பழகி விட்டதா?
அல்லது உனக்கு மட்டுமானவளாய் அவளை ஒப்புக் கொடுக்க மறுத்து விட்டதா?
முதல் கேள்விக்கு  மறுப்பு சொல்வதா? பிரச்சனை எனக்கில்லை என்று கூறுவதா? ஒன்றிற்கு பதில்கள்  யோசிக்கு முன் வந்து விழுந்த அடுத்தடுத்த கேள்விகள் மல்லனுக்கு  முதல் கேள்வியை மறக்கடித்துப் போனது.

எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும்  தான் நிர்வாணமாய் நிற்க வேண்டி வரும் என்பதால் அவன் விரல்கள் மெல்லத் திசை மாறியது. இவள் விரல்களுக்கிடையில் தொட்டு  விட விருப்பமில்லாததாய்  தொனித்த வாறே ஊர்ந்தது.
எனக்கு நீ வேணும் குறிஞ்சி”
தந்து விட முடியாது  மல்லா நான் யாருக்கானவளாகவும் மாறிவிட முடியாது.
ஆம் உன்னை நெருங்கிட யாராலும் முடியாது “
அப்படி இல்லை மல்லா
நேசிப்போடு  யாவரும்  நெருங்கி விடலாம்  எனும்படி இலகுவானவள் தான். ஆக்கிரமிக்கும் நினைப்போடும் தனக்குள் அடக்கி விடும்  திட்டமிடுதலோடும்   நெருங்கி விட முடியாது  மல்லா

“அப்போ உன் காதல் நான் மட்டுமில்லையா?”
அவன் விழிகள் கெஞ்சியது
நீயும்  என் காதல்தான்” குறிஞ்சி  சொல்லிப் போனாள் வாக்கியத்தின் நிச்சயமற்ற தன்மையில் உறைந்து நின்றான் அவன்.

சொல் நிசும்ப சூதினி
மல்லனின் உண்மை சரியா ? குறிஞ்சியின் பொய் சரியா?

சரியாகச் சொன்னால் மீண்டும் மரமேறுவேன் பதில் தெரிந்து சொல்லாது இருப்பின் உன் தலை வெடிக்கக் கூடும் என்றது வேதாளம்.

மல்லனின் உண்மைகள் எவை
பாலவந்தாகியுடனும்  தான் வாழ நேர்ந்ததைச் குறிஞ்சியிடம் மறைக்காதது
சுந்தர கீர்த்தியின் மேல் தனது பொறாமையை வெளிப்படுத்தியது
இவனது உண்மைகள் சொல்லப் பட்ட உண்மைகள் எனும் பெயரில் செய்யப் பட்ட ஆதிக்கங்கள் அதற்கான பொய்மைகள் ஒளிந்து கொள்ளப் பார்க்கின்றன. வேதாளமே நீ விக்கிரமாதித்தனிடம் கேள்வி கேட்டிருந்தால்  ஒரு வேளை என்ன ஒருவேளை

காணுமல்லனின் உண்மை பேசிய நேர்மையைத்தான் மெச்சியிருப்பான். நீயும் சரி என்று கேட்டுக் கொண்டு மந்த புத்தியோடவே மரமேறியிருப்பாய்
இல்லை  மல்லனின் உண்மைகள் பாலவந்தாகி குறிஞ்சி எல்லாரையும் தனக்கானவர்களாய் மாற்றிக் கொள்ளச் சொல்லப் படுகின்ற உத்திகளே அன்றி உண்மைகள் அல்ல
குறிஞ்சியின் காதல்கள் பொய்களாய் தோற்றம் தந்தாலும் அவை மல்லனின்  தூண்டிலுக்குள் மாட்ட விரும்பாத மனிதத்தின் நழுவல்கள்  அவை நேசிப்பின் எல்லையற்ற விரிப்பை அவனுக்கானதாய் அடக்கிக் கொள்ளும் முயற்சியிலிருந்து தடுப்பவை . இரண்டும் ஒரே மாதிரித் தோன்றும் வேறு வேறு விசயங்கள் . திரவப் பொருளுக்கும் திடப் பொருளுக்கும் ஒரே தராசுகள் வைக்க முடியாதது போல பாதி உண்மைகளோடு வாழ்கின்றேன் என்று மார்தட்டிக் கொள்ளும் வார்த்தைகள் பாதி பொய்யைக் கண்டு விட்டதாக நீ சொன்னால், அதான் உண்மையைச் சொல்லி விட்டேனே என  மீசை முறுக்கும் கூட்டம். அந்த உண்மையில் சொன்ன பொய்யை  மறந்து விடக் கோரும். மறைத்துப் போகும் திருட்டுத் தனம்.
இப்பொழுது வேதாளம் திணறியது. மீண்டும் மரமேறினால் அவள் சொன்னது சரியாகும். ஆனால் ஏற்கனவே அவள் சொன்ன பதிலில்  தலை வெடிக்காததால்  அவள் பதில் சரியென்றாகி விட  வேறு வழியில்லாது தன் முகத்தை மறைத்துக் கொள்ள காற்றில் மிதந்தபடி மரத்தில் தொங்க விரைந்தது
திருத்தி விடவும் திருத்திக் கொள்லவும் முடியாத இடத்தில் இருக்கின்ற ஆண்களின் உலகம் பிரதி பலிப்பாகவே இருக்கின்ற வேதாளத்தை விரட்டிய படி மீண்டும் திரும்பி நடந்தாள் நிசும்ப சூதினி.  வலது காலை முருங்கை மரத்திற்கு மேலூண்றி  தலை கீழாகக் கிடந்த வேதாளத்தை  இழுத்து தோளில் ஏற்றினாள்.
 
  

posted by Thilagabama m @ 12/18/2011 08:10:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates